Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

ஜன கண மன

அத்தியாயம் 1

ஏலே தினேசு எங்கடா போனவன்…? லீவு நாளு தானே ஏதாவது ஒத்தாச பண்ணக் கூடாதா?

அடுப்புக்கு சுள்ளி கிள்ளி பொறுக்கிட்டு வந்தா என்ன? நான் இன்னும் குமரியா? பவளக்கொடி மூச்சிரைக்க அடுப்பூதிக் கொண்டிருந்தார்.



Advertisement

ஈர விறகை ஊத… ஊதஅது அந்த கால கறுப்பு வெள்ளை சினிமாவின் தேவலோக காட்சி போல புகை மண்டலமாய் சூழ்ந்து கண் எரிச்சலை கிளப்பியது. கண்ணை கசக்கி கொண்டே பேரனை வசை பாடினார்

சரி பாட்டி நான் போய் மலைக்காட்டில் சுள்ளி பொறுக்கியாரேன்…. பதினொறு வயது தினேஷ் பாட்டி சொல்லுக்கு பணிந்து விறகு பொறுக்க போனான்.

தினேஷ் வசிப்பது கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையை ஒட்டிய சிறு கிராமம் “மணியார் பாளையம் ” அடிப்படை வசதியில் இன்னும் தன்னிறைவு பெறாத கிராமம். இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாய் நாகரிக வாடை வீச ஆரம்பித்திருக்கும் ஊர்.

Advertisement

அந்த ஊர் ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட கிராமம்.

Advertisement

பனை ஓலை வேய்ந்த வீடுகளும் , சீமை ஓடுகள் கொண்ட வீடுகளுமே அதிகம். விரல் விட்டு எண்ண கூடிய அளவு தான் மாடி வீடுகள்.

தினேஷ் அவ்வூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியின் ஆறாம் வகுப்பு மாணவன்.

தினேஷின் இரண்டாம் அகவையிலேயே அவன் தாய் கோகிலா தற்கொலை செய்து கொண்டாள்.

Advertisement

கணவன் மனைவி வாய் தகராறில் சிறு பாலகன் தான் பெற்ற செல்வத்தை மறந்து கணவனின் கடுஞ்சொல் பொறுக்காது அரளி விதை அரைத்து குடித்து உயிரை மாய்த்து கொண்ட கவரி மான் அவள்.

பிறகென்ன மனைவியை இழந்த கந்தவேல் அதாவது தினேஷின் தந்தை இரண்டு ஆண்டுகளுக்கு பின் வாசுகியை மணந்து கொண்டான்.

வாசுகி வழக்கமான வழக்கமாய் சித்தி புத்தியை காட்ட… குழந்தை பிராயம் கடக்காத தினேஷ் எதுவும் புரிந்தும் புரியாமலும் வளர தொடங்கினான்.

வாசுகிக்கு குமரன் பிறந்து விடவே அறவே தினேஷை வெறுக்க தொடங்கினாள்.

“எவளோ பெத்து போட்ட பிள்ளைக்கு தான் சேவகம் செய்வதா? “என்ற எண்ணம் அவளுக்குள் மிகுதியானது.

சிறுபிள்ளையான தினேஷிடம் கடுமை காட்டும் மருமகளை பவளக்கொடி கண்டிக்க தவறுவதில்லை.

வீட்டிற்குள் அடிக்கடி கேட்கும் கூச்சல்… வசைபாடும் நாசகரமான வார்த்தைகள் எல்லாம் ஆறு வயது சிறு பிள்ளையான  தினேஷை வெகுவாக பாதித்தது.

சற்று விபரம் தெரிந்து பள்ளிக்கு போக தொடங்கும் காலத்தில் சித்தி மேல் உள்ள பயம்,அடிக்கடி அவளிடமிருந்து வரும் மிரட்டல் எல்லாம் சேர்ந்து அவன் மனதை பிசைந்து அழுத்தம் கொடுக்க….

பெரிய மனிதன் போல் மனபாரத்தை குறைக்க  கால் போன போக்கில் நெடுந்தூரம் நடந்து போய் வருவான்.

மலை மீது வீற்றிருக்கும் வனபத்திர காளி கோயிலில் போய் அமர்ந்து விடுவான். அங்கு அச்சிறுவனுக்கு  ஏதோ ஒரு சந்தோஷம் கிடைத்தது.

யாருமற்ற ஏகாந்தம், பரந்த வெளி, அடர்ந்த காடு அந்த சிறுவனுக்கு பயத்தை கொடுப்பதற்கு பதிலாக பரவசத்தையே கொடுத்தது.

‘நடை’ அவனுக்கு பிடித்திருந்தது. அவன் பயம், கவலைகளை வெகுவாக குறைத்திருந்தது அவனது நடை பயிற்சி.

வாசுகிக்கு இரண்டாவது குழந்தை சரண்யா பிறந்துவிட தினேஷை தொல்லையாக நினைக்க தொடங்கி விட்டாள். அதற்கேற்றார் போல் கந்தவேலுக்கும் சரியாக கூலி வேலை கிடைப்பதில்லை.

