Skip to content
Post Views: 1,139
பல நாட்களாகப் பாடுபட்ட அந்த அறுவை சிகிச்சையை முடித்துவிட்டு கேபினில் ஓய்வாக அமர்ந்திருந்தான் வாசுதேவன்.
இருக்கையில் தலை சாய்த்து விட்டத்தைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தவனின் கையில் கண்ணாடியிலான பேப்பர் வெயிட் சுழன்று கொண்டிருந்தது.
சாருலதா கூறிய வரிகள் தான் மந்திரம் போல் மீண்டும் மீண்டும் காதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன.
Advertisement
‘நேத்து நீங்க சிடுசிடுனு இருந்திங்களா.. அதான் அந்நியமா பட்டுச்சு! பேசவே பிடிக்காம டக்குனு எழுந்து போய்ட்டேன்..’
அதையே நினைத்துக் கொண்டிருக்கும் அளவுக்கு அவ்வளவு பெரிதாக என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.
ஆனால் அவள் கூறிய தோரணையோ.. கூறிய போதிருந்த ஏமாற்றம் சொட்டிய முகபாவனையோ.. கொஞ்சிய தமிழோ.. அவளது குரலிலிருந்த தவிப்போ, ஏக்கமோ ஏதோ ஒன்று..
Advertisement
இன்னதென பிரித்து ஊகிக்க முடியாத ஏதோவொன்று மீண்டும் அதே புள்ளியில் அவனை வட்டமிடச் செய்து கொண்டிருக்கிறது.
Advertisement
இத்தனைக்கும் என்றுமே அவனது சிந்தையை களவு கொள்ளும் சித்துக் குட்டி கூட இன்று சற்று ஒதுங்கி சற்று ஓரமாக நின்றாளே..
இனியும் சொல்லவா வேண்டும்?
வேறு யாரேனும் வந்து அவள் கூறியதையே அட்சரம் பிசகாமல் கூறியிருந்தால் கூட,
Advertisement
‘ஆமா, சிரிச்சி சிரிச்சி பேச நான் யாரு உனக்கு?’
‘அட நான் பேசலனு நீ ஏனம்மா இப்படி கவலப்படணும்?’
‘நான் எப்டி பேசினா உனக்கென்ன?’
‘சிடுசிடுனு இருந்தேனா.. என் முகமே அப்படித் தான்!’ என எதையாவது கத்தரித்துப் பேசி பேச்சை அத்தோடு முடித்துக் கொண்டிருப்பான். ஆனால் இவளிடம் மட்டும்..
“ப்ச்!” – கோட்டை மீறிய சிந்தனை நாலாபுறமும் சிதற முன்பு தலையை வேகமாக சிலுப்பிக் கொண்டான்.
என்ன தான் சொன்னாலும் அதன் பிறகு அவளிடம் கடுகடுக்க முடியாமல் தான் போனது, டாக்டர் வாசுதேவனுக்கு.
‘சிரிக்க சிரிக்க..’ இல்லை என்றாலும் பூவுக்கு நொந்து விடுமோ என்ற ரீதியில் அவனுக்கே பழக்கமில்லாத மென்மை பூசிய குரல் அவனது புத்தம் புது பரிணாமம்!
விஜிதா மற்றும் விஷாகனின் உடல் நிலை பற்றித் தெளிவாக விளக்கி, பணி நேரத்தை அட்டவணைப்படுத்தி விட்டு விடை பெற்றுக் கொண்டவனின் கடைகண் பார்வையையும், கார் வரை சென்று திரும்பிப் பார்த்த பெருமூச்சுடன் கூடிய ஆயிரம் கதை சொல்லிய கண்களையும் கூட அவள் தன் வசப்படுத்திக் கொண்டிருந்தாள்.
“ஓ நோ! யாரு எவங்கனு தெரியாத – உதவி கேட்டு என்னைத் தேடி வந்த ஒரு பொண்ணு.. என்னோட ஓய்வு நேரத்துல கூட அவளைப் பத்தி நான் ஏன் யோசிக்கிறேன்?” – நெடுமூச்சுடன் சலித்துக் கொண்டு இருக்கையில் இருந்து எழுந்து சாரளம் அருகே சென்றான்.
