Skip to content
Post Views: 3,152
அத்தியாயம் 10.2
நாட்கள் செல்ல செல்ல இயல்பாக சுந்தரமும் அன்னமும் இணைந்து வாழத்தொடங்கினார்கள். மனமொத்த தம்பதியர்களாக வாழ்ந்தார்கள் என்றே கூறலாம். முதலில் அன்னத்தை அம்மா என்று கூப்பிட யோசித்த முத்து கருப்பன், விசாகாவின் அழைப்பு கொண்டு அவனும் அன்னும்மா என்று அழைக்க பழகிக்கொண்டான்.
Advertisement
முத்துவிற்கும் அன்னத்திற்கும் இடையிலான பாசப்பிணைப்பு மிகவும் நெருக்கமாகியது. அன்னம் மகனை வளர்த்தாரா மகன் அன்னையை வளர்த்தானா என்று பிரித்து கூற முடியாது.
கணவன் மகன் உந்துதலால், அன்னம் அவருக்கு பிடித்த தமிழ் இலக்கியம் எடுத்து படிக்கிறார். இப்பொழுது சுந்தரத்துடன் சேர்த்து தமிழையும் காதலிக்கிறார். குடும்பத்தோடும் தமிழோடும் இனிமையாக செல்கிறது இவரது நாட்கள்.
Advertisement
Advertisement
விசாகா அன்னம் நட்பு சுவர் ஏறி குதித்து வளர்ந்தது. அதனால், அருணும் சாலாவும் காம்பவுண்ட் சுவரில் ஒரு கேட் வைத்து கொடுத்து விட்டார்கள்.
பதினேழு வயதில் இருந்து குடும்பத்தை தாங்கிய அன்னம், வளர்ந்த பையனுக்கு தாயாக புகுந்த வீட்டிற்கு வந்திருந்தாலும், இங்கு அனைவராலும் கொண்டாட படுகிறார்.
Advertisement
அருணும், செந்திலும், ராஜாவும், அன்னத்தை தங்கள் சொந்த சகோதரி போலவே நடத்துகிறார்கள். இப்பொழுது கிரிக்கெட் விளையாடும் போது அன்னமும் இவர்களுடன் சேர்ந்து கொள்கிறார்.
ஆனால், எப்பொழுதும் சுந்தரத்தையும் அன்னத்தையும் ஒரே டீமில் போட்டு விடுவார்கள். இல்லை என்றால் சுந்தரம் சொதப்பி விடுவார்.
ஞாயிறு வழக்கம் போல கிரிக்கெட் விளையாடி விட்டு அனைவரும் சாலா வீட்டில் மதிய உணவிற்கு ஒன்று கூடினார்கள்.
“என்ன ஸ்பெஷல் இன்னிக்கு?” என்றான் பாலு.
“என்னடா இருக்க போகுது… இன்னிக்கு ஆவணி ஞாயித்து கிழமை.. கூட்டும் பொரியலும் தான் “ என்றான் கடுப்பாக கதிர்.
ஆவணி மதம் ஞாயிற்று கிழமை கவிச்சி எடுக்க மாட்டார்கள்.
இன்னிக்கு அன்னம் தான் சமையல் என்றார் வள்ளி… அன்னத்தின் சமையல் அனைவருக்கும் மிகவும் இஷ்டம்.
“எப்படி, அவங்க தான் விளையாடிட்டு இருந்தாங்க இல்ல?” என்றான் பாலு.
“எல்லாம் ரெடி பண்ணிட்டு தான் வந்தாங்க..” என்றார் தெய்வா.
வாழைத்தண்டு கோலா உருண்டை, சைவ மீன் குழம்பு, எண்ணை கத்திரிக்காய் பொரியல், மிளகு ரசம் என்று செட்டிநாடு கைப்பக்குவதில் அசைவ உணவை போலவே அருமையாக தயாரிக்கப்பட்டிருந்தது உணவு.
