Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அவள் என் பொன்னெழில்

அவள் என் பொன்னெழில் 3.2

“ஏங்க… திருனேஷ் விடுதலை ஆகி பத்து நாள் ஆகிடுச்சு. அந்த போலீஸ்காரர் சொன்ன மாதிரி விடுதலை ஆனானா? இல்ல வேற ஏதும் பிரச்சனையானு கூட தெரியலங்க” என கவலைகொண்டார் செல்லம்மாள்.

வில்வராஜிற்கும் மகன் வராதது பெரும் கவலையாகத்தான் இருந்தது. திருனேஷ்வரனின் விடுதலை தினத்தன்று சிறைச்சாலைக்கு சென்றிருந்தார்.

வில்வராஜ் சிறைக்கு வந்தது காலை ஒன்பதுமணிக்கு. விசயம் திருனேஷ்வரனுக்கு சொல்லப்பட்டது. உள்ளிருக்கும் விதிமுறைகளை முடித்து சிறையிலிருந்து வெளியேற மதியம்போல் ஆகிவிடும் என்று காவலர்கள் மூலம் அறிந்திருந்தான் திருனேஷ்வரன்.

மதியம் போல் வில்வராஜ் டீ குடிக்க அருகே உள்ள கடைக்கு சென்ற நேரத்தில் திருனேஷ்வரன் சிறையிலிருந்து வெளியேறியிருந்தான். ரூபலஷ்மி ஏற்பாடு செய்திருந்த நபரோடு பைக்கில் கிளம்பியிருந்தான். செல்லும் வழியில் தந்தையை பார்த்தான்தான். ஆனால் பேச தோன்றவில்லை ஆகையால் பைக்கை நிறுத்த சொல்லவில்லை.



Advertisement

டீ குடித்து முடித்து சிறை வாயிலுக்கு வந்து மகனைப் பற்றி வில்வராஜ் கேட்டபோது திருனேஷ்வரன் விடுதலையாகி சென்றுவிட்டான் என்றார் காவலர். தான் வந்தது அறியாமல் சென்றிருப்பான் என்று நினைத்த வில்வராஜ், வீட்டிற்குத்தானே வருவான் என்று சென்னையிலிருந்து கிளம்பிவிட்டார்.

வில்வராஜ் சேலம் வந்த பின்னும் கூட மகன் வரவில்லை. புதிய வேலைக்கு ஏற்பாடு செய்வதற்காக பழைய நண்பர்களை சந்திக்க சென்றிருப்பான் என்று தன்னைத்தானே தேற்றிக்கொண்டு மனைவியையும் தேற்றினார்.

மகன் இப்படி செய்துவிட்டானே என்ற வலி இத்தனை வருடம் கழிந்தும் கூட இன்னும் குறையவில்லை செல்லம்மாள் வில்வராஜ் தம்பதிக்கு.

Advertisement

ஆனாலும் மகனல்லவா? நல்ல உணவுண்டு ஐந்து வருடம் ஆகிற்றே, மகனோடு மனம் விட்டு பேசி ஐந்து வருடம் ஆகிற்றே… எத்தனை முக்கியமான விசயமாக இருந்தாலும் முதலில் வீட்டிற்கு வந்து ஒருமாதம் போல் தங்கி மனதை சமன் செய்த பின்னே இனி என்ன செய்யலாம் என்று யோசிக்கலாமல்லவா? என்ற வேதனையிலிருந்தனர்.

Advertisement

திருனேஷ்வரனிடம் மொபைல் இருக்கிறதோ? இல்லையோ. ஆனால் தங்கள் எண் அவனுக்கு தெரியும்தானே? என்ன செய்கிறான்? எங்கிருக்கிறான் என்ற விபரமாவது சொல்லலாமல்லவா? என பத்து நாள்களாக புலம்பிக்கொண்டிருக்கிறார் செல்லம்மாள்.

