Skip to content
Post Views: 1,515
வசுமதியைப் பார்த்த மதன் படியிறங்கி சாலைக்கு வந்துவிட்டான்.
“வசுமதி மேடம்.. நீங்களா? வாங்க வாங்க, இதுதான் எங்க வீடு!”
அவனையும் கூடவே வாசலில் சங்கரையும் பார்த்த வசுமதி விழித்தாள்.
“உனக்கு வசுமதியைத் தெரியுமா மதன்?” மதனிடம் கேட்டாள் ரமணி.
“தெரியாம என்ன? நான் இப்ப இருக்கிற வேலையே அவங்க வாங்கிக் கொடுத்ததுதான் மேடம். வசுமதி மேடம், இவங்க உங்க ரிலேஷனா? வாங்க ஒரு கப் காபி சாப்பிட்டுட்டுப் போலாம்.”
“இவங்க எனக்கு அம்மா… பெரியம்மா. அதுசரி, இவங்களும் மேடம்.. நானும் மேடமா?” முறைத்தாள்.
அப்போது காரிலிருந்து சரவணன் இறங்கி வர, சங்கரும் பரபரப்பாகி காருக்கு அருகே வந்தான்.
“சார், வாங்க வாங்க..”
மதன் ஓடிச்சென்று சரவணனின் கையைப் பிடித்துக்கொண்டான்.
“அன்னைக்கு நடந்தது எதையும் மனசுல வச்சிக்காதீங்க அங்கிள். இவ்ளோ தூரம் வந்துட்டீங்க, வீட்டுக்குள்ள வந்துட்டுப் போங்க. அப்பத்தான் வசுமதியும் வருவாங்க. ப்ரியா மேடம், நீங்களும் சொல்லுங்க ப்ளீஸ்.”
“ஏண்டி, அப்பாவும் வந்துருக்காங்கன்னு முன்னாடியே சொல்லவேண்டியதுதான?” வசுமதியைப் பார்த்து வார்த்தைகளை மென்றபடியே ரமணி, சரவணனைப் பார்த்தாள். சரவணன் மகளைப் பார்க்க,
“சரி, நீங்க உள்ள போங்க, நான் காரை அனுப்பிட்டு வரேன்.” என்றாள் வசுமதி. சரவணனும் ரமணியும் மதனோடு வீட்டுக்குள் நுழைய, பின்னால் வசுமதிக்காகக் காத்திருந்து, அவளுடன் வந்தான் சங்கர்.
மதனின் குதூகலத்தைக் கண்டு ரமணிக்கு வியப்பாக இருந்தது.
“பாட்டீ, இது யார் தெரியுமா..? இவர் பொண்ணுதான் எனக்கு வேலை வாங்கிக் கொடுத்தது.” ரசசியமான குரலில் சொன்னான். “இவர் நம்ம சங்கருக்கு மாமனார். இதோ வராங்களே.. இவங்கதான் வசுமதி. சங்கர் கட்டிக்கப்போற பொண்ணு.” இந்தச் செய்தியில் ஆடிப்போனாள் ரமணி.
‘அடிக்கள்ளச்சி..!’ என்பதுபோல வசுமதியைப் பார்த்தாள்.
“ஓ..! வாங்க வாங்க! சரவணனுக்கு வணக்கம் வைத்த பாட்டி, வசுமதியை அணைத்துக் கொண்டாள்.
“எங்க சங்கர் கொடுத்து வச்சவன்தான். இவங்க உங்களுக்கு சொந்தமாம்மா? ரமணியைப் பார்த்துக் கேட்டாள்.
“இது என் தங்கை மக. இவர் தங்கையோட வீட்டுக்காரர். புன்சிரிப்போடு சொன்னாள் ரமணி.
சரவணன், சங்கருக்கு அருகே உட்கார்ந்து கொண்டார். சங்கர் அமைதியாக இருந்தான். இந்தத் திடீர் சந்திப்பை யாரும் எதிர்பார்த்திக்கவில்லை. “வெளிநாட்ல இருந்து மதனைப் பார்க்க வந்தது நீங்கதானா ரமணிம்மா..? வேற எதோ பேர் சொன்னாரே.. என்ன மதன்?”
“ஆமா.. ரமணிப்ரியான்னு முழுப்பேரையும் யாரு சொல்றாங்க? இங்க ரமணின்னு சொல்வாங்க. அங்க ப்ரியான்னு கூப்பிடுவாங்க. அதான், நான் ப்ரியான்னு சொல்லியிருந்தேன்.”
“அங்கிள் உங்களுக்கு காபியா டீயா?”
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்ப்பா..”
“இல்ல இல்ல..”
