Skip to content
Post Views: 3,989
நம்ரதா.
கவுதமோடு வேலை செய்யும் குஜராத்திப் பெண்.
நல்ல வசதியான குடும்பம்.
அகமதாபாத்தில் இருக்கும் அவர்கள் வீட்டைப் பார்த்தாலே பிருந்தா மயக்கம் போட்டு விழுந்தே விடுவார்!
Advertisement
போததற்கு சூரத்தில் இருக்கும் அவர்களின் புகழ்ப்பெற்ற டெக்ஸ்டைல் மில்!
எல்லாம் இருந்தும் ரொம்பவும் அடக்கமான பெண் நம்ரதா!
பார்ப்பதற்கு பழைய நடிகை பூமிகா போல சாதுவான அழகிய குடும்ப பாங்கான முகம்!
Advertisement
பெரிய கோடீஸ்வரன் வீட்டுப் பெண்ணாக இருந்தும் தலைக்கனம் எதுவும் இல்லாத அவளை கவுதமிற்கு பிடித்து போய் விட்டது.
Advertisement
ரிதனியிடம் அவன் காட்டும் அந்த கேரிங், அவனின் ஜோவியலான பழகும் குணம் நம்ரதாவை கவர்ந்திருந்தது!
அவ்வளவு சொத்துக்கள் இருந்தும், அவர்களே கூட சொந்தமாக ஒரு ஐடி கம்பெனியே நடத்தும் அளவு வசதியிருந்தும்,
அவள் அமெரிக்காவில் வேலைப் பார்க்க வந்ததே கவுதமிற்காக தான்!
Advertisement
காரணம் கல்லூரிக் காலம் தொட்டே அவர்களுக்குள் இருந்த காதல்!
அதற்கு ரிதனி தான் தூது!
இந்த விஷயம் அவர்களின் நட்பு வட்டத்திற்குள் வந்து விட்ட மான்சிக்கும் கூட அண்மையில் தெரிந்து விட்டிருந்தது!
அவர்கள் பிரத்யேகமாக வைத்து இருக்கும் அந்த வாட்சப் க்ரூப்பில் கூட ரிதனியும் மான்ஸியும் சூசகமாக கமெண்ட்ஸ் போடுவதுண்டு!
அந்த க்ரூப்பில் ஜோவும் இருப்பதால்!
ஆனால் ஜோவிற்கு படிப்பு தான் வர வில்லை!
இந்த மாதிரி விசயங்கள் எல்லாம் நன்றாகவே புரிந்தன!
அவள் தெரிந்தும் தெரியாத மாதிரியே இருந்து வந்தாள்!
இந்நிலையில் கல்யாண விசயத்தில் மான்சி வீட்டினரின் நிலைப்பாட்டை ஜோ கவுதமிற்கு தெரியப்படுத்தி விட்டாள்!
அவன் இங்கு வந்தவுடன் பேசலாம் என்று வீட்டுப் பெரியவர்கள் இருக்க, ஜோ முந்திக் கொண்டு அவனிடம் சொல்லி விட்டாள்.
அதனால் அவன் வரும் போதே நம்ரதாவையும் கூட்டிக் கொண்டே வந்து விட்டான், தன் முடிவை உறுதியாக சொல்ல என்று!
மான்சிக்கு இந்த விவரங்கள் சொல்லப்பட வில்லை இன்னும்!
கவுதமும் கூட வீட்டில் இப்படி ஒரு பேச்சு வந்திருப்பது மான்சியை சங்கடப்படுத்தும் என்று நினைத்து சொல்லாமல் இருந்தான்.
இது எதுவும் தெரியாமல் தான் மான்சி, ரிஷியிடம் தன்னை வெளிப்படுத்தியதே!
ஆனால் ரிஷியிடம், தான் அமெரிக்காவில் இருந்து கிளம்பும் முன், கவுதம் அவனை அழைத்து விஷயத்தை சொல்லவும், தன் ரூட் கிளியர் என்று மகிழ்ந்தவனுக்கு, மான்சியின் மனதும் தெரிந்த பின், அப்புறம் என்ன?
சார்வாள் வானத்தில் பறக்காத குறை தான்!
