Skip to content
Post Views: 1,938
நாம் கேட்ட காலங்கள் – 7(2)
பிரசன்னவர்தினிக்கு மகேந்திரன் மனத்தைக் கவருகின்ற ஒரு ஆகர்ஷம். அவனது பேச்சு, அறிவு, சட்டென சிந்தித்து செயலாற்றுகின்றதன்மை, அவனது நண்பர்களிடம் அவனது விளையாட்டுத்தனம் எல்லாம் பிடிக்கும். பெரிய குடும்பத்தின் பையன் என்ற பகட்டெல்லாம் இருக்காது.
பிரசன்னவர்தினியின் சின்ன தாத்தாவின் பேத்தி மானசா அதே கல்லூரியில் வேறு பிரிவில் பயின்றாள். பிரசன்னாவை விட பெரியவள், அவளுக்கும் மகேந்திரனின் நண்பன் ஸ்ரீதரனுக்கும் காதல் எப்படியோ மலர்ந்திருந்தது.
Advertisement
ஸ்ரீதரனை சந்திக்க செல்லும்போது தங்கையை உடன் அழைத்து செல்வாள் மானஸா. தனியே சென்றால் திலக்கிடம் மாட்டிக்கொள்வோமோ என்ற அச்சம். அவளுக்கும் அவன் எப்போதும் பெரியண்ணாதான்.
Advertisement
அப்படியிருக்க நண்பனோடு மகேந்திரன் அவர்கள் சந்திக்கும் தருணங்கள் துணைக்குச் செல்வான். அவர்கள் பேசட்டும் என்று ஒதுங்கி நிற்பான், அவனது அலைப்பேசியோ இல்லை ஏதோ ஒரு புத்தகமோ துணையிருக்கும். பிரசன்னா மூன்றாம் ஆண்டில் இருந்தாள், மகேந்திரனும் ஸ்ரீதரனும் எல்.எல்.பி மூன்றாவது ஆண்டில் இருந்தனர். சில நாட்கள் மானசாவோடு பிரசன்னா வருவதைக் கண்ட மகேந்திரன் ஒரு நாள் மானசாவிடம்,
Advertisement
“இங்க பாரு மானசா, நீயும் இவனும் மீட் பண்றதுக்கு ஏன் இந்த பொண்ணை அழைச்சிட்டு வர? அவ உன்னை விட சின்னப்பொண்ணு, இது சரி கிடையாது” என்றான் கொஞ்சம் கண்டிப்பாக.
Advertisement
அக்காவைத் திட்டுவது பொறுக்காத பிரசன்னா,
“நீங்க உங்க ப்ரண்டுக்குத் துணையா வரீங்க, நான் என் அக்காவுக்குத் துணையா வரேன்” என்றாள்.
“ப்ரண்டுக்குத் துணையா வரது வேற, நீ உங்கக்காவுக்குத் துணையா வரது வேற. உங்க வீட்ல என்ன நினைப்பாங்க? இவன் வேலையில ஜாய்ன் பண்ணினதும் உங்க வீட்ல வந்து பொண்ணு கேட்பான். அப்போ உனக்குத் தெரியும்னு சொல்லுவியா? செகரெட்டரிகிட்ட கம்ப்ளையண்ட் பண்ணனுமா நான்?” என்றான் அதட்டலாக.
“இவங்க காதல் பண்றதை பார்க்கற வயசா உனக்கு? இந்த டைம்ல எதாவது உருப்படியா செய்யலாம் தானே?” என்று கேட்க, மகேந்திரன் பக்கம் பிரசன்னாவின் மனம் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்தது. ஏற்கெனவே அவன்பால் அதீத ஈர்ப்புண்டு. இப்போது இன்னும் பிடித்தது.
“நான் ஒன்னும் சும்மா இல்லை, என்னோட நோட்ஸை போன்ல படிக்கிறேன்” என்று பிரசன்னா வாயாட, ஸ்ரீதரனோ
“மச்சான்! விடுடா, இனிமே அழைச்சிட்டு வர மாட்டா” என்றான்.
