Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சொல்லி விடு வெள்ளி நிலவே

சொல்லி விடு வெள்ளி நிலவே – 6

“சொன்னா கேக்க மாட்டேங்கிறீங்க தம்பி! என்னை ரொம்ப சங்கடப் படுத்துறீங்க! உங்கம்மா நினைச்சா இந்த ட்ராவல்ஸயே விலைக்கே வாங்க முடியும்! ஒன்னு என்ன? நாலு கூட வாங்க முடியும்!

நீங்க என்னன்னா, இங்க வந்து பார்ட் டைமா டிரைவர் வேலை பார்க்கறேன்னு சொல்லுறீங்க!

கேட்டா அதுக்கு ஒரு காரணம் சொல்றீங்க! என்னமோ போங்க!” என்று சொல்லி தான் டிரைவிங் ஸ்கூல் ஓனர் அண்ணா பாபு, ரித்தீஷை டிரைவர் வேலைக்கு சேர்த்துக் கொண்டார்.

“ஆனா ஒன்னு தம்பி, இந்த ஸ்கூல் வேன் சவாரி ரொம்ப பொறுப்பான விசயம்!



Advertisement

ஊரான் வீட்டுப் பிள்ளைங்கள ஏத்திட்டு போறோம். ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா ஓட்டணும்.

ரிவர்ஸ் எடுக்கும் போதும், வண்டியை முன்னால் எடுக்கும் போதும் குட்டிக் குழந்தைங்க வேன் முன்னாடி, இல்ல பின்னாடி நிக்கிறாங்களான்னு நல்லா பார்த்துட்டு எடுக்கணும்!

பேரெண்ட்ஸ் கூட நின்னு ஏத்தி விடுவாங்க தான், இருந்தாலும் நாமளும் கொஞ்சம் அலர்ட்டா இருக்கணும் எப்போதும்.

Advertisement

அப்புறம் ஸ்கூலில் பிக்கப் பண்ணும் போது குழந்தை அங்கு இல்லைன்னா,  ஸ்கூல் டீச்சர்கிட்டயும் பேரெண்ட்ஸ் எதுவும் ஸ்கூலுக்கு வந்து நடுவுல கூட்டிட்டுப் போய்ட்டாங்களான்னும் நல்லா கன்பர்ம் பண்ணிட்டே கிளம்பணும்.

Advertisement

யாரையும் விட்டுட்டு வந்திடக் கூடாது!

அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம். நீங்க தப்பா எல்லாம் எடுத்துக்கக் கூடாது!

நம்ம வேனில் ஒன்னு ரெண்டு ப்ளஸ்டூ படிக்கிற பொண்ணுங்களும் வருது.

Advertisement

அதுங்க கிட்ட நீங்க எதுவும் பேச்சு வச்சுக்க வேணாம்!

ஏன்னா நீங்களும் காலேஜ்ல படிக்கிற பையன்றதுனால யாரும் எதுவும் ஒரு வார்த்தை சொல்லிடக் கூடாது!

நீங்க அது மாதிரி பையன் இல்லன்னு எனக்கு தெரியும். அது மத்தவங்களுக்கு தெரியாதே! அது தான்!”

நீளமாக பேசி முடித்து, அவன் கையில் வண்டி சாவியைக் கொடுத்தார் பாபு அண்ணன்!

“நீங்க சொல்றது புரியுது அண்ணே, நான் உங்க பேர் கெட்டுப் போற மாதிரி நடந்துக்க மாட்டேன்! கவலையே படாதீங்க!” என்று சிரித்தபடி சொல்லி சாவியை வாங்கிக் கொண்டான் ரித்து.

அவன் அம்மாவை, பைக் வாங்கிக் கொடுக்க வைக்கவே, இப்படி வேலைக்கு சேர்ந்து இருக்கிறான்.

யுஜி படிக்கும் போதிலிருந்தே கேட்டுக் கொண்டிருக்கிறான்!

