Skip to content
Post Views: 3,270
அத்தியாயம் 10.1
முத்து கருப்பன் குடும்பம் புது வீடு வந்து மூன்று மாதங்கள் ஓடி விட்டது. தெளிந்த நீரோடையாக சென்றது இவர்களது நாட்கள். மூவருக்கும் மனதில் ஒரு ஆசுவாசம், நிம்மதி, அமைதி பிறந்தது.
Advertisement
காலையில் அன்னம் இருவருக்கும் எளிமையாக சத்தான உணவை தயாரித்து மதியத்திற்கு உணவு கட்டி, சிரித்த முகமாக அனுப்பி விடுவார். இயற்கையிலே மிகவும் சுறுசுறுப்பான பெண், அதனால் அவருக்கு இது மிகவும் எளிதாகவே இருந்தது.
வேணும்னா சமையலுக்கு ஆள் போட்டுக்கலாம் என்றார் சுந்தரம். இல்லை, சமையல் எனக்கு பிடித்த விஷயம், வீட்டு வேலைக்கு மட்டும் ஆள் போட்டுக்கலாம் என்று விட்டார்.
Advertisement
Advertisement
அப்பாவுக்கும் மகனுக்கும் பல வருடங்களாக வீட்டில் நல்ல சாப்பாடு இல்லை. நான்கு வருடங்களுக்கு முன்பே சாந்தாவிற்கு கேன்சர் என்று தெரிய வந்தது. அப்பொழுது முத்து நான்காம் வகுப்பு தான் படித்து கொண்டிருந்தான். சோகம், கோபம், வெறுப்பு, சுய பச்சாதாபம் என்று அவனது அம்மாவின் மனநிலை வீட்டின் மனநிலையையும் பாதித்தது. வேலைக்கு ஆட்கள் வந்தார்கள் தான். ஆனால் மேற்பார்வை இல்லாத போது ஒழுங்கும் வர வாய்ப்பு இல்லை அல்லவா? அதுவும் கடைசி இரண்டு ஆண்டுகள் மிகவும் கடினமாக சென்றது.
அன்னத்தின் கைமணம் இருவருக்கும் மிகவும் பிடித்தது. திருப்தியாக உண்டார்கள். பக்கத்துக்கு வீட்டு பிள்ளைகளின் நட்பும் முத்துவிற்கு வரப்பிரசாதமாக அமைந்தது. அதிக நேரம் அவர்களுடன் செலவழித்தான்.
Advertisement
பெரியவர்களும் நட்புடன் பழகினார்கள்.
விசாகவிற்கும் அன்னத்திற்கும் இடையிலே அழகிய உறவு உருவானது. இருவருக்குள்ளும் ஒரு பிடித்தம் இயல்பாக வந்ததது.
அன்னுமா .. அன்னுமா .. என்று அன்னத்திடம் விசாகாவும், முருகு.. முருகு என்று அன்னமும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் ஒன்றாகவே இருந்தார்கள். அப்பத்தா மட்டுமே அவளை முருகு என்று அழைப்பார். இப்பொழுது அன்னம் அப்படி அழைக்கவும் விசாகாவிற்கு அவரை மேலும் பிடித்தது.
விசாகாவின் வீட்டிற்கும் முத்துவின் வீட்டிற்கும் பொதுவாக ஒரு காம்பவுண்ட் சுவர் இருந்தது. அதன் ஒரு பக்கம் இவர்கள் கிரிக்கெட் விளையாடும் இடம். மறுபக்கம், அவர்கள் வீட்டு கொல்லைபுறம்.
அன்று அனைவரும் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார்கள். முத்து கருப்பனும் சுந்தரமும் இவர்களுடன் கலந்து கொண்டார்கள். சுந்தரம் தான் பேட்டிங். கதிர் பந்து வீசிக்கொண்டிருந்தான்.
அப்போது, விசாகா, ஒரே தவ்வில் காம்பவுண்ட் மீது ஏறி அமர்ந்தாள்.
“அன்னுமா .. அன்னுமா..” என்று விசாகா காம்பவுண்டில் அமர்ந்துகொண்டு கத்தினாள்.
