Skip to content
Post Views: 3,028
மானுவும் ரித்தீஷும் அந்த பத்திர எழுத்தரின் ஆபிசில் உட்கார்ந்து இருந்தார்கள்.
மானுவை, அவன் முன்பு எடுத்துக் கொடுத்திருந்த ஒரு புடவையைக் கட்டிக் கொண்டு வர சொல்லியிருந்தான் ரித்து.
“உன் அம்மா கேட்டால், காலேஜ்ல ஒரு பங்க்சன், அதான் எல்லோரையும் சாரி கட்டிக் கொண்டு வர சொல்லியிருக்காங்கன்னு சொல்லிட்டு வா” என்றும் சொல்லியிருந்தான்.
வழக்கம் போலவே , மானு எதற்கு இங்கு வந்திருக்கிறோம் என்று அவள் ஒரு வார்த்தை கூட அவனைக் கேட்க வில்லை.
Advertisement
அவனிடம் ஏற்கனவே அவளின் ஆதார் உள்ளிட்ட சான்றிதழ்கள் அவளின் அப்பாவின் வேலைகளுக்காக என்று வாங்கியவை இருந்ததால் எல்லா ஏற்பாடுகளும் விரைவாக நடந்து விட்டிருந்தன!
ஏற்பாடுகள் என்றால், அவர்களின் பதிவுத் திருமண ஏற்பாடுகள்!
அது தான் அந்த பத்திர எழுத்தர் அவனுக்கு சொன்ன யோசனை!
Advertisement
ஒரு குடும்பத்திற்குள், அதாவது ஒரு கணவன் மனைவியின் பேரிலோ அல்லது ஒரு தந்தை மகன் பேரிலோ மாற்றும் சொத்துக்கு, ஆகும் பத்திர செலவு, அதுவே மற்றவர்கள் பேருக்கு மாற்றும் அளவு போல அதிகம் கிடையாது.
Advertisement
ஒரு சிறிய தொகை மட்டுமே நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்ற தகவலை அவனுக்கு சொன்ன அவர்,
“நீங்க கட்டிக்கப் போற பொண்ணு தானே தம்பி. பேசாம இப்ப உங்க கல்யாணத்தைப் பதிவு மட்டும் செய்து சட்டபடி அவங்கள உங்க மனைவியாக்கி விடுங்க.
ஒரு மாசமோ இல்லை ரெண்டு மாசம் கழிச்சு, அவங்க பேருக்கு அந்த வீட்டை செட்டில்மென்ட் பண்ணி விட்டுடுங்க, அதிக பத்திர செலவே இல்லாம!” என்றார்.
Advertisement
ரித்துவுக்கு முதலில் கொஞ்சம் தயக்கமாக தான் இருந்தது!
குட்டிமாவின் அப்பா இப்ப தான் இறந்திருக்கிறார். அதுவும் இல்லாமல் மம்மிக்கு தெரியாமல் இவ்வளவு பெரிய வேலையை செய்ய அவன் மனம் கொஞ்சம் யோசித்தது.
ஆனால் வேறு வழியில்லை. அவனின் மாமா சொன்ன அந்த வார்த்தை!
இல்லையில்லை! குட்டிமா கல்யாணம் ஆகி அவன் வீட்டுக்கு வரும் போது ஒரு வீட்டுக்கு சொந்தக்காரியாக தான் வர வேண்டும்!
பிற்காலத்தில் அவன் சம்பாத்தியத்தில் அவளுக்கென்று சொத்துக்கள் வாங்க தான் போகிறான் நிச்சயமாக!
ஆனால் இப்போது?
இதை தான் அவளுக்கு மாற்றிக் கொடுக்க வேண்டும்!
அவன் அவளுக்கு செய்யும் ஒரு கவுரவமாகவே இந்த ஏற்பாட்டை அவன் நினைத்தான்!
அதனால் முதலில் கொஞ்சம் யோசித்தாலும் பிறகு சரியென்றே அவன் சொல்லி விட, அவர் எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டார்!
தை மாதம்! நல்ல முஹூர்த்த நாள் வேறு.
அன்று பார்த்து ஏகப்பட்ட சொத்து பதிவுகள்!
ஒரே கூட்டம்!
சப் ரிஜிஸ்டரர் ஆபீசராக ஒரு நடுத்தர வயது பெண் இருந்தார்.
அவருக்கு மானுவின் அம்மா சத்யபாமா வயதே இருக்கும்!
