Skip to content
Post Views: 3,418
அத்தியாயம் 11
அன்னமும், காலையில் வேலைகளை முடித்து விட்டு இங்கே வந்து விடுவார்.
Advertisement
அம்மா.. அம்மா.. என்று முருகம்மை ஆச்சியுடன் பேசிக்கொண்டிருப்பார். அன்னம் தன் பெற்றோர்களுடனும், தங்கைகளுடனும் பேசுவதை முற்றிலும் குறைத்துவிட்டார். மிக தேவை என்றால் மட்டுமே பேசுவார். முருகம்மை ஆச்சியிடம் பேசுவதில் அவருக்கு மனதிற்கு மிகவும் இதமாக இருந்தது என்பதே நிஜம்.
“என்னோட இத்தனை வருட வாழ்க்கை ஒரு தவம் மாதிரி வாழ்ந்தேன் அம்மா… ஆனால், இப்ப பணம் வந்ததும் நான் மாறிட்டேன்னு எங்க அம்மா, தங்கச்சிங்களே சொல்றாங்க” என்று வருத்தமாக கூறினார் அன்னம் முருகம்மையிடம்.
Advertisement
Advertisement
அவரது மனநிலை புரிந்தது அந்த முதியவருக்கு.
“உன்னோட தவத்திற்கு தான் முருகன் அருள் புரிஞ்சிட்டானே ஆத்தா… அப்புறம் ஏன் கலங்கிற?”
Advertisement
அன்னம் கேள்வியாக பார்க்கவும், “நீ உன் குடும்பத்திற்காக செய்தது அந்த முருகனுக்கு தெரியும்… இல்லாம போயிருக்க வேண்டிய குடும்பத்தை அந்த சின்ன வயசுலே தாங்கி பிடிச்சி நிறுத்திட்ட… உன்னை பத்தி யோசிக்காம, குடும்பத்தை தாங்கின தங்கமான மனசு உனக்கு” என்றார்.
அன்னம் அழகாக ஒரு புன்முறுவல் பூத்தார்.
“இந்த வாழ்க்கை உனக்கு கஷ்டமா இருக்கா ஆத்தா?”
“என்னம்மா இப்படி கேக்குறீங்க? முத்து மாதிரி புள்ள கிடைக்கவும், அவர் அன்பு கிடைக்கவும் நான் என்ன புண்ணியம் பண்ணேன்னு எனக்கே தெரியல “
“அது தான் ஆத்தா, உனக்கு கிடைத்த வரம்.. தேவையில்லாத பேச்சை கேட்டு விசனப்படக்கூடாது, புரியுதா?”
அன்னம் ஆமோதிப்பாக தலையை ஆட்டிக்கொண்டார்.
“உனக்குன்னு ஒரு புள்ளை இல்லையேன்னு நினைக்கிறியா?”
“பிள்ளை ஒரு அன்னையை சுமந்து பெத்து எடுக்க முடியும்ன்னு உங்களுக்கு தெரியுமா அம்மா?அப்படி என்னை மனசார அவன் மனசுல சுமந்து ஒரு தாயாக மாற்றினான் அம்மா…
ஒரு அன்னை ஒரு சிசுவை பிரசவிப்பாள்.. ஆனால் இங்கே என் புள்ளை இந்த அம்மாவை பிரசவிச்சான் அப்படின்றது சத்தியம்.
அவனை பெத்தவளை இழந்து ரெண்டே மாசத்துல அவங்க அப்பாவுக்கும் எனக்கும் கல்யாணம் ஆச்சு.. அப்பகூட அவன் எனக்காக யோசிச்சு என்னை அரவணைச்சு அவங்க கூட்டுக்குள்ள என்னை சேத்துக்கிட்டான்.. எத்தனை பெரிய மனசு வேணும் அதுக்கு?
அவன் பத்தாவது படிக்கும்போதே, உங்களுக்கு இன்னொரு குழந்தை வருவதை வேண்டாம்ன்னு எனக்காக யோசிக்காதீங்கன்னு சொன்னான் அம்மா.. உங்க குழந்தைன்னு சொல்லல.. இன்னொரு குழந்தைன்னு சொன்னான் அம்மா..
கருவிலே சுமந்தா தான் பிள்ளையா அம்மா? முருகு சாலாச்சிக்கு முருகன் கொடுத்த பிள்ளைன்னு சொல்வீங்க இல்ல… அப்படி முத்து எனக்கு முருகன் கொடுத்த பிள்ளை அம்மா.. என் பிள்ளை அவன்… ”
கண்கள் குளமாகியது அன்னத்திற்கு.. கேட்டுக்கொண்டிருந்த முருகம்மை ஆச்சிக்கும் உடல் சிலிர்த்துவிட்டது.