தன் வீட்டிற்கு ஜோடிப் போட்டுக் கொண்டு வந்து விட்ட கவுதமைக் கண்டு நியாயத்திற்கு வீட்டுப் பெரியவர்களுக்கு கோபம் தான் வந்திருக்க வேண்டும்!
பெரியவர்கள் என்று இல்லை! வீட்டில் இருக்கும் ஜோ ரிஷி உட்பட!
ஆனால் ஆச்சர்யப்பட தக்க வகையில், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் அது நிம்மதியே!
முதலில் பிருந்தா!
அவருக்கு மான்சியை கவுதம் லவ் பண்ணி விட வில்லை என்பதே பெரிய நிம்மதி!
அத்தோடு வரப் போகும் மருமகளின் செல்வநிலை! பார்த்தவுடனே தெரிந்த அவளின் சாதுவான தோற்றம்!
நம்ரதா அவருக்கு டபுள் ஓகே தான்!
சதா வழக்கம் போல் சைலன்ட் வியூவர்!
ஜோவுக்கு மான்சியை, ரிஷி அண்ணன் கட்டினால் தான், அவளை தன் இஷ்டபடி ஆட்டி வைக்க முடியும் என்ற எண்ணம் போல! அவளுக்கும் இதில் சம்மதமே!
பெரியவருக்கு ஆரம்பம் முதலே மான்சியை இந்த வீட்டுக்கு மருமகளாக கொண்டு வரும் எண்ணம் தான்!
அதனால் தான், அவளை தன் குடும்ப பிசினெஸ் விவரங்கள் அறிந்து கொள்ளும் வகையில் அவளை வேலைகளில் ஈடுபடுத்தினார்!
சாந்தாம்மாவுக்கும் அதே எண்ணமே!
அதனால் தான் ரிஷி இங்கு புது பிசினெஸ் ஆரம்பிக்கப் போகிறான் என்றவுடன், அவன் கண்களில் மான்சியை அடிக்கடி பட வைக்க வேண்டியே அவளை அவர் ஆயில்மில் வேலைக்கு வர செய்தது!
இல்லையென்றால், அங்கு ஆரம்பம் முதல் வேலை செய்து கொண்டிருக்கும் லட்சுமியும் அவள் கணவனுமே மொத்த ஆயில்மில்லையும் நன்கு பார்த்துக் கொள்வார்கள்!
பெரியவருக்கு அவரின் அத்தை – சாந்தாம்மாவின் அம்மாவை நினைவு படுத்தினாள் மான்சி!
அவள் பேசுவதும், நடப்பதும் அந்த ரோசக்கார குணமும் அவரைக் கொண்டு இருந்தது!
மான்சியின் அப்பாவும் சாந்தாம்மாவின் பிறந்த வீட்டு வகையில் உறவினர் தான்!
அதனால் அவருக்கும் ரிஷிக்கு மான்சியை கல்யாணம் முடிக்க வேண்டும் என்றே ஆசை!
கொஞ்சம் வயது வித்தியாசம், பத்து வயது வித்தியாசம் இருப்பதால் பெண் கேட்க கொஞ்சம் தயக்கமும் இருந்தது!
இல்லாத வீட்டுப் பெண் என்றால், இவ்வளவு வயசு வித்தியாசத்தில் பெண் கேப்பீங்களா என்ற சொல் வந்து விடக் கூடாதே என்ற அச்சம்!
இடையில் இந்த ஜோ, ஜீவனை தான் கட்டுவேன் என்றதும், காந்தியம்மாளின் வேண்டுகோளும் அவரை,
எல்லாம் விதிப்படி நடக்கட்டும்!
எல்லாம் அந்த ஈசனின் திருவுள்ளம் என்றே மனதைத் தேற்றிக் கொள்ள வைத்து விட்டது!
—–
லாக்கரில் இருந்த பழைய மற்றும் புதிய நகைகளை வெளியே எடுத்து வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் சாந்தாம்மா.
எதை மான்சிக்கு கொடுக்கலாம், எதை ரிதனிக்கு கொடுக்கலாம் என்ற சிந்தனையில்!
