Skip to content
Post Views: 3,020
“ஏன் சித்தி இப்படி பண்ணின?”
ரித்துவின் இந்த குரலே திரும்ப திரும்ப சஷியின் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்தது!
அப்படியே நிலைத் தடுமாறி கீழே விழப் போனவரை தன்னோடு தாங்கிப் பிடித்துக் கொண்டார் ரேவதியம்மா.
“அம்மா.. அம்மா.. நிதானமா இருங்க..” என்று சொல்லி, அவளைக் கைத்தாங்கலாக அருகில் இருந்த சோபாவில் அமர வைத்தார்.
Advertisement
பானுவும் மெல்ல அடியெடுத்து வைத்து அவர் அருகில் அமர்ந்தார்.
“பானு..பானு.. என்னைப் பார்த்து, என்னைப் பார்த்து என்ன வார்த்தை கேட்டுட்டான் ரித்து!” அடி வயிற்றில் இருந்து கேவல் எழுந்தது அவரிடமிருந்து!
தோழியின் தலையைக் கோதி விட்டு, தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டு ஆசுவாசப்படுத்தினார் பானு,
Advertisement
சிறிது நேரம் அப்படியே இருந்தவர், கண்களைத் துடைத்துக் கொண்டு, எழுந்து பானுவின் அறைக்குள் சென்று கட்டிலில் படுத்துக் கொண்டார்.
Advertisement
அவரின் நினைவுகள் பின்னோக்கி சென்றன.
—-
“மது அருந்த மாட்டேன்.
Advertisement
மாமிசம் சாப்பிட மாட்டேன்.
பெண்களை தாயாக, சகோதரியாக மதித்து நடப்பேன்!” என்று பல்வேறு உறுதிமொழிகள் கொடுத்த பின் தான் காந்தி தாத்தாவுக்கு அவரின் அம்மாவிடமிருந்து லண்டன் சென்று படிக்க அனுமதி கிடைத்தது என்று வரலாற்றில் படித்து இருப்போம்.
கிட்டத்தட்ட, அந்த அளவு உறுதிமொழிகள் கொடுத்த பின் தான்,
அதாவது எனக்கு படிப்பு மட்டும் தான் முக்கியம், வேறு எந்த ஒரு, சினிமாவிற்கு போவது போன்ற கேளிக்கைகளுக்கோ, நண்பர்களுடன் சுற்றுலா போவது, வெளியில் சுற்றுவது மாதிரி எந்த ஒரு காரியங்களிலும் ஈடுபட மாட்டேன் உள்ளிட்ட பல உறுதிமொழிகள் வாரி வழங்கியும்,
கல்லூரிப் பேராசிரியர்களை சிபாரிசுகள் செய்ய வைத்தும், அவர்களுக்கு கிடைத்து இருக்கும் ரொம்பவும் கிடைப்பதற்கு அரிய அந்த பல்கலைகழக எம்.பி.ஏ சீட்டின் அருமை பெருமைகளை மீண்டும் மீண்டும் பேசிய பின் தான் ஒருவழியாக, இரட்டையர்களான ரிஷி பாலாவிற்கும் சஷி பாலாவிற்கும் மேற்கொண்டு எம்.பி.ஏ படிக்க வீட்டில் அனுமதி கிடைத்தது!
மேலும் அவர்களின் ஒன்று விட்ட அத்தையின் வீடு பல்கலைக்கழகம் அருகில் ஐந்தே கிலோ மீட்டர் தொலைவில் இருந்ததும், அத்தையின் கணவரின் சிபாரிசும் ஒரு காரணம்!
அத்தைப் பையன் வசந்த்திற்கும் சஷி பாலாவிற்கும் சிறு வயது முதல் கொஞ்சம் பப்பி லவ் இருந்து வந்தது!
பின் பெரியவர்கள் ஆனதும் அந்த காதல் தெளிந்த காதலாக தொடர்ந்தது!
அது வசந்தின் பெற்றோருக்கு நன்றாகவே தெரியும்!
சஷி பாலா வீட்டினருக்கும் கொஞ்சம் தெரியும்.
சொந்தம் மற்றும் சமமான அந்தஸ்தில் இருந்ததால், தெரிந்தும் தெரியாத மாதிரி இருந்து வந்தனர்!
