Skip to content
Post Views: 7,266
அத்தியாயம் 8
Advertisement
அதிகாலை ஐந்து மணிக்கே விழித்த கலைசெல்வி தன்னை சுத்தம் செய்து ஐந்தரை மணிபோல் கிச்சன் சென்றாள் அன்னையை காண.
இந்த நேரத்திற்கெல்லாம் மகள் எழமாட்டாளே என்ற யோசனையோடு பாலை காய்ச்சிக்கொண்டிருக்க, மெல்ல மதியரசனின் பேச்சை ஆரம்பித்தாள் கலைசெல்வி.
“கலை, அப்பா சொல்றது உன் நல்லதுக்குத்தான். அந்த பையன் வேணாம் கலை, உனக்கு அவனை விட நல்ல பையனா அமைவான்”
Advertisement
“கண்டிப்பா அமைய மாட்டான்ம்மா, இவ பண்ணி வச்சிருக்க வேலைக்கு இன்னும்தான் பிரச்சனை அதிகமாகப்போகுது” என்றாள்.
Advertisement
அஞ்சுகம் “அந்த பையனை கல்யாணம் செய்துக்கிறதுக்காக பொன்மணியை குறை சொல்லாத” என முறைத்தார் மகளை.
“பெரிய பிரச்சனை வெடிக்கப்போகுது, நம்மளைப் பத்தி கொஞ்சம் கூட யோசிக்காம தொடக்கூடாத இடத்தை தொட்டு வச்சிருக்கா பொன்மணி. இங்க இருந்து லைஃபை பாழாக்கிக்க நான் விரும்பல, நாளைக்கு மதியரசன் வீட்டுலயிருந்து என்னை கேட்டு வரேனு சொல்லியிருக்காங்க.
முன்ன பேசினதுக்கு மன்னிப்பும் கேட்பாங்க. தயவு செய்து கல்யாணத்துக்கு சம்மதிச்சிடுங்க” என்றாள் முடிவாக.
Advertisement
“மெல்ல பேசுடீ, அப்பா எழுந்துட்டார், காபிக்கு வருவார்” என மகளை அதட்ட, அங்கே நின்றிருந்தார் அசோகன்.
கலைசெல்வி தவிப்போடு பார்க்க, “அந்த பையனுக்கு கொடுக்க சம்மதிச்சு, காலம் முழுக்க என் சின்ன மகளுக்காக வாதாடுற சக்தி எனக்கில்ல, கல்யாணம் உன் தனிப்பட்ட விசயம்னா எங்கையோ போய் எப்படியோ பண்ணிக்கோ, ஆனா திரும்ப இந்த வீட்டு பக்கம் வந்துடாத” என்றார் அசோகன்.
“ஏங்க கொஞ்சம் பொறுமையா யோசிங்க” என்று கணவனின் கோபத்தை அஞ்சுகம் கட்டுப்படுத்தப் பார்க்க, “இன்னும் எவ்வளவு பொறுமையா பேசுறது? இருபத்தி நாலு வயசாகுதில்ல? கொஞ்சமாவது சுயபுத்தி வேணாம்?” என்றார் அசோகன்.
“ஓ… என்னை தலைமுழுகுற முடிவுக்கே வந்துட்டிங்களா? நல்லா கேட்டுக்கோங்கப்பா, உங்களை தலைகுனிய வைக்கப்போறது நானோ என் கல்யாணமோ கிடையாது. உங்க சின்ன மகள்தான் அதை செய்யப்போறா” என்றாள்.
அன்று சத்யப்ரகாஷை பார்த்து வந்தேன் என்று பொன்மணி சொன்னது நியாபகம் வர, “என்ன செய்து வச்ச?” என்றார் கோபமாக.
“ம்மா… அது வந்து” என இடைவெளி விட்டவள், “அதுக்கும் அக்கா பிரச்சனைக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாதும்மா” என தேற்றினாள் அன்னையை.
