Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Sukkaan – A Short Story

சுக்கான்

னடா நாட்டில் வாழும் மக்களுக்கு அன்று பனிப் பொங்கல்!

ஊரே பனியில் சலவை செய்து..



Advertisement

பனியால் வெள்ளையடித்தது போல் காணப்பட்டது.

இலையுதிர்ந்த மொட்டை மரங்கள் குளிரூட்டும் வெள்ளை சந்தனத்தை தாராளமாக அப்பிக் கொண்டிருந்தன.

Advertisement

பனி தாக்குதலை நடத்திய பின்..தன் ஏவுகணைகளுக்குச் சற்று ஓய்வு கொடுத்தது வானம். முதல் ஐஸ்க்ரீமை ருசிக்கப் போகும்

Advertisement

ஒரு மழலையின் குதூகலத்துடன்…நிலவிற்குச் செல்லும் விண்வெளி வீராங்கனைப் போல் ஒரு பெரிய உடைக் குவியலை அணிந்து..தன் முதல் பனி வாக்கிங்கிற்கு புறப்பட்டாள் ராஜி.

“ஏ..ராஜி..எழுந்துருடி..ஸ்கூலுக்கு டைம் ஆச்சு..” என ராஜியை உலுக்கினாள் ராஜியின் அம்மா நீலவேணி. 

Advertisement

“ம்…எவ்வளவு ஜாலியா கனடால பனில நடந்துட்டிருந்தேன். நான் சந்தோஷமா இருக்கறது உனக்குப் பொறுக்காதே..” என 

கொட்டாவிக் கலவையுடன் சோம்பல் முறித்தாள் ராஜி. 

“நான் மட்டும் என்ன சந்தோஷமாவா இருக்கேன்..” என போருக்குத் தயாரானாள் நீலவேணி.

“ராஜமாதா..தயவு செஞ்சு காலங்காத்தால மூன்றாம் உலகப் போரை ஆரம்பிக்காதே. ஆமா..ஸ்கூல் வேன் வர இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கு. ஏன் இப்பவே என் கூல் ட்ரீம்சை கலைச்சே..”

“இனிமே வேன் வராது. சேகர் அண்ணன் அவன் பைக்ல உன்னை ஸ்கூல்ல விடறேன்னு சொன்னான்.” கலைந்திருந்த ராஜியின் அறையை அருங்காட்சியமாக மாற்றியபடி பேசினாள் நீலவேணி. 

“வேன் ஃபீஸ் மிச்சமாகும். அதானே.. நான் ஸ்கூலுக்கு போறதை நிப்பாட்டிடவா..அப்படியே என் ஸ்கூல் ஃபீசும் மிச்சமாகும்ல?” எனக் குளியலறைக்குள் சென்றாள் ராஜி.

“எதுக்கும் உதவாத உன் அப்பனை சோறு போட்டு வளக்கறதுப் பத்தாதா.. என்னால இன்னொரு உதவாக்கரையை வளக்க முடியாது. ஒழுங்காப் படிச்சி முன்னேர்ற வழியைப் பாரு.” என ராஜியின் பாடப்புத்தகத்தைப் பள்ளிப் பைக்குள் வைத்த நீலவேணி, “அம்மா…” என ஹாலில் இருந்து தன் மூத்த மகள் மலர் அழைத்ததும்..“வர்றேன் கண்ணு..” என்று வெளியேறினாள். அவள் விலகியதும் அறை விசாலமானது. 

ஹால்’ என உச்சரிப்பதற்குள் முடிந்துவிட்டது அந்த ஹால்.

கருத்து வேறுபாடுகளை மறந்து காந்தியும் சுபாஷ் சந்திரபோஸும், நீலவேணியின் கைவண்ணத்தில் பென்சில் ஓவியங்களாக, நட்புப் புன்னகையை சுவற்றில் பரிமாறிக் கொண்டிருந்தனர். அவள் வடித்த தஞ்சாவூர் ஓவியங்கள் வீட்டைக் களையிழக்காமல் வைத்திருந்தன. இடப்பற்றாக்குறையால் அவற்றுள் பல, மர அலமாரியின் தலையில்.. இரும்புப் பெட்டிக்குள் கும்பகர்ணர்களாகின. 

