Skip to content
Post Views: 3,121
கருவின் குரல்
அத்தியாயம் 11
கோவிலை விட்டு வீட்டிற்கு வந்ததும், ஜானகிக்கு அழுகை நிற்கவில்லை. அனிஷும் அருகில் அமர்ந்து அழுக ஆரம்பித்து விட்டாள். மகளின் அழுகை ஜானகியின் தவறை உணர்த்தியது. முயன்று வந்த அழுகையை அடக்கி, மகளை தேற்றினாள்.
இரவு உணவிற்கு தோசை ஊற்ற, அனிஷ் கிச்சன் ஸ்லாப் மீது அமர்ந்து கொண்டாள். ஜானகி மகளை இயல்புக்கு திருப்ப, ஏதோதோ பேசி சிரிக்க, இவளும் அம்மாவை சமாதானப்படுத்த தன் பங்குக்கு ஜோக்கடித்தாள்.
ஜானகிக்கு மகள் வயதிற்கு மீறிய பக்குவத்தை அடைகிறாளோ என்ற வருத்தம்.
Advertisement
சக்கரவர்த்தி செல்வியிடம், “அந்த அம்பாளே இந்த கோவிலில் துணை இல்லாமல் தனியாகதானே நிற்கிறாள்! நீங்க கூறுவது போல கணவனை இழந்த பெண்கள் நல்ல காரியங்களில் முன்னின்று எதுவும் செய்யக்கூடாது என்றால், இனிமேல் எந்த பூஜையையும் கணவன் இல்லாமல் தனியாக நிற்கும் அம்பாளுக்குச் செய்யாதீர்கள்!” என சொல்லி கிளம்பி விட்டார்.
அவர் கிளம்பியதும், அவரின் குடும்பத்தினரும் கிளம்பி விட்டனர். சுதா, பாலாவிற்குதான் தர்மசங்கடமான நிலை. மீதமுள்ளவர்களை கவனித்தனர்.
அம்மாவும் மகளும் சாப்பிட அமர, காலிங் பெல் அடித்தது. ஜானகி கதவை திறக்க, சக்கரவர்த்தி நின்றிருந்தார். ஒரு தாம்பாள தட்டில் மஞ்சள் நிற பட்டு புடவை, மஞ்சள், குங்குமம், தாலிச்சரடு, கண்ணாடி வளையல், பூ இவையெல்லாம் எடுத்து அவளிடம் நீட்டினார்.
Advertisement
“செல்வி பேசியதற்கு நான் உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன். உன் வாழ்வு சிறப்பாக அமைய அந்த அம்பாளிடம் வேண்டுகிறேன்,” என கூறினார்.
Advertisement
ஜானகி எதுவும் பேசவில்லை. அமைதியாக வாங்கிக்கொண்டு உள்ளே சென்று விட்டாள். அன்று இரவு முழுவதும் தூங்காமல், எதையோ வெறித்து பார்த்துக் கொண்டிருந்த கணவனின் நிலை கருணாவின் நிம்மதியை கெடுத்தது.
சுதா, பாலா, பூஜா மூவரும் வந்து ஜானகியிடம் மன்னிப்பு கேட்க, ஜானகி, “உங்கள் மூவரையும் என் குடும்பத்தில் ஒருவராகத்தான் நினைக்கிறேன். வீட்டில் இருப்பவர்களிடம் ஏதேனும் சங்கடத்திற்கு மன்னிப்பெல்லாம் கேட்போமா? நீங்கள் என்னை வேறு ஆளாக நினைத்தாள் கேளுங்கள்,” என்றாள்.
சுதா ஜானகியை அணைத்துக் கொண்டாள். நடந்த சம்பவத்தால் அவர்களும் கோவிலில் சாப்பிடாமல் வந்தனர். அன்றிரவு ஜானகியின் தோசையும் கொத்துமல்லி சட்னியும் தான் ஐவரும் உண்டனர்.
Advertisement
மறுநாள் காலை தேவா வந்து, “சாரி, என்னாலாதா உனக்கு இந்த நிலை? என்னை மன்னிச்சிடு ஜானு…” என்றான்.
அவள் தன் எதிரே ஒருவன் நிற்கிறான் என்பதை கூட கவனியாதவள் போல கடந்து விட்டாள்.