பழைய படி முந்தியடித்துக் கொண்டு சித்துக் குட்டி வந்து மனக்கண்ணில் நின்றாள்.
புன்னகைக்கத் துடித்த உதடுகளை நாவால் ஈரப்படுத்தி மெல்ல விரித்தான். கன்னத்தில் விழுந்த குழி பக்கத்து ஜன்னல் கண்ணாடியில் பிம்பமாய் பிரதிபலித்தது.
“செல்லக்குட்டிக்கும் அவங்க அப்பா போலவே கன்னத்துல குழி விழுதுல? பார்க்க அவ்ளோ கியூட்டா இருக்குடி தங்கம்..” என அவ்வப்போது கன்னம் கிள்ளி கொஞ்சும் ரித்திகாவின் முகம்..
ரித்திகா – வாசுதேவ பிரதாப்பின் அன்பு மனைவி!
இருவருக்கும் காதல் திருமணம் இல்லை தான். ஆனால் ஆரம்ப கால கட்டங்களிலே நல்ல புரிந்துணர்வுடன் கூடிய நடத்தையால் அவன் மனதை வென்று, ஒருசில மாதங்களிலேயே தெவிட்டாத காதல் வாழ்வில் மூழ்கிப் போனவர்கள் அவர்கள்.
அந்த நாட்களில் “உன்ன போல யாரும் என்னை ரொம்ப நல்லா புரிஞ்சிக்க மாட்டாங்க ரித்தி! ஐ அம் லக்கி டு ஹேவ் யூம்மா..” என அடிக்கடி அவன் கூறுவதுண்டு!
அப்படிப்பட்டவள்.. குறையாத காதலாலும், திணறடிக்கும் புரிந்துணர்வாலும் அவனைத் தனக்குள் சுழற்றிக் கொண்டவளே, அவனுக்கு அதிகமாக ஆறுதல் தேவைப்பட்ட அந்த நேரத்தில் தன்னந்தனிமையில் விட்டுச் சென்றாளே..
நினைக்கும் போதே ஆத்திரம் ஆத்திரமாக வந்தது, வாசுதேவனுக்கு.
வேண்டாமென உதறித் தள்ளிவிட்டு சென்றவளின் பின்னோடு அவன் அலையாத அலைச்சலா..
காதல் கொழித்த திருமண வாழ்வை காப்பாற்றிக் கொள்ள அவளிடம் கெஞ்சாத கெஞ்சலா..
ஆயினும் கிஞ்சித்தும் அவள் கண்டு கொண்டாளில்லையே!
“கல் நெஞ்சக்காரி!” என காதலில் அடி வாங்கிய அவன் மனம் அநாதரவாய் விட்டுச் சென்றவளை நூறாவது முறையாக ஈவிரக்கமின்றி வைதது.
திருமணமான புதிதில் எப்படியோ.. ஆனால் காதலில் விழுந்து எல்லாம் அவள் தானென்று ஆன பிறகு, வாசுதேவனின் அன்றாடம், அத்தியாவசியம் அனைத்தும் அவளைச் சுற்றி – அவளது நலனைக் கருத்திற் கொண்டதாய் மாறிப் போனது.
அவர்களின் நேச வாழ்வுக்கு அடையாளமாய் திருமணமான ஒரு வருடத்திலேயே ரித்திகா கருத்தரித்தாள்.
குழந்தையின் வரவால் அன்பும் அக்கறையும், தேடலும் ஊடலும், கொஞ்சலும் கெஞ்சலுமென கடந்து கொண்டிருந்த வாழ்வில் இருவரின் பந்தம் மேலும் நெருக்கமடைந்தது.
அந்த நெருக்கத்துக்கு மேலும் தீனி போடுவதாய் சித்துக் குட்டியின் டோவ்ன் சிண்ட்ரம் நிலை! ஆறுதலும், அரவணைப்பு என அதன் பிறகும் கூட எந்த மாற்றமும் இல்லை. அதே பற்று; அதே பிணைப்பு; அதே அரவணைப்பு.
ஒருநாள் திடீரென்ற அவசர அழைப்பு ரித்திகாவிடமிருந்து!