மனது கனமாகும் வேளைகளில், அவற்றுடன் பார்வை பரிமாற்றம் செய்து கொள்வாள் நீலவேணி. கடன்காரர்களின் பணப் பசிக்கு வீட்டில் இருந்த எத்தனையோ பொருள்கள் இரையாகின. அவள் கன்னக்குழி புன்னகையினால் இந்த ஓவியங்கள் மட்டும் உயிர் பிழைத்தன. 

தன் தாய் வீட்டு சீதன நகைகளுடன் புன்னகையையும் விற்றிருந்தாள் நீலவேணி. அதன் காரணகர்த்தாவான நீலவேணியின் கணவர் ரத்தினம், அவள் தோளை இறுக்கியபடி வெட்கத்துடன் புது மாப்பிளையாய் நகைத்தார் சுவற்றில், தனக்கு முத்தமிட்ட சிலந்தி வலையை பொருட்படுத்தாமல். சில மாதங்களுக்கு முன் நீலவேணியின் வெளுத்த உதடுகளுக்கு புதிதாகப் பிறந்திருந்தது இளஞ்சிரிப்பு. காரணம்…

“அம்மா.. தொட்டுப் பாரேன். உன் பேரப் புள்ள உதைக்கிறான்.”

என மலர்ந்த முகத்துடன் நீலவேணியின் கைகளை

தன் மேடான வயிற்றின் மீது வைத்தாள் மலர். 

குழந்தையின் மெல்லிய அதிர்வுகளைத் தன் உள்ளங்கையில் தாங்கினாள் வருங்காலப் பாட்டி. 

“பேரனோ..பேத்தியோ..வெளியே வந்ததும் முதல்ல உன் தாத்தனை உதை..என் ராசா..ராசாத்தி” எனச் செல்லமாகக் கொஞ்சினாள்.

பாட்டியின் அன்பில் ஒளிந்திருந்த வலியையும், தனக்கு ஆசைதீர உணவுவகைகளை சமைத்துப் பரிமாறும் கைகளின் வெப்பத்தையும் உணர்ந்த குழந்தை ‘ம்…’ என்று புரண்டது.

“என்ன சொல்றா என் மருமக..இந்த மாமனை விசாரிச்சாளா..” என கேட்டுக் கொண்டே நுழைந்தான் நீலவேணியின் மகன் சேகர். 

“வாண்ணா.. என் மாமா எங்கேன்னு இப்பதான் கேட்டு முடிச்சான் என் பையன்.” என்றாள் மலர்.

வற்றிய தொண்டைக்கு பானைத் தண்ணீரால் உயிர் கொடுத்த சேகர், “பையன்னே முடிவு பண்ணிட்டியா?” என்றான்.

“மோர் குடிக்கிறியா சேகர்? முதலாளி என்ன சொன்னார்?” என்றாள் நீலவேணி.

“தங்கச்சி வளைகாப்பு நல்லபடியா நடக்கட்டும். 

பணத்தை நிதானமா திருப்பித் தான்னார். இனிமே ஞாயிறு லீவு வேணாம். அன்னிக்கும் நீங்க எங்கயாவது போகணும்னா நானே வண்டி ஓட்டறேன் சார்னு சொன்னேன். டிரைவர் சம்பளம் எக்ஸ்ட்ரா கிடைக்கும்ல?”

“அம்மா..ஏற்கனவே இருக்கற கடன்லாம் பத்தாதா? இன்னும் கடன் வாங்கி எனக்கு நீ வளைகாப்பு செய்யணுமா? என் வீட்டுக்காரர்தான் வளைகாப்பு நான் செய்றேன் அத்தை..நீங்க சிரமப்படாதிங்கன்னு சொன்னார்ல?”

“அப்படியில்லை மலர். அம்மா ஏதோ ஆசைப்படுது. இப்ப கொஞ்ச மாசமாதான் அம்மா சிரிச்சேப் பேசுது. அப்பன் வாங்குன கடனை எல்லாம் தீக்கத்தான் நான் இருக்கேனே.”

“அண்ணா..இது எவ்வளவுத் தேறும்ணு பாரு.” என்று தன் கையிலிருந்த தங்க வளையல் ஜோடியைக் கழற்றிக் கொடுத்தாள் மலர்.

