Skip to content
Post Views: 14,681
நான் கேட்ட காலங்கள்!…
அத்தியாயம் 1
அது ஒரு சூப்பர் மார்க்கெட். நகராட்சிக்கு உட்பட்ட ஏரியா என்பதால் கடை சற்று பெரியது தான். எட்டு பேர் வேலை செய்கிறார்கள். நேரம் இரவு எட்டு நாப்பதை நெருங்கி கொண்டு இருந்தது. மக்கள் கூட்டம் குறையாமல் இருக்க, மனம் சோர்ந்தாள் நிறை. அவள் திருநிறை செல்வி.
தன் பெயரில் இருக்கும் விஸ்தாரம் வாழ்க்கையில் இல்லாமல் போனதால், பள்ளி படிப்பு முடிந்ததும் கடை வேலைக்கு வந்து விட்டாள். பொருட்களை பிரித்து அடுக்கி, பாக்கெட் போடும் வேலைக்கு தான் முதலில் அமர்ந்தாள்.எட்டு வருடம் ஓடி போக, தற்போது பில்லிங் செக்சனில் இருக்கிறாள்.
Advertisement
நிறை.. வீடு இருப்பதோ ஹைவே ரோட்டில்.. ஒன்பது மணிக்கு மேல் ஆட்டோ, பஸ் கிடைப்பது கடினம். நடந்து விடலாம், அரை மணி நேரம் தான். டவுன் என்பதால் இருட்டு பயம் கிடையாது. ஆனால், நம் நாட்டு குடிமகன்கள் பற்றிய பயம் அதிகம். அப்பா வீட்டில் தான் இருப்பார். வேலைக்கு போய் வரும் பெண்.. இரவில் தனியாக எப்படி வரும் என்று அழைத்து செல்ல வரலாம். எங்கே?…
தந்தைக்கு மகள் மேல் அவ்வளவு அக்கறை இருந்திருந்தால் இவள் ஏன் பள்ளி படிப்போடு வேலைக்கு வர போகிறாள். தானாக ஒரு பெருமூச்சு வர நிமிர்ந்து அமர்ந்தாள் பெண். அந்த இரவு நேரத்திலும் நிறைய பெண்கள் வீட்டுக்கு தேவையானவை வாங்க குவிந்து நின்றார்கள். அதிகம் வேலை விட்டு வருபவர்கள் தான். அவர்களையே ஆசையாக, ஏக்கமாக பார்த்து இருந்தாள் நிறை.
அவர்களும் வேலைக்கு போபவர்கள் தான். ஆனால், படித்த பெண்கள். உண்மையில் படிப்பு கொடுக்கும் அழகு தனி தான் போல… கருப்போ அல்லது சிகப்போ நல்ல படிப்பு, அதற்கு தகுதியான வேலை, சுயசம்பாத்தியம், நிமிர்ந்த நடை, தெளிவான முகபாவம் என்று படித்து, வேலைக்கு செல்லும் பெண்களை பார்த்தாலே, நிறைக்கு மனதில் ஒரு மரியாதை வரும். அவர்களை பார்த்தாலே சினேக புன்னகை தான்.
Advertisement
நிறையும் வேலைக்கு செல்லும் பெண் தான். ஆனால், படிப்பு தான் இல்லை. இங்கு பெண்கள் வேலைக்கு செல்லாமல் யார் தான் வீட்டில் இருக்கிறார்கள். காட்டு வேலையோ, கலெக்டர் வேலையோ… குடும்ப தேவை அதிகமாக.. எல்லோரும் ஓடி கொண்டு தான் இருக்கிறார்கள்.