சுந்தரம், ‘எதுக்கு அவளை கூப்பிடறா?’ என்று யோசனையாக பார்த்தார்.
“மாமா, ஆட்டத்துல கவனமா இருங்க.. லாஸ்ட் ரெண்டு பால் … சிக்ஸ் ரன் எடுக்கனும்.” என்றான் சுப்பு.
“இப்ப பாரு டா… ஒரே பால்ல சிக்ஸ் அடிக்கிறேன்” என்றார் சுந்தரம்.
“அன்னுமா .. அன்னுமா..” மீண்டும் விசாகாவின் குரல். மீண்டும் அவரது கவனம் அங்கே சென்றது.
“என்ன கவனம் சிதறுதே?” என்றார் ராஜா.
“வேணும்னே விசா இப்படி செய்றா அண்ணா… நம்ம டீம் ஜெயிச்சிடுவோம்னு தெரிஞ்சு இப்படி பண்றா” என்று வீரா வெற்றியிடம் கூறினான்.
முத்து சுவாரசியமாக அனைவரையும் பார்த்தான்.
சரியாக கதிர் பந்தை வீசவும், “அன்னும்மா.. எவ்வளவு நேரம்?” என்று மீண்டும் விசா கூறவும், கவனத்தை தவறவிட்ட சுந்தரம் பந்தை கோட்டை விட்டார்.
இவர்கள் அணியில் இருந்த சுப்பு, ராஜா, வெற்றி, வீரா அவரை கோபமாக பார்க்கவும்,
“லாஸ்ட் பால் சிக்ஸ் தான்.. பாருங்க” என்றார் சுந்தரம் சமாளிப்பாக.
அன்னம் அந்த பக்கம் இருந்து, “என்ன விசா?” என்று கேட்டார்.
அது நான்கு அடி உயரம் உள்ள சுவர்.
“என்ன அன்னும்மா நீங்க, மாமா டோனி மாதிரி பேட்டிங் பின்னி எடுக்கிறார். பார்க்காம என்ன செய்றீங்க? வாங்க” என்றாள்.
“மாமாவை கிளீன் போல்ட் ஆக்காம விட மாட்டா போல” என்றான் வீரா இப்பொழுது சத்தமாகவே.
“ கதிர் அண்ணா, என்ன வேடிக்கை, சீக்கிரம் பந்த போடு” என்றான் பாலு
“சீக்கிரம் வாங்க அன்னுமா..” என்றாள் விசாகா. சுந்தரத்திற்கு ‘அவள் எப்படி இந்த பக்கம் சீக்கிரமா வரமுடியும். சுத்தி நடந்து வந்தா அஞ்சு நிமிஷம் ஆகுமே’ என்று யோசனை.
“கமான் குவிக்“ என்று விசாகா கூறவும், ஒரே ஜம்பில் காம்பவுண்ட் மேலே ஏறி அமர்ந்தார் அன்னம். சரியாக கதிர் பந்தை வீசினான் அப்பொழுது.
மனைவியை ஆ … என்று பார்த்து கொண்டு பந்தை விட்டுவிட்டார் சுந்தரம்.
ஹா ஹா ஹா.. என்று கலகலவென சிரித்தாள் விசா.
“இது எல்லாம் செல்லாது..” என்று சண்டைக்கு கிளம்பினான் சுப்பு.
“நான் என்ன ஆட்டத்துக்கு நடுவில குறுக்கால வந்தேனா?” விசாவும் சண்டைக்கு தயாராகினாள்.
“நீ எங்க டீம் மேட்டை திசை திருப்பிட்ட..”
இப்பொழுது வீரவும் வெற்றியும் களத்தில் குதித்தனர்.
“ஆட்டம் ஆடும் போது கவனத்தை சிதறவிட்டது யார் குற்றம்?”
“நேர்மையா விளையாடாம, இப்படி குறுக்கு வழியில் ஏமாத்துறது தான் குற்றம்.. “
மாறி மாறி.. சண்டை இட்டுக்கொண்டார்கள்.
