Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அமுதமழை சாரல்

அமுதமழை சாரல் 12

அத்தியாயம் 12

பாரி வீட்டின் வரவேற்பறையில் அனைவரும் கூடி இருந்தனர்.



Advertisement

அனைவர் முகத்திலும் ஒரு டென்ஷன் இருந்தது. இன்று பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாக உள்ளது. பாரியும் வில்வாவும், “நாங்க இரண்டு பேரும் மட்டும் தான் முதல்ல பார்ப்போம். நாங்க பார்த்துட்டு உங்களுக்கு சொல்லுறோம்” என்று கூறி ரூமிற்குள் சென்று கதவை அடைத்து கொண்டனர்.

அனைவரும் கடிகாரத்தையும் மூடி இருந்த அறை கதவையும் மாறி மாறி பார்த்து கொண்டிருந்தார்கள்.

Advertisement

Advertisement

“ஏங்க.. இந்த பசங்க மார்க் கம்மியா வாங்கி இருந்தாங்கனா? கதவை வேற சாத்தி வச்சிருக்காங்க.. ஏதாச்சும் தப்பா முடிவு எடுத்துட்டா? எனக்கு பக்.. பக்குன்னு இருக்குங்க” என்றார் சுமதி மெதுவாக தன் கணவனிடம்.

“சும்மா எங்க அம்மா கூட சேர்ந்து கண்ட நியுஸும் பார்த்துட்டும் கேட்டுட்டும் இருந்தா அப்படி தான் கண்டதும் தோணும்… நம்ம பசங்களை பத்தி தெரியாதா?” என்றார் சங்கரன் கண்டிப்பான குரலில்.

Advertisement

“ஏன்டா.. உன் பொண்டாட்டிக்கு சந்தேகம் வந்தா அதுக்கு மட்டும் பதில் சொல்லு.. என்னை எதுக்கு உள்ளே இழுக்குற?” என்றார் பாட்டி கடுப்பாக.

“அண்ணன் சொல்றது சரி தானே சுமி.. நீ எதுக்கு கண்டதையும் யோசிக்கிற? மார்க் கம்மியா வாங்கினாலும் நம்ம யாரும் திட்ட போறது இல்லை. பசங்களும் கவலை படறவங்க இல்லை, இன்னும் கொஞ்ச நேரத்துல தெரிஞ்சிட போகுது” என்று கூறிக்கொண்டே தமயந்தி அனைவருக்கும் தேநீர் கொண்டு வந்து கொடுத்தார்.

“என்ன ஒன்னு… டாக்டர் படிக்கனும்னு ஆசை படறாங்க.. பார்ப்போம் “ என்றார் பாட்டி.

“ஏம்மா டாக்டர் படிக்கணும்னா இந்த ரிசல்ட் தேவை இல்லை, நீட் ரிசல்ட் தான் பார்க்கணும்” என்றார் சங்கரன்.

“கண்ட நியுஸும் பார்க்கிறவங்களுக்கு நீட் பத்தி நல்லா தெரியும்.. நீட் எக்ஸாம் வைச்சு தான் சீட்டுன்னாலும் பொது தேர்வுலயும் அம்பது சதவீதம் எடுத்திருக்கனும் “ என்றார் பாட்டி ‘யார்கிட்ட..’ என்ற பார்வையுடன்.

“அது எல்லாம் எடுத்திடுவாங்க பாட்டி, நீட் பத்தி தெரியலை.. ஆனா இதுல ஓரளவுக்கு வாங்கிடுவாங்க” என்றாள் கருணா.

அடுத்த பத்தாவது நிமடத்தில்,

“டண்டனக்கா நக்கா நக்கா நக்கா

டண்டனக்கா நக்கா

டண்டனக்கா நக்கா நக்கா நக்கா

டண்டனக்கா நக்கா”

என்று குத்தாட்டம் போட்டுக்கொண்டே இருவரும் வெளியே வந்தனர். கையில் ஆளுக்கொரு துண்டை வேறு சுத்திகொண்டே மாறி மாறி

டண்டனக்கா நக்கா நக்கா நக்கா

டண்டனக்கா நக்கா

டண்டனக்கா நக்கா நக்கா நக்கா

டண்டனக்கா நக்கா

என்று ஆடி பாடிக்கொண்டே வெளியே வந்தனர்.

“பாரி என்ன ரிசல்ட் டா?”

“வில்வா.. எவ்வளவு மார்க் டா?”