“நீ என்ன செய்து வச்சனு சொல்லு முதல்ல?”
“அவனுக்கு பிள்ள பெத்து வச்சிருக்கேனு சொல்லி மிரட்டினது பத்தாம, பொன்மணியை கெடுத்ததை சத்யப்ரகாஷ் அவன் பொண்டாட்டிகிட்ட சொல்லனும்னு சொல்லியிருக்கா அதுவும் ஊரார் முன்னாடி சொல்லனுமாம்.
அதுக்கு அவன் என்ன சொன்னானோ தெரியல, இவ நீயே சொல்லிட்டினா இத்தோட விட்டுடுவேன், இல்லைனா நான் சொல்ல வேண்டியிருக்கும்னு மிரட்டினாப்பா. இத்தனைக்கு அப்புறம் அவன் சும்மா இருப்பானா?” என்றாள் கலைசெல்வி.
“அடிப்பாவி மகளே” என மகளை அடிக்கவே துணிந்துவிட்டார் அஞ்சுகம்.
மனைவியை தடுத்த அசோகன், “இதெல்லாம் உனக்கெப்படி தெரியும்?” என்றார்.
“நேத்து நைட் சத்யப்ரகாஷ்கிட்டயிருந்து அவளுக்கு கால் வந்தது, பொன்மணி அவன்கிட்ட பேசினதை என் காதால கேட்டேன், அப்படி ஏதும் இல்லைனு அவளை சொல்ல சொல்லுங்க பார்க்கலாம்”
“ஆமாம்ப்பா, அப்படி மிரட்டலைனா திருனேஷ்வரன் வீட்டுல போய் உண்மையை சொல்லியிருக்கமாட்டான், அவன் உண்மையான முகத்தை வெளிச்சத்துக்கு வர வைக்காம விடமாட்டேன்”
கலைசெல்வி “பார்த்திங்களாப்பா இவ செய்து வச்ச வேலையை? கல்யாணம் பண்ணிக்காம குழந்தையிருக்குனு வெளில தெரிய வந்தா என்னென்ன சொல்வாங்கன்ற பயமே இல்ல.
அதோட குழந்தையை காட்டுனு சத்யப்ரகாஷ் கேட்டா எந்த குழந்தையை கொண்டுட்டு வந்து அவன்கிட்ட கொடுப்பா? இவ வாய்கொழுப்புக்கு என் வாழ்க்கையை பலி கொடுக்கனுமா?” என்றாள்.
சின்னமகள் இப்படி செய்திருக்கிறாள் என்ற வேதனையோடு, தனது வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள துடிக்கும் பெரியமகளை விரக்தியாய் பார்த்து, பொன்மணியை பார்த்தார் நிறைந்த வலியோடு.
“அப்பா” என தந்தையருகே வந்தவள், “என்னை மன்னிச்சுடுங்கப்பா, என்னால நிம்மதியா இருக்க முடியல, திருனேஷ்வரனோட அப்பாம்மா நம்மளை பார்க்கும்போதெல்லாம் தலை குனிஞ்சு போறதை என்னால தாங்கிக்க முடியலப்பா, இந்த கஷ்டத்தை இனியும் அவங்களுக்கு கொடுக்க வேண்டாம்னுதான் இப்படி செய்ய முடிவெடுத்தேன்” என்றாள்.
“அவங்க கஷ்டப்படறதை பார்க்க முடியலன்னா நீயே போய் அன்னைக்கிருந்த நிலைமை அப்படினு பேசி, அவங்க குற்றவுணர்வை போக்கியிருக்க வேண்டியதுதான? கவுன்சிலர் பையனை ஏன் அனுப்பி வச்ச? இனி அவன் சும்மா இருப்பானா?”
பொன்மணி “அவனால என்னை ஒன்னும் பண்ண முடியாது, என் பிரச்சனையை நான் பார்த்துக்கிறேன், அதை ஏன் உன் கல்யாணத்தோட கனெக்ட் பண்ற?” என முறைத்தாள் அக்காவை.
