Skip to content
Post Views: 3,423
அத்தியாயம் 22
காலை ஜாகிங் முடித்து தங்கள் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள் கதிரும், முத்துகருப்பனும். அப்பொழுது ஒரு கார் இவர்கள் அருகில் வந்து நின்று, இவர்கள் வீட்டு விலாசத்தை கூறி வழி கேட்டனர்.
Advertisement
கதிரும் “நேரா போய், முதல் ரைட் திரும்புனா வரும்” என்று கூறி அனுப்பினான்.
“யாரு கதிரு? மாமனாரா? நான் தான் நீங்க பார்க்க வந்த மாப்பிள்ளைன்னு சொல்லி இருக்கலாம் இல்ல” என்றான் முத்து கருப்பன் துள்ளல் குரலுடன் .
Advertisement
Advertisement
“நீயா பேசியது? நண்பா நீயா பேசியது?” என்று கதிர் பாட்டு பாடவும், “எப்பவுமே சீரியஸாவே இருக்கறது ஒரு மாதிரி பாரமா இருக்கு கதிர். விசா தான் கொஞ்சம் பிரீயா இருக்க பாருங்கன்னு சொன்னா.. “ என்றான் நண்பனிடம் தன் மனதை மறைக்காது.
“நிஜமாவா முத்து… இனி உன் கண்காணிப்புல இருந்து எனக்கு விடுதலையா.. சும்மா சும்மா முறைக்க மாட்டியே?” என்றான் ராகமாக.
Advertisement
“உங்களை கண்காணிச்சிட்டாலும்.. வா, சீக்கிரம் போலாம். அவங்க உன்ன பார்க்க தானே வந்திருக்காங்க” என்று சிரித்து கொண்டே கதிருடன் வீட்டை நோக்கி சென்றான்.
காரை கேட்டிற்கு வெளியே நிறுத்திவிட்டு, காரில் இருந்து இறங்கிய தம்பதியினர், கேட்டினுள் நுழைந்து வீட்டை நோக்கி நடந்தனர். அங்கே தோட்டத்தில், செந்தில், ராஜா, சேந்தன் மூவருக்கும் விசாகா சிலம்பம் கற்று கொடுத்து கொண்டிருந்தாள்.
“என்ன சித்தப்பா நீங்க? எத்தனை தடவை சொல்லி கொடுத்தாலும் தப்பாவே பண்றீங்க, இன்னும் ஒரு வணக்கம் கூட ஒழுங்கா செய்ய மாட்டேங்கிறீங்க” என்றாள் விசாகா எரிச்சலாக.
“டேய், ராஜா என்ன பாத்து சரியா பண்ணுடா” என்றார் செந்தில்.
“நீங்களே தப்பா தான் பண்றீங்க. டேய் சேந்தா இங்க வந்து ரெண்டு அய்யாகளுக்கும் பண்ணி காட்டுடா..” என்றாள் விசாகா சேந்தனிடம்.
சேந்தன் அழகாக தன் குட்டி சிலம்பத்தை சுழற்றி, தன் அத்தை சொல்லி கொடுத்ததை போல வணக்கம் வைத்தான்.
செந்திலும் ராஜாவும் இந்த சில்வண்டு முன்னாடி மானம் போச்சே என்று பாவமாக நின்றார்கள். அவர்கள் நின்றதை பார்த்து, விசாகவிற்கே சிரிப்பு வந்துவிட்டது.
“போங்க சித்தப்பா ரெண்டுபேரும், எப்ப தான் கரெக்டா செய்றீங்கன்னு பார்க்குறேன்” என்றாள்.
இவர்களை சின்ன புன்னகையுடன் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர் வந்தவர்கள்.
பின்னே வந்த கதிர் முத்துவிடம், “நம்ம விசாகா பயிற்சியில் தங்களை மெய் மறந்து போய்ட்டாங்க போலவே..” என்றான்.
முத்து தான், “மாமா, வந்திருக்காங்க பாருங்க” என்று குரல் கொடுத்தான்.
‘அப்பாடா.. இன்னிக்கு தப்பிச்சாச்சு’, என்று இருவரும் “வாங்க.. வாங்க..” என்று அவர்களை வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர்.
சேந்தன், “அத்தை நம்ம போவமா? இன்னும் கொஞ்சம் செய்வோமா?” என்றான்.