“தேவை இல்லாத பேச்சுக்களை விட்டுடு ஆத்தா… உன் மனசு கஷ்டபடற மாதிரி பேசுனா நீ அவங்களை விடாம ஏதாச்சும் செய்வன்னு நினைக்கிறாங்க… பணத்துக்காக உங்க அம்மா வீட்ல அப்படி பேசுறாங்க.. கிடைச்சா சுருட்டலாம்னு பார்க்கறாங்க.. உன்னை அதுக்காக தான் இரண்டாம் தாரமாவே கட்டி கொடுத்திருக்காங்க.. ஆனா அந்த வாழ்க்கையை முருகன் உனக்கு பொக்கிஷமா மாத்தி கொடுத்திருக்கான். உன் கடமையை நீ செய்து முடிச்சிட்ட… இனி அவங்க பாடு, உனக்கு உதவனும் அப்படின்னா இல்லாதப்பட்ட மனுஷ மக்களுக்கு செய்துட்டு போ..”
எப்பொழுதும் போல அவரிடம் மனம் விட்டு பேசியதில் அன்னம் மனதிற்கு அமைதி கிடைத்தது. ஒரு தெளிவு பிறந்தது.
மாலை சிற்றுண்டிக்கு இனிப்பு சீயம் செய்துகொண்டிருந்தார்கள். அனைவரும் கீழே இருக்கவும், மூன்று வீட்டில் சமையல் செய்பவர்களும் கீழே தான் இருந்தார்கள். சவுந்திரம் பக்குவம் சொல்ல, மற்றவர்கள் செய்து கொண்டிருந்தார்கள். வாசனை தெரு கோடி வரை வந்தது. வள்ளி தெய்வா, அன்னம், பிள்ளைகள் எல்லோரும் முருகம்மை ஆச்சியின் அறையில் தான் இருந்தார்கள். சாலா சென்று அனைவருக்கும் கொண்டு வந்துகொடுத்தார்.
இவர்கள் கலகலப்பாக பேசிக்கொண்டிருக்கும் போது அன்னத்தின் கை பேசி ஒலித்தது.
“அன்னுமா.. எங்க இருக்கீங்க?” என்றான் முத்து.
“நான் முருகு வீட்ல இருக்கேன் தம்பி.. இங்க வந்துடு..” என்று கூறி அழைப்பை துண்டித்துவிட்டார்.
முத்து கருப்பன் உள்ளே நுழையும் பொழுதே சீயம் வாசனை வந்தது. இளம் முறுவல் பூத்துக்கொண்டே முருகம்மை ஆச்சி அறைக்குள் நுழைந்தான்.
“என்ன ஆயா? எப்படி இருக்கீங்க” என்றான்.
“நல்லா இருக்கேன் அப்பச்சி.. வா வந்து உட்காரு” என்றார் வாஞ்சையாக.
எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தான். அதற்குள் சாலா அவனுக்கும் ஒரு தட்டில் சீயம் வைத்து கொண்டு வந்தார்.
“இருக்கட்டும் அத்தை, இன்னும் கை கால் கழுவல.. கொஞ்சம் நேரம் ஆகட்டும் “ என்றான்.
அடுத்த ரவுண்ட் சீயம் கொண்டு வரப்பட்டு அனைவருக்கும் சுட சுட பரிமாறப் பட்டது.
“என்ன அத்தை இது? நேத்து தானே சொன்னேன், தினமும் இப்படி எண்ணை பலகாரம் பண்ணாதீங்கன்னு” என்று கண்டனமாக கேட்டான் சாலாவை பார்த்து.
அவர் சொன்னார் தான், எங்கே வள்ளி, தெய்வா, அன்னம் மூவரும் சேர்ந்து அவரை பேசவிடவில்லை.
“ஒரு நாள் தானே அப்பச்சி, விடு “ என்றார் முருகும்மை ஆச்சி.
“நேத்து வெள்ளை பணியாரம், முந்தா நேத்து மசால் சீயம், அதுக்கு முன்னாடி கல்கண்டு வடை…இது ஒரு நாளா? உங்களுக்கும் நல்லது இல்லை ஆயா. கால் அடி பட்டிருக்கும் போது வெயிட் போட்டா உங்களுக்கு தானே கஷ்டம்”
திரும்பி அன்னத்தை பார்த்தான். வாயிக்குள் சீயம் அப்பொழுது தான் சூடாக போட்டிருந்தார். பாவமாக முகத்தை வைத்துக்கொள்ளவும், “உங்க கட்டுரை முடிச்சிட்டீங்களா? அந்த புத்தக அலுவலகத்துக்கு என்னைக்கு அனுப்பனும்?”