“உன் பிரச்சனையை பேசப்போய்தான அன்னைக்கு அவங்களுக்கும் அப்பாக்கும் பிடிக்காம போச்சு?”
“அவங்களுக்கு உன்னை பிடிச்சிருந்தா உன்னைப் பத்தி மட்டும்தான் பேசனும்? எதுக்கு என்னை இழுக்குறாங்க?”
“ஏன்னா… நான் உன்னோட பிறந்துட்டேன்ல? அதனாலத்தான் பிடிச்சவனை கட்டிக்க இத்தனை பாடு”
“சரி நீ என்னவோ பண்ணிக்கோ, நான் நாளைக்கு ஊருக்கு கிளம்பிடறேன். உன் கல்யாணம் முடியுற வரை இந்த பக்கமே வரல. யாராவது கேட்டா என் தங்கை உறவை அத்துவிட்டு அஞ்சு வருசமாச்சுனு சொல்லிடு” என்று அறைக்குள் சென்று தனது பையை எடுத்தக்கொண்டு வெளியே வந்தவள், “அம்மா, அப்பா வாங்க கோவிலுக்கு போய்ட்டு வரலாம்” என்றாள்.
“நான் எங்கேயும் வரல” என்று வெடித்தபடி அறைக்குள் சென்றுவிட்டார் அஞ்சுகம்.
அசோகனும் மறுக்கவே, “உங்ககிட்ட நிறைய பேசனும்ப்பா” என்று அரைமணி நேரம் வரை கெஞ்சினாள்.
அப்பொழுதும் அசோகன் வர மறுக்கவே “எனக்கு நியாயம்னு படுறது உங்களுக்கு அவமானமா தெரியுது. சத்யப்ரகாஷ் விசயத்துல இனிமேலும் என்னை கட்டுப்படுத்தினா நான் செத்துடுவேன்ப்பா” என வெடித்து வெளியேறினாள் பொன்மணி.
அஞ்சுகத்திற்கு வேதனை நெஞ்சை அடைத்தது. பெரிய மகள் இனி தங்கள் பேச்சை கேட்பாள் என்ற நம்பிக்கையில்லை, சின்ன மகள் மனம் சொன்ன பாதையில் செல்கிறாள். அதை தடுத்து நிறுத்தினால் மகளை இழந்துவிடுவோம் என்று புதிய பயம் வந்தது அன்னைக்கு.
அந்த சத்யப்ரகாஷ் தவறிழைத்த போதே அத்தனை மிரட்டு மிரட்டி பணிய வைத்தான். தற்போது மகள் அவனை சீண்டியிருக்கிறாள். விளைவுகள் நிச்சயம் பயங்கரமாகத்தான் இருக்கப் போகிறது. தன்னை விட, தனது கணவர் இதையெல்லாம் எப்படி தாங்கிக்கொள்ள போகிறாரோ? என்ற வேதனையில் உழன்றார்.
*** *** *** *** ***
இன்றிரவு சென்னை செல்ல வேண்டும் என்றிருந்தான் திருனேஷ்வரன். தங்களை விட்டு விலகிவிடாதே என்று தந்தை அத்தனை மன்றாடி கேட்டும் மகன் பதறவில்லை.
எக்காரணத்தை கொண்டும் உங்களை விட்டுவிடமாட்டேன்ப்பா என்றான்தான். அதில் கடமை இருந்ததே தவிர அன்பு இல்லையென்று செல்லம்மாவிற்கு தோன்ற, இனியும் மகனை பிரியக் கூடாது என்ற முடிவிற்கு வந்தார்.
நாங்களும் உன்னோடே வருகிறோம், இல்லையேல் செத்துவிடுவோம் என்று செல்லம்மாள் சொல்ல, அடக்க முடியாத கோபம் வந்தது திருனேஷ்வரனுக்கு.
