Skip to content
Post Views: 2,919
அத்தியாயம் 17
“என்ன ரமணி அம்மா, உங்க குப்பம் கோவில் திருவிழா வேலை எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு?”
Advertisement
“சூப்பரா போகுது கண்ணு, ஆனா என்ன ஒன்னு ஒரு ஆளை பேசுறதுக்கு கூப்பிட்டு இருந்தோம்… இப்ப கடைசி நிமிஷத்துல வர மாட்டேன்னு சொல்லிட்டாங்க”
“கோவில் திருவிழாவில் எதை பத்தி பேச கூப்பிட்டு இருந்தீங்க?”
Advertisement
Advertisement
“சாமி கதை எல்லாம் எங்க கண்ணு நம்ப ஆளுங்க கேக்குறாங்க? சும்மா ஜாலியா காமெடி மாதிரி பேச கூப்பிட்டு இருந்தோம் “
அன்று ஞாயிற்றுக்கிழமை, விடுமுறையானதால் கருணாம்பிகை ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். அப்படியே வேலை செய்யும் ரமணி அம்மாவுடன் பேசிக்கொண்டு இருந்தாள்.
Advertisement
“ஏன் கண்ணு, நீ கூட எல்லா ஊருக்கும் போய் பேசுறியே எதை பத்தி பேசுவ?”
“நானா? என்ன தலைப்பு கொடுக்கிறார்களோ அதை பத்தி பேசுவேன்“
“அப்ப நீயே எங்க ஏரியால வந்து பேசுறியா?”
“ஜோக் எல்லாம் எனக்கு வராது ரமணியம்மா… வேற ஏதாச்சும்னா பேசலாம்”
“என்ன வேணா பேசு கண்ணு.. நீ வந்து பேசுனா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கும்ல?”
“ஏன்டிம்மா இப்பதான் என் பேத்தி வீட்ல இருக்கா, ஊர் ஊரா பேசறது பத்தாதுன்னு இப்போ உங்க வீட்டு கிட்ட வேற வந்து பேசணுமா?” என்று நொடித்துக் கொண்டார் பாட்டி.
“ஏன் பாட்டி இப்படி சொல்றீங்க? ரமணி அம்மா ஆசையாத்தானே கேக்குறாங்க?”
“நான் கூட தான் ரொம்ப நாளா உன் கூட பேசணும்னு ஆசையா இருக்கேன் என் கூட உட்கார்ந்து பேசுறியா நீ?”
“பாட்டி அவ மேடையில தான் பேசுவா… உங்களோட எல்லாம் பேசமாட்டா. நம்ம எல்லாம் அவளுக்கு ஒரு ஆளாவே தெரியாது” என்றான் வில்வா அவன் பங்குக்கு.
“இவங்க கிடக்குறாங்க.. நான் வரேன் ரமணிம்மா உங்க ஏரியால பேசுறதுக்கு எத பத்தி பேசணும்னு சொல்லுங்க அத பத்தி பேசிடலாம்”
“எனக்கு தெரியலையே கண்ணு”
“சரி யாரெல்லாம் வருவாங்க பேசுறத கேக்குறதுக்கு?”
“எங்க ஏரியா ஆளுங்க தான் கண்ணு..”
“உங்க ஏரியா ஆளுங்கனா, உங்க வயசுக்காரர்களா? வயசானவங்களா? குழந்தைங்களா? படிக்கிற பசங்களா? இல்ல எல்லாரும் வருவாங்களா?”
“எல்லாரும் வருவாங்க என் பையன் வயசு பசங்க, காலேஜ் ஸ்கூல் போகறதுங்க எல்லாம் வருவாங்க. அப்புறம் என் செட் பொம்பளைங்க வருவாங்க, கிழவன் கிழவிங்க கூட வருவாங்க“
“சரி.. அதிகமான பேரு அங்க என்ன வேலை பார்க்குறாங்க? ஆம்பளைங்க என்ன வேலை பார்க்கிறாங்க? பொம்பளைங்க என்ன வேலை பாக்குறாங்க? பசங்க எந்த ஸ்கூல்ல எல்லாம் போய் படிக்கிறாங்க?”