“எத்தனை தேங்காய் உடைக்கிறதா வேண்டிக்கிட்டு இருக்க பிள்ளையாருக்கு?” என்றார் ஸ்வாமிநாதன் கிண்டலாக மனைவியைப் பார்த்து.
அதன் அர்த்தம், கவுதமிற்கு வேறு பெண் முடிவாகி விட்டது, இனி ரிஷிக்கு மான்சியை பெண் கேட்பதில் தடை ஏதும் இல்லை! எல்லாம் உன் ரகசிய வேண்டுதலால் தான் என்ற கிண்டல்!
“ஹும். நீங்க எத்தனை தேங்காய் வேண்டிக் கிட்டீங்களோ அதை விட குறைவு தான்” என்றார் அவரும் அதன் உள்ளர்த்ததைப் புரிந்து கொண்டு!
“ஹேய்.. இரும்மா. பொறு.. இன்னும் நம்ம நிலை இன்னும் அப்படியே தான் இருக்கு!
பத்து வயசு வித்தியாசத்தில் பொண்ணு கொடுப்பாங்களான்னு இன்னும் முடிவா தெரியல! நாம அவங்கள போர்ஸ் பண்ணவும் கூடாது!” என்றார்.
“எனக்கு நம்பிக்கை இருக்குங்க” என்றார் சாந்தாம்மா உறுதியாய்!
அதே உறுதியுடன் தன் தாயுடன் வாதிட்டு கொண்டிருந்தாள் ஜோ.
“டீ.. ஜோ.. சொன்னா கேளு. நான் இன்னும் நல்ல மாப்பிள்ளையா உனக்கு பார்க்கிறேன்!
உன் மாமா பையன் இருக்கான். அவன் இல்லாட்டி கூட இன்னும் பெட்டரா நான் பார்த்து பண்ணி வைக்கிறேன். சொன்னா கேளு. அந்த ஜீவன் உனக்கு வேண்டாம்!”
தன் பையன் அளவு சாமர்த்தியம் பொண்ணுக்கு இல்லையே என்ற கவலை பிருந்தாவிற்கு!
பின்னே பிடித்தாலும் பிடித்தான்! பெரிய புளியங்கொம்பாக அல்லவா பிடித்து இருக்கிறான்!
அவர் கூட அவன் ஜாதகத்தில் காதல் கல்யாணம் என்று இருப்பதாக சொன்னவுடன், எங்கே ஒரு வெள்ளைக்காரியையோ, அல்லது கருப்பியையோ கட்டிக் கொண்டு வந்து விடப்போகிறான் என்று நினைத்து பயந்தார் முதலில்!
பின் மான்சியை நினைத்துப் பயந்தார்!
பின் அவர்களுக்கு மான்சி எவ்வளவோ தேவலை என்று சமாதானம் அடைந்திருந்தவருக்கு ஜாக்பாட் போல கோடீஸ்வரன் வீட்டுப் பெண் மருமகளாய்!
இந்த ஜோ பொண்ணு மட்டும் ஏன் தான் இப்படி அடம் பிடிக்குதோ தெரியல! என்ற வருத்தத்தில் அவளின் மனதை மாற்ற முயன்று கொண்டிருந்தார்.
ஆனால் அது முடியாமல் போகவே, பெரியவரிடம் இந்த பொறுப்பை விட்டு விட்டார்.
இதை எல்லாம் கவனித்துக் கொண்டு தான் இருந்தான் ரிஷியும்!
பெரியவர்களாக பேசி முடிவுக்கு வரட்டும். இப்போது தான் போய் ஏதும் பேசி வைத்து விட்டால், வீணே மான்சிக்கும் தான் கெட்ட பெயர் ஏற்படும்!
அதுவும் இந்த சித்தி! ஏற்கனவே அவர்கள் வீட்டை மட்டம் தட்டுவார்.
இப்போது மான்சிக்கும் இந்த கல்யாணத்தில் விருப்பம் என்று தான் முந்திக் கொண்டு சொல்லி விட்டால் அவ்வளவு தான்!
மான்சி ஏதோ திட்டம் போட்டு தன்னை வளைத்துப் பிடித்து விட்டதாக சொன்னாலும் சொல்லுவார்!
அதனால், அவன் வெறும் பார்வையாளனாக மட்டுமே இருந்தான்!