“என்ன டா இரண்டு பேரும் இவ்வளவு சந்தோசமா இருக்கீங்க.. சொல்லிட்டு ஆடுங்க டா.. நாங்களும் சந்தோசப் படுவோம் இல்ல?”

என்று ஆளாளுக்கு கேட்டு கொண்டிருந்தனர்.

இப்பொழுது பாட்டை மாற்றி,

“அப்புடி போடு போடு போடு

அசத்தி போடு கண்ணாலே

இப்புடி போடு போடு போடு

இழுத்து போடு கையாலே”

 என்று பாடத் தொடங்கினார்கள்.

பொறுமை இழந்த தர்மராஜ்,

“இவங்க சொல்லல்லன்னா என்ன, நம்மளே பார்ப்போம் வாங்க.. இவங்க உணர்வுக்கு மதிப்பு கொடுத்து வெயிட் பண்ணா ரொம்ப ஓவராத் தான் போறாங்க..” என்று தன் கை பேசியை எடுத்தார்.

அதில் சற்றே நிதானத்துக்கு வந்தனர் இருவரும்.

“அப்பா.. நாங்க எவ்வளவு மார்க் தெரியுமா?” என்றான் பாரி இப்பொழுது.

“நான் எவ்வளவு மார்க் தெரியுமா?” என்றான் வில்வா.

“அதைத்தானே டா கேட்டுட்டு இருக்கோம்.. எவ்வளவு?”

“மார்க்கா மாமா முக்கியம்? “ என்றான் வில்வா.

“அதானே” என்று பின் பாட்டு பாடினான் பாரி.

“ஏம்மா, நீங்க பயந்த மாதிரி இவங்க இரண்டு பேருக்கும் ஏதாச்சும் ஆயிடுச்சோ? அதிர்ச்சியில பையித்தம் புடிச்சிடுச்சோ?” என்றாள் கருணா சுமதியிடம்.

“யாருக்கு பையித்தியம்.. நாங்க சொல்றதை கேட்டா நீங்களே டான்ஸ் ஆடுவீங்க” என்று பாரி கூறியதுக்கு,

“ஆமா ஆடுவீங்க” என்று வில்வா பின்பாட்டு பாடினான்.

அனைவரும் இப்பொழுது இருவரையும் முறைக்கவும்,

“நான் எவ்வளவு மார்க்.. அவன் எவ்வளவு மார்க் அப்படின்னு இனிமே கேக்காதீங்க.. நாங்க எவ்வளவு மார்க் அப்படின்னு கேளுங்க.. இனி யாரும் எங்களை பிரிச்சு பேசவே முடியாது” என்றான் பாரி.

நிஜமாலுமே ஏதாவது ஆகிவிட்டதோ என்று சந்தேகமாக அனைவரும் பார்த்தனர்.

பாரியும் வில்வாவும் சேர்ந்து கூறினார்கள்..

“நாங்க இரண்டு பேருமே 525 மார்க்.”

டண்டனக்கா நக்கா நக்கா நக்கா

டண்டனக்கா நக்கா

“அட லூசுங்களா? இரண்டு பேரும் ஒரே மார்க் வாங்குனதுக்கா இந்த அலப்பறை” என்றார் சங்கரன் இப்பொழுது.

“அது எப்படி டா இரண்டு பேருமே ஒரே மார்க்..” என்றார் தாத்தா.

“அதான் தாத்தா எங்க நட்பு… பார்த்தீங்களா.. கடவுளே எங்க நட்பை பத்தி இந்த உலகுக்கு புரிய வைச்சிட்டாரு”

“பாட்டி, சும்மாவே இவனுங்க நட்புக்காக படத்தை பார்க்க முடியாது. இனி அவ்வளவு தான்“ என்றாள் கருணா சோகமாக.

“525 ன்னா 88 பெர்ஸன்ட் வருது, அடுத்து நீட் ரிசல்ட் வரனும்,அப்பத் தான் தெரியும் டாக்டர் சீட் கிடைக்குமான்னு” என்றார் தர்மராஜ்.

“அப்புறம் தனி தனி சப்ஜெக்ட்ல என்ன மார்க்?” என்று சங்கரன் கேட்டதிற்கு,

“அது எல்லாம் நீங்களே பார்த்துக்கோங்க.. நாங்க இரண்டு பேரும் ஸ்கூல் போயிட்டு வரோம்” என்று இருவரும் கிளம்பிவிட்டனர்.