Advertisement
ஆனால், படிப்பு. அதற்கு தகுந்த வேலைக்கு இருக்கும் மரியாதை.. தங்களை போன்ற ஆட்களுக்கு இல்லையே.. நிறையும் நிறைய பார்த்து இருக்கிறாள். இவங்க பேங்க்ல வேலை பாக்குறாங்க.. இவங்க டீச்சர்.. இவங்க தாசில்தார் அம்மா என்று படிப்போடு கிடைக்கும் வேலைக்கு இருக்கும் மரியாதை தனக்கு கிடையாதே…
அந்த படிப்பும் தகுதியும் இல்லாததால் தானே, சொந்த தாய்மாமன் கூட தன்னை தள்ளி வைத்தது. நினைக்கும் போது கண்ணில் நீர் முட்டிக்கொண்டு நின்றது. வேலையில் இருக்கிறோம் என்பதை மனதில் நிறுத்தி.. ஒரு பெருமூச்சு விட்டு தன்னை அடக்கி கொண்டாள். வாடிக்கையாளர்கள் கொஞ்சம் குறைந்தால் பரவாயில்லை. ஓனர்.. பெண் பிள்ளைகள் என்று கூட்டம் அதிகமாக இல்லாத நாளில் சீக்கிரம் வீட்டுக்கு அனுப்பி விடுவார். இன்று என்னவோ கூட்டம் அதிகமாக இருந்தது.
ஒன்பது மணிக்கு மேல் கடையை விட்டு வெளியே வர, எப்பவும் போல ஒரு ஆட்டோ கூட கிடைக்கவில்லை. மாலை ஐந்து மணிக்கு குடித்த டீ, நடையை எட்டிப் போட்டாள். கொஞ்சம் தள்ளி வந்ததும் நாலு, ஐந்து ஆண்கள் ஒன்றாக அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குள் ஏதோ சலசலப்பு வேறு.. திரும்பி பார்க்காமல் வேக வேகமாக நடந்து வந்தாள். உண்மையில் நிறைக்கு இரவும், தனிமையும் பயமுறுத்தவில்லை. இந்த மாதிரி குடிகாரர்கள் தான் அவளுக்கு பயமே.
Advertisement
தற்போது வரும் சர்ச் தாண்டி மூன்று தெரு கடந்தால் போதும், வீடு வந்துவிடும். சர்ச் கல்லறை மிக அமைதியாக இருந்தது இதுவரை ஒருநாள் கூட நிறை அங்கு பயந்ததில்லை. ஏனோ அங்கு அமைதி மட்டுமே இருப்பதாக ஒரு எண்ணம் அவளுக்கு.. உயிரோடு வாழும் இந்தப் போராட்ட வாழ்க்கைக்கு, இங்கு அமைதியாக உறங்குபவர்கள் அதிர்ஷ்டசாலிகள் தான்.. நினைத்துக் கொண்டாள் நிறை…
வீட்டு வெளி வாசலில் தாய் திலகா.. மகள் வரும் பாதை பார்த்து அமர்ந்து இருந்தார். முகம் களையிழந்து வாடி வதங்கி வரும் மகளைப் பார்த்து திலகாவுக்கு கண்களில் நீர் வந்தது. மகள் முகத்தில் இருக்கும் வாட்டம், வேலையால் வந்த அலுப்பு கிடையாது என்று கண்டு கொண்டாரோ…
நிறை எதையும் கண்டு கொள்ள வில்லை. முகம் கழுவி உடை மாற்றி வந்தாள். சாப்பாடு என்ன என்று பார்க்க.. காலையில் வடித்த சோறு தான் இருந்தது. பேசாமல் போட்டு கொண்டு அமர்ந்து விட்டாள். தங்கை வளர் கூட, தன் அக்காவை கவலையாக பார்த்தாள். எதையும் கணக்கில் கொள்ள வில்லை நிறை. உண்டு முடித்ததும், அறையில் பாயை விரித்து படுத்து விட்டாள். உறக்கம் வருமா தெரியாது. ஆனால், உறங்க தான் வேண்டும்.நாளைக்கு வேலைக்கு செல்ல வேண்டுமே…
கண்களை இறுக மூடி கொண்டு கிடக்க, வந்து விட்டார் தெய்வேந்திரன். ஏதோ ஒரு அரசியல் கட்சி பெயரை சொல்லி கொண்டு வெட்டியாக பொழுதை போக்குவார். அங்கு வேலை, இங்கு வேலை என்று ஓடுவார். வீட்டுக்கு என்று ஒன்றும் தேறாது. ஆனால், வெள்ளை வேட்டி, சட்டை என்று பார்க்க மட்டும் பந்தாவாக இருப்பார்.
