Skip to content
Post Views: 7,649
அத்தியாயம் 3
மகள் வீட்டிற்கு வர சம்மதித்ததும் பெரு மகிழ்ச்சி அடைந்தார் அசோகன். “என்னங்க சிரிச்ச முகமா இருக்கிங்க?” என ஆர்வமாக வினவினார் அஞ்சுகம்.
“பொன்மணி வீட்டுக்கு வரேனுச்சு” என்றார் மகிழ்வோடு.
Advertisement
“என்னைக்கு வராளாம்? பிள்ளைக்கு என் கையாள சமைச்சி போட்டு நாலு வருசத்துக்கு மேல ஆகிடுச்சு. பனெண்டாவது முடிச்சதும் ஒரே ஒருமுறை வந்துட்டு போனவதான்” என ஏக்கத்தோடு மகிழ்ந்து “என்னைக்குங்க வரா?” என்றார் மீண்டும்.
“அக்கா வீட்டுலதான் இருக்கு. மதியம் வந்திடுமாம். இன்னும் ஒரு மணி நேரத்துல பஸ் ஏறப்போகுதாம், நான் போய் பொன்மணிக்கு பிடிச்சதை வாங்கிட்டு வரேன், நீ சமையலுக்கு ரெடி பண்ணு” என்று அவசரமாக பையை எடுத்துக்கொண்டு கிளம்பினார் அசோகன்.
பொன்மணி சிறுவயதில் போல் உண்பதில்லை என்று கணவனிடம் அவளின் அத்தை சொல்லி வருந்தியிருக்கிறார். சிறு வயதிலிருந்தே அசைவத்தை விட பொன்மணிக்கு இனிப்பு வகைகள் பிடிக்கும், வீட்டில் செய்யும் இனிப்புகளில் தேங்காய்போலி மிகவும் பிடிக்கும் என்பதால் அதனை செய்ய ஆரம்பித்தார்.
Advertisement
ஒருமணி நேரம் கழித்து, மகளுக்கு அழைத்து “எங்கம்மா வந்துட்டிருக்க? இந்நேரம் வந்திருக்கனுமே, நான் பஸ்டாண்டுலதான் இருக்கேன்” என்றார்.
Advertisement
“நான் வந்துட்டேன்ப்பா, நீங்க வீட்டுக்கு போங்க, நான் வீட்டுக்கு வந்திடறேன்” என்று இணைப்பை துண்டித்தாள் பொன்மணி.
இப்படி பேசிக்கொண்டிருக்கும்போது இணைப்பை துண்டிக்கமாட்டாளே என்றும், வந்துட்டேன் என்றுவிட்டு வீட்டுக்கு போங்க, வந்துடறேன் என்றால் என்ன அர்த்தம்? அப்போ பொன்மணி எங்கிருக்கிறாள்?
திருனேஷ்வரனை நினைத்து மிகவும் வருந்துவாளே… அவனின் வீட்டை கடந்துதானே நம் வீட்டிற்கு செல்ல வேண்டும்… நான்கு வருடங்கள் கழித்து ஊருக்கு வருகிறாள். ஒருவேளை அவனின் பெற்றோரை ஏது குற்றவுணர்வோடு பார்த்திருப்பாளோ?
Advertisement
திருனேஷ்வரன் சிறைக்கு சென்றதிலிருந்து எப்பொழுது தங்களை பார்த்தாலும் தலைகுனிந்து சென்றிடுவார்கள் திருனேஷ்வரன் பெற்றோர் ஆதலால், தற்போது மகளைப் பார்த்து தலைகுனிந்து சென்றிருப்பார்களோ?
அவர்களின் தலைகுனிவை தாளமுடியாமல் உண்மையை பேச விழைந்திருப்பாளோ என்று பதட்டத்தோடு தனது வீடு நோக்கி பைக்கை விரட்டினார் வேகத்தோடு.
அசோகன் வீட்டிற்கே வந்துவிட்டார். ஆனால் பொன்மணி இன்னும் வீட்டிற்கு வரவில்லை. வரும் வழியிலும் இல்லையே என்ற யோசனையோடு இருக்க, அஞ்சுகம் “பொன்மணி எங்கங்க?” என்றார்.