ரொம்ப ஆச்சர்யமாக அவரின் பேரும் சத்யபாமா தான்!
மானு அதை கவனித்தாள்.
அவர் பார்ப்பதற்கு மிகவும் குடும்ப பாங்காக நெற்றி வகிட்டில் குங்குமம் நெற்றியில் விபூதி குங்குமம் அணிந்து இருந்தார்.
“நீங்க தான் மானஸாவா” என்று கேட்டார். அதே போல் ரித்துவிடமும் கேட்டார்.
கையில் இருக்கும் அவர்களது ஆவணங்களை சரி பார்த்தபடி!
அவரிடம் சம்பிரதாயப் படியான கல்யாணம் அடுத்த மாசம் தான்.
ஆனால் இப்போது விசா அப்ளை பண்ணுவதற்காக முன் கூட்டியே கல்யாணத்தைப் பதிவு செய்வதாக சொல்லியிருந்தார்கள் ரித்துவும் அந்த பத்திர எழுத்தரும்.
மானு மற்றும் ரித்துவின் அனைத்து ஆவணங்களும் சரியாகவே இருக்கவே அவர் மேற்கொண்டு எதுவும் கேட்காமல் அவர்களிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு அவர்களின் திருமணத்தைப் பதிவு செய்தார்.
இருவர் தரப்பு சாட்சிக்கும் அந்த பத்திர எழுத்தரே ஏற்பாடு செய்து இருந்தார். அவர்களும் கையெழுத்து இட்டனர்.
வெற்றிகரமாக அவர்கள் திருமணம் நல்லதொரு முகூர்த்த நாளிலேயே பதிவு செய்யப்பட்டது!
“நீங்க கிளம்புங்க தம்பி, நான் இன்னிக்கே சர்டிபிகேட் ப்ரூப் வாங்கி வந்துடறேன்” என்றார்.
கையெழுத்து போடும் போது கூட மானு எதையும் படித்துக் கூட பார்க்கவில்லை.
முதலில் ரித்து கையெழுத்து போட்டதைப் பார்த்தவள், கேட்டு கேள்வி எதுவும் இல்லாமல் அவளும் போட சொன்ன இடத்தில் கையெழுத்து போட்டாள்! அவ்வளவே!
பத்திர எழுத்தரிடம் விடைப்பெற்றுக் கொண்டு அவளை ஒரு ரெஸ்டாரண்ட் அழைத்து சென்று இனிப்புடன் சாப்பாடு ஆர்டர் செய்து சாப்பிட்டான்.
அன்று முழுவதும் வெளியில் வேலை இருக்கு என்று அவளிடம் சொல்லி இருந்ததால் மானு ஒன்றுமே கேட்காமல் அவன் அழைத்து சென்ற இடமெல்லாம் அவனுடன் சென்றாள்!
ஏற்கனவே அவள் அவனுடன் செல்லும் போது எங்கே போகிறோம் என்று கேட்கவே மாட்டாள் ஆரம்பத்தில் இருந்தே!
இப்போது வேறு அவள் அப்பாவின் இன்சுரன்ஸ், பிஎப் என்று பலவற்றிற்காக அவனுடன் ஆபீஸ் ஆபீஸாக ஏறி இறங்கி வருவதால் இப்போது சுத்தமாக் அவன் அழைத்து செல்லும் இடங்களுக்கு எல்லாம் பேசாமல் சென்று வருவதே அவளின் வாடிக்கையாகிற்று!
சாப்பிட்டு முடித்தவுடன், அவளை ஷாப்பிங் அழைத்து சென்று இருவருக்கும் புதிய துணிமணிகள் வாங்கினான்.
வாங்கிக் கொண்டு பைக்கில் அவனது புதிய பிளாட்டிற்கு அவளை அழைத்து சென்றான்.
போகும் வழியில் ஒரு டீக்கடையில் நிறுத்த சொன்னாள் மானு.
“ஹேய். குட்டிமா, மழை வர மாதிரி இருக்கு. பால் டீத்தூள் வாங்கிக்கோ, நாம் வீட்டில் போய் போட்டுக்கலாம்.
அங்கே இண்டக்சன் ஸ்டவ் கூட இருக்கு. கூட பால் பாத்திரமும்.
வீடு ஹான்ட் ஓவர் பண்றப்போ அந்த பில்டரின் ஒய்ப் இது எல்லாம் வாங்கி வந்து பால் காய்ச்ச எல்லா ஏற்பாடும் பண்ணினாங்க.
