Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கந்தபவனம்

கந்தபவனம் 1

அத்தியாயம் 1

முத்தான முத்துக் குமரா

முருகையா வா வா



Advertisement

சித்தாடும் செல்வக்குமரா

சிந்தை மகிழ வா வா

Advertisement

வள்ளி மணாளா வடிவேலழகா

Advertisement

வேலைய்யா வா வா

கந்தா கடம்பா கதிர் வடிவேலா

கந்தையா வா வா

Advertisement

என்ற பாடல் ஒலிபெருக்கியில் ஜோராக ஒலித்துக் கொண்டிருந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மலையக்கோவில் முருகன் கோவிலில் தைப்பூசத்திருநாள், முருகனுக்கு திருவிழா. இங்கே முருகன் குன்றின் மேலே வள்ளி தெய்வானையுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் புரிகிறார். கீழே சிவபெருமானுக்கு குடவரை கோவில் இருக்கிறது.

அங்கே மலை அடிவாரத்தில் பல கொட்டகைகள் அமைக்கப்பட்டு அன்ன  தானத்திற்கான ஏற்பாடுகள் ஜரூராக நடந்துகொண்டிருந்தது.

ஒரு கொட்டகையின் வாயிலில் இப்பொழுதுதான் முருகனுக்கு தலைமுடியை காணிக்கையாக செலுத்தி தலையில் சந்தனத்தை பூசி, கொழுகொழு என்று இருந்த குழந்தையை தூக்கிக்கொண்டு வந்தார் முருகம்மை ஆச்சி. 

அறக்கு நிற பட்டு சேலை அணிந்து, நெற்றி நிறைய திருநீர் பூசி, தெய்வீகமாக இருந்தார் முருகம்மை ஆச்சி. அவருக்கு மூன்று ஆண் பிள்ளைகள்.

இளைய மகன் ராஜவேல், அவனது மனைவி தெய்வானை. அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள். மூத்தவனுக்கு நான்கு வயது, அவர்களது இரண்டாவது குழந்தைக்கு ஆறு மாதம். அவனுக்கு தான் இன்று தொட்டில் கட்டுகிறார்கள். 

இரண்டாவது மகன் செந்தில்நாதன், மனைவி வள்ளி. அவர்களுக்கு எட்டு, ஆறு வயதில் இரண்டு ஆண் குழந்தைகள்.

முருகம்மை ஆச்சியின் மூத்த மகன் அருணாச்சலம், அவரது மனைவி விசாலாட்சி. இந்த குடும்பத்தை தாங்கி நிற்கும் தூண்கள் இவர்கள் இருவரும் தான். திருமணமாகி பன்னிரெண்டு ஆண்டுகள் ஆகிறது. இன்னும் குழந்தை செல்வம் கிடைக்கவில்லை.

அந்த முருகனே துணை என்று முருகனிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார் விசாலாட்சி. இவர்கள் சென்னையில் பேப்பர் கம்பெனி நடத்தி வருகின்றார்கள்.

பூர்விக சொத்துக்கள் இருந்தாலும், இவர்களது தொழில் வளரவும் தான் பணப்  புழக்கம் அதிகரித்தது. எத்தனை சம்பாத்தியம் இருந்தாலும் கணவன் மனைவி இருவரிடமும் சிறிதளவு செருக்கும் காண முடியாது.

தம்பி பிள்ளைகளை தங்கள் பிள்ளைகளாகவே கருதுகிறார்கள் இருவரும்.

இன்றைய சம்பிரதாயங்கள் அனைத்தையும் விசாலாட்சி தான் முன்னின்று செய்தார். பிள்ளைக்கு போடும் சட்டையில் இருந்து, தலையில் தேய்க்கும் சந்தனம் வரைக்கும் அவர் தான் எடுத்து கொண்டு வந்தார். வள்ளியும் தெய்வானையும் பிள்ளைகளை சாக்கு காட்டி பெரும்பாலும் எந்த வேலையும் செய்ய மாட்டார்கள்.

