Skip to content
Post Views: 3,088
அத்தியாயம் 13
மார்ச் மாத தேர்வில் தவற விட்ட மாணவர்கள் ஜூலை மாதத்தில் துணைத் தேர்வு எழுதலாம். முன்பு படித்த பள்ளியே, அவன் நன்றாக படிக்கும் மாணவன் என்பதால், அவனுடைய சூழ்நிலையை புரிந்து கொண்டு, அவன் தேர்வுக்கு ரெஜிஸ்டர் செய்யவும், சென்னையில் பரீட்சை எழுதவும் அவர்களே சிபாரிசு கடிதம் கொடுத்தும் என அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுத்தது.
Advertisement
அவினாஷ் அவனே சுயமாக படித்து தேர்வை சிறப்பாக எழுதினான்.
Advertisement
பாரி வில்வாவின் அட்மிஷன் எல்லாம் முடிந்த பிறகு தான் இவன் தேர்வு முடிவுகள் வெளியானது.
Advertisement
தொன்னூற்று ஐந்து சதவீதம் எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தான். ஆனால் அதற்கு முன்பாக கவுன்சிலிங் தொடங்கி அரசு கல்லூரிகளில் சேர்க்கை முடிந்துவிட்டது.
Advertisement
அன்று காலை தமயந்தி தர்மராஜ் இருவரும் இவர்கள் வீட்டிற்கு வந்திருந்தார்கள்.
“அவி, பிரைவேட் காலேஜ்ல சீட் கிடைக்கும்ன்னு மாமா சொல்றாங்க. பாரிக்கு சேர்க்கறப்பவே இன்ஜினியரிங் சேர்த்தா தேவைப்படும்ன்னு சில காலேஜ் பார்த்து வச்சிருக்காங்க.. நீ என்ன சொல்ற?” என்று கேட்டார் தமயந்தி.
“வேண்டாம் அத்தை, அதுக்கு நிறைய பீஸ் கட்ற மாதிரி இருக்கும். நாம அடுத்த வருஷம் இந்த மார்க் வச்சே கவுன்சிலிங் அப்ளை பண்ண முடியும்”
“இல்லப்பா, ஒரு வருஷம் வீணா போயிடும்ல.. இவ்வளவு மார்க் வாங்கி இருக்க… நல்ல காலேஜ்ல சேர முடியும். இப்ப உங்க கிட்ட இருக்க காசே போதும் காலேஜ் பீஸ் கட்ட” என்றார் தர்மராஜ்.
“இல்ல மாமா, எல்லா காசையும் எடுத்துட்டா அப்புறம் அவசர தேவைக்கு என்ன பண்ண முடியும். அதுவும் இல்லாம இப்ப தாத்தாவை விட்டுட்டும் போக முடியாது இல்லையா… இந்த வருஷம் வேலைக்கு போறேன்.. அதுக்குள்ள தாத்தாவுக்கும் கொஞ்சம் நல்லா ஆயிடும். அப்புறம் படிச்சிக்கிறேன். நீங்க சொன்னீங்கனு தான் நான் எக்ஸாம் எழுதினேன். சின்ன வேலைக்காவது ஏற்பாடு பண்ணி தாங்க மாமா”
“தாத்தாவை நான் பார்த்துகிறேன் அவி… நீ அதுக்காக படிக்காம இருக்க கூடாது” என்றார் தமயந்தி.
“இப்ப நீ வேலைக்கு போனா கூட தாத்தாவை விட்டுட்டு தானே போகணும்” என்றார் தர்மராஜ்.
அவினாஷ் மிகவும் சங்கடமாக அவர்களை பார்த்தான்.
“நீ யாருக்கும் கஷ்டம் கொடுக்க கூடாதுன்னு நினைக்கிறது எங்களுக்கு புரியுது. நாங்க உன்னையும் பாப்பாவையும் எங்க பிள்ளைங்களாக தான் நினைக்கிறோம்… இப்ப உங்களுக்கு கொஞ்சம் கஷ்டமான நேரம் தான். ஆனா இதுவும் கடந்து போகும்னு நினைச்சுக்கணும்… ஒரே இடத்துல தேங்கி நின்னுடக்கூடாது” என்றார் தர்மராஜ் நிதானமாக.
“எங்க அப்பா அம்மாவே எங்களை அவங்க பிள்ளைங்களா நினைக்கலையே அத்தை. அவங்க உயிரோட இருக்கிறப்ப எங்க பொறுப்பை நீங்க எதுக்காக எடுத்துக்கணும்? அது அவசியமும் இல்லையே?”