அவன் அம்மா பிடிவாதமாக வாங்கிக் கொடுக்க மறுக்கிறாள். கேட்டால், பயம் என்கிறாள்!

ஏதோ அதிசயமாக, அவனின் எந்த விசயத்திலும் அவனைக் கண்டுக் கொள்ளாத  அவன் மாமாக்கள், தற்போது கொண்டுள்ள திடீர் பாசத்தால், அவன் டிரைவிங் ஆவது கற்றுக் கொள்ள முடிந்ததே!

ஆனால், சொந்தமாக ஒரு பைக்! அது அவனின் ஆசை!

அது மட்டும் இன்னும் நடக்கவே இல்லை!

இதோ இப்போது பிஜி முதல் வருடம் வந்து விட்டான்!

இன்னமும் பைக் வாங்கித் தர அம்மா மறுக்கவே, “நானே வேலைக்குப் போய் என் காசில் வாங்கிக் கொள்கிறேன்” என்ற வீம்பாக சொல்லி விட்டு இப்போது பார்ட் டைமாக இந்த ஸ்கூல் வேன் ஓட்டும் வேலைக்கு வந்திருக்கிறான்!

இவனிடம் அவ்வளவு பேசிய பாபு அண்ணா, அவன் வேனில் வரும் குழந்தைகளின் பெற்றோரிடமும் பேசினார்.

“அண்ணே, நம்ம வண்டியில வர டிரைவர் பையன், கொஞ்சம் பெரிய இடம்!

வீட்டில் கோவிச்சுட்டு வந்து இப்படி நம்ம கிட்ட டிரைவர் வேலை பார்க்கிறாப்ல. அதுனால நீங்க அவரை கொஞ்சம் மரியாதையா நடத்தணும்!” என்று போனில் சொல்லி விட்டார்!

அவர் ஒவ்வொருவரிடம் போனில் இதை சொல்லி விட்டு,

“அய்யோ நம்ம மணி அண்ணன் கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லிடுவோம். குட்டிமாவும் தானே இந்த வேனில் வரப் போகுது” என்று சொல்லி அவருக்கும் போன் போடப் போன போது,

அங்கு வந்து விட்ட ரித்தீஷ் அவரைத் தடுத்து,  “அண்ணா, போதும்ண்ணா, இப்படி எல்லார் கிட்டயும் சொல்லி என்னை சங்கடப் படுத்தாதீங்க!” என்று சொல்லி விட்டான்.

“இதுல என்ன தம்பி உங்களுக்கு சங்கடம்! உங்களை யாரும் எதுவும் சொல்லிடக் கூடாதுன்னு தான் இப்படி சொல்லிட்டு இருக்கேன்!”

“அதெல்லாம் எதுவும் வேணாம்! விடுங்க. நான் பார்த்துக்கிறேன். நீங்க முதல்ல , குழந்தைங்க பிக்கப் லிஸ்ட் கொடுங்க”.

“ம்ம். சரிப்பா”,  என்று அவன் கேட்ட விவரங்கள் சொன்னவர்,

“முதல்ல பிக்கப் பண்ண வேண்டியது நம்ம மணி அண்ணன் பொண்ணு குட்டிம்மாவை தான். கடைசியாக இறக்கி விடுறதும் அவளைத்தான்.

மணி அண்ணனும் அவர் மச்சானும் தான் கிட்டதட்ட இங்க உள்ள எல்லா டாக்ஸி, ஆட்டோ டிரைவர்களுக்கும் டிரைவிங் குரு!

ஏன் நானே அவரோட சிஷ்யன் தான்!

மணி அண்ணன் இப்போ கவர்மென்ட் பஸ் ஒட்டுது.

அவர் பொண்ணு குட்டிமாவை தான் நீ வேனில் ஏத்திட்டு வரணும்.

அப்புறம் குட்டிம்மா எப்போது முன் சீட்டில் தான் உக்காரணும்னு அடம் பிடிக்கும்! அதனால அவளை எப்போதும் முன் சீட்டில் ஏத்திக்கோ.