“சீக்கிரம் வாங்க” என்று அனைவரையும் அழைத்தார் முருகம்மை ஆச்சி.

நான்கு கரும்புகளை ஒன்றாக சேர்த்து கட்டி, முன்னும் பின்னும் இருவர் தோளில் சுமந்து கொண்டு வருவார்கள். அந்த கரும்பின் நடுப்பகுதியில் அப்பத்தாவின் பட்டு சேலையில் தொட்டில் கட்டி அதில் பிள்ளையை படுக்க வைத்து, மலையை மூன்று முறை வலம் வருவது ஐதீகம்.

அருணாச்சலம் தாயின் சேலையில் தொட்டில் கட்டினார். பின் முருகம்மை ஆச்சி குழந்தையை படுக்க வைத்தார். கடுமையான வெய்யில்.

கரும்பு தூக்கி செல்பவர்கள் விரைவாக செல்வார்கள். அவர்களுடன் அருணாச்சலமும் விசாலாட்சியும் தான் உடன் சென்றார்கள். அண்ணன் அண்ணி பார்த்துக்கொள்வார்கள் என்று ஏனையவர்கள் கொட்டகையினுள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

“முருகையா, அடுத்த பூசத்துக்காவது பெரியவன் பிள்ளைக்கு தொட்டில் கட்டணும் அய்யா” என்று மனமார இறைவனை வேண்டிக்கொண்டார் முருகம்மை. 

பூசை நிறைவாக முடிந்து, மாலை ஆறு மணிக்கு அனைவரும் வீட்டிற்கு திரும்பினார்கள். இவர்கள் வீடு மலையக்கோவிலில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் நற்சாந்துபட்டி என்னும் ஊரில் இருந்தது. 

அருணாச்சலமும் விசாலாட்சியும் அன்று இரவே சென்னை புறப்படுவதாக ஏற்பாடு. ஊருக்கு செல்வதற்கு முன்பு தம்பி பிள்ளைகளுடன் அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்றார்கள் அருணும் சாலாவும்.

 

செந்திலும், ராஜாவும் சென்னையில் தான் இருக்கின்றார்கள். இருவரும் ஐ டி நிறுவனத்தில் பணி புரிகின்றார்கள். வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்பு  உள்ளதால், மேலும் இரண்டு தினங்கள் ஊரில் தங்கிவிட்டு செல்வதாக இருந்தனர். 

முருகம்மை ஆச்சி மருமகள்களுக்கு வேலைகள் சொல்லமாட்டார். உதவிக்கு சௌந்திரம் என்ற பெண்மணி உடன் இருந்தார். அவரை கொண்டு எல்லாம் அவரே கவனித்து கொள்வார்.

அந்த பெரிய வீட்டில் விளையாட குழந்தைகளுக்கும் மிகவும் இஷ்டம்.

அண்ணனையும் அண்ணியையும் இருந்து செல்ல கூறவில்லை தம்பிமார்கள்.

அவர்களுக்கு அண்ணன் என்றால் பிரியம் தான். ஆனால் ஒரு எல்லையில் நிறுத்தி கொள்வார்கள். 

அவர் பேப்பர் கம்பெனி தொடங்கும் பொழுதும், இதில் என்ன லாபம் வந்துவிடும் என்றே நினைத்தார்கள். விசாலாட்சியை மணந்த நேரம், முருகன் அருளால் தொட்டது துலங்கியது அருணுக்கு. 

வள்ளியும் தெய்வானையும் அக்கா தங்கைகள். அதனால் இருவரும் இணக்கமாக இருந்துகொள்வார்கள். அக்காவின் திருமணத்தில், தங்கைக்கு  அக்காள் கொழுந்தனுடன் பிடித்தம் ஏற்பட்டு அடுத்த வருடமே அவர்கள் திருமணம் நடந்திருந்தது.