மாலை அனிஷ் பாண்டா, கரடி ட்ராயிங்கிற்கு கலர் அடித்துக் கொண்டிருந்தாள். தேவா அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டு, “அனிஷ், இன்னைக்கு ஸ்கூலில் என்ன சொல்லிக் கொடுத்தாங்க?” என கேட்டான்.
“இன்னைக்கு எங்க மேம் லீவு. ஜாலியா என் ஜாய் பண்ணுனோம்,” என்றாள்.
“ஹவுஸ் ஓனர் நேத்து தாத்தா அம்மாக்கு கிப்ட் கொடுத்தாங்க. நீங்க ஏன் எதும் தரலே?” என கேட்க, அவனிடம் பதில் வராமல் போகவே இவளே ஆரம்பித்தாள் “அந்த பாட்டி அம்மாவ நேத்து எதும் செய்ய வேண்டானு சொன்னாங்க இல்லே? அம்மா வீட்டுக்கு வந்து அழுதாங்க. தாத்தா அம்மாவை பீல் பண்ண வேண்டானு சொன்னாங்க. ஆனா நீங்க ஏன் அம்மாகிட்ட எதும் சொல்லுலே?” என திரும்பத் திரும்ப அங்கேயே வந்து நின்றாள்.
“பாட்டி தெரியாம பேசிட்டாங்க. நீ இனிமே அம்மா அழுதா, அழுக கூடாதுனு சொல்லு,” என்றான்.
ஒரு நிமிடம் வீட்டினுள் எட்டி ஜானகி பார்க்கிறாளா என பார்த்துவிட்டு, தேவாவிடம் மெல்லிய குரலில், “அந்த பாட்டி டாடி எங்க கூட இல்ல. அதுனாலே மம்மிய எதும் செய்ய வேண்டானு சொன்னாங்க,” என்றாள்.
இவனும் அவனை பற்றி அனிஷ் எண்ணம் எப்படி இருக்கிறது என தெரிந்து கொள்ள, “அனிஷ், உன் டாடி என்ன ஆனாங்க?” என கேட்டான்.
“அதெல்லாம் எனக்கு தெரியாது. மம்மி, டாடி பத்தி எல்லாம் பேசக்கூடாதுனு சொல்லிருக்காங்க,” என்றாள்.
“ஏன், உன் டாடி பேட் பாயா?” என கேட்டான்.
“இல்லையே! அப்படியெல்லாம் இல்ல. எங்க டாடி ரொம்ப ரொம்ப நல்லவராம். இந்த உலகத்துலயே எங்க டாடியதான் எங்க மம்மிக்கு ரொம்ப புடிக்குனு சொல்லிருக்காங்க,” என்றாள்.
ஜானகியை ஏன் இப்படி விட்டுவிட்டோம்? என்னை நம்பி வந்தவளை ஏன் ஏமாற்றினோம்? எப்படியும் அவளுக்கான வாழ்வை அவள் அமைத்துக் கொள்வாள் என தவறாக நினைத்து விட்டேன். இன்று எங்கள் குழந்தைக்காக அவள் வாழ்க்கையையே தொலைத்து விட்டாளே! ஏன் இப்படி ஒரு வாழ்வு? அவள் வீட்டில் அவளை ராணி போல பார்த்துக்கொள்வார்கள் தான். அவற்றை யெல்லாம் தூக்கி எரிந்து, இப்படி ஒரு தவ வாழ்வு வாழ்கிறாள்.
அவளையும் பிள்ளையையும் காக்க வேண்டிய நான், அவர்களை பாதியிலேயே கைவிட்டு விட்டேன். ஆனால் அவள் என்னை மகளிடம் கூட விட்டு கொடுக்காமல் இருக்கிறாளே… என்னை விட கேவலமான ஈனப்பிறவி இந்த உலகத்தில் இருக்கவே முடியாது! என தேவா தனக்குள்ளே புலம்ப ஆரம்பித்தான்.
அவன் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை விட்டு விலகி, ஜானகி பக்கம் செல்வதை மைதிலி உணர்ந்தாள். எப்போது வேண்டுமானாலும் சண்டை வெடிக்கும் நிலையில் இருந்தது.
அனிஷ் தீவிரமாக மிட்டெர்ம் டெஸ்டிற்கு படித்து கொண்டிருந்தாள். அவளுக்கு அவளது பிங்கி வேண்டும். அதனால் டிவி பார்ப்பதை விட்டு விட்டு, முழு முனைப்போடு ரைம்ஸ் சொல்லி பார்ப்பது, “ரெட், பேட்” போன்ற சிறு சிறு எழுத்துகளுக்கு ஸ்பெலிங் எழுதுவது என படிப்பில் மூழ்கி விட்டாள்.