பாட்டி காபி போட சமையலறைக்குள் போனாள். நீங்க ஏன் சிரமப்படறீங்க பாட்டி, நான் காபி போடவா?
பின்னாடியே வசுமதியும் சமையலறைக்குள் நுழைந்தாள்.
“இதுல என்னடா சிரமம் இருக்கு.. சரி நீயே போடு. உன் அப்பாவுக்கு எவ்ளோ சர்க்கரை போடணும்னு உனக்குத்தான் தெரியும்.” சகஜமாகப் பழகும் வசுமதியை பாட்டிக்கு ரொம்பவும் பிடித்துப்போனது.
மதனிடம் ஒரு ட்ரேயில் சில பிஸ்கட்டுகளை வைத்துக் கொடுத்துவிட்டாள் பாட்டி.
“ஸாரி.. எங்களால உங்க வீட்ல பிரச்சினை..” சரவணனைப் பார்த்து தர்மசங்கடமாக சொன்னான் சங்கர்.
“அதெல்லாம் இல்லை சங்கர், கலகம் பிறந்தாத்தானே முடிவு பிறக்கும். எல்லாம் நல்லபடியா நடக்கும்.”
அப்போது சங்கரின் மொபைல்போன் அடிக்க, அவன் எழுந்து பால்கனி பக்கம் போனான். இப்போது எதிரெதிரே ரமணியும் சரவணனும் மட்டும் அமர்ந்திருந்தார்கள்.
இருவருமே என்ன பேசுவதென்று தெரியாமல் அமைதியாக இருந்தார்கள்.
“நல்லாருக்கீங்களா அத்தான்?” ரமணிதான் முதலில் பேசினாள்.
“ம்ம்.. நீ மட்டுமா வந்த?”
“அவரும்தான் வந்துருக்கார், ஒரு கான்ஃபெரன்ஸுக்காக டெல்லி போயிருக்கார். வர மூணு நாளாகும்.
“பிள்ளைங்க?”
“அடுத்த வாரம் வருவாங்க.”
“ஓ!”
“சரவணத்தானுக்கு இப்பவே முன்னால வழுக்கை விழ ஆரம்பிச்சிடுச்சு போல?”
“உனக்கு என்கிட்ட என்ன கோபம்?” ரமணியின் கண்களைப் பார்த்தபடி அமைதியாகக் கேட்டார் சரவணன்.
“உங்க மேல எனக்கென்ன கோபம்..?” சற்றுநேரம் மௌனமாக இருந்துவிட்டுத் தொடர்ந்தாள்.
“இங்கவுள்ள ஆம்பளைங்க மனநிலையோடத்தான் கோபம்.”
“..?”
“கட்டிக்கிட்டு வாழப்போற பொண்ணோட அபிப்பிராயத்தைப் பத்தியெல்லாம் இங்க யாருக்கும் கவலையில்லையே.”
“என் பொண்ணோட விஷயத்துல நான் அப்படியில்லையே. அவளோட விருப்பப்படிதான் எல்லாமே நடக்குது.
அப்ப அப்படி நடந்ததுக்கு நீ உங்கண்ணன் மேலத்தான் கோபப்படணும்.”
“அண்ணன் மேலதான் கோபம். ஆனாலும் உங்கமேலேயும் எனக்கு வருத்தம்தான் அத்தான். அவர்கிட்ட கேக்குறதுக்கு முன்னாடி என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே? ஒருத்தரோட உணர்வுகளைத் தெரிஞ்சிக்காம இருந்துட்டமேங்குற குற்ற உணர்ச்சியோடவே நான் இருக்கணுமா?”
ரமணியின் கண்களை ஊடுருவிப் பார்த்த சரவணன், பழைய பதினேழு வயது ரமணியைத் தேடினார்.
“அந்தக்கால சூழ்நிலையிலும் நாம வளர்ந்த முறையிலும் அன்னைக்கு நான் அப்படிச் செய்யமுடியுமா? அப்படி நேரே உன்கிட்டப் பேசினா, வீட்டுப் பெரியவங்களுக்கு என்ன மரியாதை இருக்கு? நம்மளை நாமே அசிங்கப் படுத்திக்கிறமாதிரி ஆகாது?”
“அவருக்கு மரியாதையப் பார்த்தீங்க, கடைசியில உங்க மரியாதைதானே கெட்டுப்போச்சி. அன்னைக்கு நான் உள்ளேயிருந்து எல்லாத்தையும் கேட்டுட்டுத்தான் இருந்தேன். அது எனக்கு எவ்வளவு வேதனை தெரியுமா?”
ரமணி ஒருவித விரக்தியோடு பேசினாள்.