“அது கட்டாயம் செய்ய வேண்டாம் தம்பி… அடுத்த தடவை அனுப்பிக்கலாம்னு விட்டுட்டேன்”
“அடுத்த முறை எப்பவுமே வராது அன்னும்மா…”
“இல்ல தம்பி ஆயா கூட துணைக்கு பேசிட்டு இருந்தேன். அவங்களுக்கு போர் அடிக்கும் இல்ல..”
“ஆயா கிட்ட கட்டுரை பத்தி கேட்டிங்கன்னா அவங்களே நெறைய பாயிண்ட் கொடுத்திருப்பாங்களே?”
‘யாராச்சும் காப்பாத்துங்களேன்’ என்று அன்னம் விழித்தார்…
“இவன் டாக்டர் படிக்கறதுக்கு பதிலா வக்கீலுக்கு படிச்சிருக்கனும்” என்று சுப்பு காதை கடித்தான் கதிர்.
“நீங்க எல்லாம் இன்னும் படிக்க ஆரம்பிக்கலையா?” என்றான் திரும்பி இளையவர்களிடம்..
வீராவும் வெற்றியும் இன்னும் வந்திருக்கவில்லை. சாலா வீட்டில் இருக்கவும் பெரியப்பாவிற்கு துணையாக வெற்றி கம்பெனிக்கு செல்கிறான். அவன் வெளிநாடு சென்று படிக்க விரும்பிய கோர்ஸ் கிடைக்கவில்லை. அதனால் மீண்டும் முயற்சி செய்துகொண்டிருக்கிறான்.
“இதோ.. சாப்பிட்டு போறோம்” என்றார்கள் கோரஸாக.
அடுத்த ரவுண்ட் வருமா என்று வாயிலை பார்த்தனர்.
“போதும் சாப்பிட்டது, நான் வந்தே மூணு ரவுண்ட் வந்துடுச்சு.. போங்க போய் படிங்க..” என்று ஒரு அதட்டல் இட்டான்.
“டேய் நானும் நீயும் ஒரே செட்..” என்றான் கதிர்.
“ஆமா.. நீ இன்னிக்கு ஏன் காலேஜ் போகல” என்றான் பதிலுக்கு.
“போச்சு நானா மாட்டிக்கிட்டேனா என்று தன் அன்னையை பார்த்தான்”
‘காலையில் அலாரத்தை அமத்திவிட்டு தூங்கிவிட்டான். அதை கூறினால் கிழிச்சு தொங்க போட்ருவானே .. ‘ திருட்டு முழி முழித்தான்.
சரி சரி வாங்க படிக்க போலாம் என்று கூறி அண்ணனை காப்பாற்றி தன் சகோதரர்களை அழைத்து சென்றாள் விசாகா.
“அன்னும்மா… துணிக்கு போடற கஞ்சியை உங்க பையனுக்கு குடிக்க கொடுக்கறீங்க போல… இப்படி விறைச்சிட்டே இருக்காரே? சொல்லி வைங்க உங்க பிள்ளைக்கிட்ட” என்று விசாகா அன்னம் காதில் கூறிவிட்டு ஓடிவிட்டாள்.
“போச்சு அடுத்து நாம தான் வா நாம அப்படியே நைஸா போய்டுவோம்” என்றார் தெய்வா வள்ளியிடம்.
இருவரும் நகரவும், “நில்லங்க அத்தை ரெண்டு பேரும்” என்றான் கறார் குரலில்.
காப்பாத்துங்களேன் என்று சாலாவையும் முருகம்மையும் மாற்றி மாற்றி பார்த்தார்கள். அவர்கள் இருவரும் கண்டுகொள்ளவில்லை.
“இன்னிக்கு வாக்கிங் போனீங்கங்களா?”
“வாக்கிங் போற வயசா எங்களுக்கு?”
“நீங்க சொல்றது சரி தெய்வா அத்தை, நாளையில இருந்து ஜாகிங் போங்க..”
“இல்ல இல்ல.. வாக்கிங்கே போறேன்…”
“இன்னிக்கு ஏன் போகல?”
“அது அது..”