“என்னோட சேர்ந்து நீ கெட்ட … உன்னோடு சேர்ந்து நான் கெட்டேன்… அப்படின்னு வர வர இரண்டு பேரு போக்கும் சரி இல்ல.. அம்மாவும் அத்தையும் செல்லம் கொடுத்து கெடுக்குறாங்க ப்பா“ என்றாள் கருணா தன் அப்பாவிடம்.

“நல்லா சொல்லு கருணா.. பொழுதுக்கும் அந்த வீடியோ கேம் கட்டிக்கிட்டு உட்கார்ந்து இருக்கானுங்க. இவளுங்களும் கண்டிக்காம செல்லம் கொஞ்சிட்டு இருக்காளுங்க” என்றார் பாட்டி.

“ஆத்தி.. “ என்று தமயந்தியும் சுமதியும் பாவமாக தங்கள் கணவர்மார்களை பார்த்தனர்.

பிறகு இருவர் மார்க்குகளையும் பார்த்து சற்று நேரம் பேசி இருந்துவிட்டு மகிழ்ச்சியாக அன்றைய சபை கலைந்தது.

அடுத்த வாரம் பத்தாம் வகுப்பு முடிவு வெளியானது. கருணாம்பிகை பள்ளியில் முதலாவதாகவும், மாவட்டத்தில் மூன்றாவதுமாக தேர்ச்சி பெற்றிருந்தாள். அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி.

கருணாம்பிகை அதே பள்ளியில் எகனாமிக்ஸ் குரூப் தேர்நதெடுத்து சேர்ந்து கொண்டாள். அவளது அட்மிஷன் சமயத்திலே அருந்ததியையும் அவர்கள் பள்ளியில் ஏழாம் வகுப்பில் சேர்த்தார்கள்.

நீட் தேர்வுகளில் இருவரும் சுமாராக தான் தேர்ச்சி பெற்றிருந்தார்கள். அதனால் நிச்சயம் டாக்டர் சீட் கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை. மேற்கொண்டு என்ன சேர விருப்பம் என்று இருவரையும் யோசித்து கூறும்படி கூறி இருந்தார்கள்.

என்ன படித்தாலும் இருவரும் ஒரே காலேஜ் தான் செல்லுவோம் என்று நின்றார்கள்.

“வாழ்க்கையில ஒரு லட்ச்சியம் வேண்டாமா? ஒன்னா படிச்சா தான் நீங்க நண்பர்களா? யாருக்கு எதுல விருப்பம்னு பாருங்க” என்று கருணாம்பிகை தான் இருவரையும் வெளுத்து வாங்கினாள்.

“நாங்களே யோசிச்சு இரண்டு நாள்ல சொல்றோம்” என்று கூறி இருந்தார்கள் இருவரும்.

“டேய் பாரி.. நீயே சொல்லுடா என்ன படிப்போம்?”

“ரொம்ப நம்பிக்கையா இருந்துட்டோம் வில்வா.. கண்டிப்பா மெடிசின் கிடைக்கும்ன்னு.. இப்ப என்னன்னு யோசிக்கிறது?”

“நம்ம வேணா அடுத்த வருஷமும் முயற்சி செய்வோமா பாரி..” என்றான் இறங்கிய குரலில். அவனுக்கு அதில் விருப்பமில்லை.

“பேசாமா இன்ஜினியரிங் சேர்ந்துடுவோமா?”

“வேற ஆப்ஷன் என்னடா இருக்கு.. சும்மா படிக்கணும்னு இன்ஜினியரிங் சேர கூடாதுல்ல?”

“நம்ம ஸ்கூல்ல நிறைய சொன்னாங்களே டா.. கேரியர் கைடன்ஸ் ப்ரோக்ராம்ல.. என்ன டா சொன்னாங்க? ஞாபகம் இருக்கா?”

“அதை எங்க டா நான் கவனிச்சேன்”

“பேசாமா அப்பா அம்மா என்ன சொல்றாங்களோ அதுலயே சேர்ந்துடுவோமா?”

இவர்கள் இருவரும் மண்டையை உடைத்து யோசித்தும் ஒரு யோசனையும் வரவில்லை.

_____

“டவெலத் மார்க் வச்சு நல்ல இன்ஜினியரிங் காலேஜ்ல சீட் கிடைக்கும். அதுலயே சேர்த்து விட்றலாமா?”

