Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கந்தபவனம்

கந்தபவனம் 15

அத்தியாயம் 15 

 

தை பூச திருநாள் கொண்டாட்டத்திற்காக முருகம்மை ஆச்சியின் வீடு விழா கோலம் பூண்டிருந்தது. அனைவரும் சொந்த ஊரில் ஒன்று கூடும் நேரம் இது  தானே. 

 



Advertisement

மூன்று  நாட்கள் முன்னமே அனைவரும் வந்துவிட்டார்கள். பாலுவும் முத்து கருப்பனும்  மட்டும் முதல் நாள் காலை வருவதாக ஏற்பாடு.

 

பாலுவும் முத்து கருப்பனும் வரும் நேரம் வெற்றி வள்ளிமயிலின் இரண்டு வயது மகன் செந்தில் நாதன் என்ற சேந்தன், அவன் அத்தை மேலே யானை சவாரி செய்து கொண்டிருந்தான்.

Advertisement

 

Advertisement

“வேகமா போ அத்தை.. பாஸ்ட்.. பாஸ்ட்..” என்று அவளை விரட்டி கொண்டிருந்தான்.

 

அருண் அங்கே அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்தார். 

Advertisement

அப்பொழுது பாலுவும் முத்து கருப்பனும் உள்ளே நுழைவதை பார்த்தவுடன் சேந்தன் உற்சாகமாக “மாமா அத்தை யானை பாஸ்ட் தெரியுமா?” என்றான் பெருமையாக.

 

“யார் அத்தை, சேந்தன் அத்தையாச்சே” என்று  குழந்தையுடன் சிறிது நேரம் பேசிவிட்டு,  “நாங்க போய் குளிச்சிட்டு வரோம்” என்று இருவரும் உள்ளே சென்றார்கள்.

 

வள்ளி தெய்வா அம்மா வீட்டில் முந்தின இரவு அவர்கள் பாட்டைய்யாவிற்கு  படைப்பு ஏற்பாடு செய்திருந்தார்கள். முன்னோர்களுக்கு சாம்பிராணி போட்டு, பருப்பு மசித்து , கத்திரிக்காய், வாழைக்காய் சேர்த்து சமைத்து, பொங்கல் வைத்து  படைத்து வழிபடுவது நகரத்தார் வழிமுறை. ஒவ்வொரு குடும்பங்களும்  அவர்கள் வீட்டின் வழக்கப்படி படைப்பார்கள். முன்னோர்கள் படைப்பு என்பது அனைவர் வீடுகளிலும் ஒரு முக்கிய பங்கு வகிக்கும். அதற்காக முருகம்மை ஆச்சி குடும்பத்துடன், அன்னம் சுந்தரமும் சென்றிருந்தார்கள். இரவு நேர படைப்பு என்பதால் சேந்தனை அழைத்து வரவில்லை. தூக்கம் கெட்டுவிட்டால் அவனை சமாளிப்பது கஷ்டம். சேந்தன் துணைக்கு விசாகாவையும், அருணையும் விட்டுவிட்டு வந்திருந்தார்கள்.

 

“அப்பா.. கொஞ்சம் இவனை இறங்க சொல்லுங்க அப்பா..” என்று கெஞ்சினாள் விசாகா. பின்னே அரை மணி நேரமாக இறங்க மாட்டேன் என்று அடம் பிடித்து கொண்டிருக்கிறான் சேந்தன்.

 

அருணும்  “வாடா கண்ணு, அத்தைக்கு கால் வலிக்கும் இல்ல?” என்று பேரனிடம் கெஞ்சிக்கொண்டு தான் இருக்கிறார்.

 

“ஒன் ரவுண்ட் அய்யா.. லாஸ்ட் ரவுண்ட் ப்ளீஸ் .. “ என்று மூக்கை சுருக்கி அவன் கேட்கும் அழகில், அவரால் மறுக்க முடியாது.

 

“என்ன சேந்தா, எவ்வளவு நேரம்” என்று முத்து கருப்பன் குரல் கேட்டது தான் தாமதம், அத்தை “இறக்கி விடு.. இறக்கி விடு ..”  என்று உடனே இறங்கி விட்டான்.

 

“எல்லாம் சொல்றவங்க சொன்னா  தான் கேட்குதுங்க” என்று சிரித்துக்கொண்டே கூறினார் அருண்.

