Skip to content
Post Views: 11,025
நீங்காத உறவே!…
அத்தியாயம் 3
வீரணின் தாய் கொஞ்சம் ஒடிசலான உடல்வாகு கொண்டவர். ஆஸ்துமா தொந்தரவு உண்டு. சிறுவயதில் பிரபாகரனும் சளி காய்ச்சல் என்று பெரிய அவதிக்கு உள்ளாவான். எங்கே அவன் அப்பத்தாவின் வியாதி வந்து விட்டதோ என்று நினைப்பார்கள். ஆரம்பம் முதலே அப்பாவிடம் ஒட்டுதல் இல்லை. அவன் உடல்வாகும் அப்பத்தாவை கொண்டே பிறந்திருக்க, நோஞ்சான் உடம்பு என்று கல்யாணி மகனை கைக்குள்ளே வைத்திருப்பார். அதுவும் ஏழு மாதத்தில் பிறந்த சவலை பிள்ளை வேறு. ரொம்பவும் பயந்தவன்.
விவசாயமும், ஆட்டு வியாபாரமும் தெரிந்த வீரணுக்கு படிப்பின் மீது பெரிய மரியாதை. அதுவும் கால் காசு என்றால் கவர்ன்மென்ட் காசாக தான் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்.
Advertisement
பிள்ளைகள் எப்படியும் படித்து அரசு வேலைக்கு போக வேண்டும் என்று அதிக கண்டிப்பு காட்டுவார். ஆரம்பம் முதலே பிள்ளைகளிடம் அரசு வேலையே முக்கியத்துவம் வாய்ந்ததாக ஊட்டி வளர்த்தார். பெரிதாக செல்லம் கொஞ்சியெல்லாம் பிள்ளைகளை வளர்த்ததில்லை. பட்டென்று கை நீட்டும் ரகம் தான். அதில் மிக பயந்தவன் வீர பிரபாகரன். அவன், தன் அண்ணன்களைப் போல பெரிய படிப்பாளி எல்லாம் இல்லை. சுமார் ராகம் தான். அவன் தந்தை ஆசைப்பட்டது போல அவனால் அரசு வேலைக்கு எல்லாம் செல்ல முடியவில்லை.
அதிக கண்டிப்பு காட்டி பல நேரம் அடித்தும் பார்த்து விட்டார். அவனுடைய பயந்த சுபாவமும், பேசத் தெரியாதவன் போன்ற அமைதியான முகமும் மாற்ற முடியவில்லை. மற்ற பிள்ளைகள் எல்லாம் வெளியூர் சென்று படிக்க, இவன் தாயை விட்டு நகரவில்லை. வீரணனுக்கு, தன் பேரை பெருமைப்படுத்திய மற்ற பிள்ளைகள் மீது இருக்கும் பாசம்.. கடைசி மகன் மீது கிடையாது. உள்ளூரிலே படித்து, பக்கத்து ஊர் கல்லூரிக்கு சென்று அங்கு இருக்கும் டவுனில் பிரைவேட் பேங்கில் வேலை பார்க்கிறான். மாதம் பதினைந்தாயிரம் வாங்குகிறான். அவனுக்கு என்று போட்டி போட்டு பெண் தருவோர் பெரிதாக யாரும் இல்லை.
நிறைக்குமே, தன் மாமன் மகன் என்ற பாசம் இருந்தாலும்… அவனுக்கு என்று ஒரு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என நினைத்தாலே தவிர, ஒரு நாளும் அவனை தன் மணாளனாக நினைத்து கூட பார்த்ததில்லை. கல்யாணி அத்தை தன் கடைசி மகனுக்கு அவளைக் கேட்டதும் அதிர்ச்சியில் உறைந்து போனாள்.
Advertisement
திலகாவுக்கு அப்படி ஒரு கோபம், “நல்லா சம்பாரிச்சு வேலை இருக்கிற மத்த பிள்ளைகளுக்கு, எம் மகளை கேட்க உங்களுக்கு மனசு வரல. ஒன்னுக்கும் ஆகாத ஒருத்தனுக்கு எம் மக ஊழியம் செய்யணுமா?” காட்டமாக கேட்க.
