Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

En Kaathal Kanaa

என் காதல் கனா 3

என் காதல் கனா

3

சதீஷ்

சதீஷ் தன் கரிய நிற பல்சரை சைட் ஸ்டாண்ட் இட்டு அந்த காம்பவுண்டின் உள்ளே நிறுத்தினான். தலையில் இருந்து ஹெல்மெட்டை கழற்றியபடிக்கே, முதல் மாடி நோக்கி படிகளில் தாவி ஏறியவனை, அபார்ட்மெண்டின் நிலைவாசலின் முன்னால், காலையில் அன்னை போட்டிருந்த சிறிய அளவிலான காவி கோலம் வரவேற்றது.



Advertisement

காலையில போட்ட கோலம்துளி கலையாம அப்படியே இருக்குஇனி அடுத்த வார வெள்ளிக்கிழமை வரைக்கும் இதே கோலம் தான்…. என மனதிற்குள் முனுமுனுத்தவண்ணம் செருப்புகளைக் கழற்றி, கோலத்திற்கு பக்கவாட்டில் இருந்த ஷு ரேக்கில் சொருகினான். காத்திருந்தது போல் நிலைகதவினை தந்தை பரந்தாமன் திறந்து, சதீஷ் உள்ளே நுழைய வழிவிட்டார்.

ஹாலின் சோஃபாவின் அமர்ந்து தந்தையுடன் அதுகாரும் தொலைக்காட்சியினைப் பார்த்துக் கொண்டிருந்த அம்மா சுலோச்சனா, சதீஷின் தலையைக் கண்டதும் வேகமாக எழுந்து அடுக்களைக்குள் புகுந்து கொண்டாள். சதீஷின் மேல் காலையில் இருந்த கோபம் வடிந்து விட்டிருந்தாலும், தன் சொல் பேச்சைக் கேட்காமல் இருக்கும் பிள்ளை மீது அந்தத் தாய்க்கு இருந்த வருத்தம் குறையவில்லை. சதீஷும் தன் அறைக்குள் சென்று துணி மாற்றத் துவங்கினான். அலுவலக வேலைகளின் காரணமாக, அம்மாவிடம் செய்த வாக்குவாதம் சதீஷிற்கு மறந்துவிட்டிருந்தது. உம்மென்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு சாதம் பறிமாறிய அன்னையைக் காண சிரிப்பும் கூட எழுந்தது.

கிஷோர் நீ வந்த உடனே ஃபோன் பண்ண சொன்னான் என்று சூடான சாம்பாரை சாதத்தின் மீது ஊற்றிக் கொண்டே மொழிந்தார் சுலோச்சனா. கோபமாக நின்றிருந்த அன்னையையும், அமைதியாக தன் தட்டில் கவனமாக இருந்த தந்தையும் ஒரு பார்வை பார்த்தவன், எதுவும் பேசாமல் உணவை உண்ணத் துவங்கினான். சதீஷ் உண்டு முடிக்கும் வரை யாருமே பேசவில்லை. கைகளை கழுவ சிங்க் நோக்கி நகர்ந்தவனிடம்,கிஷோர் கேட்டா நான் என்ன சொல்லட்டும்?என கைதுடைக்க துவலையை நீட்டியபடிக்கே மீண்டும் வினவினார் சுலோச்சனா.

Advertisement

அண்ணாட்ட நான் பேசிக்கறேன்ம்மாஎன்று சிறிய புன்னகையுடன் கூறியவனிடம் அதற்கு மேல் உம்மென முகத்தை தூக்கி வைத்திருக்க சுலோச்சனாவால் இயலவில்லை.

Advertisement

ஏன் சதீ இவ்வளவு பிடிவாதம் பிடிக்கற? நாங்க உன் கெட்டதுக்கா சொல்லிடுவோம். கிஷோர் எவ்வளோ வருத்தப்பட்டான் தெரியுமா? யாருக்குமே சீக்கரம் கிடைக்காத சான்ஸ், உனக்கு லட்டு மாதிரி வலிய கிடைச்சிருக்கு. நீ என்னடான்னா அதைப் புரிஞ்சுக்காம நடந்துக்கறஎன்று அங்கலாப்புடன் மொழிய, அதுவரையில் அமைதியாக டி.வியில் செய்திகள் பார்த்துக் கொண்டிருந்த தந்தை பரந்தாமன் வாயைத் திறந்தார்.

அதான், அவன் கிஷோர்ட்ட பேசறேன்னு சொல்லறானே….நீ ஏன் சும்மா தொனதொனங்கற….விடுஎன்று தன் மனைவியிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, லேண்ட் லைன் தொலைப்பேசி நீண்ட மணியோசையை எழுப்பியது.

