Skip to content
Post Views: 3,476
அத்தியாயம் 9
விசாகாவும் நேத்ராவும் அமர்ந்து வீட்டு பாடம் செய்து கொண்டிருந்தார்கள்.
Advertisement
“அப்புறம், விசா கல்யாணம் எப்படி போச்சு?” என்று கேட்டு கொண்டே வந்தமர்ந்தான் கதிர்.
“எல்லோரும் ஒண்ணா சேர்ந்து வந்து கேள்வி கேளுங்க. ஒவ்வொருத்தர் கிட்டயா சொல்லிட்டே இருக்க முடியாது”, என்று நிமிர்ந்து பார்க்காமலே பதில் கூறினாள் விசா.
Advertisement
Advertisement
“என்ன இவ்வளவு பிஸியா இருக்க?” என்றான் மீண்டும்.
நேத்ரா விசாகவிற்கு உதவிக் கொண்டிருந்தாள்.
Advertisement
“டேய் அண்ணா, உனக்கு என்ன? நான் மூணு நாள் லீவ், எல்லா பாடமும் எழுதி முடிக்கணுமா வேண்டாமா?”
“நீ ஒரே பொண்ணு, டா.. எங்க தங்கம் டா.. வைரம் டா.. அப்படின்னு மாத்தி மாத்தி பாசமழை பொழிஞ்சு, பாதி நாள் ஸ்கூல் லீவ். நானே கடுப்பா இருக்கேன், போய்டு”
“நிறைய இருக்கு.. பாவம் அண்ணா” என்றாள் நேத்ரா தோழிக்கு பரிஞ்சு.
“சரி, எங்க உன் டாலி… இன்னிக்கு கூட்டிட்டு வரலையா?” என்று விசாகாவை விட்டு நேத்ராவிடம் வம்பளக்க தொடங்கினான்.
“எதுக்கு, ஒரு நாள் டாலி வந்ததுக்கே, மூணு பொம்மை வந்துடுச்சு இங்க. அதான் கூட்டிட்டு வரலை”
“சரி சரி.. மேலே சுப்புவும் பாலுவும் விளையாடுறாங்க. நீ வேணா போய் விளையாடு, நான் விசா கூட உட்கார்ந்து படிக்கிறேன் “
ஒரே பெண்ணான நேத்ரா விளையாடுவதற்கு தான் ஆசையாக வந்திருக்கிறாள், என்று அவளை அனுப்பினான். பொறுப்பறிந்த பிள்ளைகள் அனைவரும்.
விசாகா மும்முரமாக படிக்கவும், கதிரும் தன் புத்தங்கங்களை எடுத்து படிக்க தொடங்கினான்.
இவர்கள் படித்து முடிக்கும் நேரம், அருணும் சாலாவும் பாக்ட்ரியில் இருந்து வீடு திரும்பினார்கள்.
முருகம்மை ஆச்சி இவர்களை வரவேற்று காபி தயாரித்து கொண்டுவந்தார்.
“என்ன, அருண் பக்கத்து வீடு விற்க போறாங்கன்னு சொன்னியே, அத நம்ம சுந்தரத்துக்கு சொல்லலாமா? அவங்க வீடு வாங்கனும்னு சொல்லிட்டு இருந்தாங்க” என்றார் முருகம்மை.
“நல்ல வீடு தான் அம்மா, அவங்க வெளிநாடு போறதுனால உடனே விக்கலாம்னு பார்க்கறாங்க. தனி வீடு, சுத்தி இடமும் இருக்கு, இந்த மாதிரி இப்ப கிடைக்கிறது கஷ்டம். நாளைக்கே பார்க்க வர சொல்லுங்க”
“சரி அருண்”
சாலா, “அத்தை நாளைக்கு ஞாயிற்று கிழமை தானே. அவங்கள இங்க விருந்துக்கு கூப்பிடுவோமா? அப்படியே வீடும் பார்க்கட்டும்” என்றார்.
“அதுவும் சரி தான் சாலா. அந்த பிள்ளையை யாரும் விருந்துக்கு கூப்பிட்டிருக்க மாட்டாங்க. மங்கையும், முத்தையாவும் கூட தான் இருக்காங்க போல. எல்லாரையும் கூப்பிட்டுருவோம்”
“கதிரு..”