இப்பவாச்சும் பரவாயில்ல, அது சின்னக் குழந்தையா இருக்கும் போது டிரைவிங் சீட்டில் தான் உட்காரணும் அடம் பிடிக்கும்! அவங்க அப்பாவும் மாமாவும் அப்படி பழக்கிவிட்டுட்டாங்க!” என்று சொல்லி சிரித்தார் பாபு அண்ணா.

அவன் பள்ளிக் குழந்தைகளை பிக்கப் செய்ய போகும் ஏரியா, ஒரு புற நகர் ஏரியா!

சில வருடங்கள் முன்பு தான் குடியிருப்பு பகுதியாக தகுதியடைந்து, அப்ரூவல் கொடுக்கப்பட்டு, நடுத்தர மக்கள் ஹோம் லோன் போட்டு இடம் வாங்கி அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகளைக் கட்டிக் கொண்டு வந்திருந்தார்கள்!

அவர்களில் சிலர்,  தாங்களே குடி வந்து விட்ட நிலையில், தாங்கள் குடியிருக்க என்றில்லாமல், வெறும் இன்வெஸ்ட்மென்ட்டுக்காகவும் சிலர் பிளாட் வாங்கி வீடு கட்டியிருந்தார்கள்.

அதில் ஒன்றில் தான் மணி சந்திரன் வாடகைக்கு குடி வந்தார்.

ஏற்கனவே அவர்கள் இருந்த ஏரியாவில், சில வம்பு பெண்மணிகள், பாமாவை கிண்டல் செய்திருக்க, இப்போது கொஞ்சம் வளர்ந்து விட்ட மானுவால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அதனால் அவளின் பிடிவாதத்தால் தான் இப்போது வீட்டை மாற்றியதே!

மணிக்கும் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்று ஆசை தான். ஆனால் அவர் இரண்டு முறை பிளாட் வாங்கியும், பல்வேறு காரணங்களால் அங்கு வீடு கட்ட முடியாமலே தட்டிப் போய்க் கொண்டிருக்கிறது!

சரி. இன்னும் நமக்கு சொந்த வீட்டுப் ப்ராப்தம் வர வில்லை போல என்று அவர் சிரித்துக் கொண்டே சொல்வதுண்டு!

இப்போது குடி வந்திருக்கும் ஏரியா, புதியக் குடியிருப்புப் பகுதி என்பதால் மானுவின் பள்ளி வேன் அங்கு வருவதில்லை.

மானுவுடன் சேர்ந்து இன்னும் சில அவள் பள்ளி மாணவர்கள் பள்ளி வேன் இல்லாது, வேறு தனியார் ஆட்டோவோ அல்லது இப்படி மாருதி ஆம்னி வேன்களிலோ பள்ளி சென்று வந்தார்கள்.

பாபு அண்ணாவும் அப்படி ஒரு ஸ்கூல் வேன் சவாரி பிடித்து இருந்தார்.

அதில் தான் இப்போது ரித்தீஸ் பார்ட் டைம் டிரைவர் வேலைக்கு சேர்ந்திருந்தான்!

பாபு அண்ணன் சொன்ன விவரங்களைக் கேட்டுக் கொண்டவன், கூடவே அவர் சொன்ன அந்த எச்சரிக்கையையும் நினைத்து சிரித்துக் கொண்டான்.

“நீங்க வேற அண்ணே, நான் யாரையும் லவ் பண்ற மனநிலையில் இல்ல இப்ப!

 நானே இப்ப தான் எங்கம்மா இடுப்பில் இருந்து இறங்க ட்ரை பண்ணிட்டு இருக்கேன்!

ஒரு பைக் வாங்கிக் கொடுக்கவே என் மம்மிக்கு அவ்வளவு பயம்! என்னை இன்னும் சின்ன பையனாகவே நினைத்துக் கொண்டு!

நான் இப்போது இருக்கும் மன நிலையில் எந்த பொண்ணையும் சைட் அடிக்கவோ, லவ் பண்ணவோ என்னால எல்லாம் முடியாது!

