சக்கரவர்த்தி தனக்கு கல்யாண ஏற்பாடு செய்திருப்பதை ஜானகியிடம் கூறியதும், அவன் எதிர்பார்த்தது போலவே அவளும் முதலில் அதிர்ச்சியடைந்து அழ ஆரம்பித்தாள்.
அவளை சமாதானப்படுத்தி, நிதர்சனத்தை புரிய வைத்தான்.
“இருவரும் திருமணம் செய்து கொள்வோம். முதலில் இரு வீட்டிலும் எதிர்ப்பு மட்டுமே கிளம்பும். ஒரு பேரக்குழந்தை பிறந்தவுடன் அவர்கள் சமாதானமடைந்து விடுவார்கள்,” என்றான்.
Advertisement
ஜானகி முதலில் மருதாச்சலத்தை நினைத்து பயந்தாள். தேவா தந்த நம்பிக்கையில் “சரி” என்றாள்.
அன்று இரவு ஜானகி வீடு திரும்பவில்லை. மருதாச்சலமும், கோகுலும் ஊர் முழுக்க தேடினர். ஜானகி பற்றி எந்த தகவலும் இல்லை. ஈஸ்வரி தலையில் அடித்துக்கொண்டு அழுதாள்.
“போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம்,” என்றான் கோகுல்.
“வேண்டாம். பெண் பிள்ளை விஷயம் வெளியில் தெரிந்தால் யாரும் திருமணம் செய்ய முன் வரமாட்டார்கள்,” என்று மருதாச்சலம் மறுத்துவிட்டார்.
Advertisement
ஈஸ்வரி, “அவளுக்கு என்ன ஆச்சோ? யாராவது கடத்தி கொண்டு போயிட்டார்களோ? அல்லது தினமும் செய்தியில் சொல்வது போல ஏதாவது விரும்பத்தகாத விஷயம் நடந்துவிட்டதோ? அப்படி ஏதாவது நடந்திருந்தால் நானும் என் மகளும் செத்துடுவோம்,” என்று கதறினார்.
Advertisement
நாட்டு நடப்புகளை பார்க்கும் போது மகள் வீடு திரும்பாதது குறித்து மனதினுள் கவலை இருந்தாலும் வெளியில் தைரியமாக காட்டிக்கொண்டார்.
ஈஸ்வரி அழுதழுது அவரது தைரியத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டிருந்தால், அதற்கு மேல் வீட்டில் இருக்க மனமில்லை. தனது வண்டியை எடுத்துக்கொண்டு ஊர் முழுவதும் சுற்றி மகளை தேடினார். கோகுலும் ஒருபுறம் தன் நண்பர்கள் குழுவுடன் தேடினான்.
காலை சூரியன் மெல்ல தன் கதிர்களை வெளிப்படுத்தினான். ஜானகி அரக்கு நிற பட்டு சேலை அணிந்திருந்தாள். எந்த வித மேக்கப்பும் இல்லை, சாதாரணமாக இருந்தாள். ஒரு பக்கம் பயமும் எதிர்காலம் பற்றிய தெளிவில்லாத நிலை; மறுபக்கம் காதல் நிறைவேறப்போகும் ஆசை.
தேவா பட்டு வேட்டி, பட்டு சட்டை . எந்த வித குழப்பமும் அவன் முகத்தில் இல்லை. “எப்படியும் பிரச்சனை வரும், சமாளித்துக்கொள்வோம்” என்ற மனநிலை.
Advertisement
தேவாவின் நண்பன் அருண் திருமணத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் முடித்திருந்தான். ஐயர் மந்திரம் கூற, மங்கலநாணை கட்டினான்.
திருமணம் முடிந்த கையோடு இருவரும் சென்று நின்றது சக்கரவர்த்தி முன்பாகத்தான். அருண் உடன் வருவதாக கூறியபோதும் தேவா மறுத்துவிட்டான்.
சக்கரவர்த்தி கடும் கோபத்தில் எதுவும் பேசவில்லை. கருணா எழுந்து, “என் மகனை எதை வைச்சு மயக்குனே!” என்று கேட்டுக்கொண்டே ஜானகியை அடிக்கும் ஆவேசத்துடன் நெருங்கினார்.
தேவா அவரை தடுக்க முயன்றான். ஆனால் தேவா கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டாள். பாய்ந்து ஜானகி கழுத்தில் இருக்கும் தாலியை அறுக்க முயன்றார்.
ஜானகிக்கு பயமும் அதிர்ச்சியும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. தனது மாங்கல்யத்தை காப்பாற்ற, கருணாவை தன் முழு பலத்தையும் பயன்படுத்தி தள்ளிவிட்டாள்.
