Skip to content
Post Views: 1,529
மேகங்கள் கலைந்து சற்று சூரிய வெளிச்சம் எட்டிப்பார்த்தபோது காலை எட்டு மணி ஆகியிருந்தது. புதுப்புடவையை போர்வைபோல் இழுத்து மூடியிருந்த வசுமதி, ஒரு குழந்தை போல் தூங்கிக் கொண்டிருந்தாள். சங்கர் எழுந்து வெளியே எட்டிப்பார்த்தான். அந்தப் பகுதியை மழைநீர் சூழ்ந்திருந்தது. மழையின் வேகம் குறைந்து, சிறு தூறலாக போட்டுக் கொண்டிருந்தது. கம்பியில் போட்டிருந்த தன் சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டான். மெதுவாக படிகளில் இறங்கினான். சாலையின் ஓரங்களில் இன்னும் தண்ணீர் வடியவில்லை. மெக்கானிக் ஷெட்டின் பின்புறம் உள்ள குடியிருப்புப் பகுதிகள், சாலையில் இணையும் தெருக்களில் எல்லாம் முழங்கால் அளவுக்குத் தண்ணீர் கட்டிக்கிடந்தது. தெருக்களில் தேங்கியிருந்த தண்ணீரை கார்ப்பரேசன் ஆட்கள் மோட்டார் வைத்து எடுத்துக் கொண்டிருந்தார்கள். முறிந்து விழுந்திருந்த மரங்களை வெட்டி, அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்கள். நிலைமையைப் பார்த்தால், பிற்பகல் அல்லது இரவில்தான் கரண்ட் வரும்போல் தெரிந்தது. பேண்ட்டை மடித்து ஏற்றிவிட்டுக் கொண்டு, சாலையில் நடந்தபடியே குட்டிக்கு போன் போட்டான்.
“ஹலோ சங்கர்ணா.. இங்க ஒரே தண்ணி. இன்னிக்குக் கொஞ்சம் லேட்டாகும்ணா.”
“இங்கேயும் ஒரே தண்ணிதான். நீ வர வேண்டாம். நாளைக்குப் பார்த்துக்கலாம்.”
“ஐய.. இன்னிக்குத்தான்ணா நெறிய வண்டிங்களுக்கு ஸ்டார்ட்டிங் கம்ப்ளெயிண்டு வரும்.”
“என்ன வந்தாலும் இங்க வச்சி வேலை பார்க்க முடியாதுடா.. சொன்னாக் கேளு. இன்னிக்கு வீட்லயே இருந்துக்கோ. நாளைக்கு வா.” என்று கண்டிஷனாக சொல்லிவிட்டு போனை வைத்தான்.
சற்று தூரம் நடந்து, ஒரு டீக்கடையில் டீயும் சில பிஸ்கட்டுகளும் வாங்கிக்கொண்டு திரும்பி வரும்போது வசுமதி எழுந்திருந்தாள். கதவில் சாய்ந்து நின்றபடி, படியேறி வரும் சங்கரைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“குட் மார்னிங்!” குரல் கேட்டு மேலே பார்த்தான். அந்த இடத்தின் சூழலுக்குச் சற்றும் சம்பந்தமில்லாமல், வானிலிருந்து இறங்கிவரக் காத்திருக்கும் தேவதை போல தெரிந்தாள்.
“ம்ம்.. குட் மார்னிங், நல்லா தூங்குனீங்களா?” என்றான் சங்கர்.
“அருமையான தூக்கம்.” சிரித்தபடி சொன்னாள்.
இருவரும் பிஸ்கட் சாப்பிட்டபடி டீ குடித்தார்கள்.
ஒவ்வொரு முறையும் ஒய்யாரமாய் அவள் உதட்டோடு உரசும் அந்தக் காகிதக் கப்பை பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் சங்கர்.
‘இவள் உண்மையிலேயா எனக்குத்தானா?’ மெக்கானிக் சங்கருக்குள் மென் கவிதைகள் பூத்தன.
தேடி வந்த கவிதை
தேநீர் குடிக்கிறது..
கூடவே என்
உயிரையும்!
சங்கருக்கு இந்த உணர்வு, இதுவரை இல்லாத புதுவித சுகமாக இருந்தது.
“என்ன.. புடிச்சிருக்கா?” அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே கேட்டாள் வசுமதி.
‘பாவி மக.. மனசைப் படிக்கிறதுல கில்லியா இருப்பா போலிருக்கே!’ சங்கரும் சிரித்துவிட்டான். இருவரும் சேர்ந்து சிரித்தார்கள்.
“சரி, போலாமா? இதுக்குமேல இங்க இருக்க வேண்டாம்.” வசுமதி சிரிப்பை நிறுத்திவிட்டு முறைத்தாள்.
