Skip to content
Post Views: 2,207
கருவின் குரல்
அத்தியாயம் 10
காலை பள்ளிக்கு கிளம்ப வண்டியை ஸ்டார்ட் செய்து கொண்டிருந்தாள் ஜானகி. ஆனால் அது மக்கர் பண்ணியது.
“மம்மி, ப்ரேயர் ஸ்டார்ட் ஆனா. நாம வெளியேதான் நிக்கணும். உன் ஜூபிடர் ஏன் இப்படி செயுது? நாம பேசாம நடந்து போலாம் மம்மி!” என்றாள் அனிஷ்.
ஜானகிக்கு என்ன செய்வது என தெரியவில்லை. லேட் ஆனால் ஐம்பது ரூபாய் சம்பளத்தில் பிடித்து விடுவார்கள். பாலாவும் சுதாவும் கிளம்பி விட்டார்கள். தீபாவின் கணவன் ராஜேஸை அழைக்கலாம் என பார்த்தால் அவர்கள் கதவு இன்னும் திறக்கப்படவில்லை. சரி, வண்டியை உள்ளே நிறுத்தி விட்டு கொஞ்சம் மெயின் ரோட்டிற்கு வந்து ஆட்டோ பிடித்து செல்ல முடிவு செய்தாள். அனிஷ் ஒரு பக்கம் “மம்மி, லீவு போட்டுக்கலாம்” என சொல்லிக்கொண்டிருந்தாள்.
தேவா வந்து வண்டியின் ஹேண்ட் பாரை தொட, ஜானகி கொஞ்சம் திடுக்கிட்டு தள்ளி நின்றாள். அவன் இரண்டு உதை வைக்க, வண்டி ஸ்டார்ட் ஆகியது.
“போற வழியிலே ஸ்டாப் ஆன ப்ராப்ளம். நான் மெயின் ரோட்டுக்கு போய் ஆட்டோ அனுப்பி விடறேன். நீங்க அதுல போங்க. நான் வண்டிய மெக்கானிக் ஷாப்லே விடறேன்,” என கூறினான்.
Advertisement
ஜானகி அவனின் முகத்தை கூட ஏறெடுத்துப் பார்க்கவில்லை. அனிஷை உள்ளே அழைத்துச் சென்று விட்டாள். அவன் போன பத்தாவது நிமிடத்தில் ஆட்டோ வந்தது. இருவரும் அதில் பள்ளிக்கு சென்றனர். ஜானகிக்கு அன்றைய நாள் முழுவதும் எதிர்காலத்தை பற்றி ஏதோ ஒரு பயம் துரத்தியது.
மாலையில் வீடு திரும்பியதும் துணி துவைக்க, அனிஷ் அருகே பால் வீசி விளையாடிக் கொண்டிருந்தாள். தேவா அவளின் ஜூபிடர் ஸ்கூட்டியை ரிப்பேர் சரி செய்து உள்ளே கொண்டு வந்து நிறுத்தி விட்டு திரும்ப, அனிஷ் இடுப்பில் கைவைத்து கோபத்தில் மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.
தேவா அவர்களை கடந்து செல்ல, அனிஷ், “ஹலோ! ஒன் மினிட் நில்லுங்க. நீங்க இந்த ஹவுஸ்க்கு தான் ஓனர். எனக்கு எங்க மம்மிக்கு ஓனர் மாதிரி பண்ணாதீங்க. இனிமே எங்க மம்மி ஜூபிடரை எடுக்காதீங்க!” என்றாள்.
Advertisement
ஜானகி இதை எதிர்பார்க்கவில்லை. அனிஷை இழுத்துக் கொண்டு உள்ளே சென்று கதவை அடைத்துக் கொண்டாள். தேவாவிற்கு குற்ற உணர்வும், அதே நேரம் மகள் தன்னை அதட்டுவது பெருமையாகவும் இருந்தது. சக்கரவர்த்தியை தேவா அதட்ட அவர் ஏதும் சொல்லாமல் பெருமையாக நினைப்பதை முதல் முறையாக தேவா உணர்ந்தான்.
