Skip to content
Post Views: 3,185
கருவின் குரல்
அத்தியாயம் – 3
தேவாவும் ஜானகியும் வழக்கம் போல இன்றும் பூங்கா நாற்காலியில் அருகருகே அமர்ந்திருந்தனர்.
தேவா தனது பாக்கெட்டில் இருந்து புதிய செல்போனை எடுத்தான்.
“நேற்று புதிதாக போன் வாங்கினேன். நம்ம இருவரின் புகைப்படம்தான் முதலில் எடுக்கணும். அது என்றும் நினைவாக இருக்கும்,” என்றான்.
“ஐயோ! யாராவது பார்த்துட்டா?” என்று கவலையுடன் கேட்டாள் அவள்.
Advertisement
“பார்த்தா பார்த்துட்டு போகட்டும். எவ்வளவு நாள் இப்படியே இருப்பது? சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளலாம்,” என்றான்.
அவள் தனக்குள்ளே சிரித்துக் கொண்டாள். அந்த சிரிப்பில் ஒரு ஒப்புதல் இருந்தது.
தேவா கேமராவை ஆன் செய்து செல்பி எடுத்தான்.
Advertisement
அவர்கள் அருகருகே நின்றனர். தேவா அவளை சற்றே தன்னிடம் இழுத்தான். ஜானகியின் கன்னத்தில் வெட்கம் ததும்பியது.
Advertisement
கிளிக்!
முதல் புகைப்படம் பிடிக்கப்பட்டது.
அந்த ஒரு புகைப்படம்தான், அவர்களின் காதலின் சாட்சியமாக, இன்று வரை நினைவில் வாழ்ந்து வருகிறது.
போட்டோ எடுத்த அடுத்த நொடி சக்கரவர்த்தியிடம் இருந்து போன் வந்தது.
தேவா எடுத்தான்.
Advertisement
“எங்கே? தேவா,” சக்கரவர்த்தி கேட்டார்.
தேங்காய் லோடு ஏற்றுவது சம்பந்தமாக வெளியே இருப்பதாக கூறினான்.
“எப்போ வருவே?” என்ற கேள்விக்கு,
“அரை மணி நேரத்தில் வருவேன் அப்பா,” என்று கூறி போனை கட் செய்தான்.
போன் வைத்ததும், “என்ன?” என்று கேட்க, தேவா சிரித்துக் கொண்டே,
“அப்பா வரச் சொல்றாரு,” என்றான்.
“இப்போதுதானே வந்தோம்… அதற்குள் போகணுமா?” என்று ஜானகி குறைபட்டு கொண்டாள்.
அவளை சமாதானப்படுத்தி, தேவா சக்கரவர்த்தி முன் சென்று நின்றான்.
வெள்ளை கதர் ஆடை, நெற்றியில் விபூதி, முகத்தில் கம்பீரம் இருந்தும் சாந்தமான தோற்றம்.
தீவிர யோசனையோடு வீட்டு ஹாலில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குஷன் ஷோபாவில் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார்.
அருகே கருணாம்பிகை.
சற்று கோபமும், பயமும் கலந்த முகத்தோடு இருந்தார்.
ஹாலை ஒட்டிய அடுத்த டைனிங் அறையில் சௌமியா தன் கணவன் அறிவழகனுக்கு உணவு பறிமாறிக்கொண்டிருந்தாள்.
ஆனாலும் இருவரின் கவனமும் ஹாலில்தான் இருந்தது.
“நாளை பெண் பார்க்க செல்கிறோம். இது பெண்ணின் போட்டோ,” என சக்கரவர்த்தி தேவராஜிடம் நீட்டினார்.
அவர் அமர்ந்திருந்த தோரணையே ஏதோ பஞ்சாயத்து. நிச்சயமாக அது தனது காதல் விவகாரம் தான் என ஊகித்திருந்தான்.
ஜானகி பற்றி ஏதாவது பேசுவார்கள். என்ன நடந்தாலும் அவளை கரம் பிடித்தே ஆக வேண்டும் என்பதில் இவர்கள் முன் பிடிவாதமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் யோசனையோடு நின்றிருந்தான்.