வசந்தின் அப்பாவிற்கு திருச்சி மாத்தூரில் சொந்தமான கம்பெனி இருந்தது.
சஷி பாலாவும் எம் பி ஏ முடித்தால் வருங்காலத்தில் அவரது கம்பனியில் பொறுப்பேற்க வசதி என்று தான் அவர் சிபாரிசு செய்தார்.
ரிஷி பாலாவும் சஷி பாலாவும் இரட்டையர்கள் என்றாலும் குணாதிசயங்கள் வேறுபட்டு இருந்தன!
ரசனைகளும், பொழுது போக்குகளும் கூட வேறு வேறு தான்!
சஷி பாலாவிற்கு கொஞ்சம் துணிச்சல் அதிகம்!
மேடை பயம் அறவே இல்லை!
பேச்சுப் போட்டிகளில், பட்டிமன்றங்களில் பங்கு பெறுவாள் என்றால், ரிஷி பாலா, கட்டுரைப் போட்டி, ஓவியம் போன்றவைகளில் பங்கு பெறுவாள்!
சஷி பாலாவிற்கு புத்தக வாசிப்பு மிகவும் பிடித்தம்!
ரிஷி பாலாவிற்கு அதில் விருப்பம் இல்லை.
சஷி பாலாவிற்கும் வசந்திற்கும் ஒத்த ரசனைகள்!
அவர்களோடு இன்னொரு ஒத்த ரசனைக்காரன் இணைந்தான்!
அவன் சதீஷ்!
அவர்களோடு பல்கலைக்கழகத்தில் ஒன்றாக பயில்பவன்.
வயதான பெற்றோருக்கு கொஞ்சம் காலம் கடந்து பிறந்த கடைசி மகன்!
அவனின் நான்கு அண்ணன்கள் அக்காக்கள் அனைவருக்கும் அவனுக்கும் வயது வித்தியாசம் மிக அதிகம்!
அவன் அம்மா, தனக்கு மெனோபாஸ் வந்து விட்டது தவறாக எண்ணிக் கொண்டு அஜாக்கிரதையாக இருந்து விட்டு, பின் இவனை உண்டாகி இருப்பதை விட்டதை கொஞ்சம் தாமதமாகவே உறுதி செய்து அறிந்த பின் பெற்றெடுத்த கடைக் குட்டி!
அவனுக்கும் சஷி பாலா, மற்றும் வசந்திற்கும் ஒத்த கருத்துக்கள், ரசனைகள்!
மூவரும் தங்கள் படித்த புத்தகத்தை பற்றி மணிக்கணக்கில் விவாதிப்பர்!
மூவருக்கும் சோழதேச வரலாறு மிகவும் பிடித்தமான ஒன்று!
தேடித் தேடித் படிப்பார்கள்!
பொன்னின் செல்வன் அவர்களுக்குப் பிடித்த காவியம்!
ராஜராஜ சோழனும் வந்தியத்தேவனும் அவர்களின் கனவில் கூட வந்தார்கள்!
முக்கியமாக சதீஷிற்கு.
“எனக்கு ரொம்ப ஆசை! வந்தியத் தேவன் குதிரையில் சென்ற ஊர்களுக்கு எல்லாம் நான் பைக்கில் சென்று வர வேண்டும்!
வந்தியத் தேவனின் பயணத்தை எல்லாம் தான் நான் பைக்கில் மேற்கொள்ள வேண்டும்” என்று சிலாகித்து சொல்வான்.
தொடர்ந்து ராஜ ராஜ சோழனைப் பற்றி எழுதும் ஒரு எழுத்தாளர் ஒருவர் அவர்கள் மூவரின் அபிமான எழுத்தாளர்!
அவரை எப்படியாவது வாழ்க்கையில் ஒரு முறையாவது சந்தித்து பேசி விட வேண்டும் என்பது மூவரின் பேரவா!
முக்கியமாக சதீஷிற்கு!
அவனிடம் யாராவது இது தான் ராஜராஜ சோழன் நின்ற இடம், குதிரையை கட்டியிருந்த இடம், நின்று தண்ணீர் குடித்து விட்டுப் போன இடம் என்று எதை சொன்னாலும் கண்ணை மூடிக் கொண்டு நம்பி விட்டு அங்கு ஒருமுறை சென்று வந்து விடும் அளவு பைத்தியம் ராஜ ராஜ சோழன் மேல்!
