Skip to content
Post Views: 2,011
நாம் கேட்ட காலங்கள் – 7
பிரசன்னாவுக்கு கோபம் என்பதை விட வருத்தம் மேலோங்கியது. கணவன் மீது அவ்வளவு பாசம் வைத்தும் அவனுக்கு அது புரியவில்லையே என்ற ஆயாசம் அவளை அலைக்கழித்தது.
உண்மையைச் சொன்னால் அவள் காதல் என்று நினைத்த போதெல்லாம் அது காதலே இல்லை என்பது திருமணத்திற்குப் பின்னர்தான் விளங்கியது. திருமணத்திற்கு முந்தையை காதல் என்பது தேர்வுக்குப் படிப்பது, திருமணம் என்பது தேர்வு.
எந்த கேள்வி வரும் என்று தெரியாது, எந்த கேள்வி வந்தாலும் தேர்ச்சி பெற வேண்டி எழுதிதான் ஆக வேண்டும். எந்த கேள்வி எழுதினால் தேறலாம், எதனை விடலாம் என்று தேர்வறையில் அந்த சில நிமிடங்களில் எடுக்கின்ற முடிவு தேர்ச்சியைத் தீர்மானிக்கும். அதற்கு முன் எப்படி படித்திருந்தாலும் அந்த தேர்வறையில் எப்படி எழுதுகிறோமே அதுதான் பேசும்.
Advertisement
திருமண வாழ்க்கை அப்படித்தான் இருந்தது. எங்கே இருந்து கேள்வி வரும் என்று தெரியவில்லை, எதிர்ப்பாராத உறவுகள், அவர்களின் கேள்விகள், புது புது சூழ் நிலைகள் எல்லாவற்றையும் சமாளிப்பது கிரிக்கெட் க்ரவுண்டில் ஒற்றை பேட்ஸ்மேனாக நின்று எல்லாரையும் சமாளிப்பது போல. இதில் உடன் ஓடும் பேட்ஸ்மேன் சரியில்லையென்றால் அவுட்!
மகேந்திரனைப் பொருத்தவரை மனைவியை விளையாட்டாகக் கூட எங்கேயும் யாரிடமும் விட்டுக்கொடுக்காதவன். எத்தனை கிண்டல், கேலி என்றாலும் அவர்களுக்குள் மட்டுமே. இப்போது தலைவனின் தலையாயக் கோபம் கூட அவள் அவனை விட்டுச் சென்று அவள் வீட்டில் இருப்பது. அது மற்றவர்களின் பார்வைக்கு விருந்தாக இருப்பது சுத்தமாக பிடிக்கவில்லை.
பிரசன்னாவிற்கு அதற்கு மேல் அங்கிருக்க பிடிக்காமல் நகர நினைத்து அடி வைத்தாள்.
Advertisement
“வர்தினி” என்ற வைதேகியின் குரல் கீழிறிருந்து கேட்டது.
Advertisement
கணவனை முறைத்தவள் கீழே செல்ல, “இந்த சூப்பை அவனுக்குக் கொடுத்திடு, நீயும் குடிச்சிடு. இரண்டு பேருக்கும் இருக்கு” என்றார் வைதேகி.
“ஃபீவர் இருக்கா?” என்று வைதேகி கேட்க, அவள் எங்கே கணவனை நெருங்கினாள்? சரியும் இல்லாமல் தவறுமில்லாமல் ஒரு குழப்பமான பதிலைக் கொடுத்தாள்.
“லேசா இருக்குத்த” என்றதும்
Advertisement
“எங்க ஒரு ஊசி போட்டா குறையும். நேத்தெல்லாம் அவ்வளவு ஹை ஃபீவர். குழந்தை மாதிரி ஊசி வேண்டாம்னு கத்துறான் இடியட்” என்று புலம்ப
“ஏன் வைதேகி அவனுக்கு trypanophobia(ஊசி சிகிச்சைக்கான பயம்- டிரைபனோபோபியா) இருக்குனு சொன்னா நீ புரிஞ்சிக்க மாட்டேங்கிற. நீ சொன்னதைக் கேட்டு நேத்து அவனுக்கு இஞ்செக்ஷன் போட்டு லோ பி.பி ஆகிடுச்சு. புரியாம நடக்காத! அவனுக்கு அது anxiety(பதற்றம்) கொடுக்குதுன்னா புரிஞ்சி நடக்கணும்” என்றார் வித்யாதரன் அழுத்தமாக.