“இந்த சமயத்துல உன் கைக்கு நாங்க வளையல் போட்டுத்தான் அழகுப் பாக்கணும். அசடு மாதிரி பண்ணாதே..” என்று செல்லமான கோபத்துடன் கைகளையும் வளையல்களையும் சேர்த்து வைத்தான் சேகர். 

பள்ளிச் சீருடையில் வந்து நின்ற ராஜி “ரெடிண்ணா..” என்றாள்.

அப்போது சிணுங்கிய தன் அலைபேசியை எடுத்தான் சேகர்.

“ஹலோ.. சொல்லு பாண்டி..சரி..சரி..நான் வர்றேன்..

கோபப்படாதே..” என்றான்.

“அம்மா..டீக்கடை பாண்டிகிட்ட குடிச்சிட்டு ஏதோ தகராறு பண்ணிருக்காரு உன் புருஷன். போய்த் தொலைக்கிறேன். பஞ்சாயத்து பண்ண..” என்று எரிச்சலானான் சேகர்.

“பொறுமையா இரு சேகரு..அந்தாளை எல்லார் முன்னாடியும் அடிச்சிடாதே..” எனக் கலவரம் அடைந்தாள் நீலவேணி.

எதுவும் பேசாமல் ராஜியுடன் வெளியேறினான் சேகர். 

பாண்டி டீ ஸ்டால், செங்கல்பட்டு’ என்கிற பெயர்ப் பலகையில்.. வாழ்க்கையின் விளிம்பில் மங்கலாகிக் கொண்டிருந்தது ‘பா’. ‘கஞ்சப் பூ கண்ணாலே..’ என நாயகியை வர்ணித்துக் கொண்டிருந்தார் பாடகர் ‘சித் ஸ்ரீராம்.’ 

பாடல் வரிகள் தெரியாவிட்டாலும், அரை போதையில் அபஸ்வரத்தில் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தான் இந்தியாவின் பொறுப்பான ‘குடிமகன்’ ரத்தினம். 

தன் தாத்தாவுடன் கடைக்கு வந்த சிறுமி அவனையேப் பார்த்துக் கொண்டிருக்க..

“பிஸ்கட் சாப்பிடறியா பாப்பா..” என்றான் தெத்துப்பல் இடுக்குகளில் சிக்கித் தவித்த பாக்குத் துகள்களினூடே வந்த போலிப் புன்னகையுடன்.  

தகாத வாடை அவன் வாயிலிருந்து வந்ததும் முகம் சுளித்து, மூக்கைப் பாதுகாத்துக் கொண்டாள் அந்த சிறுமி.

“ரத்தினம்..பிஸ்கட் மேல கையை வெச்சே கொலை விழும்..” என ஆறாத வார்த்தைகளைத் தெளித்தான் சூடான பாண்டி, டீயை ஆற்றியபடி.

பைக்கை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திய சேகர் நேராக பாண்டியிடம் வந்தான்.

“பாண்டி..என்னப்பா பிரச்சனை?”

“ஒரு நிமிஷம் வீட்டுக்குள்ள போனேன். உங்கப்பன் கல்லால கை வைக்கப் பாத்தாரு. கேட்டா பட்டர் பிஸ்கட்தான் எடுத்தேன்ங்கறாரு. காலங்காத்தால பிரச்சினை பண்ணிக்கிட்டு. அவரைக் கூட்டிட்டுப் போப்பா.” என்றான் பாண்டி.

“சேகரு..குவார்ட்டர் மேல சத்தியமா பிஸ்கட்தான் எடுத்தேன்.” என்றான் ரத்தினம்.

“காலைலயே ஆரம்பிச்சிட்டியா? நான் மட்டும் இல்லன்னா அம்மா எவ்வளவு கஷ்டப்படும்? எங்க மேலதான் ஆசை இல்லை..உன் உசுரு மேலகூட ஆசை இல்லையா? எப்ப இந்த கருமத்தை நிறுத்துவே?”

“விலைவாசிங்கிற பேர்ல விலையை ஏத்திட்டேப் போறாங்களே..அவங்களை நிறுத்தச் சொல்..நான் நிறுத்தறேன்.” எனத் தள்ளாடினான்.

“உன்னால ஒரு நாள்கூட நிம்மதி இல்லை அம்மாவுக்கு.”