Advertisement
அன்றிரவு மைதிலி செய்த குடல் குழம்பும் இட்லியும் தேவாவிற்கு சாப்பிட விருப்பமில்லை. அதுல்யா அவன் மார்பில் ஏறி தூங்க, ஏதோ ஒன்று அவன் நெஞ்சை அடைத்தது. அனிஷின் துருதுரு பேச்சும், வெகுளியான முகமும் அவன் கண் முன்னே வந்து சென்றது.
காலையில் தோட்டத்தில் தேங்காய் பறிக்க ஆட்கள் வருவார்கள். நேரமாக கிளம்ப வேண்டும் என முயன்று தூங்கினான்.
அடுத்த நாள் காலை அவனது புல்லட் வண்டியை எடுக்க, “ஹவுஸ் ஓனர்” என அனிஷ் வந்துவிட்டாள். அவன் புருவத்தை உயர்த்தி “என்ன?” என கேட்க, “இந்தாங்க சாக்லேட்,” என டைரி மில்க் ஐ நீட்டினாள். அவன் புரியாமல் பார்த்தான்.
Advertisement
“நாம ரெண்டு பேரும் இனி ப்ரெண்ட்ஸ் ஆகிக்கலாம். எங்க மம்மி நேத்து சொன்னாங்க, நீ இப்படி அவர் கிட்ட சண்டை போட்டா, அவங்க நம்ம வீட்டை காலி செய்ய சொல்லிருவாங்க. அப்பறோம் அம்மா உன்னை அம்மாச்சி வீட்டுக்குதான் கூட்டிட்டு போவேனு. எனக்கு அங்க போக புடிக்காது. நானும் மம்மியும் ஒரு பெரிய பங்களா கட்டுவோம். அதுவரைக்கும் இந்த வீட்டுல தான் இருப்போம். நாமளு அதுவரை ப்ரெண்ட்ஸா இருக்கலாம்,” என்றாள்.
தேவாவிற்கு அவளை அள்ளி எடுத்து கொஞ்ச ஆசை. இந்த குழந்தையை தான் கருவிலே அழிக்க சொன்னது நினைவில் வந்தது. எதுவும் பேசாமல் சாக்லேட்டை வாங்கிக் கொண்டு, “சரி, ப்ரெண்ட்ஸ்,” என்றான்.
“ஓகே ஹவுஸ் ஓனர்! நான் ஸ்கூல் போறே. இவ்னிங் மீட் பண்ணலாம். பாய்!” என கிளம்பி விட்டாள்.
நாட்கள் மந்தமாக சென்று கொண்டிருந்தது. சக்கரவர்த்திக்கு மகன் எப்படி குடும்பத்தை நிர்வகிக்கிறான் என காண ஆசை. அதி காலையிலேயே வந்து விட்டார். ஜானகி வாசல் தெளித்து கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். அவரை பார்த்ததும் உள்ளே சென்று விட்டாள். தேவா தோட்டத்திற்கு சென்று விட்டான். மைதிலியும் அதுல்யாவும் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தனர்.
மரியாதை கருதி வீட்டின் உள்ளே செல்லாமல், போர்டிக்கோவில் அமர்ந்து பேப்பர் படித்தார். ஒரு வயதான பெண் வந்து யாசகம் கேட்க, நூறு ரூபாய் எடுத்து கொடுத்தார்.
“பாட்டி, நில்லுங்க,” என அனிஷின் குரல் சக்கரவர்த்தியின் கவனத்தை ஈர்த்தது.
“பாட்டி, இந்தாங்க பத்து ரூபாய். இதுலே ப்ரெட் இருக்கு. அப்பறோம் இது எங்க மம்மி செப்பல் — உங்களுக்குதான். இன்னும் கொஞ்ச நேரத்துல வெயில் வரும், கால் சுடும். இது போட்டுக்கோங்கோ,” என கொடுத்தாள்.