சதா கூட கேட்டு விட்டார்.
“இப்படி நீங்களே முடிவு பண்ணினால் எப்படி? கவுதம், ஜோ விருப்பப்படி இங்கே எல்லாம் நடக்குது!
ஆனா இதுல ரிஷிக்கு விருப்பம் இருக்கான்னு நீங்க கேக்கவே இல்லையே அண்ணே!” என்றார் ஸ்வாமிநாதனிடம்.
“அய்யோ..சித்தப்பா. எனக்கு தனியே ஒரு விருப்பமும் இல்லை! நீங்க பார்த்து எது செஞ்சாலும் சரி தான்” என்று விட்டான் நல்லப் பிள்ளையைப் போல்!
“பாரு.. பிள்ளைங்க என்றால் என் அண்ணன் பிள்ளைகள் போல இருக்கணும்! உன் பிள்ளைகளும் இருக்கே!” என்று பிருந்தாவையும் திட்டினார் சதா!
——
கொஞ்சம் தயங்கியே தான் என்றாலும் சாந்தாம்மா காந்தி ஆச்சியிடம் அவர்கள் வீட்டு நிலையை சொல்லியே விட்டார்!
“கவுதம் இப்படி கொண்டு வந்து நிறுத்துவான்னு நாங்க கொஞ்சம் கூட நினைக்கல!”
“அதனால என்ன அண்ணி? அந்த பொண்ணோட வீட்டுக் காரங்களும் நம்மள மாதிரி வெஜிடேரியன் தானே? அப்புறம் என்ன உங்களுக்கு?” என்று ஏதோ சொல்லி சமாதானம் செய்ய முயன்றார் கோமதி!
அவருக்கும் கொஞ்சம் ஏமாற்றம் தான்!
ஏதோ ஒரு வழியில மான்சிக்கு கல்யாணம் கூடி வந்த மாதிரி இருந்தது!
எப்படியாவது கடனை உடனை வாங்கி அவளைக் கரை சேர்த்து விடலாம்னு இருந்தோம்.
இனி நாம எங்கே போய் இப்படி ஒரு நல்ல குடும்பத்தைத் தேடுவது என்று!
“ஆனா இன்னொரு யோசனையும் எனக்கும் உன் அண்ணனுக்கும் இருக்கு! ஆனா கொஞ்சம் தயக்கமாவும் இருக்கு! நான் வர மாட்டேன் என்று அவர் என்கூட வர மாட்டேன் என்று சொல்லி விட்டார்.
நான் வந்து கேட்டா, ஒருவேளை விருப்பம் இல்லன்னா, என்கிட்ட சொல்ல அவங்களுக்கு சங்கடமா போய்டும் என்று சொல்லி விட்டார்” என்று ஆரம்பித்து ஒரு வழியாக “நம்ம ரிஷிக்கு மான்சியை கட்டலாமா?” என்று கேட்டே விட்டார்.
“அதுக்கு ஏன் அண்ணி இவ்வளவு தயங்குறீங்க? உங்களுக்கு மருமகளா வர மான்சி கொடுத்து வச்சுருக்கணும்!” என்றார் கோமதி!
“இல்ல.. கொஞ்சம் வயசு வித்தியாசம் இருக்கு. நம்ம காலம் மாதிரி எல்லாம் இல்ல இப்ப! பிள்ளைங்க எதிர்பார்ப்பு எல்லாம் வேற மாதிரி இருக்கு! அதான்” என்றார் சாந்தாம்மா.
“ஆமாம்மா, அவங்க சொல்றதும் சரி தான்! நாம மான்சிகிட்ட கேக்காம எந்த முடிவும் எடுக்க கூடாது” என்றான் ஜீவன் இடையிட்டு.
எல்லாவற்றையும் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்த ஆச்சி,
“சாந்தா, எனக்கு ஒரு நாள் டைம் கொடும்மா. நாளைக்கு நான் பதில் சொல்றேன்” என்று அவரை அனுப்பி வைத்து விட்டார் ஆச்சி.
“டேய்.. ஜீவா, அவள் கிட்ட போய் நேரா எதுவும் கேட்டு வச்சுடாத! கொஞ்சம் சூசகமா தான் கேக்கணும்” என்றார் ஆச்சி.