“நான் என்ன வேணும்னா குடிக்கிறேன்.. படுபாவி.. ஃப்ரண்டுன்னு சொல்லிக் கூடவே இருந்து எல்லாத்தையும் சுருட்டிட்டுப் போனானே..அதை மறக்கத்தான்..” என வராத நீலிக்கண்ணீரை வம்பாக வரவழைத்தான்.

“தொழில்ல நஷ்டம் ஆனவங்கள்லாம் குடிச்சிட்டுதான் இருக்காங்களா? வேற வேலையே பாக்கறதில்லையா?”

“உன் முதலாளிகிட்ட சொல்லி என்னை டிரைவரா சேத்து விடேன். அதான் ஒண்ணுக்கு மூணு கார் வெச்சிருக்கார்ல..”

“ஏன்.. தினம் தினம் எங்களை சாகடிக்கறது பத்தாதா..குடிச்சிட்டு வண்டி ஓட்டி ரோட்ல போறவங்களையும் சாகடிக்கணுமா? நேத்து நம்ம டாக்டர் குமார் உன் டெஸ்ட் ரிப்போர்ட் காமிச்சாரு. இப்பவே லிவர் பாதி காலி. உன் ரத்தத்துல இஷ்டத்துக்கு விஷம் இருக்கு.”

“சேகரு..உசுரு உசுருங்கறியே..என் பேர்ல எனக்குத் தெரியாம எதனா இன்சூர் பண்ணிருக்கே?”

தலையில் அடித்துக் கொண்ட சேகர் “ஆட்டோ!” என அருகிலிருந்த ஸ்டாண்ட் ஆட்டோவை அழைத்தான். 

றுநாள் பொதுநல மருத்துவமனையில்..

“இந்த மாத்திரை எல்லாம் உங்கம்மாவுக்கு வாங்கிக்கோ மலர்.

நல்ல வேளை சின்ன காயத்தோடப் போச்சு. புருவத்துல பட்ட காயம் கொஞ்சம் கீழே கண்ல ஆகியிருந்தா பார்வையேப் போயிருக்கும்.” என்றார் அந்தப் பெண் மருத்துவர்.

“இன்னும் எத்தனை நாளைக்கு உன் குடிகாரப் புருஷன்கிட்ட இப்படி அடி வாங்கிக்கிட்டு இருப்பே நீலவேணி.

ஒரு போலீஸ் கம்ப்ளைண்ட் எழுதிக் கொடு. உள்ளேத் தள்ளி அவன் முதுகெலும்பை ஒடைக்கட்டும்.” என்று நீலவேணிக்காக வாதாடும் வக்கீலானார்.  

“நான்கூட இதை எத்தனையோ தடவை சொல்லிட்டேன் டாக்டர். எங்கம்மா எல்லாப் பாவங்களையும் மன்னிக்கிற பாதிரியாரா பொறந்திருக்க வேண்டியவங்க.” என்றாள் மலர்.

“ம்..எப்ப மலர் வளைகாப்பு? குழந்தை நல்லா ஒதைக்க ஆரம்பிச்சிடுச்சா?” எனக் குடும்பப் பெண் ஆனார்.

“அடுத்த வாரம் டாக்டர். நீங்களும் அவசியம் வரணும்.” என்றாள் நீலவேணி.

ரு வாரம் கழித்து..

மங்களகரமான மஞ்சள், காற்றுக்குக் குளிரூட்டிய சந்தனம், மங்கையர் போற்றும் குங்குமம் பரப்பிய நறுமணங்கள் வீட்டை அலங்கரித்தன. தீப எண்ணெயின் தயவில் திரிகளுக்கு மோட்சம் வழங்கின குத்து விளக்குகள். பழங்கள், பலகாரங்கள், பூ அலங்காரங்கள், கண்ணாடி வளையல்கள், புதுப் புடவை..இவற்றைக் கொண்டு ஒப்பனை செய்யப்பட்ட பித்தளைத் தாம்பாளத் தட்டுகள், தம்மை தங்கத் தட்டுகளாக எண்ணிக் கொண்டு ஜொலித்தன. 