“ஆமா, எனக்கு முன்னமே மெடிசின் கஷ்டம்ன்னு தெரியும். நான் ஒரு மூனு காலேஜ் பார்த்து வச்சிருக்கேன்“

“நானும் ஒரு காலேஜ்ல சொல்லி வச்சிருக்கேன்”

“சரி, பசங்க என்ன சொல்றாங்கன்னு பார்த்துட்டு ஒரு காலேஜ் பைனல் பண்ணிடலாம்”

இப்படி சங்கரனும் தர்மராஜும் பேசி வைத்திருந்தார்கள்.

இரண்டு நாள் கழித்து அனைவரும் மீண்டும் ஒன்று சேர்ந்தார்கள்.

“சொல்லுங்கப்பா என்ன ஐடியா வைச்சிருக்கீங்க இரண்டுபேரும்” என்றார் தர்மராஜ் முதலில்.

இருவரும் அமைதியாக இருந்தனர்.

“பேசாம இருந்தா என்ன அர்த்தம். உங்க ஐடியா சொல்லுங்க. சரியா வருமா இல்லையானு முடிவு செய்யலாம்”

————

“இன்ஜினியரிங் சேர்ந்துக்கிறீங்களா? நானும் சங்கரும் சில காலேஜ் பார்த்து வச்சிருக்கோம். இப்ப இன்ஜினியரிங் படிச்சா தான் சீக்கிரம் சம்பாதிக்கவும் முடியும்.. என்ன சொல்றீங்க?”

‘சரி’ என்று தலை ஆட்டினார்கள் இருவரும்.

“சரி.. என்ன பிரான்ச் எடுக்கலாம்?” என்றதிற்கு இருவரும் முழித்தனர்.

“சரியா போச்சு.. என்ன பிரான்ச் கூட யோசிக்காம இன்ஜினியரிங் படிக்க போறீங்களா?” என்றாள் கருணாம்பிகை கடுப்புடன்.

இருவரும் பேசாமல் நின்றனர்.

“டாக்டர் கிடைக்கலைனா இன்ஜினியரிங் அப்படின்னு யார் சொன்னா? எந்த காலத்துல இருக்கீங்க நீங்க எல்லாரும். நான் கொஞ்சம் கோர்ஸஸ் பார்த்து வச்சிருக்கேன். சரியா வருமான்னு பாருங்க என்று ஒரு சார்ட் பேப்பர் கொண்டு வந்து கீழே விரித்தாள்.

உங்க இரண்டு பேருக்கும் கம்ப்யூட்டர்ல அதிக ஆர்வம் இல்லை. அதே மாதிரி மெக்கானிக்கல் மைண்டும் இல்லை. சைக்கிள் ரிப்பேர்ன்னா கூட நீங்களா அதை சரி செய்ய முயற்சி செஞ்சது இல்லை. கடைக்கு தான் கொண்டு போவீங்க. அதே மாதிரி வீட்ல டிவி ரிப்பேர், ஹீட்டர் ரிப்பேர் இப்படி எது வந்தாலும் அதை சரி செய்யலாம் அப்படின்ற ஆர்வம் உங்களுக்கு கிடையாது. சோ எலக்ட்ரிகல் எலெக்ட்டிரானிக்ஸ் குரூப் செட் ஆகாது.

அவள் விளக்க விளக்க இருவருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. இவ்வளவு இருக்கா யோசிக்க என்று.

அடுத்து உங்க இரண்டு பேர் பத்தியும் தனி தனியா பார்த்தா

பாரிவேந்தனுக்கு மேத்ஸ் நல்லா வரும். சோ இன்ஜினியரிங் எடுத்தாலும் சமாளிச்சிடலாம். கம்ப்யூட்ர் சயின்ஸ் கூட செலக்ட் பண்ணிக்கலாம். அதே சமயம், இன்னொரு வருஷம் முயற்சி செய்து நீட் திரும்பவும் எழுதலாம். அவனுக்கு திரும்ப படிக்கிற பொறுமையும் பக்குவமும் இருக்கு.

அண்ணாக்கு மேத்ஸ் இன்டெர்ஸ்ட் சுத்தமா இல்லை. சோ இன்ஜினியரிங் அவனுக்கு கண்டிப்பா சூட் ஆகாது. இன்னொரு வருஷம் திரும்ப படிக்கிறதும் அண்ணாக்கு இஷ்டம் இருக்காது. அண்ணாக்கு பிசிக்ஸ் பயாலஜி இரண்டும் ரொம்ப நல்லா வரும். மைக்ரோ பயாலஜி, பையோடெக்னாலஜி, அப்ளைட் பிசிக்ஸ் இப்படி படிக்கலாம்.”