அந்த வயதான பெண்மணி கண்களில் நீர் பெருக்கெடுக்க, அனிஷின் தலையை தொட்டு “மகராசியா இரு” என வாழ்த்தி விட்டு சென்றார்.
சக்கரவர்த்தி பேப்பரை படிப்பது போல வைத்து அனிஷை கவனிக்க தொடங்கினார். இரண்டு தெரு நாய்கள் அனிஷை பார்த்து வாலை ஆட்டியவாறே வீட்டருகே வர, இரண்டிற்கும் தேங்காய் தொட்டியில் பால் ஊற்றி வைத்தாள்.
ஜானகி, “அனிஷ், ஸ்கூலுக்கு டைம் ஆச்சு. அங்க என்ன செய்றே?” என கேட்க,
“மம்மி, எனக்கு ரொம்ப பசி. அதான் கொஞ்சம் இருந்த பாலை நானே குடிச்சுட்டு இருக்கேன். இதோ இப்ப வந்தறே. குட்டி பப்பி, பெரிய பப்பி, நீங்க ரெண்டு பேரும் சீக்கரம் பாலை குடிச்சுட்டு போங்க, இல்லனா மம்மி என்ன திட்டுவாங்க!” என நாய்களிடம் செல்லம் கொஞ்சும் பேத்தியை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தார்.
அதற்குள் ஜானகி வந்து குளிக்க அழைத்துச் சென்றாள்.
8:30 மணிக்கு தேவா வந்து அவருக்கு காபி போட்டு கொடுத்தான். அதுவரை மைதிலி எழுந்திருக்கவில்லை.
“அப்பா, புல்லட்டுக்கு ஆயுள் விடனும். கொஞ்சம் வாங்க,” என கூப்பிட்டான். இருவரும் வண்டி நிறுத்தும் இடத்திற்கு சென்றனர்.
அனிஷ் தன் குட்டி சைக்கிடம் பேசிக் கொண்டிருந்தாள்.
“பிங்கி, நீ பீல் பண்ணாதே. நான் அன்னைக்கு குறும்பு செஞ்சதுனாலே மம்மி என் மேலே இருக்கிற கோபத்துலே உன்னை பஞ்சர் செஞ்சிட்டாங்க. நான் உனக்காக மம்மி கிட்ட பேசுனே. மம்மி சொன்னாங்க, ‘நீ பர்ஸ்ட் ரேங்க் எடுத்தா உன் பிங்கிக்கு காத்து அடிச்சு தரேனு.’ நீ ஒன்னும் கவலைப்படாதே. நா எப்படியாச்சும் கஷ்டப்பட்டு படிச்சு பர்ஸ்ட் ரேங்க் வாங்கிறே. அப்பறோம் மம்மி உன்னை ரெடி பண்ணிருவாங்க. நாம ரெண்டு பேரும் சேர்ந்து இந்த உலகத்தையே சுத்தி வரலாம்,” என அதை முத்தமிட்டாள்.
இருவரும் அதை கவனிக்காதது போல் புல்லட்டில் ஆயுளை ஊற்றினர்.
அனிஷ், “ஹவுஸ் ஓனர், வண்டிக்கு என்ன ஆச்சு? ஃபீவரா?” என்றாள்.
தேவா, “ஆம்,” என தலை ஆட்டினான்.
“ஹவுஸ் ஓனர், யார் இந்த ஒயிட் அண்ட் ஒயிட் தாத்தா?” என்றாள்.
“எங்க அப்பா,” என்றான் தேவா.