மனைவியிடம் விளக்கவே, “என்னங்க இப்படி சொல்றிங்க? வாங்க திரும்ப போய் பார்ப்போம், வண்டியை எடுங்க, நான் அவளுக்கு போன் பண்றேன்” என்று வீட்டை பூட்டி, வெளியே வந்து பைக்கில் அமரும் நேரம் தெருமுனையில் மிகவும் சோர்வோடு வந்துகொண்டிருந்தாள் பொன்மணி.
“ஏங்க… நடக்க முடியல போல, போய் கூட்டிட்டு வாங்க” என்று அஞ்சுகம் பைக்கை விட்டு இறங்க, அசோகன் பைக்கை விரட்டினார். திருனேஷ்வரனின் வீட்டருகே வரும்போது கால்கள் தன்போல் நின்றது பொன்மணிக்கு. கண்களும் திருனேஷ்வரனின் வீட்டினை பார்வையிட்டது.
திருனேஷ்வரனின் வீட்டிற்கு எதிரே வசிக்கும் பெண்மணி “ஏம்மா… இன்னும் பழசையே நினைச்சிட்டிருப்பியா? அவங்களே செத்த பொணமாட்டம் வாழ்ந்துட்டிருக்காங்க, மகன் செய்ததுக்கு இவங்க என்ன பண்ணுவாங்க? அதான் தப்பு செய்தவன் தண்டனை அனுபவிக்கிறான் இல்ல?” என்றார் ஆதங்கத்தோடு.
“இல்ல ஆன்ட்டி, நான் பழசை நினைக்கல” என்று பொன்மணி தவிப்போடு சொல்ல, அதற்குள் அசோகன் வந்திருந்தார் மகளருகே.
“என்னம்மா ஆச்சு? அவங்க எதோ உன்னை திட்டினமாதிரி இருக்கு?” என்றார்.
“இல்லப்பா, ரொம்ப நாள் ஆச்சு பார்த்து… நல்லா இருக்கியானு விசாரிச்சாங்க. வாங்க போலாம்” என்று முன்னே நடந்தாள்.
ஓ… விசாரிச்சாங்களா? என நிம்மதியாகி, “வண்டில உக்காருடா” என்று மகளருகே பைக்கை நிறுத்த, ஏறிக்கொண்டு தந்தையோடு வீடு வந்தாள் பொன்மணி.
மகளுக்கு திருஷ்டி சுற்றிப்போட்டு உள்ளே அழைத்துச் சென்றார் அஞ்சுகம். “நீ வருவனு தெரிஞ்சிருந்தா அக்கா வேலைக்கு போயிருக்கமாட்டா பொன்மணி” என ஆர்பரித்து, “போய் முகம் கை கழுவிட்டு வா, சாப்பிடுவியாம்” என்றார்.
“ம்” என்று அறைக்குள் சென்று முகம் கழுவி வந்து உண்ண அமர்ந்தாள். “போலி சாப்பிடு, சாப்பாடு அப்புறம் சாப்பிடுவியாம்” என்று மகளிடம் தட்டை நீட்டினார் அஞ்சுகம்.
பழைய நினைவுகளில் இருந்து மகள் இன்னும் மீளவில்லை என்று கவலையோடு, பொய்யுரைக்க வற்புறுத்தியதால் தங்கள் மீதுள்ள பாசம் குறைந்துவிட்டது என்ற கவலையிலிருந்தார் அஞ்சுகம்.
பெரிய மகளுக்கு திருமணம் பேசியிருக்கிறோம் என்றதும் வீட்டிற்கு வர நினைத்திருக்கிறாள், தங்கள் மீது கோபம் இருக்கிறபோதும், பழைய அன்பும் இருக்கிறது என மகிழ்ந்து, “கலையை நல்ல இடத்துல கேக்குறாங்க பொன்மணி.
கலைக்கும் பையனை பிடிச்சிருக்காம். ஜாதகமும் அருமையா பொருந்தி வந்திருக்கு. நல்ல நாள் பார்த்து சொன்னோம்னா முறைப்படி பொண்ணு கேட்க வரேனு சொல்லியிருக்காங்க” என்றார்.