“நீ தான்டா என் தங்கம்.. வா, இன்னிக்கு உனக்கு மட்டும் ஒரு புது ஸ்டெப் சொல்லி தரேன்” என்று கூறிக் கொண்டே தன் சிலம்பத்தை அழகாக சுழற்றி நிப்பாட்டினாள்.
கதிர் அப்பாக்களுடன் உள்ளே சென்றான். உடன் முத்து கருப்பன் வராததை குறித்துக்கொண்டே சென்றான்.
விசாகா சிலம்பத்தை சுத்துவதை இரண்டு நிமிடங்கள் பார்த்துவிட்டு, “சரி விசா நான் போய், குளிச்சிட்டு வரேன்” என்று கூறி முத்துவும் தங்கள் வீட்டிற்குள் சென்றான்.
இவர்கள் உள்ளே நுழையும் போது, சாலா முருகனுக்கு தீபாராதனை காட்டி கொண்டிருந்தார். உடன் அருண் ,வெற்றி, வீரா நின்று கொண்டிருந்தார்கள்.
செந்தில், ராஜா, கதிர் மூவரும் “நாங்க குளிச்சிட்டு வந்துடறோம், நீங்க இருங்க” என்று அவர்களை விட்டுவிட்டு சென்றுவிட்டார்கள்.
வந்தவர்களும் சென்று பூஜையில் கலந்து கொண்டனர். வழக்கம் போல சாலாவின் தெய்வீக குரலில் திருப்புகழ் ஒலித்தது.
பிறகு அவர்களை வரவேற்று நீளிருக்கையில் அமர வைத்து, மணக்க மணக்க பில்டர் காபி கொண்டு வந்து கொடுத்தார் சாலா. அவர்கள் காபி குடித்து முடிப்பதற்குள் குளித்து முடித்து மொத்த குடும்பமும் ஆஜர்.
இவர்கள் குடும்பத்தை பார்த்ததும் வந்திருந்தவர்கள் இருவருக்கும், இந்த இடம் தகைய வேண்டும் என்று மனதிற்குள் பேராசை வந்து புகுந்துகொண்டது.
“முருகா.. நீ தான் அப்பா மனசு வைக்கனும்” என்று அங்கே இருந்த முருகனிடம் மானசீகமாக வேண்டிக்கொண்டார் முத்து ஆச்சி.
அப்பொழுது சுந்தரம், அன்னம், முத்து மூவரும் உள்ளே வந்தனர். அவர்களை சாலா தான் அழைத்திருந்தார்.
கதிர் தன் சகோதரர்களுடன் நின்றுகொண்டான்.
“அருணு, செந்திலு, ராஜா உங்கள எல்லாம் பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு” என்று ஆரம்பித்தார் முத்து ஆச்சி.
“ஆமாம் ஆச்சி, என் கல்யாணத்துக்கு வந்தீங்க. சாலாவை தெரியும். தம்பிங்க கல்யாணத்துக்கு கூட வரலைல நீங்க” என்றார் அருண்.
“எல்லாம் என் நேரம், என்னத்த சொல்ல.. இவரு ஆத்தா அந்த மகராசி இருக்கற வரை என்ன நம்ம மனுஷ மக்களோட சேர எங்க விட்டாங்க” என்று கணவரை ஒரு பார்வை பார்த்து முறைத்து கொண்டே கூறினார்.
அந்த மனிதரோ ‘நம்ள விட மாட்டாங்க போலவே’ என்று பாவமாக அமர்ந்திருந்தார்.
“சரி ஆச்சி, எல்லோரையும் அறிமுக படுத்தறேன். இது சாலா, என் சம்சாரம் தெரியுமில்ல..
இது செந்தில், அவன் சம்சாரம் வள்ளி. இது ராஜா, அவன் சம்சாரம் தெய்வானை.
இவங்க சுந்தரம், நம்ம குடும்பத்துல ஒருத்தங்க போல தான். பக்கத்து வீட்ல இருக்காங்க. எங்களுக்கு மச்சான் முறை. அவர் சம்சாரம் அன்னம்”, என்று அருண் ஒவ்வொருவரையும் அறிமுக படுத்தினார். அவர் கூற கூற அனைவரும் மாறி மாறி வணக்கம் சொல்லி கொண்டனர்.