“எதுக்கு ஆச்சி அதெல்லாம்? நாம் ஏதாச்சும் தப்பா புரிஞ்சிக் கிட்டோம்னா?”
“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது” என்றார் ஆச்சி.
இரவு உணவின் போது மெல்ல ஆரம்பித்தான் ஜீவன்.
“அம்மா, அடுத்த மாசம் என்னோட பிரன்ட்டோட தங்கச்சிக்கு கல்யாணம்.
அவளுக்கு நம்ம மான்சி வயசு தான்ம்மா. ஆனா மாப்பிள்ளைக்கு வயசு முப்பதோ முப்பத்தி ஒன்றோ ஆவுது.
எப்படி தான் இப்படி கல்யாணம் பண்றாங்களோ தெரியல?
அந்த பொண்ணுக்கும் மாப்பிள்ளையை ரொம்ப பிடிச்சுடுச்சாம். இப்பவே மாமா மாமான்னு ஒரே கொஞ்சலாம்” என்றான் ஜீவா மான்சியை ஓரக்கண்ணால் பார்த்தபடி.
“அவ மனசுக்கு ரொம்ப பிடிச்சிருந்தா போதும்ண்ணா. வயசெல்லாம் ஒரே மேட்டரே இல்லை” என்றாள் மான்சி.
“எங்க காலத்துல எல்லாம் இது சகஜம் தான்! இப்ப தான் நீங்க இப்படி பார்க்குறீங்க” என்றார் கோமதி!
“ஆமாண்ணா. அன்வர் சாருக்கும் நஸீராம்மாக்கும் கூட பன்னெண்டு வயசு வித்தியாசம் தெரியுமா? அவங்க எப்படி சூப்பர் கப்பிள்ஸ் ஆ இருக்காங்க!” என்றாள் மான்சி இடையிட்டு!
போதுமா என்னும் அர்த்தத்தில் ஜீவனைப் பார்த்தார் ஆச்சி.
போதாது என்று தலையாட்டினான் அவன்.
அடப்போடா என்று தலையில் அடித்துக் கொண்டார் கோமதி.
தூங்கப் போகுமுன், சார்ஜில் போட்டுருந்த மான்சியின் போன் அடித்தது.
ஜீவன் அருகே போய் எடுக்குமுன் ஓடி வந்து எடுத்து விட்டாள் மான்சி.
அதில் அத்தான் காலிங் என்று இருந்தது!
அது அவன் கண்ணிலும் பட்டே விட்டிருந்தது!
யார் அது என்று அவன் கேட்குமுன் அவள் ரூமிற்குள் ஓடியே விட்டாள் மான்சி.
உள்ளே அவள் சிரித்துக் கொண்டும் இடையிடையே வெட்கப்பட்டும் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டவன் அதிர்ந்து போய் விட்டிருந்தான்.
என்ன இது? மான்சியா இப்படி? இது தெரியாமல் இந்த பெரிசுங்க எல்லாம் ஏதேதோ முடிவுப் பண்ணிட்டு இருக்காங்களே! என்று கவலைப்பட்டான் அவன்.
அவள் தூங்கிய பின், அவளின் போனை எடுத்து அவனுக்கும் தெரிந்த அதன் பாஸ்வேர்ட்டை போட்டு, அவள் அத்தான் என்று சேவ் செய்து இருந்த நம்பரை ட்ரு காலரில் போட்டுப் பார்த்தான்.
ரிஷி சரண் என்று வந்தது!
அவனுள் ஆச்சர்யத்துடன் நிம்மதி பெருமூச்சும்!
——-
அதிகாலை நான்கரை மணி.
“ஹாய்! பொண்டாட்டி! குட் மார்னிங்!” என்று காலையிலயே மெசேஜ் போட்டு இருந்தான் ரிஷி மான்சிக்கு.
அதைக் கண்டவுடன் முகம் சிவந்தது மான்சிக்கு.
“குட்மார்னிங் அத்தான்” என்று உடனே ரிப்ளை செய்தாள்.
அவள் விழித்து விட்டாள் என்று அறிந்தவுடன், உடனே போனே செய்து விட்டான்.
