Skip to content
Post Views: 1,711
நாலா திசையிலும் இருள் சூழ்ந்து கிடந்த நடு ராத்திரிப் பொழுது!
ஷோவெனப் பெய்த மழையால் குன்றும் குழியுமாகக் கிடந்த சாலை எங்கிலும் நீர் நிரம்பிக் காணப்பட, கண்ணாடி வழியே வீசிய சில்லென்ற காற்று உடலை வருடி சில்லிடச் செய்தது.
மிதமான சத்தத்தில் ஒலிக்க விட்டிருந்த இளையராஜா பாடலையும், அதை மீறிக் காதை நிறைத்த தாய் – மகன் சம்பாஷணையையும் செவியேற்றபடி காரை விரட்டிக் கொண்டிருந்தார் ஜெயசிம்மன்.
Advertisement
ஒன்றுமில்லை, இன்று நடந்த பேச்சுப் போட்டி ஒன்றில் அவர்களின் செல்லமகன் முதலாமிடத்தை தட்டிப் பறித்து பெற்றவர்கள் மனதைப் பூரிப்படையச் செய்திருக்கிறான்.
அதைப் பற்றித் தான் இந்த நடுசாமப் பொழுதிலும் சலம்பல்!
விழா முடிந்ததும் மூவருமாக கடற்கரையில் அலைந்து திரிந்து, இரவுணவையும் அருகேயே ஒரு ரெஸ்டாரண்டில் முடித்துக் கொண்டு விட்டு வீடு திரும்புகையில் நன்றாகவே இருட்டி விட்டிருந்தது.
Advertisement
கொஞ்சிப் பேசும் அன்னையின் சிலாகிப்பும், அதற்கு சிறியவனின் வெட்கச் சிணுங்கலும் என.. கேட்கவே படு ரம்மியமாக இருந்தபோதும்,
Advertisement
“என்னதிது விஜி, இன்னும் எவ்ளோ நேரந்தான் அவனைக் கேள்வி கேட்டுட்டே இருப்ப! களைச்சிப் போயிருக்கான், கொஞ்ச நேரம் தூங்க விடேனம்மா..” என்ற அக்கறை கலந்த அதட்டலை வைக்கத் தவறவில்லை.
பெரிதாக நொடித்துக் கொண்டாள், விஜிதா.
“அம்மாவை அப்படி சொல்லாதப்பா! நான் வின் பண்ணதுல அவங்க ரொம்ப எக்சைட்டாகி இருக்காங்க..” என தாய்க்கு வக்காலத்து வாங்கிய சிறுவனின் கண்களும் ஓய்வைத் தான் இறைஞ்சின.
Advertisement
“ஐயோடா, தெரியாம சொல்லிட்டேன். உன் அம்மாவ சொன்னா அப்படியே வரிஞ்சி கட்டிட்டு வந்திடுவியே!” – பயந்தவர் போல் நடித்தவரின் தோளில் பட்டென்று ஒரு அடித்த வைத்த விஜிதா,
“இருந்தாலும் இவ்ளோ பொறாமை வேண்டாம் உங்களுக்கு..” என கேலி செய்ததில், சிற்றலையாய் மெல்லிய சிரிப்பலை ஒன்று எழுந்து ஓய்ந்தது அங்கு.
இருவரின் சலசலப்புக்கு மத்தியில் சிறியவன் மெல்ல உறங்கிப் போய் விட,
“போகவே மாட்டேன்னு அடம் பிடிச்சிக்கிட்டு நின்னவன் இப்படி போய் ஃபர்ஸ்ட் ப்ளேஸைத் தட்டிப் பறிப்பான்னு கொஞ்சம் கூட எக்ஸ்பெக்ட் பண்ணல ஜெயா! நான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன்..” என மகனைப் பார்த்தவாறு கண் கலங்கினாள், விஜிதா.
ஆறேழு வருடங்கள் தவமிருந்து பெற்ற மகன். இன்று ஆயிரக் கணக்கானோர் மத்தியில் கையில் கப் ஏந்தி நின்ற காட்சி அவளை மெய் சிலிர்க்கச் செய்திருந்தது.