அனைவரும் ரசித்து உண்டார்கள். தாம் சமைப்பதை ரசித்து உண்டு, கிடைக்கும் பாராட்டை விட வேறு என்ன வேண்டும் பெண்களுக்கு.
அன்று மாலை சாலாவின் பெற்றோர்கள் வந்தார்கள். ஒரு வாரம் சாலாவையும் பிள்ளைகளையும் தங்களுடன் தங்கும் படி அழைக்க வந்தார்கள். அவர்கள் அமெரிக்காவில் தங்கள் சின்ன பெண் வீட்டிற்கு ஆறு மாதம் செல்ல இருக்கிறார்கள். சிவப்பிரகாசம் சிறப்பு பேராசிரியராக அவ்வப்பொழுது மட்டும் கல்லூரிக்கு சென்று வருவார். சாலாவின் அம்மா, சென்ற மாதம் தான் பணி ஓய்வு பெற்றிருந்தார்.
அவர்கள் வீட்டில் இருந்தும் பள்ளிக்கு செல்ல முடியும். விசாகாவை பிரிந்து இருக்க முடியாது என்று வள்ளி, தெய்வா, அன்னம் மூவரும் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டார்கள்.
இவர்கள் முகத்தை பார்த்து சாலா யோசிக்கவும், முத்து கருப்பன் தான் தன் அத்தைக்கு பரிந்து பேசினான்.
“அத்தைக்கு ஆசை இருக்காதா? இதே ஊரில் தானே அவங்க அப்பா அம்மா இருக்காங்க. ஒரு நாளாவது அங்க தங்கிருப்பாங்களா? என்ன, கண்ணு முன்னாடி இருந்தா மட்டும் தான் பாசமா? அவங்களுக்கும் பேரப்பிள்ளைகளோட இருக்க ஆசை இருக்காதா?” என்று மூவரையும் கேள்விகளால் துளைத்துவிட்டான்.
மூவரும் தங்கள் கணவர்மார்களை பாவமாக பார்த்து துணைக்கு அழைத்தனர்.
“அது அப்படி இல்ல முத்து” என்று ஆரம்பித்தார் செந்தில்.
“விசாவை பாக்காம எப்படி..” என்று இழுத்தார் ராஜா.
“அப்ப விசா அய்யா ஆயாக்கு ஆசையா இருக்க கூடாது.. வெளிநாட்டுக்கு போறாங்க.. வர ஆறு மாசம் ஆகும். அவங்களுக்கும் பேரன் பேத்தி கூட நேரம் செலவழிக்கனும் தானே? சும்மா ஏதாச்சும் சொல்ல கூடாது.. நீங்க என்ன மாமா சும்மா இருக்கீங்க?” என்று அருணிடம் முடித்தான் முத்து கருப்பன்.
ஆளுமை குணம் இயற்கையிலே முத்து கருப்பனிடம் இருந்தது. மற்ற ஆண்கள் அனைவரும் அங்கு நல்லவர்களே. ஆனால் ஆளுமை குணம் கொண்டவர்கள் இல்லை. அனைவரும் முருகம்மை ஆச்சி, விசாலாட்சிக்கு பிறகு முத்துகருப்பன் சொல்வதை ஏற்றுக்கொள்வார்கள்.
விசாகா தான் பெரிய பெண்ணாக, “ஒன் வீக் தானே போயிட்டு வந்துடறேன்” என்று சமாதானம் கூறி அன்னை தம்பியுடன் கிளம்பினாள்.
அந்த முருகனே தங்கள் வீட்டிற்கு வருவது போல மகிழ்ந்துபோனார் சிவப்பிரகாசம். தன் அய்யாவின் மனதை இப்பொழுது விசாகவால் புரிந்து கொள்ள முடிந்தது. ‘பல வருடங்கள் தவமிருந்து கிடைத்த பேத்தி. தான் தினமும் வணங்கும் வேலன் தன் அருமை மகளுக்கு கொடுத்த பரிசு இந்த பேத்தி’
விசாகாவையும் பாலுவையும் திருப்புகழ் பாட சொல்லி கேட்டுக்கொண்டிருந்தனர் பெரியவர்கள்.