“இன்னிக்கி வீட்டு வேலை நடந்த மாதிரி தான் ரமணி” என்று நொடித்து கொண்டே உள்ளே சென்று விட்டார் பாட்டி
“ஆம்பளைங்க எங்க வேலைக்கு போகுதுங்க? பெரும்பாலும் எல்லாம் தண்ணி வண்டி கேஸ் தான். வேலைக்கு போனாலும் வாங்குற காச எடுத்து நேரே டாஸ்மாக் கடைக்கு போயிடுவானுங்க, அப்புறம் என்ன, என்ன மாதிரி பொம்பளைங்க வீட்டு வேலைக்கும், கார்மெண்ட் வேலைக்கும், ஆபிஸ்ல ஹவுஸ் கீப்பிங் வேலை, இப்படி ஏதாவது ஒரு வேலைக்கு போறோம்.
பசங்க எல்லாம் நல்லா படிக்க வைக்கணும்னு ஆசை. சிலரு ஆறாவது வரைக்கும் காசு கடன வாங்கி பிரைவேட் பள்ளிக்கூடத்துல படிக்க வைக்கிறோம். சிலரு கவர்ன்மெண்ட் ஸ்கூல் தான் அனுப்புறாங்க. அதுங்க எங்க ஒழுங்கா படிக்குதுங்க, நல்லா படிச்சு குடும்பத்தை மேலாக்கிடுவாங்கன்னு தான் ஒவ்வொருத்தரும் நம்பிகிட்டு இருக்கோம்… ஆனா அப்படி ஒன்னும் காணோம்”
ரமணி அம்மா பெருமூச்சுடன் அங்கத்தய நிலவரத்தை கூறினார்.
“சரி ரமணி அம்மா, நான் உங்க குப்பம் திருவிழாவில் பேசுறதுக்கு வரேன் எத்தனை மணிக்குன்னு நீங்க அங்க பேசிட்டு என்கிட்ட சொல்லுங்க”
“ரொம்ப தேங்க்ஸ் கண்ணு” என்று வாயெல்லாம் பல்லாக அவர் பாத்திரம் துலக்க சென்று விட்டார்.
“எதுக்கு கருணா உனக்கு இந்த தேவையில்லாத வேலை?” என்றான் வில்வா
“ஏதோ நானும் நல்லா பேசுவேன்னு நம்பி ரமணிம்மா கூப்பிடுது… அதுக்காகவாச்சும் போய் பேசிட்டு வரலாமே, இதுல என்ன இருக்கு?”
“இதுக்கும் எங்கள தான் பாடிக்கார்டா கூப்பிடுவ, அந்த குப்பத்துக்கு எல்லாம் யார் வருவா?” என்று வாய்க்குள்ளே முனுமுனுத்தான் வில்வா
“எனக்கு பாடிகார்ட்டே தேவையில்லை, சொன்னா யாரும் கேட்கறது இல்ல.. அதுக்கு நீங்க பண்ற பில்டப் இருக்கே, சப்பா சப்பா… முடியல… இன்னிக்கு இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன்” என்று பதிலுக்கு பொருமினாள் கருணா.
வில்வாவிற்கு எப்பொழுதும் சேரி பக்கம் நடப்பது, சாக்கடை வாசனை, இது எல்லாம் பிடிக்காது. அதுவும் இல்லாமல் அங்கே நிறைய தெரு நாய்கள் இருக்கும். நாய் என்றால் இவனுக்கு மிகவும் பயம். இவனுக்கு மட்டும் இல்ல பாரிக்கும் மிகவும் பயம். அதற்காகவே கருணா செல்வதை இவன் விரும்பவில்லை நேராக நண்பனிடம் சென்று புகார் வாசித்தான்.
“என்னத்தடா சொல்றது? அவ முடிவு பண்ணிட்டா போய் தான் தீருவா. நாம எப்படி பாடிகார்ட் வேலையில் இருந்து எஸ்கேப் ஆகறதுன்னு பார்க்கணும்”
“நம்ம பிளான் பண்ணா தான் எல்லாம் பிளாப் ஆகுதே?”
