Skip to content
Post Views: 2,767
அத்தியாயம் 30
அன்று மருத்துவனையில் இருந்து கொஞ்சம் சீக்கிரமாக வீடு திரும்பிவிட்டான் முத்து கருப்பன், விசாகா இன்னும் வந்திருக்கவில்லை.
Advertisement
‘இன்னிக்கு என்ன லேட் .. இன்னும் ஏன் வரலை விசாம்மா’ என்று யோசித்துகொன்டே வேகமாக ஒரு குளியல் போட்டுவிட்டு, ஒரு தேநீர் தயாரித்து வீட்டின் வெளி திண்ணையில் வந்து அமர்ந்து கொண்டான். வேப்ப மரத்தின் காற்று ஜில்லென்று வீசியது. அதை அனுபவித்து கொண்டே சற்று நேரம் அன்னத்திடம் தொலைபேசியில் பேசினான். பின் சாலாவிடம் கொஞ்ச நேரம் பேசினான்.
மணி எட்டாகியபோது.. இன்னும் வரலையே என்று யோசனையாக விசாகாவிற்கு அழைத்தான்.
Advertisement
Advertisement
‘நீங்கள் தொடர்புகொள்ளும் வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார்’ என்று வந்தது.
இவர்கள் கிராமத்தில் சிக்னல் கிடைக்கும். ஆனால் கொஞ்சம் உள்புறமாக இருந்த சில கிராமங்களில் டவர் கிடைக்காது.
Advertisement
‘எதாவது முக்கிய வேலையா இருக்கும், சமைச்சு வைப்போம்’ என்று அடுப்படிக்கு சென்று விரைவாக கொள்ளு ரசமும், கொள்ளு துவையலும் செய்து, சூடாக சாதமும் வடித்து வைத்தான்.
இன்னும் விசாகா வரவில்லை என்றதும் பதற்றமாக இருந்தது. வீட்டை பூட்டிவிட்டு சைக்கிள் எடுத்து கொண்டு புறப்பட்டான்.
வழியில் ஒரு பெரியவர், “ஆச்சி நல்லாம்பட்டி போறேன்னு சொல்லிட்டு இருந்துச்சு” என்ற தகவலை கூறினார்.
அது இவர்கள் ஊரில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கிராமம். ‘சரி, போய் காரை எடுத்துட்டே போய்டலாம்’ என்று மீண்டும் வீட்டிற்கு வந்து காரை எடுத்து புறப்பட்டான்.
இவன் வீட்டிற்கு செல்லும் வழியில் ,
“ஆச்சிக்கு அங்கே உள்ள ஆட்டுமந்தையில் இருந்து அழைப்பு வந்தது”
“கால்நடை மருத்துவர் பத்து நாள் மேலே விடுமுறையில் இருக்கிறாராம்”
“ முதல்ல அந்த ஆளை மாத்த சொல்லனும்”
“ஆத்திர அவசரத்துக்கு என்ன செய்றது..”
“வாயில்லா ஜீவங்களுக்கு சொல்ல தெரியுமா? பொறுக்க தான் முடியுமா?”
இப்படி சில்லரை சில்லறையாக பல தகவல் கிடைத்தது.
ஒன்று இரண்டு ஆட்டிற்கு உடல் நிலை சரியில்லை என்றால், சமாளிக்கலாம். சில சமயங்களில் மொத்த ஆட்டு மந்தைகளுக்கும் எதாவது நோய் வந்துவிடும். அதற்கான சிகிச்சை அளிப்பது கடினம்… நேரில் சென்று பாப்போம்.. எதற்கும், தனது முதல் உதவி பெட்டியையும், சில மருந்துகளையும் எடுத்து கொண்டு புறப்பட்டான்.
அந்த ஊரின் எல்லைக்குள் நுழையும் போதே, இவனை அடையாளம் கண்டுகொண்டு இருவர் வந்து அவனை அழைத்து சென்றனர்.
ஒரு வீட்டின் வாயிலில் சிறிய கூட்டம் இருந்தது. அங்கே தான் விசாகா கலங்கிய கண்களுடன் நின்றுகொண்டிருந்தாள்.
இவனை காணவும், வேகமாக இவனை நோக்கி வந்து,”அத்தான், அவசரத்துக்கு வெட்னரி டாக்டரை கூப்பிடவே முடியல.. தஞ்சவூருக்கும் புதுக்கோட்டைக்கும் தொடர்பு கொண்டு ஆள் அனுப்ப சொன்னா, ஆறு மணியில் இருந்து ஆள் வருவாங்க.. ஆள் வருவாங்கனு சொல்லிட்டே இருக்காங்க.. இன்னும் யாரும் வரவே இல்லை.. “என்றாள் பதட்டமாக.
ஒரு ஆடு குட்டி போடுவதற்காக சிரமப்பட்டு கொண்டிருந்தது.
கை வைத்தியம் எல்லாம் பார்த்து விட்டனர், இரட்டை குட்டிகள்.. சிக்கலான பிரசவம்.
தாய் ஆட்டை பார்த்தால், அரை உயிர் தான் இருப்பது போல இருந்தது.
‘எதாவது செய்யுங்கள்’ என்று யாசகமாக அனைவரையும் பார்த்தது.
முத்து கருப்பன் வேகமாக சென்று ஆட்டை பரிசோதித்தான். இன்னும் பத்து நிமிடம் தாமதமானாலும் உயிர் போய்விடும் என்று தெரிந்தது.
“இனி ஆட்டை எங்கயும் கொண்டு செல்வதற்கோ, கால்நடை மருத்துவர் வந்து சேர்வதற்கோ அவகாசம் இல்லை” என்றான்.
“ஒரு முயற்சி செய்து பார்க்கிறேன்.. அப்புறம் ஆண்டவன் விட்ட வழி என்று கூறி விரைந்து செயல்பட்டான்.