“உன் ப்ரண்ட்ஸ் யாராச்சும் அழைச்சிட்டு வா மானசா” என்று ஸ்ரீதரனும் சொல்ல மானசா தலையசைத்தாள்.
ஆனால் அடுத்த முறை ஸ்ரீதரனும் மானசாவும் சந்திக்கையில் பிரசன்னா பிரசன்னமாக, மகேந்திரன் மானசாவை முறைத்தான்.
“அய்யோ ராஜா! நான் இவளை கூப்பிடல, இவ அடம்பிடிச்சு வந்தா” என்று மானசா சொல்ல, பிரசன்னாவோ அலட்டிக்கொள்ளவில்லை.
பிரசன்னாவைப் பார்க்க அடர் நீலத்தில் சுடிதார் அணிந்திருந்தாள். அவளது துப்பட்டா அந்த கடல்காற்றில் பறந்தது, கடல் பக்கமாக உள்ள ஒரு உணவகத்தில் அன்று மாலை அவர்களது சந்திப்பு நிகழ்ந்தது.
மகேந்திரன் பிரசன்னாவை பார்வையால் எரிக்க,
“நான் ஒன்னும் இவங்களுக்காக வரல” என்றதும் மற்ற மூவரும் அதிர்ந்து பார்த்தனர்.
“அப்புறம்?” என்று மகேந்திரன் கடுப்பாகக் கேட்க,
“நான் உங்களைப் பார்க்கத்தான் அக்கா கூட வந்தேன்” என்றாளே, மகேந்திரன் அதுவரை அப்படி வாயடைத்து நின்றதே இல்லை.
அடுத்த வார்த்தை வராமல் அவன் நிற்க, பிரசன்னாவோ அவ்வளவுதான் பேச்சு என்பது போல, மெனு கார்டை புரட்டினாள்.
ஸ்ரீதரனோ, “மச்சான், சொல்லவே இல்லை” என்று மகேந்திரனை கிண்டல் செய்ய, அவனோ முறைத்தான்.
மகேந்திரன் பதில் பேசாமல் எழுந்து செல்ல, பிரசன்னா அவன் பின் சென்றாள்.
“நில்லுங்க!” என்று அதட்டியவள்,
“நான் இப்போ இதை சொல்லணும்னு நினைக்கல, சொன்னாலும் நீங்க ஒத்துப்பீங்கனு நினைக்கல. இப்படி கேட்டதால சொல்ல வேண்டியதாகிடுச்சு. ரொம்ப நாளாவே உங்களைப் பிடிக்கும். ஆனா லவ் பண்ற வயசில்லைனு எனக்குத் தெரியும். நானே படிச்சிட்டு ஜாப் போயிட்டு உங்ககிட்ட வந்து சொல்லலாம்னு இருந்தேன்.”
“இப்பவும் அது மாறல, அதுவரைக்கும் என் அப்ளிகேஷனை வெயிட்டிங்ல வைங்க” என்றதும் மகேந்திரன் தனக்குள் பொங்கிய பெருஞ்சிரிப்பை பெரும்பாடுப்பட்டு அடக்கினான்.
“ஸோ டெஃப்னஸ் லாயர் மாதிரி எதாவது சொல்லி என்னைப் பேசக் கூடாது.” என்றாள் உஷாராக.
“எனக்கும் சேர்த்து நீயே பேச என்னை ஏன் கூப்பிட்டு பேசுற?” மகேந்திரன் முறைப்பாகக் கேட்டான்.
“நீங்க நான் பேசுறதைக் கேட்கத்தான் உங்களை நிறுத்தினேன்” என்றாள் பிரசன்னவர்தினி.
“இங்க பாரு இனிமே இப்படி எங்கிட்ட பேசக்கூடாது” என்றான் உத்தரவு போல.
