Skip to content
Post Views: 1,924
அத்தியாயம் – 16
PART-1
திருமணத்திற்கான நிச்சயம் என்று பார்த்தால், திருமணத்தையே நடத்தி விட்டானே வெற்றி திருக்குமரன் என அனைவரும் ஸ்ம்பித்து போய் நின்று கொண்டிருந்தனர்.
சில வினாடிகளுக்கு யாருக்கும் எதுவும் புரியவில்லை. முதலில் சுதாரித்தது இளங்கோ தான்.
Advertisement
“அமுதா..” என மனைவியை அழுந்த கூப்பிட்டவர்,
“பார்த்தியா, நல்ல பாரு. நம்மளை ஊரில் இருந்து வரவச்சது நம்ம பொண்ணு கல்யாணத்தை பார்க்க இல்ல. இதோ இவங்க கல்யாணத்தை பார்க்க தான்.
ரொம்ப நல்ல குடும்பம் உங்களோடது. போயும் போயும் உங்க பேச்சை நம்பி வந்தேன் பாரு. எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்
Advertisement
எங்க அந்த பெரிய மனுஷி, உங்க அம்மா”
Advertisement
என நடந்தவற்றை தாங்க முடியாது, கத்தியவர், அங்கே அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்த, நாச்சியாரின் புறம் திரும்பி,
“இப்போ சந்தோஷமா! நானா உங்களை மாப்பிள்ளை கேட்டு வந்தேன். நீங்க தானே என் பொண்ணை கேட்டீங்க. இப்போ சபை நடுவே வச்சு அசிங்கப்படுத்தீடீங்களே! நல்ல இருக்கு. பெரிய குடும்பத்தின் பழக்கம் ரொம்ப நல்லா இருக்கு.
எல்லாரும் சந்தோஷமா இருங்க” என கத்தியவர் மனைவி மகளின் புறம் திரும்பி,
Advertisement
“வாங்க போலாம். இனி ஒரு நிமிஷம் கூட இங்க இருக்க கூடாது. இவர்களுக்கும் நமக்கும் உள்ள உறவு இன்னையோட முடிஞ்சு போச்சு” என அவர்களை அழைத்து கொண்டு வெளியேற சென்றவர், சட்டென்று வெற்றியை திரும்பி குரூரமாக பார்த்தார்.
அவனோ அவர் பார்வையை அலட்சியப்படுத்த, அவனருகே வந்தவர்,
“நீ இதுக்கான விளைவுகளை கூடிய சீக்கிரம் சந்திக்க வேண்டி வரும்” என எச்சரிக்கை விடுக்க, வெற்றியோ,
“அந்த நாளுக்காக தான் மாமா, நானும் காத்துட்டு இருக்கேன்” என வெகு அலட்சியமாக சிரித்து கொண்டே கூறினான். அத்தனை நக்கல் தெரித்தது அவன் வார்த்தையில்.
அவனை முறைத்து கொண்டே அங்கிருந்து வெளியேறினார் இளங்கோ. அவர் சென்றதும் நாச்சியாரோ வெற்றியிடம்,
“வெற்றி, நீ இப்படி பண்ணுவேனு எதிர்பார்க்கல. உன் கல்யாணத்தை எப்படியெல்லாம் நடத்தணும்னு ஆசைபட்டேன் தெரியுமா?!!
என் மூஞ்சிலே கரியை பூசிட்டல, போயும் போயும் இவளை போய் கல்யாணம் பண்ணிட்டு இருக்க!
உனக்கு ராகினியை கட்டிக்க விருப்பம் இல்லைனா, முன்னமே சொல்லி இருக்கலாம்ல. இந்த ஏற்பாடே நான் பண்ணி இருக்க மாட்டேன்னே! என்னை நம்ப வச்சு கழுத்தருத்துட்ட! என்கிட்ட இனிமேல் பேசாதே!!”
என கோபமாய் பேசியவர், அங்கிருந்து தள்ளி சென்று நின்று கொண்டார்.
“அப்பத்தா, நீங்க இவ்வளவு கோபப்படுற அளவுக்கு எதுவும் நடக்கல. நான் எல்லார் முன்னாடியும் என்னோட முடிவு சொல்றேன் தான் சொன்னேன். அதை தான் பண்ணி இருக்கேன்.
என அவன் வெகு சாதரணமாக கூற,
“எது, இது தான் உன் முடிவா? நீ கல்யாணமே பண்ணிட்ட வெற்றி. என்கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்காம கல்யாணம் பண்ணி இருக்க. இது தப்பா தெரியலையா உனக்கு?” என நாச்சியார் ஆவேசம் தீராது பேச, வெற்றி எதற்கும் அவசரமோ, ஆத்திரமோ படவே இல்லை. நிதானமாக தான் இருந்தான்.