Advertisement
“திலகா வார்த்தையை பார்த்து விடு” என்றார் வீரணன்.
“என் பிள்ளைக்கு என்ன குறை திலகா. மத்த பிள்ளைகள் மாதிரி நல்லா சம்பாதிக்கல அவ்வளவு தானே. அதுக்காக அவன் படிக்காமல், வேலைக்கு போகாம ஒன்னும் கிடையாதே. உன் மகளை விட அதிகமா சம்பாதிக்கிறான்” என்றார் கல்யாணி.
அதாவது, உன் மகளை விட அதிகம் படித்து, அவளை விட அதிக வருமானம் பார்க்கிறான். உன் மகளுக்கு என் மகன் நிறை தான் என்பதை நாசுக்காக சொல்லி விட்டார்.
Advertisement
“அதுக்காக குருடனுக்கு குருடன் வழி காட்ட முடியுமா மதனி” என்று திலகா கேட்ட வார்த்தை அதிகம் பாதிப்பை ஏற்படுத்தியது திருநிறை செல்விக்கு தான்.
தனக்காக தான் தாய் பேசுகிறார் என்று நினைப்பெல்லாம் இல்லை அவர் சொன்னதின் அர்த்தம் தான் பெரிய அளவில் பாதித்தது. ஆக, பதினெட்டு வயதில் படிப்பை விட்டு குடும்பத்துக்காக வேலைக்கு சென்றது பெரிதில்லை. விவரம் தெரியாத வயதிலே தந்தை வாங்கிய கடனுக்கு கைகட்டி பதில் சொல்லி, குடும்ப பொறுப்பை தலையில் சுமந்ததும் பெரியதில்லை.
மற்றவர்களைப் போலத்தான் பெற்ற தாயும் தன்னை நினைக்கிறார் போல… திருநிறைச்செல்வி முழுமையான தகுதி உடையவள் அல்ல. படிப்பில்லை, அழகில்லை கௌரவமான வேலையும் இல்லை. அப்ப இவள் குறை உள்ளவள் தான். நிறைக்கு மனம் இறுகிப்போனது.
நாத்தியின் வார்த்தையை கேட்ட பின் கல்யாணி அங்கே நிற்கவில்லை. வீரணனுக்கு கொஞ்சம் ஏமாற்றம். உன் மகள் தான் என் மருமகள் என்று தான் கொடுத்த வார்த்தையை நிறைவேற்ற நினைத்தார். அத்தோடு சொந்தம் என்றால் குறையோ, நிறையோ இழுத்துக் கொண்டு செல்லும் அல்லவா… திருநிறைச்செல்வி, அவரைப் பொறுத்தவரை ஓரளவுக்கு மன உறுதி உள்ள துணிச்சல் மிக்க பெண். எந்த வேலையும் அஞ்சாமல் செய்யும் ரகம். தன் கடைசி மகனை அவள் நல்ல முறையில் பார்த்துக் கொள்வாள் என்ற நம்பிக்கையில் தான் பெண் கேட்டு வந்தது. அத்தோடு சொந்தமும் விட்டுப் போகாது, தாங்கள் கொடுத்த வாக்கும் நிறைவேறும் அல்லவா…
நிறையை, வீர பிரபாகரனுக்கு திருமணம் செய்து வைக்கும் பேச்சுவார்த்தை அத்தோடு நின்றது. ஆனால், வளரின் கல்யாண பேச்சு வார்த்தை அடுத்தடுத்து முன்னேற தொடங்கியது. ஊரிலும் சொந்தத்திலும் நிறைக்கு அல்லாமல் வளருக்கு முதலில் பேசி முடித்தது பேசு பொருளாக, கேட்கும் சொந்தங்களுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார் திலகா.