பிரசன்னா எதிர்த்துப் பேசவில்லை. உள்ளே சுணக்கம் எழுந்தாலும் அவளுக்கு நிதர்சனம் புரிந்தது. இப்போது படிப்பு முக்கியம், அவளுக்கென ஒரு அடையாளம் வேண்டும், வெங்கட கிருஷ்ணனின் பேத்தியாக மட்டுமே அடையாளப்படுத்தப்படுவது பிடிக்கவில்லை.
“ஓகே, பேச மாட்டேன்” என்றாள் பிரசன்னவர்தினி. அவள் சொன்னது போல் பேசவே இல்லை. அவள் ஐந்து வருடம் படிப்பை முடித்து, அதன்பின் டெல்லி சென்று அங்கு டெல்லி உயர்நீதிமன்றம், உச்ச நீதி மன்றத்தில் வாதாடும் முக்கிய வழக்கறிஞர் ஒருவரிடம் பயிற்சிகாக சேர்ந்தாள்.
திலக் அவனுடைய சீனியரிடம் சிபாரிசு செய்கிறேன் என்றதற்குக் கூட வேண்டாம் என்றுவிட்டாள். அவளது சீனியர் வைத்த தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்று சொந்த முயற்சியில் வெற்றிப்பெற்றாள்.
பழைய நினைவுகளில் மூழ்கியிருந்தவளை மாமியாரின் குரல் கலைத்தது.
“வந்துட்டேன் அத்த” என்று மாடியிலிருந்து குரல் கொடுத்தவள் அங்கு வந்திருந்தவனை பார்த்து ஒரு நொடி அதிர்ந்தாள்.
ஏ.சி.பி ஜீவா காக்கி உடையில் நின்றான்.
“ஏ.சி.பி ராஜா கிட்ட விசாரிக்கணுமாம். அவனை அழைச்சிட்டு வாம்மா” என்ற வித்யாதரன் குரலில் பதற்றம் நிரம்பியிருந்தது.
அவருக்கு இந்த அரசியல், அது சார்ந்து எதுவுமே பிடிக்காது.
இன்னும் இந்த ஜீவாவிற்கு என்ன வேண்டுமாம்? என்று பிரசன்னா எரிச்சல் கொண்டாள்.
பதில் சொல்லாமல் கணவனை எழுப்பினாள். ராஜமகேந்திரன் பெருமூச்சோடு எழுந்து முகம் கழுவி டீஷர்ட்டை மாட்டிக்கொண்டு கீழே வந்தான்.
“அந்த ரூம் போயிடலாம் வாங்க” என்று ஜீவாவை அழைக்க, பிரசன்னாவும் உடன் வருவேன் என்றாள்.
ஜீவா ஆமோதிப்பாக தலையசைக்க, ராஜமகேந்திரன் முறைத்தான். தாத்தாவின் அறைக்குப் பக்கமாக இருக்கும் அலுவலக அறையில் ராஜமகேந்திரனும் பிரசன்னாவும் உட்கார, அவர்களுக்கு எதிரே ஜீவா உட்கார்ந்தான்.
“திலக் ஆக்சிடெண்ட் ஆன பத்து நிமிஷத்துல உங்களுக்கு ஒரு கால் வந்திருக்கு. ரைட்?” என்று ஜீவா கேட்க, மகேந்திரன் அலட்டிக்கொள்ளவில்லை.
“ஸோ வாட்?” என்றான்.
பிரசன்னாவோ அதிர்ச்சியாக பார்த்தாள்.
“உங்க அக்கவுண்ட்ல இருந்து அந்த நம்பருக்கு அமவுண்ட் ட்ரான்ஸ்ஃபர் ஆகியிருக்கு”
எதையும் மகேந்திரன் மறுக்கவே இல்லை.
“சில சிசிடிவி ஃபுட்டேஜ் பார்த்ததுல அந்த நபர் திலக்கை கண்காணிச்சுட்டே இருந்திருக்கார். அதுவும் நீங்க சொல்லி…” என்று நிறுத்தி மகேந்திரன் முகம் பார்த்தான் ஜீவா.
“வி.ஆர்.எஸ் வாங்கின எக்ஸ்.ஐபிஎஸ் சேத்தன் ஸர் அவரை ஏன் நீங்க திலக்கை ஸ்பை பண்ண அனுப்பினீங்க?”