அன்னம் பாவமாக சுந்தரத்தை பார்த்தார்.
“சரி.. சரி.. விடுங்க” என்றார் அருண்.
அன்னம் விசாகாவை முறைக்கவும், “நீங்க தானே அன்னுமா மாமாவை சைட் அடிக்க முடியலன்னு வருதப்பட்டீங்க” என்று அடித்து விட்டாள்.
“அடிப்பாவி..” என்று பார்த்தார் அன்னம்.
அனைவரும் சுந்தரத்தை நமட்டு சிரிப்புடன் பார்த்தார்கள்.
சரி வாங்க வீட்டுக்கு போலாம் என்று அனைவரையும் கிளப்பினார் செந்தில்.
“நீயும் வாம்மா” என்று அன்னத்திடம் கூறினார் அருண்.
நடந்ததை எல்லாம் விட்டுவிட்டு , “எப்படி ஒரே ஜம்பில் குதிச்ச நீ?” என்று சுந்தரம் தன் மனைவிடம் கேட்டாரே பார்க்கலாம்.
அனைவரும் சண்டையை மறந்து சிரிக்க தொடங்கிவிட்டார்கள். அன்னத்திற்கு லஜ்ஜையாகி போனது. குதித்து இறங்கி அவர்கள் வீட்டிற்குள் ஓடியே விட்டார்.
“பார்த்து பார்த்து.. “என்று சுந்தரம் கூறவும், “ஓ..” என்று அனைவரும் கூச்சலிட்டார்கள்.
“இந்த காதல் ஜோடிங்க தொல்லை தாங்கமுடியலை அப்பா” என்று வீரா கவுண்டமணி மாடுலேஷனில் கூறி சென்றான்.
சுந்தரம் எப்பொழுதும் பேராசிரியர், பொறுப்பானவர், என்று சீரியசாக தான் இருப்பார். இப்பொழுது இவர்களது கிண்டலில் அசடு வழிந்து நின்றார்.
முத்து கருப்பனுக்கு இந்த சூழல் மிகவும் பிடித்திருந்தது. அப்பாவின் முகத்தில் இருந்த இந்த பாவம், அழகாக இருப்பதாய் தோன்றியது. அப்பா எப்பவுமே இப்படி சந்தோசமா இருக்கனும் என்று முருகனை வேண்டிக்கொண்டான். ஆம், இப்பொழுது முத்து கருப்பன் எல்லா விஷயத்திற்கும் முருகா சரணம் என்று தான் இருக்கிறான்.
விசாகவிற்கு அன்னத்திடம் ஏற்பட்ட பிணைப்பு முத்து கருப்பனுக்கு சாலாவிடம் தோன்றியது.
சாலா பிள்ளைகளுக்கு எப்பொழுதும் நல்ல சிந்தனைகள் உள்ள கதைகளும் சாமி கதைகளும், இரவு உணவு முடிந்து வெளியே தோட்டத்தில் அமர்ந்து கூறுவார்.
முத்துவிடம் ஒருமுறை பாலா “அம்மா கதை சூப்பரா சொல்லுவாங்க” என்று கூறி இருந்தான். அதனால் முத்துவும் வந்தான் கதை கேட்க.
அன்றில் இருந்து தொடங்கியது இவர்களது உறவு. யார் வராவிட்டாலும், தினமும் முத்து கருப்பன்அந்த நேரம் ஆஜர் ஆகிவிடுவான்.
ஆர்ப்பாட்டமாக அதிகமாக பேசிக்கொள்ளமாட்டார்கள் இருவரும். ஆனால் ஆத்மார்த்தமாக அளவாக பேசிக்கொண்டார்கள். அத்தை என்று இவனும், கரு.. என்று அவரும் நிறைய விஷயங்களை பகிர்ந்துகொண்டார்கள். இருவரும் ஆழ்ந்த சிந்தனைகளும் மனமுதிர்ச்சியும் கொண்டவர்கள்.
அவரது உறவே, முத்து கருப்பனுக்கு முருகனிடம் ஆழ்ந்த நேசத்தை உருவாக்கியது.
error: Content is protected !!