திலகா சின்ன மகளுக்கு திருமணம் செய்து வைக்க பெரிய மகளுக்கு அநியாயம் செய்ததாக சொந்தங்கள் குற்றச்சாட்டு வைத்தது. அவரும் எப்படியாவது பெரிய மகளுக்கு முடித்து வைக்க தான் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால், ஒரே நேரத்தில் இரண்டு மகளுக்கு செய்யத்தான் அவரிடம் வசதி இல்லை. நிறை ஒரு மாதிரி மன அழுத்தத்துக்கு உள்ளானாள். முன்பெல்லாம் தன் முகத்தை, நிறத்தை, உடலமைப்பை குறித்து பெரிதாக கவலைப்பட்டதில்லை. குடும்ப சூழலே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
ஆனால், தற்போது தன்னையே அடிக்கடி கண்ணாடியில் பார்த்துக் கொள்கிறாள். தான் அந்த அளவுக்கு ஒன்னும் அழகில்லையோ என்ற நினைப்பு வந்துவிட்டது. கல்யாண பேச்சு பின் வளரின் முகமே ஒரு மாதிரி ஜொலிக்க ஆரம்பித்தது. சொந்த தங்கையை ஏக்கத்தோடு பார்க்கும் நிலைக்கு ஆளானாள் திருநிறைச்செல்வி.
நிறை மனதோடு நினைத்துக் கொள்வாள் பிறந்தால் வீட்டின் கடைக்குட்டியாக தான் பிறக்க வேண்டும். அவர்களுக்குத்தான் பெரிதாக எந்த கவலையும் பொறுப்பும் சார்ந்து இருக்காது. மூத்த பிள்ளையாக பிறந்து குடும்ப கஷ்டத்தை உணர்ந்து, பொறுப்புகளை சுமந்து மூத்தவள் என்று பல விஷயங்களை விட்டுக் கொடுத்து, அனுசரித்து மிகவும் நொந்து போனால் நிறை. அதே குடும்ப சூழ்நிலையில் வளர்ந்த வளருக்கு எதுவும் பெரிதாக பாதிப்பில்லை. அவள் படிப்பை முடித்தாள், கடன் சுமை கிடையாது, கஷ்டம் கிடையாது, சரியான வயதில் திருமணமும் கூடி வந்தது. தங்கை அதிர்ஷ்டசாலியாக இருக்க, தான் மிகத் துரதிஷ்டசாலியோ என்று நினைத்தாள் திருநிறைச்செல்வி.
பின்ன அவளுக்கு என்று எடுத்த சேலை, நகை கூட அவளுக்கு கொடுத்து வைக்கவில்லையே. இதுவரை அடகு கடையில் கிடந்தது. இன்று தங்கையின் கழுத்தை அல்லவா அலங்கரித்து இருக்கிறது. அது சரி மஞ்சள் கயிறு யோகம் இல்லை. இனி, தங்கத்தை நினைத்து என்ன பயன்.
அன்று நிறை வீட்டில் துணிகளை துவைத்து கொண்டிருக்கும் பொழுது வந்தார் அழகர் சாமி. திலகாவின் ஒன்றுவிட்ட தம்பி முறை. அவருக்கு வீடு இந்த ஊர் பக்கம் தான் என்றாலும் சொந்தம் என்று அடிக்கடி வந்ததில்லை. எப்போதாவது பார்த்து விசாரிப்பது தான். நிறை வீட்டில் இருந்ததால் நல்ல முறையில் பேசி விசாரித்து அனுப்பி வைத்தாள்.
அதன்பின் அழகர்சாமி வருகை தொடர்கதையானது. நிறை வீட்டில் இருக்கும் நேரம் எல்லாம் வர ஆரம்பித்தார். அவளை வைத்துக் கொண்டு என்னத்தையாவது பேசிக் கொண்டிருப்பார்.