வீடு அமைதியாக இருந்தது. எப்போதும் கத்தி கொண்டு இருக்கும் தொலைக்காட்சி கூட இன்று ஓட வில்லை. ஆளுக்கொரு பக்கமாக முடங்கி கிடந்தார்கள்.
“என்ன எல்லாரும் அமைதியா இருக்கீங்க?…” என்றவர், அங்கு டேபிளில் பழம் தட்டு, புடவை, மற்றும் கல்யாண பத்திரிகையை பார்த்தவர்.
“என்ன திலகா.. உங்க அண்ணன் வந்தாரா?…” மனைவி முழு அமைதி தான்.
“சொந்த தங்கச்சி வீடு. மொத பத்திரிக்கை நமக்கு தான் கொடுக்கணும். ஆனா, கொடுக்கல.. அதை கூட விடு. வீட்டுல நான் இருக்குற நேரம் பார்த்து வந்து மரியாதை செஞ்சு தான பத்திரிகை கொடுக்கணும்.. உங்க வீட்டு மாப்பிள்ளைக்கு கொடுக்குற மரியாதை இது தானா?…” என்றதும், திலகா முகம் உக்கிரமாக மாறி போனது.
“நாலு பழம், ஒரு டப்பா இனிப்பு. இது தான் கூட பொறந்தவளுக்கு செய்யிற முறையா? பட்டும், துணியும் கொண்டு வந்து தான் முறை செய்யணும். நீ ஒன்னுமே பேசலையா திலகா..” மனைவி முகம் அனலாக கொதிப்தை கண்ட தெய்வேந்திரன்.
“அந்த பட்டுக்கும், துணிக்கும் வக்கத்து ஒன்னும் நாம இல்லை தான். ஆனாலும்…” என்று கணவன் சொல்லும் போதே,
“ஆமா, வக்கத்து தான் நிக்கிறோம்…” கத்தினார் திலகா. முகம் கோபத்திலும், அழுகையிலும் சிவந்தது.
“திலகா…”
“வக்கு இல்லனு தான் என் சொந்த அண்ணன்.. தங்கச்சி மக என் பிள்ளை இருக்க, வெளில பொண்ணு எடுக்குது.. பெரியவ பிறந்ததும் திருநிறை செல்வின்னு பேரு வச்சு. என் வீட்டு மருமகன்னு வாக்கு கொடுத்த எங்க அண்ணன்.. இன்னைக்கு வெளி இடத்துல சம்மந்தம் பண்ண என்ன காரணம்?…”
“இரத்த சொந்தமுள்ள தங்கச்சியா இருந்தாலும் வம்சியா வாழலையே.. ஒரு தாய் வயித்துல பொறந்து வளர்ந்தாலும் வளமை இல்லையே?…”
“நான் ஒரு சிறுக்கி.. நம்ம அண்ணன்.. நம்மளை என்னைக்கும் கை விடாதுன்னு நினைச்சேன்” என்று மூக்கை சிந்த…
“பொண்ணு எடுக்காட்டி போறான் விடு திலகா. இந்த காலத்துல பொண்ணு கிடைக்காம அவனவன் அல்லாடுறான். நகையை நான் போட்டு கட்டி போறேன்னு ஊருக்குள்ள பலபேர் திரியுறாங்க. உங்க அண்ணன் மகன் தான் உசத்தியாக்கும்” என்று தெய்வமும் கத்த,
“வாய மூடு, நீ ஒரு வார்த்தை பேச கூடாது. கையாலாகாத ஆம்பளைக்கு வாக்கப்பட்டு, ரெண்டு பொட்ட பிள்ளையை பெத்து சீரழிஞ்சு போனேன். நீ மட்டும் ஒழுங்கா இருந்திருந்தா, பொண்டாட்டி பிள்ளைன்னு குடும்பத்தை பார்த்திருந்த.. பிறந்த வீட்டுல மதிப்பு இழந்து ஏன் நிக்க போரேன்”
“இப்போ உனக்கு என்ன குறைச்சல். உங்க அண்ணன் வீட்டுகா உங்களை பத்தி விட்டேன்” என்று எகத்தாளம் பேச,
“ஓ… அதை வேற செய்யு. நாங்களும் போயிட்டா நாதியத்து கிடக்கணும்” என்றவர், “