கிஷோர் தான்என்று சொல்லியபடிக்கே சுலோச்சனா ஆர்வமாக கைப்பேசியை நோக்கி ஓட, பரந்தாமன் தொலைக்காட்சியின் ஒலியைக் குறைத்தார். சதீஷ் கைகளைத் துடைத்துக் கொண்டு சோஃபாவில் தந்தையுடன் அமர்ந்தான். அம்மா ஆர்வமாக கிஷோரிடம் பேசிக் கொண்டிருந்தார்.

Advertisement

இப்போ ஃபிலடெல்பியால என்ன மணியாச்சு? சாப்பிட்டியா? என்ன சமைச்ச? என வழக்கமான கேள்விகளை விடுத்து, கொஞ்சம் உம் கொட்டி கேட்டு கொண்டிருந்தார். தன்னைப் பற்றித்தான் என சதீஷால் புரிந்து கொள்ள முடிந்தது.

இந்தா அவன்கிட்டயே தர்றேன். நீயே பேசுஎன சுலோச்சனா  ,அண்ணா உங்கிட்ட பேசணுங்கறான் என்றபடிக்கு ரிசிவரை சதீஷிடம் நீட்டினார்.

சொல்லுடாஎன்றான் காதை ரிசிவரிடம் கொடுத்தபடிக்கு.

என்ன முடிவு பண்ணியிருக்க சத்தீஎன்றது மறுமுனையில் கிஷோரின் குரல். ஹாய் டா என்ன பண்ணற, நல்லா இருக்கியா?என எந்த சம்பிரதாய விசாரிப்புகளும் இல்லை. அம்மா எந்த அளவிற்கு கிஷோரை நச்சியிருக்க வேண்டும் என இதிலிருந்தே தெரிந்தது.

நான் இன்னும் யோசிட்டுட்டு தான் இருக்கேன்டா. முடிவு எதும் பண்ணலை.

எவ்வளவு நாள் யோசிட்டிட்டே இருப்ப சத்தீஇன்னும் ஒரு வாரத்தில கன்ஃபர்மேஷன் மெயில் அனுப்பனும். ஆபீஸ்ல ரெசிக்னேஷன் குடுத்தியா?

இல்லைஇன்னும் முடிவு பண்ணலைன்னு சொன்னேனேஎன்றான் சதீஷ் கொஞ்சம் கடுப்பாக. ஆனால் கிஷோர் அதெற்கெல்லாம் அசருவதாயில்லை. உனக்கு கிடைக்கிருக்க சீட்டோட வேல்யூ தெரியலை டா உனக்கு. மெரிட்ல ஆர்கன் யூனிவர்சிட்டி சீட்அதும் ஸ்காலர்ஷிப்போட…. யு.எஸ் படிக்க போக யாருக்கு இப்படி சான்ஸ் கிடைக்கும்? இங்கையே படிச்சா, இங்கையே வர்க் பர்மிட் ஈசியா கிடைக்கும்….நான்லாம் வேலைகிடைக்க எவ்வளோ கஷ்டப்பட்டேன்னு எனக்குத் தாண்டா தெரியும்ப்ளீஸ் டா சொதப்பிடாதா…. கேர்ஃபுல்லா யோசிச்சி முடிவு பண்ணுபட் மேக் இட் ஃபாஸ்ட்

ம்ம்ம் சரிடாஎன்றான் கம்மிய குரலில்.

எப்போ சொல்லுவ….

சொல்லறேன்..

அதான் எப்போன்னு கேட்கறேன்? சீ, நாளைக்கு ஈவினிங்க வரைக்கும் டைம் எடுத்துக்கோ. நான் இதே நேரம் உனக்கு கால் பண்ணறேன். நல்ல முடிவா சொல்லு…. அம்மாகிட்ட ஃபோன் குடுஎன்று பேச்சை முடித்துக் கொண்டான். சதீஷிற்கு மீண்டும் தன் அறைக்குள் சென்று முடங்கிக் கொண்டு அம்மா, அப்பா பேசுவதை கேட்டுக் கொண்டிருக்க பொறுமை இல்லை. வேகமாக அறைக்குள் சென்று டி.ஷர்ட்டைப் போட்டவன்,

அப்பா நான் கொஞ்சம் வெளிய போட்டு வந்திடறேன்என சொல்லிக் கொண்டு பைக் சாவியினை எடுத்துக் கொண்டு கிளம்பினான். ஃபோனில் பேசிக் கொண்டிருந்த சுலோச்சனா, சின்னமகன் வெளியேருவதைக் கண்டு அவசரமாக தொலைப்பேசி உரையாடலை முடித்துக் கொண்டார்.