திருனேஷ்வரன் விடுதலையாகிவிட்டான், ஆனால் மகனை எப்படி தேடுவது என்று வில்வராஜிற்கும் புரியவில்லை. செல்லம்மாள் வாய்விட்டு புலம்புகிறார். வில்வராஜ் மனதினுள் புழுங்குகிறார்.

ஊருக்குள் வருவதை அவமானமாக நினைத்து வரவில்லையா? எப்படியாகினும் இதையெல்லாம் சந்தித்துதானே ஆகவேண்டும்?  தவறிழைக்கும்போது யோசிக்காமல் செய்துவிட்டு தற்போது நினைத்து என்ன பயன்? என வருந்தினார்.

Advertisement

செல்லம்மாள் “ஏங்க… ஏன் ஏதும் பேசமாட்டேங்குறிங்க? ஒருவேளை நாம போய் பார்க்கலனு கோவிச்சிக்கிட்டானா?” என்றார் கலக்கமாக.

“அப்படியிருக்காது செல்லம், தண்டனை கிடைச்சு இரண்டுமாசம் கழிச்சு போய் பார்த்தப்போ அவனேதான இனி பார்க்க வரவேண்டாம்னு சொன்னான்?” என்றார்.

ஆம்… திருனேஷ்வரன் சொன்னான்தான். ‘செக் பண்றேன்ற பேர்ல அம்மாவை ரொம்ப படுத்திட்டாங்களாம் திருனேஷ்’ என்று வில்வராஜ் வேதனையோடு சொல்ல, அதனை தாளமுடியாமல் இனி வரவேண்டாம் என்று சொன்னான்.

அதன்பின்னே மீண்டும் நான்கு மாதம் கழித்து வில்வராஜ் காண வந்தபோது, திருனேஷ்வரன் தந்தையை காண விரும்பவில்லை என்றும், இனி தண்டனை காலம் முடியும்வரை தன்னை காண வரவேண்டாம், தனது பேச்சை மீறி வந்தாலும் நான் பார்க்க வரமாட்டேன் என்று காவலரிடம் சொல்லி அனுப்பியதால், அதன்பின்னே மகனை காண செல்லவில்லை வில்வராஜ்.

“அவன் சொல்லியிருந்தாலும் இத்தனை வருசம் நாம போய் பார்க்காததுக்கு வருந்தியிருப்பானோ?”

“ம்ப்ச்… அப்படிலாம் இருக்காது, நாம போனாலும் அவன் பார்க்க வரமாட்டானாம்னு தெளிவா சொல்லியனுப்பியிருக்கான். அப்புறம் எப்படி நாம போறது?” என கடுகடுத்தார் மனைவியிடம்.

“அம்மா அண்ணா போன் பண்ணுச்சு” என வந்து நின்றாள் வெண்பா.

“திருனேஷா? எப்போ பண்ணினான்? எங்க இருக்கானாம்? ஏன் இங்க வரலை? என்கிட்ட கொடுத்திருக்கலாமில்ல? எந்த நம்பர்லயிருந்து கூப்பிட்டான். நம்பர் சொல்லு, நான் பண்ணி பேசுறேன்” என்று படபடத்தார் செல்லம்மாள்.

“உன்கிட்ட அப்புறம் பேசுறேனு சொன்னுச்சும்மா” எனும்போதே, “நீ நம்பரை சொல்லு” என அதட்டி வாங்கி மகனுக்கு அழைத்தார் செல்லம்மாள். ஆனால் திருனேஷ்வரன் அழைப்பை ஏற்கவில்லை.

மகளின் கைப்பேசியிலிருந்தும் அழைத்துப்பார்த்துவிட்டார். திருனேஷ்வரன் அழைப்பை ஏற்கவேயில்லை. “என்ன சொன்னான்?” என கேட்கும்போதே கண்கள் கலங்கிவிட்டது செல்லம்மாவிற்கு.