அதை பார்த்த ஜானகிக்கு சந்தோஷமே “மகள் இப்படியாவது படிக்கட்டும்” என நினைத்தாள்.
அவளுக்கு தெரியும் அனிஷ் ஏவரேஜ் ரகம் என்று. ஒருநாள் மாலையில் வேகமாக சைக்கிள் ஓட்டி, பக்கத்து வீட்டு பூனையின் வால் மீது விட்டுவிட்டாள். அந்த வீட்டில் உள்ளவர் ஜானகியை கூப்பிட்டு, “அனிஷ் ரொம்ப குறும்பு!” என கூற, கோபம் தலைக் கேறியது.
இரண்டு அடி போட சுதா அவளை தடுத்து, செல்லம் கொஞ்சி அனிஷை அழைத்துச் சென்று விட்டாள்.
“நிறைய வண்டி வேறு வருகிறது, இவள் வேறு வேகமாக ஓட்டுகிறாள்,” அது மட்டுமல்ல இன்னொருவர் தன் மகளை குறும்பு என சொல்ல மனம் தாளவில்லை. சைக்கிளை பஞ்சர் செய்து விட்டாள். உள்ளூர குற்ற உணர்வும் இருந்தது அவளுக்கு.
அனிஷ் கேட்பதை எல்லாம் அவளது குறைந்த சம்பளத்தில் வாங்கி தர முடியாது. போன வருட அவளது பிறந்த நாளில் இஎம்ஐக்கு அந்த சைக்கிளை வாங்கித் தந்தாள். மகள் முகத்தில் அவ்வளவு சந்தோசம். ஆசையாக அதற்கு “பிங்கி” என பெயர் வைத்தாள்.
மாலையில் பள்ளி முடித்து வந்ததும் சைக்கிளை ஓட்ட ஆரம்பித்தால், இரவு உணவுக்குதான் வீடு திரும்புவாள்.
இன்று அம்மா அடித்தது வருத்தம்தான். அதையும் தாண்டி அவள் பேசாமல் போய் விடுவாளோ என்ற பயம் வேறு.
“மம்மி, இனிமே நான் குட் கேர்ளா இருப்பேன். இனி ஸ்பீடா சைக்கிள் ஓட்ட மாட்டேன். காட் ப்ராமிஸ்,” என்றாள்.
“சரி, நீ பர்ஸ்ட் ரேங்க் வாங்கு. அம்மா சைக்கிள் ரெடி பண்ணித் தரேன்,” என்றாள்.
அவளுக்கு தெரியும் மகள் வாங்க மாட்டாள் என்று. அவள் தவறை உணர வேண்டும் என்று காலம் தாழ்த்தினாள்.
பெற்றவர்கள் துணையில்லை. கட்டியவனும் பாதியில் விட்டு சென்று விட்டான். ஒற்றை ஆளாக பெண் பிள்ளையை வளர்ப்பதால் கொஞ்சம் கறாராகவும் நடந்து கொண்டாள்.
அன்று காலை எக்ஸாம் தொடங்க உள்ளது.
“மம்மி, நா போய் புள்ளையாரப்பாகிட்டே எக்ஸாம் நல்லா எழுதனும், பர்ஸ்ட் ரேங்க் வாங்கனும்னு, வேண்டிட்டு வரே!” என சொல்லி சென்று விட்டாள்.
பிள்ளையார் முன்பு நின்று, “புள்ளையாரப்பா, ப்ளீஸ் புள்ளையாரப்பா! நான் எப்படியாச்சும் பர்ஸ்ட் ரேங்க் வாங்கனும்! அப்பதான் மம்மி எனக்கு பிங்கியை ரெடி பண்ணி தருவாங்க!” என வேண்டிக் கொண்டிருக்கும் போதே சக்கரவர்த்தி வந்து விட்டார்.
இப்போதெல்லாம் மகனை பார்க்க வருவதாக சொல்லிவிட்டு, பேத்தியை காண வந்து விடுகிறார். வீட்டில் இருக்கும் போது தூரத்தில் நின்று பார்த்துவிட்டு கிளம்பி விடுவார். இன்று கோவிலுக்கு தனியாக அனிஷ் கிளம்ப, துணைக்கு வந்து விட்டார்.