“இதில் என்ன தப்பு இருக்கு அப்பத்தா. எனக்கு பிடிச்சது கல்யாணம் பண்ணிட்டேன். நீங்க என்கிட்ட கல்யாணத்தை பத்தி பேசும் போது என்ன சொன்னேன்? என்னோட விருப்பத்திற்கு மாறா எதுவும் செய்ய மாட்டேன். மனசில் என்ன தோணுதோ அதான் செய்வேனு தானே நான் சொல்லி இருந்தேன்.
இப்போ, எனக்கு தமிழை கல்யாணம் பண்ணிக்க தோணுத்துச்சு பண்ணிட்டேன்” என விளக்கம் கூற, எந்த விளக்கமும், அவரை சமாதானப்படுத்தவில்லை.
அதற்குள் அவனருகே, நடக்க முடியாத தன் கால்களை இழுத்து இழுத்து நடந்தப்படி வந்த கனகவல்லி,
“என்ன வெற்றி இப்படி பண்ணிட்ட? அவ எங்க பொண்ணு, எங்க பொண்ணோட கல்யாணம் சீரும் சிறப்புமா நடக்கும்னு பெத்தவங்க எங்களுக்கு ஆசை இருக்காதா!
இப்படி எங்க கிட்ட கூட சொல்லாமல் இவ்வளவு பெரிய முடிவு எடுத்து இருக்க?
ஏற்கனவே அந்த வீட்டில் எங்களுக்கு சுத்தமா மரியாதை கிடையாது. காசு, பணம் தான் முக்கியம்னு பார்க்கிற வீடு.
அதனால் தானே, என் பொண்ணு மேலே திருட்டு பழியை போட்டு அவமானப்படுத்தினங்க.
நீ அதுக்கு மேலே செஞ்சு இருக்க. இப்போ கூட உன்னை எதுவும் சொல்ல மாட்டாங்க. என் பொண்ணை தான் பேசுவாங்க. ஏன் வெற்றி இப்படி பண்ண? என அவர் அழுது கரைய, சண்முகமும்,
“நீ இப்படி செஞ்சு இருக்க கூடாது வெற்றி. எங்களுக்கு இப்போ என்ன செய்றதுனே தெரியல” என கண் கலங்கினார்.
“ஏன் அத்த, நான் உங்களுக்கு மருமகனா வரதில் விருப்பம் இல்லையா!! நான் நீங்க வளர்த்த பையன், நான் உங்க பொண்ணை நல்ல பார்த்துக்க மாட்டேன்னா?” என வெற்றி கேட்க, கனகவல்லிகோ அவன் கேட்டது மனதை குத்தியது.
அவரே பலமுறை நினைத்ததுண்டே, அவனுக்கும் வெண்பாவிற்கும் திருமணம் நடைபெற்றால் நன்றாக இருக்கும் என்று.
“நான் அப்படி சொல்லல வெற்றி. உன்னை போல ஒரு பையன் மாப்பிள்ளையா கிடைக்க கொடுத்து வச்சு இருக்கணும். ஆனால் அந்த கொடுப்பினை எங்களுக்கு இல்லைன்னு சொல்றேன்” என்றவருக்கு,
“ஏன் இப்படி சொல்றீங்க அத்தே!! எதை வச்சு உங்களுக்கு கொடுப்பினை இல்லனு சொல்றீங்க.
காசு பணத்தை வச்சா, நான் அப்படி தான் உங்க கிட்ட பேசுறேனா? பழகிறேனா? இல்ல, என் அப்பா, அம்மா அப்படி நடந்துகிறாங்களா?
அப்பத்தா ஒரு ஆள் அப்படி நடந்துகிறாங்க என்பதற்காக, ஒட்டு மொத்தமா எங்க எல்லாரையும் குறை சொல்றது தப்பு இல்லையா அத்தே!”
என்றதும் அவரால் எதுவும் பேச முடியவில்லை.
“அதில்லை வெற்றி, இருந்தாலும், வந்தது ராகினிக்கும், உனக்கும் கல்யாண நிச்சயம் பண்ண, ஆனால் நீ வெண்பா கழுத்தில் தாலி கட்டிட்டியே! அந்த பெண்ணுக்கும், அந்த குடும்பத்துக்கும் எவ்வளவு வேதனையா இருக்கும். அவங்க மனசார சபிச்சுட்ட, என் பொண்ணு வாழ்க்கை இல்ல கஷ்டமா போயிடும்.