தனது மொபைலில் இருந்த வருங்கால மருமகனின் குடும்ப புகைப்படத்தை காண்பித்து, “இவர்தான் மாப்பிள்ளை, இவங்க மாப்பிள்ளையோட அம்மா, இவர் மாப்பிள்ளையோட அப்பா, இந்த தம்பி மாப்பிள்ளையோட” எனும்போதே இடைமறித்தவள், “முடிவாகும் முன்னவே ஏன்ப்பா மாப்பிள்ளை மாப்பிள்ளைனு அத்தனை முறை சொல்றிங்க?” என்றாள்.
“முடிவான மாதிரிதான்டா. நம்ம கலையை எல்லாருக்கும் பிடிச்சிருக்கு” என்றவர், “ஓ… நம்ம பழைய விசயம் தெரிஞ்சுருக்குமானு நினைக்கிறியா? எல்லாமும் தெரியுமாம்டா, புரோகர் சொல்லித்தான் அழைச்சிட்டு வந்தாராம்” என்றதும் பொன்மணியின் முகம் அதீத வேதனையைக் காட்டியது.
மகளின் வேதனை கண்டு, “அவங்க உன்னை ஒன்னும் சொல்லலடா, சொல்லப்போனா அந்த விசயத்தை கடந்து நல்லா படிச்சு பெரிய வேலைல இருக்கேனு பெருமைபட்டாங்க” என்றார்.
‘என்னை இப்படி பெருமையா சொல்றவங்க, அந்த திருனேஷ்வரனை எப்படி சொல்வாங்க? அவங்க வெளில வந்தாலும் நிம்மதியா வாழ முடியுமாப்பா?‘ என மனதோடு வெம்பினாள் பொன்மணி.
“என்னடா யோசனை?” என்றார் அசோகன்.
“அக்கா கல்யாண விசயம் சொல்றேன், உன் முகத்துல சந்தோசத்தையே காணோமே பொன்மணி” என வருந்தினார் அஞ்சுகம்.
“அப்படிலாம் ஒன்னுமில்லம்மா” என முயன்று சிரிக்க, “எந்த பக்கமா வந்த பொன்மணி? நான் பஸ்டாண்ட்லதான் அரைமணி நேரமா காத்திட்டிருந்தேன், உன்னை எங்கேயும் காணல? யாரையாவது பார்க்க போயிருந்தியா?” என்றார்.
“ஆமாம்ப்பா, முக்கியமான ஒருத்தரை பார்க்க போயிருந்தேன், திரும்ப ஈவ்னிங் பார்க்குறேனு சொல்லிட்டு வந்திருக்கேன்” என்றவள் சிறு இடைவெளிவிட்டு, “அந்த பணத்தை வித்ட்ரா பண்ணிடலாம்ப்பா” என்றாள்.
“எந்த பணம்டா?”
“பத்து லட்சம்” என்றாள் இறுகிய முகத்தோடு.
“இப்போவே எதுக்கு பொன்மணி? தேவைப்படுறப்போ கொஞ்சம் கொஞ்சமா எடுத்துக்கலாம்” என்றார் அஞ்சுகம்.
“அந்த பணத்தை நம்ம சொந்த தேவைக்கு எடுக்கப்போறிங்களா? எப்படிம்மா இப்படி நினைச்சிங்க?” என்றாள் பேரதிர்வாக.
அஞ்சுகம் “ஏன் பொன்மணி? எடுத்தா என்ன தப்பு? அவனால மனதளவுலயும் உடலளவுலயும் எவ்வளோ கஷ்ட்டப்பட்டிருக்க?” என்றார் எடுத்துரைக்கும் நோக்கோடு.
“அப்போ அதுக்கான கூலியா அந்த பணத்தை எடுத்துக்கலாமாம்மா?” என்றாள்.
“அம்மாடி… என்ன வார்த்தைடா சொல்லிட்ட?” எனப்பதறினார் அசோகன்.
“அந்த பணத்தை எடுத்து நம்ம யூஸ் பண்ணினோம்னா அதுக்கு அதானப்பா அர்த்தம்?” என்றாள் அழுத்தமாக.
இருவருமே அதிர்ந்து போயினர். இப்படி யோசிக்கவேயில்லைதான். ஆனால் தற்போது மகள் கேட்பதும் சரிதானே? பெரியமகள் திருமணத்திற்கு இப்பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்திருந்த பெற்றோருக்கு அவமானமாகிப்போனது.