அவர்கள் நால்வரும் விடுமுறை நாட்களில் வசந்தின் வீட்டில் கூடி அரட்டை அடிப்பதுண்டு!
அவர்கள் அரட்டையில் ரிஷி பாலா வெறும் பார்வையாளர் மட்டுமே!
சில சமயம், சஷி பாலாவிற்கும் வசந்திற்கும் தனிமைக் கொடுத்து சதீஷ் ஒதுங்கும் போது அவனுக்கு பேச்சுத் துணை ரிஷி பாலா மட்டுமே!
ஆனால் ரிஷி பாலாவிற்கு அவனிடம் பேசவே தயக்கம் வரும்!
ஆனால், அவனை பார்க்க நேரிடும் போதெல்லாம், அவள் கண்களில் அவ்வளவு ஆர்வம், அன்பு தெரியும்!
அதை உணர்ந்தே இருந்தான் சதீஷும்!
அவனுக்கும் எப்போதும் அமைதியான புன்னகையுடன் இருக்கும் ரிஷி பாலாவின் மேல் காதலும் விருப்பமும் இருக்க தான் இருந்தது!
கூடவே தயக்கமும்! அவள் வீட்டினரின் ஜாதிப்பற்று பற்றி நன்கு தெரிந்து இருந்ததால்!
அதனால் புரிந்தும் புரியாத மாதிரி இருந்து வந்தான்!
ஆனால் எத்தனை நாள் இப்படி கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்க முடியும்? அதுவும் காதலில்!
ஒரு நாள் அதுவும் வெளிப்பட்டு விட்டது!
அன்று ஒரு புதன் கிழமை!
ஏதோ ஒரு அரசு விடுமுறை தினம்!
அவர்களுக்கு விடுமுறையாக இருந்ததால், வெளியில் செல்ல முடிவு எடுத்தார்கள் சஷி பாலாவும் வசந்தும்!
தனியாக செல்ல அனுமதி கிடைக்காது என்பதால், சகோதரிகள் இருவரும் கோவிலுக்கு சென்று வருவதாக சொல்லி கிளம்பி வெளியே வந்தனர்.
சஷி பாலாவும் வசந்தும் முக்கொம்பு சென்று விட, ரிஷி பாலா திருவானைக் கோவிலில் இறங்கிக் கொண்டாள்.
விசேஷம் எதுவும் இல்லாத நாள் என்பதால் அமைதியாக இருந்தது கோவில்!
முதலில் ஜம்புகேஸ்வரரை தரிசித்து விட்டு, அகிலாண்டேஸ்வரி சன்னதி நோக்கி சென்றவள், அங்கே சஷி பாலா, சதீஷ் மற்றும் வசந்தின் அபிமான எழுத்தாளரை அங்கே கண்டாள்!
அம்மன் சன்னதி முன் நின்று கொண்டு மனமுருகி அபிராமி பதிகம் பாடிக் கொண்டிருந்தார் அவர்!
அவரைக் கண்ட அவள் ஆச்சர்யம்!
அய்யோ இப்போ சதீஷ் இருந்தால் ரொம்ப சந்தோசப் படுவானே என்று நினைத்தவள், விரைந்து நடையை எட்டிப் போட்டு, வெளியில் வந்து ஒரு பப்ளிக் டெலிபோன் பூத்தில் இருந்து கொண்டு சதீஷ்க்கு அவனின் பேஜருக்கு அவர் வருகையைப் பற்றி ஒரு மெசேஜ் அனுப்பினாள்!
(Pager என்பது தொன்னூறுகளில் இருந்த, மற்றும் செல்போன் வருகையால் கொஞ்ச வருடங்களில் வழக்கொழிந்து போன, ஒரு வழிப்பாதை தகவல் தொடர்பு சாதனம்).
அவள் அனுப்பிய தகவலைப் பார்த்து விட்ட, சதீஷ் அடுத்த பத்து நிமிடத்தில் எங்கிருந்தோ பறந்து வந்து விட்டிருந்தான் அவன் பைக்கில்!