அக்காவுக்கு ஆசையாகத் தான் செய்த ஜடை அலங்காரத்தை சரி செய்து கொண்டிருந்தாள் ராஜி. பன்னீர்த் துளிகள் தன் ஸ்பரிசம் தொட்டதால் வெட்கப்பட்ட ரோஜா இதழ் மாலை, மலரின் கழுத்தில் ஏறியபின் மேலும் அழகானது. தன் மகளுக்கு திருஷ்டிப் பொட்டு வைத்த நீலவேணியின் மனம் குளிர்ந்திருந்தது. தற்காலிகப் புகைப்படக்காரராய் மாறியிருந்த சேகர் தன் தங்கையை பல்வேறு கோணங்களில் படம்பிடித்து ரசித்தான். வீட்டின் ஹால் மறையும் அளவிற்கு உறவினர்கள் கூடியிருந்தனர். மலருக்கு வளையல் அணிவித்து, கன்னத்தில் சந்தனம் தடவி, குங்குமம் இட்டார் மலரின் கணவர்.

“மாப்பிள்ளை..மலர் பக்கத்துல வந்து நில்லுங்க.” என்றான் சேகர். 

அப்போது எதிர்பாராத விதமாக குடி போதையில் தள்ளாடியபடி உள்ளே நுழைந்தான் ரத்தினம்.

“வந்துட்டானா வீணாப் போனவன்..” என முகம் சுளித்தார் ஓர் உறவினப் பெண்மணி.

“ஏ..நீலவேணி..கைக்காசுத் தாடின்னா பணம் இல்லைன்னே. இவ்வளவு செலவு செஞ்சி பொண்ணுக்கு சீமந்தம் வைக்கிறே..பணம் ஏதுடி உனக்கு..அப்பன்காரனை மட்டும் கூப்புடலை..ஊர் மொத்தம் இங்க இருக்கு..” எனக் குழறிக் கொண்டே கூச்சலிட்டான்.

“வர்றோம் நீலவேணி..” என சிலர் விடை சொல்லியும், சிலர் சொல்லாமலும் நழுவ ஆரம்பித்தனர். 

“அப்பா..உன்னை யார் இப்ப இங்க வர சொன்னது..ரூமுக்குப் போ..” என அவசரமாக ரத்தினத்தைத் தாங்கிப் பிடித்தான் சேகர். 

அவன் கையை உதறித் தள்ளிவிட்டு..”சும்மா இருடா..இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு பாத்துடறேன்..யாரைக் கேட்டு இவ்வளவு செலவு செஞ்சா உங்கம்மா..அதான் அந்த நெஞ்சழுத்தக்காரி..” எனக் கத்தினான்.

“யோவ்..எத்தனை தடவை சொல்றது..இப்படி கலாட்டா பண்ணாதேன்னு. அறிவில்லை?” எனக் கொதித்த சேகர், ரத்தினத்தின் கண்களுக்கு மங்கலாகத் தெரிந்தான். 

முற்றிலும் நிலைகுலைந்து சரிந்த ரத்தினத்தை தங்கள் தோள்களில் தாங்கி சேகரும், மலரின் கணவரும் அறைக்கு அழைத்துச் சென்றனர்.

எதுவும் பேசாமல் உம்மென்றிருந்த மலரிடம்..

“மன்னிச்சிரு கண்ணு..உங்கப்பன் இப்ப வருவான்னு யார் கண்டா? பேசாம மாப்பிள்ளை சொன்ன மாதிரி உங்க வீட்லயாச்சும் நல்லபடியா உனக்கு வளைகாப்பு வெச்சிருக்கலாம்.” என்று கலங்கினாள் நீலவேணி.

“அம்மா…நான் எனக்காக வருத்தப்படலை. உன்னை நினைச்சாதான் கஷ்டமாயிருக்கு..” 

“அத்தை..நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதிங்க..

இந்த நிலைமைல மலர் இங்க இருக்கறது சரியாப்படலை. நான் அவளை வீட்டுக்குக் கூட்டிட்டு போய்டறேனே..நீங்களும் ராஜியும்கூட எங்களோட வந்துடுங்க. ராஜியை நான் ஸ்கூல்ல தினம் விடறேன்..” என்றார் மலரின் கணவர்.

“அதில்லை மாப்பிள்ளை..உங்களுக்கு எதுக்கு சிரமம்..

சம்மந்தி அம்மாவுக்கும் கஷ்டமா இருக்கும்.” 

“நான் இங்க இருக்கறதுதான் அம்மாவுக்கு ஒரே ஆறுதல்..

அதுதான் என்னோட ஆசையும் கூட..” என்றாள் மலர்.

டுத்த நாள்..