பெற்றோரின் நிலைமையுணர்ந்து, “நீங்க இப்படி யோசிச்சிருக்கமாட்டிங்கனு எனக்கு தெரியும்ப்பா. ஆனா அந்த பணத்தை எடுத்துக்கலாம்னு நினைச்சது தப்புப்பா. அந்த பணத்தை சேர வேண்டிய இடத்துல சேர்க்கப்போறேன்” என்றாள் பொறுமையாக.
“அச்சோ… அவங்ககிட்ட கொடுக்கப்போறியா? வேணாம்டா, எதாவது பிரச்சனை பண்ணுவான். நாம வேணும்னா அந்த பணத்தை அநாதை ஆஸ்ரமத்துக்கு, இல்லைனா கோவில் உண்டியல்ல போட்டுடலாமா?” என்றார்.
“இல்லப்பா… அந்த பாவப்பட்ட பணம் பாவம் பண்ணினவனுக்குத்தான் போய் சேரனும், கோவில்லையோ இல்ல ஆஸ்ரமத்துக்கோ கொடுத்தா அவன் செய்த பாவத்துக்கு ப்ராயச்சித்தம் செய்தமாதிரி ஆகிடும்”
“ஆனா அவனுக்கு கொடுத்தா திரும்ப பிரச்சனை ஆகுமேம்மா” என்றார் கவலையாக.
“என்ன பிரச்சனைப்பா ஆகிடும்? எவ்வளோ நாளைக்கு அவனுக்கு பயந்துட்டு இருக்கிறது? அந்த பணம் நம்மகிட்ட இருக்குறது எனக்கு அசிங்கமா இருக்குப்பா. அப்படி என்னதான் பண்ணிடுவானு பார்த்துக்கலாம்” என்றாள் சவால் போல.
இத்தனை அழுத்தமாக மகளை பார்த்ததில்லை ஆகையால், அசோகனுக்கும் அஞ்சுகத்திற்கும் பயம் உண்டானது மனதில்.
“அந்த அயோக்யனை பழிவாங்குறதா நினைச்சு உன் வாழ்க்கையை தொலைச்சிடாதடா. முன்னவாவது அவங்க வெறும் பணக்காரங்கதான். இப்போ அரசியல் பக்கபலமும் இருக்கு. அந்த பையனோட மாமனார் எம்.எல்.ஏ. எந்த தப்பையும் துணிஞ்சு செய்துட்டு, பணத்தால மறைச்சிடுவாங்கடா.
அவங்களை பழிவாங்க நினைக்கிறது நாமளே போய் அசிங்கத்துல விழற மாதிரிதான். திரும்பவும் அதையெல்லாம் சகிக்கிற சக்தி எனக்கில்லடா” என்றார் கவலையாக.
தன் வாழ்வை சீரழித்தவனின் மாமனார் எம்.எல்.ஏ வா? அப்போ நாம நினைச்சதை நடத்திக்க இன்னும் வசதியா போச்சு. என மனதில் நினைத்து, தந்தையிடம் கலந்தாலோசித்தால் தன்னை எதையும் செய்ய விடமாட்டார் என்றுணர்ந்து, “அப்படிலாம் ஏதும் ஆகாதுப்பா” என்று சற்று நேரம் தந்தைக்கு தைரியம் அளிக்கும்படி பேசியிருந்தாள்.
பிறகு, அந்த பத்து லட்சத்தை திருமண செலவிற்கு எடுத்துக்கொள்ளலாம் என நினைத்திருந்திருக்கிறார்கள். ஆனால் அதை நான் எடுக்கவேண்டாம் என்றுவிட்டேன் என்று யோசித்தவள், “கலை கல்யாணத்துக்கு எவ்வளோ செலவாகும்ப்பா?” என்றாள்.
“நாம பார்த்து பண்றதுதான்டா”
“அவங்ககிட்ட என்ன செய்வோம்னு சொல்லிட்டிங்களா?”
“அதெல்லாம் இன்னும் ஏதும் பேசலடா”
“பேசிடுங்கப்பா, இப்போ வேணாம்னு சொல்லிட்டு பின்னாடி கேட்டாங்கனா நமக்குத்தான் கஷ்டம்” என்றாள்.