“ரொம்ப குழப்பிக்காத அவி… நாங்க சொல்றதை கேளு. உங்க அத்தை தாத்தாவை பார்த்துகிறதுல உனக்கு உதவி செய்வாங்க. சொல்லப்போனா தாத்தாவை பார்த்துகிற பொறுப்பு முதல்ல அவங்க பிள்ளைங்களுக்கு தான். அப்புறம் தான் பேர பிள்ளைகளுக்கு. அப்படி பார்த்தா அத்தை தான் பார்த்துக்கணும். உன் மனசு கஷ்டப்படக்கூடாதுன்னு தான் நாங்க கொஞ்சம் விலகியே நிக்குறோம்… நான் உன்னை நல்ல காலேஜ்ல சேர்த்துவிடறேன். காசு இங்க பிரச்சனை இல்லை.. நீ படிச்சு முடிச்சுட்டா நல்ல வேலை கிடைக்கும். அப்ப இதைவிட அதிகமா நீ சம்பாதிக்கலாம்“என்றார் தர்மராஜ் உண்மையான அக்கறையுடன்.
“நான் கொஞ்சம் யோசிச்சு சொல்லட்டுமா?”
“ஏற்கனவே லேட், நாளைக்குள்ள ஒரு முடிவை சொல்லு… நான் இப்ப கிளம்புறேன்” என்று கூறிவிட்டு தர்மராஜ் கிளம்பிவிட்டார்.
தமயந்தி, “நீ வேணா எங்க பாப்பா கிட்ட பேசி பாரு அவி.. உனக்கு ஒரு தெளிவு கிடைக்கும்” என்றார்.
“யாரு அத்தை.. கருணாம்பிகையா? சின்ன பொண்ணு எனக்கு தெளிவு ஏற்படுத்துவாளா? போங்க அத்தை”
“என்ன அவி இப்படி சொல்லிட்ட.. பாரி, வில்வா என்ன படிக்கிறதுன்னு குழம்பிக்கிட்டு இருந்தப்ப அவ தான் பாரிக்கு என்ன பிடிக்கும் வில்வாவிற்கு என்ன பிடிக்கும், இரண்டு பேருக்கும் எது வரும் வராதுன்னு பிட்டு பிட்டு வச்சா தெரியுமா? அவ சின்ன பொண்ணுனாலும் ரொம்ப புத்திசாலி..”
“உங்க பாப்பாவை ஒரு வார்த்தை சொல்ல கூடாதே உங்களுக்கு.. அவ சின்ன வயசுல இருந்து பாரியையும் வில்வாவையும் பார்த்துட்டு இருக்கா.. கூடவே வளர்ந்தவங்க … அதனால அவங்களுக்கு என்ன தேவைன்னு தெரியும். என்னை பத்தி என்ன தெரியும்.. “
“அவ பேசி நீ கேட்டது இல்லை.. அவ வீட்ல மட்டும் இல்லை, மேடையில் கூட பேசுவா.. இங்க சென்னைல மட்டும் இல்ல, வெளி ஊருக்கு எல்லாம் கூட பேசுறதுக்கு போவா. எனக்காக ஒரு தடவை பேசி பாரு.. அப்புறம் முடிவு எடு.. மாமா சொன்ன மாதிரி நாளைக்குள்ள ஒரு முடிவுக்கு வரணும்.. சரியா”
“ம்ம்”
“சரி நான் போய் அப்பாகிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு வரேன்” என்று அறைக்குள் சென்றார் தமயந்தி.
இவர்கள் பேசிக் கொண்டிருந்ததை கேட்டுக் கொண்டு தான் இருந்தார் வேதாச்சலம்.
பக்கத்தில் அமர்ந்த தமயந்தியின் கைகளை கெட்டியாக பிடித்து கொண்டார்.
கவுரவத்திற்காக வேண்டாம் என்று சொன்ன மகள் தான்.. ஆனால் இன்று பேரனின் எதிர்காலத்திற்காக அவளது கையை கெட்டியாக பிடித்துக்கொண்டார்.
‘தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்ன்னு இதை தான் சொல்லுவாங்களோ, ஆனா எனக்காக ஆடலையே..’ என்று நினைத்து கொண்டார் தமயந்தி. ஏற்கனவே நொந்து போய் இருப்பவர்களிடம் என்னத்தை கேட்பது என்று மற்றொரு கையால் அப்பாவின் கையை ஆதரவாகி தட்டி கொடுத்தார் நம்பிக்கை தரும் விதமாக.