“புரியுது அப்பத்தா . மேல போய் அம்மாகிட்டயும் பெரியம்மா கிட்டயும் நாளைக்கு இங்க விருந்துன்னு சொல்லிட்டு வரனும், அப்படி தானே. என்னை வர வர செய்தி தூதுவனா மாத்திட்டீங்க..” என்று கூறி மேலே சென்றான்.
“அவனே பேசிட்டு போறான் பாரு.. அப்படியே அவன் ஆத்தா மாதிரி” என்று சிரித்துக கொண்டே கூறினார் முருகம்மை.
காலையில் முத்து கருப்பன் குடும்பம் வந்துவிட்டது. இளமஞ்சள் நிற புடவை அணிந்து அன்னம், முத்து கருப்பன் உடன் சிரித்த முகமாக வந்தார். அவர்கள் பின்னே சுந்தரமும் மங்கையும் முத்தையாவும் வந்தார்கள்.
“வாங்க..வாங்க .. வாத்தா.. வாய்யா.. எல்லோரும் வாங்க” என்று முன்னின்று வரவேற்றார் முருகம்மை.
“வாங்க அண்ணே.. வாங்க மாமா.. வாங்க அத்தான்.. வாங்க ஆயா.. வாங்க அய்யா.. வாங்க .. வாங்க.. “
வாங்க.. வாங்க.. என்று ஒரே சத்தம்.
யார் கூப்பிடுகிறார்கள், எந்த பக்கம் இருந்து கூப்பிடுகிறார்கள் என்று வந்தவர்கள் விழி பிதுங்கி தான் நின்றார்கள்.
“அது ஒன்னுமில்லை, வீட்டுக்கு வந்தவங்களை சத்தமா வாங்கன்னு கூப்பிடனும். இந்த காலத்து பிள்ளைங்க மாதிரி ஸ்டைலா வாய்க்குள்ள கூப்பிட கூடாது… அதுவும் எங்க சொந்தகாரங்க வராங்க… நல்லா கவனிக்கனும்… அப்படின்னு, மீனா ஆயா நேத்துல இருந்து பாடமா எடுத்தாங்களா?அதன் எதிரொலி” என்றாள் விசாகா.
மீனா, பேரன்களை முறைத்துக்கொண்டு நின்றிருந்தார்.
புன்னகையுடன் உள்ளே வந்தார்கள் அனைவரும்.
பேரன்களை அறிமுக படுத்தினார் முருகம்மை ஆச்சி.
“இவன் வெற்றிவேல், இவன் வீரவேல், செந்தில் வள்ளி பசங்க. இவன் கதிர்வேல், இவன் சுப்பிரமணியன், ராஜவேல் தெய்வா பசங்க. இவன் பாலமுருகன், அருண் சாலா மகன். இது முருகம்மை… எங்க வீட்டு ஒரே பேத்தி, அவளை தான் தெரியுமே உங்களுக்கு என்றார் பெருமையாக”
செட்டிநாட்டு விருந்தை பிரமாதமாக ஏற்பாடு செய்திருந்தார் சாலா. தனியே வளர்ந்த முத்து கருப்பனுக்கு இத்தனை பிள்ளைகள் ஒரே வீட்டில் என்று ஆச்சர்யமாக இருந்தது.
அன்னமும் ஆசையாக பார்த்தார் அனைவரையும். கலகலப்பான பேச்சுகளும் கிண்டலும் என்று இனிமையாக இருந்தது அந்த சூழல்.
சாப்பிட்டு முடிக்கவும் , பக்கத்து வீட்டை சென்று பர்த்து வரலாம் என்று ஆண்கள் கிளம்பினார்கள்.
சுந்தரமும், முத்துவும் முத்தையாவும் முன்னே செல்ல, அன்னம் அவர்கள் பின் செல்ல எழுந்தார்.
“நீ எங்க போற, உனக்கு வீடு பத்தி எல்லாம் என்ன தெரியும். அவங்க பார்த்துப்பாங்க விடு” என்றார் மங்கை.