‘ஸ்ரீ ராம ஜெயம்’ எழுதிக் கொண்டே மனதில் ஜபித்துக் கொண்டிருந்தாள் மலர். 

“ஏ..நீலவேணி..” என அறைக்குள்ளிருந்து வெளியேறிய ரத்தினம் கோபமாகக் கத்தினான்.

சமையலறையிலிருந்த நீலவேணி “என்னங்க?” என்றபடி ஹாலுக்கு வந்தாள்.

“பசிக்குது..சீக்கிரம்..ம்..” என்று தரையில் உட்கார்ந்தான்.

“இதோ வந்துட்டேங்க..” என்றவள் அவசர அவசரமாக தட்டில் சாம்பார் சாதத்தைக் கலந்து ரத்தினத்தின் முன் வைத்தாள். 

அவளை முறைத்த ரத்தினம்.. ”மூதேவி..தண்ணி எங்க?” எனக் கத்தினான்.

அவசரமாகத் தண்ணீர் குவளையைக் கொண்டு வந்து வைத்தாள் நீலவேணி. 

“ஆமா..கறி சோறு சமைக்கலை? வெறும் காய்தான் இருக்கு..”

என்றான்.

“கறிக்குழம்பு கொஞ்சம்தான் வச்சேங்க. மலருக்கும் ராஜிக்கும் இருக்கட்டுமேன்னு தனியா எடுத்து வெச்சிருக்கேன்.” என்றாள்.

“மனிஷன் இதை சாப்பிடுவானா..” என தன் கைகளைத் தட்டில் கழுவினான் ரத்தினம். “நான் வெளியே போய் சாப்பிடறேன். எனக்கு இப்பவே அஞ்சாயிரம் கொடு..” என வேகமாக எழுந்தான்.

“அஞ்சாயிரமா..அவ்வளவு பணத்துக்கு எங்க போவேன்..”

“என்னடி நடிக்கிறே..” என அவள் கன்னத்தில் பளேரென அடித்தான் ரத்தினம்.

மௌனமாக நின்றாள் நீலவேணி.

“இதே அப்பாவி மூஞ்சியை வெச்சிகிட்டுதான் என் ஃப்ரண்டையும் மயக்கினே..ஏதோ நான் உஷாரா இருந்தேன். இல்லன்னா எல்லாத்தையும் சுருட்டிக்கிட்டு அவனோட நீயும் ஓடிப்போய் இருப்பே படுபாவி.. “ என மறுபடி அவளை அடிக்க கையை ஓங்கினான்.

“அப்பா..போதும்..நிறுத்துங்க..உங்க அராஜகத்துக்கு ஒரு அளவே இல்லையா..” என அவன் கையைத் தடுத்தாள் மலர்.

“வாயை மூடுடி..என் வீட்லயே உக்காந்துக்கிட்டு என் மேலயே கை வைக்கறியா..” என அவளைத் தள்ளிவிட்டான் ரத்தினம்.

தடுமாறிக் கீழே விழுந்த மலர் “அம்மா..” என அலறினாள்.

சில நாட்கள் கழித்து சேகர் வீட்டில்…

“என் கண்ணு முன்னாடியே என் குலம் அழிஞ்சிடுச்சி..

போக வேண்டிய உசுரெல்லாம் போகாம எங்க உயிரை வாங்குது..வாழ வேண்டிய…” மேலும் தொடர முடியாமல் தூணில் சாய்ந்தபடி அழுதாள் நீலவேணி.

சிவந்த கண்களுடன் சோபாவில் அமர்ந்திருந்தாள் மலர். வயிற்றின் மேடு கரைந்திருந்தது. எதுவும் பேசாமல் கைகளைக் கட்டிக் கொண்டு வெறுமையுடன் இருந்தான் சேகர்.

குழந்தைகளுடன் வெளியே விளையாடிவிட்டு வீட்டிற்குள் வந்த சேகரின் ஆறு வயது மகள் தொலைக்காட்சியை எழுப்பினாள். 

மதிய செய்திகளை வாசித்துக் கொண்டிருந்த செய்தி வாசிப்பாளர்.. ‘செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று உயிரிழந்த மணிமாறனின் பிரேதப் பரிசோதனையில்..அவர் ரத்தத்தில் விஷச் சாராயம் கலந்திருப்பதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.’ என்றார்.