“அதுசரி உன்கிட்ட போய் பேசுறேன் பாரு என்னை சொல்லணும். ஊருல இருக்குற தகப்பன் எல்லாம் பிள்ளைகளை படிக்க வச்சு அழகு பார்த்தா… நீ வேலைக்கு அனுப்பி உன் குடும்பத்தை வளர்த்த.. அப்பவே ரோச படல. இப்ப உனக்கு என்ன கேடு வர போகுது. ஆனா, நான் பெத்தவ.. எனக்கு நெஞ்சு வலிக்குது. இருபத்தி ஆறு வர போகுது. இன்னும் கட்டி கொடுக்காம, வீட்டோட வச்சு இருக்கோம். நீ வெட்டி வாய் பேசி திரியிற. சும்மா இல்லாம பிள்ளை மனசுல ஆசையை வேற வளர்த்துட்டோம்” சொல்லும் போதே அழுகை வந்தது திலகாவுக்கு…
நெஞ்சை அழுத்தி கொடுத்தாள் நிறை. தாய் மாமன் மகனுக்கு கல்யாணம். அந்த மாமன் மகன் வெறும் உறவாக அல்லாமல், இவளின் உயிராக இருந்தது தான் பிரச்சனையே…
ஐந்து வருட காதல். அத்தி பூ போல மனதில் பொத்தி பொத்தி வளர்த்தது. காதல் என்று அடிக்கடி வெளியில் செல்வதோ, மணிக்கணக்காக போன் பேசுவதோ கிடையாது. ஒருவருக்கு ஒருவர் தான் என்று பெரியவர்கள் சொல்லி, மனதில் நினைத்து, கண்களில் கனவுகளோடு காத்து கிடந்தாள். எல்லாம் பொய்த்து போனது. சொந்தமே, இல்லாதவர்கள் என்று ஒதுக்கி விட்டது.
வெளியே தாய் ஒப்பாரி வைத்து கொண்டு இருக்க, கண்ணை இறுக மூடி படுத்து கொண்டாள்.
“அண்ணன் வீட்டுல மூணு ஆம்பளை பிள்ளைக. ஒருத்தியவாது கட்டி கொடுக்கணும்ன்னு நினைச்சு கிடந்தேன். மூத்தவனுக்கு தாரேன், இளையவனுக்கு தாரேன்னு கூட பிறந்தவனே முதுகுல குத்திட்டான்…” திலகா அழுகை தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.
உண்மை தான். வீரபாண்டி அப்படி தான் தங்கைக்கு வாக்கு கொடுத்தார். ஆட்டுகார வீரணன் என்றால் அந்த ஊரில் தெரியாத ஆட்களே கிடையாது. ஓரளவு வசதியோடு, சொத்துக்களும் சில உண்டு. வீரணன், கல்யாணி தம்பதிகளுக்கு மூன்று ஆண் மக்கள். அவர்கள் குடும்ப வழக்கப்படி வீர சிவா, வீர ராகவன், வீர பிரபாகரன்.
வீட்டில் மூன்றும் ஆண் மக்களாக போக, கல்யாணிக்கு நாத்தி மகளை தனக்கு மருமகளாக கொண்டு வர அவ்வளவு ஆசை. நிறையை தூக்கி வளர்த்ததே அவர் தான். சிறு வயதில் விவரம் புரியா விட்டாலும், அந்த வீட்டில் உரிமையாக தான் வலம் வந்தாள் நிறை.
தெய்வேந்திரன் ஒரு நிலை இல்லா மனிதர். ஆரம்பத்தில் மளிகை கடை நடத்தினார். அதை கொண்டு மணம் முடித்து இரு பெண் பிள்ளைகள் வந்ததும், ரியல்எஸ்டேட் பக்கம் சென்றார். திலகாவுக்கு தொழில் விவகாரம் எல்லாம் எதுவும் தெரியாது. குடும்பம் பிள்ளைகள் என்றே இருந்தவர். நிறை, தன் பள்ளி படிப்பை முடித்த பின் வந்தது பிரச்சனை. நிறைய கடன் போல.. ஒரு விவரமும் தெரியவில்லை திலகாவுக்கு… பெரிய கலவரமாக கையில் இருப்பதை எல்லாம் விற்றுத்தான் கணவனை மீட்டு வர முடிந்தது. ஏதோ தன் பிள்ளைகளுக்கு அப்பா என்று ஒருத்தன் வேண்டுமல்லவா? ஆனால், அதன்பின் தான் உண்மையான பிரச்சனை ஆரம்பித்தது. தெய்வேந்திரனுக்கு பித்த பையில் தொந்தரவு வர, வீட்டோடு முடங்கி விட்டார். பிழைக்கும் வழி இல்லாமல், நிறையை அருகில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டுக்கு வேலைக்கு அனுப்பி வைத்தார் திலகா.