“டேய் என்னடா நம்ம குடும்பத்தை அறிமுக படுத்தவே ஒரு மணி நேரம் வேணும் போலவே.. என் கல்யாண விஷயத்தை பேசுவாங்களா?” என்றான் கதிர் சுப்புவிடம்.
“இப்ப தான் பெரியவங்க ரவுண்டு முடிஞ்சுருக்கு. அடுத்து பசங்க.. அப்புறம் சேந்தன் .. பொறுமையா இருண்ணே“ என்றான் சுப்பு.
இவர்கள் குசு குசு என பேசி கொண்டிருப்பதை கேட்டு முத்து இவர்களை முறைக்கவும் , “ஆரம்பிச்சுட்டான்.. முறைக்கிறத டாக்டரு..” என்று நொடித்து கொண்டான் கதிர்.
“அப்புறம், இவங்க ரெண்டு பேரும் செந்தில் பசங்க. வெற்றிவேலன், அவன் சம்சாரம் வள்ளிமயில். அவங்க பையன் சேந்தன்.
இது வீரவேல், அவன் சம்சாரம் நல்லம்மை.
அடுத்து ராஜா பசங்க, கதிர்வேலன், சுப்பிரமணியன்.
இது சுந்தரம் அத்தான் பையன் முத்து கருப்பன், டாக்டரா இருக்கான்.
இது என் பொண்ணு, முருகம்மை. விசாகான்னு கூப்பிடுவோம், என் சின்ன பையன் பாலமுருகன், டாக்டர் படிக்கிறான், நைட் தான் கிளம்பி வந்தான்” ஒரு வழியாக அறிமுக படலத்தை முடித்தார் அருண்.
“அண்ணி, பெரியப்பாவுக்கு ஒரு சோடா…” என்றான் கதிர் பக்கத்தில் இருந்த வள்ளிமயிலிடம்.
சிறியவர்கள் அவர்களுக்குள்ளே பேசி சிரித்துக்கொண்டார்கள்.
“உனக்கும் காலஞ்செண்டு தானே புள்ள பொறந்துச்சுன்னு பெரியம்மா சொன்னாங்க” என்றார் முத்து ஆச்சி விசாகாவை பார்த்து கொண்டே.
“ஆமாம், எல்லாம் அந்த முருகன் அருள் தான் ஆச்சி” என்றார் அருண்.
“எங்களுக்கும் கல்யாணமாகி பதினாறு வருஷம் செண்டு தான் பிள்ளை பொறந்துச்சு” என்றார்.
“சப்பா.. ஒரு வழியா பொண்ணை பத்தி சொல்ல போறாங்க டா” என்று ஆர்வமாய் சுப்பு காதில் கிசுகிசுத்தான் கதிர்.
“அப்படியா ஆச்சி? “ என்றார் அருண்.
“நாங்களும் எங்களை அறிமுக படுத்திக்கிறோம் “ என்றார் சொக்கலிங்கம் சிரித்து கொண்டே.
“நான் சொக்கலிங்கம், கோயம்புத்தூர்ல மில்லு வச்சிருக்கேன். எங்க அப்பச்சி காலத்தில இருந்து அங்கன தான் இருக்கோம். எனக்கு ஒரு அண்ணன், ரெண்டு அக்கா. அண்ணனும் கோயம்பத்தூர்ல தான் இருக்காரு. அவருக்கு ரெண்டு பசங்க.. ரெண்டு பேரும் அமெரிக்கால இருக்காங்க. கல்யாணம் ஆகி ஆளுக்கு ரெண்டு பிள்ளளைங்க அவங்களுக்கு. அக்கா ரெண்டு பேரும் ஊரு பக்கம் தான் இருக்காங்க”
“கதிர் அண்ணா.. உன் நிலைமை கொஞ்சம் கஷ்டம் தான் போல” என்றாள் விசாகா கதிரிடம்.
கதிரை தவிர மற்றவர்கள் மெதுவாக சிரித்துக்கொண்டனர்.
“முத்துகருப்பிக்கும், எனக்கும் கல்யாணம் ஆகி பதினாறு வருஷம் செண்டு தான் என் மக கண்ணம்மை பொறந்தா. அப்புறம் அடுத்த வருஷமே அடுத்தவ சௌந்திரம் பொறந்துட்டா”
“கதிரு பொண்ணு பேரு கண்ணம்மை டா.. நோட் பண்ணிக்கோ” என்றான் வெற்றி.