பத்து மாதங்கள் சுமந்து புத்தம் புது மலரொன்றுக்கு உலகைக் காணச் செய்யத் தன் உயிரையே பணயம் வைக்கும் அன்னையருக்கு, பிஞ்சுக் குழந்தையின் மழலை சிரிப்பில் சகல வேதனையும் மறைந்து போகுமாமே!
உண்மையில் குழந்தைக்கு மட்டுமன்றி அவளுக்கும் தான் அது புது ஜனனம்! பிழைத்து விட்டேன் என்ற மகிழ்வுக்கு மேலாக அன்றலரும் பிஞ்சின் முகம் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடிக்கும் அந்தத் தியாகச் செம்மல்களுக்கு பிள்ளையின் இம்மாதிரியான சிறு வெற்றியும் கூட அதிக பரவசத்தை ஏற்படுத்தி விடுவதில் குறை சொல்வதற்கில்லையே!
உதட்டில் நிலைத்த முறுவலுடன் மெல்லப் பார்வையைச் சுழற்றி பின் சீட்டில் துயில் கொண்டிருந்தவனைப் பார்த்தார், ஜெயசிம்மன்.
ஜீவன் தொலைத்து நடை பிணமாய் – சமூகத்தின் கசையடிக் கேள்விகளுக்குப் பயந்து வீட்டின் நாலு சுவற்றுக்குள் அடைந்து கிடந்த விஜிதாவின் மடி நிரப்பிய செல்லக் குழந்தை அவன்.
ஏனோ மகன் என்பதைத் தாண்டி தெய்வமாகத் தெரிந்தான் எட்டே வயதான விஷாகன், அவர் கண்களுக்கு.
பெருமூச்சுடன் அவர் விழி மூடித் திறக்கவிருந்த கணத்தில்,
“ஜெயா!!” என்ற விஜியின் வீரிடல்.
என்னவாயிற்று என ஊகிக்க முன்னரே, “விஷு கண்ணா!!” என்ற பெரும் சத்தத்தோடு அவரது மனையாள் மயங்கிப் போய்விட, வேகமாகக் கடந்து சென்ற கனரக வண்டி செய்த சதியால் ரோட்டோர மரத்தில் மோதி சப்பென்றானது, அவர்கள் பயணித்த கார்.
யார் கண் பட்டதோ!?! ஆளுக்கொரு மூலையில் – தலையிலும் நெற்றியிலுமென இரத்தம் வழிய மயங்கிச் சரிந்திருந்தனர் மூவரும்!
*******
“இன்னும் எவ்ளோ நேரம்? அந்த பையன் உயிருக்கு போராடிக்கிட்டு இருக்கான், உங்களுக்கெல்லாம் தெரியுதா இல்லயா..”
காதில் நங்கென்று மோதிய தகரக் குரலுக்கு பதிலிறுத்தத் தெரியாமல் கை பிசைந்தபடி நின்றிருந்தனர் தாதியர் இருவர்.
உள்காயம் அதிகரித்து இன்னுமே ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தவனுக்கு உடனே அறுவை சிகிச்சை செய்தாக வேண்டுமாம்! இன்றேல் இரத்தம் மூளைக்கு இறங்கி உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புண்டாமென ஏற்கனவே பரிசோதித்த மூத்த வைத்தியர் நிலைமையை எடுத்து விளக்கியிருந்தார்.
எதைச் செய்வதாகிலும் அதற்கு முதலில் தலைமை மருத்துவர் அங்கு வந்தடைய வேண்டுமன்றோ?
இருபது நிமிடங்களாக ‘இதோ வந்து விடுவார்’ என சமாளித்தவர்களால் காச்மூச்சென கத்திக் கொண்டிருந்தவரை இனியும் அமைதிப்படுத்த முடியுமென்று தோன்றவில்லை.
இத்தனைக்கும் விபத்துக்கு உள்ளானவர்கள் அவருக்கு என்ன உறவென்று கூட இதுவரை வாய் திறந்தாரில்லையே!