“கொஞ்ச நாள் மட்டும் போ.. உங்க அப்பா நல்லா வேலைக்கு போனதும், உன்னை நிப்பாட்டிட்டு காலேஜுக்கு அனுப்புறேன் நிறை” என்ற வாக்குறுதியோடுதான் வேலைக்கு அனுப்பி வைத்தார்.
நிறை வேலைக்கு போன கொஞ்ச நாளில், அந்த ஹைவே ரோட்டிலே திலகாவும் ஒரு சின்ன பழக்கடையை தொடங்கினார். வியாபாரம் பெரிதாக இல்லாவிடினும், மாதம் கிடைக்கும் நிறையின் முழு வருமானம் அந்தக் குடும்பத்திற்கு போதுமானதாக இருந்தது.
மனைவியும், மகளும் குடும்பத்திற்கு என்று உழைக்க.. தான் உழைக்கும் எண்ணத்தை முழுதாக கைவிட்டார் தெய்வம். அத்தோடு ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து வெட்டி நியாயம் பேசிக்கொண்டு, ஊர் வம்பு வாங்கி கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் சொல்லிப் பார்த்த திலகாவும் அலுத்து போக விட்டுவிட்டார். ஓரளவு கடனிலிருந்து மீண்டு வரும்போது சின்ன மகள் கல்லூரி செல்ல தயாராக இருந்தாள்.
ரெண்டு பெண் பிள்ளைகளை தன்னால் படிக்க வைக்க முடியுமா என்று யோசித்த திலகம்.. மூத்தவளை எப்பவும் போல வேலைக்கும், சின்னவளை கல்லூரிக்கும் அனுப்பி வைத்தார். அவர் மனதில் ஒரு அசால்ட் இருந்தது உண்மைதான். எப்படியும் தன் அண்ணன் வீட்டுக்கு தான் போகப் போகிறாள். வேற என்ன என்ற நினைவும் கூட…
மூத்தவன் வீரசிவாவுக்கு கட்டலாம் என்று பெரியவர்கள் நினைத்திருக்க, ஜாதகம் பொருந்தி வரவில்லை. அப்போது திருமணம் செய்யும் எண்ணமும் நிறைக்கு பெரிதாக இல்லை. அப்போதைய வீட்டின் சூழல் மிக மோசம். அதன்பின் தான் வீரராகவனுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று பெரியவர்கள் முடிவெடுத்தது.. பொதுவாக பேசித்தான் முடிவு செய்தார்கள். மறைத்து எல்லாம் இல்லை. அதனால் எல்லோருக்கும் தெரியும். ஒரு இள வயது பெண்ணுக்குரிய கல்யாண கனவுகளோடு தன் மனதில் காதல் வளர்த்தது வீரராகவன் மேல் தான்.
ராகவனுக்கும் அப்படியே தன் அத்தை மகள் மேல் விருப்பம் உண்டு. பொதுவான விசேஷங்களில் பார்க்கும் பொழுது, தான் கட்டிக் கொள்ளப் போகும் பெண் என்று உரிமையாக பேசுவான். சில நேரங்களில் அவளைப் பார்க்கவே வீட்டுக்கும் வருவான்.
