Meendum Orumurai -Epilogue
Epilogue…
“சுவாமி, இங்குதான் இருக்கிறீர்களா! உங்களை தான் தேடிக் கொண்டிருந்தேன். உங்கள் மகன் உங்களுக்கு அளித்த பொறுப்பினை சிறப்பாக செய்து விட்டீர்கள் போலிருக்கிறது?”
Advertisement
“என்ன உமா! நீ ஏதோ என்னை கிண்டல் செய்வது போல் தெரிகிறது.?”
“கிண்டல் செய்ய என்ன இருக்கிறது? உங்கள் மகன் உங்களுக்கு பொறுப்பு அளித்தது உண்மைதானே?அதை தானே கூறினேன்”,
Advertisement
Advertisement
“ஆம், வழக்கத்தில் இல்லாதது எல்லாம் இந்த குடும்பத்தில் தான் நடக்கிறது. இவன் எப்போது, ‘அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்’ என்று பெயரிடத்தானோ அப்போதிலிருந்து இப்போது வரை அவன் கொடுக்கும் பொறுப்புகளை தான் நான் செய்து கொண்டிருக்கிறேன். நான் சொல்வதை அவன் ஏற்பதே கிடையாது” சலித்துக் கொண்டு உரைத்தார் அந்த கந்தனின் தந்தை பரமன்.
அதற்கு அவர் மணவாட்டியோ, “இப்போதே இப்படி சலித்து கொண்டால் எப்படி?இன்னும் உங்கள் மகன் உங்களுக்கு சொல்ல, பல விசயங்கள் வைத்திருக்கிறான். அதை எல்லாம் நீங்கள் முடித்தாக வேண்டுமே?”
Advertisement
“இன்னுமா???????” சற்று அரண்டு தான் விட்டார் நம் பரமசிவன்.
அதை கேட்டு அவர் தேவி சிரித்து விட, “சிரிக்காமல், பதில் கூறு தேவி?” என்றார்
“நீங்கள் பயம் கொள்ள தேவையில்லை பிரபு, உங்கள் பிள்ளை நீங்கள் என்ன திட்டத்தில் இருக்கிறீர்களோ அதே திட்டத்தில் தான் இருக்கிறான்” என்றதும் தான் அந்த பரமனுக்கு மனம் அமைதி அடைந்தது.
“நல்லது. நீ வந்த காரணத்தை இன்னும் கூற வில்லையே உமா?”
“நான் ஏதோ கேட்க தான் வந்திருக்கிறேன் என்றறிந்தவருக்கு, என்ன கேட்க வந்திருக்கிறேன் என்று தெரியவில்லையா?”
“நீ என்னிடம் எதை பற்றியும் கேட்க முழு உரிமை உடையவள், நீ கேட்டு கூறுவதில் எனக்கு ஒரு ஆனந்தம். அதனால் தான் கேட்கிறேன். கூறு தேவி”
“அந்த பெண் தவறவிட்ட குழந்தையின் ஆயுள் முடியும் முன்பே பறிக்கப்பட்டதால் தானே, தவறவிட்ட பெண்ணுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை தந்து குழந்தையை காப்பாற்றினீர்கள்?”
“ஆம்…தேவி. எப்போது போல் இந்த எமனும் சித்திரகுப்தனும் செய்த கவனக் குறைவு தான். அந்த பிஞ்சின் உயிர் அவள் ஆயுள் முடியும் முன்பே பறிக்கப்பட காரணம். அதற்கு தான் இவை அனைத்தும்”
“இவை எல்லாம் எனக்கு நன்றாக தெரியும் பிரபு. நீங்கள் சொல்வது போல் தவறிழைத்தது சித்திரகுப்தன் தான் என்றால் வேலினி ஏன் இத்தனை மன சங்கடங்களை அனுபவிக்க வேண்டும்?”
“அது அவளின் கர்ம பலன் தேவி. இந்த பெண் தன் அத்தனை பிறவிகளிலும் உன் செல்ல மகனான கந்தனின் பக்தையாக இருந்தவள். அதனாலோ என்னவோ இவள் அறிந்து யாரையும் காயப்படுத்தியது இல்லை.
இருந்தும் மனிதர்கள் இயல்பாக தங்களை அறியாமலேயே சிறு சிறு தவறுகளை செய்துவிடுகின்றனர்.