அவினாஷ் தன்னுடைய இன்றைய நிலையை அறவே வெறுத்தான். அவனது மனசுக்கும் புத்திக்கும் நடுவில் பெரும் போராட்டம் நடந்தது. தன் பெற்றோர்களை நினைத்து மிகவும் வேதனை அடைந்தான்.
அன்று மாலை ஏழு மணிப்போல கருணாம்பிகை, பாரி, வில்வா மூவரும் தாத்தாவை பார்க்க வந்தோம் என்று கூறி கொண்டே உள்ளே வந்தனர். அவினாஷிற்கு புரிந்துவிட்டது, தமயந்தி தான் அனுப்பி வைத்துள்ளார் என்று.
தாத்தாவை சும்மா சென்று ஒரு முறை பார்த்துவிட்டு வந்து அமர்ந்தனர்.
அமைதியாக இருந்தனர் அனைவரும்.
“அவி, நீயும் எங்க காலேஜ்க்குகே வந்திடேன்.. சூப்பர் காலேஜ்” என்றான் வில்வா திடீரென்று.
அவினாஷ் ஒரு மார்க்கமாக இவர்கள் மூவரையும் பார்த்தான்.
“இல்ல அவினாஷ், உனக்கும் ரிசல்ட் வந்திடுச்சுல.. அதான்.. அவன் சொல்றான்..” என்று சமாளித்தான் பாரி.
அருந்ததி அங்கே கீழே அமர்ந்து வீட்டு பாடம் செய்து கொண்டிருந்தாள்.
ஒரு நிமிஷம், இதோ வந்துடறேன் என்று அவினாஷ் அடுப்படிக்குள் சென்று விட்டான்.
“டேய்… உங்க அத்தை பையன் ஏன்டா எப்பவுமே விறைப்பா இருக்கான். அவனை பார்த்தாலே எனக்கு பயமா இருக்கு” என்று பாரியின் காதை கடித்தான் வில்வா.
“எனக்கும் தான்டா… எங்க அம்மா தான் விடாம நம்மளை அனுப்பி விட்டுட்டாங்க… பாவம் அவனும் உங்க வயசு தானே.. கொஞ்சம் பேசுங்கன்னு.. என்னமோ அவன் நம்மகூட கலகலன்னு பேசுற மாதிரி.. நம்ம சொல்லி இவன் கேப்பான்னா?”
“நம்ம சொல்றதை இது வரை நம்ம தெரு டாம்மி கூட கேட்டது கிடையாது..”
“அதை சொல்லு.. அப்ப எப்படி அத்தை நம்மளை இவனுக்கு சொல்லி புரியவைக்க அனுப்பி இருக்காங்க?”
“டேய்… உனக்கு அப்படி ஒரு எண்ணமா? கருணாவை தான் பேச அனுப்பி இருக்காங்க… வழக்கம் போல நம்ம இரண்டு பேரையும் அவளுக்கு பாடி கார்டா தான் அனுப்பி இருக்காங்க”
“ஹ்ம்ம்..” இவர்கள் இருவரும் வழக்கம் போல அவர்களுக்கு உள்ளே பேசிக்கொண்டிருந்தார்கள்.
கருணா இவர்களை கண்டுகொள்ளாமல் அருந்ததியிடம் பேசிக்கொண்டிருந்தாள்.
“ஆமா, அருந்ததி நீ பெருசானதும் என்னவாக போற?”
“நான் இன்னும் யோசிக்கலை அக்கா.. நீங்க என்ன ஆக போறீங்க?”
“நான் எகானாமிஸ்ட்…”
“அப்படின்னா?”
“அதை பத்தி நான் நாளைக்கு ஸ்கூல் போகும் பொது சொல்றேன். நீ இப்ப இருந்தே என்ன ஆகணும்னு யோசிக்கணும், சரியா? வாழ்க்கைக்கு லட்சியம் ரொம்ப முக்கியம்”
அருந்ததி தீவிரமாக “சரி அக்கா.. நீங்களே சொல்லுங்க.. நான் என்ன ஆகட்டும்” என்றாள்.