நீ தான் அன்னிக்கு வர முடியாம போச்சு!” என்று சொன்னான்.
அன்று அவளுக்கு முக்கியமான எக்ஸாம் இருந்தது! எனவே அவளால் வர முடியவில்லை அப்போது!
கடையில் தேவையானவற்றை வாங்கிக் கொண்டு வீடு சென்றார்கள்!
வா. குட்டிமா, இனி கொஞ்ச நாளில் இது உன் வீடு, உன் பேரில் இருக்க போகும் நம் வீடு என்று மனதுள் சொல்லிக் கொண்டு அவளை வீட்டிற்கு அழைத்து சென்றான் ரித்து.
வலது காலை எடுத்து வைத்து உள்ளே வர சொல்லி, வீட்டை சுற்றிக் காட்டினான்.
“புல்லி பர்னிஸ்டு(Fully Furnished) வீடு குட்டிமா. எல்லாமே அவங்களே வாங்கி வச்சுட்டாங்க பாரு. நாம அப்படியே குடி வர வேண்டியது தான்!” என்றான் ரித்து.
மானு வீட்டை ஆர்வமாக சுற்றிப் பார்த்தாள்.
“டீ கேட்டியே, இங்க இருக்கு பார் ஸ்டவ். இதில் பால் காய்ச்சு” என்று அவன் காண்பிக்க,
“உனக்கும் போடட்டுமா?” என்று கேட்டாள்
“நான் தான் டீ காபி எதுவும் குடிக்க மாட்டேனே குட்டிமா!
வேணுமின்னா பாலா கொடு. என் மம்மி என்னை டீ காபிக்கு பழக்கவே இல்லை!
காபி குடிச்சா நான் காக்காவா மாறிடுவேன்னு பயமுறுத்தி வச்சுருந்தாங்க நான் சின்ன பிள்ளையா இருந்தப்போ!” என்று சொல்லி சிரித்தான் ரித்து!
“என்ன காக்காவா மாறிடுவன்னு சொன்னாங்களா?” ரொம்ப நாளுக்குப் பிறகு கன்னம் குழி விழ சிரித்தாள் மானு!
“ஆமா, எங்க ஊர் கும்பகோணம். டிகிரி காபிக்கு ரொம்ப பேமஸ்!
என் வீட்டில் எல்லோரும், என் மாமாக்கள் எல்லாம் காபி வெறியர்கள்!
காபி குடிச்சு குடிச்சு என் நடு மாமாவுக்கு சீக்கிரமே முடியெல்லாம் நரைச்சுப் போச்சு! அதுவும் அவருக்கு கல்யாணம் ஆகும் முன்னேயே!
அப்புறம் அவருக்கு கல்யாணத்திற்கு பொண்ணு கிடைக்க கொஞ்சம் கஷ்டப்பட்டாங்களாம்!
அதான் என் மம்மி எனக்கு ஆரம்பத்தில் இருந்தே காபிக்கு பழக்கல!”
“அடேயப்பா!” என்று சொல்லி சிரித்தபடியே இருவருக்கும் பாலை சர்க்கரைப் போட்டு ஆற்றியவள், அவற்றை முதலில் சாமி மாடத்தில் வைத்து விளக்கேற்றி அதன் அருகில் கொஞ்சம் நேரம் வைத்து விட்டே எடுத்து வந்தாள்!
அவளை ஆச்சர்யமாக பார்த்தவன், புன்னகையுடன், “நல்லா ஆறட்டும் வை. நான் ஆறி தான் குடிப்பேன்!” என்றான்.
தனது பால் டம்ளரை எடுத்துக் கொண்டு ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டே குடித்துக் கொண்டிருந்தாள் மானு.
வெளியே எந்நேரமும் மழை வரலாம் என்பது போல இருட்டிக் கொண்டு வந்தது அந்த பிற்பகல் நேரத்திலேயே!
“நல்ல கிளைமேட் இல்ல?” என்ற ரித்துவின் குரல் அவள் கழுத்துக்குப் பின்னே வெகு நெருக்கமாக!
“ம்ம்.” என்று சொல்லி திரும்பியவளின் இதழ்களை சிறைப்பிடித்திருந்தான் ரித்து!
அவனது கைகளோ கணவன் உரிமையை இப்போது தயக்கமின்றி எடுத்துக் கொண்டிருந்தன!
அவனது திடீர் முத்தம் மற்றும் இந்த தொடல்கள் ஆச்சர்யப்படுத்தின மானுவை.