“பேசிடலாம்டா” என்று அசோகன் சொன்ன அதே நேரத்தில், “ஏன் பொன்மணி? அப்பா சம்பாதனையோட சேர்த்து இப்போ நீயும் சம்பாதிக்குற இல்ல, லோன் போட்டுக்கலாமே. அவங்க கேக்குறதை செய்து அனுப்பினாதானே கலைக்கு அங்க மரியாதையா இருக்கும்” என கோரிக்கை வைத்தார் அஞ்சுகம்.
“அதெல்லாம் வேண்டாம்மா, நம்ம தகுதிக்கு என்ன செய்ய முடியுமோ அதை மட்டும் செய்ய சம்மதிங்க. கடன் வாங்கி செய்யிறது பெருசில்ல. தகுதிக்கு மேல ஆசைப்படறது எப்போவேணாலும் ஆபத்துலதான் முடியும்”
அஞ்சுகம் முகம் அதிருப்தியை காட்ட, “கலை பேங்க்ல ஒர்க் பண்றா. கல்யாணத்துக்கு அப்புறம் அவ சேலரியை நீங்க கண்டிப்பா வாங்கிக்கமாட்டிங்க. அவ சம்பாதிக்கிறது இனி அவங்க குடும்பத்துக்குத்தான? இதைவிட ஒரு பொண்ணு பெருசா எதை கொண்டு போய்ட முடியும்?” என்றாள்.
“இல்ல பொன்மணி, நம்ம பிள்ளைக்கு நம்மளால முடிஞ்சதை செய்யனும்ல்ல? அப்போதான் என்னால இங்க நிம்மதியா இருக்க முடியும்” என்றார் அஞ்சுகம்.
பொன்மணி அமைதியாய் அன்னையை பார்த்திருக்க, “நகைனு பார்த்தா முப்பது பவுன்தான் இருக்கு. அதுல உன் பங்கு பாதி போய்டுச்சுனா வெறும் பதினஞ்சு பவுனை வச்சிகிட்டு எப்படி கல்யாணத்தை முடிக்க முடியும்? இப்போலாம் கூலி வேலைக்கு போறவனுக்கே இருபத்தி அஞ்சு பவுனாவது போட்டுடறாங்க,
நம்ம பார்த்திருக்க மாப்பிள்ளை ப்ரைவேட் வேலைன்னாலும் லட்சத்துல சம்பாதிக்கிறாராம். வெறும் பதினைஞ்சு பவுனோட எப்படி அனுப்பி வைக்கிறது. அப்படியேன்னாலும் சீர் சினத்தினு அதுவே அஞ்சாறு லட்சம் ஆகிடும். கடன் வாங்காம கல்யாணத்தை முடிக்க முடியாது பொன்மணி” என்றார்.
“எனக்கு இப்போதைக்கு கல்யாணம் செய்யுற ஐடியா இல்லைம்மா. என் நகையையும் சேர்த்து கலைக்கே போட்டுடுங்க. கலைக்கு செய்யிறது எனக்கு பிரச்சனை இல்லம்மா. ஆனா அதை நாமளா செய்யனும். அவங்க கேட்டு பண்றமாதிரி இருந்தா பண்ண முடியாதுனு சொல்றதுதான் எனக்கு சரினு தோணுது.
இப்போ நல்லா பேசுறவங்க கல்யாணத்துக்கு அப்புறமும் அப்படியே இருப்பாங்கனு நம்ப கூடாது. எதுவானாலும் யோசிச்சு முடிவு பண்ணுங்க” என்று பொறுப்பை பெற்றோரிடமே ஒப்படைத்தவள்,
“அப்பா… அவங்க விடுதலை ஆகிட்டாங்களா?” என்றாள்.
“இல்லைடா”
‘இன்னைக்கு தேதி ஆறு ஆகிடுச்சே, போன மாசம் இருபதாம் தேதியோடவே அவங்களோட அஞ்சு வருச தண்டனைக்காலம் முடியுதே. ஏன் இன்னும் விடுதலை ஆகல?’ என நினைத்தாள் கவலையாக.
மகள் தவறிழைத்தவனையும் மறக்கவில்லை, தண்டனை அனுபவிப்பனையும் மறக்கவில்லை என அசோகனுக்கு புரிய, பெரிய மகளின் திருமண விசயமெல்லாம் பின்னுக்கு போய், சின்னமகள் என்ன யோசித்துக்கொண்டிருக்கிறாளோ என்று கவலையானது தந்தைக்கு.
error: Content is protected !!