Skip to content
Post Views: 3,054
அத்தியாயம் 18
“அம்மா.. அம்மா.. சீக்கிரம் வாங்க” என்று ஹாலில் அமர்ந்து கொண்டு சாலாவை அழைத்து கொண்டிருந்தாள் விசாகா.
Advertisement
“இதோ வந்துட்டேன், என்ன விஷயம் சொல்லு”
“இன்னிக்கு எண்ணை தேய்ச்சு குளிக்கணும்னு சொன்னீங்க, நீங்க தேச்சு விடறீங்களா?”
Advertisement
Advertisement
“காலை பத்து மணிக்கு யாராவது குளிப்பாங்க? வெள்ளன குளிக்கனுமா வேணாமா?”
“அப்ப நீங்க வேலையா இருப்பீங்க இல்ல, அதான் டிஸ்டர்ப் பண்ணல“
Advertisement
“சரி வா.. தோட்டத்துல உட்க்காந்துக்குவோம்”
கொஞ்சம் மிளகு, சீரகம், இரண்டு பல் பூண்டு சேர்த்து மிதமான சூட்டில் நல்லெண்ணெய் காய்ச்சி எடுத்து கொண்டு வந்தார் சாலா.
நான்கு ஆண்டுகள் விடுதியில் இருந்த மகளை மிகவும் மிஸ் செய்தார் சாலா. மகள் வீட்டில் இருக்கவும், அருணிடம் தான் பாக்டரிக்கு வரவில்லை என்று கூறிவிட்டார். அம்மாவும் மகளும் என தங்களுக்கான பொழுதுகளை இனிமையாக களித்தனர்.
“இன்னிக்கு என்ன சமையல் அம்மா?”
“உனக்கு என்ன சாப்பிடணும் போல இருக்கு சொல்லுடா, அதுவே செய்யலாம் ”
“என்னை தேய்ச்சு குளிச்சா ரசமும் எள்ளு துவையலும் தானே கொடுப்பீங்க. அதையே செய்ங்க.. இதெல்லாம் ரொம்ப மிஸ் பண்ணேன் தெரியுமா?”
“ஏதாச்சும் கதை சொல்லுங்க மா, எவ்வளவு நாள் ஆச்சு.”
“என்ன கதை வேணும்?”
“உங்களுக்கு பிடிச்ச கதையை சொல்லுங்க”
“சரி முருகன் தெய்வயானை கல்யாண கதை சொல்றேன்”
“அத்தை.. அத்தை..” என்று அழைத்து கொண்டே வந்தான் முத்து கருப்பன்.
“அதானே பார்த்தேன் இன்னும் காணுமேன்னு.. மூக்கு வேர்த்துடுமே? இன்னிக்கு டாக்டருக்கு வேலை இல்லையா? எங்க அம்மாவை என்கூட தனியாவே விட மாட்டாங்களே?” என்று வாய்குள்ளே முணுமுணுத்தாள்.
“இங்கே இருக்கேன் கரு.. வா “ என்று குரல் கொடுத்தார் சாலா.
“இந்தாங்க அத்தை, அன்னும்மா கோழி குழம்பு செஞ்சாங்க. விசாக்கு பிடிக்கும்னு கொடுக்க சொன்னாங்க..”
“நைட் ஷிப்ட் தானே இன்னிக்கு ?“
“ஆமா அத்தை, கதை சொல்ல போறீங்களா? எவ்வளவு நாள் ஆச்சு? என்ன கதை சொல்ல போறீங்க?” என்று ஆர்வமாக கூறிக்கொண்டே அருகில் அவனும் அமர்ந்து கொண்டான்.
சாலாவின் குரலில் கண் முன்னே முருகன் திருகல்யாணம் கண்ட களிப்பு ஏற்பட்டது இருவருக்கும்.
“சரி கொஞ்ச நேரம் கழிச்சு குளிச்சிட்டு வா விசா, நான் உள்ளே போறேன். நீயும் வா கரு” என்றார் சாலா.
“நான் போய் தூங்க போறேன் அத்தை, இத கொடுத்துட்டு போலாம்னு தான் வந்தேன்”என்று கிளம்பினான்.
“அத்தான்… உங்க கிட்ட ஒன்னு கேட்கனும்” என்றாள் விசாகா.
மிகவும் நல்ல மனநிலையில் இருந்தாலோ அல்லது ஏதாவது காரியம் ஆகவேண்டும் என்றாலும் மட்டுமே அத்தான் என்று அழைப்பாள்.
என்ன என்று கேள்வியாக பார்த்தான்.
“இன்னிக்கும் நாளைக்கும் சென்னைல விவசாய வர்த்தக கண்காட்சி இருக்கு, என்கூட வரீங்களா?”