ஒரே சமயத்தில் சேகரும், மலரும் தொலைக்காட்சியைப் பார்த்தனர். மேலும் சில விவரங்களை வழங்கிவிட்டு, ‘விளம்பர இடைவேளைக்குப் பின் செய்திகள் தொடரும்..’ என்றார்.

டயப்பர் விளம்பரத்தில் இளம்தாய் சிவந்த மேனியுடன் உறங்கிக் கொண்டிருந்த பிறந்த குழந்தைக்கு முத்தமிட்டுத் தொட்டிலை ஆட்டினாள்.

‘போக வேண்டிய உசுரெல்லாம் போகாம எங்க உயிரை வாங்குது’ என்ற நீலவேணியின் வார்த்தைகளை மீண்டும் மீண்டும் சேகரின் மூளை மறு ஒலிபரப்பு செய்தது.

சேகரைப் பார்த்த மலர், ‘நான் நினைக்கிறதைத்தான் நீயும் நினைக்கிறியா அண்ணா?’ என தன் மனதிற்குள் கேட்டாள்.

‘இது உனக்காகவும், நல்லபடியா பொறந்திருக்க வேண்டிய என் மருமகளுக்காகவும் மலர்..’ என தன் மனதிற்குள் மலருக்கு பதிலளித்தான் சேகர். அவன் பார்வை அந்த டயப்பர் விளம்பரக் குழந்தையின் மீது இருந்தது.

டெட்டாலின் தூக்கலான நெடி சமீபத்தில்தான் அந்த ஆஸ்பத்திரியின் அறை சுத்தம் செய்யப்பட்டுள்ளது என்பதை வலியுறுத்தியது. ஆஸ்பத்திரிக் கட்டிலில் அரை மயக்கத்தில் படுத்திருந்தான் ரத்தினம். 

“என்ன சேகர்.. மறுபடியும் உங்கப்பா ஃபுல் டைட்டா.. திருந்தற மாதிரி தெரியலையே.. என்ன செய்யலாம்?” என ரத்தினத்தின் மூளைக்கு எட்ட வேண்டும் என்பதற்காக உரக்கப் பேசினார் டாக்டர் குமார்.

“வேறு வழியில்லை டாக்டர்..ஊசி போட்ருங்க..இவரால யாருக்கும் எந்தப் பிரயோஜனமும் இல்லை. எங்க வீட்ல ஒரு உசுருப் போனதுதான் மிச்சம்.” என உரக்கப் பதிலளித்தான் சேகர்.

நிலைமையை புரிந்து கொண்ட ரத்தினம்..”டாக்டர்..என்ன என்ன ஊசி..சேகரு..என்னடா..எல்லாரும் சேர்ந்து என்னைக் கொல்லப் பாக்கறிங்களா..பாவிகளா..நான் என்ன வேணும்னா மலரைத் தள்ளி விட்டேன்..அந்த துக்கம் தாங்காமத்தான் மறுபடியும் குடிச்சேன்.” என சன்னமான குரலில் கதறினான்.

“பெரியவரே..எவ்வளவு சொல்லியும் நீங்க கேக்கற மாதிரி தெரியலையே..உங்க உடம்புல ஏற்கனவே இருக்கற விஷத்துக்கு முன்னாடி இந்த ஊசில இருக்கற விஷம்லாம் ஜுஜுபி..சொர்க்கத்துக்கு தப்பித் தவறி போனிங்கன்னா அங்க சோமபானம் குடுப்பாங்க.” என்றார் டாக்டர் குமார்.

“அய்யோ..வேணாம்..என்னைக் கொன்னுடாதிங்க..

டேய்..உங்கம்மாவுக்குத் தெரியுமா..அவளும் இதுக்கு ஒத்துக்கிட்டாளா..படுபாவி” 

“இதெல்லாம் திருந்தாத ஜென்மம் டாக்டர்.. அடுத்த ஜென்மத்துல மறுபடி பொறந்துத் தொலைச்சுடாதே..இனி உன்னால எந்தக் குடும்பமும் கெட வேணாம்..” என அறையைவிட்டு வெளியேறினான் சேகர்.

“வேணாம்..வேணாம்.. மலர்..என்னை மன்னிச்சிடு..” என்ற ரத்தினத்தின் வார்த்தைகள் மெல்லக் காற்றில் மறைந்தன. அவன் கண்கள் இருண்டன. இமைகள் மூடின. 