“ஆமா, என்னைக்கு டா?”
“அது தெரியலையே”
“முழுசா ஒன்னையும் கேட்காத… அப்புறம் எப்படி பிளான் பண்றது?”
“ஹலோ அண்ணாஸ், என்ன பிளான் பண்றீங்க?” என்று கேட்டு கொண்டே வந்தாள் அருந்ததி.
“அடடே! வா சின்ன பாப்பா! “ என்று அருந்ததியை வரவேற்று சுருக்கமாக விஷயத்தை கூறினான் வில்வா.
“அட போங்கண்ணாஸ், நீங்க போடற பிளான் எல்லாம் ஒன்னு கூட வேலை செய்யாது. எங்க அக்கா ஒன்னு முடிவு பண்ணிட்டா அது தான் நடக்கும்”
“வந்துட்டா அக்காக்கு சொம்பு தூக்கிட்டு… நீ போய் உங்க அக்கா கூடவே விளையாடு, வாடா நாம போலாம்” என்று பாரி வில்வாவை அழைத்துக் கொண்டு சென்று விட்டான்.
அந்த வாரம் வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணிக்கு கருணாவை பேசுவதற்கு அழைத்திருந்தனர்.
தர்மராஜ-தமயந்தி, ஷங்கர்-சுமதி, பாட்டி-தாத்தா, அவினாஷ்-அருந்ததி என்று அனைவரும் செல்ல காத்துக் கொண்டிருந்தனர்.
இம்முறை பாரியையும் வில்வாவையும் வேதாச்சலம் தாத்தாவிற்கு துணையாக விட்டு விட்டு சென்றனர்.
அதிலும் நண்பர்கள் இருவருக்கும் கடுப்பே, “எப்பயுமே நாங்க தானே போவோம் இன்னிக்கு ஏன் எங்களை விட்டுட்டு போறீங்க” என்று சண்டைக்கு வந்தனர். ஆனால் யாரும் அவர்களை கண்டுகொள்ளவே இல்லை.
“நீங்க தானடா பாடி கார்டு பாடி கார்டுன்னு ரொம்ப சலிச்சுக்கிறீங்க… இனிமேல் நாங்களே பாத்துக்கிறோம்… நீங்க ஒன்னும் வரத் தேவையில்லை” என்று விட்டார் தர்மராஜ்.
“போங்க போங்க எங்க தயவு உங்களுக்கு தேவைப்படாமலா போகுப்போகுது, அப்ப பேசிக்கிறோம்” என்று இருவரும் அவினாஷ் வீட்டை நோக்கி சென்று விட்டனர்.
கருணா மேடை ஏறவும், அங்கிருந்த அனைவருக்கும் சற்று அதிருப்தியே. ‘யாராச்சும் பெரிய ஆளா பேச சொல்லுவாங்கண்ணா சும்மா ஒரு சின்ன பொண்ண கொண்டு வந்து பேச சொல்றாங்க’ எல்லாரும் முனுமுனுப்புடன் அமர்ந்திருந்தனர்.
“எல்லாருக்கும் வணக்கம். ஒரு பெரிய காமெடி ஸ்டார் வந்து பேச வேண்டியது, நான் வந்ததும் எல்லாருக்கும் அவ்வளவா பிடிக்கலைன்னு தெரியுது. நல்ல பிரியாணி சாப்பிடலாம்னு நினைச்சுட்டு இருக்கப்ப கூட்டிட்டு வந்து கோவிலில் கூல் ஊத்துறாங்க.. அதை குடின்னா எப்படி இருக்கும் மனநிலை.. அப்படி தான் இருக்கும். ஆனா ஒன்னு, சில சமயம் கூழ் கூட நல்லா ருசியா தான் இருக்கும். குடிச்சு முடிச்சதும் நாக்கும் மனசும் நிறைஞ்சு தான் இருக்கும்.
அந்த மாதிரி தான் நான் பேசுறது கேட்டு பாருங்க உங்களுக்கு பிடிக்கவும் வாய்ப்பு இருக்கு.