“சரி இப்ப போங்க ரெண்டு பேரும்”
“உன் செல்ல அத்தையை மட்டும் சொல்ல மாட்டேங்கிற” என்றார் வள்ளி சாலாவை கை காண்பித்து.
“அதான் அத்தையும் மாமாவும் காலையில போறாங்களே. அவங்களை மாதிரி நீங்க பொறுப்பா இருந்தா உங்களையும் எதுக்கு சொல்ல போறேன். ரெண்டு பேருக்கும் உடல் ஆரோக்கியத்து மேலே அக்கறை கொஞ்சமாச்சும் இருக்கா? “
“நாங்க இதோ கிளம்பிட்டோம்” விட்டால் போதும் என்று கிளம்பினார்கள்.
“தோட்டத்திலே போங்க.. உட்கார்ந்து பேசக்கூடாது.. கிளம்புங்க..”
இருவரும் முனங்கி கொண்டே போனார்கள்.
முருகம்மை ஆச்சி வாஞ்சையாக பார்த்தார் முத்து கருப்பனை.
“ஆயா.. கொஞ்ச நேரம் தோட்டத்தில உட்கார்ந்துகோங்கே.. உங்க மருமகளுங்க ஒழுங்கா நடக்கறாங்களானு பாருங்க.. “ என்று கூறி அவரை கையில் தூக்கிக்கொண்டான்.
வெளியே தோட்டத்தில் அவருக்குக்காக ஏற்கனவே போட்டிருக்கும் நீளிருக்கையில் அமர வைத்தான். ஒரு ஒரு மணி நேரம் கழிச்சு வந்து உள்ள கூட்டிட்டு போறேன் என்றான். அவர் அவன் தலையை ஆதுரமாக வருடிவிட்டார்.
தெய்வா, “பாரு வள்ளி, நம்மல மேற்பார்வை பார்க்க ஆள் வச்சிட்டு போறத” என்று நொடித்து கொண்டே நடந்தார்.
“அன்னுமா…”
“இதோ நான் கிளம்பிட்டேன்..”
“கட்டுரை முடிச்சிட்டு வரேன் அம்மா..” என்று முருகம்மை ஆச்சியிடம் கூறிவிட்டு மகனுடன் கிளம்பினார்.
“ரவைக்கு இங்கன சாப்பிட்டுக்குவோம் அன்னம், தனியா சமைக்காத” என்றார் சாலா.
“அத்தை ராத்திரி எல்லோருக்கும், கிச்சடி மட்டும் பண்ணுங்க போதும். இஞ்சி நிறைய போட்டு, எண்ணை கம்மியா சேர்த்து பண்ண சொல்லுங்க, கூட எள்ளு துவையல் மட்டும் செய்ங்க. வத்தல், சிப்ஸ் எதுவும் இருக்க கூடாது” என்று கூறி விட்டு போனான்.
கதிர், சுப்பு, விசாகா மூவரும் கொலைவெறியுடன், அவனை பார்த்தார்கள். பின்னே, முத்து கருப்பன் சொன்னால் சாலாவிடம் மறுப்பே இருக்காது.
“எவன் டா சாப்பிடறது இத?” என்றான் கதிர்.
“ஆமா கதிர் அண்ணா.. இன்னும் ரெண்டு சீயம் சாப்பிடுவோம்ன்னா அதையும் கெடுத்துட்டாரு” என்று புலம்பினாள் விசாகா.
ஆமா.. ஆமா…என்று பின் பாட்டு பாடினார்கள் பாலுவும் சுப்புவும்.
முத்து கருப்பன் கூறியதை போல மணக்க மணக்க கிச்சடியும் எள்ளு துவையலும் தோட்டத்தில் வைத்து அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
இந்த மெனுக்கு இந்த சீன் தேவையா என்று கடுப்பில் இருந்தார்கள் முருகம்மை ஆச்சியின் பேரப்பிள்ளைகள்.
பாசமாக இளையவர்கள் தன்னை பார்ப்பதை கண்டுகொள்ளாமல், “ரொம்ப நல்லா இருக்கு அத்தை” என்று சாலாவுடன் பேசிக்கொண்டே விரும்பி சாப்பிட்டான் முத்து கருப்பன்.
அதோடு நிறுத்தாமல் புறப்படும்போது “நாளையில் இருந்து, தினமும் ஒரு சுண்டல் போடுங்க அத்தை ஈவினிங் பலகாரத்துக்கு” என்று இளையவர்களின் கடுப்பை ஏற்றி விட்டே சென்றான்.
———————
error: Content is protected !!