“எப்படி இருக்கேன்? என்ன பண்றேனு கேட்டுச்சும்மா, எம்.பி.பி.எஸ் செகண்ட் இயர் படிக்கிறேனு சொன்னதும் ரொம்ப சந்தோசப்பட்டுச்சு. எங்க படிக்கிறேனு கேட்டுச்சு, திருநெல்வேலி கவர்மண்ட் மெடிக்கல் காலேஜ்லனு படிக்கிறேன், இப்போ லீவ்ல வந்திருக்கேன், வீட்டுலதான் இருக்கேன், அம்மாகிட்ட கொடுக்கறேனு சொன்னேன்.

உன் அண்ணன் தப்பு செய்திருக்கமாட்டானு நீயாவது என்னை நம்புறியாடானு கேட்டுச்சும்மா. கேட்கும்போதே அழ வந்திருக்கும்போல. குரல் ரொம்ப கரகரனு வந்துச்சு. அண்ணன் கேட்குறதை பார்த்தா தப்பு பண்ணியிருக்கமாட்டாங்கனு தோணுதும்மா. நாமதான் அண்ணாவை தப்பா நினைச்சிட்டிருக்கமோ?” என கண்கலங்கினாள் வெண்பா.

“என்ன சொல்ற வெண்பா?” எனப் பதறினார் செல்லம்மாள்.

“ஆமாம்மா… நானும் இத்தனை வருசம் அண்ணனை தப்பாதான் நினைச்சிட்டிருந்தேன். ஆனா இன்னைக்கு அண்ணன் பேசினதுக்கப்புறம் அப்படி இருக்காதுனு தோணுது”

அப்படியும் இருக்குமோ? அன்று அந்த பெண் அத்தனை தீர்க்கமாக சொன்னாளே… இந்த விசயத்தில் ஒரு பெண் பொய் சொல்வாளா என்ன? என்ற புது கலக்கம் பிறக்க, “வேற என்ன சொன்னான்?” என பதட்டத்தோடு கேட்டார் வில்வராஜ்.

“நல்லா படி, அப்பாம்மாகிட்ட என்னைப்பத்தி யோசிக்க வேண்டாம்னு சொல்லு. நான் விடுதலையாகி வெளில வந்துட்டேன். அட்ரஸ் மெஸேஜ் பண்றேன், என்னோட சர்டிஃபிகேட்ஸ்லாம் அனுப்பிவைனு சொல்லிட்டு கட் பண்ணிடுச்சும்மா” என்றாள் வெண்பா.

பொன்மணி வழக்கில் கைதாவதற்கு பத்து நாள்களுக்கு முன்னே, வேறு வேலைகிடைத்ததால் முன்பு வேலை செய்துகெண்டிருந்த கம்பெனியில் தனது சான்றிதழ்களை வாங்கிக்கொண்டுதான் வீட்டிற்கு வந்திருந்தான் திருனேஷ்வரன்.

இவனின் சான்றிதழ்கள் வீட்டில் இருக்கிறதென்பதை தற்போதுதான் உணர்ந்தார்கள் செல்லம்மாவும் வில்வராஜும்.

செல்லம்மாள் “திரும்பவும் போன் செய்தான்னா, சர்டிஃபிகேட் வேணும்னா வீட்டுக்கு வந்து எடுத்துட்டு போறதாம். அம்மா அனுப்பி வைக்க கூடாதுனு சொல்லிட்டாங்கனு சொல்லு” என்றார் ஆற்றாமையோடு.

அன்று மதியம்போல் திருனேஷ்வரன் தனது விலாசத்தை குறுஞ்செய்தியாக அனுப்பிவைத்தான் வெண்பாவிற்கு. அன்னை சொன்னதை போல குரல்வழி செய்தி அனுப்பினாள் திருனேஷ்வரனுக்கு.