அனைவரது கவனமும் இப்பொழுது கருணாவின் பேச்சின் பக்கம் திரும்பியது.
இங்க எத பத்தி பேசலாம் அப்படின்னு யோசிக்கும்போது எனக்கு தெரிஞ்சு அதிக தைரியம் உள்ள பெண்கள் இங்கதான் இருக்காங்க. குடிகார கணவனையும் தாங்கிக்கிட்டு, பசங்கள நல்லா படிக்க வைக்க அவங்க அவங்களால முடிஞ்ச வேலைகளை செஞ்சு சம்பாதிச்சு பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் குடும்பத்தை தாங்கி நிறுத்துகிற பெண்கள் இங்க இருக்கீங்க.
இந்த இடத்துல ஒரு மிக பெரிய ஆக்க சக்தி இருக்கு. உங்க சக்தியம்மன் கோவில்ல கூடி இருக்க ஒவ்வொரு பெண்ணும் சக்தியே தான்.”
“அப்படி என்ன பெருசா பண்ணிட்டாங்க எங்க அம்மாங்க எல்லாம்?” என்று எழுந்து கேட்டான் ஒரு சிறுவன்.
“நீ என்ன படிக்கிற தம்பி?”
“நான் எட்டாங் கிளாஸ் படிக்கிறேன்”
“உன்னை யார் படிக்க வைக்கிறது?”
“நான் கவர்மெண்ட் ஸ்கூல்ல படிக்கிறேன். காசு எல்லாம் ஒன்னும் இல்ல ப்ரீயா தான் படிக்கிறேன். அங்க காலை மதியம் சாப்பாடும் கிடைக்குது. எங்க அம்மா ஒன்னும் செய்யலையே?” என்றான் குறும்பாக.
அங்கே இருந்த சிறுவர் சிறுமியர் ஆண்கள் எல்லாம் சிரிக்க தொடங்கினார்கள்.
“நீ சொல்றது சரிதான்.. ப்ரியா படிக்கிற, ஆனா உங்க அப்பா வேலைக்கு போய் எத்தனை வருஷம் ஆச்சு? உங்க வீட்ல எத்தனை குழந்தைங்க? உங்க எல்லாருக்கும் சாப்பாடு செலவு, வீட்டு வாடகை, துணிமணிகள், உடம்பு சரி இல்லைன்னா மருத்துவ செலவு, இதெல்லாம் யார் பாத்துக்குறாங்க.
இதுக்கெல்லாம் பணத்தேவை அப்படின்னு உன்னை வேலைக்கு அனுப்பி இருந்தாங்கன்னா நீ என்ன பண்ணி இருக்க முடியும்?”
“————————-”
“சரி, அடுத்ததா ஆக்க சக்தி இருந்தும் பெரிய அளவில் உங்களை உயர்த்தாம இன்னும் இதே நிலைமையில் இருக்கிறது காரணம் என்ன?
நம்ம கிட்ட என்ன சக்தி இருக்கு நம்மளால என்ன முடியும்னு யோசிச்சா தான் நீங்க அடுத்த லெவலுக்கு போக முடியும்.
இப்போ நான் ஒரு படத்தை காட்டுகிறேன். அதுல இரண்டு பெண்கள் இருப்பாங்க, பொருளாதார ரீதியா யார் மேலே யாரு கீழே ன்னு சொல்லுங்க”
அங்கே இருந்த தொலைக்காட்சியில் இவள் அந்த படத்தை ஓடவிட்டாள்.
அதில் முதலில் ஒரு நடுத்தர வயது பெண்மணியின் புகைப்படம் இருந்தது. அந்தப் பெண்மணி ஒரு நேர்த்தியான காட்டன் புடவை அணிந்திருந்தார். கையில் ஒரு புத்தகம் மட்டுமே வைத்திருந்தார். படித்த குடும்பத்து பெண் போல காட்சி அளித்தார். அடுத்து, வீட்டு வேலை செய்வது போல் ஒரு பெண்மணியின் புகைப்படம் இருந்தது.