“பொண்ணுங்களையும் கூட்டிட்டு வந்திருக்கலாமே அண்ணமுண்டி” என்றார் சாலா.
“கதையை கெடுத்தீங்க போங்க.. அவளுங்கள ஏமாத்திட்டு வரதுக்குள்ள நானே தெனறி போய்ட்டேன்” என்றார் சொக்கலிங்கம்.
“சும்மா இருங்கங்கிறேன்” என்றார் முத்து ஆச்சி கணவரை.
வீரா, “டேய் கதிரு கதைக்குள் கதையா போகுதே தவிர ஒரு தகவலும் வர மாட்டேங்குதே” என்றான் கதிரிடம்.
“சாப்டுட்டே பேசலாமே.. வாங்க” என்று அழைத்தார் சாலா.
“அப்படி என்ன பிரச்சனை, ஏன் பிள்ளைகளை கூட்டிட்டு வரலை?” என்றார் தெய்வா.
“மாப்பிள்ளை பார்க்கன்னு சொன்னா ஏதாச்சும் வம்பை இழுத்து விட்ருவாங்க” என்றார் சொக்கலிங்கம்.
மனைவி முறைப்பதை கண்டு கொள்ளாமல் பேசிக்கொண்டே உணவு மேஜையில் அமர்ந்துகொண்டார்.
‘பிள்ளைகளை ஏதாச்சும் சொல்லிட்டே இருக்கனும் இவருக்கு’ என்று நொடித்து கொண்டார் முத்து ஆச்சி.
அன்னம், “இந்த காலத்துல கலகலப்பா பொண்ணுங்க இருந்தா தான் நல்லா இருக்கும். எங்க கதிரு ரொம்ப கலகலப்பா இருப்பான்” என்றார்.
“அப்படி சொல்லுங்க ஆச்சி.. தவமிருந்து பெத்த பிள்ளை.. அதை ஏதாச்சும் சொல்லிட்டே இருக்கனும் இவருக்கு”
“அப்டி எல்லாம் ஒன்னும் இல்லைங்க. நீங்களே சொல்லுங்க.. கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்கட்டுமான்னு கேட்டேன்.. உங்க விருப்பம் அப்பான்னு சொல்லுச்சு..”
“அப்புறம்…” என்றார் தெய்வா
“உனக்கு எப்படி மாப்பிள்ளை வேணும்னு கேட்டேன்”
“நியாயமான கேள்வி தானே” என்றார் வள்ளி.
“அப்புறம் அக்காவும் தங்கச்சியும் யோசிச்சி யோசிச்சு எப்படி மாப்பிள்ளை வேணும்னு ஒரு லிஸ்ட் கொடுத்தாங்க..” என்றார்.
“சூப்பர்.. லிஸ்ட்டை கொடுத்துட்டா.. உங்களுக்கு வசதி தானே. திரும்ப திரும்ப பிள்ளைகளை கேக்க வேண்டாமில்ல?” என்றாள் நல்லம்மை.
இப்பொழுது முத்து ஆச்சியே கொஞ்சம் சங்கடமாக பார்த்தார் அனைவரையும்..
“அப்டி என்ன தான் லிஸ்ட்ல இருந்துச்சு” என்றான் வெற்றி.
சாப்பிட்டு லிஸ்ட்டை காட்றோம் என்று முடித்துவிட்டார் சொக்கலிங்கம்.
பின் காலை உணவை முடித்துவிட்டு அனைவரும் மீண்டும் ஹாலில் அமர்ந்து பேச தொடங்கினார்கள்.
“லிஸ்ட்ல என்ன இருக்குன்னு இப்ப சொல்லுங்க” என்றார் வள்ளி.
நீங்களே பாருங்க என்று தன் கைப்பையில் இருந்து ஒரு சீட்டை எடுத்து கொடுத்தார் முத்த ஆச்சி. அதை சுருட்டி வைத்திருந்தார். தெய்வா தான் அதை வாங்கி பிரித்தார். பிரித்தால், நான்கு அடி நீளத்திற்கு இருந்தது அந்த சீட்டு .
அனைவரும் கொல்லென்று சிரிக்க தொடங்கி விட்டார்கள்.