இதை கவனித்த வில்வா,
“அய்யோ சின்ன பாப்பா.. நீ ஒருத்தியாவது நீயா ஒரு முடிவு எடுப்பேன்னு நினைச்சேன். எல்லாம் சேர்ந்து என் தங்கச்சிய ஒரு தீர்க்கதரிசியா மாத்திடுவீங்க போலயே?” என்றான் அருந்ததியிடம்.
அருந்ததி வில்வாவை முறைத்து பார்க்கவும், “என்னடா சின்ன பாப்பா முறைக்கிறதை பார்த்தா அவ அண்ணன் மாதிரியே தெரியுறா?” என்றான் பாரியிடம்.
“ஆமா டா”
“என்னை சின்ன பாப்பா கூப்பிடாதீங்க..” என்றாள் ரோஷமாக.
“இந்தாங்க எல்லாரும் எடுத்துக்கோங்க” என்று சுட சுட பூரிகளை கொண்டு வந்து கொடுத்தான் அவினாஷ். தொட்டு கொள்வதற்கு கொத்தமல்லி சட்னி வைத்திருந்தான்.
“நாங்க சாப்பிட்டோமே” என்று கருணா கூறுவதற்குள் பாரியும் வில்வாவும் ஒரு பூரியை எடுத்து வாயினுள் திணித்து இருந்தனர்.
“பரவாயில்லை கருணா, ஆளுக்கு இரண்டு தான் வச்சிருக்கேன். எடுத்துக்கோ “
“உங்க கிட்ட பேச சொல்லி அத்தை தான் அனுப்பினாங்க..” என்றாள் கருணா பட்டென்று.
“அம்மா அவங்க அனுப்பினாங்கன்னு சொல்லாம தானே பேச சொன்னாங்க” என்றான் பாரி கிசுகிசுப்பாக.
“நீங்க மூனு பேரும் இந்த நேரம் வரும்போதே எனக்கு தெரியும்” என்றான் அவினாஷ்.
“எனக்கு உங்களை பத்தி அதிகம் தெரியாது, நான் என்ன உதவ முடியும்னு தெரியலை”
“அதை தான் நானும் அத்தை கிட்ட சொன்னேன். அவங்களை பொறுத்த வரை உலகத்துலயே புத்திசாலி அவங்க பாப்பா தான்”
“அது அப்படி இல்லை, யார் கூடயாவது டிஸ்கஸ் பண்ணா உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்க வாய்ப்பு இருக்கு இல்ல “
“தெரியலை, ஆனா எனக்காக நீங்க எல்லாரும் இவ்வளவு முயற்சி செய்யும் போது, நான் ஒத்துழைக்கலைனா அது தப்பு”
“சரி.. உங்களுக்கு என்ன படிக்கணும்னு ஆசை.. இப்ப இருக்கிற சூழ்நிலை எல்லாத்தையும் கொஞ்ச நேரத்துக்கு தள்ளி வச்சிட்டு சொல்லுங்க.. அதாவது எந்த பிரச்சனையும் இல்லாத சமயத்தில், நீங்க என்ன படிக்கணும்னு ஆசை பட்டிருந்தீங்க?”
“எனக்கு இன்ஜினியரிங் படிச்சிட்டு மேலே எம்.பி.எ படிக்கணும்னு ஆசை.. வேலைக்கு போறதை விட எனக்கு பிசினஸ் செய்யணும் தான் ஆசை”
“ஓ .. பிசினஸ்னா என்ன பிசினஸ்?”
“பிசினஸ் ன்னா.. அது எல்லாம் இன்னும் யோசிச்சது இல்லை.. இப்ப படிப்பே என்னன்னு தெரியலை”
“அதான் சொன்னேனே.. இப்ப நிலைமை விட்டுட்டு யோசிங்கன்னு..
பிஸிநெஸ்ல மார்கெட்டிங்கா மேனுபாக்ச்சரிங்கா சேல்ஸ்சா..எந்த துறையில? டெக்ஸ்ட்டைல், புட், இந்த மாதிரி எதுல?”
பேசிக்கொண்டிருக்கும் பெண் தன்னை விட சிறியவள் என்று கொஞ்சம் இலகுவாக தான் பேச தொடங்கினான். இப்பொழுது கொஞ்சம் கவனமாக அமர்ந்தான்.
“சொல்லுங்க.. அதை பொறுத்து தானே இன்ஜினியரிங்ல குரூப் செலக்ட் பண்ணனும்”
“அது வந்து..” என்று இழுத்தான் அவினாஷ்.