போனை வைப்ரேட்டில் வைத்து இருந்ததால் வேறு யாரும் அறியவில்லை!
“சீக்கிரமா ஆபிஸ் வந்திடு இன்னிக்கு. எனக்கு வெளியே போற வேலை இருக்கு. வர லேட்டாகும். இல்ல.. இன்னிக்கு பூராவும் வெளியே தான் வேலை! அதனால சீக்கிரமே வர்ற!”
“அதெல்லாம் முடியாது. அங்க பத்து மணிக்கு வந்தே ஒண்ணும் பெரிசா வேலை கிழிக்கப் போறதில்லை!
இதுல சீக்கிரமே வரணுமாம். பொண்டாட்டியைப் பார்க்கணும்னா வெயிட் பண்ணுங்க”. என்றாள் அவள் மெல்லிய குரலில் கிசுகிசுப்பாக!
“சொல்றத செய்யுடி. என் பொடிசு பொண்டாட்டி!”
“ஹலோ.. மரியாதை..மரியாதை வேணும் ஆமா..” என்று அவள் மிரட்டினாள்!
“அய்யோ! பயந்துட்டேன். ஓகேங்க பொண்டாட்டிங்க. நான் வெளி வேலையா போறேங்க. போற வேலை சக்சஸ் ஆகணும்னா, போறதுக்கு முன்னாடி பொண்டாட்டியை கிஸ் பண்ணிட்டு போகணும்ங்கிறது பொண்டாட்டி சாஸ்த்திரம்! அதனாலங்க பொண்டாட்டிங்க, கொஞ்சம் சீக்கிரமே வந்துடுங்க”
“ஓ.. அப்படி.. அப்போ பொண்டாட்டி பக்கத்துல இல்லன்னா?”
“அப்போதைக்கு ஏதாச்சும் ஒரு இண்டெரிம் அரேஞ்சுமேண்ட்ஸ் பண்ணிக்க வேண்டியது தான்!”
“ம்ம். பண்ணுவீங்க.. பண்ணுவீங்க.. பிச்சு..பிச்சு.” “என்று சொல்லி போனை வைத்தாள் மான்சி.
அவன் சொன்னதால் சீக்கிரமே கிளம்பி விட்டாள் ஆயில் மில்லுக்கு.
“ஏண்டி. இவ்வளவு சீக்கிரம்? “என்று கேட்ட கோமதியிடம்,
“நசீராம்மாவைப் பார்த்துட்டு போகணும்” என்றாள்.
“அப்போ, இந்த எள்ளுப்பொடியை கொண்டு போடி. அவங்க பிரியமா சாப்பிடுவாங்க” என்றதற்கு,
“இல்லம்மா. அவங்க இன்னிக்கு ஊருக்கு போறாங்க. வர ஒரு பத்து நாள் ஆகும். அதுக்குள்ள பொடி பழசாகிடும்.
இன்னொரு நாள் கொடு” என்று வாய்க்கு வந்த பொய்யை அவிழ்த்து விட்டு ரிஷியைக் காண வேகமாக சைக்கிளை அழுத்தினாள் மான்சி.
அங்கு சென்றால், ரிஷியின் அறை மூடியிருந்தது.
உள்ளே ஒரு பெண்ணின் பேச்சுக் குரல்!
நிச்சயம் அது ஜோ இல்லை! ஜோவாக இருந்தால் அவளின் ஸ்டூல் போன்ற ஹை ஹீல்ஸ் வெளியே இருக்குமே!
யார் அது என்று யோசித்துக் கொண்டிருக்கையில்,
அங்கே வந்த மில்லில் வேலை செய்யும் லட்சுமி,
“பெரிய தம்பி யார்கிட்டயோ முக்கியமா பேசிட்டு இருக்காம்.
உள்ளே யாரும் வர வேண்டாம் கொஞ்ச நேரத்துக்குன்னு சொல்லிடுச்சு” என்று அவளைத் தடுத்து விட்டாள்.
அவளுக்கு ரிஷி மான்சி காதல் தெரியாது அல்லவா!
உள்ளுக்குள் கோபம் பொங்க தன் சீட்டில் போய் உட்கார்ந்தாள் மான்சி!
error: Content is protected !!