“நல்ல பொண்ணுங்க போங்க” என்றார் அருண்.
நான் படிக்கிறேன் என்று சுப்பு சீட்டை வாங்கி படிக்க தொடங்கினான்.
“கண்டிஷன் நம்பர் ஒன். மாப்பிள்ளை அப்பா அம்மா பேரு நல்லா இருக்கனும். ரொம்ப பட்டிக்காடு மாதிரி இருக்க கூடாது”
யாருமே இதை எதிர் பார்க்கவில்லை, எல்லோரும் ஆவென பார்த்தனர். “அது நம்ம வீட்ல தலை பிள்ளைக்கு அப்பத்தா அய்யா பேரு வைக்கிறோம்ல.. அதான்” என்றார் முத்து ஆச்சி விளக்கமாக.
கதிர் தெய்வாவை பார்க்கவும், “நான் பேர் எல்லாம் மாத்திக்க மாட்டேன் டா..” என்றார் அவசரமாக. பக்கத்தில் இருந்த நல்லம்மையும் வள்ளிமயிலும் கஷ்ட பட்டு சிரிப்பை அடக்கி கொண்டனர்.
“அடுத்து, கண்டிஷன் நம்பர் இரண்டு. மாப்பிள்ளை அப்பாவிற்கு தலை சொட்டையா இருக்க கூடாது..”
ராஜவேல் தன்னிச்சையாக தன் தலையை தடவி பார்த்தார். அவருக்கு சுருள் சுருளாக நல்ல முடி.
“அது ஒன்னும் இல்ல, மாப்பிள்ளைக்கு பின்னாடி சொட்டை வருமா வராதுன்னு தெரியாது இல்ல.. அது பரம்பரையா வரதாம், நாளைக்கு அதுக்கு பையன் பொறந்தா அவனுக்கும் சொட்டை தலை வந்தடும்னு பிள்ளை பயப்படுது.”
சற்று பம்மிக்கொண்டே பதில் கொடுத்தார் முத்து ஆச்சி.
“அடுத்து படிக்கவா?” என்றான் சுப்பு.
“வேண்டாம் தம்பி.. இந்த தடவை, நான் மாப்பிள்ளை முடிவு பண்ணிட்டு தான் சொல்ல போறேன். அதான் பொண்ணுங்க கிட்ட சொல்லாம நாங்க வந்துட்டோம்” என்றார் சொக்கலிங்கம்.
“கண்டிஷன் ரொம்ப இன்டர்ஸ்டிங்கா இருக்கு. நான் படிக்கிறேன்” என்று விசாகா வாங்கி கொண்டாள்.
“கண்டிஷன் நம்பர் மூணு. மாப்பிள்ளைக்கு நிறைய சொந்த பந்தங்கள் இருக்கனும்”
“சப்பா ஒரு கண்டிஷனாச்சும் உருப்படியா இருக்கு” என்று ஆசுவாசம் அடைந்தனர் அனைவரும்.
“முதல் ரெண்டு தான் கோக்கு மாக்காக இருக்கும், அப்புறம் நல்லா தான் இருக்கும் தம்பி” என்றார் முத்து ஆச்சி பெருமையாக.
மறந்தும் கணவர் பக்கம் திரும்பவில்லை.
“அடுத்து, தொப்பை இருக்க கூடாது…”
கதிர் கர்வமாக மீசையை முறுக்கி கொண்டான்.
“யாருக்கு தொப்பை இருக்க கூடாதுன்னு சொல்லலையே டா… மாப்பிள்ளை அண்ணா தம்பி அப்பா சித்தப்பா யாருக்கும் தொப்பை இருக்க கூடாதுன்னு சொன்னா?” என்றான் வீரா தன் குட்டி தொப்பையை தடவிக்கொண்டு.
கதிர் கலவரமாக பார்த்தான் சகோதரர்களை.
“அடுத்து, இந்தியாவிலே வேலை செஞ்சா போதும், வெளி நாடு வேண்டாம்”
அடுத்து..
இப்படி அடுத்து ஒரு மணி நேரம் ஆனது.
“எங்களுக்கு இந்த கண்டிஷன் எல்லாம் ஓகே தான்” என்றார் சாலா சிரித்து கொண்டே.