“எதுக்கு இந்த மாமா சும்மா சும்மா வீட்ல வந்து உட்கார்ந்து இருக்காங்க. இவர உட்கார வச்சிக்கிட்டு எந்த வேலையும் பாக்க முடியாம, இவரிட்டே பேசிட்டு இருக்க முடியுமா?” கடுப்பாக வந்தது நிறைக்கு…
தாயிடமும் சொல்லிவிட்டாள். “அம்மா உங்க தம்பி எதுக்குமா அடிக்கடி வாராங்க. அப்பாவுக்கு வேற தண்ணி வாங்கி கொடுக்குறாங்க. நீ சத்தம் போடேன்” என்றதும் மனம் பதறி போனார் திலகா.
அழகர் சாமிக்கு நாப்பது வயது இருக்கும். மனைவி இல்லை, இறந்து விட்டார். ஒண்டிக்கட்டை. அவன் ஏன் அடிக்கடி தன் வீடு வருகிறான். திலகாவுக்கு மூத்த பிள்ளையை கட்டிக் கொடுக்க வழி இல்லை. வரணும் அமையவில்லை என்றதும் இவன் உள்நுழைய நினைக்கிறானா?…
தெய்வம் குடிபோதையில் தள்ளாடியபடி வீட்டுக்கு வந்தார்.
“யோவ், எதுக்குயா அந்த கடங்கார பையன் கூட நீ சேர்ந்து ஊர் சுத்துற? அவன் ஒண்டிக்கட்ட, உனக்கு குடும்பம் இருக்குல்ல.. தலைக்கு மேல ரெண்டு பொட்ட பிள்ளைகளை வச்சுக்கிட்டு. அதுகளுக்கு நல்லது பண்ணி பாக்காம குடிச்சிட்டு சீரழிகிற” என்று திலகா கத்த,
“எதுக்கு வாய் பேசுற திலகா. நான் வேற யார் கூட போனேன். அவன் எனக்கு மாப்பிள்ளை தானே” என்றதும் அதிர்ந்து போனார் திலகா.
“யாருக்கு யார் மாப்பிள்ளை” என்று எகிறி கொண்டு வந்தார் திலகா.
“அடியே! அவன் உனக்கு தம்பி முறை. அதைச் சொன்னேன்” என்றாலும் திலகாவுக்கு கணவன் மீது நம்பிக்கை இல்லை.
தெய்வத்திற்கு எதுவும் தேவையில்லை. தினமும் சரக்கு வாங்கி கொடுத்தாலே போதும். அவன் தான் அவருக்கு தெய்வம்.
பெரிய மகளை நினைத்து மனம் கலங்கி போனார் திலகா. தங்களின் இயலாமை மகளின் தலையில் அல்லவா விடிந்து விட்டது. இனி, அழகர்சாமி அடிக்கடி வீடு வந்தால்… அதுவே, ஊரில் பேசுபொருள் ஆகும்.
நிறைக்கும் மனதில் அவ்வளவு பயம். எங்கே தனக்கு நகை போட்டு சீர் செய்து கல்யாணம் பண்ணி கொடுக்க வழியில்லாமல், இவருக்கு இரண்டாம் தாரமாக கட்டி வைத்து விடுவார்களோ என்று…
ஆனால், நிறை பயந்ததற்கு நேர் மாறாக தன் அண்ணன் மகன் வீர பிரபகரனுக்கே மகளை பேசி முடித்து விட்டார் திலகா. நிறைக்கு அழுகை தாங்கவில்லை. மாப்பிள்ளை வீட்டு சார்பாக கொஞ்சம் பேர் வந்து திருநிறை செல்விக்கு பூ வைத்து விட்டு சென்றார்கள்.