“ஏன் சாலா.. அந்த முத்து உன்கூட அத்தைன்னு ரொம்ப பாசமா இருக்கான் இல்ல?” என்றார் பார்வதி.
“ஆமாம்மா.. அவனுக்கு நான்னா ரொம்ப பிரியம். தங்கமான பிள்ளை அம்மா.. எனக்கும் கருன்னா ரொம்ப பிடிக்கும். நான் தான் இங்க வந்த புதுசுல அவனுக்கு முருகன் பாட்டு எல்லாம் சொல்லி கொடுத்தேன். இப்ப எனக்கே சொல்லி தருவான்.. அவன் பாடுறதை கேட்டா, சோறு தண்ணி வேண்டாம் “
“நம்ம பிள்ளங்களும் நல்ல தானே பாடுறாங்க?”
“கருவும் நம்ம பிள்ளை தான் அம்மா. நான் அவனை வேறயா பார்க்கலை… “
“உங்க அப்பா மாதிரியே நீ சாலா.. எனக்கு நம்ம பிள்ளைகள் தான் முதலில்.. முதல்ல உன் கொழுந்தனுங்களுக்கு பார்த்த.. அப்புறம் அவங்க பிள்ளைகளுக்கு பார்த்த.. இப்ப முத்துவையும் அன்னத்தையும் சேர்த்து பார்க்கிற.. நான் சொன்னா கேட்கவா போற..” என்று நொடித்துக்கொண்டே எழுந்து சென்றுவிட்டார். அவர் தான், தன் குடும்பம் என்று கருதும் சராசரி பெண்மணி.
ஒரு வாரம் ஆயா அய்யாவுடன் இனிமையாக பொழுதை கழித்தார்கள் பாலுவும் விசாகாவும்.
——————————
மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார்கள். நாட்கள் விரைந்து சென்றது.
வெற்றி, பொறியியல் முடித்துவிட்டு வெளி நாட்டில் எம்.எஸ் படிப்பதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறான். வீரா சி.ஏ படித்துக்கொண்டிருக்கிறான்.
கதிர் பொறியியல் முதலாம் ஆண்டிலும் முத்து கருப்பன் மருத்துவம் முதலாம் ஆண்டிலும் படிக்கிறார்கள்.
சுப்பு பன்னிரெண்டாம் வகுப்பும், விசாகா பத்தாம் வகுப்பும், பாலு ஆறாம் வகுப்பும் படித்து கொண்டிருக்கிறார்கள்.
சாலா அருணின் திருமண நாள் அன்று. அதனால் அனைவரும் ஒன்றாக உணவு உண்டு, சாலா வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
சாலா, அன்று கொஞ்சம் சோர்வாக காணப்பட்டர்.
“என்னாச்சு அத்தை. ஏன் உங்க முகம் வாடி இருக்கு” என்றான் முத்து கருப்பன்.
அவன் கூறியதும் தான் அனைவரும் கவனித்தார்கள். அருண் காலையிலே கேட்டு விட்டார், சோர்வா தெரியற சாலா என்று.
“ஒண்ணுமில்லை கரு.. எதோ மனசு சஞ்சலமா இருக்கு. படபடப்பா இருக்கு” என்றார்.
சிறிது நேரத்தில், டொம் என்ற சத்தம். அனைவரும் பதறிக்கொண்டு வெளியே சென்று பார்த்தார்கள். அவர்கள் வீட்டிற்கு முன் இருந்த வேப்ப மரம் கீழே விழுந்திருந்தது. எப்படி, இவ்வளவு பெரிய மரம் விழுந்தது என்று அனைவருக்கும் புரியவில்லை.