கோவிலில் யானை கட்டும் இடத்தில் அவனுக்காக காத்திருந்தவள், அவன் வந்தவுடன் அவனிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினாள்.
“ரிஷி.. ஒரு நிமிஷம்”. என்றவன், “தாங்க்ஸ்” என்று சொல்லி விட்டு, “நீங்க வசந்த் வீட்டுக்குப் போய் வெயிட் பண்ணுங்க. அங்க யாரும் இல்லை இப்ப. அவங்க அம்மா அப்பா ஒரு சொந்தக்காரங்க வீட்டுக்குப் போய் இருக்காங்க. வழக்கமா வைக்கிற இடத்தில் சாவி இருக்கும். நீங்க போங்க.
அவனும் சஷியும் வந்த பின்னே நீங்க சேர்ந்து ஹாஸ்டல் போக சரியாக இருக்கும்” என்று சொல்லி விட்டு அந்த எழுத்தாளரை சந்திக்க சென்று விட்டான்.
அவன் சொன்ன படியே வழக்கமாக அவர்கள் சந்தித்து அரட்டை அடிக்கும் வசந்தின் அறையில் அவள் காத்துக் கொண்டிருந்தாள்.
அவனின் அந்த அபிமான எழுத்தாளரை சந்தித்து விட்டு, மனம் முழுக்க சந்தோசத்துடன் அங்கே வந்தான் சதீஷ்.
சஷியும் வசந்தும் இன்னுமும் வர வில்லை. அவன் மட்டுமே வந்திருந்தான்.
“ரொம்ப தாங்க்ஸ்” என்றான் மறுபடியும்.
“அவரை பார்த்துப் பேசினா நீங்க எவ்வளவு ரொம்ப சந்தோசப்படுவீங்கன்னு எனக்குத் தெரியும் அதான் சொன்னேன்.
நீங்க ஹேப்பி ஆனதைப் பார்த்து நானும் ஹேப்பி” என்று சொல்லி தன் வழக்கமான புன்னகையை சிந்தினாள்.
அவள் அருகே வந்தான் சதீஷ். வந்தவன், டக்கென்று அவள் எதிர்பாராத நேரத்தில் அவளை தன்னோடு இழுத்து அணைத்துக் கொண்டான்!
ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டு பேசினான் அவன்!
“ஆமா.. ஆனா இன்னிக்கு ஒரு விசயம் நான் நல்லா புரிஞ்சுக்கிட்டேன். நமக்கு துக்கத்தை ஷேர் பண்ணிக்க கூட ஆள் வேண்டாம் போல.
அது எவ்வளவு பெரிசா இருந்தாலும் கூட நமக்குள்ளேயே போட்டு முழுங்கி விடலாம் போல. ஆனா சந்தோசத்தை ஷேர் பண்ணிக்க தான் ஆள் வேணும்.
அவங்க நம்ம கூட சேர்ந்து சந்தோசப்படுறவங்க வேணும்.
பொறாமை படாத ஆளா இருக்கணும்.
அந்த சந்தோசத்தை பணத்தை வச்சு அளவீடு செய்யாதவங்களா இருக்கணும்!
நம்முடைய சந்தோசத்தின் டெப்த் புரிஞ்சவங்களா இருக்கணும். அப்படி ஒரு ஆளா நீ இருக்கிறது ரொம்ப புடிச்சிருக்கு!”
அப்படியே திகைத்துப் போய் விட்டாள் ரிஷிபாலா!
அவன் அவளை விடாமலே மேலும் பேசினான்.
“நீ வேணும் எனக்கு! எப்பவும்! இதே மாதிரி! இருப்பியா?”
“ம்ம். இருப்பேன்!” என்று வெட்கத்துடனே சொன்னவள், அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
“நாம கல்யாணம் செஞ்சுக்கலாமா?” அவன் கேட்டான்.
“ம்ம்.” என்றாள் அவள் தலையை நிமிர்த்தாமலே.
“உங்க வீட்டுல ஒத்துக்குவாங்களா?”
“டூ ஹன்ட்ரெட் பெர்சன்ட் ஒத்துக்க மாட்டாங்க! உங்க வீட்டுல?”
“யார் இருக்கா? தடை பண்ண? என் அப்பா நான் யூ.ஜி. படிக்கும் போதே இறந்து விட்டார்.