“இதுல என்ன சந்தேகம் அந்த வீட்டு வேலை செய்ற அம்மா தான் கஷ்டப்படுது இன்னொரு அம்மா நல்லா இருக்க மாதிரி தான் தெரியுது” என்றார் கூட்டத்தில் இருந்த ஒரு பெண்.
“அதுதான் தப்பு, இந்த அம்மாவோட மாத வருமானம் 4000 ரூபாய் அதுல அவங்க சிக்கனமா செலவு செஞ்சு சேமிப்பும் செய்றாங்க. அவங்க கிட்ட வீடு மட்டும் சொந்த வீடு இருக்குது. 4000 ரூபாயை அவங்க சாப்பாட்டு செலவு வீட்டு செலவு துணிமணி செலவுகள் எல்லாத்தையும் கவனிச்சுக்கிட்டு பார்ப்பதற்கு கொஞ்சம் வசதியானவங்க மாதிரி தோற்றமளிக்கிறாங்க…
இப்போ இந்த வீட்டு வேலை செய்ற அம்மாவோட மாத வருமானம் என்னனு பாத்தீங்கன்னா 18000 ரூபாய் ஆனா அவங்க எந்தவிதமான சிக்கனமும் பார்க்கவில்லை…”
“ஆங்…” என்று வாயை பிளந்தது கூட்டம்.
“இப்ப கேட்டியே தம்பி எங்க அம்மா என்ன செய்றாங்கன்னு… நீ கேட்டேன்னு தினமும் உனக்கு ஒரு பாக்கெட் பிஸ்கட் வாங்கி தராங்க. ஒரு பாக்கெட் பிஸ்கட் விலை எவ்வளவு தெரியுமா சுமார் 20 ரூபா ஒரு மாசத்துக்கு 600 ரூபாய்க்கு உனக்கு பிஸ்கட்டுக்கு மட்டுமே செலவு பண்றாங்க. அது இல்லாம நீ விளையாடுவதற்கு கேட்கிற பொருள், நீ போட்டுக்க கேட்கிற டிரஸ், நீ படத்துக்கு போகணும்னு கேக்குறப்ப குடுக்குற காசு, இதெல்லாம் எங்க இருந்து வருது சோ இந்த 18 ஆயிரம் ரூபாயும் பத்தாம கடன் வாங்குறாங்க.. அப்புறம் கடன் வட்டி வட்டிக்கு வட்டின்னு ஒரு சூழல் குள்ள மாட்டிக்குறாங்க. அதனாலதான் அவங்க இன்னும் ஏழையாக இருக்காங்க… இதை கொஞ்சம் எல்லாருமே யோசிச்சு பாக்கணும். நம்ம வாழ்க்கை முறையை எப்படி மாத்திக்கலாம், மாத்துனா எப்படி நல்லா இருக்கும் அப்படின்னு”
கருணா சொல்வதை அனைவரும் உன்னிப்பாக கவனிக்க தொடங்கினார்கள் அவளுடைய பேச்சு தங்களுடைய வாழ்க்கை முறை எப்படி இன்னும் மேலாக செல்லும் என்பதனை நோக்கி சென்றது.
அனைவரும் அதனால் கவரப்பட்டனர்… இப்படி இருந்தால் என்ன? இப்படி யோசிக்கலாமா? இப்படியும் யோசிக்கலாமா? என்று யோசிக்கத் தொடங்கினார்கள்.
ஒரு பேச்சாளரின் முதல் வெற்றிப்படி கேட்பவர்களை யோசிக்க வைப்பது தானே. அடுத்த அரை மணி நேரமும் தங்கு தடை இன்றி கேட்டது கருணாவின் குரல்.
அவள் பேசி முடிக்கவும் அங்கே இருந்த ஒரு சிறுமி எழுந்து கேட்டாள் ,
“அக்கா எனக்கு போலீஸ் ஆகணும்ன்னு ஆசை. ஆனால் என்னால நல்லா படிக்க முடியல… எவ்ளோ முயற்சி செஞ்சாலும் எனக்கு படிப்பு ஓரளவுக்கு தான் வருது. அதுவும் இங்கிலீஷ் சுத்தமா வர மாட்டேங்குது. நான் எப்படி போலீஸ் ஆக முடியும். என்னால அடுத்த நிலைக்கு உயர முடியுமா என்ன?”
