கசப்புகள் முதன்மை பெரும் சமயம் அதனை ஒதுக்க பழகியிருந்தவள் அவனுடனான இயல்பான பேச்சுவார்த்தைகளுக்கும் அருகாமைக்கும் தயங்கித் தவிக்காமல் ஏற்க ஆரம்பித்தவளை அவனது இறுக்கமான அணைப்புகள் ஆட்டித்தான் படைக்கின்றன. இப்போதும் தன் பின்னின்று உதவுகிறேன் என்று மேலே இருக்கும் சர்க்கரை டப்பாவை எடுக்கிறேன் என்ற பேர்வழியில் அவளை உரசியும் உரசாமலும் ஒருவித அவஸ்தையை விதைத்தவண்ணம் நிற்கிறான்.
“க்கும்… தீபாவளி வருது.” தொண்டையை செருமி சற்று தள்ளி நகர்ந்து அவள் பேச்சை துவங்க,
“டிரெஸ் எடுக்க போலாமா?” என்று அவளுக்கு ஏற்றார் போல் நகர்ந்துக்கொண்டான் அறிவழகனும்.
Advertisement
“ப்ச்… ரொம்ப முக்கியம்.” அவள் ஏதோ நினைத்து பேச்சை துவங்க அவன் வேறு ஒன்றை பிடித்து பேச, முறைப்புடன் திரும்பிப் பார்த்தாள் அவனை.
“என்ன?” கவனத்தை கவரா வண்ணம் ஒருகையை அவளருகில் இருந்த மேடையில் ஊன்றியன் மற்றொரு கையில் இருக்கும் டப்பாவை கீழே வைக்கும் வாக்கில் அவளை அணை கட்டியிருந்தான்.
“வீட்டுக்கு தெரியாம இப்படி இருக்குறது எப்படியோ இருக்கு.” முகம் சுழித்து நெற்றியை தேய்த்த வண்ணம் அவள் சொல்லுகையில் அவன் எண்ணங்கள் விபரீதம் கொண்டன.
Advertisement
“எப்படி? லிவ்விங் டூகெதர் மாதிரியா?”
Advertisement
“என்ன?” சட்டென அதிர்ந்துவிட்டவள் அவன் கரத்தை விலக்கிக்கொண்டு நகரப்பார்க்க, அவளை இழுத்து தன் முன் நிறுத்தினான் அறிவழகன்.
“என்ன பண்றீங்க?”
“பேசிட்டு இருக்கும் போதே எங்க போற இயல்?”
Advertisement
“தேவையில்லாம பேசுறதெல்லாம் கேட்க எனக்கு நேரமில்லை.”
“அப்போ தேவையான பேச்சு பேசு நான் கேக்குறேன்.” என்று அவளை நகரவிடவில்லை அவன்.
“ப்ச் என்ன விளையாட்டு இது. நகருங்க. நிம்மதியா ஒரு காபி குடிக்க விடமாட்டேங்குறீங்க.” சலித்துக்கொண்டவளை ஊன்றி பார்த்தவன் சட்டென இரண்டடி பின்னகர்ந்தவிட, பொக்கென்று போனது இயலுக்கு.
‘ப்ச் கிட்ட இருந்தாலும் அவஸ்தையா இருக்கு எட்ட போனாலும் அவஸ்தையா இருக்கு. வாத்தி ரொம்ப தான் இரிடேட் பண்றாரு.’ மனதிற்குள் சுணங்கிக்கொண்டவள் சட்டென மூண்டுவிட்ட எரிச்சலில் டம்ளரை டொம்மென்று வைத்து சர்க்கரை டப்பாவை அழுத்தி மூடி என கோபத்தை கொட்டி காபி போட, கீற்றாய் புன்னகை அறிவழகனிடத்தில்.
“என்ன கோவம் இப்போ? விட சொன்ன விட்டுட்டேன். நிம்மதியா காபி குடிக்க வேண்டியதுதானே?” என்று சீண்ட, பெண்ணிற்கு கோவத்தில் மூச்சு ஏறி இறங்கியது.