எங்கங்க போறான்என தொலைக்காட்டியில் மூழ்க சித்தமாயிருந்த தன் கணவரிடம் வினவினார்.

எங்க போவான்…..அந்த விவேக்கைப் பார்க்கப் போவான்….என சலிப்புடன் மொழிந்தவர், மீண்டும் தனது கவனத்தை தொலைக்காட்சியிடம் கொடுத்துவிட்டார். அவனாவது கொஞ்சம் சத்தீக்கு புத்தி சொன்னா தேவலாம்.என தன் போக்கிக் கூறிவிட்டு அறையினுள் சென்றார் சுலோச்சனா.

சதீஷின் பெற்றோர் பேசிக் கொண்டதைப் போல், கரிய பல்சர் திருவல்லிக்கேணியின் குறுகிய வீதிகளைக் கடந்து, திருவான்மியூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. திருவான்மியூர் மருந்தீஷ்வரர் கோவிலில் அருகே பல நூறு வீடுகளில் தேடிப் பிடித்து அந்த இரண்டு மாடிகள் கொண்ட வீட்டின் முன் நின்றது.

சதீஷ் ஹெல்மெட்டை கழற்றி, கையில் பிடித்துக் கொண்டு இரண்டாம் மாடிக்கு படியேறினான். முதல் மாடியில் குடியிருந்த தம்பதியினர், சதீஷை அடையாளம் கண்டு கொண்டு சிரித்தனர். அம்மாவிடம் உணவு உருண்டைகளை வாங்கிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை, சதீஷைக் கண்டு பற்களைக் காட்டிச் சிரித்தது. ஹாய் சாதனாஎன செல்லமாக குழந்தையின் கன்னத்தை கிள்ளியவன், மீண்டும் படியேறினான். மாடியைத் தொட்டதுமே கடற்காற்று முகத்தில் அரைந்தது. தலைமுடியை வருடிச் சென்ற உப்புக் காற்றை சுவாசித்த படிக்கு தன் நண்பன் விவேக் தங்கியிருந்த வீட்டின் கதவைத் தட்டினான்.

வர்றேன்என்று உள்ளிருந்து விவேக்குடன் தங்கியிருந்த டேனியலின் குரல் கேட்டது. வெளியே சதீஷக் கண்டு முகம் மலர்ந்த டேனியல். வாங்க ப்ரோஎன மொழிந்து, இரு கதவுகளையும் திறந்து விட்டான். விவேக் எங்க டேனி?என்ற படிக்கே வீட்டினுள் சென்று, அந்த இரண்டே அறைகள் கொண்ட வீட்டில் சிதறிக் கிடந்த பலவிதமான குப்பை கூழங்களுக்கு மத்தியில் ப்ளாஸ்டிக் சேரில் அமர்ந்தான் சதீஷ்.

டே, உட்காருடா, குளிச்சுட்டு இருக்கேன்டு மினிட்ஸ்என பக்கவாட்டு அறையில் இருந்து விவேக்கின் குரல் கேட்டது.

என்ன இந்த நேரத்தில குளியல்?

தோழர் ஊருக்கு போறதா சொல்லிட்டு இருந்தார் ப்ரோஅதனால குளிக்கறாரா இருக்கும்என டேனி பதிலளித்தான். சிறிது நேரம் இருவரும் கைப்பேசியையும், சுவற்றில் மாட்டப்பட்டிருந்த சிறிய எல்..டி டி.வியில் ஒளிபரப்பிய பாடலையும் கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்தனர்.

மணி எட்டரை ஆகிடுச்சா…. நைட்டுக்கு சாப்பாடு வாங்கிட்டு வந்திடறேன்உங்களுக்கும் சேர்த்தி வாங்கட்டுமா ப்ரோஎன சதீஷிடம் மொழிந்தான் டேனியல்.

வேண்டாம் டேனி, நான் சாப்பிட்டுட்டேன்என்ற சதீஷிடம் விடைப் பெற்றுக் கொண்டு டேனியல் வெளியே சென்றுவிட, குளித்து, உடைமாற்றிக் கொண்டு விவேக் வரும்வரையில் சதீஷ் டி.வியை வெறித்துக் கொண்டிருந்தான்.