 

சேந்தன் வேகமாக முத்து கருப்பன் தோள் மேலே அமர்ந்துகொண்டு மாமா மாமா என்று அவனுடன் கதை பேச தொடங்கிவிட்டான்.  

 

அருண், “முத்து.. நம்ம நண்டு பயலும் இப்படி தானே உன் மேலே இருப்பான்” என்றார்.

 

“அப்பா… அவன் முன்னாடி நண்டு கூப்பிடாதீங்க சொல்லிருக்கேன் இல்ல.. என் பிரண்ட்ஸ் முன்னாடி நண்டு சித்தப்பான்னு கூப்பிடறான்” என்றான் பாலு கடுப்பாக.

 

“சரி சரி.. மறந்துட்டேன்.. இனி கூப்பிடல..”

 

“விசாம்மா சாப்பாடு ரெடியான்னு போய் பாருடா” என்றார் மகளிடம்.

 

சாப்பாடு தயாராக இருக்கவும் சேந்தனுக்கு ஒரு குட்டி தட்டில் இட்லியை பிய்த்து போட்டு, கிண்ணத்தில் சாம்பார் வைத்து கொடுத்துவிட்டு, மற்ற மூவருக்கும் பரிமாறினாள் விசாகா.

“நீயும் சாப்பிடு டா.. இட்லி தானே.. நாமளே வச்சுக்கலாம் “ என்றார் அருண்.

பின் பேசிக்கொண்டே அனைவரும் உண்டார்கள்.

 

“ஆமா, டாக்டர் நீங்க எப்ப தான் படிச்சு முடிப்பீங்க? படிச்சிகிட்டே இருக்கீங்களே?” என்றாள் விசாகா முத்து கருப்பனிடம். 

 

அவன் சென்னை அடையார் கேன்சர் மெடிக்கல் காலேஜில் முதுகலை பட்டம் முடித்துவிட்டு மேலும் அதில் ஒரு வருடம் சிறப்பு பாடப்பிரிவு தெரிவு செய்து படித்து கொண்டிருக்கிறான்.

 

“உங்கள மாதிரியா ஆச்சி.. நாங்க உயிர் சம்பந்தமான படிப்பு படிக்கிறோம், பல உயிர்களை காப்பாத்த உதவுற படிப்பு, நல்லா  படிக்காட்டி ஆபத்து ஆச்சி..”  என்றான் இலகுவாகவே.

 

“நாங்களும் உயிர் சம்பந்தப்பட்ட படிப்பு தான் படிக்கிறோம் டாக்டரே.. நீங்க இல்லனா வியாதி வந்தவங்களுக்கு தான் கஷ்டம்.. நாங்க இல்லனா உயிர் வாழுறதே கஷ்டம் “ என்று நொடித்துக்கொண்டாள்.

 

ஒரு நிமிடம் நிதானமாக விசாகா சொல்லியதை உள்வாங்கினான். எத்தனை உண்மையான வார்த்தை. அவன் விளையாட்டாக தான் பேசினான். ஆனால் இனி விளையாட்டுக்கு கூட அவளது படிப்பை பற்றி கூற கூடாது என்று உறுதி எடுத்துக்கொண்டான்.

 

காலை உணவிற்கு பிறகு  பாலு படிப்பதற்காக அமர்ந்துவிட்டான். பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு நெருங்குகிறது. எப்படியும் மருத்துவம் படிக்க வேண்டும் என்று முழு முயற்சியுடன் இருக்கிறான்.

 

அவர்கள் அனைவரும் மதியம் தான் வருவார்கள். அருணும் தன் அலுவலகம் தொடர்பாக அலைபேசியில் முழ்கி விட்டார்.

 

“விசாகா, இன்னும் ஒரு வருடம் தானே இருக்கு. மேலே படிக்க போறியா?” என்றான் முத்து கருப்பன்.