“அப்படியே நான் சொல்ற எல்லாத்துலையும் கேக்குற மாதிரிதான்.” கடுப்பில் வார்த்தைகளை கடித்து துப்பினாள்.
“ஏன் இப்படி கடிக்குற. கொஞ்சம் சாப்ட்.” மெலிதாகிவிட்ட குரலில் அவள் உதட்டை விரலால் நிமிண்டி விடுவிக்க, சகலமும் நினைவு தப்பி அவன்பால் சென்றது மனம்.
“சொல்லு நீ சொல்லி ஒரே விஷயத்தை தவற வேற எதுல கேக்கல நானு?” என்றான் மீண்டுவிட்ட குரலில்.
அது எந்த விஷயம் என்று அவள் நினைவடுக்கு எடுத்துக்கொடுக்க, சட்டென முகம் மாறி மனம் சோர்வுற்றதில் தவித்துதான் போனாள் இயல்.
“மறக்க வச்சிடுவேன்னு சொல்லிட்டு நியாபகப்படுத்துறீங்க.” மறக்க நினைக்கும் விஷயத்தை நினைவுக்கு கொண்டு வருகிறான், என் மனதும் அதனை எடுத்துக்கொடுக்கிறதே என்று கசங்கிவிட முகத்துடன் அவள் கேட்டதில் கண்களை இறுக மூடித்திறந்தவன் அவள் இரு கரத்தையும் எடுத்து பொதித்துக்கொண்டவனாய் அவளை அப்படியே இழுத்து தன் நெஞ்சில் சாய்த்து அணைத்துக்கொள்ள, கண்களை மூடி தொய்வாய் சாய்ந்துகொண்டாள் அவளும்.
இடை சுற்றியிருந்த அவன் கரங்கள் மெல்ல உயர்ந்து அவள் தலைவருடி செவி அடைந்து அதனில் ஊர்வலம் போக, அவன் அணைப்பில் நெளிந்து சிலிர்த்த மனைவி கூச்சத்தில் அவனை சுற்றி கைகோர்த்து அணைத்துக்கொண்டாள். அவளாக அணைத்து ஏற்படுத்தும் முதல் நெருக்கம். அவன் விரலுக்கு ஏற்ப தன் முதுகில் ஊர்வலம் போகும் மனைவியின் மென்மையான கரங்கள் ஆறுதலுக்கென தழுவியவன் உணர்ச்சிகளை மடைமாற்றி இழுத்துச்செல்ல அதன் போக்கில் சென்றவன் இயலணியின் முகத்தை கையில் ஏந்தி நெற்றியில் இதழ் பதித்து முதல் இதழன்பினை பகிர்ந்து வைக்க, சுகமாய் ஏற்றுக்கொண்டாள் மனைவி.
நடுநாயகமாக முதலில் வாங்கிய அன்பின் பிரதிபலனாய் இமைகள் மூடி வரிசையில் நின்றது. பாரபட்சமின்றி இரண்டுக்கும் ஒவ்வொன்றாய் வைத்தவன் வலித்துவிடுமோ என்று காட்டிய மென்மையில்தான் மயிர்க்கால் சிலிர்க்க நின்றாள் மனைவி. உயர வேற்றுமையில் மூச்சுக்காற்றுகள் ஒன்றோடு ஒன்று சந்திக்க சிரமப்பட, அன்னிச்சையாக முன்னகர்ந்து முகம் உயர்த்திய மனைவி எப்போது அவன் காலில் ஏறினாள் என்று இருவருக்கும் தெரியவில்லை. உணர்ச்சிகளின் பிடியில் உலகத்தை மறந்து அருகாமையில் சிலிர்த்து அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பில் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி நாசிகள் சண்டையிட, கன்னங்கள் உறவாட புரட்டப்பட்ட முகங்கள் தங்களின் இதழ்களை இணைக்க முற்படுகையில் நந்தியாய் கணவனே மாறிப்போனான்.