அவள் சொல்வதை இல்லை என்று மறுக்கவே முடியாத வண்ணம் இருந்தது. நண்பர்கள் யோசனையாக நின்றுகொண்டிருந்தார்கள்.

மற்றவர்களும் கருணா சொல்லுவதை கவனமாக கேட்டு கொண்டிருந்தார்கள்.

“இல்ல இரண்டு பேரும் சேர்ந்து தான் படிக்கணும் அப்படின்னா… இரண்டு பேருக்கும் மருத்துவ துறையில தான் ஆர்வம் அதிகம். டாக்டர் படிக்கலைன்னா, பேரா மெடிக்கல் கோர்ஸஸ் படிக்கலாம்.

அதுல நான் சில ஆப்ஷன் நோட் பண்ணி இருக்கேன்..

ரேடியோலஜி… இது இப்ப நல்ல முன்னேறிட்டு வர துறை.

ஸ்பீச் தெரப்பி..

ஆக்குபேஷன் தெரப்பி..

நியூட்ரிஷனிஸ்ட்..

இப்படி இங்க பாருங்க நிறைய நோட் பண்ணி இருக்கேன்”, ஒவ்வொன்றாய் விளக்கி கூறினாள்.

“அப்புறம், நான் உங்க இரண்டு பேருக்கும் சரியா இருக்கும்ன்னு நினைக்கிறது பிசியோ தெரப்பி.. அது உங்க இரண்டு பேருக்கும் நல்லா சூட் ஆகும்.

சேர்ந்து படிக்கலாம்.. அதே மாதிரி கொஞ்ச வருஷம் ப்ராக்டிஸ் பண்ணிட்டு நீங்க சேர்ந்தே ஒரு கிளினிக் கூட ஆரம்பிக்கலாம்.

இன்னிக்கு நிலவரத்துல நல்ல பிசினஸ். அதை பத்தி நான் கலெக்ட் பண்ணிருக்க டீடெயில்ஸ் இங்க இருக்கு பாருங்க… “

அத்தனை நுணக்கமாக எல்லாம் குறித்து வைத்திருந்தாள். அழகாக அனைவருக்கும் புரியும் விதத்திலும் எடுத்து கூறினாள்.

எப்பொழுதும் எதிரியாக பார்க்கும் கருணாவை மரியாதையாக பார்த்தனர் இருவரும்.

“சூப்பர் பாப்பா.. “ என்று வியந்து பாராட்டினார் தர்மராஜ்.

சங்கரன் பெருமையாக மகள் தலையை தடவி கொடுத்தார்.

“நீங்களும் இதை வச்சு யோசிங்க.. ஒரு ஐடியா கிடைக்கும்” என்று அந்த சார்ட் பேப்பரை நண்பர்களிடம் கொடுத்தாள் கருணா.

“ரொம்ப தேங்க்ஸ் டீ..” என்றான் வில்வா.

“எங்களுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது, எங்க இரண்டு பேருக்கும் எது சிறந்தது அப்படின்னு எங்களுக்கே தெரியல… நீ எவ்வளவு நுட்பமா கவனிச்சிருக்க.. ரொம்ப தேங்க்ஸ் கருணாம்பிகை.. இனிமே வில்வா மாதிரி நீயும் எனக்கு பெஸ்ட் பிரண்ட்” என்றான் பாரி உணர்ச்சிவசமாக.

 கருணாவின் இந்த செயல், பாரி மனதில் அழகான நட்பாக மலர்ந்தது. எப்பொழுதும் கருணாவை அவனுக்கு பிடிக்கும் தான். ஆனால் நண்பனின் தங்கை என்ற முறையில் தான் அவனது பார்வை இருக்கும்.

இப்பொழுது தன் நல்லதை பற்றி தனக்காக யோசித்த ஒரு தோழியாக அவளை உணர்ந்தான்.

“நீங்க யாருன்னு எனக்கு தெரியும்.. நான் யாருன்னு உங்களுக்கு தெரியும்.. போய் ஒழுங்கா யோசிச்சு காலேஜ் சேர்ற வழியை பாருங்க” என்று இலகுவாக பதில் கூறி சென்றுவிட்டாள்.

பிறகு ஒருமனதாக முடிவு செய்து இருவரும் சென்னையில் ஒரு பிரபல கல்லூரியில் பிசியோ தெரப்பி சேர்ந்தார்கள்.

கருணாம்பிகை அருந்ததி பள்ளிக்கும், பாரி வில்வா கல்லூருக்கும் செல்ல தொடங்கினார்கள்.

——————-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!