அம்மா ரொம்ப வயசானவங்க.
வீட்டோட ஒரு ஆள் போட்டுப் பார்த்துட்டு இருக்கோம்.
என் கல்யாணத்தை எடுத்து செய்யவோ, இல்ல மறுப்பு சொல்லவோ ஆள் இல்லை!
என்னோட கூடப் பிறந்தவங்க எல்லாம் அப்ராடில்.
அம்மா இறந்த செய்தி சொன்னா வருவாங்க அவ்வளவு தான் அவங்களோட என் ரிலேஷன்ஷிப்!” கொஞ்சம் வறண்ட குரலில் சொன்னான் சதீஷ்.
“நான் இருப்பேன் உங்களோட என் கடைசி மூச்சு வரை!” என்றவளை இன்னமும் இறுக்கிக் கொண்டு, முத்தமிட்டான் சதீஷ்!
அவர்கள் முத்தமிட்டுக் கொண்டிருந்த போது,
“வெட்கம்.. வேதனை.. அவமானம்!” என்ற சஷி பாலாவின் குரல் கேட்டு, விலகி நின்றனர் இருவரும்!
“டேய். வசந்த், நாமளும் தான் சின்ன வயசுல இருந்து லவ் பண்றோம்.
ஒரு வாட்டியாவது என் கையைப் பிடிச்சு ஒரு கிஸ் பண்ணியிருப்பியா நீ?
இங்க பார், பாஸ்ட் ட்ராக்ல லவ் பண்ணி, லிப்லாக் வரை வந்துட்டாங்க!” என்றாள் பொய்க் கோபத்துடன் வசந்தின் தலையில் குட்டி!
அசடு வழிந்து நின்றார்கள் சதீஷும் ரிஷிபாலாவும்.
“பாரேன். இந்த பூனையும் பால் குடிக்குமா ரேஞ்சிற்கு நிக்கிறா பார்!” என்று சொல்லிக் கொண்டு, வேகமாக அவளை தன்னோடு அணைத்துக் கொண்டாள் சஷிபாலா.
“சதீஷை காட்டிலும் உனக்கு நல்ல பேர் யார் இருக்க முடியும்? ரொம்ப சந்தோசம் ரிஷி எனக்கு! நீ யாரைப் பத்தியும் கவலையேப் படாதே! நாங்க இருக்கோம்!” என்றாள் வசந்த்தின் கைகளைப் பற்றிக் கொண்டு!
“ஆமா ரிஷி” என்றான் வசந்தும்!
—–
இரு ஜோடிகளும் காதல் வானில் சிறகடித்தப் படியே தங்களின் படிப்பையும் முடித்தனர்.
இதன் இடையில், சதீஷின் அம்மாவின் உடல்நிலை மேலும் மோசமாகிக் கொண்டிருக்க, அவனைப் பற்றிய கவலை தான் அவருக்கு.
தான் கண்ணை மூடுவதற்குள் அவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி குடும்பம் அமைந்து விட்டால் நிம்மதியாக கண்ணை மூடலாம் என்று இருந்தார் அவர்.
அவருக்காகவே திருமண முடிவை விரைந்து எடுக்க வேண்டியது ஆகி விட்டது ரிஷிபாலாவுக்கும் சதீஷுக்கும்.
சஷி பாலா மற்றும் வசந்தின் துணையுடன் அவர்கள் திருமணம் வீட்டினரின் கடும் எதிர்ப்பை மீறி நடந்தது.
ரிஷிபாலாவைத் தலை முழுகி விட்டதாகவே சொல்லி விட்டனர் அவள் குடும்பத்தினர்.
இதை எதிர்பார்த்தே இருந்ததால், சதீஷும் ரிஷிபாலாவும் திருச்சியிலே தனிக்குடித்தனம் தொடங்கி விட்டிருந்தனர்!
சதீஷ், தன் கேரள நண்பன் ஒருவனுடன் சேர்ந்து ரெக்சின் பேக்ஸ் உற்பத்தி நிறுவனம் ஒன்றைத் தொடங்கி விட்டான்.
அதில் ரிஷிபாலாவும் ஒரு பங்குதாரர்!