“மறக்க வச்சிட்டேனா?” என்று ஒருவித தவிப்புடன் அவன் கேட்டிட, ஒன்றுமே புரியவில்லை மனைவிக்கு.
அவளின் முகபாவனையே அவனுக்கான பதிலை கொடுத்துவிட, சாதித்துவிட்ட உணர்வு. தன் நெருக்கத்தில் மனைவிக்கு பழைய கசப்புகள் வரவில்லை என்பதே உச்சகட்ட மகிழ்வை கொடுத்தது. என்னதான் இயல்பாக இருக்க வேண்டும் என்று சில நெருக்கங்களை தவிர்த்து சிலதை வலிய ஏற்று அவளை அணைப்பது, தோள் சாய்த்துக்கொள்வது என்று முயற்சி எடுத்தாலும் அவனுக்கும் உள்ளுக்குள் தவிப்பு இருந்துகொண்டே இருந்தது. எங்கே பழையவை தலை உயர்த்தி நிகழ்காலத்தின் சுவையை ருசிக்கவிடாமல் காலத்திற்கும் தங்களுக்குள் ஒத்துப்போகாமல் இருந்துவிடுமோ என்று துளிர்விட்டிருந்த ஐயம் சட்டென வடிந்துவிட்டதில் மனைவியின் கன்னத்தை அழுந்த பற்றி அழுத்த முத்தம் கொடுத்தவன் கடிப்பது போல் கவ்விக்கொள்ள, விழித்துவிட்ட மனைவி அவனை தள்ளிவிட்டாள்.
“இயல்.” தவிப்பாய் அவன் பார்க்க, பட்டென அவன் வாயில் அடித்தவளோ, “பல நேரம் இதுக்கு எப்போ எப்படி பேசணும்னு தெரிய மாட்டேங்குது.” என்று சொல்லிக்கொண்டே கலக்கி வைத்திருந்த காபியை எடுக்க, குடிக்கும் பதத்திற்கு ஆறிப்போயிருந்தது அது.
“இயல்.” கலக்கம் அடங்காது அவன் நிற்க,
“வாத்திங்குறத்துக்காக எல்லா நேரமும் கேள்வி கேக்கணும்னு இல்லை.” மறைமுகமாக அவனது கேள்வி அந்த நேரத்தில் தேவையற்றது என்று அவள் சுட்டிக்காட்டிவிட்டு சென்றது புரியவே சில நிமிடங்கள் தேவைப்பட்டது அவனுக்கு.
புரிந்ததும் நெற்றியில் அடித்துக்கொண்டவன் அவளை தேடிக்கொண்டு விரைந்து செல்ல, கூடத்தில் அமர்ந்து காபியை ருசித்துக்கொண்டிருந்தாள். ஆரவாரமாய் இயல் என்று அழைத்துக்கொண்டு அவளை அணைப்பது போல் செல்ல, காபியை கீழே வைத்துவிட்டு கைகளை நீட்டி தடுத்தவள்,
“நோ நோ… மிஸ் பண்ணது மிஸ் பண்ணதுதான். இன்னொரு சான்ஸ் எல்லாம் கிடையாது.” என்று வம்பு செய்ய,
“டீச்சரம்மா இப்படி பண்ணா எப்படி பாஸ் ஆகுறது நான்?” என்று கேட்டுக்கொண்டே அவளை அணைத்தும்விட்டான்.
“போடா வாத்தி… எப்போ என்ன பேசணும்னே தெரில உனக்கு.” சிரிப்புடன் அவனை தள்ளிவிட்டு அவள் எழுந்துகொள்ள,
“அப்போ சொல்லிக்குடுங்க டீச்சரம்மா.” என்று நின்றான் அவன்.
“முடியாது முடியாது.”
“அப்போ நான் பெயில் ஆனா பரவாயில்லையா. உங்களுக்குதான் அப்புறம் கஷ்டம் பாத்துக்கோங்க…”
“ஹான் ஹான்… பெயில் ஆனா ரீஅடம்ப்ட் பண்ணனும் பாஸ்.”