அன்று இரவு, இவர்களுடன் இவர்கள் பெற்றோர்களும் அங்கேயே தங்கினார்கள். அவர்களது தந்தை ராமநாதன், முருகம்மை ஆச்சியின் சின்ன அய்யா பேரன், அவருக்கு தம்பி முறை.

ராமநாதனின் மனைவி மீனாள். அவர் முருகம்மையிடம் கூறினார், 

“அண்ணமுண்டி, நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. கல்யாணமாகி இத்தனை வருஷம் ஆச்சு, இனிமேலா பிள்ளை பிறக்க போகுது அருணுக்கு ?”

முருகம்மை ஆச்சி, எனக்கு  இந்த பேச்சு ரசிக்கவில்லை என்பதை முகத்தில் காட்டினார்.

“பெரியவனும் சாலாவும் பக்கத்துல தான் கோவிலுக்கு போயிருக்காங்க. சீக்கிரம் வந்திடுவாங்க. இந்த பேச்சை விடுங்க” என்றார்.

“அவங்க வரதுக்குள்ள சுருக்க சொல்லிடறேன் அண்ணமுண்டி..”

மகன்களும் மருகள்களும் அமைதியாக இருப்பதில் இருந்து ஏற்கனவே பேசி வைத்து வந்துள்ளார்கள் என்று விளங்கியது.

அவர்கள்  சொல்லியே ஆகவேண்டும் என்ற முடிவில் இருப்பதாக தோன்றவும் அமைதியாகஇருந்தார் முருகம்மை.

“ஆளுக்கு  இரண்டு அரசு பெத்து வச்சிருக்காங்க வள்ளியும் தெய்வானையும்….” பெருமை பொங்கியது அவர்களின் அன்னை மீனாவின் குரலில்.

நீங்களே மேலே சொல்லுங்கள் என்பதை போல அமர்ந்திருந்தார் முருகம்மை.

“நாளைக்கு அருணுக்கும் பேர் சொல்ல பிள்ளை வேணுமில்லயா?”

ராமநாதனும் மீனாவும் மாறி மாறி பேசினார்கள்.

“ஒரு பிள்ளையை கூட்டினா நல்லது. என்ன நான் சொல்றது?”

முருகம்மை ஆச்சிக்கு எரிச்சலாக வந்தது. எதற்காக இந்த பேச்சு என்று.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது அருணும்  சாலாவும் வந்து விட்டனர்.

“பிள்ள பொறக்காட்டி, வெளியே பிள்ளை கூட்டாமா, தம்பி பிள்ளையே கூட்டிக்கலாம். யாருக்கும் சங்கடம் இருக்காது…”

விசாலாட்சிக்கு முதலில் இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது புரியவில்லை.

“என்ன சொல்றீங்க? யார் பிள்ளை கூட்டனும்?” என்று கேட்டுக்கொண்டே இவர்களிடம் வந்தார்.

.

“நீயும் பெரிய மாப்பிள்ளையும் தான். தம்பி பிள்ளைகளையே ஒன்னை  எடுத்துக்கோங்க..“

அருணாச்சலம் தம்பிகளையும் தம்பி மனைவிகளையும் பார்த்தார். அனைவரும் ஏற்கனவே பேசி வைத்துக்கொண்டு இன்று பேசுகிறார்கள் என்று புரிந்தது. தன்  அம்மாவை பார்த்தார்.

அவருக்கு இதில்  உடன்பாடில்லை என்பதும் புரிந்தது. அமைதியாக அம்மா அருகில் அமர்ந்துகொண்டார்.

“தத்து எடுத்துக்க சொல்றீங்களா, சித்தி?” என்றார் விசாலாட்சி.

முருகம்மையிடம் பேசுவதை போல சாலாவிடம் பேசிவிட முடியாது. அனைவரையும் ஒரு எல்லையில் நிறுத்திவிடுவார்.