“நல்லா மாட்டுனியா ?” என்று பாரியும் வில்வாவும் அவனை குறுகுறு என்று பார்த்தனர்.
அவர்கள் பார்வையில் ஆவினாஷிற்கே சிரிப்பு வரும்போல இருந்தது.
“சரி… வேலைக்கு போகணும்னு சொல்றீங்களாம். என்ன வேலைக்கு போகணும்னு நினைக்கிறீங்க?”
“பிளஸ் டு தானே முடிச்சிருக்கேன்.. என்ன வேலை கிடைக்கும்னு தெரியலை.. எது கிடைச்சாலும் போக வேண்டியது தான்”
“இது என்ன கூறுகெட்ட பதில்?”
“எனக்கு தெரிஞ்சா தானே சொல்ல முடியும்..”
“தெரியலைன்னா தெரிஞ்சுக்க என்ன வழின்னு யோசிக்கணும்”
“உனக்கு புரியாது, என் நிலைமையில இருந்தா தான் தெரியும்”
“இன்ஜினியரிங் சேர்ந்து படிச்சுக்கிட்டே, பார்ட் டைம் வேலை கொஞ்சம் நல்ல சம்பளத்துல கிடைச்சா ஓகேவா?”
“ஓகே தான், தாத்தா… “ என்றான் கவலையாக.
“அதுக்கும் ஏற்பாடு செய்யலாம்.. முதல்ல படிப்பையும் வேலையையும் யோசிப்போம்”
“நல்ல சம்பளத்துல வேலை எப்படி கிடைக்கும்? வேலை கிடைக்கும்னு நம்பிக்கை மட்டும் வைச்சுக்கிட்டு காலேஜ் சேர்ந்துட்டு, அப்புறம் வேலை கிடைக்கலைன்னா?
“நம்புங்க.. வேலை கிடைக்கும்ன்னு நம்புங்க.. நல்லதே நடக்கும்னு நம்புங்க… அப்ப நல்லதாவே நடக்கும்.”
“ரொம்ப நாளா எங்க லைப்ல எதுவுமே நல்லதா நடக்கலையே.. அப்புறம் எதை வச்சு நம்பிக்கை வரும்..” என்றான் விரக்தியாக.
பாரியும் வில்வாவும் அமைதியாக இவர்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்கள்.
தாத்தா ரூமில் இருந்து பெல் அடித்தார்.அவினாஷ் எழுந்து செல்ல போகவும்,
“ஏன் உங்களுக்கு மட்டும் தான் அவர் தாத்தாவா? பாரி வேந்தனுக்கு இல்லையா?” என்றாள் கருணா.
‘கோர்த்து விட்டுட்டா.. ‘ என்று முனங்கிக்கொண்டே பாரி எழுந்து தாத்தா அறைக்குள் சென்றான். பின்னே வில்வாவும் சென்று விட்டான்.
“அவ்வளவு தான் அவினாஷ்.. நான் தான் எல்லாம்.. எனக்கு தான் எல்லா கஷ்டமும், அப்படின்னு கைலயே கஷ்டத்தை பிடிச்சு வச்சிருந்தீங்கன்னா சுமை அதிகமா தான் இருக்கும். கொஞ்சம் கீழே இறக்கி வைங்க, அத்தையும் மாமாவும் பாரியும், ஏன் நாங்களும் உங்களுக்கு துணையா இருப்போம்.
கொஞ்ச நாள் தான், எல்லாம் ஒரு நாள் மாறும். அப்ப தெம்பா வந்து நில்லுங்களேன்.. உங்களை வளர்த்துக்கணும்… சூழ்நிலை ஒன்னு தான்.. ஆனா அதை நம்ம எப்படி கை ஆள்றோம்னு இருக்கு இல்லையா?
முன்ன உங்களுக்கு உதவி கிடைக்கலை..த னியே கஷ்டப்பட்டீங்க இப்ப கிடைக்கிற உதவிய தட்டி விடறது புத்திசாலி தனம் இல்லை”
“தாத்தா எங்களுக்காக நிறைய செஞ்சிருக்காரு.. இப்ப நான் அவரை பார்க்கணும் இல்ல?”
“நீங்க உங்க எதிர்காலத்தை தொலைச்சிட்டு அவர் கூட இருந்தா அதுவே அவருக்கு மன அழுத்தத்தை தராதா? நீங்க உங்க எதிர்காலத்தை நோக்கி ஒரு அடி எடுத்து வைங்க.. உங்களுக்கு உதவியா இருக்கணும் அப்படின்ற எண்ணமே தாத்தாவின் உடல் ஆரோக்கியத்தை முன்னேற்றும்”
கருணா பேச பேச மனசு லேசாவது போல தோன்றியது அவனுக்கு.