அவர் புல்லட்டை ஸ்டார்ட் செய்தார். அனிஷ் உடனே,
“ஆஹா! இந்த தாத்தா சூப்பர் தாத்தா போல! வண்டிய உடனே ரெடி பண்ணிட்டார். இனிமே மம்மி ஜூபிடர் ரிப்பேர் ஆனா கூட தாத்தாவையே கூப்பிட்டுக்கலாம்!” என்றாள்.
சக்கரவர்த்தி அதுல்யாவிற்கு வாங்கி வந்த ஒரு டெடிபியர் பொம்மையை எடுத்து அனிஷிடம் தந்தார். அதை பார்த்ததும் அவள் கண்கள் மின்னியது.
“தேங்க்யூ தாத்தா!” என வாங்கி அந்த டெடிபியரை அணைத்துக் கொண்டாள்.
மணி ஒன்பதை நெருங்க, அரக்க பரக்க ரெடியாகி வண்டியில் அனிஷை ஏற்றிக் கொண்டு ஜானகி பள்ளியை நோக்கி சென்றாள்.
ஜானகிக்கு சுதாவும், பாலாவும் பாதுகாப்பாக இருக்கின்றார்கள்; ஜானகியும் அவர்களின் மீது நம்பிக்கையும் பாசமும் கொண்டிருக்கிறாள் என்பதை தேவா உணர்ந்து கொண்டான். அவனும் அவர்களிடம் நல்ல முறையில் உறவை வளர்க்க எண்ணிக் கொண்டான். அதன் படியே நடந்தும் வருகிறான்.
சுதாவும் தேவாவை உடன்பிறவா சகோதரனை போலவே எண்ணினாள். அவர்கள் வீட்டின் அருகில் இருக்கும் அம்மன் கோவிலில் பெளர்ணமி பூஜையை அந்த தெருவில் உள்ள ஏதாவது வீடு எடுத்து நடத்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அதன்படி இந்த மாத பெளர்ணமி பூஜையை சுதாவும் பாலாவும் தங்கள் பொறுப்பில் எடுத்தனர்.
அந்த தெருவில் உள்ள அனைவருக்கும் அன்றிரவு அங்குதான் சாப்பாடு. சுதா தேவா வீட்டில் அனைவரையும் முறைப்படி அழைத்திருந்தாள். சக்கரவர்த்தி, கருணா, அறிவு, செளமியா, அவர்களின் மகன் விபுல், மைதிலி, அதுல்யா என அனைவரும் கலந்து கொண்டனர்.
ஜானகி ஊதா கலர் கிரேப் சேலை அணிந்திருந்தாள். அனிஷ் மெரூன் கலர் பட்டுப்பாவடை அணிந்திருந்தாள். அந்த பாவாடையை இரு கைகளிலும் தூக்கிக் கொண்டு அந்த தெருவில் உள்ள தன் வயது உடைய பிள்ளைகளுடன் கோவிலை சுற்றி விளையாடிக் கொண்டிருந்தாள்.
தேவாவின் குடும்பம் ஒரிடத்தில் சேர் போட்டு அமர்ந்தனர். ஜானகி முயன்று தன் கண்களை அந்த பக்கம் திருப்பாமல், உணர்வுகளை அடக்கிக் கொண்டாள். அம்மனுக்கு மாலை சாற்ற பூ கட்டிக் கொண்டிருந்தாள். தேவா அவளை பார்த்துக் கொண்டிருப்பதை மைதிலி கண்டு கொண்டாள்.
மாமியார் சொன்னதற்காக வேண்டாவெறுப்பாக வந்தவளுக்கு தேவாவின் செயல் மேலும் வெறுப்பாக இருந்தது. இதில் செளமியா வேறு, அவளை விட விலை அதிகமுள்ள புடவையை கட்டி வந்துவிட்டாள் என்று இன்னொரு கவலை அவளுக்கு.
தீபா ஜானகியிடம், “அக்கா, கொஞ்ச நேரம் நகுலை வச்சிருங்க. நான் வீட்டுக்கு போய் பால் காய்ச்சி எடுத்துட்டு வரேன்,” என சென்று விட்டாள்.