அப்பொழுதெல்லாம் திலகா உணவு எடுத்து வைத்த பின் வெளியே சென்று விடுவார். கல்யாணம் செய்து கொள்ளப் போறவர்கள் எண்ணவும் பேசுவார்கள் என்று.. இந்தப் பேச்சுவார்த்தை உடைந்து போகும் என்று யாரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஊரில் இருக்கும் பொழுதெல்லாம் அடிக்கடி இவள் வேலை செய்யும் கடைக்கு வருவான். சின்ன சின்ன உணவு பண்டங்கள், பூ, வளையல் என்று ஏதாவது வாங்கிக் கொடுப்பான்.
இவர்களின் கல்யாணப் பேச்சு வார்த்தை முறிவு எங்கு தொடங்கியது என்றால், வீரராகவன் கவர்ன்மெண்ட் ஆபிஸர். படித்து பரீட்சை எழுதி வேலைக்கு சென்றவன். திருநிறை செல்வி அப்படி அல்ல. பள்ளி படிப்பை மட்டுமே முடித்தவள். ஒரு மளிகை கடையில் பொருட்களை அடுக்கி வைக்கும் வேலை பார்ப்பவள். சொத்து என்று சொல்லிக்கொள்ள எதுவும் கிடையாது. நகையும் பெரிதாக செய்ய மாட்டார்கள். சொந்தம் என்ற ஒன்றைத் தவிர ஒரு கவர்மெண்ட் ஆபீஸர்க்கு மனைவியாக வர என்ன தகுதி இருக்கு?…
இந்த நியாயம் எல்லாம் முன்பு தெரியவில்லை போல… வீரராகவன் கவர்ன்மெண்ட் ஆபிஸர் என்றதும், சொந்தத்தில் பெண் கொடுக்க பலர் தயாராக நிற்க. மனம் தடுமாறினார் வீரணன். கல்யாணிக்கு, நிறை என்றால் கொள்ளை பிரியம். அவர் எப்படியும் நிறையோடு ராகவன் கல்யாணத்தை முடித்து வைக்கவே நினைத்தார். ஆனால், வீரணன் மனம் மாறிவிட்டார். இவருக்கு ஒன்னு விட்ட தங்கை மகளான சினேகாவை மகனுக்கு பேசி முடித்தார்.
“வேணாங்க சொன்னா கேளுங்க. உங்க சொந்த தங்கச்சி மக.. ஒரு பொம்பள புள்ள மனசுல ஆசையை வளர்த்து விட்டு, அதை கெடுக்க கூடாது. நமக்கு பொம்பள புள்ள இல்லன்றதுக்காக, அடுத்த வீட்டுப் பிள்ளைக்கு என்னவும் செய்யலாமா? நாம தூக்கி வளர்த்த பிள்ளை நிறை. அவளுக்கு கெடுதல் நினைக்க கூடாதுங்க” மன்றாடினார் கல்யாணி.
“புரியாம பேசாத கல்யாணி. தங்கச்சி மகளுக்கு நியாயம் செஞ்சா.. நம்ம மகனுக்கு அநியாயம் செஞ்ச மாதிரி ஆகாதா? அவன பெத்து வளர்த்து நல்ல முறையில் படிக்க வைத்து வேலை வாங்கி கொடுத்த நாமளே நல்ல வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டாமா? என் மகன் வாழ்க்கையை யோசிச்சு தான் இந்த முடிவு எடுத்தேன்” ஆணித்தனமாக சொன்னார் வீரணன்.
“நம்ம நிறைக்கு என்ன குறை?”
“பேரு மட்டும்தான் நிறையா இருக்கு. நம்ம மகனுக்கு தக்க படிப்பு இருக்கா? அழகு இருக்கா? வசதி இருக்கா? அந்தஸ்து இருக்கா? இப்போ இருக்கிற எல்லாரும் அவங்க படிப்பு, வேலைக்கு தக்கதான் பொண்ணவே தேர்ந்தெடுக்குறாங்க.. அதே மாதிரி என் மகனுக்கு பார்த்தேன். இதுல என்னத்த கெட்டதை கண்ட? என் தங்கச்சி மகளாவே இருந்தாலும் அங்க என்ன இருக்கு?”
“கூட, குறைய இருந்தாலும் அனுசரிச்சு இழுத்துக்கு போறது தானங்க சொந்தம்” என்றார் கல்யாணி.