வ ஊர்வலம் சென்றதற்கான தடயங்களை சாலையில் வாகனங்களால் அலைபாய்ந்த மலர் இதழ்கள் மௌனமாக உணர்த்தின.

‘இரங்கல்’ நோட்டீசை வழியில் அனைவருக்கும் கொடுத்துக் கொண்டிருந்த இளைஞன், ஆஸ்பத்திரி வாசலில் நின்று கொண்டிருந்த சேகருக்கும் கொடுத்தான்.

பெயர்: வள்ளியம்மாள், வயது: 69 என்ற தகவலுடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த குடும்பத்தினரின் பெயர் பட்டியல் அதில் இருந்தது.

“இதே மாதிரி நோட்டீசு இந்தாளோட இரங்கல் செய்தியோட வந்திருக்கும். எல்லாம் உன்னால. அந்தாளு மயக்கம் தெளிஞ்சி எழுந்ததும் இது நீ அவனுக்குப் போட்ட உயிர் பிச்சைன்னு சொல்லு.” என்று அழுது கொண்டிருந்த நீலவேணியிடம் வெறுப்பாகப் பேசினான் சேகர்.

“கோபப்படாதே சேகர். இந்தத் தடவை நாம அவருக்குக் கொடுத்திருக்கறது சாதாரண வைத்தியம் இல்லை. 

அதிர்ச்சி வைத்தியம்.” என்றார் அருகிலிருந்த டாக்டர் குமார்.

“எனக்கு நம்பிக்கை இல்லை டாக்டர். மயக்க ஊசி விஷ ஊசியா மாறும் நாள் ரொம்ப தூரத்துல இல்லை. அவன்கிட்ட சொல்லி வைங்க.”

“இத்தனை நாள் பொறுமையா இருந்த குடும்பம் இனிமேலும் அப்படி இருக்காதுன்னு அவருக்குப் புரியும். அதுக்குன்னு நாளைக்கே அவர் திருந்தி நல்லவராகிடுவார்னு சொல்ல முடியாது. மெல்ல மெல்லதான் மாத்தணும். மறுவாழ்வு மையங்கள் இருக்கு.”

“என்ன மறுவாழ்வோ..அவன் மறுபடி பாட்டிலைக் கைல எடுத்தா அவனை அந்தக் கடவுளாலகூட காப்பாத்த முடியாது.”

கண்களை மூடி ‘கடவுளே! அவர் நல்லபடியா திருந்தி வரணும். என் கையாலயே என் குங்குமத்தை அழிச்சிக்கிற பாவத்துக்கு என்னை ஆளாக்கிடாதே!’ என மனதிற்குள் கதறினாள் நீலவேணி.

சில மாதங்கள் கழித்து..

“இது ரத்தத்துல ஊறிப் போச்சு..அப்படில்லாம் விட முடியாது.

உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ..” எனக் கோபமாகக் கத்தினான்.

“என் தலையெழுத்து..இதுக்கு முடிவே இல்லையா..” என அழுதாள்.

“ஊர்ல என்னமோ நான் ஒருத்தன்தான் குடிக்கிற மாதிரி..”

“அம்மா..நீ கொஞ்சம் வெளில இரு. இவருக்கு எப்படி சொன்னாப் புரியுமோ நான் அப்படி புரிய வைக்கிறேன்.” என்றார். 

“உங்களுக்கு ஒண்ணும் இல்லை. உங்க ரத்த அழுத்தத்தை குறைக்க ஒரு சின்ன ஊசிப் போடறேன்.” என நெகிழி உறையைப் பிரித்துக் கொண்டேத் தொடர்ந்தார்..

“அப்படியே நான் சொல்ற ஒரு கதையைக் கேளுங்க..இந்தக் கதையைக் கேட்டா குடிக்கிற நல்ல தண்ணியைக்கூட இனி நினைக்க மாட்டிங்க..இதே ஊர்லதான் உங்களை மாதிரியே ஒரு குடிகாரப் படுபாவி இருந்தான்..” என மறுவாழ்வு மையத்திற்கு வந்திருந்த அந்த இளைஞனை சாந்தப்படுத்தினார் ஆலோசகர் திரு.ரத்தினம்.

  • ஸ்வர்ண ரம்யா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!