ஆனால் அவன் சற்றும் எதிர்பார்க்காத விதமாக பெண்ணை பார்த்து முடித்து விட்டு சொன்னதில் கொஞ்சம் அதிர்ச்சி.
நீட்டிய போட்டோவை வாங்காமல், “நான் ஜானகியை திருமணம் செய்ய விரும்புகிறேன்,” என்று கூறினான்.
அவன் கூறிய அடுத்த நொடி கருணா எழுந்து அவன் சட்டையைப் பிடித்து,
“ஏன்டா உன் புத்தி இப்படி போது? உன்னை சொல்லி குத்தம் இல்லை. என் மகனை ஏதோ வச்சு மயக்கி வச்சிருக்கா பாரு, அவளை சொல்லனும்! நம்ம காசு, பணம், சொகுசு வாழ்க்கைக்கு ஆசைபட்டு உன்னை சுத்தி வந்திருக்கா. நீயும் ஏமாந்து வந்து நிக்கறே! நீ அவளை கல்யாணம் பண்ணுனீனா அப்பா மரியாதை என்ன ஆகும்? அவங்க நம்மள விட கீழே இருக்கறவங்க. அவங்களுக்கும் நமக்கும் ஏணி வச்சா கூட எட்டாது. அங்கே போய் பொண்ண எடுக்கணும்னு சொல்றே!” என்று ஆதங்கமாக கத்தினார்.
அறிவழகனும் சௌமியாவும் ஹாலின் ஓரமாக நடப்பதை பார்க்கும் பார்வையாளராக நின்றனர்.
சக்கரவர்த்தி அமைதியாக எழுந்து, கருணாவிடம் இருந்து தேவாவை விலக்கினார்.
கருணாவிடம் திரும்பி,
“அவர்கள் நமக்கு சமம் இல்லை தான். ஆனாலும் அவர்களை தரக்குறைவாக பேசாதே. ஜானகி நம்ம நிறுவனத்தில் வேலை செய்யும் பெண். அவளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுக்கும் கடமையும் நமக்கு உள்ளது. ஏதோ வயது கோளாறு… நம் மகன் மீதும் தவறு உள்ளது,” என்றார்.
தேவாவிற்கு தாயின் மீதும் கோபமே. அவன் வாய் திறக்கும் முன் தந்தை பேசியதில் மன அமைதி அடைந்தான்.
சக்கரவர்த்தி தேவாவிடம் திரும்பி,
“நாளை காலை பெண் பார்க்க போகிறோம். ரெடியாக இரு,” என்றார்.
தேவா திடமாக மறுத்துவிட்டான்.
“இந்த ஜென்மத்துல கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது ஜானகி கூடதான்,” என்று கூறி தனது அறைக்கு செல்ல படியேறினான்.
சக்கரவர்த்தி,
“நான் வாக்கு கொடுத்து விட்டேன். நீ வந்தே ஆக வேண்டும். இல்லையென்றால் என்னுடைய இன்னொரு முகத்தை நீ பார்க்க வேண்டி வரும்,” என்று உறுதியான குரலில் கூறினார்.
அதுவரை தேவா இந்த மாதிரி தனது அப்பாவின் மிரட்டல் குரலை கேட்டதில்லை.
அவர் தாயை காட்டிலும் நிறைய இரக்கமும், ஈகை குணமும் கொண்டவர் தான் இருந்தாலும், கெளரவம் எனும் வரும் போது விட்டுக்கொடுக்க மாட்டார்.
“நாளை பெண்ணை பார்த்து பிடிக்க வில்லை என சொல்லிவிடலாம். அதன் பின் சக்கரவர்த்தியால் ஏதும் செய்ய முடியாது,” என தப்பு கணக்கு போட்டான்.
தன்னால் ஜானகிக்கு ஏதும் ஆபத்து வரக்கூடாது என்ற பயத்தில், தேவா விருப்பமின்றி பெண் பார்க்கச் சென்றான்.
பிரம்மாண்ட வீடு.
இரு வீட்டு சொந்தங்களும் முகம் முழுவதும் சிரிப்புடன்.