அதை பார்த்தான். ஆனால் பதில் அனுப்பவில்லை. தங்கையிடம் மீண்டும் சான்றிதழ்கள் பற்றியும் கேட்கவில்லை. இரண்டு நாள்கள் கழிந்திருக்க, திருனேஷ்வரனிடமிருந்து அழைப்பும் வரவில்லை. குறுஞ்செய்தியும் வரவில்லை.

“அம்மா நாளைக்கு நான் திருநெல்வேலி போய்டுவேன். அண்ணாக்கு சர்டிஃபிகேட்ஸ் அனுப்பி வச்சிடறேன்ம்மா. அங்க எதாவது வேலைக்கு ஏற்பாடு செய்திருக்கும்னு நினைக்கிறேன்.  சர்டிஃபிகேட் கேட்பாங்கதான? நாம அனுப்பாம விட்டு கிடைச்ச வேலையும் போய்ட போகுதும்மா” என்றாள் வெண்பா.

“அவன் வேலை தேடுறது இருக்கட்டும். முதல்ல எங்க தங்குவான்? எப்படி சாப்பிடுவான்? வேலைதான் இப்போ முக்கியமா? அவனைப் பார்த்து நாலரை வருசம் ஆச்சு. விடுதலையானவனுக்கு என்னை வந்து பார்க்கனும்னு தோணல” என வெடித்தார் மகளிடம்.

ஆழ்ந்த யோசனையில் வில்வராஜ் அமைதியாக இருக்க, “தப்பு செய்யும்போது யோசிச்சிருக்கனும். அதைவிட்டுட்டு நம்மளை ஏங்க வைக்கிறது எந்த விதத்துல நியாயம்?” என மீண்டும் புலம்பினார்.

“ம்மா நீ இப்படி யோசிக்கிறதுதான் அண்ணாக்கு கஷ்டமா இருக்கும்னு நினைக்கிறேன். அதான் இங்க வரல போல” என்றாள் வெண்மதி.

“பேசலைனா உண்மை இல்லைனு ஆகிடுமா?” என மகளிடம் வெடித்தவர், “இவன் பண்ணின வேலையால வேலை செய்திட்டிருந்த ஸ்கூல், அக்கம் பக்கத்துல இருக்கவங்க, சொந்தகாரர் மத்தியிலனு எத்தனை அவமானத்தை சந்திச்சிருக்கோம்?

இது எல்லாத்துக்கும் மேல அந்த பொண்ணுக்கு செய்த பாவத்தை எங்க போய் துடைக்கிறதுனு தினம் தினம் குற்றவுணர்வுல மனசு கிடந்து தவியா தவிக்குது.

இத்தனைக்கும் மத்தியில ஒத்த வார்த்தை ஏன்டா இப்படி செய்தேனு கூட நான் கேட்கலையே.. இதுக்கு மேல என்ன செய்யட்டும்?” என தலையில் அடித்துக்கொண்டு அழவே, அன்னை பேசியதனைத்தும் தவிர்த்து அழுவதை மட்டும் பதிவு செய்து அண்ணனிற்கு அனுப்பி வைத்து, ‘தயவு செய்து ஒருமுறை அம்மாகிட்ட பேசிடுண்ணா” என்று குறுஞ்செய்தி அனுப்பி வைத்தாள் வெண்மதி.

செய்தியைப் பார்த்தவன் பத்து நிமிடம் கழித்து அழைத்தான் அன்னையின் கைப்பேசிக்கு. செல்லம்மாள் அழுது கொண்டிருக்க, புது எண்ணாக இருந்தபோதும் மகனாக இருக்குமோ என்று வில்வராஜ் அழைப்பை ஏற்று, “திருனேஷ்” என்றார் ஏக்கக்குரலில்.

“அம்மா எதுக்குப்பா இப்படி அழறாங்க?”

“எப்படிடா இருக்க? வீட்டுக்கு வாடா” என்றார் கெஞ்சலாக.