சக்கரவர்த்தி காலடியில் சென்று மயங்கி விழுந்தாள். அனைத்தும் கண் இமைக்கும் நொடியில் நடந்துவிட்டது.
கருணா விழுந்ததும், அனைவரும் பதறினர். செளமியா தண்ணீரை கொண்டு வந்து தெளித்தாள்.
கண் விழித்தவுடன், “என்னை கொல்லப்பார்க்கிறாளே!” என மற்றொரு நாடகத்தை ஆரம்பித்தார்.
இந்த கொலைகாரி நம்ப குடும்பத்திற்கு வேண்டாம். அவ கழுத்துல கட்டுன தாலியை நீயே கழட்டிட்டு அவளை கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளு என தேவாவை பார்த்து ஆவேசமாக கூறினார்.
தேவா திடமாக,நீங்கள் கூறுவது எதுவும் நடக்காது இறுதி வரை நாங்கள் பிரிய மாட்டோம் என்றான்.
என் பையனே என்கிட்டே இருந்து பிரிச்சிட்டே இல்ல நீ நல்லாவே இருக்க மாட்டே என ஜானகியை பார்த்து கூறினார்.
நிலைமை மோசமடைவதை உணர்ந்து, அறிவழகன் கருணாவை உள்ளே அழைத்துக் கொண்டு சென்றான்.
சக்கரவர்த்தி திடமான குரலில், “எனக்கு இனிமேல் ஒரு மகன் மட்டுமே! இன்னொருவன் இல்லை!” என்று கூறிவிட்டு உள்ளே சென்று விட்டார்.
ஜானகி அழுதுகொண்டே, “என்னை மன்னிச்சிடு… உங்க அம்மா தாலிய பிடிச்சு இழுக்கும்போது என்ன பண்ணறதுனு தெரியாம அவரை தள்ளிவிட்டுட்டேன்,” என்றாள்.
தேவா அவளை சமாதானப்படுத்தினான்.
அவ்வேளையில் தேவாவிற்கு போன் வந்தது. பொள்ளாச்சி காவல் நிலையத்திலிருந்து அழைப்பு. இருவரும் சென்றனர்.
இரவு முழுவதும் தேடி விட்டு மகள் கிடைக்காததால் காவல் நிலையம் சென்று விட்டார் மருதாசலம். மகள் கழுத்தில் தாலியுடன் வந்து இறங்கும் வரை அவள் காதல் விவகாரம் பெற்றவர்களுக்கு தெரியவில்லை.
அனைவருக்கும் அதிர்ச்சி. தேவாவின் வசதி, பழக்க வழக்கம் இவர்களுக்கு சற்று பயத்தையே தந்தது.
ஜானகியை தங்களுடன் வரும்படி கெஞ்சினர். ஜானகி, “எனக்கு நீங்கள் வேண்டாம். தேவாதான் வேண்டும்,” என்று பிடிவாதமாக அவனுடன் சென்று விட்டாள்.
பிறந்ததிலிருந்து ஆசைகளோடும் கனவுகளோடும் வளர்த்த பெற்றோருக்கு அவள் தந்த பரிசு இதுதான்.
இரவு முழுவதும் ஒரு நொடி கண் அயராமல் அவளை நினைத்து அழுத பெற்றவர்களையும், உடன் பிறந்தவனையும் உதறிவிட்டு தனது கணவனுடன் சென்று விட்டாள்.
இரவு செளமியா எவ்வளவு வற்புறுத்தியும், உண்ண மறுத்துவிட்டனர் சக்கரவர்த்தியும் கருணாவும்.
திருமணம் முடிந்த நாளிலிருந்து செளமியாவும் கவனித்துக்கொண்டுதான் உள்ளாள். அறிவழகனை விட தேவாவை ஒருபடி மேலே தூக்கி இருவரும் பிடிப்பதை, அது மட்டுமல்லாமல் மைதிலியை பார்த்து வந்ததில் இருந்து அவளை கருணா புகழ்வதை இவளால் ஜீரணிக்க முடியவில்லை.
ஜானகி, இவளை விட சிறிய பெண், வசதி குறைவு. பார்த்தால் வாய் இல்லா பிள்ளைப் பூச்சி போலத் தெரிகிறாள்.
இன்று கருணா ஜானகியிடம் நடந்து கொண்ட விதம், எப்படியும் ஜானகியை பாதித்திருக்கும். அதனால் சுலபமாக மாமியாருக்கு எதிராக அவளைத் திருப்பிவிட்டு, இருவரும் சேர்ந்து கொள்ளலாம் என்றெல்லாம் மனதிற்குள்ளே பிளான் போட்டுக்கொண்டிருந்தாள்.