தேவாவிற்கு சற்று கடுப்பு,வெறும் பெண் பார்க்கும் படலத்திற்கு எதற்கு இவ்வளவு சொந்தம்?
பெண்ணின் அக்கா நிவேதா தேவாவிடம் அவனின் படிப்பு, பழக்க வழக்கம் பற்றி விசாரித்தாள்.
தாய் ராஜேஸ்வரி எவ்வளவு சொத்து தேறும் என்பதை கருணாவிடம் சுற்றி வளைத்து கேட்க, கருணா இவளை விட ஒரு படி மேலே சென்று பெண் வீட்டில் எவ்வளவு தேறும் என்பதை விசாரித்துக்கொண்டாள்.
சலசலப்புகளுக்கிடையே, மைதிலி காபி கப்புடன் வந்தாள்.
சந்தனத்தை பாலில் குழைத்தது போன்ற நிறம், டையட் கடைபிடித்து நடிகைகள் போல உடல்வாகு கொண்டிருந்தாள். உண்மையில் தேவ லோக மங்கை என்றுதான் சொல்ல வேண்டும்—அவ்வளவு அழகு!
தேவா வீட்டாருக்கு பார்த்தவுடன் பெண்ணை பிடித்துவிட்டது. மைதிலியை புகழ சௌமியாவிற்கு சற்றே பொறாமை எட்டிப்பார்த்தது.
கூட்டத்தின் நடுவே நிவேதாவின் கணவன் அஜய்,
“மாப்பிள்ளையும் பெண்ணும் தனியாக பேசட்டும்,” என்று கூறினார்.
சக்கரவர்த்திக்கு மகனை பற்றி தெரியுமே. ஏதாவது பெண்ணிடம் உளறிக்கொட்டினால் மானம் போய்விடும்.
அதெல்லாம் வேண்டாம்.
“எங்க பக்கம் கல்யாணத்திற்கு முன்பு இருவரும் பேசுவது வழக்கத்தில் இல்லை. மோதிரம் மாற்றி நிச்சயம் செய்து கொள்ளலாம்,” என கூறி மோதிரத்தை தேவாவிடம் நீட்டினார்.
அதிர்ந்து தந்தையை பார்த்தான்.
“இன்று ஜஸ்ட் பெண் பார்ப்பது மட்டும்தான்,” என நினைத்தான். ஆனால் தகப்பன் நிச்சயம் வரை ஏற்பாடு செய்துள்ளாரே என்று எண்ணி, அவரைப் பார்க்க “நான் உனக்கே அப்பா,” எனும் தோனி சக்கரவர்த்தியின் பார்வையில் தெரிந்தது.
நிவேதா மைதிலியை தேவாவின் அருகில் நிறுத்தினாள்.
வெட்கப்பட்டு கொண்டே கையை நீட்டினாள். சுற்றம் உணர்ந்து மோதிரத்தை அணிவித்தான். அவளும் தேவாவின் கைப்பிடித்து மோதிரம் போட்டாள்.
கருணா 4 பவுனுக்கு வருங்கால மருமகளுக்கு ஆரம் போட்டார்.
ராஜேஸ்வரிக்கு முகம் கொள்ளா பூரிப்பு.
நிச்சயம் முடித்த ஒரு வாரத்தில் தடபுடலாக கல்யாண ஏற்பாடுகள் நடக்க, அடுத்த மாதத்தில் திருமணம் முடித்துவிடலாம் என சக்கரவர்த்தியும் தீயாய் வேலை செய்தார்.
தேவாவிற்கு இருதலை கொள்ளி—எறும்பின் நிலை.
எவ்வளவு கூறியும் சிறிதும் அசராத தந்தையின் நிலையும், ஆதங்கமாக கத்தி அழும் தாய் கருணாவின் முகமும் அவனை வீட்டை விட்டு வெளியேறி ஜானகியை திருமணம் செய்ய வைத்தது.
ஆம்… பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரு வீட்டு பெற்றோரும் இல்லாமல், தன் பால்யகால நண்பன் அருண் உதவியுடன், ஜானகியின் கழுத்தில் மூன்று முடிச்சு இட்டான்.
— கருவின் குரல் ஒலிக்கும்…
error: Content is protected !!