“அது வந்து சாலா…”

“தம்பி பிள்ளைங்க எங்களுக்கு பிள்ளைங்க இல்லையா? நாங்க அப்டி தானே நினைச்சோம். அவங்களை தத்து எடுத்துக்க சொல்லி உண்மையை புரியவைக்கிறீங்க போல?” என்றார் சாலா இப்பொழுது வரிசையாக அனைவரையும் பார்த்துக்கொண்டே.

இல்லை என்று எப்படி கூற முடியும். அமைதியாக இருந்தார்கள் ஒரு நிமிடம்.

“அம்மா அப்படி நினைச்சு சொல்லலை  சாலாச்சி … அம்மா என்ன சொல்றாங்கன்னா, உங்க வாரிசுன்னு ஒரு பிள்ளை வேணும் இல்லையா..

என் பிள்ளையை தத்து எடுத்து எழுதிக்கோங்க. நீங்க வளர்க்க வேண்டாம், நாங்களே பார்த்துப்போம். ஒப்புக்கு எழுதறது தானே” என்றாள்  வள்ளி.

“என் பிள்ளையை வேணும்னாலும் எழுத்திக்கோங்க சாலாச்சி”, என்றாள் தெய்வானை.

“நாலு பிள்ளைகளில் யாரை வேணும்னாலும் எழுதிக்கோங்க. உங்களுக்கு இல்லைன்னு சொல்ல மனசு வராது உங்க தம்பிங்களுக்கும் தம்பி பொண்டாட்டிகளுக்கும்” என்றார் அவர்களது அன்னை.

“என்ன மாதிரி அக்கறை இது? உண்மையில கொடுக்கணும்னு நினைச்சா என்கிட்ட ஒப்படைச்சிடுங்க. இது என்ன ஒப்புக்கு கொடுத்து வாங்குறது.”

“பெத்தவ பிள்ளையை விட்டுட்டு எப்படி இருப்பா? நாளைக்கு கல்யாணத்தபோ உங்க பேரை போட்டு பத்திரிக்கை அடிச்சுக்கோங்க… சொத்து சேர்த்து என்ன ப்ரோயஜனம். அதை  ஆள வாரிசு வேணுமில்லயா?அதுக்காக பெரிய மனசு பண்ணி சொன்னா?” என்றார் மீனா.

பேச்சின் திசை தம்பிகளுக்கு பிடிக்கவில்லை. அண்ணன் பாவம், அவருக்கு ஒரு பிள்ளையை கொடுக்கலாம் என்றுதான் தங்கள் மனைவிமார்கள் கூறி இருந்தார்கள். இருவரும் தங்கள் மனைவியை முறைத்தனர் இப்பொழுது. 

அவர்களும் சொந்தமும் சொத்தும் வெளிய விடாம ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருக்கட்டும் என்று பெற்றோர் சொல்லும் போது சரி என்று நினைத்தார்கள்.

சாலாவும் அருணும் பிள்ளைகள் மீது வைத்திருக்கும் அன்பு  இவர்களுக்கு தெரியும். அதனால் பேசாமல் இருக்கும்படி தங்கள் அன்னைக்கு செய்கை காட்டினார்கள்.

“ஓ.. உங்க பெரிய மனசுக்கு ரொம்ப நன்றி. ஆனால், எங்க வாரிசை பத்தி நீங்க கவலை பட வேண்டிய அவசியம் இல்லை. நான் கும்பிடற முருகன் எனக்கு வரம் கொடுப்பான். நாலு பேருக்கும் நான் பெரியம்மா தான். எப்பவும் பெரியம்மாவாகவே இருப்பேன்” என்றார் சாலா.

“இத்தனை வயசுக்கு அப்புறம் பிள்ளை பொறக்குமாக்கும்?” என்று நொடித்துக்கொண்டார் மீனா.