“டேய், இன்னும் பொண்ணு போட்டோ கூட காட்டலை டா ? பொண்ண பத்தி ஒன்னும் சொல்லலையே?” என்றான் கதிர் சுப்புவிடம் பாவமாக.
“உன் மாமனார் உஷார் தான் டா.. பாரு நேக்கா நம்ம சம்மதம் வாங்கிட்டாரு.. அவர் பொண்ணு கண்டிஷன் ஓகே பண்ணிட்டாரு” என்றான் வெற்றி.
“நீ போலீஸ் தானே, நீயே கண்டுபுடி கதிர் அண்ணா“ என்றாள் விசாகா.
இவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்கையில், முத்துகருப்பன் தான், “பொண்ணு என்ன பன்றாங்க?” என்றான்.
“நண்பேன்டா “ என்று கூறி, பெருமையாக முத்துவை கண்கள் கலங்க பார்த்தான் கதிர்.
அவனது முகத்தை பார்த்து கட்டுபடுத்த முடியாமல், இளைஞர்கள் சிரித்து விட்டனர்.
“நான் வந்ததுல இருந்து பொண்ண பத்தி சொல்லவே இல்ல பாருங்களேன். பெரியவ பேரு கண்ணம்மை, பிசியோ தெரபி படிச்சிருக்கா. அங்கேயே ஒரு ஹாஸ்பிடல்ல இப்ப ஒரு வருஷமா வேலைக்கு போறா. டாக்டர் படிக்க தான் ஆசை பட்டுச்சு, ஒரு மார்க்ல சீட் கிடைக்கல. நான் கூட அடுத்த வருஷம் திரும்ப முயற்சி பண்ண சொன்னேன். என் வாழ்க்கைல ஒரு வருஷம் வீணா போய்டும் அப்பா. நான் பிசியோவே படிக்கிறேன்னு படிச்சா. ஆனா எதை செஞ்சாலும் முழு ஈடுபாட்டோடு செய்வா..” என்றார் சொக்கலிங்கம் நெகிழ்வாக. அவர் குரலிலே அவர் மகளின் மீது வைத்திருக்கும் பாசம் புரிந்தது அனைவருக்கும்.
“முதல்ல பொண்ணு போட்டோவை காட்டுங்க” என்றார் முத்து ஆச்சி.
கண்ணம்மை.. மிகவும் லட்சணமாக இருந்தாள் பெண். பார்த்ததும் அனைவருக்கும் பிடித்த விட்டது.
“பொண்ணுகிட்ட கலந்துட்டு சொல்லுங்க. மேற்கொண்டு பேசலாம்” என்றார் அருண். பின் முருகம்மை ஆச்சிக்கும் அழைத்து பேசினார்கள்.
சற்று நேரத்தில், முத்து கருப்பன் “எனக்கு நேரம் ஆச்சு நான் புறப்படறேன்” என்று பொதுவாக அனைவரிடமும் கூறி விட்டு விடை பெற்றான்.
“தம்பி டாக்டர்னு சொன்னீங்க. அவனுக்கும் வரன் பார்க்கிறீங்களா?” என்றார் முத்து ஆச்சி அன்னத்திடம். அவனை பார்த்ததும் அவருக்கு பிடித்து விட்டது.
சுந்தரம் அன்னத்தை பார்த்தார்.
“இல்ல கையோட சின்ன பொண்ணுக்கும் பார்க்கலாம் அப்படின்னு யோசனை. ஒரு வயசு தான் ரெண்டுபேருக்கும் வித்யாசம். சின்னவ சௌவுந்திரம், எம்.பி.ஏ படிச்சிட்டு இருக்கா” என்றார் மேலும்.
விசாகாவிற்கு பொசுபொசு என்று வந்தது.
“கதிர் அண்ணே உன் மாமியார் ரொம்ப உஷார் தான். ஒரு மாப்பிள்ளை பார்க்க வந்தா இன்னொன்னு இலவசம்னு இங்க போர்டா போட்ருக்கோம்” என்றாள் கடுகடுவென்று.
கதிர் “நான் இன்னும் பொண்ணை நேர்ல பார்க்கல. எனக்கு பிடிச்சிருக்கான்னு கூட யாரும் ஒரு வார்த்தை கேக்கலை…. அதுக்குள்ள என்ன ஆளாளுக்கு மாமனார் மாமியார்னு..” என்று சண்டைக்கு வந்தான்.