இவன் யூகித்து கொண்டு வந்திருந்த மருந்துகள் கை கொடுத்தது. சுடு தண்ணீர் கொண்டு வரும்படி கூறினான். அனைவரையும் சற்று விலகி இருக்குமாறு கூறிவிட்டு, மெதுவாக அதன் வயிற்று பகுதியில் மெதுவாக நீவி விட்டு, கொண்டு வந்திருந்த முதலுதவி பொருட்களை வைத்து அடுத்த பத்து நிமிடத்தில், குட்டிகளை வெளியே எடுத்துவிட்டான்.
முதலில் வந்த குட்டி, வெள்ளை நிறத்திலும் இரண்டாவது குட்டி கருப்பு நிறத்திலும் இருந்தது.
அனைவருக்கும் ஆசுவாசம். மதியத்தில் இருந்து சிரமமப்பட்ட ஆட்டை பார்த்து அனைவர் மனங்களும் கனத்திருந்தது.
பிறகு களைப்பாக இருந்த தாய் ஆட்டுக்கு கொஞ்சம் தண்ணீர் குடிக்க கொடுக்க சொன்னான்.
சுற்றி உள்ள அனைவரும் கை எடுத்து கும்பிட்டு நன்றி கூறினார்கள். “எங்க கருப்பண்ண சாமி தான் உங்கள அனுப்பி வைச்சிருக்காரு..” என்றார் ஒரு வயதான பெண்மணி.
விசாகா பிறந்த குட்டிகளை மெதுவாக தடவி கொடுத்தாள். “ஆச்சி ரொம்ப தவிச்சு போச்சு தம்பி.. கூட்டிட்டு போங்க.. எப்படியும் யாரையாவது வர வச்சிடலாம்னு ரொம்ப முயற்சி செஞ்சுச்சு..”
“நீங்க சொன்ன மாதிரி உங்க கருப்பண்ண சாமி காப்பாத்தி கொடுத்திட்டாரு. இனி ஒன்னும் பிரச்சனை இல்லை.. உங்களுக்கு தெரியாத பக்குவமா பாட்டி, பாத்துக்கோங்க” என்று கூறி விசாகாவை அழைத்து கொண்டு புறப்பட்டான்.
புறப்படும் முன், “பாட்டி, வெள்ளை குட்டி பேரு முத்து.. கருப்பு குட்டி பேரு கருப்பன், சரியா” என்று கூறி விடை பெற்றாள் விசாகா.
“ஏன் விசாம்மா, எனக்கு ஒரு போன் பண்ணி இருக்கலாம்ல”
“வெட்னரி டாக்டர் எப்படியும் ஏற்பாடு பண்ணனும்னு யோசிச்சிட்டே வேற யோசிக்கல அத்தான்.. நீங்க ஆட்டுக்கு பிரசவம் பாப்பீங்கனு எனக்கு தெரியாது அத்தான்..”
“எனக்கும் தெரியாது.. நாங்க பாக்கவும் கூடாது.. ஆனால் பத்து நிமிஷத்துல உயிரை விட போற ஜீவனை காப்பாத்த ஒரு முயற்சி செய்றதுல தப்பு இல்லைன்னு தான் முயற்சி செஞ்சேன். மருத்துவ துறைல இருக்கிறதனால கொஞ்சம் சுலபமா இருந்தது“
“ரொம்ப பதட்டமா போய்டுச்சு..” என்று கணவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
“அத்தான்.. முதலில் அந்த வெட்டனரி டாக்டர் மேல புகார் பண்ணனும்”
“நிச்சயம் பண்ணு .. ஒரு உயிரோட மதிப்பு தெரியாதவனை எல்லாம் மன்னிக்கவே கூடாது”
பேசிக்கொண்டே இருவரும் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். விசாகா குளித்து வந்ததும், இருவரும் சேர்ந்து உணவு உண்டனர்.
“அது என்ன, என் பேரை பிச்சி ரெண்டு குட்டிக்கும் வச்சிட்ட.. ஒரு குட்டிக்கு உன் பேரை வச்சிருக்கலாம்” என்றான் காதலாக.
“நான் வேறு நீங்க வேறு இல்ல க்ரீம் பன் அத்தான்” என்றாள் குழைவாக.
“நல்லா பேச கத்துகிட்ட.. என் செல்ல முத்தம்மா..” என்று அணைத்து கொண்டான் மனையாளை.
அதற்கு பிறகு அவர்களுக்கான தனிமை நேரம் தித்தித்தது.
“அத்தான் அடுத்த வாரம் கதிர் அண்ணா பையனுக்கு தொட்டில் கட்ட நம்மளயும் கூப்பிட்டு இருக்காங்க”
“ஆமாம், நேத்து பேசும் போது அன்னுமாவும் அத்தையும் சொன்னாங்க. இந்த முறை என்னால வர முடியாது விசா… மூனு அறுவை சிகிச்சை அந்த வாரம் இருக்கு. நீ மட்டும் போயிட்டு வந்துடரீயா?”
“சரி அத்தான்.. “என்றாள் உடனே.
அவன் வேலைகளை புரிந்து அதற்கேற்றாற் போல நடந்துகொள்வாள் எப்பொழுதும். அதே சமயம் இவளுக்கு வேலை இருந்தாள் முத்து கருப்பன் அதை அனுசரிச்சு போய் கொள்வான்.
கனவுகளும் இலட்சியங்களும் இவர்கள் காதலுக்கு இடையூறாக இருப்பதில்லை.. ஏனென்றால், இவர்கள் காதலுடன் இருவர் கனவுகளையும் இலட்சியங்களையும் அரவணைத்து கொண்டனர்.
error: Content is protected !!