“எங்களை பார்த்தா வயசானவங்க மாதிரியா இருக்கு?” என்று நக்கலாக கேட்டார் சாலா.

ஆம், முப்பத்தி ஐந்து வயதில் சாலா பார்க்க சின்ன பெண்ணாக தான் இருப்பார். கச்சிதமான சுடிதார் அணிந்து ஒப்பனை ஏதுமின்றியே லட்சணமாக பார்ப்பவரை கவர்ந்திழுக்கும் அழகுடன் இருப்பார். அருணாச்சலத்திற்கு முப்பத்தி எட்டு வயது. ஆனால் அவர் தான் இளையவர் மாதிரி இருப்பார். உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை என்று உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருப்பார்.

“நீ, எம் பொண்ணுங்க மாதிரி என்ன பிள்ளையா பெத்த? அதான் இன்னும் சின்ன பொண்ணு  மாதிரி இருக்க..”  என்றார் மீனா தான் நினைத்தது நிறைவேறவில்லை என்ற கடுப்புடன்.

அம்மா.. 

அத்தை.. 

மீனா.. 

என்று அங்கு இருந்த அனைவரும் இப்பொழுது அவரை கண்டித்தனர். கண்டனமாக பார்த்தார்கள்.

விசாலாட்சி இப்பொழுது புன்னகையுடன் அவரிடம் திரும்பி, “எங்க குடும்பத்தில இனிமேலும் குழப்பம் செய்ய நினைக்காதீங்க.. யாரும் என்னை விட்டுக்கொடுக்க மாட்டாங்க. அண்ணன் மேலே வெளிப்படையா பாசத்தை காட்டாடியும் தம்பிகளுக்கு அண்ணன் மேலே பிரியம். அதுக்காக தான் பிள்ளையை கொடுக்க சம்மதிச்சிருப்பாங்க… உங்க பொண்ணுங்களுக்கும் உங்கள மாதிரி சின்ன புத்தி கிடையாது. இரண்டு பேருமே பிறந்த குழந்தையை என்கிட்ட தான் முதலில் கொடுத்தாங்க…”

எப்படி சரியாக தங்களை புரிந்திருக்கிறார் சாலா என்று நால்வரும் கண்கலங்கி  பார்த்தனர். எங்கே தங்களை தவறாக நினைத்து விடுவார்களோ என்று தவித்து கொண்டிருந்தார்கள்.

ராமநாதன், “விடு மீனா நம்ம நல்லது சொன்ன யாரும் புரிஞ்சுக்க மாட்டாங்க.. நமக்கு எதுக்கு பொல்லாப்பு..” 

“என்ன ஆச்சி, உன் மருமக இம்புட்டு பேசுது. நீ பேசாம இருக்க?” என்று மனைவியிடம் ஆரம்பித்து முருகம்மை ஆச்சியிடம் முடித்தார்.

“நீ கேட்டதுக்கு தானே அவ பதில் சொன்னா.. எல்லோரும் போய் வேலையை பாருங்க” என்று முடித்துக்கொண்டார் முருகம்மை ஆச்சி.

நடந்த பேச்சு வார்தைகளால் சற்றே தளர்ந்து காணப்பட்டார்.

அருண், சாலா என்று அழைக்கவும் அவர் மாமியார் அருகில் விரைந்தார்.

“என்னாச்சு அத்தை? ஏன் கலங்குறீங்க?”

“நான் இருக்கப்பவே என் குடும்பத்துல இப்படி நடக்குதே ஆத்தா?”

“குடும்பம்னு வந்தா பிரச்சனை வரத்தானே செய்யும். நீங்க பார்க்காத பிரச்னையா அத்தை ?”

எப்படி , இவ்வளவு தெளிவு இந்த பெண்ணிடம் என்று ஆதுரமாக மருமகளை பார்த்தார். பின் அவரும் அய்யா முருகா.. நீ தான் துணை.. என்று கூறி தன்  அறைக்கு சென்றுவிட்டார்.