“அதெல்லாம் நம்ம காலம் கல்யாணி. இப்ப எல்லாம் அப்படி பார்த்து முடிவு பண்ண மாட்டாங்க. என் மகனுக்கு நல்ல வாழ்க்கை அமையனும். சட்டி நிறைய பால் இருந்தாலும், கையளவு உறை மோர் இருந்தா தான், அது தயிராகும். அதே மாதிரி தான், நம்ம மகன் வேலைக்கு போனாலும், வர்ற புள்ள ஏதோ ஒன்னு ரெண்டு கொண்டு வந்தா தான் அவங்க வாழ்க்கை நல்லா இருக்கும்” என்றார் வீரணன்.
“சரி தாங்க உங்க புள்ள மனசுலையும் என்ன இருக்குன்னு கேட்டுக்கங்க” அவருக்கு மகன் மேல் நம்பிக்கை.
“நீ என்ன சொல்ற ராகவா?” என்று தந்தை கேட்க. பதில் சொல்ல முடியாமல் தடுமாறினான் ராகவன்.
“எங்க அயித்த மகளை தான் கட்டுவேன்னு சொல்லுடா” என்றார் கல்யாணி.
அவனுக்கே கொஞ்சம் குழப்பம் தான். தந்தை சொல்வது உண்மைதானே என்று நினைப்பும் ஓடியது.
“இங்க பாரு ராகவா.. பெத்தவங்க உனக்கு கெட்டது நினைக்க மாட்டோம். என் சொந்த தங்கச்சி தான் இருந்தாலும் சொல்றேன். அங்க என்ன சரியா இருக்கு.. ஒண்ணுத்துக்கும் ஆகாத அப்பன். என் தங்கச்சி பாக்குற வருமானத்துக்கு மாப்பிள்ளைன்னு உனக்கு என்ன செய்யும்? தாலுகா ஆபீஸ்ல வேலை பாக்குற நீ, மளிகை கடையில வேலை பாக்குற பிள்ளையை கட்டினால் கௌரவமா? சொந்தத்தை காரணம் காட்டி சும்மா தான் கட்டித் தருவாங்க”
“அதோட விட்டால் கூட பரவாயில்லை. நீ தான் அவங்களை முழுசா பார்க்கணும். இன்னொரு கல்யாணம் ஆகாத பிள்ளை இருக்கு. உனக்கும் பெருசா செய்ய மாட்டாங்க உன்னைய வச்சு தான் அவங்க வாழ பாப்பாங்க” என்றார் தந்தை.
“என்னங்க, உங்க சொந்த தங்கச்சி குடும்பத்தை நீங்களே இப்படி பேசுறீங்களே” ஆதங்கமாக வந்தது கல்யாணிக்கு வார்த்தைகள்.
“அதுதான் நிஜம் கல்யாணி. நாளைக்கு அந்த குடும்பத்தை இவன் தோளில் தான் வச்சிருவாங்க. அப்படிப்பட்ட ஆள் தான் அந்த தெய்வம்” என்றதோடு,
“நம்ம சினேகா எம் காம் முடிச்சிருக்கு, அறுபது பவுன் நகை போடுறாங்க, புல்லட் வாங்கி தாராங்க. நாளைக்கு அந்த பொண்ணு படிப்புக்கு தக்க வேலைக்கு போகும், வருமானமும் வரும். நம்ம பிள்ளைங்க நல்லா வாழ்வாங்க கல்யாணி” முடிவாக வீரணன் சொல்லிவிட்டார்.
ராகவனுக்கு யோசித்துப் பார்க்கும் பொழுது தந்தை சொல்வது தான் சரி என்று பட்டது. அத்தோடு அவனோடு வேலை பார்க்கும் ஆட்கள் எல்லாம், அவர்கள் படிப்புக்கு ஏற்ப தான் திருமணம் முடிப்பதும்.. இவ்வளவு படித்து வேலை பார்க்கும் தான் எப்படி, படிக்காத பெண்ணை திருமணம் செய்வது? ஆனாலும் நிறைய நினைத்து தடுமாறிய மனம். சினேகாவின் தந்தை பேச்சிலும், அவளின் அடக்கமான அழகிலும் மயங்கினான்.