“இந்த பொம்பளபொறுக்கி உங்களுக்கு மகனா வேண்டாம்ப்பா. என் வழிய நான் பார்த்துக்கிறேன். நீங்க வெண்பாவை பாருங்க” என்றான் திருனேஷ்வரன்.

“பொம்பளபொறுக்கியா? என்ன பேச்சுடா பேசுற?” என திட்டினாலும் குரல் ஆற்றாமையோடு இருக்க, “அதானப்பா உண்மை… சின்ன பொண்ணை தப்பா பார்த்தவனாச்சே, என் செயலுக்கு பேரு அதான?” என்றவன், “நான் உங்களுக்கு மகனா இருக்க வேணாம். அதுக்காக உங்களை கஷ்டப்பட விடமாட்டேன்ப்பா.

என்னை படிக்க வைக்க எவ்வளோ கஷ்டப்பட்டுருக்கிங்கனு எனக்கு தெரியும். உங்களை நல்லபடியா பார்த்துக்கிற பொறுப்பு எனக்கு இருக்கு. கொஞ்ச நாள் பொறுத்துக்கோங்க. ஒருவேலையை பிடிச்சிட்டேன்னா மாசமாசம் பணம் அனுப்பிடுவேன்” என்றான்.

“யாருக்கு வேணும்டா உன் பணம்?” என அதட்டியவர் “உன் அம்மா கேக்குறா, பேசு” என்று மனைவியிடம் மொபைலை நீட்டினார்.

“திருனேஷ்” என்ற அன்னையின் குரல் கேட்டதும் சற்று உடைந்துதான் போனான் திருனேஷ்வரன்.

எச்சிலோடு விழுங்கி மனதின் பாரத்தையும் முடிந்தவரை விழுங்கிய பின்னே “ம்” என்றான்.

மகன் செய்த தப்பெல்லாம் பின்னுக்குப்போய், நான்கரை வருடங்களாக மகனைப் பாராத ஏக்கம் முன்னுக்கு வந்திருக்க, “இங்க வரக்கூடாதுனு முடிவு பண்ணிட்டியா? எனக்கு எதுக்குடா இத்தனை தண்டனை? நான் என்னடா பாவம் செய்தேன்?” என்றார் கதறலோடு.

“உங்க மகனா இருக்க நான் தகுதியில்லாதவன். அவ்வளோதான். மத்தபடி பெருசா ஏதும் யோசிக்காதிங்க. இப்போதைக்கு என்னால அங்க வர முடியாது. வெண்பாக்கு அட்ரஸ் மெஸேஜ் பண்ணியிருக்கேன், என் சர்டிஃபிகேட்ஸ் அனுப்பி வைங்க” என்றான்.

தாம்தான் இப்படி தவித்துக்கொண்டிருக்கிறோம், ஆனால் திருனேஷவரனுக்கு தங்களை பார்க்கும் ஆசையோ ஆர்வமோ சிறிதும் இல்லை என்பதை அவனின் ஆர்பாட்டமில்லாத குரலிலேயே புரிந்துகொண்டார் செல்லம்மாள். இருப்பினும் மகனை காணும் ஆவலை கட்டுப்படுத்த முடியாமல் போகவே, “சர்டிஃபிகேட் வேணும்னா வீட்டுக்கு வா” என்றார்.

“சரி வேணாம் விடுங்க” என்று இணைப்பை துண்டித்தவன், தந்தையின் எண்ணிற்கு அழைத்து, “அந்த அட்ரஸ் நான் தங்கியிருக்குற அட்ரஸ் இல்லப்பா. என் ஃப்ரண்டோட அட்ரஸ். அவன்கிட்ட இந்த உதவியை கேட்கவே ரொம்ப தயங்கித்தான் கேட்டேன். நீங்க வந்தாலும் நான் அங்க இருக்கமாட்டேன், நான் எங்க இருக்கேனு அவனுக்கும் தெரியாது. அதனால கண்டிப்பா என்னை பார்க்க வரக்கூடாது” என்று இணைப்பை துண்டித்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!