“பரவாயில்லையே நாந்தான் ஆள் வச்சு ஆக்சிடெண்ட் பண்ணினேன் சொல்லுவீங்க நினைச்சேன்” என்ற மகேந்திரனின் நக்கல் பேச்சில் ஜீவா புன்னகைத்தான்.
“அது வேற ஆளா இருந்தா சந்தேகப்பட்டிருப்பேன், சேத்தன் ஸாரா இருக்கவும் தோணல. நீங்களும் இப்படி ஒரு தப்பு பண்ற அளவு முட்டாள் இல்லைனு தோணுச்சு” என்றான் ஜீவபிரகாஷ்.
“அண்ணாவை நீங்க ஏன் ஸ்பை பண்ணீங்க மகேந்திரன்?” என்று பிரசன்னா கோபமாகக் கேட்டாள். மூன்றாம் நபர் முன் மனைவி அப்படி பேசுவது மகேந்திரனுக்குப் பொறுக்கவில்லை.
“வெளியே வெயிட் பண்ணு பிரசன்னா” என்றான்
அழுத்தமான குரலில்.
“நீங்க ஏன் திலக்கை ஸ்பை பண்ணனும்?” என்று ஜீவா கேட்க,
“Keep your friends close, enemies closer” என்றான் மகேந்திரன்.
“அப்போ திலக் உங்க எதிரினு சொல்றீங்களா?”
“பொலிடிக்கலி ரைட்” என்றவன், அவனது கழுத்து செயினோடு உரசிய டீஷர்ட்டை வசதியாக இழுத்துவிட்டு,
“என்னோட போட்டி போடுறவனை வாட்ச் பண்றது ஒன்னும் தப்பில்லையே? Politics has no rules!” என்று மகேந்திரன் சொல்லவும்,
“இங்க பாருங்க ஸர், நீங்க ஸ்பை பண்ணினது அது திலக்கோட ப்ரைவசி சம்மந்தப்பட்டது. உங்க பிரச்சனை. எனக்கு வேண்டியது திலக் அந்த அன் டைம்ல யாரை மீட் பண்ண போனார்? சேத்தன் ஸாரை மீட் பண்ண முடிஞ்சா எனக்குக் கேஸுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்” என்றான் ஜீவா.
“சேத்தன் ஸர் அந்த நேரம் அந்த இடியட் திலக் வெளியே வருவான்னு எக்ஸ்பெக்ட் பண்ணல, அவர் அவனை ஃபாலோ பண்ணிட்டு போனாலும் ஏதோ ஒரு சிக்னல்ல மிஸ் பண்ணிருக்கார். அவர் அந்த ஆக்சிடெண்டை தடுக்க முடியலனு ரொம்ப ஃபீல் பண்ணினார். அவர்தான் உடனே ஆம்புலன்ஸ் வர வைச்சார்” என்றான் மகேந்திரன்.
சேத்தனை பேச சொல்கிறேன் என்று ஜீவாவிடம் சொல்ல, ஜீவா இந்த முறை கொஞ்சம் புன்னகைத்தான்.
“இந்த கேஸ்ல ரொம்ப இன்வால்வ்டா இருக்க மாதிரி இருக்கே?” என்று மகேந்திரன் அவனை கேட்க,
“என்னோட கடமை ஸர்” என்றான். ஜீவா கிளம்பி சென்றான். மகேந்திரன் வருவதற்காக வித்யாதரனும், வைதேகியும் பதற்றமாகக் காத்திருந்தனர்.
பிரசன்னா இறுகிய மனத்தோடு வெளியே சென்றவள் மகேந்திரன் அறையை விட்டு வெளிவரும்போது அங்கில்லை. அம்மா, அப்பா மட்டும் அங்கிருக்க மனைவி இல்லாததில் அவ்வளவு கோபம்.
“இவளை” என்று மகேந்திரன் மனம் மீண்டும் சோர்ந்தது.
error: Content is protected !!