சாலாவின் முகம் மேலும் கசங்கியது. முருகா சரணம் என்று அந்த மலையய்யாவிடம் சரணடைந்தார் சாலா. அனைவருக்கும் ஒருவித பதற்றம் தொற்றிக்கொண்டது.
எதுக்கு எல்லாரும் சும்மா டென்ஷன் ஆகுறீங்க.. மரம் காத்துல விழுந்திருக்கும். உள்ளே போங்க எல்லோரும் என்று முத்து கருப்பன் அதட்டலிட்டு அனைவரையும் உள்ளே அனுப்பினான். பின் அவனும் வெற்றியும் ஆட்களை வரவழைத்து மரத்தை அப்புற படுத்துவதற்கு ஏற்பாடு செய்தனர்.
முருகா சரணம் என்று முத்துவும் மனதில் வேண்டிக்கொண்டான்.
————————
அடுத்த நாள் விடி காலையிலே அருணுக்கு ஊரில் இருந்து அழைப்பு வந்தது. முருகம்மை ஆச்சியுடன் துணை இருக்கும் சவுந்திரம் தான் அழைத்திருந்தார்.
“தம்பி, ஆச்சி கீழே விழுந்துட்டாங்க” என்று.
“எப்போ அக்கா? என்னாச்சு? எங்க இருக்கீங்க? ஆஸ்பத்திரி கூட்டிட்டு போனீங்களா?” என்று படபடத்தார் அருண்.
உடனே அருகில் இருந்த சாலாவும் பதற்றமாகி எழுந்தமர்ந்தார்.
அருண் கைப்பேசியை ஸ்பீக்கரில் போட்டார்.
“தம்பி பதறாதீங்க… ரவைக்கு தூங்கிட்டோம். ஒரு மணி போல பாத்ரூம் போக எழுந்தாங்க ஆச்சி.. பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டாங்க. நானும், தோட்டக்காரரும் அப்பவே வண்டி புடிச்சு நம்ம வழக்கமா காமிக்கிற ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு வந்துட்டோம். வலது கால்ல தான் மூட்டு பிசகி இருக்குதுன்னு சொல்றாங்க”
“நாங்க உடனே புறப்பட்டு வரோம், டாக்டர் கிட்ட நான் பேசுறேன். கொஞ்சம் பார்த்துக்கோங்க அக்கா” என்றார் அருண் கமறிய குரலில்.
சாலா, “அக்கா, அத்தை முழிச்சிருக்காங்களா? வலி அதிகமா இருக்கா? முழிச்சிருந்தா நான் பேசுறேன் கொடுங்க” என்றார்.
சவுந்திரம், “தூங்க ஊசி போட்டிருக்காங்க ஆத்தா… சீக்கிரம் வந்துடுத்தா.. எனக்கு படபடப்பா இருக்கு” என்று அதுவரை அருணிடம் தைரியமாக பேசிக்கொண்டிருந்தவர் சாலாவின் குரலை கேட்டதும் அழுதே விட்டார்.
“அக்கா, எவ்வளவு தைரியமா ஆஸ்பத்திரியில சேர்த்திருக்கீங்க.. நாங்க வந்துடுவோம்… பயப்படாதீங்க… இப்பவே டாக்டர் கிட்ட பேசுறோம்…” என்று அவருக்கு தைரியம் கூறி அழைப்பை துண்டித்தார் சாலா.
விரைவாக செயல்பட்டார்கள் இருவரும்.
அருணை டாக்டர்கிட்ட பேச சொல்லிவிட்டு, சாலா செந்தில், ராஜாவிற்கு அழைத்து உடனே கீழே வரும்படி கூறினார்.
சாலாவின் நேற்றைய கலக்கம், விடி காலையில் வந்த அழைப்பு என்று பதறிக்கொண்டு தங்கள் மனைவிகளுடன் கீழே வந்தனர்.
விஷயம் கேட்டு அனைவருக்கும் பதற்றம்… பதற்றம்..பதற்றம் மட்டுமே.
பிள்ளைகளும் எழுந்து வந்துவிட்டார்கள்.