அப்படி இவள் ஒரு பிறவியில் அறியாமல் செய்த ஒரு பெரும் பிழை தான் இத்தனை துன்பங்களுக்கும் காரணமாகிவிட்டது”
“இப்போது தான் எனக்கும் இன்னும் குழப்பம் அதிகரிக்கிறது பிரபு”
“உன் எண்ணங்கள் அனைத்தையும் நானே அறிவேன் தேவி…ம்ம்ம்.. கேள்”
“வேலினி முதல் வாழ்விலேயே பல துன்பங்களை அனுபவித்துவிட்டாள். அப்படி இருக்கையில் அவளுக்கு நீங்கள் அளித்த மறுவாழ்வில் ஏன் பழைய நினைவுகள் அனைத்தையும் அவளுக்கு அளித்து, பழையதால் ஏன் இத்தனை மனகிலேசங்களை அவளுக்கு ஏற்படுத்தினீர்கள்”
தேவி பூமியில் பிறந்த மனிதர்கள் அனைவருக்கும் தன் பெற்றவர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமை இருக்கிறது. மாறாக அவர்கள் தன் பெற்றவர்களை துன்பப்படுத்தினார்கள் என்றால் அதற்கான வினையையும் அவர்கள் அனுபவித்து தானே ஆக வேண்டும். முதல் முறை வேலினி தன் வாழ்வில் தானும் துன்பப்பட்டு தன் பெற்றோர்களையும் துன்பத்திற்கும் ஆளாக்கிட, அதன் பலனாக தான் அவள் இரண்டாம் முறை அனைத்தையும் நினைவு கூர்ந்து பெரும் துன்பத்திற்கு ஆளாக வேண்டி இருந்தது.
“அப்படி என்றால் அவள் அனுபவிக்க வேண்டிய கர்ம பலன்கள் அனைத்தும் இத்துடன் முடிந்துவிட்டது. அப்படித்தானே????? ”
“அப்படியே தான் இத்தனை ஆண்டுகளாக கந்தனின் பக்தையாக இருந்து அவனுக்கு தொண்டாற்றியவள் தன் கர்ம பலனினால் துன்பங்களை அடைந்தாள்.
இருந்தும் அவளுக்கு ஏற்பட்ட இழப்புகளில் இருந்து கந்தனின் அருளால் தான் மீண்டும் வர முடிந்தது. இனி அவள் அந்த கந்தனின் அருளை முழுதாக பெற போகிறாள்”
இனி கந்தனின் அருள் அவளுக்கு முழுதாக கிடைத்தாலும் என்ன பலன் இருக்கப் போகிறது சுவாமி.
அவளின் உயிர் தான் எமனின் பாசக் கயிற்றால் இந்த மேலோகத்திற்கு இழுக்கப் பட்டு வந்துவிட்டதே? இனிமேல் அவள் உயிர் அந்த கந்தனின் காலடிகளில் மோட்சம் பெற்றிடும் என்று எனக்கு தெரியும, ஆனால் காதல் என்ற வாழ்வை அவள் முழுதாக வாழ வில்லையே. அது தான் என் வருத்தம்”
“உமா, உனக்குள் இப்படி ஒரு வருத்தம் இருக்கும் என்று எனக்கு தெரியும். கவலை கொள்ளாதே. அவளுக்கு இன்னும் ஒரு பிறவி இருக்கிறது. அந்த நீல கற்கள் கொண்ட காதணிகளை அவள் ஆசைப்பட்டது போல் அணிந்து கொண்டு அவள் கணவனுடன் வாழ்ந்து, தன் காலம் முடியும் போது அதை தன் பேத்தியிடம் வழங்கிவிட்டுத்தான் இந்த மேலோகத்திற்கு நிரந்தரமாக வந்து சேர்வாள்” என்று பரமேஸ்வரன் கூறியதும் தான் தேவியின் முகம் பிரகாசமானது.
“எனக்கு இப்போது தான் நிம்மதியாக இருக்கிறது சுவாமி… சரி சுவாமி.. உங்களின் திருவிளையாடல்கள் இன்னும் எத்தனை பாக்கி இருக்கிறது?”
“இந்த எமன் தன் தவறுகளை திருத்தும் வரை என் திருவிளையாடல்களும் முடியாது போல் தேவி. சரி அடுத்து அவன் எதுவும் செய்து வைத்திருக்கிறானா? என்று போய் பார்த்துவிட்டு வருகிறேன்” என்று பரமேஸ்வரன் கிளம்பியவர், மீண்டும் திரும்பி தேவியிடம்,
“தேவி தயவுசெய்து உன் மகனிடம் ஒருமுறை அழுத்தி கூறி வை. அவனுடைய பக்தர்களுக்காக விதிகளை எல்லாம் மாற்றிக் கொண்டே இருக்க முடியாது என்று”
“நீங்கள் ஆகிற்று.. உங்கள் மகனாகிற்று. உங்கள் இருவரின் விளையாட்டுக்குள் நான் என்றும் வருவதே கிடையாது. என்னை விட்டு விடுங்கள்” என்று உரைத்த தேவி அங்கிருந்து ஓடிய விட்டார்.
🙏கந்தன் அருள் …….🙏
மகாஆனந்த்.✨