எந்த பெத்தவங்களும் தன் பிள்ள நல்ல இருக்கணும் தானே ஆசை படுவாங்க” என கனகவல்லி ராகினிக்காக நியாயம் பேச,
“ராகினி மனசு கஷ்டப்படும், அவங்க அப்பா மனசு கஷ்டப்படும்னு அவங்களை பத்தியே யோசிக்கிறீங்களே! எனக்கும் ராகினிக்கும் கல்யாணம் நடந்திருந்தா, என் மனசும், தமிழ் மனசும் காலம் முழுக்க வேதனையிலேயே வெந்து செத்து இருக்குமே! அது உங்களுக்கு பரவாயில்லையா!” என வெற்றி கேள்வி கேட்க, யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.
“நீ என்ன சொல்ற வெற்றி?” என சண்முகம் கேட்க,
“ஆமாம், என் மனசில் தமிழ் தான் இருக்கா! அவ மனசில் நான் தான் இருக்கேன். எங்களை பிரிச்சு விட்டுட்டு வேற யாருக்கோ கல்யாணம் பண்ணா, அந்த வாழ்க்கை எங்களுக்கு எப்படி சந்தோஷத்தை தந்து இருக்கும்”
என்றதும் சடாலென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள் வெண்பா. அவள் மனதில் அவன் தான் இருக்கிறான் என்பது அவனுக்கு எப்படி தெரியும்? என ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது வெண்பாவிற்கு.
அதே அதிர்ச்சி தான் கனகவல்லிக்கும், சண்முகத்திற்கும். மகள் மனதில் வெற்றி இருந்தானா! அவள் அவன் மீது ஆசைப்பட்டாளா?!! என அவர்கள் அதிர்ந்து வெண்பாவை பார்த்தனர்.
“இதோ பாருங்க, நடந்தது நடந்து போச்சு. எதிர்பார்காதது நடந்தா, சட்டுனு அதை ஏத்துக்க முடியாது தான். கொஞ்சம் பொறுமையா ஆற அமர இதைப்பத்தி பேசுவோம். அதனால் நம்ம குடும்ப விஷயத்தை இப்படி நாலு பேர் முன்னே பேசணுமா? வீட்டில் போய் பேசிப்போம்” என்ற திருநாவுக்கரசு நிலைமையை சரி செய்ய பேசினார்.
“கனகா, கொஞ்சம் நேரம் அமைதியா இரு. நிதானமா பேசினா, எல்லாத்துக்கும் நல்ல முடிவு வரும்” என தங்கையை சமாதனப்படுத்தியவர் தாயின் புறமும் திரும்பி,
“அம்மா, நீங்களும் கொஞ்ச நேரம் அமைதியா இருங்க. வீட்டுக்கு போய் பேசிப்போம். எல்லார் முன்னாடியும் உடனே இதைப்பத்தி பேசியே ஆகணும்னு அவசியம் இல்ல” என அவரையும் அமைதிப்படுத்தினார்.
வந்திருந்த சொந்த பந்தகளிடமும்,
“நாங்க நிச்சயம் பண்றதா தான் உங்க எல்லாரையும் கூப்பிட்டது. கடைசியில் கல்யாணமே நடந்துச்சு. பரவாயில்லை. நல்ல விஷயம் தானே நடந்து இருக்கு. எல்லாரும் ரெண்டு பேரையும் மனசார ஆசிர்வாதம் பண்ணிட்டு, சாப்பிட்டு போங்க” என திருநாவுக்கரசு கூற வந்திருந்தவர்களுக்கும் அதுவே சரியென பட்டது.
“நீ சொல்றதும் சரி தான் திரு. கல்யாணம் முடிஞ்சு போச்சு, நாம என்ன பண்ண முடியும். யாருக்கு யாருன்னு நாம முடிவு பண்ண முடியாது. கடவுள் தானே தீர்மானிக்கணும். இது கடவுள் போட்ட முடிச்சு. இடையில் நாம பேசி என்ன ஆக போது” என சொந்தத்தில் உள்ள ஒரு பெரிய மனுஷர் நிதர்சனம் கூறி,
“வாங்க, மணமக்களை ஆசீர்வாதம் பண்ணி சாப்பிட போவோம்” என அனைவரையும் அழைத்தார். வந்திருந்த சொந்தங்களும், ஒவ்வொருவராய் வந்து வெண்பாவையும், வெற்றியையும் ஆசீர்வதித்து சென்றனர்.
error: Content is protected !!