“முயற்சி செஞ்சா முடியும் அப்படின்னு நிறைய பேர் சொல்லுவாங்க. ஆனா எதை நோக்கி எப்படி முயற்சி செய்யணும்னு தெரிஞ்சு செஞ்சா கண்டிப்பா வெற்றி கிடைக்கும். போலீஸ் ஆகணும் என்பது உன்னோட கனவு. உனக்கு படிப்பு ஒரு அளவுக்கு தான் வருதுன்னு சொல்ற.. அதனாலயே உனக்கு படிப்பு மேல இருக்க ஆர்வம் குறையுது. நமக்கு வராதது மேல இருக்க ஆர்வம் குறைகிறது இயல்பு தான்.
போலீஸ் ஆகணும் அப்படிங்கற உன்னோட கணவ நோக்கி நீ அடி எடுத்து வைக்கலாம். எல்லாரும் ஐபிஎஸ் ஆபீஸர் ஆகணும் அப்படிங்கறது சாத்தியமில்லை. உனக்கு போலீஸ் ஆகணும் உன்னால கஷ்டப்பட்டு ஒரு டென்த் ஸ்டாண்டர்ட் வரைக்கும் பாஸ் பண்ண முடியும் தானே?”
“முடியும் அக்கா”
போலீஸ் கான்ஸ்டபிள் ஆகுறதுக்கு நல்ல உடல் கட்டுப்பாடும் டென்த் பாஸுமே போதும்”
“நிஜம்மாவேவா?”
“ஆமா.. நீ நாளைக்கு ரமணிம்மா கூட எங்க வீட்டுக்கு வா, நான் உனக்கு மத்த விவரம் எல்லாம் சொல்லுறேன்”
“சரி அக்கா நான் போலீஸ் ஆக முடியுமா? பத்தாவது படிச்சா போதுமா?”
“அதுக்கப்புறம் டிரெய்னிங் எல்லாம் இருக்கும். உனக்கு அது தான் தேவை அப்படின்னா அத நோக்கி உன்னுடைய தேடல்கள் இருக்கணும். உன் தேடல் உனக்கான விடையை உன்னிடம் சேர்க்கும்”
“இதெல்லாம் எங்களுக்கு எப்படி தெரியும் எங்களுக்கு யார் சொல்லிக் கொடுப்பா எங்களுக்கு எதுவுமே தெரியல. எங்க அம்மா அப்பா படிக்கல” என்றது ஒரு குரல்.
“தெரிஞ்சுக்கணும்னு நினைச்சா ஆயிரம் வழிகள் இருக்கு. இப்போ இங்கே எத்தனை பேர் கிட்ட போன் இருக்கு? எல்லார்கிட்டயும் பெரும்பாலும் இருக்குன்னு எனக்கு தெரியும். அதுல எல்லாரும் கேம் விளையாடுறீங்க தானே? காசு இருக்கோ இல்லையோ வேலைக்கு போற அம்மா சம்பாதித்து உங்களுக்கு ஒரு போன் வாங்கி கொடுக்கிறாங்க.. அதை வச்சிருக்கீங்க, அதுலயே நீங்க உங்களுக்கு தேவையான விவரங்களை சேகரிக்க முடியும். தேடல்கள் இருந்தால் பதில்கள் கிடைக்கும்”
“அக்கா அக்கா எனக்கு வீட்டு வேலைக்கு போக வேண்டாம் படிக்க கஷ்டமா இருக்கு வேற என்ன செய்யலாம்?”
“நாங்க எப்படி கடன் இல்லாம செலவு செய்ய முடியும்?’
இப்படி பல கேள்விகள் கருணாவை நோக்கி வந்தது.