“அதுக்கு தான் விடாம தள்ளி விடுறீங்களே?”
“ஆஹான்… நீங்க நினைச்ச நேரமெல்லாம் ரீஅடம்ப்ட் பண்ண முடியாது. அதுக்கான நேரம் தனியா வரும் அப்போ பண்ணுங்க.”
இப்படியான செல்ல சண்டைகள் நீள, பேசத் துவங்கிய விஷயம் மறந்தே போனது. அதன்பின்னான பொழுதுகள் அணைப்பும் சிறு சிறு முத்தங்களுமாய் முன்னேற, தெளிந்த நீரோடையாய் சென்றுகொண்டிருந்ததில் கல் விழுந்த நாளும் வந்தது.
விடுமுறை நாளான அன்று சமையல் முடித்துவிட்டு அமர்ந்த சமயம் அறையில் அவள் புடவைகளை அயர்ன் செய்துகொண்டிருந்தவன் மின்சாரம் நிற்கவும் வெளியே வந்தான்.
“வெளில ஏதோ வெடிச்ச மாதிரி சத்தம் கேட்டுச்சு. கரெண்டும் உடனே போய்டுச்சு.” என்றாள் அவள் வியர்வையை துடைத்தபடி.
“எனக்கும் கேட்டுச்சு. மழையில நிறைய கம்பி பூத்துபோச்சுனு பேசிட்டு இருந்தாங்க. ட்ரான்ஸ்பார்மர் எதுவும் ஆகியிருக்குமோ. நான் போய் பாத்துட்டு வரேன்.” என்று கிளம்பிச் சென்றவன் அலைபேசியை மறந்துவிட்டு சென்றிருந்தான்.
அவன் பின்னோடே வந்து வராண்டாவில் நின்று எட்டிப்பார்த்தாள் இயல். கீழிறங்கிய அறிவழகன் போட்டிருந்த டிராக் பேண்ட்டை மேலேற்றிய வண்ணம் அங்கு கூடியிருந்த சிலரிடம் பேசிக்கொண்டிருந்தான். நன்றாக எட்டிப்பார்த்தவள் உள்ளே அலைபேசி சத்தம் கேட்கவும் சென்று பார்க்க, அவன் அன்னை அழைத்துக்கொண்டிருந்தார்.
வந்து பேசிக்கொள்ளட்டும் என்று அவள் ஏற்காமல் விட, தொடர்ந்து அழைப்புகள் வந்துகொண்டே இருந்தது.
‘ஏதாவது எமெர்ஜென்சியா இருக்குமோ? தொடர்ந்து கூப்பிடுறாங்க. எடுத்து என்னன்னு கேப்போமா? திரும்ப திரும்ப வந்துட்டே இருக்கே…’ என்று யோசனையுடன் அலைபேசியை எடுத்தவள் தயக்கத்துடன் தான் அழைப்பை ஏற்றாள்.
“ஹலோ அத்தான் நான் உமா பேசுறேன். என் நம்பர்லேந்து கூப்பிட்டா உங்களுக்கு போக மாட்டேங்குது அதான் அத்தை நம்பர்லேந்து கூப்பிட்டேன்.” என்று எடுத்ததும் பேச, சிலையாய் நின்றுவிட்டாள் இயல்.
அவனுடன் வந்துவிட்ட பொழுதுகளில் அவர்களின் இருண்ட பக்கங்களை மட்டுமே சிந்தித்து அதனை கடந்துவர முயன்றவள் அவனது அத்தை மகளை சுத்தமாய் மறந்திருந்தாள். அதுவும் அவன் ஆசை கொண்டு திருமணம் செய்ய விழைந்தவள் என்ற கொசுறு தகவல் காரணமின்றி நினைவு வந்து தொலைக்க, நெருடல் மனதில்.