அருணிடம் டாக்டர் காலில் சிறிய அறுவை சிகிக்சை செய்ய வேண்டும் என்று கூறினார். இவர்கள் புறப்பட்டு மாலை வந்துவிடுவோம் என்று கூறி, இரவு அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுமாறு கூறினார் அருண்.
அருண் அனைவரிடம் டாக்டர் கூறியதை பகிர்ந்தார். எல்லோரும் செல்வோம், என்றார்கள் வள்ளியும் தெய்வாவும்.
பெரியவங்க மட்டும் போவோம்.. வெற்றி மட்டும் வரட்டும். பிள்ளைகளை அன்னத்தை பாத்துக்க சொல்லிட்டு போவோம் என்றார் சாலா.
உடனே, சுந்தரத்திற்கு அழைத்து விஷயத்தை கூறினார் செந்தில். அடுத்த ஐந்து நிமிடங்களில் அவர்கள் மூவரும் வந்துவிட்டார்கள்.
“நீங்க போயிட்டு வாங்க ஆச்சி, இங்கன நான் பார்த்துகிறேன்” என்றார் அன்னம் உடனே.
வள்ளி, “எங்க அப்பா அம்மா ஊர்ல தான் இருக்காங்க அயித்தான், அவங்களை உடனே போக சொல்வோம்” என்றார்.
“அதுவும் நல்ல யோசனை தான், முதலில் போன போடும்மா” என்றார் அருண்.
விஷயத்தை கூறவும் “நாங்கள் இன்னும் அரை மணி நேரத்துல அங்க போயிடுவோம். நீங்க எல்லாம் பதறாம புறப்பட்டு பத்திரமா வாங்க” என்றார் ராமநாதன்.
அதுவே அனைவருக்கும் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. பிள்ளைகளை அன்னம் பொறுப்பில் விட்டுவிட்டு பெரியவர்கள் புறப்பட்டு சென்றார்கள்.
சாலா முதல், பாலு வரை முருகம்மை ஆச்சிக்காக அனைவரும் முருகா சரணம் என்று முருகனை சரணடைந்தார்கள்.
அனைவரின் வேண்டுதலால் முருகப்பெருமானே திக்குமுக்காடி போய்விட்டார் என்று தான் கூற வேண்டும்.
அவரின் அருளால் அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. அறுவை சிகிக்சை முடிந்து ஒரு வாரத்தில் முருகம்மை ஆச்சியை ஊருக்கு அழைத்து வந்துவிட்டார்கள்.
இந்த வீட்டின் ஆணி வேர் அவர் தானே, அதனால் சற்றே ஆட்டம் கண்டது இவர்களது குடும்பம்.
முருகம்மை ஆச்சி வந்ததில் இருந்து ஆள் மாற்றி ஆள் வந்து கொண்டே இருந்தார்கள் அவரை பார்ப்பதற்கு. சாலா, வீட்டில் இருந்து முருகம்மை ஆச்சியை கண்ணும் கருத்துமாக பார்த்து கொண்டார்.
பேரப் பிள்ளைகள் அப்பத்தாவுடன் பெரும்பாலும் தங்கள் நேரத்தை செலவிட்டார்கள். முதலில் முருகம்மை ஆச்சிக்கு அடிபட்டதால் வருத்தமாக தான் இருந்தார்கள். ஆனால் இப்பொழுது அந்த வருத்தம் மங்கி, ஒரே கொண்டாட்டமாக இருந்தது அனைவருக்கும்.
வித விதமான பலகாரங்கள், விருந்தினர்கள், அப்பத்தாவுடனான பொழுதுகள் என்று நன்றாக சென்றது நாட்கள்.
இன்பமும் துன்பமும் மாறி மாறி தான் வரும். அதை நாம் எடுத்து கொள்ளும் விதம் தானே வாழ்க்கையை வண்ணமயமாக்குகிறது.
————————
error: Content is protected !!