தலை போகிற காரியமாக அன்றி வேறு எந்த நேரத்திலும் ‘அறுவை சிகிச்சை’ என குறிப்புக் காட்டிய நேரங்களில் அவள் அழைப்பு விடுக்க மாட்டாள்.
அன்றைய சூழ்நிலையில் – இரத்த அழுத்தம் கூடிப் போய் தலையில் நரம்பு வெடித்து மயங்கி விழுந்த ஒரு நடுத்தர வயதுப் பெண்ணின் உயிருடன் போராடும் இக்கட்டான நேரத்தில் அவளிடமிருந்து தொடர் அழைப்பு!
மேஜையில் வீசப்பட்டிருந்த உயர் ரக அலைபேசி சைலன்ட் மோடில் அதிர்ந்தது. கையில் கட்டப்பட்டிருந்த ஸ்மார்ட் பேண்ட் – அழைப்பது யாரென்பதை வாசுதேவனுக்கு காட்டிக் கொடுத்தது.
அடுத்ததாக அசிஸ்டன்ட் அனு,
“டாக்டர், யுவர் வொய்ஃப் கீப்ஸ் கால்லிங். ரிசெப்ஷனிஸ்ட் திவ்யா ஏதோ அர்ஜென்ட்னு வார்டுக்கு வெளிய பரபரக்கறாங்க..” – பதற்றம் தொற்றிய குரலில் காதோரம் கிசுகிசுத்தாள்.
அதற்கெல்லாம் காது கொடுக்கும் நிலையிலா அவன் இருந்தான்?
“டோன்ட் ப்ளே அனு! இந்த நேரத்துல.. ப்ச், என் ஃபோன்ல ரித்திக்கு கால் யூ லேட்டர்னு டெக்ஸ்ட் பண்ணு!” – கடித்த பற்களுக்கிடையே சொற்களை அரைத்தான்.
அறுவை சிகிச்சை ; நோயாளியின் உயிர் என படபடக்கும் நேரத்தில் வந்து நொய் நொய்யென்றால் கோபம் வரத் தானே செய்யும்? உயிரென்றால் என்ன விளையாட்டாகப் போய் விட்டதா இவர்களுக்கு என்கின்ற ஆத்திரம் வேறு!
ஆனால் இந்த கோபமும், ஆத்திரமும் எதிர்தரப்பினரின் தீவிர நிலை அறிந்த பின்பும் தொடருமா என்று கேட்டால், நிச்சியம் அது சந்தேகமே!
ஈற்றில் ஆறேழு மணி நேரமாகத் தொடர்ந்த ஆபரேஷன் வெற்றிகரமாக முடிவுற்றது.
இருபத்தி நான்கு மணி நேரங்களில் நோயாளி கண் திறந்து விட்டால் இனி ஆபத்தில்லை என சம்பந்தப்பட்டவரின் உற்றார் உறவினரது மனம் குளிர்வித்து விட்டு வந்தவனை உலுக்கிப் போட்டது, ரித்திகாவின் அந்த ஒரு குறுந்தகவல்!
‘சித்தும்மா ஈஸ் நோ மோர்’
உடல் அதிர்ந்தது. கை கால்கள் செயலற்றுத் தொய்ந்து போயின. கண்கள் இருட்டி, மயக்கம் வரப் பார்த்தது. தொண்டைக்குழியில் நீர் வற்றி, பாலைவனத்தில் நீர் தேடி அலைந்து களைத்த நெடுந்தூரப் பிரயாணி போல் இருக்கையில் தொப்பென விழுந்தான்.
இதயம் துடிக்கிறதா எனத் தெரியவில்லை. ரித்திகா கூறிய தகவல் உண்மையா என்று கூட உறுதியில்லை.
ஆனால் அந்த வரி.. அவனின் உயிர் மூச்சல்லவா சித்துக்குட்டி? வாசுதேவனை உயிர்ப்புடன் மீட்டும் ஆதார சுருதியே அவள் தானே.. அவளே இல்லை என்ற பிறகும் இந்த கையளவான இதயம் துடிக்குமா என்ன..