பிரசன்னா இதை காதில் வாங்கினாலும் பதில் சொல்லவில்லை. மெதுவாக சூப்பை வாங்கிக் கொண்டு செல்ல, வைதேகி மருமகளின் வாடிய முகத்தைக் கண்டார்.
பிரசன்னா மாடியேறியவள் கட்டிலுக்கு அருகே இருக்கும் சிறிய மர மேஜை மேல் சூப் இருந்த ட்ரே’யை வைத்தாள். மேஜையை கணவனுக்கு பக்கமாக நகர்த்தினாள்.
“அத்தை, சூப் கொடுத்தாங்க.”
“ஓஹ், இது வாங்கத்தான் போனியா? நான் கூட கோவிச்சிட்டு போய்ட்டன்னு நினைச்சிட்டேன்.” என்றதும் பிரசன்னவர்தினியின் கோபத்திற்கு அது உந்துதலாக அமைந்தது. கணவனை தலையணை எடுத்து ஆவேசமாக அடித்தாள். மகேந்திரன் ஏற்கெனவே வாடி இருந்தவன் இன்னும் களைந்து, கலைத்துப் போனான். ஆனால் மனைவியைத் தடுக்கவில்லை. பிரசன்னாவிற்குக் கோபத்தில் அழுகையும் கூட சேர்ந்தது.
அப்படியே மெத்தையில் படுத்துக்கொண்டாள். மகேந்திரனோ அமைதியாக எழுந்து பாத்ரூம் சென்றவன், முகம் கழுவிவிட்டு சூப்பை எடுத்துப் பருகினான். காய்ச்சல் அவனை புரட்டியிருந்தது. மனைவியைப் பார்த்த பின் ஒரு துள்ளல். அது வம்பிழுக்க சொல்ல வார்த்தைகளோ பிரசன்னாவிற்கு வாதையானது.
“ஷ்! அழாத. சூப் நல்லாயிருக்கு, சூடா இருக்கும்போதே குடி” என்றான்.
“நீ குடிக்கலன்னா அம்மா திட்டுவாங்க” என்றபோதிலும் பிரசன்னா அழுவதை நிறுத்தவில்லை.
அவள் கேட்டது இப்படியான ஒரு வாழ்க்கையை அல்ல. காதலாக, மகிழ்வான ஒரு வாழ்க்கையை எதிர்ப்பார்த்தாள். இப்படி ராஜமகேந்திரனோடு பேசாமல் இருக்கும் அவளை அவளுக்கே பிடிக்கவில்லை. அதே நேரம் அவளது பெரியண்ணாவின் நிலை, அது அதீத பயம் கொடுத்தது.
அவள் கேட்ட காதல் காலம் இதுவல்ல!
இதில் ரஞ்சனும், அவள் தாத்தாவும் இருக்கும் அத்தனை பேரையும் சந்தேகம் கொள்ள அவர்கள் வீட்டின் சூழல் அவளை இயல்பாக வாழ விடவில்லை. எதிலும் நிம்மதியில்லா நிலை.
கணவனும் அவளை புரிந்து நடக்காமல் இருக்க பெண்ணுக்குப் பேரவஸ்தையாக இருந்தது. மகேந்திரன் அவனது சூப்’பைப் பருகியவன் பிரசன்னாவின் பக்கம் உட்கார்ந்தான்.
“ஏன் அழற?”
“உங்களாலதான்” ஆத்திரமாக சொன்னாள்.
“என்னால நீ அழ வேண்டாம். உன் அண்ணனை நான் ஒன்னும் செய்யல போதுமா?”
மகேந்திரனை அவள் அழுகை பாதிக்க அவளுக்கு ஆறுதலாக பேசினான்.
உடனே எழுந்தவள், “நிஜமா பண்ணலதானே?” என்றதும் முறைத்தான்.
“முதல்ல இந்த கேள்வியே தப்பு. அதுவும் நீ கேட்கிறது ரொம்ப ரொம்ப தப்பு” என்றான் எரிச்சலாக.
“ஓகே, நம்புறேன்”அவனது தலை கலைந்து இருக்க தன் கை வைத்து சரி செய்தாள். பிரசன்னாவின் கரத்தைப் பிடித்த மகேந்திரன் தன் கன்னத்தில் அழுத்திக்கொண்டான்.