 

“எப்பயுமே படிப்பு பத்தி தான் பேசுவீங்களா? நீங்களே உங்களை ரொம்ப பக்குவப்பட்ட ஆளா வச்சுக்கிறீங்க. எல்லாரையும் கேர் பண்ணிக்கிறீங்க.. எல்லார் பத்தியும் யோசிக்கிறீங்க.. எல்லார் மனநிலையையும் சிந்திக்கிறீங்க..நல்ல விஷயம் தான். ஆனா கொஞ்சம் மனசை லேசா அப்ப அப்ப இருக்க விடுங்க.. சின்ன சின்ன ஆசைகளை நிறைவேத்திக்கோங்க.. கொஞ்சம் ரிலாக்ஸா இருங்களேன்“ என்றாள் உற்ற தோழியாக.

 

சேந்தன் அவனது விளையாட்டு சாமான்களுடன் அமர்ந்து விளையாடி கொண்டிருந்தான்.

 

“எனக்கு ஸ்ட்ரெஸ் எல்லாம் இல்ல விசா.. நான் பிடிச்சு தான் இதை எல்லாம் செய்றேன்“ என்றான் யோசனையான குரலில்.

 

“ஓகே மிஸ்டர்.கருப்பன், சும்மா தோணிச்சு சொன்னேன். என்கூட வரீங்களா? வயல் எல்லாம் பார்த்துட்டு வரலாம். சேந்தனையும் கூட்டிட்டு போலாம்.” 

 

“சரி” என்றான் உடனே. அவனுக்கும் கொஞ்சம் மாற்றம் தேவை போல இருந்து. 

 

கேன்சர் ஹாஸ்பிடல் என்பதால், நோயும் வலியும் வேதனையும் என்று அவனது நாட்கள் கனமாக தான் இருந்தது.

 

அவளது டிவிஎஸ் பிப்டியில்  மூவரும் சென்றார்கள்.

 

அப்பொழுது தான் அறுவடை முடித்திருந்தது. “இது எல்லாம் நெல்லு வயல் அத்தான். இந்த பக்கம் தான் அரை ஏக்கர் அப்பத்தாகிட்ட கேட்டு நான் தினை போட்டேன். அதுவும் அறுவடை முடிந்தது. நல்ல மகசூல் தெரியுமா?” என்று மேலும் வயலை பற்றி நிறைய பேசினாள். 

 

பேசிக்கொண்டே மாந்தோப்பிற்குள் வந்தார்கள். அங்கே மாந்தோப்பில் சேந்தனுடன் ஒரு மர  நிழலில் அமர்ந்து கொண்டாள். 

 

“தினை காவல் காக்கும் பொழுது தான் முருகன் வந்து வள்ளியை காதலிச்சாராம், உங்களுக்கு தெரியுமா? இந்த தினை செடிகள் வளர வளர , வள்ளி வராளா? பின்னே முருகன் வரானா? அப்படினு பார்த்துட்டே இருப்பேன் ” என்றாள் கனவு குரலில்.

 

முருகன் கதைகள் தான் அனைவர்க்கும் அத்துப்படி ஆயிற்றே சாலாவினால். ஆனால், விசாகா கூறும் போது எத்தனை நேசத்துடன் வயலை அவள் வாழ்வுடன் பிணைத்து கொண்டிருக்கிறாள் என்று கண்டு கொண்டான். 

 

இந்த வருடம் முருகனுக்கு  நம்ம வயலில் விளைந்த தினை மாவிளக்கு தான் என்று பெருமையாக கூறினாள்.

 

சேந்தன் முத்து கருப்பன் மடியிலே  தூங்கி விட்டான். அவன் தூங்கட்டும் என்று இருவரும் சற்று நேரம் பேசி கொண்டிருந்தார்கள்.

 

நிறைய பேசினார்கள் என்று கூறுவதை விட, விசாகா  பேசினாள், முத்து  கருப்பன் கேட்டுக்கொண்டே அமர்ந்திருந்தான்.

 

அவள் சிலம்பம் கற்று கொள்வதை பற்றியும் கூறினாள். அவள் தினமும் காலையிலே சுற்றி இருக்கும் கிராமங்களுக்கு செல்வது, அங்கே அவள் சந்தித்த  பலதரப்பட்ட மக்கள், வயல்கள், விவசாய முறைகள், அதில் வரும் பிரச்சனைகள், பொருளாதார நெருக்கடிகள், இப்படி பல கதைகள் கூறினாள்.

 

தனியே செல்வதற்கு தற்காப்பு அவசியம் என்று அவர் ப்ரோபஸ்ஸர் கூறியது, அதனால் சிலம்பம் பயின்றது, இப்பொழுது அதில் தனக்கு உள்ள ஆளுமை இப்படி வாய் ஓயவில்லை பெண்ணுக்கு.