அந்த குழந்தையை மடியில் வைத்து கொஞ்சிக் கொண்டிருந்தாள். அதுவரை விளையாடிக் கொண்டிருந்த அனிஷ், அம்மா தன்னை விட்டு நகுலை கொஞ்சுவது சற்று பொறாமையை தந்தது போல, உடனே அம்மா அருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.
“மம்மி, தம்பியை ராஜேஷ் அண்ணா கிட்ட தந்தரலாம். நா உன் மடியிலே உக்காந்துக்கிறே மம்மி,” என்றாள்.
மகளின் மனதுதான் ஜானகிக்கு புரியுமே. சிரித்துக் கொண்டே நகுலை இன்னமும் கொஞ்ச ஆரம்பித்தாள். செல்ல கோபம் வந்தது அனிஷிற்கு. அதற்குள் தீபா வந்து நகுலை வாங்கி கொண்டாள். பின் தன் மகளையும் மடியில் அமர்த்தி கொஞ்சினாள்.
சுதா, “பூஜைக்கு டைம் ஆச்சு. நீ ஐயர் கேக்கறது எடுத்து கொடு, நான் சாப்பாடு என்ன ஆச்சுனு பாக்கறேன்,” என்று சொல்ல, ஜானகி அந்த வேலையை பார்த்தாள். அனிஷும் பூஜாவும் அவளுக்கு உதவினார்கள் . பாலா வந்தவர்களை கவனித்து கொண்டிருந்தான்.
கருணாவின் சித்தி மகள் செல்வி அந்த தெருவில் தான் இருக்கிறாள். கருணாவிடம் வந்து நலம் விசாரித்து, பூஜை முடிந்ததும் அனைவரையும் வீட்டிற்கு வர அழைத்தாள். சக்கரவர்த்தியும் சரி என்றார். சிறிது நேரம் செல்வி அமர்ந்து சக்கரவர்த்தி குடும்பத்தினரிடம் பேசிக் கொண்டிருந்தாள்.
திடீரென ஜானகியை “இங்கே வா” என அழைத்தாள் செல்வி. ஜானகி தயங்கி கொண்டே அங்கே சென்றாள்.
“எதுக்குமா கூப்டீங்க?” என்றாள்.
அவள், “நீ கணவனை பிரிந்து வாழ்கிறாய். பெளர்ணமி பூஜை செய்து சுமங்கலிகளுக்கு பிரசாதம் தருவது வழக்கம். நீ முன்னின்று செய்தால், அதை எப்படி சுமங்கலி பெண்களுக்கு தருவது? நீயே புரிந்து விலக வேண்டும். இந்த மாதிரி நல்ல விஷயங்களுக்கு கணவனை பிரிந்து வாழும் உன்னைப் போன்ற பெண்கள் அவர்களாகவே விலகி நிற்பது எல்லோருக்கும் நல்லது,” என கூற, வந்த அழுகையை அடக்கிக் கொண்டாள் ஜானகி.
தேவா வீட்டில் ஒருவருக்கும் முகத்தில் ஈ ஆடவில்லை. தேவாவிற்கு ஜானகியின் முகத்தை நிமிர்ந்து பார்க்கவே உள்ளுணர்வு கூசியது. அவனை நினைத்து அவனுக்கே கேவலமாக தோன்றியது.
அனிஷ் ஜானகியின் கால்களை இரண்டு கைகளாலும் பிடித்து கொண்டு, “மம்மி, ஏன் அந்த பாட்டி இப்படி சொல்றாங்க?” என கேட்டாள்.
ஜானகி, “அம்மாக்கு உடம்பு சரியில்லை அதுதான். நீ வா, நாம வீட்டுக்கு போலாம்,” என அவளை கூட்டி வந்து விட்டாள்.
— கருவின் குரல் ஒலிக்கும்….
error: Content is protected !!