“ஹலோ அத்தான் இருக்கீங்களா? அத்தை சொன்னாங்க நீங்க தனியா இருக்கீங்கன்னு, ரொம்ப வருத்தப்பட்டாங்க. அவங்ககிட்ட பேசுனீங்களா? என்ன சொல்றாங்க? இன்னமும் வேண்டாம்னு சொன்னா அவங்களை போர்ஸ் பண்ணாதீங்க.”
“போர்ஸ் பண்ணாம அறுத்துவிட்டு என்ன பண்ணலாம்னு இருக்கீங்க?” அதற்கு மேல் அவளை பேசவிட மனமில்லாதவளாய் இயலணி குறுக்கிட, மறுபக்கம் அமைதி.
“ஹலோ.” இயலணி கோபத்தில் இறைய,
“சாரிங்க. நீங்க அத்தான் வொய்ப்பா?” தயக்கமாய் வந்தது உமாவின் குரல்.
“அவர் போன்ல அவரில்லைனா வேற யார் பேசுவா?” தன் நிலையற்ற தன்மையை வெளிக்காட்ட முடியாமல் இறுக்கமாகவே வந்தது இயலணியின் பேச்சு.
“எனக்கு புடிச்சி என்ன ஆகப்போகுது?” ஏடாகூடமாகவே குறுக்கிட்டு பேசினாள் இயலணி.
“அதுவும் சரிதான். என்னை புடிச்சி என்ன ஆகப்போகுது? அத்தானை புடிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க. அப்புறம் ஏதோ சண்டைனு விலகியிருந்தீங்க. இப்போ அவங்க போன்ல பேசுறீங்கன்னா சேர்ந்துட்டீங்கனு நான் எடுத்துக்கவா?”
“அதை தெரிஞ்சிக்கிட்டு நீங்க என்ன பண்ண போறீங்க?”
இயலணியின் பேச்சு உமாவுக்கு ஆயாசத்தை கொடுக்க அதற்கு மேல் பேச விரும்பவில்லை அவள். அதே நேரம் அவள் பேச்சு அச்சத்தை கொடுத்தது. இப்படி பேசுபவள் அதிர்ந்து பேசாத தன் அத்தானுடன் என்னவென்று இணைந்து வாழ்வாள் என்று யோசனையில் இருக்க,
“ஹலோ எதுக்கு கால் பண்ணி இருக்கீங்க?” என்று அவள் எண்ணவோட்டத்தை கலைத்தாள் இயலணி.
“இல்லை சும்மா தான். நான் அப்புறம் பேசிக்குறேன்.” என்று உமா வைக்கப் பார்க்க,
“அப்போ என்கிட்ட சொல்ல முடியாத விஷயத்தை அவர்கிட்ட பேச போறீங்க?” விதண்டாவாதம் செய்தாள் இயலணி.
“ஹலோ ஏங்க இப்படி பேசுறீங்க? நீங்க விட்டுட்டு போனதும் இங்க எல்லாரும் அவ்ளோ கவலைப்பட்டாங்க. அத்தான் கூட என்ன செய்யுறதுனு புரியாம தவிச்சிட்டு இருந்தாரு. நாந்தான் உங்களை பாத்து பேச சொன்னேன். நீங்க பிரிஞ்சிட்டிங்கனு சொல்லி இங்க அத்தை அவரை கல்யாணம் செய்துக்க சொல்லி கேட்டப்போவும் அவங்களை தான் கண்டிச்சேன். அத்தைக்கு இப்படி ஒரு நினைப்பு இருக்கு கண்டிச்சி வைக்க சொல்லலாம்னு தான் அத்தானுக்கு கால் பண்ணேன். எனக்கு வேற எந்த இன்டேன்ஷனும் இல்லை. அத்தான் வந்தா சொல்லிடுங்க. இனி உங்க ஹஸ்பண்ட்கிட்ட நான் பேச மாட்டேன்.” என்று உமா அழைப்பை துண்டித்துவிட, விக்கித்து நின்றாள் இயலணி.
“டிரான்ஸ்பார்மர் தான் புகைஞ்சி போச்சு. ஈபில சொல்லிட்டாங்க. ஈவ்னிங் ஆகிடும் சரியாக. ஆமா யார் போன்ல?” என்று அறிவழகன் வந்துவிட்டான்.