அப்படி எந்த பொண்ணைப் பார்த்தும் நான் கவுந்துட மாட்டேன்!

காலேஜ்ல எத்தனை பொண்ணுங்கள பார்க்குறேன், எத்தனை பொண்ணுங்க என்கிட்ட வந்து வழிஞ்சு பேசுதுங்க.

அப்புறம் எனக்கு என் வீட்டிலேயே என்னைக் கட்டிக்க மூன்று மாமன் பொண்ணுங்க இருக்கு!

நான் இது வரைக்கும் எந்த பொண்ணையும் பார்த்து பல்லைக் காட்டினது கிடையாது!

நானெல்லாம் யாரு, எப்படின்னு தெரியாம, இந்த  பாபு அண்ணா தேவையில்லாம கவலைப்பட்டு, என்னை வேற அலர்ட் பண்ணுது!”

உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு தான் அவன் வேனில் ஏறினான்.

பாபு அண்ணன் முதலில் ஏற்றிக்கொண்டு வர சொன்ன அந்த குட்டிமா ஒரு சிறுமியாக இருப்பாள் என்றே ரித்து நினைத்திருந்தான்.

ஆனால் வந்ததோ, பருவ வயதின் ஆரம்பத்தில் இருந்த, ஆனால் இன்னுமும் முகத்தில் குழந்தைத் தனம் மிச்சமிருக்கும் ஒரு ப்ளஸ்டூ மாணவி! மானு என்கிற மானசா!

ஸ்கூல் யூனிபார்ம் சுடிதாரும் வி ஷேப்பில் குத்திய ஷாலும், இரட்டை ஜடைப் பின்னலுமாக!

நல்ல பெரிய கண்கள்! சிறிய மூக்கு! கொழுக் மொழுக் கன்னங்கள்!

காதில் இரண்டு சிறிய வளையங்கள்! நெற்றியில் ஐ லைனர் கொண்டு வைக்கப் பட்ட சிறியப் போட்டு. அதற்கு மேல் மெல்லிய விபூதிக் கீற்று!

தன் தோளில் ஸ்கூல் பாகும், இன்னொரு கையில் லஞ்ச் பாகுமாக  வெளியே வந்து வேன் கதவு அருகே வந்து கதவில் கையை வைத்தவளை, பார்த்தான் ரித்து!

சற்று முன் அவன் தன்னைப் பற்றி அவன் நினைத்துக் கொண்டதை எல்லாம் எச்சில் தொட்டு அழிக்க வந்தவள் போல இருந்தாள் குட்டிமா!

அய்யோ, ஆளை அப்படியே அசத்துறாளே! என்ன இது? நான் என்ன,  இது வரை எந்த பொண்ணையும் பார்த்ததே இல்லியா? ஏன் இவ மட்டும் என்னை ஏதோ பண்ணுறா? அவள் அழகையும் தாண்டி ஏதோ ஒன்று ஈர்த்தது அவளிடம் அவனை!

இது பூர்வ ஜென்மா பந்தமா? அது எல்லாம் அப்ப நிஜம் தானா?

இவள நான் இப்போ தான் முத முதலா பார்க்குறேன்! உள்ளுக்குள்ள ஏதோ பண்ணுதே! என்ன அது? அவன் திகைத்துப் போய் இன்னும் பார்த்துக் கொண்டே இருந்தான்!

நான் காலி.. நான் காலி.. பாட்டை எழுதியவர், இவன் நிலையைக் கண்டால், அன்றே எழுதியிருப்பார்!

கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணியின் கார் டயர் கழன்று ஓடி விடுவது போல, அவன் உட்காரிந்திருந்த சீட், கீழே கால் உடைந்தது போல கொஞ்சம் தடுமாற்றமாக உணர்ந்தான் ரித்து.

அவன் பார்த்தவுடன் மானு அவனைப் பார்த்து சிநேகமாக சிரித்தாள்.

அவக சிரிக்கும் போது கன்னங்களில் நன்கு ஆழமாக குழிகள் விழுந்தன!