வீட்டில் யாருக்கும் தெரியாமல் ஜானகியை சந்தித்து, அவளிடம் நட்பு கொள்ள வேண்டும் என எண்ணினாள்.
அறிவழகன், “அப்பா எனக்கு இனி ஒரு மகன் தான்” என கூறியதால், மொத்த சொத்தும் நமக்குத்தான் என்ற மிதப்பில் இருந்தான்.
தொடர்ந்து கோபத்தில் கத்தி கொண்டிருந்தார் கருணா.
“என் மகனை என்னிடம் இருந்து பிரித்துவிட்டாளே! ஒருநாள் அவளும் எல்லாரும் இருந்தும், யாருமற்ற ஆனாதையாக நிற்பாள்!”
அவர் அவ்வாறு கூறுவது ஜானகிக்கு எதிர்காலத்தில் பலித்துவிடும் என்பதை அறியாமல்.
சக்கரவர்த்திக்கு அவ்வளவு வலி மகன் இப்படி செய்துவிட்டானே!
ஊர் அறிய ஒரு பெண்ணை நிச்சயம் செய்து விட்டு,இப்போது மாற்றிக் கூறினால் மானமே போய்விடும்,அதை விட அந்த பெண்ணின் நிலையை நினைக்கவே அவர் மனது பாரமாகிக் கொண்டிருந்தது.
பெண் வீட்டிற்கு என்ன சொல்லப்போகிறோம் என்று நினைத்தார்.
அவர் நினைத்த அடுத்த நொடி சுப்பிரமணியம், அஜய் அவர்களின் பக்கம் நாலைந்து பெரியவர்களுடன் வந்து விட்டனர்.
ஏதோ பெரிய கலவரம் நடக்கப்போகிறது என்று அறிவழகன் ஊகித்து, தந்தைக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என முடிவெடுத்தான்.
அனைவரும் ஹாலில் யார் ஆரம்பிப்பது என்று அமைதியாக இருந்தனர். அஜய் ஆரம்பித்தான்:
“அங்கிள், நமக்கு இருக்கும் வசதிக்கு ஜானகி மாதிரி இருக்கறவங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. தேவா ஏதோ காதல் மயக்கத்தில் இப்படி செய்துவிட்டான்.”
உடனே சுப்பிரமணியம் ஆரம்பித்தார்:
“எனக்கு நிறைய அடியாட்கள் உள்ளார்கள். அவர்களை வைத்து ஜானகி கதையை முடித்துவிடுவோம். ஒரு இரண்டு மாதம் கழித்து தேவா ஜானகியை மறந்துவிடுவான். அதன் பிறகு மைதிலியை திருமணம் செய்து வைத்து விடலாம்,” என தன் திட்டத்தை கூறினார்.
சுப்பிரமணியத்திற்கு தேவாவின் மூலம் கிடைக்கப்போகும் சொத்து ஜானகியை கொலை செய்யும் அளவிற்கு பேராசையை தந்தது.
சக்கரவர்த்தி ஆழ்ந்து யோசிப்பதை பார்த்து, “சரி சம்பந்தி, நீங்க என்ன முடிவு எடுத்தாலும் நான் உங்களுக்கு துணையா இருப்பேன். ஒரு நல்ல முடிவு ஆகக் கூறுங்கள்” என்று விடை பெற்றார்.
ஜானகி வீட்டில், ஈஸ்வரி அழுதழுது முகம் வீங்கி, தொண்டை கட்டிப்போய் தெம்பு இல்லாமல் தன் தங்கை ஜெயந்தி மடியில் தூங்கிவிட்டார்.
ஜெயந்தியின் கணவர் சண்முகம், மருதாசலத்திற்கும் கோகுலுக்கும் சமாதானம் கூறினார்.
மைதிலி பெண் பார்த்த நாள் முதல் தேவாவை எண்ணி கனவுலகில் மிதக்க ஆரம்பித்தாள் அவனின் திருமண செய்தி அவளுக்கு அதிர்ச்சியைத் தந்தது.தன்னிடம் இல்லாதது அப்படி என்ன அவளிடம் இருக்கிறது என்று கோபம். அப்பா எப்படியும் தேவாவை தன்னிடம் சேர்த்து விடுவார் என்று நம்பினாள்.
இருவீட்டிலும் பலத்த எதிர்ப்பு வரும் என்று முன்பே யூகித்திருந்ததால், தேவா ஒரு தனி வீடு வாடகைக்கு எடுத்திருந்தான்.
கிச்சன், ஹால், பெட்ரூம் கொண்ட அடக்கமான வீடு. காதல் ஜோடி இருவரும் தங்கள் வாழ்வை அங்கே தொடங்கினர்.