ஆனாலும் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத இந்த நேரத்தில், நான் சென்ற ஆத்திரத்தில் எதாவது செய்து அது விபரீதத்தில் முடிந்துவிட்டால் என்ற கவலை வர, ஒரு நாள் இங்கிருக்க முடிவெடுத்தான்.
தனது மிரட்டலுக்கு பயந்து மகன் நேற்றிரவு கிளம்பாதது நிம்மதியை கொடுத்த போதும், இந்த முறைபோல எப்போதும் இருக்கமாட்டான். நிரந்தரமாக மகனை தன்னோடு தக்க வைக்க திருமணம் ஒன்றே தீர்வாகும் என்ற முடிவிற்கு வந்து,
நேற்றே நாத்தனாருக்கு அழைத்து, பொன்மணி வெண்பாவிடம் பேசியதையும், சத்யப்ரகாஷ் வீட்டிற்கு வந்து மன்னிப்பு வேண்டியதையும் சொல்லி, மகன் தவறிழைக்கவில்லை. அவனை பார்க்க வரமாட்டிங்களா? என்று உரிமையோடு அழைப்பு விடுத்தார்.
வில்வராஜின் தங்கைக்கும் பெருத்த மகிழ்வாகிட, இதோ இந்த காலைப் பொழுதிலேயே அண்ணன் மகனை காண கணவன், பிள்ளைகளோடு வந்தார் விஜயா.
சிறு வயதிலிருந்தே அன்னையைத் தவிர்த்து யாரிடமும் அதிகம் பேசமாட்டான் திருனேஷ்வரன். தற்போது அத்தையிடமும் அப்படித்தான் இருந்தான்.
“பொய் சொன்ன சிறுக்கியை சும்மாவா விட்டிங்க அண்ணி? அன்னைக்கு ஊரே தெரியும்படி பழியை சுமத்திட்டு, இப்போ யாருக்கும் தெரியாம உண்மையை சொன்னா ஆச்சா? அவ வீடு எதுனு சொல்லுங்க, போய் நாறடிச்சிட்டு வருவோம்” என்றார் வில்வராஜின் தங்கை.
“அத்தை… அப்படிலாம் ஏதும் பண்ணக்கூடாது”
விஜயா “ப்பா… எங்ககிட்ட பேச எழுத்தை எண்ணுற, அவளைப் பத்தி பேசினதும் உடனே பதில் வருதே, கரிசனம் தகுதியானவங்களுக்குத்தான் காட்டனும்” என கண்டித்தார் திருனேஷ்வரனை.
“கரிசனம் காட்ட அந்த பொண்ணு தகுதியானவதான் அத்தை”
“அதெப்படி உனக்கு தெரியும்?”
“வெண்பாகிட்ட பேசின விதத்தை வச்சு சொல்றேன்” என்றான்.
அன்னையின் முகமும் அத்தையின் முகமும் அதிருப்தியை காண்பிக்க, “பழசை பேசினா எனக்கு அப்பாம்மா மேலதான் வெறுப்பாகும்” என்றான்.
“என்ன பேச்சு பேசற? எவளோ ஒருத்திக்காக அப்பாம்மாவை வெறுப்பியா?” என அங்கலாய்த்தார்.
“யார் பேசினாலும் நாங்க மகனை நம்பியிருக்கனும்ல விஜயா? திருனேசுக்கு அந்த கோபம்தான். அந்த பொண்ணு விசயம் பேசுறது அவனுக்கு பிடிக்கலனா விட்டுடு, இனி பேசி என்னாகப்போகுது?” என்றார் வில்வராஜ்.
“சரி அந்த பிள்ளையைப் பத்தி பேச வேணாம், நீ கல்யாணம் செய்துக்கோ, முப்பது வயசு ஆகப்போகுதில்ல?” என செல்லம்மாள் சொன்னபடி திருமண விசயத்திற்கு வந்தார் விஜயா.