வெறும் முத்தத்தோடு மட்டுமே நிறுத்திக் கொண்டு மிகவும் கட்டுப்பாடாக இருப்பவன் ரித்து!
இன்று ஏன் இப்படி?
“என்னாச்சு ரித்து?” என்று அவளும் மெல்லிய குரலில் கேட்டாள்.
“ம்ம். எனக்கு இன்னிக்கு கசமுசா பண்ற மூட் பயங்கரமா வந்திட்டுது! என்ன பண்ணலாம்?” என்றான் குறும்பாக சிரித்தபடி.
“ம்ம். போ ரித்து. விளையாடாதே, நீ இப்படி சொல்றே, ரொம்ப ஆசைப்படுறேன்னு நான் ரெடின்னு சொல்லி நான் ஏதாச்சும் பண்ணுவேன்.
அப்புறம் அது சொதப்பிடும்! அப்புறம் அதை வச்சே என்னை ரொம்ப நாள் கிண்டல் பண்ணுவே!. போ.. “ என்று அவன் நெஞ்சில் செல்லமாக குத்தினாள் மானு.
“ஹேய். இல்ல குட்டிமா, நிஜமா தான் சொல்றேன்” என்றவனின் கைகளும் அவன் சொல்வது நிஜமே என்று காரியமாற்றிக் கொண்டிருக்க,
“நீ ஆசைப்பட்டா, நாம் மாட்டேன்னா சொல்லுவேன் ரித்து?” என்று சொல்லி அவனைக் கட்டிக் கொண்டாள் மானு.
பதிவுத் திருமணம் செய்து கொண்ட தைரியம், எதிர்காலம் பற்றி கொண்டிருந்த தன்னம்பிக்கை, இளம் வயதுக்கே உண்டான பயமின்மை மற்றும் அவன் வயதுக்கே உண்டான ஆசைகள், இளமை உணர்ச்சிகள் எல்லாம் சேர்ந்து அவனை ஒரு வழியாக்கி விட, புது வீட்டில் வைத்து அன்றே அவன் குட்டிமாவுடன் தன் குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்தே விட்டான் ரித்து!
தங்களுக்கு கல்யாணம் ஆகி விட்டது கூட தெரியாமலே, அவளின் ரித்துவின் மேல் கொண்டிருந்த அதி தீவிரக் காதல் மற்றும் நம்பிக்கையால் தன்னை அவனிடம் முழு சந்தோசமாகவே கொடுத்தாள் அவனின் குட்டிமா!
“தேங்க்ஸ் குட்டிமா!” என்றான் ரித்து.
அவன் நெஞ்சில் தலை வைத்து படுத்து இருந்தாள் மானு.
“லூஸு” என்றாள் அவன் முகம் நோக்கி நிமிர்ந்து பார்த்து!
“எப்படிடீ, கொஞ்சம் கூட தயங்கவே இல்ல? நான் கேட்டதும் உடனே சரின்னு சொல்லிட்ட? அவ்வளவு நம்பிக்கையா என் மேல?”
“பின்னே என்னை நானே சந்தேகப்படுவேனா? நீ வேற நா வேற இல்ல ரித்து!” என்றவளைக் இன்னுமும் இறுக்க கட்டிக்கொண்டு அவன் கிசு கிசுப்பாக சொன்னான்.
“குட்டிமா உனக்கு ஒண்ணு தெரியுமா? இன்னிக்கு நமக்கு கல்யாணம் ஆயிடுச்சு தெரியுமா?”
“என்ன?” என்று அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தில் அவன் முகம் பார்த்தாள் மானு!
“உலகத்திலே ஒரு இப்படி ஒரு டயலாக், இப்படி ஒரு சிச்சுவேசன்ல சொன்னவன் நான் மட்டுமா தான் இருப்பேன்!” என்று சொல்லி சிரித்தவன், “ஏய். லூஸு, இன்னிக்கு சைன் பண்ணியே அது எதுக்குன்னு தெரியுமா?”
“இல்லையே, நான் எதையும் படிச்சுப் பார்க்கல, நீ பண்ணினே, என்னையும் பண்ண சொன்னே! அவ்வளவு தான் தெரியும்! அது மேரேஜ் ரிஜஸ்டரேசனா? அடப்பாவி சொல்லவே இல்லை!”
“நீ என்ன தான் பார்த்த? அந்த ரிஜிஸ்டரர் மேடமை தான் அப்படி உத்துப் பார்த்துட்டு இருந்தே! நீ எதையும் படிச்சுப் பார்க்கல!