மந்திர பெண்ணோ இவள் என்று ஆச்சர்யமாக பார்த்தான் பெண்ணவளை.
“என்ன சின்ன பொண்ணு இவ்வளவு பேசறாளேன்னு பார்க்கறீங்களா?”
“ஆமா.. என்னைவிட இரண்டு வருஷம் சின்ன பொண்ணு நீ, எப்படி இவ்வளவு தெளிவா யோசிக்க முடியுது உன்னால?”
“நான் பிரச்சனைக்கு வெளியே நிக்கிறேன்.. அதனால யோசிக்க முடியுது.. நீங்க அதுக்குள்ள நின்னுட்டு இருக்கீங்க.. கொஞ்சம் தள்ளி நின்னு யோசிங்க..”
“வேலை கிடைச்சா எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்.. அதுவுமில்லாமல் தாத்தாவை.. “என்று மீண்டும் ஆரம்பித்தான்.
“காலையில நீங்க போறதுக்கு முன்னே எல்லாம் கவனிச்சிட்டு போங்க.. அத்தையை இங்கே வர சொல்லலாம், இல்லை தாத்தாவை அங்கே விட்டுட்டு போங்க..
அப்புறம் சாயங்காலம் வந்து கூப்பிட்டுக்கோங்க..”
“வேலை…”
“ஒன் ஸ்டேப் அட் எ டைம் பாஸ்.. முதல்ல காலேஜ்.. அப்புறம் வேலை..”
“இல்ல காலேஜ் சேர்ந்தப்புறம் வேலைக்கு போக வேண்டாம்னு எல்லாரும் சொல்லுவீங்க..”
“ஹா ஹா ஹா “
“உங்க வேலைக்கு நான் ஒரு ஐடியா வச்சிருக்கேன். அதனால் வேலை கிடைச்சிடுச்சுன்னு நினைச்சுக்கோங்க..”
“நீயா?”
“கருணாம்பிகை இருக்க பயமேன்.. நான் ஒரு முடிவு எடுத்துட்டா..”
என்று கருணா கூறிக்கொண்டிருக்கையில்,
“நீ கவலையே படவேண்டாம்” என்று பின்னால் இருந்து கோரஸ் பாடினார்கள் நண்பர்கள்.
தாத்தாவிற்கும் அதுவே விருப்பம் என்று தெரிந்து கொண்டு , அவர்கள் வீட்டில் இருந்து கொஞ்ச தூரத்தில் இருந்த ஒரு கல்லூரியிலே இஞ்சினீயரிங் சேர்ந்துவிட்டான்.
மீண்டும் கருணாவுடன் கலந்து ஆலோசித்து மெக்கானிக்கல் இன்ஜினியரிங் தேர்ந்தெடுத்து கொண்டான்.
அவன் கல்லூரி செல்லும் நேரத்தில் தமயந்தி தந்தையின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
மெல்ல புது ரொட்டீனுக்கு பழகினார்கள் அனைவரும்.
“ஆமா, இந்த அவினாஷுற்கு என்ன வேலை யோசிச்சிருப்பா கருணா?” என்றான் பாரி வில்வாவிடம்.
“தெரியலை டா.. நானும் கேட்டுகலை.. கேட்டா நீயும் வேலைக்கு போன்னு சொல்லிட்டா?”
“சொன்னாலும் சொல்லுவா.. கத்திரிக்காய் முத்தினா சந்தைக்கு வர தானே செய்யும். மெதுவா தெரிஞ்சுப்போமே..”
பாரியும் வில்வாவுயம் வில்வா வீட்டின் கேட் அருகில் பேசிக்கொண்டிருந்தார்கள்.
“டேய். நீங்க பிசியோதெரப்பி வேலைக்கு போவீங்களா தெரியல.. ஆனா வாட்ச் மேன் வேலை நிச்சயம் கிடைக்கும்.. எப்ப பார்த்தாலும் வாட்ச் மேன் கணக்கா கேட்லேயே நிக்க வேண்டியது.. உள்ளே வந்து பேசுங்கடா..” என்று குரல் வந்தது உள்ளிருந்து, வழக்கமான பாட்டியின் குரல் தான்.
error: Content is protected !!