அடுத்த ரிஷிபாலா கருவுற்றாள்.
அப்போதும் கூட அவள் வீட்டினர் அவளை ஏற்றுக் கொள்ளவில்லை!
சஷி பாலா மட்டும் அவளுக்கு ஆதரவாக இருந்து வந்தாள் வீட்டினர் அறியாமல்!
ரிஷிக்கு நாள் தள்ளிப் போனதில் இருந்து ஆரம்பித்து, அவளை செக்கப்புக்கு கூட்டி செல்லும் போதும், எளிமையாக நடந்த வளைகாப்புவரை கூடவே இருந்தாள்.
சதீஷ் பெயரையும், ரிஷிபாலா பெயரையும் இணைத்து ஆண் குழந்தை பிறந்தால் ரித்தீஷ் எனவும் பெண் குழந்தையாக இருந்தால் ரித்தீஷா எனவும் பெயர் தேர்வு செய்வது வரை சஷிபாலா தான் எல்லாம் ரிஷிக்கு!
கூடவே வசந்தும் துணையிருந்தான்!
அன்று ஆடிப்பூரம்.
ஸ்ரீரங்கத்தில் இருக்கும் வெளி ஆண்டாள் சந்நிதிக்கு போக வேண்டும் என்று ரிஷி ஆசைப்பட, அவளைக் கூட்டி சென்றாள் சஷி.
அங்கே பிரசாதமாக கொடுக்கப்பட்ட வளையல்களை ரிஷிக்கு அணிவிக்க போன சஷியைத் தடுத்தார் ஒரு பூக்காரப் பெண்மணி.
“கண்ணு.. வளையல் மேல வளையல் போடக்கூடாதும்மா, நீ போட்டுக்க, அடுத்த வருஷமே உனக்கும் கல்யாணம் ஆகி, நீயும் வளையல் போட்டுக்குவ!” என்றார்.
“எனக்கு பிள்ளைப் பிறந்தாலும் இவ வயித்துல இருக்கிற பிள்ளை தான் எனக்கும் முதல் குழந்தை!” என்றாள் சஷி அதற்கு வாய்ப்பே இல்லை என்று அறியாமல்.
“ரிஷி, நான் இங்க அத்தை வீட்டுல தங்கி இருந்துட்டு, காலையில தான் ஊருக்குப் போகப் போறேன். கவனமா இரு”. என்று சொல்லி சென்றாள் சஷி.
பிசினெஸ் விசயமாக வெளியூர் சென்றிந்தான் சதீஷ்.
பக்கத்து வீட்டுக்காரம்மா, அவனை அழைத்து,
“தம்பி, இனி நீ உன் பொண்டாட்டியை தனியே இப்படி விட்டுட்டுப் போகாதே. கூடவே இரு. மாசம் நெருங்குது” என்றார்.
“சரிங்கக்கா” என்று உள்ளே சென்றான் சதீஷ்.
அது முதல் அவளை தனிமையில் அதிகம் விடவில்லை அவன்.
வழக்கம் போல் இரவு உணவை சீக்கிரமே முடித்து விட்டு, மனைவியுடன் வாக்கிங் சென்று விட்டு திரும்பியிருந்தான் சதீஷ்,
அவன் வீட்டு போன் அடித்தது.
பேசியது அவன் பார்ட்னர்.
அவர்கள் ஒரு பெரிய லாப்டாப் தயாரிக்கும் நிறுவனத்திற்கு அவர்கள் கம்பெனி லோகோ பொறித்த லாப்டாப் பேக்ஸ் சப்ளை செய்யும் டெண்டரில் கலந்து கொண்டிருந்தனர்.
அது சம்மந்தமான மீட்டின் ஒன்றிற்கு சதீஷிற்கு பதில் அவன் பார்ட்னர் போகவிருந்தான் பெங்களூர் வரை!
அவன் தேவையான டாக்குமெண்ட்ஸ் எல்லாம் எடுத்துக் கொண்டு, ட்ரைன் ஏறுவதற்கு காத்திருக்கும் போது பொழுது போகாமல் ஒரு முறை டெண்டர் கோப்பினை பார்வையிட, அதில் ஒன்று இரண்டு இடங்களில் சதீஷ் மற்றும் ரிஷி பாலாவின் கையெழுத்துப் போடப்படாமல் இருப்பதை கவனித்தான்.