எங்கே, எவ்வளவு நேரம் என்று கேட்டு தெரிந்துகொண்டான்.
அனைவரிடமும் கேட்டு விட்டாள், போர் அடிக்கும் என்று ஆளாளுக்கு கழண்டு கொண்டார்கள். கடைசியாக தான் முத்து கருப்பனிடம் கேட்டாள்.
“இன்னிக்கு டைம் இருக்குமான்னு தெரியலை, நாளைக்கு போறதுன்னா வரேன்” என்றான்.
சொன்னது போலவே இருவரும் கண்காட்சிக்கு சென்றார்கள். அவளது துறை என்பதால், மிகவும் ஆர்வமாக இருந்தாள் விசாகா. அங்கே அவளது தோழிகள் இருவர் வரவும், “நீங்க போங்க அத்தான் நான் இவர்களுடன் சுற்றி பார்த்துவிட்டு வருகிறேன்” என்றாள்.
அவனுக்கும் போர் அடித்தது, அதை உணர்ந்துதான் கூறினாள். பின் சாலாவிற்கு அழைத்து கூறிவிட்டு, மாலை தான் வந்து அழைத்து செல்வதாக கூறிவிட்டு அவன் புறப்பட்டுவிட்டான்.
மாலை ஆறு மணிக்கு அனைவரும் கிளம்பினார்கள். அழைத்து செல்ல சரியாக முத்து கருப்பன் வந்துவிட்டான்.
கண்காட்சியில் அவளுக்கு பிடித்த விஷயங்கள், உபயோகமான கருத்துக்கள், விவாசாய வளர்ச்சி குறித்த சிந்தனைகள் என்று வளவளத்து கொண்டே வந்தாள்.
இவர்கள் நேரே சென்றுகொண்டிருக்கும் போது, இடையே குறுக்கு சந்தில் இருந்து தீடீர் என்று வேகமாக குறுக்கே வந்த தண்ணீர் லாரி மோதி இவர்கள் வண்டி விபத்துக்கு உள்ளானது.
முத்து கருப்பன் எவ்வளவு கவனமாக இருந்த போதும், விபத்தை தவிர்க்க இயலவில்லை. விசா அமர்ந்திருந்த பக்கம், வந்து மோதியது. அந்த பக்க கதவு முழுதும் நசுங்கி விட்டது. மிகவும் சிரமப்பட்டு தான் இருவரையும் வெளியே கொண்டு வந்தார்கள். இருவரும் உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பட்டனர்.
விஷயம் அறிந்த குடும்பத்தினர் மருத்துவமனை விரைந்து வந்தார்கள்.
பதட்டம் பதட்டம் பதட்டம் மட்டுமே!
எப்பொழுதும் தைரியமாக இருக்கும் சாலாவே கிட்டத்தட்ட மயக்க நிலைக்கு சென்றுவிட்டார்.
இருவரும் அவசரப்பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தார்கள். மருத்துவர் வெளியே வரவும், அனைவரும் கவலையாக பார்த்தனர்.
“ரெண்டு பேருக்கும் இன்னும் நினைவு திரும்பலை. ரெண்டுபேருக்கும் தலையில் காயம் ஏற்பட்டிருக்கு. ஆனால் வெளிக்காயம் மட்டும் தான் இருக்கு. இது மெடிக்கல் மிராக்கிள் அப்படினு சொல்லலாம். இவ்வளவு பெரிய ஆக்சிடென்ட். தலையில் காயம், ஆனால் உள்காயம் எதுவும் இல்லை.
அதிர்ச்சியினால ஏற்பட்ட மயக்கம் தான். பெரிய ஹெட் இஞ்சூரின்னு நினைச்சோம்… ஆனால், ஸ்கேன் பண்ணி பார்த்த போது உள்ளே எந்த காயமும் இல்லை பாதிப்பும் இல்லை. மேல் தோல்ல மட்டுமே கண்ணாடி குத்தி இருக்கு. அதை எடுத்திட்டு தையல் போட்டிருக்கோம்.
பயப்பட ஒன்னும் இல்லை. அடிபட்ட விதமும், ரத்தமும் பார்த்து நாங்களே, ஹோப் இல்லாமல் தான் பார்த்தோம். இந்த மாதிரி விபத்துகளில் இவ்வளவு கம்மியாக அடி பட்டிருப்பது தெய்வீக செயல்” என்று ஆச்சர்யமாக கூறினார் மருத்துவர்.
‘முருகா சரணம்!’ ஒன்று போல அனைவரும் கைகூப்பி முருகனுக்கு நன்றி கூறினார்கள்.
இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்தார்கள் இருவரையும்.
முருகம்மை ஆச்சி வந்துவிட்டார். பேத்தியின் காயங்களை பார்த்து கண்கள் கலங்கி கொண்டே இருந்தது அந்த முதியவருக்கு.