அந்த கன்னக்குழிகளில் தொபுக்கடீர் என்றே விழுந்து விட்டான் பாவப்பட்ட ரித்து!

அன்று விழுந்தவன் பின்  ஒரு நாளும் எழவே முடியாது போயிற்று!

அவன் வைராக்கியத்தை வெற்றிகரமாக அழித்து விட்டது தெரியாமல், மீண்டும் சிரித்தாள் மானு.

சில கணங்கள், பிரீஷ் ஆகி இருந்தவன், தன்னை ஒருவாறு மீட்டுக் கொண்டு, சிரித்த அவளைக் கண்டு பதிலுக்கு சிரிக்காமல், மவுனமாக முறைத்தான்!

அதைக் கண்ட அவள் முகம் ஒரு  கணம் சுருங்கி, பின் நார்மலானது. ஒன்றும் பேசாது, ஏறிக் கொண்டாள்.

அடிப்பாவி மவளே, எங்கேர்ந்துடி வந்த, இப்படி என் பைக் கனவில் மண்ணை அள்ளிப் போட?

என் மம்மி பைக் வாங்கித் தரும் வரை, நான் இந்த டிரைவர் வேலை ஸ்டன்ட் அடித்து தான் ஆகணும்!

ஆனால், இவள் அதற்கு ஆப்பு வைத்து விடுவாள் போலயே!

நோ. நோ. எனக்கு பைக் முக்கியம்! நான் யாரையும் நிமிர்ந்துக் கூட பார்க்கவே மாட்டேன்.

பார்த்தா தானே வம்பு? பார்க்க மாட்டேன். அவளை நான் திரும்பிக் கூட பார்க்க மாட்டேன்! என்று அவன் மனதை அவனது புத்தி, இழுத்து, இழுத்து வைத்துக் கொண்டிருந்தால், அவன் மனமோ, இல்லை நான் பார்ப்பேன், அவளை எனக்கு ஏனோ பார்த்தவுடனே புடிச்சுடுச்சு! அதிலும் அவ சிரிப்பு! அதுக்கு நான் அடிமை! குழி விழும் அந்த கன்னத்தைப் பிடித்து, கிஸ் பண்ணனும் போல இருக்கு! மனம் அத்து மீறிக் கொண்டிருந்தது!

அவன் அதிர்ந்தான்! அய்யோ! கடைசியில் பாபு அண்ணா சொன்னது, வார்ன் பண்ணது இதுக்கு தானா? அப்ப எனக்கும் வயசுக் கோளாறா?

இல்லையே, வீட்டில் மூன்று பொண்ணுங்க சுத்தி சுத்தி வந்தும் எனக்கு அவங்க கிட்ட எதுவுமே தோனலையே இதுவரை!

ஏன், என் கிளாசில் கூட சில பெண்கள் ஆளை அசர வைக்கும் அழகிகள் இருக்காங்களே! அவங்கள பார்த்துக் கூட நான் கடந்து தானே வந்துருக்கேன்!

இவளைப் பார்த்து மனசு ஆட்டம் கண்ட மாதிரி ஒரு போதும் ஆனதில்லையே!

ஒரு படத்தில் நடிகர் விவேக் லைலாவை கிண்டல் பண்ணுவது போல, இப்படி. இப்படி.  கன்னம் குழி விழ சிரித்து, என்னை இப்படி ஒரேடியாக தலைக் குப்புற தள்ளி விட்டுட்டு, ஒண்ணுமே நடக்காத மாதிரி படிச்சுட்டு வர்றத பாரு!

அப்படியே.. அந்த கன்னத்தைப் பிடித்துக் கிள்ளணும்.. ஆமா!

உள்ளுக்குள் பொருமிக்கொண்டு வேனை ஓட்டிக் கொண்டிருந்தான் ரித்து!

அவனை அவள் பாதித்ததுப் போல, அவன் பால் அவளை ஈர்க்கும் நிகழ்வு ஒன்றும் அடுத்த வாரமே நடந்தது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!