“நான் இப்பப் போக முடியாதுப்பா.. இன்னிக்கு நான் பெங்களூருல இருக்கிறதா சொல்லியிருக்கேன். வேணும்னா உங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போங்க..வர்றேன்.”
சங்கர் திகைத்தான்.
****
மலர் புலம்பிக்கொண்டே இருந்தாள். இரவில் சரியாக தூங்கவில்லை.
“மழையோட கிளம்பிப் போனாளே.. ஒரு போன் போட்டாளான்னு பார்த்தீங்களா? நான் போன் போட்டதுக்கும் எடுக்கலை. கார்ல போறதா சொன்னா. எப்படிப் போனாளோ என்னன்னு ஒண்ணுமே தெரியலை.”
“சும்மா தொணதொணக்காத.. அவ வெளில போறது இதுதான் முதல் தடவையா என்ன? போன்ல சார்ஜ் இருக்கோ என்னவோ.. பேசும்போது அவளே போடுவா விடு.” என்றார் சரவணன். இருந்தாலும் தனது மொபைல் போனை எடுத்து ஒருமுறை மகளுக்கு முயற்சி செய்தார். ‘சுவிட்ச்டு ஆஃப்’ என்று வந்தது.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே வீட்டின் முன்னால் கார் வந்து நின்றது. கதவைத் திறந்து பிச்சை வாத்தியார் மெதுவாக இறங்கி வர, காரை நிறுத்திவிட்டு இறங்கி வந்தான் துரைப்பாண்டி.
“வாங்க..” என்று பொதுவாக வரவேற்றபடி வந்தார் சரவணன். மலரும் சிரித்த முகமாக வரவேற்றாள்.
“நல்லாருக்கீங்களாய்யா?” என்றபடி சுவாதீனமாய் படியேறி வந்தார் பிச்சை வாத்தியார்.
“சென்னையில என்ன மழை இப்படிப் பேயுது? சிட்டிக்குள்ள கூடி வந்தா இப்பக்குள்ள வீட்டுக்கு வந்துருக்க முடியாது போலிருக்கே.
எதோ வண்டலூர் மீஞ்சூர் பைபாஸ் இருக்குறதால உங்க ஏரியாவுக்கு ஈஸியா வர முடிஞ்சது.” என்றபடியே துரைப்பாண்டி சுற்றுமுற்றும் பார்த்தான்.
“நீங்க மழை நேரத்துல வந்துருக்கீங்க!” என்றாள் மலர். கையில் போனோடு வந்த பிரபு. ஹை மாமா! ஹை அத்தான்!” என்று கையை அசைத்துவிட்டு மறுபடியும் மாடிக்குப் போய்விட்டான்.
“போஸ்ட் கம்பங்களும் மரங்களும் நிறைய விழுந்துருக்கு போல. நைட்டு போன கரெண்டு இப்பத்தான் வந்தது, இன்னும் வைஃபை வரலை. டிவி நியூஸ்கூட பார்க்க முடியலை.” என்றார் சரவணன். இருவருக்கும் குடிக்க தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள் மலர்.
“ரெண்டு பேரும் கையக் கழுவிட்டு வாங்க சாப்பிடலாம்.”
“இல்லம்மா.. காலைச் சாப்பாட்டை வரும்போதே முடிச்சிட்டோம். இனி ரெண்டு மணிக்கு மேல சாப்பிடலாம்.” என்றார் வாத்தியார்.
“எங்க அத்தை, உங்க மகளைக் காணோம்?” என்ற துரைப்பாண்டியைப் பார்த்து சங்கடமாகச் சிரித்தாள் மலர்.
“அவ,, கூட வேலை செய்ற பொண்ணுக்குக் கல்யாணம்னு பெங்களூரு போயிருக்காப்பா. நாளைக்கு சாயந்திரம்தான் வருவா.”
“ஓ.. சரிசரி.”
மலர், காபி போடுவதற்காக சமையலறைக்குள் நுழைந்தாள்.
சரவணன் முன்பு போல் கலகலப்பாகப் பேசாமல் அமைதியாக இருந்தது, பெரியவருக்கும் துரைப்பாண்டிக்கும் சற்று சங்கடமாகத்தான் இருந்தது.
“நீங்க என்ன சொல்றீங்க மாமா..” நேரடியாக சரவணனைப் பார்த்துப் பேச ஆரம்பித்தான் துரைப்பாண்டி.
“மாமா, நான் குடிகாரன்தான். எனக்கு எல்லா கெட்ட பழக்கமும் இருந்தது உண்மைதான். ஆனா, அதெல்லாம் ஒரு காலத்தோட போயிடுச்சி. இப்ப நான் வேற புது துரைப்பாண்டி. உங்க மரியாதைக்கும் கவுரவத்துக்கும் எந்தக் குறையும் வராம, உங்க மகளை நல்லா வச்சிக் காப்பாத்துவேன். நீங்க பயப்படத் தேவையே இல்ல. இவருக்கப்புறம் எனக்கு அப்பா அம்மாவா இருக்குறது நீங்களும் அத்தையும்தான். நீங்கதான் என்னை நம்பணும்.”