 

இதில் பல விஷயம் அன்னத்திடம் அவள் கூறி இருக்க, அவர் மூலம் முத்து கருப்பன் அறிந்ததே.

 

ஆனாலும் நீண்ட நாட்களுக்கு பிறகு தன்னிடம் மனம்விட்டு பேசும் தோழியை அவன் ஆதுரமாக பார்த்தான்.

 

சேந்தன் எழவும் அங்கேயே ஓரிடத்தில், இளநீர் வாங்கி குடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பினார்கள்.

 

சேந்தனிற்கு அத்தையின் டிவிஎஸ் பிப்டியில் முன் நின்று வருவது கொள்ளை  பிரியம். ஆர்ப்பரித்து கொண்டே வந்தான்.

 

“இதை தான் சொல்றேன் அத்தான். சேந்தன் மாதிரி குழந்தையா மாறி நம்மளை ரிலாக்ஸ் பண்ணிக்கனும்”

 

“சரி சரி.. நீ சொல்றது சரி” என்று ஒத்து கொண்டான். ஒத்துக்கொள்ளும்வரை அவள் விடமாட்டாள் என்று தெரிந்து.

 

“நீ என்ன விசாகா பண்ண போற. இங்கேயே இன்னும் வயல் எல்லாம் வாங்கி போட்டு பாக்கலாம்னு யோசனையா?”

 

“இல்ல அத்தான். நான் எனக்காக மட்டும் இதை படிக்கலை. என்னால  விவசாயத்திற்கு ஏதாவது செய்யனும்னு ஆசை, பார்க்கலாம். இன்னும் கொஞ்சம் படிச்சுடறேன். முடிஞ்ச அளவு நிறைய அனுபவங்களை சேர்க்கனும். எனக்கு கடவுள் கொடுத்த பொறுப்பாய் இதை நான் பார்க்குறேன். இப்ப நீங்க கேன்சர் நோயாளிகளுக்காக ஏதாச்சும் செய்யணும். உங்களால முடிஞ்ச அளவு அவங்களுக்கு செய்யணும்னு நினைக்கிறீங்க தானே? அதை உங்க பொறுப்பா கடமையா நினைக்கிறீங்க தானே? அது மாதிரி நானும் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் ஏதாச்சும் செய்ய நினைக்கிறேன்.” என்றாள் உணர்ச்சி மிகுதியாக.

 

அவளுடைய சீரான எண்ணங்கள் வியப்பாக இருந்தது. இயற்கையிலே புத்திசாலியான பெண்.அதிக ஆர்வமும் கடின உழைப்பும்  அவளிடம் இருந்தது. அதைவிட இந்த துறையில் அவளுக்கு  இருந்த ஆர்வம்,ஞானம்,உத்வேகம் என அனைத்தும்  ஒருவகையில் அவனை ஆக்கர்ஷித்து என்றே சொல்லலாம்.

 

இவர்கள் வரும்போது எல்லோரும் வீடு திரும்பி இருந்தார்கள்.

 

“ஏன் விசாகா.. எங்களுக்கு எல்லாம் மாவிளக்கு போட  தெரியாதா? உங்க அப்பத்தா, முருகு வந்ததும் தான் போடனும் என்று சொல்லிட்டாங்க .. அப்படி என்ன புதுசா செய்யறன்னு நானும் பார்க்கிறேன்”  என்று நொடித்துக்கொண்டார் மீனா.

அவரும் வந்ததில் இருந்து விசாகா  புராணத்தை கேட்டு காண்டாகி இருந்தார்.

 

“அப்படி இல்ல ஆயா.. நீங்க எல்லாரும் நிறைய தடவை செஞ்சிருக்கீங்க. நான் முதன் முதலா செய்யணும்னு கேட்டேன் இல்ல, அதான் அப்பத்தா அப்படி சொல்லிருப்பாங்க.. நீங்க சொல்லி தாங்க ஆயா, நான் செய்றேன்” என்று அவரை குளிர்வித்து அவர் அருகில் சலுகையாக அமர்ந்து கொண்டாள்.