பார்க்காம தான் சைன் பண்ணினேன்னு நானும் கவனிச்சேன்!”
“அது.. அது அந்த மேடம் பேரும் சத்யபாமா, எங்கம்மா பேர்!
பார்க்கவும் எங்க அம்மா மாதிரி தான் இருந்தாங்க.
என் அம்மாவும் எல்லாரையும் போல இருந்து, படிச்சுட்டு இவங்க மாதிரி வேலையில் இருந்திருந்தா எப்படி இருக்கும்னு யோசிச்சுட்டு இருந்தேன் அப்போ!” அவள் முகம் கொஞ்சம் வாடியது.
மேலும் பேசினாள் அவள்.
“உங்கம்மா எல்லாம் நல்லா மெச்சூர்டாக இருக்காங்க. நல்லா படிச்சுட்டு, இப்போ உலகம் பூரா சுத்தி பிஸ்னெஸ் பண்ற பிஸ்னெஸ் உமனா இருக்காங்க!
உன்னை நல்லா பார்த்து பார்த்து வளர்த்துருக்காங்க! என் அம்மா அப்படியில்லையே!” அவளுக்கு அவள் அம்மா பற்றிய காம்ப்ளக்ஸ் மீண்டும் தலை தூக்க,
“ஹே, குட்டிமா, இப்படியெல்லாம் பேசக் கூடாது! அவங்க கொஞ்சம் விவரம் இல்லாம இருக்கலாம்.
ஆனா எனக்கு இந்த தேவதைய பெத்துக் கொடுத்த தெய்வம்!
அவங்கள அவங்க இயல்போட நான் பார்த்துக்குவேன் குட்டிமா!
எனக்கும் அவங்க அம்மா மாதிரி தான்!
இது மாதிரி எல்லாம் நீ பீல் பண்ணக் கூடாது இனிமே சரியா?” என்று அவள் நெற்றியில் முட்டினான் ரித்து!
முதன் முதலில் அவன் முத்தமிட்ட போது ஒன்ஸ்மோர் கேட்டவள், இப்போது இன்றும் ஒன்ஸ்மோர் கேட்டு செயலில் ஈடுபட வைத்தாள் அவனை இறுக கட்டிக் கொண்டு!
——
பதிவுத் திருமணம் செய்து விட்ட தைரியம் ரித்துவை, மானுவை பைக்கில் வைத்துக் கொண்டு அதிகம் பயமில்லாமல் சுற்ற வைத்தது.
அந்த ரமேஷ் கண்ணில் இவர்கள் பட்டாலும் இப்போது தான் அவர் கண்டு கொள்வதே இல்லையே!
ஊரில் அறுவடை நேரம் என்பதால் மாமாக்களும் அங்கு ஒரே பிஸி!
அவர்களால் ஒரு பிரச்சினையும் இப்போது இல்லை!
இடையில் ஒருநாள் அவர்களின் கல்யாண சான்றிதழை ப்ரூப் பார்த்து உறுதி செய்த பின் கொண்டு வந்து கொடுத்தார் அந்த பத்திர எழுத்தர்!
மானுவிடம் ஒரு செட் காபியை கொடுத்து பத்திரமாக வைத்துக் கொள்ள சொன்னான் ரித்து.
இப்படி இவர்கள் பைக்கில் சென்றதை பாபு அண்ணாவே ஒன்று இரண்டு முறை பார்த்து விட்டார்.
ஒரு நாள் நேருக்கு நேர் சந்திக்கும்படி ஆன போது, மானுவின் அப்பா சான்றிதழ்கள் வாங்குவது சம்மந்தமாக மானுவைக் கூட்டிக் கொண்டு செல்வதாக சொல்லி சமாளித்தான் ரித்து!
பாபு அண்ணாவால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.
மணியண்ணன் இறந்த போது கூட இருந்து உதவியவனை இப்போது ஒன்றும் சொல்ல முடியவில்லை!
மேலும் அவராலும் மானுவின் கூட சென்று அலைந்து அவளின் வேலைகளை முடித்துக் கொடுக்கவும் இயலாமல் போய் விட்டது.
இப்படி இருக்கும் போது அவனை எப்படி கண்டிப்பார்!
ஆனால் சும்மாவும் இருக்கவில்லை அவர்.
மானுவின் மாமாவிடம் விஷயத்தை சொல்லாமல், வந்து மானுவிற்கும் அவள் அம்மாவிற்கும் துணையாக கொஞ்ச நாள் இருக்கும்படி சொல்லி வர வைத்து விட்டார்!