“இப்ப இதுவா முக்கியம்? அவங்க மிஸ்டர் கருப்பனை எதுக்கு கேக்கறாங்க?” என்றாள் விசா கோவமாக.
“அவனுக்கும் கல்யாண வயசாகுதுல விசா… கல்யாண வயசுல பையன் இருந்தா நாலு பேரு கேக்க தானே செய்வாங்க?” என்றான் வெற்றி இப்பொழுது.
விசாகவிற்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியவில்லை. முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டாள்.
அன்னம், “அவனுக்கு இன்னும் குரு பார்வை வரலை. இன்னும் ஆறும் மாசம் கழிச்சு தான் பார்க்கப்போறோம்” என்றார்.
“இது எப்ப?” என்று சுந்தரம் அன்னத்தை கேள்வியாக பார்த்தார்.
அன்னம் “அப்புறம் சொல்றேன்” என்று கண்களாலே பதில் சொன்னார்.
“மாமாவும் அன்னும்மாவும் பின்றாங்க டா.. கண்ணாலே பேசறாங்களே..” என்றான் கதிர் சத்தமாக.
‘நான் வந்ததுல இருந்து பேசவே இல்லையே ? என்னை எதுக்கு இழுக்கிற?’ என்பதை போல சுந்தரம் கதிரை பாவமாக பார்த்தார்.
“மாமா கண்ணால பேசுனா அன்னுமாக்கு மட்டும் தான் புரியும். எனக்கு புரியாது..” என்றான் கதிர். இப்படி கலாட்டாவாக பேசி அனைவரையும் திசை திருப்பி விட்டு, தங்கையை ஆதுரமாக பார்த்தான்.
மேலும் சற்று நேரம் பொதுவாக பேசிவிட்டு, “வீட்டுக்கு போனதும் பொண்ணுங்க கிட்ட பேசிட்டு சொல்றம், நீங்க பொண்ணு பார்க்க வந்துட்டு அன்னிக்கே பேசி முடிச்சிடலாம்”, என்று கூறி விடை பெற்றனர் சொக்கலிங்கம் தம்பதியினர்.
அவர்கள் புறப்பட்டு சென்றதும், விசாகா தன் அறைக்கு சென்று சுய அலசலில் இறங்கினாள்.
“எனக்கு மிஸ்டர் கருப்பனை பிடித்திருக்கா? என்ன புதுசா? ஒரு பொசெசிவ் பீல் ஏன் வருது?”என்று தன மனதை ஆராய தொடங்கினாள்.
அதே நேரம் சாலாவும், விசாகாவின் பார்வையையும் முக மாறுதல்களையும் எண்ணி யோசனை செய்தார். பின், வழக்கம் போல, முருகா எதுவா இருந்தாலும் நீ தான் பார்த்துக்கனும் என்று முருகனிடம் சரணடைந்தார்.
அன்னம் சுந்தரத்திடம் , விசாகாவின் பார்வையை பற்றியும், பதட்டத்தை பற்றியும் கூறினார். அப்படி மட்டும் இருந்தால் தனக்கு மிகவும் சந்தோசம் என்றும் கூறினார்.
“கொஞ்சம் பொறுமையா இருப்போம். தைப்பூசம் முடியவும் இதை பற்றி பேசுவோம், ரொம்ப கவனமா கையாள வேண்டிய விஷயம் இது அனு “ என்று கூறிவிட்டார் சுந்தரம்.
மாப்பிள்ளை பற்றி கேள்வி பட்டவுடன், கண்ணம்மைக்கும் விருப்பம் என்று கூறிவிட்டாள்.
தகவல் உடனே பரிமாற்ற பட்டது. கோயம்பத்தூருக்கு குடும்பமாக சென்று பெண் பார்த்து பேசி முடித்துவிட்டனர்.
அடுத்த மூன்று மாதத்தில் திருமண தேதி குறிக்க பட்டது.
கதிர்வேலன் கண்ணமை இருவரும் கைபேசியில் தங்கள் நேரத்தை கழிக்க தொடங்கினார்கள். இருவரின் கலாட்டா பேச்சும் குறும்பு குணமும் ஒருவர் மேல் ஒருவருக்கு அதிகம் பிடித்தத்தை தந்தது.
error: Content is protected !!