அமெரிவிக்காவில் இருந்து சாலாவின் பெற்றோர்களும் வந்து விட்டார்கள்.
கதிர் ஒரு வாரம் லீவ் போட்டுவிட்டு வந்துவிட்டான். அனைவரும் இருந்தாலும் ஒரு கனமான சூழ்நிலை தான். முருகம்மை ஆச்சி, சாலா, அன்னம் மூவரும் கலங்கி இருக்கவும் அனைவரும் சற்று சஞ்சலத்துடனே இருந்தார்கள்.
“ஏன் எல்லாம் கலங்குறீங்க.. அவ வேலன் மகள். அந்த ஆறுமுகன் அவன் பிள்ளைக்கு எதுவும் ஆக விடமாட்டான்.. சில விஷயங்கள் நடப்பது விதி. அதை மாற்ற முடியாது. இந்த மாதிரி சம்பவம் ஏற்படும்ன்னு தான் அவனுக்கு தத்து கொடுக்க வச்சிருக்கான் போல. மலை போல வர இருந்த துயரை பனி போல விலகிட்டான் அந்த குமரன். எல்லோரும் அவனுக்கு நன்றி சொல்லிட்டு இயல்பா இருங்க” என்றார் சாலாவின் அப்பா.
இங்கே இவ்வளவு பேர் இருந்தாலும், அன்னம் நேரம் கிடைக்கும் போது வந்து பார்த்துவிட்டு செல்வார்.
முத்துவிற்கும் ஓய்வு தேவைப்பட்டதால் அவனும் வீட்டில் இருந்தான். சுந்தரமும் அன்னமும் அவனை விட்டு நகரவே இல்லை. அவன் தான் இவர்களை தேற்றினான்.
“எல்லாம் அந்த முத்து பையன் நேரம், என் பேத்திக்கு இப்படி ஆயிடுச்சு. அவள் ராசிக்கு ஒன்னும் ஆயிருக்காது” என்று கூறினார் சாலாவின் அம்மா பார்வதி.
என்ன பேச்சு இது என்று அனைவரும் அவரை முறைக்கவும், தோணிச்சு சொன்னேன் என்று முடித்துவிட்டார்.
சரியாக ‘முருகு..’ என்று அழைத்து கொண்டே வந்தார் அன்னம்.
“வா அன்னம், முருகு தூங்குறா..” என்றார் முருகம்மை ஆச்சி.
“இந்தாங்க அம்மா, நெஞ்செலும்பு சூப் வச்சேன், முருகுக்கு எழுந்ததும் கொடுங்க” என்று ஒரு பெரிய தூக்கு சட்டியை கொடுத்தார்.
“அன்னும்மா.. கொடுங்க.. என்ன இவ்வளவு இருக்கு” என்று வள்ளி மயில் அதை வாங்கி கொண்டாள்.
“எல்லாரும் இருக்கீங்களா.. ஆளுக்கு கொஞ்சம் கொடுப்பா” என்றார். அவரது குரலே மிகவும் வாட்டமாக இருந்தது.
“இங்க இத்தனை வேலை காரங்க இருக்காங்க.. நீ எதுக்கு அன்னம் கொண்டு வரணும். உனக்கு வேணும்னாலும் இங்கே இருந்த எடுத்து போலாம்” என்றார் நொடிப்பாக சாலாவின் அம்மா.
“அண்ணி, ஆயாவுக்கு கொடுக்காதீங்க. அவங்களுக்கு பிடிக்காது போல…” அவங்க பங்கை எனக்கு கொடுங்க என்றான் கதிர்.
“டேய் அண்ணா, அன்னும்மா சூப் சூப்பரா இருக்கும், ஆளுக்கு பாதியா எடுத்துப்போம் வா.. “ என்று சுப்பு கூறிக்கொண்டே பேச்சை திசை மாற்றினார்கள்.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே விசாகா எழுந்து வந்தாள். தலையில் கட்டுடன் அவளை பார்த்ததும், கண்கள் கலங்கி விட்டது அன்னத்திற்கு.
“அச்சோ அன்னும்மா… எனக்கு பெரிய காயம் இல்லை. எத்தனை நாளு அழுவீங்க” என்று அவரை சென்று அணைத்துக்கொண்டாள்.
“என் பொண்ணுக்கு இல்லாத கவலையா இவளுக்கு” என்று அப்பொழுதும் வாயடங்காமல் பேசினார் பார்வதி.