மாட்டேன் என்றால் பேச்சை வளர்ப்பார்கள் என, “கல்யாணம் பண்ணிப்பேன் அத்தை, முதல்ல வருமானத்துக்கு வழி பண்ணிட்டு அப்புறம் பண்ணிக்கிறேன்” என்றான்.
செல்லம்மாள், “தொழில் எப்படி அமையாம போகும்? நேத்து கூட புது தொழில் விசயமா யார் கூடவோ மணிக்கணக்கா பேசிட்டிருந்தியே?” என பெருமையோடு சொல்லி, “போன வாரம்தான் ஜாதகம் பார்த்தேன், குருபலன் வந்துடுச்சுனு ஜோசியர் சொன்னார். பொண்ணு பார்க்க ஆரம்பிக்கட்டுமா திருனேஷ்?” என்றார் ஆசையாக.
திருனேஷ்வரன் நல்ல படிப்பாளி, அமைதியான பையன். படித்ததும் வேலையை பிடித்துவிட்டான். சம்பளத்தில் பெரும் பகுதியை வீட்டிற்கு அனுப்பிவிடுவான் என்று செல்லம்மாள் பெருமையாக பேசியிருக்கிறார்.
பொன்மணி பிரச்சனை வருவதற்கு முன்னே மகளை அண்ணன் மகனுக்கு கொடுக்க ஆசைப்பட்டார் விஜயா. ஆனால் அப்போது மகள் பள்ளிப் பருவத்தில் இருந்ததால் பேசவில்லை. சிறைக்கு சென்ற பின்னே பெண் கொடுக்கும் நினைப்பை தள்ளி வைத்திருந்தார்.
தற்போது திருனேஷ்வரன் அப்படிபட்டவன் இல்லை என்றதும் மீண்டும் ஆசை வர, “ஏன் அண்ணி? என் மகளுக்கென்ன குறைச்சல்?” என்றார்.
அத்தை மகளும் அருகிலிருக்க பதறிப்போனான் திருனேஷ்வரன். மகளை கொடுக்க முன் வந்த தங்கையை பெருமையாய் பார்த்த வில்வராஜிற்கு முகத்தில் ஓர் பொலிவு.
செல்லம்மாள் திருனேஷ்வரனைப் பார்க்க, திருனேஷ்வரன் அத்தை மகளை பார்த்தான். அவளின் முகத்திலிருந்த வெட்கம் திருனேஷ்வரனை நிலையிழக்கச் செய்ய, “என்ன படிக்கிற?” என்றான் அத்தை மகளிடம்.
“ஃபார்மஸி தேர்ட் இயர் மாமா” என்றாள் சன்னக்குரலில்.
“யார் கல்யாணம் பண்ணிக்க கேட்டாலும் படிச்சு முடிச்சு வேலை வாங்கின பின்னாடி பண்ணிக்கிறேனு சொல்லு” என்றவன், அன்னையிடம், “ம்மா வெளில போய்ட்டு வரேன், கொஞ்சம் திங்க்ஸ் வாங்கனும்” என்று உடைமாற்ற வேண்டி அறைக்குள் சென்றான்.
மகன் வெளியில் சென்றால் யார் யார் என்னென்ன பேசுவார்களோ? தவறாக பார்ப்பார்களோ என்ற அச்சம் உண்டானது செல்லம்மாவிற்கு.
திருனேஷ் வெளியே வர, “என்ன வாங்கனுமோ சொல்லு திருனேஷ், நான் வாங்கிட்டு வரேன். நீ போகாத” என்றார்.
“வீட்டுல இருக்க மாதிரியா நடந்துக்கிறிங்க” முறைத்தவன், ‘தூங்கி முழிச்சதும் இம்சையை இழுத்து விட்டுக்கிட்டு‘ என மனதோடு மருகியபடி வெளியேறியிருந்தான்.
error: Content is protected !!