கந்தன் வாசுகியோடு குழந்தைகள் மூவர்… அவனின் தாய் பவளக்கொடி தகப்பன் மூக்கையன் என ஏழு பேர் வயிற்று பாட்டுக்கு வருமானம் வேண்டுமே…?

இந்த சூழ்நிலையில் விபரமாக காய் நகர்த்தினாள் வாசுகி. இந்த ஊரில் வேலை வாய்ப்பு சரிவர கிடைப்பது இல்லை எங்க ஊர் கல்குவாரியில் வருஷம் முழுக்க வேலை கிடைக்கும் என்று கணவன் காதில் நிதமும் ஓதினாள்.

ஆம் கல்குவாரிகள் நிறைந்த எலச்சேரி கிராமமான அவள் பிறந்த ஊருக்கு சென்று விட முடிவு செய்தாள்… மூத்தாள் குழந்தையை தலை மூழ்கிவிட இது சரியான வாய்ப்பு என்று எண்ணினாள்.

ஆரம்பத்தில் மூத்த மகனை எண்ணி மறுத்து வந்த கந்தன் வேறு வழியில்லாமல் மனைவிக்கு இசைந்து விட்டான்.

விளைவு… கந்தன் வாசுகி மற்றும் இரண்டு குழந்தைகளோடு பஞ்சம் பிழைக்க மாமியார் ஊருக்கு குடியேற முடிவு செய்தான்.

கந்தன் எவ்வளவோ கெஞ்சினான் போறப்போ தினேஷையும் கூட்டிட்டு போயிவோம்.

உனக்கு கொஞ்சமாவது கூறு இருக்கா? எங்க ஆத்தா வீட்ல நம்மளை வச்சி தாங்கறதே பெருசு! இதுல இந்த பயலை எப்படி கூடிட்டு போறது?

எங்க அண்ணிகாரி கொடுக்கி… சும்மாவே நம்மளை இளப்பமா பார்ப்பா… கடுமையாய் ஆட்சேபித்தாள் வாசுகி.

நாம என்ன உங்க ஆத்தா அப்பனையும் நீ பெத்த ஆசை மவனையும் அம்போன்னா விட போறோம்? நாளு கிழமைக்கு வந்து போவோம்… வேணுங்கிறதை

வாங்கி கொடுப்போம் என்று அழகாய் பேசி கணவனை மடக்கி காரியம் சாதித்துக் கொண்டாள்.

பவளக்கொடி,மூக்கையன் என்ற முதியவர்களின் பொறுப்பில் வளரும் நிலைக்கு தள்ளப்பட்டான் தினேஷ்.

நூறு நாள் வேலைக்கு செல்வார் பவளம், இருபது ஆடுகளும் நாட்டு கோழியும் வைத்து வளர்த்து வயிற்று பாட்டை கௌரவமாகவே நடத்திக் கொண்டிருந்தனர்.

எப்போதாவது வந்து தலையை காட்டும் கந்தன் பெற்ற கடனுக்கு நூறு இருநூறு பவளம் கையில் திணித்து செல்வான். அதுவும் வாசுகிக்கு தெரியாமல் தான்.

நண்பர்கள் என்று அதிகம் யாருடனும் நெருங்காத தினேஷ் அன்பு பாசத்திற்கு ஏங்கி கால் போகும் திக்கில் மலை காடுகளில் சுற்றுவான்.

நடப்பதற்கு அவன் சற்றும் யோசிப்பதில்லை. கரடு முரடான மலை பாதைகளில் அவன் இன்முகமாய் நடப்பான்.

உயரமான மலையில் இருந்து கீழே இருக்கும் சமவெளியை பார்ப்பான். அண்ணார்ந்து எட்டாத உயரத்தில் இருக்கும் வானத்தை பார்ப்பான்.

தினமும் இது போல் வெவ்வேறு கோணங்களில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான் அவனுக்கு அலுக்கவோ சலிக்கவோ இல்லை என்பது ஆச்சரியமே…

“———————–“

அவன் பள்ளியில் ஆண்டுவிழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட தினேஷ் முதல் பரிசு வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தான்.

இதுவரை தினேஷ் என்று ஒரு மாணவன் படிக்கிறான் என்று பெரிதாக யாரும் அலட்டிக் கொண்டதில்லை. அவன் இருக்கும் இடம் தெரியாமல் இருந்து கொள்ளும் அமைதியான மாணவன். படிப்பிலும் சுமார் தான்.

அவன் அனாயாசமாக ஓடிய விதம் கண்டு PT ஆசிரியர் தங்கப்பன் அதிசயித்து போனார்.

ப்பா…என்ன ஒரு அசுரத்தனமான ஓட்டம்! மனிதர் இன்னும் பிரமிப்பில் இருந்து மீளவில்லை.

தினேஷ்… “உசைன் போல்ட் போல என்னமா மின்னல் வேகத்தில் ஓடற…! ” மனதார அவனை பாராட்டினார்.

உசேன் போல்ட்னா யாருங்க ஸார்? ஆர்வமாய் கேட்டான் தினேஷ்.

——தொடரும் ——

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!