நெஞ்சில் வலக்கரம் வைத்து அழுத்திப் பார்க்கும் போதே எதையும் கிரகிக்க முடியாமல் கண்கள் மேல் நோக்கி சொருகின. எல்லாம் ஒருசில நொடிகள் தான்!
“டாக்டர் ஆர் யூ ஓகே?” என்ற கூவலுடன் ஓடி வந்து அவனைத் தாங்கி நிறுத்தி முதலுதவிக்கு விரைந்த பிஏ அனுவை நன்றி பொங்கப் பார்த்தபடி அலைபேசியைக் கையில் எடுத்தான். அதிர்ச்சி வைத்தியத்தில் கரம் கிடுகிடுவென நடுங்கியது.
“டாக்டர் ரிலாக்ஸ், ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ?” எனக் கேட்டு உதவிக்கு முன் வந்தவளிடம் என்ன கூறினானோ.. அவள் எதைப் புரிந்து கொண்டாளோ உடனே ரித்திகாவுக்கு அழைப்பு விடுத்தாள்.
அழைப்பு முழுதாகச் சென்று கட்டாகியது. மீண்டும் மீண்டும் அழைத்தும் பலன் என்னவோ பூஜ்ஜியமே!
அடித்து பிடித்துக் கொண்டு அவன் வீட்டுக்கு வந்த போது, “ஐயா..” என வியர்த்த விறுவிறுத்த முகத்தோடு சுந்தரம் அவனை எதிர் கொண்டான்.
“என்னாச்சு சுந்தரம்? வெ.. வெயார் ஈஸ் சித்து..”
ரித்திகா விளையாட்டுக்குக் கூட அப்படி ஒரு செய்தியைச் சொல்ல மாட்டாள் என்ற நம்பிக்கை அபாரமாக இருந்த போதும் உள்ளுக்குள் ஏதோவொரு நப்பாசை. ‘பாப்பா நல்லாருக்கா’ என்கின்ற ஆறுதல் வார்த்தையைக் கேட்க ஏக்கப்பட்டுத் தான் கேட்டான்.
உடனே அவளைப் பார்த்தாக வேண்டுமென்று மனம் பரபரத்தாலும் கை கால்கள் இசைய மறுத்தனவே! ஆதலால் வந்த சிறு தவிப்பும் அவன் குரலில் ஒட்டிக் கிடந்தது.
அனைத்தையும் பொய்ப்பிப்பதாய் – வாசுவின் அந்த சிறு எதிர்பார்ப்பில் மண்ணள்ளிப் போடுவதாக சுந்தரத்தின் பதில்.
“பாப்பா நல்லா தான் இருந்தா, திடீர்னு என்னாச்சு ஏதாச்சுனு தெரியல டாக்டர். கண்ணெல்லாம் மேல போய், கையெல்லாம் ஒரு பக்கமா இழுத்துக்கிட்டு பிட்ஸ் வந்திடுச்சு. ரித்திகா மேடம் பயந்து போய்ட்டாங்க. பாப்பா வேற துடிச்சிக்கிட்டே இருந்தா, என்ன பண்றதுனு தெரியாம ரித்திகா மேடம் கல்லா இருந்தாங்க. உடனே நாலஞ்சி பேரைக் கூப்பிட்டு பாப்பாவை ஹாஸ்பிடல் எடுத்துட்டு போறதுக்குள்ள..”
“கடவுளே!!”
அன்று போல் இன்றும் உரத்துக் கூவினான், வாசுதேவன்.
‘வேண்டாம்.. வேண்டாம் வாசு. அதை நினைக்காத!! நீ மொத்தமா உடைஞ்சு போய்டுவ..’ என உள்மனம் அலறியது.
உணர்ச்சிப் பெருக்கை சமன்படுத்தத் தெரியாமல் ஜன்னல் கம்பிகளை இறுகப் பற்றி கண்களை மூடித் திறந்தான். கால்கள் வலுவின்றி மடிவதை உணர்ந்து மெல்ல மீண்டும் வந்து இருக்கையில் அமர்ந்தான்.
அன்றைய நாளின் நினைவில் உடல் சூடேறியது. கண்கள் கலங்கி, அழுத்தமாகக் கடித்துக் கொண்டிருந்த உதடுகளைத் தாண்டியும் கண்ணீர் வீறிடப் பார்த்தது.