“அச்சோ! இவ்வளவு ஃபீவர் இருக்கு. நான் அத்தை கிட்ட லேசா இருக்குனு சொல்லிட்டேன்” என்றாள் கவலையாக.
“இப்போ சூப் குடிச்சிட்டேன், மாத்திரை போட்டா குறையும். நீ சொன்ன பொய் கொஞ்ச நேரத்துல உண்மையாகிடும்” என்றான் கண்சிமிட்டி.
காலம் சில பொய்களை உண்மையாக்கத்தானே செய்கிறது. காலம் அதுதான் எல்லாவற்றையும் மாற்றுகிறது. காலம் மாறி காலத்தால் எல்லாம் மாறுகிறது.
காலத்தின் இந்திரஜாலம் தனி!
“அப்போ மாத்திரை போடுங்க” என்று பிரசன்னா சொல்ல,
“நீங்க மாத்திரை தாங்க” என்றான்.
பிரசன்னாவும் மாத்திரை எடுத்துத் தர மகேந்திரன் அதனை உட்கொண்டவன் அயர்வில் அப்படியே படுத்தான்.
“நீயும் ரெஸ்ட் எடு, நான் கொஞ்ச நேரம் தூங்குறேன்” என்றவன் மனைவியின் முகம் பார்த்து,
“என்ன உங்க வீட்டுக்குப் போக போறியா?” என்றவனின் கேள்வியே ஒரு மாதிரி இருந்தது.
“இப்போ போக மாட்டேன்”
“அப்போ போகப்போற?”
“ஏன் கல்யாணமான எங்க வீட்டுக்குப் போக கூடாதா? உங்க பெர்மிஷன் வாங்கணுமா?”
“மனசாட்சி இல்லாம பேசாதடி, எப்போ போன நீ? மூணு மாசம் கிட்ட ஆகப்போகுது. இதே வீட்ல இருந்திருந்தா நீ மூணு மாசம் ஆகியிருப்ப” என்ற மகேந்திரனின் பேச்சில் பிரசன்னாவின் கண்கள் விரிந்தன.
“வாயை மூடிட்டு தூங்குங்க. எப்போ என்ன பேசணும்னு தெரியாது. நான் இப்போ எங்கேயும் போகல.” என்றாள் பிரசன்னவர்தினி.
அவளது முகத்தில் ஒரு பிரகாசமிருக்க அதனைப் பார்த்த மகேந்திரன் முகத்திலும் அது தொற்றியது.
பிரசன்னவர்தினி அவன் பக்கம் பார்த்தபடி படுத்தாள். அவள் காதல் என்று நினைத்த காலத்தை நினைத்தாள். காதல் அது எப்போதும் சொல்லாக இருப்பதில்லை என்பதை திருமணமான சில மாதங்களில் புரிந்தாள்.
அவனும் அவளும் வெவ்வேறு இடங்களில் இருந்தபோது பார்க்க வேண்டும் ஒரு பரவசமிருந்தது. நினைத்துக் கொண்டு இருப்பது வேற, நிஜமாக உடனிருப்பது வேறல்லவா?
காதல் ஒரு கட்டுப்பாடடற்ற கண்காணிப்பு. எந்த நேரமும் சக மனிதனோடு ஒரே வீட்டில், ஒரே அறையில் உடல் முதல் அத்தனையும் பகிர்ந்து வாழ வேண்டும். வேற வகையான உணர்வல்லவா? நமது சுக, துக்கம், நல்ல பக்கம், மோசமான பக்கம் எல்லாவற்றையும் இன்னொரு உயிர் பார்க்க வேண்டும். அதனை பார்த்தும் அது நம்மை வெறுக்காது பொறுத்து நேசிக்க வேண்டும்.
சிலதை விட்டுக்கொடுக்க வேண்டும். சிலவற்றை விடவே கூடாது! எப்போது ஒரு மனம் இருவருக்காகவும் சிந்தித்து செயலாற்ற வேண்டும்.
பிரசன்னவர்தினிக்கு மகேந்திரனை திருமணத்திற்கு முன்பு பிடித்தாலும் திருமணத்திற்காக கேட்டதென்னவோ அவன்தான்.
திருமணத்திற்கு முன் உள்ள உணர்வை பிடித்தம் என்று இப்போது பகுத்தறியும் பக்குவம் பாவையிடம் வந்திருந்தது.
காதல் அவளை பொங்கெழுச்சியான(overwhelming) ஒரு நிலையில் தள்ளியது.
error: Content is protected !!