ஒருத்தர் ஒருத்தர் தெரியாத முகம் எல்லாம் கிடையாது. பிறந்தது முதல் ஒன்றாக பார்த்து பழகிய முகம்தான். ஆனால், ஏனோ ஏறெடுத்து பார்க்கவில்லை இருவரும்… நான் உன் அண்ணன் மனைவி என்று அவனிடம் சகஜமாக பேசிவிட்டு… இன்று அவனுக்கு மனைவியாக நிற்பதை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
தெய்வம் திலகா தம்பதிகள் பொதுவில் சொல்லிவிட்டார்கள். “இரண்டு பெண்களுக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைக்கிறோம் தங்களால் இப்போதைக்கு பெரிய மகளுக்கு நகை என்று எதுவும் செய்ய முடியாது. வீட்டுக்கு புழங்கும் பாத்திரம் மட்டும் வாங்கி கொடுக்கிறோம் என்று…”
அதை பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டார் வீரணன். அவருக்கு சொந்தத்திலும் நல்ல மதிப்பு. பின்ன பெண்ணுக்கு பூ வைக்கும் போது கூட கழுத்தில் புல்லு மாதிரி கூட தங்கம் கிடையாதே…
நிறைமனதில் வெறுமை இருந்தது. கல்யாணம் பேசிய பின்னும் கூட தங்கை கழுத்தில் இருந்து ஒரு நகைக்கூட இவள் கழுத்துக்கு மாறவில்லை.
“நிறை, மாப்பிள்ளை வீட்டில இவ்வளவு நகை போடறோம்ன்னு சொல்லிட்டோம். இனி எப்படி மாற்ற முடியும். உன் தங்கச்சியை வெளியே கட்டிக் கொடுக்கிறோம். நீ சொந்தத்துக்குள்ள போற… நீ வீட்டுக்கு மூத்தவ, உனக்கு நம்ம குடும்ப நிலை, கஷ்டம் நஷ்டம் எல்லாம் தெரியும். உன்னை பத்தி கவலை இல்லை. நீ பார்த்து அனுசரிச்சு போயிடுவ… வளரு தெரியாத மனுஷங்களுக்குள்ள போகணும். அம்மா சொல்றேன் நாளைக்கு உனக்கு ஒரு பிள்ளை குட்டின்னு வந்துட்டா உன் தங்கச்சிக்கு செஞ்ச மாதிரி உனக்கு செஞ்சு கொடுத்துடுவோம்” என்று முன்பே மகளை சரிகட்டி விட்டார்.
பூ வைத்த மறுநாள் எப்பவும் போல கடைக்கு வந்து துடைத்துக் கொண்டிருக்க, வந்த திவ்யா,
“ஹே கல்யாணம் பொண்ணு!… என்கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லல” என்றதும், தன் தோழியை கட்டிக்கொண்டு அழுது தீர்த்து விட்டாள் திருநிலை செல்வி.
“ஏய், நிறை என்னடி? என்ன ஆச்சு?”
“திவ்யா, எனக்கு வாழவே பிடிக்கல.. எதுவுமே புடிக்கல. சொந்தம் என்று என் குடும்பத்தை பார்த்தாலே எனக்கு வெறுப்பா இருக்கு. யார்கிட்டயும் ஃப்ரீயா பேச முடியல நெஞ்சை அடைக்குது” என்று சொல்லி தேம்ப,
“என்ன ஆச்சு நிறை”
“என்னை விட எட்டு மாசத்துக்கு இளைய பையன் கூட எனக்கு கல்யாணம். எவ்வளவு அசிங்கமா இருக்கு எனக்கு…”
“அடச்சி இதுதான் பிரச்சனையா? இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே கிடையாது தெரியுமா உனக்கு?” என்று சமாதானம் செய்தாள் திவ்யா.