“மிஸ்டர், நீங்க இப்போ கோவப்பட்டு கத்துறதால எதுவும் நடந்துடப் போறதில்ல..” என இடைப்பட்டு ஙேயென முழித்துக் கொண்டிருந்த தாதிகளைக் காக்க முனைந்தார், வயதில் மூத்த ஒரு பெண்.
“என்ன! என்ன! நீங்க கூட இப்படி பொறுப்பில்லாம பேசலாமா? அங்க ஒரு உயிர் ஊசலாடிக்கிட்டு இருக்கு, இப்படி பொறுப்பில்லாத சீப் டாக்டர் வைச்சு ஹாஸ்பிடல் நடத்துறதுக்கு பேசாம..” அவர் மேற்கொண்டு தொடர முன்னரே,
“டாக்டர் வந்துட்டாரு!” என்ற ஒரு குரல் அருகே க்ரீச்சிட்டது.
அவரின் அனல் பார்வை தலைமை மருத்துவனை நேர்கொண்டு எரிக்க, நின்று நிதானமாக அவரது பார்வையை எதிர்கொண்டவன் சிறு தலை அசைப்போடு அவசர சிகிச்சைப் பிரிவினுள் நுழைந்தான்.
அவன் வாசுதேவ பிரதாப்!
செவியோரம் நரைத்திருந்த ஓரிரு வெள்ளை முடிகள் அவனது வயதை இருபதுகளின் இறுதியோ, முப்பதுகளின் தொடக்கமோ என சந்தேகப்பட வைத்தன. ஆனால் உண்மை அகவை என்னவோ, அதைக் காட்டிலும் மூன்றிலொரு பங்கு மேல் என்பது அதிசயத்தக்கது.
அவன் கை வைத்த அறுவைச் சிகிச்சைகள் தோல்வியில் முடிந்ததாய் சரித்திரம் இல்லை. அதிஷ்டத்துக்கு பெயர்போன வைத்தியர் என்ற அடைமொழியும் அவருக்குண்டு!
அதனாலோ என்னவோ எந்த அவசரத்திலும் – எந்த நேரத்திலும் – உயிர் உத்தரவாதம் அளிக்கத் தயங்கும் சிகிச்சைகளுக்கு அவனை முற்படுத்தித் தான் பழக்கம்!
அது போல் தான் இன்றும். ஆனால் என்ன.. ஒருசில தவிர்க்க முடியாத காரணங்களால் அவன் வரவு தாமதமாகிப் போனது.
அதற்குத் தான் தாம்தூமெனக் குதித்துக் கொண்டிருந்தார், கேஷவமூர்த்தி!
அறுவை சிகிச்சை ஆரம்பித்த பிறகும் கூட ஐசியூ அறைக்கு வெளியே கால் கடுக்க நின்றிருந்தவரின் முகம் கனிந்த பாடில்லை.
“குழந்தைக்கு மட்டும் ஏதாவது ஆகட்டும், சீட்டைக் கிழிச்சு பங்சுவாலிட்டி தெரியாத இந்த டாக்டருக்கு காலத்துக்கும் ஒரு நல்ல பாடம் கத்துக் கொடுப்பேன்..”
“யூஸ்லஸ் இடியட்!”
தன் கையாலாகாத்தனத்தை – எதிலும் சம்பந்தப்படாத வாசுதேவனுக்கு திட்டித் தீர்ப்பதன் மூலம் ஆற்றிக் கொள்ள முயன்றவரின் பேச்சைக் கேட்க சகியாதவளாய்,
“நம்பிக்கை முக்கியம் சார், முதல்ல இப்படி அபசகுணமா பேசுறதை நிறுத்துங்க..” என எரிச்சல்பட்டுக் கொண்டே நகர்ந்தாள், ஒரு தாதிப்பெண்.
மேற்கொண்டு அவர் வாய் திறக்கவில்லை. சிகிச்சை முடியும் வரை வெளி இருக்கையில் அமர்வதும், அங்குமிங்கும் நடமாடுவதுமாக அங்கேயே தான் இருந்தார்.