இவன் ஒன்றும் காதல் சொல்லி ஏமாற்றவில்லையே.. பெரியவர்கள் பேசி வைத்தார்கள். அதைக் கொண்டு மனதில் சின்ன விருப்பம். இப்பொழுது அவர்களே வேண்டாம் என்கிறார்கள். வீட்டில் பெரியவர்கள் முடிவு செய்தால் வேறு என்ன சொல்ல என்று தன் மனதை தானே சமாதானம் செய்து கொண்டான்.
நிறைக்கு தன் மேல் இருக்கும் ஆசை தெரிந்தாலும், தந்தையை காரணம் காட்டி தன் மனதை மறைத்துக் கொண்டான். ராகவனின் பார்வையும், உரிமையான பேச்சும் கொடுத்த நம்பிக்கையில் திருநிறை செல்வி தைரியமாக இருக்க, அவனின் நிச்சயதார்த்த அழைப்பு வந்து நிலைகுலைய செய்தது.
பெரியவங்க விருப்பப்பட்டோம் ஜாதகம் சரியில்லை என்று பொதுவில் சொல்லி உறவில் விழுந்த விரிசலை வெளியில் தெரியாமல் பார்த்துக் கொண்டார் வீரணன்.
இரவு முழுக்க அழுத தடம் தெரியாமல் மறுநாள் காலையில் எதுவும் நடக்காதது போல வேலைக்கு கிளம்பி விட்டாள் திருநிறைச்செல்வி. திலகாவுக்கு மகளின் கல்யாண ஆசையோடு சொந்தமும் முடிந்துவிட்ட வலி. என்னதான் அண்ணன் வீட்டில் மூன்று ஆண் மக்கள் இருந்தாலும், முதல் இருவர் மட்டுமே நிறைக்கு மூத்தவர்கள். வீர பிரபாகரன் நிறையை விட எட்டு மாதங்கள் இளையவன்.
நிறை வேலை பார்க்கும் கடைக்கு பக்கத்தில் இருக்கும் கோவிலில் தான் திருமணம். வரவேற்பு சற்று தள்ளி இருக்கும் பெரிய மண்டபத்தில் வைத்திருந்தார்கள். கோவில், மண்டபத்திலிருந்து, மெயின் ரோட்டில் இருக்கும் திலகா வீட்டில் இருந்து சற்று தள்ளி உள்ளே செல்லும் ராகவனின் ஊர் வரை பெண், மாப்பிள்ளை கட்டவுட் தான். பார்க்கக் கூடாது என்று நினைத்தாலும் அவளின் கண் ஜோடியாக நிற்கும் மணமக்களவே பார்த்தது.
ஐந்து வருடமாக மனதில் வைத்து பூஜித்த முகம். இந்த சிரித்த கண்கள் அவள் மனதில் எத்தனை ஆசைகளையும், கனவுகளையும் விதைத்தது. என்னென்ன மனதில் நினைத்து வைத்திருந்தாளோ பெண்.. ரோடு என்று நினைக்காமல் உருண்டு புரண்டு அழுக தோன்றியது.
ஆனால், அவளின் அடைக்கலம் இருட்டும், குளியல் அறையும் மட்டும்தான். அவள் சுதந்திரமாக அழும் இடம். கடவுள் தனக்கு ஏன் இவ்வளவு பெரிய அநியாயத்தை செய்தார்.
பதினெட்டு வயதிலே தந்தையின் கடன் சுமை, குடும்ப பொறுப்பு, தங்கையின் படிப்பு, என்று வறுமையிலும், கஷ்டத்திலும் மட்டுமே உழன்றவளுக்கு கல்யாண வாழ்க்கை மறு வாழ்வாக இருக்கும் என்று நினைத்தாள். இனிமேலாவது சந்தோஷ வாழ்வை காண மாட்டோமா? நம்பிக்கையான எதிர்காலத்தை நோக்க மாட்டோமா? சுதந்திரமான வாழ்வு கிடைக்காதா என்று கல்யாண வாழ்க்கையை ஒரு பெரும் வரப்பிரசாதமாக நினைத்திருக்க.. கையில் கிடைத்த உணவு, வாயில் கொண்டு செல்லும் முன் மண்ணில் விழுந்த கதையாகி போனது.
error: Content is protected !!