இப்போது மாதிரி இ டெண்டர் எல்லாம் இல்லை அப்போது. எல்லாமே நேரில் தான்!
உடனே அருகில் இருந்த பூத்தில் இருந்து கொண்டு சதீஷை அழைத்து சொன்னான் அவன்.
“நான் அங்க வந்து சைன் வாங்கிட்டு போக நேரம் இல்லை! ட்ரைன் மிஸ் பண்ணிடுவேன்! நீங்க சிஸ்டரை, இங்க அழைச்சிட்டு வந்து சைன் பண்ண முடியுமா?” என்று கேட்டான்.
“சரி” என்ற போனை வைத்தவன், அருகில் இருந்த ஆட்டோ ஸ்டான்ட் போனான் ஆட்டோவில் செல்ல எண்ணி.
ஒரு ஆட்டோ கூட அப்போது அங்கில்லை.
நேரம் வேறு ஆகிக் கொண்டிருந்ததால், வேறு வழியில்லாமல் கர்ப்பிணியான ரிஷிபாலாவை தன் பைக்கில் மெதுவாக அமர வைத்து மிகவும் ஜாக்கிரதையாக ஒட்டி சென்றான்.
ரெயில்வே ஸ்டேஷனில் வைத்து அவன் பார்னரை சந்தித்து தேவையான கையெழுத்துகளைப் போட்டு விட்டு வீடு திரும்பும் போது தான் அந்த கோரம் நடந்தது!
குறுக்கே ஒரு தெரு நாய் வந்து விட, பைக்கை கொஞ்சம் திருப்பியவன், யாரோ திருஷ்டி சுற்றிப் போட்டிருந்த பூசணிக்காய் மேல் விட்டு விட்டு, தடுமாறி பைக்குடன் கீழே விழுந்தான்.
கீழே விழுந்த ரிஷிபாலா வயிற்றில் அடிப்பட்டு விடாமல் பார்த்துக் கொள்ள எண்ணி புரண்டதில் அவள் தலையின் பின் புறம் பலமாக அடிப்பட்டது! மயக்கமானாள் ரிஷி!
சதீஷ்க்கு பெரிதாக அடியில்லை. காலை உதறி எழுந்தவன்,
“அய்யோ.. ரிஷி..” என்று அலறிக்கொண்டு அவளைத் தூக்கினான். அவன் கையெல்லாம் ரத்தம்! அதற்குள் யாரோ ஆம்புலன்சிற்கு போன் செய்து வந்து விட்டது!
அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டாள் ரிஷி.
அறுவை சிகிச்சையளித்து குழந்தையை வெளியில் எடுத்து விட்டார்கள்! குறைமாத குழந்தை என்பதால் அதையும் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தார்கள்.
சஷிபாலாவும் வசந்தும் ஓடோடி வந்து விட்டனர். கூடவே இருந்தனர்.
அவர்களை அழைத்துப் பேசினார் தலைமை மருத்துவர்.
“பேசண்டோட ஹஸ்பன்ட் இப்ப பேசினா கேக்கிற நிலமையில இல்ல! அதான் உங்க கிட்ட பேசுறேன்.
குழந்தை சேப் தான். கொஞ்ச நாள் இன்குபேட்டர்ல வைக்க வேண்டியிருக்கும். ஆனா உங்க சிஸ்டர் இப்ப கோமாவில் இருக்காங்க. நினைவு திரும்பாமலே கூட அவங்க இறந்து விடவும் சான்சஸ் நிறைய. நாங்க எங்களால முடிஞ்சத செஞ்சுட்டு தான் இருக்கோம்” என்றார்.
கடும் அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தவளைத் தன் தோளோடு அணைத்து ஆறுதல் சொன்னான் வசந்த்.
“ரிஷிக்கு ஒண்ணும் ஆகாதுடா. நீ தைரியமா இரு!” என்று சொன்னான்.
ஆனால் அடுத்த சில மணி நேரத்தில் வந்த செய்தி..
அவளை பொது இடம் என்றும் பாராமல் உருண்டு புரண்டு கதறி தீர்க்க வைத்தது!
error: Content is protected !!