Skip to content
Post Views: 4,277
அத்தியாயம் 3
சென்னையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தார்கள் சாலாவும் அருணும். சாலாவின் அப்பா, சிவப்பிரகாசம் அம்மா பார்வதி. அவர்களும் சென்னையில் தான் வசிக்கின்றார்கள்.
Advertisement
சிவப்பிரகாசம் ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியாராக பணிபுரிகிறார். பார்வதி வங்கி மேலாளராக பணிபுரிகிறார்.
சாலாவிற்கு ஒரு தம்பியும் தங்கையும். தங்கை அமுதா திருமணமாகி துபாயில் தன கணவன் வடிவேலுவுடனும் மகன் ஹரிஷ் உடனும் வசித்து வருகிறாள்.
Advertisement
தம்பி விஸ்வநாதன் திருமணமாகி தன் மனைவி தேன்மொழியுடனும் மகன் ஷிவ் உடனும் பெங்களூரில் வசித்து வருகிறான்.
Advertisement
சிவப்பிரகாசத்திற்கு தமிழின் மீது தீரா காதல் உண்டு. தமிழ் கடவுள் முருகன் மீது எல்லையில்லா அன்பு உண்டு. அதனாலே தன் பிள்ளைகளுக்கு சிறுவயது முதலே தமிழையும் முருகன் மேலே அன்பையும் ஊட்டி வளர்த்தார்.
பார்வதியும் திருப்புகழ் பாராயண குழுவில் இருந்தார். விடுமுறை நாட்களில் அந்த குழுவுடன் திருபுகழ் பாட சென்றிடுவார். சிறு வயதில் இருந்தே அவருடன் சாலாவும் கலந்துகொள்வார்.
Advertisement
சென்னை வந்ததும் முதலில் சாலா தன் பெற்றோர்களை பார்க்க சென்றார். ஊரில் நடந்தவைகளை பற்றி கூறினார். முருகனிடம் அவரது வேண்டுதலையும் கூறினார்.
பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி.. சாலாவிற்கு குழந்தை இல்லாததை எண்ணி தினம் தினம் இருவருக்கும் வருத்தம் தானே. முருகன் வழி காட்டிவிட்டான் என்றே இருவரும் நம்பினார்கள்.
“நம்ம கும்பிடற முருகன் நம்மள ஒருபொழுதும் கை விடமாட்டான் ஆத்தா” என்றார் சிவப்பிரகாசம் நெகிழ்ச்சியாக.
வீட்டின் தலை மகனுக்கு அப்பாவின் அப்பா பெயரும், தலை மகளுக்கு அப்பாவின் அம்மா பெயரும் வைப்பது வழக்கம். விசாலாட்சி என்பது அவரது அன்னையின் பெயர். அதனால் அவர் எப்பொழுதும் சாலாவை ஆத்தா என்றே பிரியமாக அழைப்பார். இரண்டாவது பிள்ளைகளுக்கு அம்மாவின் பெற்றோர்கள் பெயர் வைப்பார்கள்.
“விஸ்வத்துக்கும் அமுதாகும் சொல்லணும் சாலா, சந்தோசப் படுவாங்க” என்றார் பார்வதி. மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு அங்கே இருந்து தங்கள் கம்பெனிக்கு சென்றுவிட்டார் சாலா.
சாலா எம்.பி.ஏ பட்டதாரி. ஒரு தனியார் நிறுவனத்தில் முதலில் வேலை செய்து கொண்டிருந்தார். அருணின் தொழில் நிலையான நிலைமை அடையவும், அவருக்கு உறுதுணையாக அவருடன் தொழிலை பார்த்துக்கொள்கிறார்.
நாட்கள் விரைந்து சென்றது. கோவிலுக்கு சென்று வந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. எல்லோருக்கும் சாலாவிடம் இருந்து நல்ல செய்தி வரவில்லையே என்ற ஆதங்கம். ஆனால் யாரும் அவரிடம் கேட்கவில்லை.
‘முருகா சரணம்’ என்றே அமைதியாக இருந்தனர் அருணும் சாலாவும்.
அந்த ஆண்டு சிறந்த சிறு தொழில் விருது இவர்கள் கம்பெனிக்கு கிட்டியது. அதை மகிழ்ச்சியுடன் அனைவருக்கும் தொலைபேசியில் கூறினார் சாலா.
விருது வழங்கும் விழாவிற்கு முருகம்மை ஆச்சியை கட்டாயம் வரவேண்டும் என்று கூறினார்கள். அவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி.
தம்பிகளுக்கு அருண் அழைத்து விஷயத்தை கூறினார், அவர்களுக்கும் மகிழ்ச்சியே. அவர்கள் தங்கள் மனைவிகளிடம் தெரியப்படுத்தினர். அப்பொழுது அவர்களுடன் இருந்த மீனா, “என்ன மாப்பிள்ளை உங்க அண்ணி நல்ல விஷயம் சொல்லும்னு பார்த்தா?” என்று இழுத்தார்.
வள்ளியே பொங்கிவிட்டாள், “இதபாரு அம்மா, ஆச்சியை பத்தி ஒன்னும் சொல்லாத? அவங்க நல்ல மனசுக்கு நல்லதாவே நடக்கும். அவங்க எங்களுக்கு எவ்வளவோ செய்றாங்க”
விழாவில் அனைவரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டார்கள். சாலாவிற்கு குழந்தை பிறக்கும் விஷயத்தை பற்றி எல்லோரும் சற்று ஆற போட்டனர்.