இயலணி பதில் சொல்லாமல் இருக்கவும் அவள் கையிலிருந்து அலைபேசியை உருவிப் பார்த்தான்.
“அம்மாவா? பேசுனியா அவங்ககிட்ட? என்ன சொன்னாங்க?” தவிப்பு எட்டிப்பார்த்தது அவனிடம். ஏற்கனவே இயலணி மீது அதிருப்தியில் இருப்பவர் எதுவும் மனது நொந்து சொல்லியிருந்தால் என்று அவன் பார்க்க, அவனை அழுத்தமாக பார்த்த இயலணி,
“என்னை தொல்லை பண்ணமாட்டேனு கோர்ட் வாசல்ல வச்சி சொல்லிட்டு எதுக்கு என்னை தேடி இங்க வந்தீங்க?”
இது என்ன கேள்வி? என்று அவன் பார்க்க,
“சொல்லுங்க.” உயர்குரலில் அவள் இறைய, என்னவோ என்று வந்தது அறிவழகனுக்கு.
“உன்னை தேடி வராம எப்படி இருக்க? நீயே மனசு கஷ்டத்துல இருந்த இதுல நான் வேற உன்னை தொல்லை பண்ணிட்டே இருந்தா நல்லாயிருக்காதுனு அப்படி சொன்னேன். அப்போ ரெண்டு பேருக்குமே டைம் தேவைப்பட்டுது.”
“பொய். உங்க அத்தை பொண்ணு சொல்லவும் என்னை தேடி வந்திருக்கீங்க. எனக்காக வரல.”
“என்ன உளருற? உனக்காக வராம யாருக்காக வந்தேனாம்?” அவளது வார்த்தை பிரயோகத்தில் அவன் குரலும் உயர்ந்தது.
“தொல்லை பண்ண மாட்டேன்னு ஒதுங்கி போனவரு அவ சொல்லி திரும்ப வந்திருக்கீங்க. அதுவும் தப்பு பண்ணிட்டதனால. இல்லைனா அப்படியே அறுத்துவிட்டு அவளை கட்டியிருப்பீங்க உங்க அம்மா சொன்ன மாதிரி…” அவள் கத்த, பதிலுக்கு அவன் பேச கலவரமானது.
“உளறாத. உன்னை விட்டு விலகி இருந்திருந்தாலும் அவளை கல்யாணம் பண்ணியிருக்க மாட்டேன்.”
“ஓ… என்னை நினைச்சிட்டு இருந்திருப்பீங்கனு பாராட்டணுமா நானு.”
“உன்னை உளறாதேனு சொல்லிட்டேன் இயல். உன்னை நெருங்க முடியாம தவிச்சப்போ அவதான் வழி காட்டுனா. அப்புறம் தான் இங்க வந்தேன், உன்னை பாத்தேன். எல்லாம் நடந்துச்சு. இப்போ இப்படி இருக்கோம்.”
“அப்போ நான் இங்க இருக்குதே அவளால தான் அப்படித்தான?”
“இயல் இயல்… கோவம் வந்தா மூளையை கழட்டி வச்சிடுவியா?” பேச்சுக்கள் நீள, அத்தனை நாள் முயன்று சரிசெய்திருந்த உறவுக்குள் விரிசல் வருமளவுக்கு சென்றுவிட்டது. இறுதியில்,
“உங்க குற்றவுணர்ச்சியை போக்குறதுக்காக என்னை தேடி வந்து இப்படி சகிச்சிட்டு இருக்கீங்க. ஆசைப்பட்டு இருக்குற மாதிரி ஒன்னும் நடிக்க வேண்டாம்.” என்று கத்தியவளுக்கும் தெரியவில்லை அவளுடன் வாக்குவாதம் புரிந்தவனுக்கும் தெரியவில்லை அவள் எதிர்பார்ப்பது கடமைக்கான வாழ்க்கையின்றி காதலான வாழ்க்கையென.