“இன்னைக்கு எல்லா கேள்விக்கும் நேரம் இருக்காது, கண்டிப்பா இனி வாரம் வாரம் நான் இங்கு வர்றேன், உங்களோட சந்தேகங்களை என்கிட்ட கேளுங்க எனக்கு தெரிஞ்சா பதில் சொல்றேன், தெரியாட்டியும் தெரிஞ்சுகிட்டு வந்து உங்களுக்கு பதில் சொல்றேன்.
வாழ்க்கையில அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறனும் அப்படின்னு நம்ம எல்லாரும் நினைச்சா கண்டிப்பா நம்மளால முன்னேற முடியும்” என்று அன்றைய உரையை முடித்து கொண்டாள்.
——————-
வீடு திரும்பியதும் அவினாஷ் பாரியிடமும் வில்வாவிடமும்
“எவ்வளவோ நல்லா பேசுறா தெரியுமா கருணா? அவ பேச்சு கேட்டு எத்தனை பேர் யோசிக்க ஆரம்பிச்சாங்க தெரியுமா? எத்தனை குழந்தைங்க என்ன படிக்கணும் தேட ஆரம்பிச்சாங்க தெரியுமா?” என்றான் ஆச்சரியமாக.
“தெரியும்… தெரியும்… நாங்க பல தடவை கேட்டிருக்கோம்”
“ஆனாலும் இன்னிக்கு ரொம்ப பிரமாதம பேசினா தெரியுமா?” பிறகு கருணா பேச்சை சுருக்கமாக கூறினான்.
“போச்சு.. போச்சு… இனி வாரம் வாரம் நமக்கு நல்ல வேலை வர போகுது” என்று தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான் பாரி.
“யாரு யாரு என்னென்ன படிக்கணும் நினைக்கிறாங்களோ அதற்கு நாம் தான் என்ன என்ன வழின்னு கண்டுபிடிக்கணும், வெச்சு செய்யப்போறடா நம்மளை” என்றான் வில்வா நொந்து போய்.
“எதுக்கு சலிச்சுக்கிறீங்க.. நீங்க நிஜமாலே ரொம்ப லக்கி தான். இந்த மாதிரி வேலை செய்வதற்கு எல்லாம் சந்தர்ப்பம் கிடைக்கும் இல்ல? எனக்கு ஏதாவது வேலை இருந்தா சொல்லுங்க, என்னால முடிஞ்ச உதவியை நானும் செய்கிறேன்” என்றான் அவினாஷ்.
“சொல்லிட்டா போச்சு” என்றனர் இருவரும் வாயெல்லாம் பல்லாக.
“ஐயோ ஐயோ அண்ணா… இந்த அண்ணாஸ் கிட்ட போய் இப்படி சொல்லுறீயே, எல்லா வேலையும் உன் தலையில கட்டிடுவாங்க” என்றாள் அருந்ததி
“நீ வேற போ பாப்பா… நாங்க பாக்க தான் விவரம் மாதிரி கடைசியில் எல்லாமே எல்லாரும் சேர்ந்து எங்க தலையில தான் கட்டுவாங்க” என்றான் பாரி சோகமாக.
“மச்சான் நம்ப சொல்றத என்னைக்கு ஊர் நம்பி இருக்கு? வா நம்ம போலாம்”
“நீங்க வேணா பாருங்க, கருணாம்பிகை நிச்சயம் ஒரு பெரிய தலைவரா தான் வருவா” என்றான் அவினாஷ்.
“ஹா ஹா ஹா.. அதை தான் நாங்க அவ ஆறாவது படிக்கும் போதே கண்டு பிடிச்சிட்டோமே?”
“அப்புறம் ஏன் எப்படி சலிச்சுக்குறீங்க” என்றான் அவினாஷ் குழப்பமாக.
“அவ தலைவரா வருவா.. ஆனா நாங்க அதுக்காக பாடுபடும் அப்பாவி தொண்டர்கள். நீயும் வந்து தொண்டர்களுடன் சேர்ந்து பாரு, அப்ப புரியும்” என்று விட்டு நண்பர்கள் இருவரும் அவர்கள் வீடு நோக்கி புறப்பட்டனர்.
error: Content is protected !!