அடுத்த மாதம் சாலா கருவுற்றார். விஷயம் அறிந்த முருகம்மை ஆச்சியை கையில் பிடிக்க முடியவில்லை. ‘பெரியவனுக்கு புள்ள பொறக்கப்போகுது’ என்று ஊருக்கே கறி விருந்து ஏற்பாடு செய்தார்.
அருணுக்கும் சாலாவிற்கும் மகிழ்ச்சி. ஆனால் ஆர்பாட்டமான மகிழ்ச்சி இல்லை. முருகா சரணம் என்று முருகனுக்கு நன்றி சொல்லி கொண்டார்கள்.
திருமணமாகிய புதிதில் கருவுற்றிருந்தால் தாய் வந்து பார்த்து பக்குவம் சொல்லுவார். ஆனால், சாலா தான் தன் கொழுந்தன் மனைவிகளுக்கு பக்குவம் சொல்லி பார்த்துக்கொண்டதே. தன் தங்கையின் பிரசவித்திற்கும் அம்மாவிற்கு அவரே உதவி செய்தார்.
அவரே தன் அம்மாவிடம், தேவைன்னா சொல்றேன், நீ வேலைக்கு போ என்றுவிட்டார்.
ஆரோக்கியமான பெண்மணி விசாலாட்சி. மருத்துவரும், “உடலும் மனமும் ஆரோக்கியமா இருந்தா போதும், வயது எல்லாம் பிரச்சனை இல்லை” என்று கூறிவிட்டார்.
ஊரில் மருந்து குடிக்கும் விசேஷம். செட்டிநாட்டில், வளைகாப்பு என்பதை மருந்து குடிப்பது என்று கூறுவார்கள். கோலமிட்டு அதன் மேலே தடுக்கு போட்டிருப்பார்கள். திருமண பட்டுடுத்தி, கழுத்தீரு அணிந்து, கர்ப்பமாக இருக்கும் பெண் ஒரு தடுக்கிலும் நாத்தனர் ஒரு தடுக்கிலும் எதிர் எதிரே நிற்பார்கள்.
மருந்து எடுத்து கொடுப்பதற்கே தனியாக ஆட்கள் இருப்பார்கள். பச்சிலைகளின் பெயர்களை வெளியே சொல்ல மாட்டர்கள்.
இப்பொழுது தடுப்பூசிகள் போடுவது போல, பல நூறாண்டுகளுக்கு முன்பே, வயிற்றில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்திற்காக ஐந்தாம் மாதம் இந்த பச்சிலைகளை இடித்து, சாறு பிழிந்து வட்டியில் ஊற்றி மூன்று முறை, நாத்தனர் கொடுப்பார். நாத்தனார் இல்லாத சூழ்நிலையில் மாமியார் இந்த சடங்கை செய்வார்.
பங்காளிகள் சொந்தபந்தங்கள் எல்லோரும் ஒன்றுகூடி சிறப்பாக நடக்கும் இந்த நிகழ்வு.
பௌர்ணமி நிலவு போல பூரித்து காணப்பட்டார் விசாலாட்சி. பல வருடங்கள் காத்திருந்து கிடைத்த வரமாதலால், அனைத்து சொந்தபந்தங்களும் வந்து விட்டார்கள்.
மதியம் எல்லாம் நல்ல படியாக முடியவும், மாலை சாலாவின் ஆசைக்காக அவர்கள் வீட்டில் திருப்புகழ் பாராயணம் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
சாலாவின் அம்மா அவரின் குழுவை வரவழைத்திருந்தார். முப்பது பெண்கள் வந்திருந்தார்கள். அனைவரும் ஒரே நிறத்தில் பட்டுப்புடவை அணிந்து தங்களுடன் முருகன் புகைப்படத்தை கொண்டு வந்திருந்தார்கள். பத்தே நிமிடத்தில் முருகனை வைத்து பூமாலைகள் கொண்டு அற்புதமாக அலங்கரித்து விட்டார்கள். தொட்டில் முருகனும் உடன் வந்திருந்தார்.
“வெற்றவேல் முருகனுக்கு அரோகரா.. “ என்று தொடங்கி, 108 திருப்புகழ் பாடல்கள் பாடி, நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.
அவர்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்திருந்தார்கள். பின் அனைவருக்கும் தாம்பூலம் கொடுத்து அனுப்பினார்கள்.
வள்ளியும் தெய்வானையும், முன்பு போல இல்லாமல் எல்லா வேலையையும் செய்தார்கள். உண்மையில் மீனா இவர்களை பார்த்துக்கொண்டதை காட்டிலும் சாலா பார்த்துக்கொண்டது அதிகம். மீனாவிற்கு சொந்த பந்தங்கள் அதிகம். ஏதாவது ஒரு விசேஷத்திற்கு அடிக்கடி சென்றுவிடுவார். அவருக்கு ஊரில் இருப்பது தான் பிடித்தம்.
அதனால் சென்னையில் சாலாவின் துணையுடனே இருவரும் தங்கள் பேறுகாலம், குழந்தை வளர்ப்பு எல்லாம் சமாளித்தனர்.
“நான் தான் செய்தேன்” என்று ஒரு போதும் சாலா சொன்னதில்லை. மீனா கூட நான் தான் செய்தேன் என்று மகளுகளுக்கு செய்ததையே சொல்லி காட்டுவார்.
முருகம்மை ஆச்சிக்கு மிகவும் மனநிறைவு. சின்ன மருமகள்களை வாயார பாராட்டினார்.
கையோடு முருகம்மை ஆச்சியையும் அழைத்து கொண்டே சென்னை புறப்பட்டனர் அனைவரும்.
error: Content is protected !!