“தாத்தா, நீங்களும் கோவிலுக்கு வந்துட்டீங்களா? இந்தாங்க திருநீறு,” என அவர் நெற்றில் பூசி விட்டாள்.
ஜானகி ஸ்கூலுக்கு தேவையானதை பேக் செய்து, வண்டியை வெளியே எடுத்துகூட நிறுத்தி விட்டாள். இன்னமும் அனிஷை காணவில்லை.
வேகமாக கோவிலின் உள்ளே சென்று பார்க்க, சக்கரவர்த்தியுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள்.
தூரத்தில் இருந்தவாறே ஜானகி “அனிஷ்!” என அழைக்க, “பாய் தாத்தா!” என ஓடி வந்துவிட்டாள்.
ஜானகிக்கு ஒரே குழம்பிய மனது “என்ன விதி என்னுடையது! முதலில் அவர்கள் தானே என்னை வேண்டாம் என கூறியது. இப்போது நானே அவர்களை விட்டு விலகி வந்து விட்டேன். திரும்பவும் ஏன் என் வாழ்க்கையில் நுழைகிறார்கள்?”
“நானும் ஒரு சராசரி பெண் தானே? வாழவேண்டிய வயதில் கணவன் பாதியில் விட்டு சென்று, புது வாழ்க்கை அமைத்து கொண்டான். ஆதரவு தர வேண்டிய பெற்றவர்களும் கைகழுவி விட்டார்கள். அவர்களை சொல்லி குற்றம் இல்லை . பெற்றவர்களை விட்டு ஓடிபோய் திருமணம் செய்தது என் தவறு. அந்த தவறுக்கான தண்டணையைதான் தற்போது அனுபவித்து வருகிறேன்.”
“தன் இடத்தில் இன்னொருவரை பார்க்கும் வலி யாருக்கும் வரக்கூடாது. ஆனால் என் விதி தினமும் பார்ப்பது போல் ஆகி விட்டது. பார்க்க விரும்பாத உறவுகளை பார்க்கச் செய்வதும், பேச விரும்பாதவர்களிடம் பேசச் செய்வதும், கேட்க விரும்பாத குரல்களை கேட்கச் செய்வதும், மனதளவில் வெறுக்கும் மனிதர்களை அருகில் கொண்டு வந்து அன்பு செலுத்தியே ஆக வேண்டும் என்ற நிலையை உருவாக்குவதும் தான் விதியா?.”
“வேண்டாம் உண்டால் கசக்கும் எனத் தெரிந்தும் உண்ணச் செய்கிறது. வலிக்கும் எனத் தெரிந்தும் தினமும் அருகில் இருக்கும் நிலையை தருகிறது இந்த வாழ்க்கை…” என நினைத்து கண்ணீர் விட்டாள்.
அனிஷிற்கு அவர்களெல்லாம் யார் என தெரிந்தால் என்ன ஆகும்? அவர்களாகவே பிள்ளையின் மனதில் ஏதாவது ஆசையை காட்டி, என்னைப் போலவே ஏமாற்றி விட்டால் அந்த பிஞ்சு இதயம் தாங்குமா?
இல்லை…அனிஷ் அவர்கள் பக்கம் சென்று விட்டாள். என் நிலை என்ன? மகள் இல்லாத ஒரு நிமிடம் கூட அவள் வாழ்க்கையை யோசிக்க முடியவில்லை.
எப்படியோ டிராபிக் தாண்டி பள்ளி வந்துவிட்டாள். வண்டியில் இருந்து இறங்கி கண்ணீரை துடைக்க, அம்மா ஏனோ அழுவது அனிஷுக்கு ஒரு மாதிரி இருந்தது. ஜானகியை திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே வகுப்பிற்கு சென்றாள்.
ஜானகிக்கு மகள் அவ்வாறு தன்னை பார்ப்பது ஏதோ உள்ளுக்குள் மகள் தன்னை விட்டு பிரிந்து விடுவாளோ என்ற பயத்தை உருவாக்கியது. எப்போதும் சிரித்த முகத்துடன் செல்லும் மகள், இன்று ஏக்கத்துடன் செல்ல இதயத்தில் ஒரு கணம் ஜானகிக்கு…
அவள் நினைத்தது போலவே அடுத்த ஒரு பெரிய பிரச்சனை காத்திருந்தது.
— கருவின் குரல் ஒலிக்கும்…
error: Content is protected !!