சரியாக ஒரு வருடம்! உலகமென நினைத்த சித்துக்குட்டியும், தூணாகத் தாங்கி நிறுத்திய ரித்திகாவும் அவனை விட்டுச் சென்று முழுமையாக பன்னிரண்டு மாதங்களாயிற்று!
உண்மையில் – ரித்திகா அழைப்பு விடுத்த போது அழைப்பேற்காமல் போனதை மடத்தனம் என்று எண்ணவோ, மாபெரும் குற்றமாகக் கருதி வருந்தவோ அவனால் முடியாதே!
விடயம் தெரிந்திருந்தாலும் அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் தன்னை நம்பிப் படுத்திருக்கும் ஜீவனைப் பாதியில் விட்டு விட்டு ‘மகளே’ என ஓடியிருக்க வாய்ப்பே இல்லை. இதுதானே ஒரு மருத்துவனின் தியாகம் என்பது!?
அவன் ஏலவே செய்யும் தொழிலே தெய்வம் எனும் வகையறாவைச் சேர்ந்தவன். கடமை அழைக்கும் போது, பற்களைக் கடித்துக் கொண்டாவது சிகிச்சையை முடித்து விட்டுத் தான் மறுவேலை பார்க்கச் சென்றிருப்பான்.
ஒரு உன்னத மருத்துவனின் வாழ்வென்பது தன் சுய சுகத்தைக் காட்டிலும் மற்றவர்களது நலனை சிந்திப்பதாய் அமைவதல்லவா உண்மையில் தர்மம்?
ஆதலாலோ என்னவோ அழைப்பேற்கத் தாமதப்படுத்தியதில் அவனுக்குள் குற்றவுணர்ச்சி எழவில்லை.
மாறாக தன்னை நம்பியிருந்த ஜீவன் ஒரு பாதி, தன் உயிரானவள் இன்னொரு பாதி என இரு உயிர்களும் ஊசலாடாமல் அதில் ஒன்றாவது பிழைத்துக் கொண்டதே என்ற சிறு ஆசுவாசம், இன்றளவும் அவனுக்குண்டு!
எப்படியோ கொசுவலையாய் தன்னை சுழற்றிக் கொண்டிருந்த கடந்த கால கருந்துளையை விட்டு மீண்டு வரவே அவன் பெரிதாக மெனக்கெட வேண்டியிருந்தது.
நெடுமூச்சுடன் அலைபேசியைக் கையில் எடுத்தான். கன்னக்குழி விழ குட்டி சித்ரா தேவதையாக திரையில் சிரித்துக் கொண்டிருந்தாள்.
பாதி ஓடியதோடு நிறுத்தப்பட்டிருப்பதாகத் திரையில் தெரிந்த பாடலை மீண்டும் ஓட விட்டான்.
‘செல்வ மகள் அழுகை போல்
ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை
பொன் மகளின் புன்னகைப்போல்
யுக பூக்களுக்கு புன்னகைக்க தெரியவில்லை
எம்பிள்ளை எட்டு வைத்த நடையை போல
எந்த இலக்கண கவிதையும் நடந்ததில்லை
முத்துக்கள் தெறிக்கின்ற மழலை போல ஒரு
முந்நூறு மொழிகளில் வார்த்தையில்லை
தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா
என் தங்கத்தை மார்போடு
அணைக்கையிலே..’
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். அவனுக்கு மிகவும் பிடித்தமான, ஆழமான வரிகள்.
சித்துவின் உயிரற்ற உடலை நெஞ்சோடு கட்டியணைத்த நினைவில் கண்ணில் நீர்துளிகள் மின்னி, மெல்ல கன்னத்தில் உருண்டன; நெஞ்சாங்கூடு அதீத தவிப்பில் ஏறித் தணிய மறுத்தது.
தந்தைக்குள்ளும் தாய்மை சுரக்கிறது! செல்ல மகளை இறுக அணைக்கும் போது மட்டுமல்ல, இல்லாத மகளை எண்ணி கண்ணீர் சொரிகையிலுமே!
தொடரும்.
error: Content is protected !!