“என்ன பேச்சு இது?” என்று முருகம்மை பார்த்தார்.
அதற்குள் முத்து கருப்பன், “தெரியலான என்ன அப்பத்தா, நானும் அப்பாவும் இருக்கோம் இல்ல, நாங்க சொல்லிப்போம், நீங்க வாங்க” என்று அன்னத்தை உடன் அழைத்தே சென்றான்.
அன்னத்திற்கு மனதிற்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.
அவருக்கு முத்து கருப்பனை அவ்வளவு பிடித்தது. திருமணமாகி இந்த ஒரு வாரத்தில், அவன் அம்மா என்று எல்லாம் அழைக்கவில்லை தான். ஆனால் நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கையை கொடுத்திருந்தான்.
வீடு அனைவருக்கும் பிடித்திருக்கவும், அந்த வாரத்தில் ஒரு நாள் ரிஜிஸ்டர் செய்ய ஏற்பாடுகள் செய்தனர்.
அடுத்த ஒரு வாரத்தில் இந்த வீட்டிற்கு குடி வரவும் ஏற்பாடுகள் செய்தார்கள்.
புது வீடும் புது சூழலும் தங்கள் வாழ்வில் ஒரு நல்ல மாற்றத்தை கொண்டுவரும் என்று மூவரும் நினைத்து இறைவனை வேண்டிக்கொண்டார்கள்.
————–
புது வீட்டில் அன்று பால் காய்ச்சினார்கள். அன்னத்தின் பெற்றோர்களும் தங்கைகளும் வந்திருந்தார்கள். முருகம்மை ஆச்சியின் குடும்பத்தை அழைத்திருந்தார்கள், அவ்வளவே.
அன்னத்திடம் பாலை காய்ச்சி, பொங்கல் வைக்க கூறினார் முருகம்மை.
“பெரியவங்க இருக்கும் போது அவங்க தானே பெரியம்மா செய்யணும்”, என்று மங்கையை செய்ய சொன்னாள் அன்னம்.
மங்கைக்கு மனம் குளிர்ந்துவிட்டது. மகன் வாழ்வு சிறக்கட்டும் என்று மனதார செய்தார் மங்கையும்.
“எப்படி ஒரே பாலில் சிக்ஸர் அடிக்குது பாரு இந்த அன்னம்” என்று வள்ளி காதை கடித்தாள் தெய்வா.
“நம்ம அத்தை எல்லாம், எந்த பக்கம் அடிச்சாலும் கேட்ச் பிடிச்சி நம்மள அவுட் ஆக்கிடுவாங்க“ என்றாள் வள்ளி.
“அதைச்சொல்லு ..” என்று நொடித்துக்கொண்டாள் தெய்வா.
பூஜை முடியவும், எல்லோரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
“முருகு, ஒரு பாட்டு பாடு ஆத்தா..” என்றார் முருகம்மை.
எந்த பிகுவும் செய்யாமல், உடனே..
“எத்தனை அலங்காரம் முத்தமிழ் முருகனுக்கு
எத்தனை அலங்காரம்..”
என்று அருமையாக பாடினாள்.
அவள் முடிக்கவும், “சாலா நீயும் ஒரு பாட்டு பாடு ஆத்தா” என்றார்.
“ ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அய்யா முருகா ஆடுகவே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அய்யா முருகா ஆடுகவே”
பிள்ளைகள் அழகாக சாலாவுடன் சேர்ந்து பாடினார்கள். மனதிற்கு மிகவும் இதமாக இருந்தது.
மதிய உணவு முடிந்து அனைவரும் புறப்பட்டார்கள்.
அன்றே, அன்னத்தின் பெற்றர்களுடன் மங்கையும், முத்தையாவும் புறப்பட்டு சென்று விட்டார்கள்.
மாலை இவர்கள் மூவர் மட்டுமே இருந்தார்கள்.