என்ன மச்சான் இந்த நேரத்திலஎன கேட்டுக் கொண்டே சதீஷிடம் வந்தான் விவேக். நல்ல அகலமான முகம், கொஞ்சம் கருப்பு படிந்த மாநிறம், தீர்க்கமான கண்கள், அழுத்தத்தைக் காட்டும் உதடுகள், காலையும் மாலையும் பீச்சில் ஓடி உருவேற்றிய உடல் என பொறாமை கொள்ளத்தக்க சரீரம்.

ஒண்ணுமில்லை விவேக்சும்மா தான்வீட்டில இருக்க பிடிக்கலைகாலையில அம்மாட்ட சண்டை, சாயந்தரம் வீட்டுகுள்ள வந்த உடனே கிஷோர் ஃபோன் பண்ணறான். ஒரு நிமிஷம் கூட யோசிக்கவிடாம, சும்மா ஆளாளுக்கு தொனதொனங்கறாங்க

ஹ ஹ..என்று மென்மையாக சிரித்தான் விவேக். முகம் சிரித்துக் கொண்டிருந்த போதிலும், அவனுள்ளும் பல கவலைகள் குடைந்துகொண்டிருந்தன. முடிந்தவரையில் எதையும் வெளியே சொல்லாமல், தனக்குள் இறுகிப் போகும் தன்மை உடையவன் என்பதால், வெளிக்காட்டிக் கொள்ளாமல் சிரித்தவண்ணம் நண்பனுக்கு பதிலளித்தான் விவேக்.

ஏண்டா சிரிக்கற…. உனக்கு என்ன விவேக், ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனா என்னைப் பாரு, முடிவெடுக்க முடியாம எப்படி திண்டாடறேன். ஏண்டா இந்த லவ்வ பண்ணித் தொலைச்சனோன்னு இருக்கு மச்சி..

டே, சதீவிட்றாபார்த்துக்கலாம். சுபாஷினி என்ன சொல்லறா?

அவ என்னடா சொல்லப் போறா. அதே பல்லவி தான், நீ அமெரிக்கா போயிட்டா நான் என்ன பண்ணுவேன்நீ அமெரிக்கா போயிட்டா நான் என்ன பண்ணுவேன்னு அதே ராகம் தான் பாடறா. ரொம்ப டிபெண்டண்ட் டைப்டா அவ. அவங்க வீட்டுல லவ் மேரேஜ்க்கு கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க.

டே பிரச்சனைகள் வந்தாதான் சதீ லவ் இன்னும் டீப் ஆகும்

கொல்லப்போறேன் உன்னை. சினிமா டைலாக்கா பேசிட்டு…. சுபா வீட்டில அவ முதல் பொண்ணுடா. அவளுக்கு கீழ தங்கச்சி இருக்கா. இப்ப அவளுக்கு 23 வயசாச்சுன்னு கல்யாணப் பேச்சு எடுக்கறாங்க. அவங்க சைடும் தப்பு சொல்லமுடியாது.

அவங்க சைட் தானடா பிரச்சனை..உனக்கு என்ன? நீ உங்க வீட்டில பேச வேண்டியது தான என்றான் விவேக். இருவரும் பேசிக் கொண்டே மொட்டை மாடியில் வந்து நின்றுகொண்டனர்.

பேசலாம் தாண்டாஆனா, இன்னும் கிஷோர்க்கே கல்யாணம் முடியலை. பொண்ணு பார்த்துட்டே இருக்காங்ககிஷோர் பிடிகுடுத்தே பேச மாட்டேங்கறான். லீவ்ல வர்றப்போ பார்க்கலாம்னு சொல்லறான். அண்ணன் இருக்கறப்போ அவனுக்கு முடிக்காம, எனக்கு எப்படிடா பண்ணுவாங்க?

இதெல்லாம் நல்லா லாஜிக்கலா பேசுங்கடாசரி என்ன தான் முடிவெடுத்து இருக்க?என்றான் விவேக் சிரித்துக் கொண்டே.

சுபா வீட்டில இன்னைக்கு பேசறேன்னு சொல்லியிருக்கா. அவங்க வீட்டில என்ன முடிவெடுக்கறாங்களோ அது பொறுத்து. வேணும்னா, இப்போதைக்கு நிட்சயதார்தம் மாதிரி ஏதாவது வச்சுட்டு, அப்பறமா நான் படிச்சு முடிச்சு வந்ததுக்கு அப்பறம் கல்யாணம் பண்ணலாம்கற மாதிரி பேசிவச்சுக்கணும்அதுக்குள்ள கிஷோருக்கு கல்யாணம் ஆகிடணும்

அதுசரி……அப்போ, கன்ஃபார்மா நீ அமெரிக்கா போறது? முடிவெடுத்துட்டியா? இதை வீட்டில சொல்லித் தொலைக்கறதுக்கு என்னடாஅவங்கள ஏன் வீணா டென்ஷன்ல வச்சிருக்க?