இடைப்பட்ட நேரத்தில், “ஆபரேஷன் ஆல்மோஸ்ட் ஓவர். பை த கிரேஸ் ஆஃப் கோட், இது வரைக்கும் எந்த பிரச்சனையும் இல்ல..” என்ற நல்ல தகவலையும்,
“இன்னைக்கு சீப் டாக்டர் ஹாஸ்பிடல் வரல! ரெண்டு நாள் லீவ் கேட்டிருந்தாரு. இறந்து போன அவரோட பொண்ணு பேர்ல பக்கத்து ஊர் வரைக்கும் போய் கோயில் அன்னதானம் கொடுக்க போறதா பேசிக்கிட்டாங்க.
இருந்தும், அர்ஜென்ட்னு நாங்க கால் பண்ணுனதும் போன வேலையை பாதியிலே விட்டுட்டு திரும்பி வந்தவரைப் போய் இப்படி மரியாதை குறைவா நீங்க பேசி இருக்க கூடாது சார்.
உங்க அவசரம் புரியுது, ஆனா அவரு ஒன்னும் ஒரு உயிரோட மதிப்பு தெரியாதவரில்லை. உண்மைய சொல்லப் போனா உங்க எல்லாரையும் விட அருமை, பெருமை தெரிஞ்சவர் அவரா தான் இருக்கணும். தன்னால முடிஞ்ச அளவு சீக்கிரமா தான் வந்திருந்தாரு.
உண்மை நிலவரம் தெரியாதுனா யாரையும் டக்குனு ஜட்ஜ் பண்ணிடாதீங்க சார். நீங்க பேசுனதைக் கேட்டுக்கிட்டு இருந்த எனக்கே மனசு பொறுக்கல. அதான் சொல்றேன்..” என்ற ஒரு அதிர்வையும் அவருக்குக் கடத்தி விட்டுச் சென்றிருந்தாள், வாசுதேவனின் அசிஸ்டண்ட்.
இடித்து விட்டுச் சென்ற கனரக வண்டியின் உரிமையாளர் அவர்! அவர் சொந்தமாக நடத்தும் ஹால்சேல் ஷாப்பிற்குத் தேவையான பொருட்களைச் சுமந்து சென்ற வண்டியைப் பின் தொடர்ந்து வந்தவர், எதிர் பாராமல் நடந்த அசம்பாவிதத்தில் விதிர்விதிர்த்துப் போயிருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.
அந்தப் பதட்டமும், படபடப்பும் தான் அவரை இந்த அளவுக்குப் பேச வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
விடயம் அறிந்ததிலிருந்து மனம் வேறு அமைதியின்றி ஆர்ப்பரிக்க, “கடவுளே!” என்ற முணுமுணுப்போடு இருக்கையில் சாய்ந்தவர் எந்த நேரத்தில் உறங்கிப் போனாரோ..
விடிய காலையிலே, “ஆபரேஷன் சக்ஸஸ்!” என்ற சேதியில் தான் கண் மலர்ந்தார்.
அடுத்து என்ன செய்ய வேண்டும், கண் திறந்ததிலிருந்து ‘விஷுவைப் பார்க்கணும்’ என அரை மயக்கத்தில் அனத்திக் கொண்டிருந்த விஜிதாவை எவ்வாறு கையாள வேண்டும் என்பதையெல்லாம் பட்டும்படாமலும் விளக்கி விட்டு வாசுதேவன் நேரகாலத்துடனே புறப்பட்டுச் சென்றிருந்தான்.
விஷாகன் இன்னும் கண் திறந்திருக்கவில்லை.
அவனை வார்டுக்கு மாற்றிய கையோடு ஒரு பார்வை பார்த்து விட்டு வந்த கேஷவமூர்த்தி முதலில் தேடியது வாசுதேவனைத் தான்!
“டாக்டர் அப்பவே கெளம்பிப் போய்ட்டாரு. இன்னைக்கு அவர் டியூட்டில இருக்க மாட்டாரு..” என்ற தகவலில் ஏனோ மீண்டும் உடலோடு ஒருசேர மனமும் சோர்ந்து போனது அவருக்கு.
எல்லாம் ஓரளவு நல்லபடியாகத் தான் சென்று கொண்டிருந்தது, புதிதாக ஒரு இடி தலையில் வந்து விழும் வரை!!
தொடரும்.
error: Content is protected !!