 

பெண்கள் அனைவரும் சேர்ந்து தினை மாவிளக்கு செய்து எடுத்து வைத்தார்கள். பூஜைக்கு தேவையான சாமான்கள்  அனைத்தும் எடுத்து வைத்தார்கள்.

ஆண்கள் அனைவரும் முற்றத்தில் பேசிக்கொண்டிருந்தார்கள்.

கதிர் மட்டும் இந்த முறை வரவில்லை. அவன் ஐ.பி.எஸ். ட்ரைனிங்காக  டெஹ்ராடூனில் இருந்தான்.

வீராவிற்கு  பெண் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவன் சென்னை வந்து இரண்டு மாதம் ஆகிறது.  சொந்தமாக ப்ராக்ட்டிஸ் தொடங்கி இருந்தான். சுப்பு எம்.பில் முடித்துவிட்டு ஒரு பள்ளியில் கணித ஆசிரியராக வேலை செய்கிறான். அதில் அவன் பெற்றோர்களுக்கு சிறிது வருத்தம் வேறு நல்ல வேலைக்கு போயிருக்கலாம் என்று. அவன் சுந்தரத்தின் ஆலோசனை படி தன்னை கணிதத்தில் மென்மேலும் மெருகேற்றி  கொண்டிருந்தான். அவனுக்கு கற்பிப்பதில்  அதிக ஆர்வம் இருந்தது. விரும்பியே இந்த வேலைக்கு செல்கிறான்.

 

மாவிளக்கு செய்துவிட்டு, மீதம் உள்ள தினை மாவை விசாகா கேட்டு கொண்டபடி மாவுருண்டைகளாக செய்தனர். தினை மாவை வாணலில் வறுத்து, வறுத்த முந்திரி திராட்சை கலந்து, ஏலக்காய் சேர்த்து.. கொஞ்சம் கொஞ்சமாக தேன் கலந்து உருண்டையாக பிடித்தார்கள். 

 

தினை மாவை வறுக்கும் வாசம் அனைவர் நாசியையும் மதுரமாக நிறைத்தது.

காலையிலே முதலில் வீட்டில் இருக்கும் முருகனுக்கு மாவுருண்டைகளை வைத்து படைத்தார்கள். வீட்டில் பூஜை முடிந்து மலையக்கோவில் சென்றார்கள். அங்கேயும் மாவிளக்கு ஏற்றி அனைவரும் அர்ச்சனை செய்து பூஜை முடித்து அன்னதானம் நடக்கும் பந்தலுக்கு சென்று உணவு பரிமாறி தாங்களும் உண்டு என்று நிறைவாக சென்றது அன்றைய நாள்.

 

மீண்டும் ஒரு முறை அனைவரும் சென்று முருகனை தரிசித்தனர். மாலை ஆனதால் கூட்டம் சற்று குறைந்திருந்தது. சாலா ஒரு திருப்புகழ் பாடல் பாடி மலையய்யாவை வணங்கினார். பின் என்ன தோன்றியதோ, விசாகா 

 

“முத்தான முத்துக் குமரா

முருகையா வா வா

சித்தாடும் செல்வக்குமரா

சிந்தை மகிழ வா வா” என்று மனமுருக பாடினாள்.

 

அடுத்த பத்தியை  முத்து கருப்பன் பாடினான்.

பின் மீண்டும்  விசாகா என்று இருவரும் ஆளுக்கொரு பத்தி பாடினார்கள்.

 

இப்படியே அடுத்து அடுத்து இருவரும் மேலும் சில பாடல்கள் பாடினார்கள்.

தெய்வீக சூழல்.இருவரும் இணைந்து பாடுவதை மெய்  சிலிர்த்து கேட்டுக்கொண்டிருந்தார்கள்  அனைவரும்.

 

அங்கு இருந்த அனைவருக்கும் தினை மாவுருண்டைகளை கொடுத்தனர் வள்ளியும் தெய்வாவும்.

அதன் சுவையை வார்த்தைகளால் கூறிவிட முடியாது.

 

“விசாகா  , நீயும்  தம்பியும் சேர்ந்து பாடினது , இந்த தேனும் தினையும்  சேர்ந்து சாப்பிடுவது போல இருந்துச்சுடா.. “ என்றார் அன்னம் கண்கள் கலங்க.

 

நிறைவான மனதுடன் அனைவரும் வீடு திரும்பினார்கள். 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!