“இல்ல திவ்யா உனக்கு புரியல. எனக்கு… எனக்கு ஒரு மாதிரி என்னை தாங்குற புருசன் வேணும். இதுவரை எனக்காக யாருமே யோசிச்சதில்லை. மூத்த பொண்ணு பொறுப்பா குடும்ப கஷ்டத்தை புரிஞ்சுகிட்டா. அவ வேலைக்கு போயி குடும்பத்தை பார்த்துக்கிறான்னு சொல்லி சொல்லியே… இப்போ என் தங்கச்சி கல்யாணம் வரைக்கும் நான் என் குடும்பத்தை மட்டுமே பாத்துட்டு இருக்கேன். என் கையில நான் சம்பளம் வாங்கினாலும் எனக்குன்னு ஒரு பத்து ரூபா செலவு செய்ய முடியாது. எங்க அம்மாவ பாக்கணும், அப்பாவ பார்க்கணும், கடனை சமாளிக்கணும், குடும்ப செலவு பாக்கணும், தங்கச்சியை படிக்க வைக்கணும்… இப்படி அவங்களுக்காக பார்த்து யோசிச்சு அவங்கள வச்சே என் வாழ்க்கை வந்துருச்சு. எனக்காக பார்க்க யாரும் இல்லை. எனக்கு என்று யோசிக்கவும் ஒருத்தரும் இல்லை” என்று அழுக,
“நிறை என்ன இது?” திவ்யாவுக்கே பாவமாக இருந்தது.
“வளர் சின்ன பொண்ணு, அவளுக்கு விவரம் தெரியாது. அவளை நல்லா பாத்துக்கணும்னு சொல்லுவாங்க. ஆனா, நிறை பெரிய பொண்ணு வீட்டுக்கு மூத்தவ.. அவளை, அவளே பார்த்துப்பா, எந்த சூழ்நிலையும் அவ சமாளிப்பா, கஷ்டத்தை அனுசரிச்சு வந்துருவா. இப்படின்னு என்னை கேர் பண்ண ஆளே இல்லை திவ்யா” என்று தேம்பியவள்,
“நான் என் கல்யாண வாழ்க்கையை ரொம்ப பெருசா நினைச்சேன். எனக்கே எனக்குன்னு ஒரு உறவு. என்னை கேர் பண்ணி, தாங்கி கொஞ்சி பாத்துக்குற ஒருத்தர் வேனும். எனக்கு யாருமே செல்லம் கொடுத்ததில்லை. ஆரம்பத்தில் இருந்தே பொறுப்பில்லாத அப்பாவ வச்சுக்கிட்டு, நான் பொறுப்பா இருக்க பழகிட்டேன். என் கல்யாணம், எனக்கு ஒரு பெரிய திருப்பு முனையாக இருக்கும்ன்னு நினைத்தேன். பெரிய கனவு கண்டு வைச்சுருந்தேன். வசதியான வாழ்க்கை இல்லாட்டியும் ஓரளவுக்கு மனசு திருப்தி படுற மாதிரி ஒரு வாழ்க்கையாவது வாழ்வேன்னு நினைச்சேன்”
“நிறை”
“இப்ப மட்டும் எங்க மாமாவுக்கு சொந்தம் எப்படி வந்துச்சு. சொந்தத்தில் பொண்ணு எடுத்தா குடும்பத்தை அனுசரிச்சு போகும், கடைசி காலத்துல பாக்கணும்ன்னு தான். நான் பிரபாவ குறையாவே நினைக்கல. ஆனா, நான் குறையா இருக்கேன். பிரபாவுக்கு பெருசா குடும்பம் பொறுப்பெல்லாம் தெரியாது. என் கல்யாணத்துக்கு அப்புறமாவாது குடும்பம் பொறுப்பு, கடமை இது எல்லாத்தையும் விட்டு தள்ளி நிக்கணும்னு நினைச்சேன். என் வாழ்க்கையை என் கணவர் கிட்ட கொடுத்துட்டு, என் புருசன் கைக்குள் அடங்கி நிற்க நினைச்சேன். இனி அப்படி கிடையாது திவ்யா. திரும்பவும் நான் எப்பவும் போல வேலைக்கு வரணும், பிரபாவையும் சேர்த்து நான் தான் பார்த்துக்கணும், அப்புறம் எனக்கு பொறக்க போற குழந்தைகளையும் நான் தான் பாத்துக்கணும். கடைசி வரைக்கும் என்னைய பார்த்துக்க தான் யாருமே இருக்க மாட்டாங்க” அழுகை குறைய வில்லை அவளுக்கு…
error: Content is protected !!