முத்து கருப்பன் அவன் அப்பாவிடம் கூறினான், “அப்பா, முருகு அப்பத்தா சொன்னதை நாம் செய்யனும். இந்த கல்யாணம் எப்படி நடந்திருந்தாலும் நாம இப்ப ஒரே குடும்பம். இனி பழசை யோசிக்க கூடாது. அம்மா சாமியா நம்மள பார்த்துப்பாங்க. நாம மூனு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துப்போம். “
முத்து கருப்பன் மனதில் நல்ல விதையை முருகம்மை ஆச்சி விதைத்தார். அது அழகான குடும்பமாக வளர தொடங்கியது.
அன்னம் அப்பாவையும் மகனையும் அமைதியாக பார்த்தார்.
“சரி முத்து. நீ சொல்றது சரி தான் “ என்றார் நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டு.
சினேகமாக சிரித்தார் அன்னத்தை பார்த்து.
“எனக்கு பெரிய எதிர் பார்ப்பு எப்பவுமே இருந்ததில்லை. நல்லா படிப்பேன். அப்பாவுக்கு வருமானம் பத்தலை. அம்மாவுக்கு சமத்து பத்தலை.. அதனால ஸ்கூல் முடிச்சதும், அம்மாகிட்ட சொல்லி ஒரு மெஸ் ஆரம்பிச்சோம். நான் சொல்றதை அம்மா கேக்க ஆரம்பிச்சாங்க. வரவு செலவு எல்லாம் நான் தான் பார்த்துக்கிட்டேன், அப்பா கடனை அடைச்சோம், தங்கச்சிங்களை படிக்க வச்சோம். சிறுக சிறுக பணத்தையும் சேர்க்க தொடங்கினோம். வீட்டில் வறுமை நிலை மாறி, கொஞ்சம் நிதானிச்சோம்.
என்னை பத்தி யோசிக்க நேரமில்லை. முப்பத்தி மூணு வயசு ஆயிடுச்சு, அப்ப தான் உங்க வரன் வந்தது. எனக்கு அப்புறம் ரெண்டு தங்கச்சிகளுக்கு கல்யாணம் செய்யனும். நீங்க சீர் வேணாம்னு சொன்னதும் என்னை கேக்காமலே அப்பா ஒத்துக்கிட்டாங்க. சேர்த்து வைச்ச காசிருந்தா அடுத்தவளுக்கு கல்யாணம் முடிச்சிடலாம், அவளுக்கும் இருபத்தி எட்டு வயசாகுது அப்படின்னு அவங்களே முடிவு செஞ்சிட்டாங்க.. என்னோட பதினஞ்சு வருஷ உழைப்பு.. என்கிட்ட கேக்க யாருக்கும் தோணலை.
ரொம்ப கசப்பான உண்மை, அதானல எனக்கு ஒரு விரக்தி மனப்பான்மை தான் முதலில். ஒரு பயம், பதினான்கு வயது பையன் என்னை அம்மாவா ஏத்துப்பானா?
உங்க முதல் மனைவி ரொம்ப அழகுன்னு எல்லோரும் பேசிக்கிட்டாங்க.. என்னையும் அவங்களையும் ஒப்பிட்டு நிறைய பேச்சு. கலக்கம், பயம், கோபம், இப்படி மாறி மாறி ஒரே சஞ்சலமான மனசுதான் எனக்கு. ஆனா இப்ப ஒரு தெளிவு கிடைச்ச மாதிரி இருக்கு.
நீ சொல்றது ரொம்ப சரி முத்து, எப்படி இந்த கல்யாணம் நடந்திருந்தாலும் நாம இப்ப ஒரே குடும்பம். இனி பழசை யோசிக்க கூடாது. நாம மூனு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துப்போம்“ என்றார் அன்னம் நிதானமாக.
இப்பொழுது அப்பாவும் மகனும் அன்னத்தை அமைதியாக பார்த்தனர்.
“வேறு வேறு பாதையில் பயணிச்சோம். விதி நம்மள சேர்த்து வச்சிருக்கு.. இனி அந்த வேலன் காட்டுற வழியில நாம் ஒண்ணா பயணிப்போம்”என்றார் சுந்தரம்.
அம்மா மகன் மனைவி என்று யோசிக்காமல், மூவரும் நட்புடன் புது வீட்டில் தங்கள் புது வாழ்வை துவங்கினார்கள்.
error: Content is protected !!