அடுத்த சில நாட்கள், மானுவால் ரித்துவோடு வெளியே செல்லவே முடியவில்லை!
அவள் மாமாவே பிக்கப் டிராப் செய்தார் கல்லூரியில்!
ரித்து, கல்லூரி கேண்டீனில் வைத்து அவளைப் பார்த்து,
“ஈவனிங் ஊருக்கு போறேன் குட்டிமா. வர ஒரு வாரத்துக்கும் மேல ஆகும்!
இரண்டு நாள் கழிச்சு என் அப்பாவுக்கு திதி வருது. நான் தானே திதி கொடுக்கணும்.
இந்த முறை ராமேஸ்வரத்தில் போய் கொடுக்க மம்மி எல்லா ஏற்பாடும் பண்ணியிருக்காங்க.
அங்க சொந்தக்காரங்க வீடு இருக்கு.
கூட இரண்டு நாள் அவங்க வீட்டுலயே தங்கி இருந்துட்டு, அப்படியே தை அமாவாசையில் சித்திக்கும் அப்பாக்கும் தர்ப்பணம் செய்யணுமாம்.
நான் அங்க போயிட்டு போன் பண்றேன்.” என்று சொல்லி விட்டு சென்றான்.
ஒரு வாரம் கழித்து வந்தவன் முகம் அப்படியே இருண்டு கிடந்தது!
ஏதோ தாங்க முடியாத மன இறுக்கத்தில், துக்கத்தில் இருந்தான் அவன்.
மானுவின் மாமாவும் பத்து நாட்கள் கழித்து வருவதாக சொல்லி விட்டு அவர் ஊருக்கு சென்றிருந்தார்.
எனவே மானு ரித்துவுக்காக காத்திருந்தாள்.
பைக்கில் அவளை ஏற்றிக் கொண்டு இப்போது தங்கி இருக்கும் அவனது வீட்டுக்கு அவளைக் கூட்டி சென்றான் ரித்து!
வீட்டுக்குள் போனவுடன், அவளைக் கட்டிக் கொண்டான் ரித்து.
அவள் தோளில் அவனின் கண்ணீர் பட்டு ஈரமாக, அதிர்ந்து போய் அவனை நிமிர்ந்து பார்த்தாள் மானு.
அவனா அழுதுக் கொண்டு இருக்கிறான்?
“என்ன ஆச்சு ரித்து? நீயா இப்படி அழறே? என்னால நம்பவே முடியல!” என்று கேட்ட போதே அவளுக்கும் அழுகை வந்தது.
அவனை அணைத்துக் கொண்டே கூட்டி சென்று கட்டிலில் உட்கார்ந்தாள்.
அவள் மடியில் சிறு குழந்தையைப் போல படுத்துக் கொண்டு சத்தமில்லாமல் அழுதுக் கொண்டிருந்தான் ரித்து.
அவன் முதுகை வருடிக் கொடுத்து, தலையை கோதி விட்டு, ஆறுதலாக மென்மையான குரலில் மீண்டும் கேட்டாள். அவன் ராமேஸ்வரத்தில் நடந்ததை சொன்னான்.
கேட்ட மானுவும் மிகுந்த அதிர்ச்சியடைந்தாள்.
“சரி. விடு. ரித்து. நடந்தது, நடக்கிறது இனி நடக்கப் போவது எல்லாம் கடவுள் விருப்பமேன்னு எங்க அப்பா அடிக்கடி சொல்வாங்க.
நம்ம தலையில் என்ன எழுதியிருக்கோ அது தானே நடக்கும்!
ஆனா அந்த கடவுள் அன்னிக்கும் உன் பக்கம் தான் இருந்திருக்காரு பாரேன்!
இனியும் இருப்பார் ரித்து! கவலைப் படாதே!” என்று பெரிய மனுஷி மாதிரி பேசி அவளின் ரித்துவிற்கு ஆறுதல் கூறினாள் அவனின் குட்டிமா!
தன் ஆசை மனைவியிடம் அன்றும் ஆறுதலை தேடினான் குட்டிம்மாவின் கணவன்!
இரண்டாவது முறையாக, ஒரு மனைவியாக தன் கடமையாற்றி, அன்றும் தன்னைக் கொடுத்து அவனின் துக்கத்தைக் குறைத்து அவனுக்கு ஆறுதலானாள் அவனின் குட்டிமா!
error: Content is protected !!