சாலாவே, “அம்மா உங்களுக்கு புரியாட்டி பேசாம இருங்க. இதோ வெற்றி, வீரா, கதிர், சுப்பு இவங்க எல்லாருக்கும் நான் அம்மா.. வள்ளிக்கும் தெய்வாக்கும் மட்டும் தான் அவங்க பசங்கன்னா, நான் யாரு? அதே மாதிரி தான் விசாவும் பாலுவும் இங்க எல்லாருக்கும். அன்னம், சுந்தர் அண்ணன், கரு இவங்க மூணு பேரும் இந்த குடும்பத்தை சேர்ந்தவங்களா தான் நாங்க பார்க்கிறோம்” என்றார் ஆதங்கமாக.
“பெரியம்மா, இந்தாங்க சூப் குடிங்க.. பேசி பேசி களைச்சு போய்ட்டிங்க” என்று ஒரு கிண்ணத்தில் அன்னம் கொண்டுவந்த சூப்பை கொடுத்தான் கதிர்.
மற்றவர்களுக்கு வள்ளிமயிலும் நல்லமையும் கொடுத்தார்கள்.
“பெரியம்மா, கொஞ்சம் கன்டென்ட் மிச்சம் வச்சுக்கோங்க “ என்றான் வீரா.
“எதுக்குடா ?” என்றான் வெற்றி.
“சாயுங்காலம் மீனா ஆயாவும் அய்யாவும் வராங்களாம். பாரு ஆயா கிட்டவே எல்லாம் சொல்லிட்டாங்கன்னா அப்ப பேச வசனம் வேணுமில்ல?” என்றான் வீரா.
“ஆமா, பெரியம்மா இந்த செண்டிமெண்ட் வசனம் எல்லாம் திரும்ப திரும்ப கேக்க முடியாது” என்றான் கதிர்.
“ஆக்சன் ஹீரோ ஆயிட்டாரு இல்ல.. சண்டை காட்சி வேணும்னா பார்ப்பாரு” என்றான் சுப்பு.
இவர்கள் கலாட்டாவால் சற்றே இலகுவானது சூழல்.
“சரி நான் வரேன், தம்பி எழுந்துடுவான்” என்று கிளம்பினார் அன்னம்.
“ஏன் மம்மி .. ஆயா சொன்ன மாதிரி இங்கே இத்தனை ஆளு வேலைக்கு இருக்காங்க.. அன்னும்மா இங்கே வந்து கிட்டத்தட்ட பன்னெண்டு பதிமூணு வருஷம் ஆயிடுச்சு. இத்தனை வருஷத்துல அங்க இருந்து தான் இங்கே வந்துட்டே இருக்கு, அதுவும் நம்ம எல்லாருக்கும் சேர்த்து. ஒரு நாள் கூட நீங்க ஒன்னும் கொடுத்த மாதிரி தெரியலயே?” என்று தெய்வாவை உள்ளே இழுத்தான் கதிர்.
விசாகாவிற்கு, தெய்வா ஸ்பூனில் சிறிது சிறிதாக சூப்பை கொடுத்து கொண்டிருந்தார்.
‘அடப்பாவி என்னை கோர்த்து விடறானே?’ என்று மகனை மனத்திற்குள் திட்டிக்கொண்டே திரு திரு என்று முழித்தார்.
“விடுங்கடா.. ஆயாவும் பிள்ளைக்கு அடிப்பட்டிருச்சுன்னு விசனப்பட்டு, தெரியாம பேசிடுச்சு” என்றார் முருகம்மை ஆச்சி.
அய்யா சொன்னது போல நடக்கும்னு விதி. ஆனாலும் நம்ம கும்பிடற முருகன் பிள்ளைகளை காப்பாத்தி கொடுத்துட்டான்.
நாளைக்கு எல்லோரும் வேலைக்கு போங்க. வீட்ல நாங்க பார்த்துக்கிறோம்” என்று நிலைமையை இயல்பு நிலைக்கு கொண்டு வர முயன்றார் முருகம்மை ஆச்சி.
“அத்தை, அடுத்த மாசம் எல்லாரும் மலைய கோவிலுக்கு போய்ட்டு வந்திடலாம்” என்றார் சாலா.
“சரித்தா, அப்படியே செய்வோம்” என்று கூறி, அப்பொழுதே அடுத்த மாதம் செல்வதற்கான நாளை பார்த்து முடிவு செய்து, அனைவரும் அன்று புறப்பட தயாராகுமாறு கூறினார்.
கதிர், “நான் போய் முத்துவை பார்த்துட்டு கோவிலுக்கு போறதையும் சொல்லிட்டு வரேன்” என்று அன்னம் வீட்டிற்கு சென்றான். நாங்களும் வரோம் என்று சகோதரர்கள் ஐவரும் சென்றார்கள்.
அனைவரின் கவனிப்பில் விரைவாக குணமாகினார்கள் விசாகாவும் முத்து கருப்பனும்.
error: Content is protected !!