சரவணன் மையமாகச் சிரித்தபடி அமைதியாக இருந்தார். அவருக்கு எவ்வளவோ பேசவேண்டும்போல் இருந்தது. அப்படிப் பேசினால் அது இவர்களுக்குப் புரியுமா என்று தெரியவில்லை.
காபிக் கோப்பைகளுடன் வந்தாள் மலர். ஆளுக்கு ஒன்றை எடுத்துக் கொண்டார்கள்.
“இது மட்டும் நடந்துட்டா, ரமணியும் வந்துருவா மாப்ள. இப்பவும் அவ என்கிட்ட மட்டும்தான் பேச மாட்டா. இவனோட பேசிக்கிட்டுத்தான் இருக்கா போல.” என்று அமைதியாகச் சொன்னார் பிச்சை வாத்தியார்.
சரவணனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. “நீங்க நெனைக்கிறது நடந்தா எனக்கும் சந்தோசம்தான் மச்சான். ஆனா என் கையில ஒண்ணும் இல்ல. இது அந்தக் காலம் மாதிரி இல்ல, காலம் ரொம்ப மாறிடுச்சி. அப்பாங்கிறதுக்காக என் மகளுக்கு நான் ஆர்டர் போடவும் முடியாது. அவளோட வாழ்க்கையைத் தீர்மானிக்கிற உரிமை நிச்சயமா அவளுக்குத்தான் இருக்கு.”
அப்போது மேல் அறையிலிருந்து பிரபுவின் குரல் கேட்டது, “அப்பா, வைஃபை வந்துருச்சி. டிவி போட்டுக்குங்க.”
சரவணன் மெதுவாக எழுந்தார். டிவியை ஆன் பண்ணி, செய்தி சேனலை வைத்தார். எல்லா சேனல்களிலுமே முந்தைய இரவின் மழை பாதிப்பையே காட்டிக் கொண்டிருந்தார்கள். வட சென்னையின் பல பகுதிகளிலும் இன்னும் மழை நீர் வடியாமல் மக்கள் படும் அவதிகளைக் காட்டி, ஆட்சியின் அவலத்தை தோலுரித்துக் கொண்டிருந்தார்கள்.
“நல்லவேளை.. நாம இருக்கிறது மேட்டுப்பகுதியா இருக்கிறதால, இங்க தண்ணியெல்லாம் நிக்கிறது இல்ல.” டிவியைப் பார்த்துக் கொண்டே பேச்சை வேறு திசைக்கு மாற்றினாள் மலர்.
“வூடெல்லாம் தண்ணி, குடிக்கிற தண்ணியில சாக்கடை கலந்துருச்சிங்க சார், எங்களுக்குக் குடிக்கத் தண்ணி கூடக் கிடைக்கலை. குழந்தைங்க பசியால துடிக்குதுங்க. பால் பாக்கெட் கூடக் கிடைக்கலை.” இடுப்பில் குழந்தையுடன் ஒரு மூதாட்டி மீடியாக்களைப் பார்த்துக் கதறிக் கொண்டிருந்தார். இடையிடையே பொதுமக்கள் முழங்கால் அளவு தண்ணீரில் நடப்பதையும், குடியிருப்புகளில் டிவியும் கட்டிலும் மழை நீரில் மிதப்பதையும் காட்டிக் கொண்டிருந்தார்கள்.
அந்த வேளையிலும் ஒரு சிலர் கஷ்டப்பட்டு டூவீலரில் போய்க்கொண்டிருந்தார்கள்.
“வூட்டு மேல மரம் வுழுந்துருக்கு சார். கர்ப்பரேசன்காரங்க ரொம்பநேரமா வரலை. கரெண்டும் இல்ல. அதிகாரிங்க நடவடிக்கை எடுக்க மாட்டேங்குறாங்க சார். நாங்க ரோட்டுலதான் இருக்கோம். முதல்வர் அய்யாதான் தலையிட்டு எங்களுக்கு நல்லது செய்யணும்.” என்று ஒரு பெண் உணர்ச்சிப் பூர்வமாகப் பேசிக்கொண்டிருந்தாள். பின்னணியில் தண்ணீரைக் கிழித்துக்கொண்டு மெதுவாக அதே நேரம் கவனமாக, படகுபோல் பைக்கில் போய்க்கொண்டிருந்தான் ஒரு இளைஞன். அவன் பின்னால் கால்களைத் தண்ணீரில் படாமல் சற்றே தூக்கியபடி அமர்ந்திருந்த பெண் வசுமதி போல் தெரிந்தாள்.
****
error: Content is protected !!