சுபா பத்தி முடிவா தெரியாம எப்படிடா வீட்டில சொல்லறது. ஒருவேளை அவங்க வீட்டில ஒத்துக்கலைன்னா, அவளுக்கு சப்போர்ட்டா நான் இங்க இருக்கணும்ல. நான் யு.எஸ் போனதுக்கு அப்பறம் அவங்க வீட்டில பிரச்சனை, கல்யாண ஏற்பாடுன்னு பண்ணா தனியா அவ என்ன பண்ணுவா? அதான் லேட்டா சொல்லலாம்னு இருந்தேன். என்ற சதீஷ் காற்று கலைத்துச் சென்ற தலைமுடியை சீராக்கிக் கொண்டான்.

ம்ம்ம்..அதுவும் சரிதான்…. என்றான் விவேக்.

ஏ மச்சி..கேட்க மறந்துட்டேன், உன் பேங்க் லோன் என்னாச்சு….டே, உன்னை நம்பித்தாண்டா நான் யு.எஸ் வர்றேன். கடைசி நேரத்தில சொதப்பீறாத. பேங்கல லோன் கிடைச்சிடும்ல என்றான் சதீஷ்.

ஆல்மோஸ்ட்…. இன்னும் கொஞ்சம் பேப்பர்ஸ் சைன் பண்ண வேண்டி இருக்காம். வரசொல்லியிருக்காங்க….அதான் கிளம்பிட்டு இருக்கேன்என்று சதீஷின் கேள்விக்கு பதில் சொல்லிய விவேக், சதீஷின் கண்களைப் பார்க்காமல், தூரத்தில் தனிமையில் நின்றிருந்த நிலவினைப் பார்த்துக் கொண்டே மொழிந்தான். இதற்குள் டிஃபன் வாங்கச் சென்றிருந்த டேனியல் வந்துவிட்டிடுந்தான்.

டே இப்போ தான் சாப்பிட்டேன்என்று சதீஷ் கூறியதை ஏற்காமல், அவனுக்கு சேர்த்தே பரோட்டா வாங்கி வந்திருந்தான் டேனியல். நண்பர்கள் மூவரும் பேசிக் கொண்டே உணவருந்தினர். ஒன்பதரை மணிவாக்கில் விவேக்கை திருவான்மியூர் பஸ் டிப்போவிற்கு பஸ் ஏற்றிவிட்டான் சதீஷ்.

எப்படியாவது, கைல கால்ல விழுந்தாவது லோன் சேங்க்ஷன் வாங்கிட்டு வந்திருடா மச்சி. தனியா போய் நான் எம்.பி.ஏ படிச்சேன்னா, ஒரு செமஸ்டர் கூட தாண்ட மாட்டேன்..ஆல் த பெஸ்ட் மச்சிஎன பேருந்து நிலையத்திற்கு வழியனுப்ப வந்த சதீஷ் சொன்னதைக் கேட்ட விவேக், கண்களை எட்டாத புன்னகை ஒன்றினைச் சிந்தி விடை பெற்றுக் கொண்டான்.

கடலூர் பேருந்தில் ஏறி, ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டவனுக்கு, சதீஷ் கடைசியாக பேருந்து ஏறும் முன்னர் சொன்ன வார்த்தைகள் காதில் திரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தன. பேருந்து ஈ.சி.ஆர் சாலையில் கடல் காற்றைக் கிழித்துக் கொண்டு விரைய, விவேக்கின் கண்கள் ஜன்னல் வழியே தன்னைப் பின் தொடர்ந்த நிலவிடமே லயித்திருந்தது.

கைல கால்ல விழுந்தாவது லோன் சேங்க்ஷன் வாங்கிடு

கைல கால்ல விழுந்தாவது லோன் சேங்க்ஷன் வாங்கிடு

என திரும்ப திரும்ப எதிரொலித்த சதீஷின் குரல், கொஞ்சம் கொஞ்சமாக மாறி, தன் அன்னையின் குரலாக உருவெடுத்தது. கண்களை இறுக மூடிக் கொண்ட போதும், காதுகளில் விழுந்த குரல், மறையாமல் கேட்டுக் கொண்டே இருந்தது. துரத்த வழி தெரியவில்லை விவேகிற்கு.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!