“சரி விடு, அக்காளைக் கொடுத்த எடத்துல நான் நெஞ்சை நிமிர்த்திப் பேசறது நல்லாவா இருக்கும்? அன்னைக்கு உள்ள நீ இருந்தது தெரியாம சுரேஷ் பேச்சை ஆரம்பிச்சதுதான் தப்பு. உனக்குத் தெரியாம நடந்திருந்தா அந்தச் சம்பவம் உன்னை இவ்வளவு பாதிச்சிருக்காது.”
கையில் காபி ட்ரேயுடன் இருவரையும் பார்த்துக்கொண்டிருந்தாள் வசுமதி. பாட்டி சமையலறையில் வேலையாய் இருந்தாள்.
“போதும். எல்லாத்தையும் மறந்துட்டு பழையமாதிரி சாதாரணமா இருக்கப்பாரு.” அடிக்குரலில் சொன்ன சரவணன், காபியை எடுத்துக்கொண்டு மதனும் சங்கரும் நின்றுகொண்டிருந்த பால்கனிப்பக்கம் போனார்.
“ரமணிம்மா காபி.”
“நான் இப்பத்தாம்மா டீ குடிச்சேன். சங்கருக்கும் மதனுக்கும் கொடு.”
“ம்ஹூம்.. குடிச்சே ஆகணும். இது நான் போட்ட காபி. அதுவுமில்லாம சண்டை முடிஞ்சதும் காபி குடிச்சா நல்லாருக்கும்.”
ரமணி முறைத்தாள். “நாங்க சண்டை போட்டோம்னு ஒனக்கு யாருடி சொன்னாங்க?”
“நான் பார்த்துட்டேனே! ஆனா.. நான் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.” என்ற வசுமதி, அவளுக்கு காபியை வைத்துவிட்டு ட்ரேயுடன் பால்கனிப் பக்கம் போனாள்.
சங்கரும் மதனும் காபி எடுத்துக்கொண்டார்கள். “சுமாராத்தாங்க இருக்கும். உங்க அம்மா போடற காபி அளவுக்கெல்லாம் எனக்கு வராது.” சங்கரைப் பார்த்து சொன்னாள்.
“அந்த மூதாட்டி.. உங்களையே வேலை ஏவிட்டாங்களா? மதன் வீட்ல, வசுமதி காபி போடலாமா?” அபிநயம் பாடினான் மதன்.
“ஏன், மதனுக்குக் காபி போட ஜனனிதான் வரணுமோ?”
“அச்சச்சோ!” அவள் வாயைப் பொத்த வந்து, பின் தன்னுடைய தலையில் கை வைத்தபடி சொன்னான் மதன். “ஏங்க.. ஏன் இந்தக் கொல வெறி?”
சங்கரும் வசுமதியும் சிரித்தார்கள். சரவணனும் சிரித்தார்.
“இங்கேயும் ஒரு காதல் கதையா?”
“ஆமா அங்கிள்.. ஆனா, அங்கேயும் உங்க கிராமத்து மருமகன் மாதிரி ஒரு கேரக்டர் வந்துடாம இருக்கணும். அதுக்கு நீங்கதான் ஆசீர்வதிக்கணும்.” அவர் முன் பவ்யமாகக் குனிந்தான்.
“அடப்போப்பா, ஒன் ஃப்ரெண்டுக்காகவே அவன் மூக்கை ஒடைக்கப் பார்த்த.. ஒனக்காகன்னா வர்றவனை அப்படியே பந்தாடிட மாட்ட?”
“அதெல்லாம் இல்ல அங்கிள்.. நான் ரொம்ப ஸாஃப்ட். அன்னைக்கு எதோ ஒரு வேகத்துல அப்படி ஆயிட்டு.”
“பெரிய மீட்டிங்கா ஓடுது? என்னை தனியா விட்டுட்டு, நீங்க எல்லாரும் சிரிச்சி சிரிச்சி பேசிட்டு இருக்கீங்களா?” ரமணியும் வந்துவிட்டாள். அப்போது சரவணனின் போன் சிணுங்கியது.
போனை எடுத்த சரவணன் அதிகம் பேசவில்லை. “இதோ கெளம்பிட்டோம்.. வந்துக்கிட்டே இருக்கோம்.” என்றபடி போனை வைத்துவிட்டு மகளைப் பார்த்தார். “சீக்கிரம் கார் புக் பண்ணும்மா. வீட்டுக்குப் போகவேண்டாமா?”
எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு மூவரும் கிளம்பினார்கள்.
“சரி சங்கர், ஞாயிற்றுக்கிழமை பார்க்கலாம்.”
சங்கரிடம் கணகளால் விடைபெற்றுக்கொண்டாள் வசுமதி.
மதனுக்கும் பாட்டிக்கும் மனசு நிறைந்திருந்தது.
****
error: Content is protected !!