“சாலா, நாம நாளைக்கு கிளம்புவோம். அம்மா முகமே வாடி கிடக்கு. எனக்கு மனசே ஆறலை” என்று கூறி அருணும் தங்கள் அறைக்கு சென்றுவிட்டார்.

மனைவிக்காக அவர் பேசவில்லை தான். ஆனால், மிகவும் வருந்தினார். சாலாவிற்காக பேசவேண்டிய அவசியம் இல்லை. அவரே சரியான பதிலை கொடுத்துவிடுவார் என்று அருணுக்கு தெரியும்.

இது தான் சாலா.. கண்ணீர் விட்டு பிள்ளை இல்லை என்று ஒருபோதும்  அழ மாட்டார்… எல்லோரும் நினைப்பார்கள், இவருக்கு வருத்தம் இல்லையா என்று.

ஆனால் அவரை பொறுத்த மட்டிலும், முருகா சரணம் என்று முருகனிடம் இந்த பொறுப்பை விட்டுவிட்டார்.

அவருக்கும் முருகனுக்குமான பந்தம் ஆழமானது, அழகானது. “சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும். சஷ்டி விரதம் இரும்மா” என்று அவளது அன்னை திருமணமான இரண்டாம் வருடம் கூறினார். அதில் இருந்து வருடா வருடம் சஷ்டி விரதத்தை மிகவும் சிரத்தையுடன் கடைபிடித்து வருகிறார்.

இத்தனை விரதம் இருந்தும் ஏன் பலனில்லை என்று முருகனிடம் கேட்க மாட்டார். ‘முருகா, உனக்கு தெரியாததா.. பார்த்து செய்’ என்றே கூறுவார். முழு சரணாகதி என்பார்களே, அது போலத்தான்.

அடுத்த நாள், குடும்ப ஜோசியர் வந்தார். தாங்கள்  நினைத்ததை நடத்தியே ஆக வேண்டும் என்று ராமநாதன் வரவழைத்திருந்தார்.

முருகம்மை  ஆச்சிக்கு, வீட்டிற்கு வந்தவரை எப்படி வேண்டாம் என்று சொல்ல முடியும்?, தர்மசங்கடமாக அருணை பார்த்தார்.

“விடுங்க மா.. எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கும். என்னன்னு பாருங்க” என்று அவரும் அமர்ந்துகொண்டார்.

சாலா அருண்  இருவரது  ஜாதகத்தை கொடுத்தார் முருகம்மை ஆச்சி.

 

சற்று நேரத்தில் அவரும், “இவங்க ஜாதகத்தில் குழந்ததை பாக்கியம் இல்லை.. தத்து எடுக்கிற ஜாதகம் தான் ஆச்சி.. ராஜ யோகம் இருக்க.. பணம் , காசு, பேர், புகழ் இப்படி வேற எந்த குறையும் இருக்காது, ஆனால் குழந்தை யோகம் இல்லை  ஆச்சி” என்று கூறி சென்றுவிட்டார்.

“நாங்க சொன்னப்ப தான் எடுத்துக்கலை. இப்ப ஜாதகத்துலயும் அதான் சொல்றாங்க.. “ என்று மீனாவும் ராமநாதனும் குத்தி பேசினார்கள்.

சாலா, “ஏங்க, வாங்க நாம ஒரு தடவை மலையக் கோவிலுக்கு போய்ட்டு மலையய்யாவை கும்பிட்டுட்டு வந்துடலாம்” என்று அருணை அழைத்தார்.

அவருக்கு மனது சஞ்சலமாக இருந்தது. நானும் கூட வர்ரேன் என்று முருகம்மை ஆச்சியும் உடன் புறப்பட்டார்.

முருகா சரணம் என்று முருகனை தரிசிக்க புறப்பட்டனர் மூவரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!