Skip to content
Post Views: 2,967
அத்தியாயம் 18
“ஹலோ தாத்தா எப்ப வந்தீங்க? பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு?” ஆரவாரமாய் பாரியின் தாத்தா முருகானந்தத்தை வரவேற்றுக் கொண்டே பாரி வீட்டினுள் நுழைந்தாள் கருணாம்பிகை.
Advertisement
“வந்தாச்சு… வந்தாச்சு… நான் வந்து ஒரு நாள் ஆச்சு…” என்றார் தாத்தா பொருமலாக.
அனைவரது முகமும் இறுக்கமாக இருப்பதை அப்பொழுதுதான் கவனித்தாள் கருணா.
Advertisement
Advertisement
“எப்படி தாத்தா இருக்கு உடம்பு எல்லாம்? ஒழுங்கா செக்கப் எல்லாம் போறீங்களா? ஹார்ட் பிராப்ளம் எல்லாம் லைட்டா எடுத்துக்க கூடாது, டயட் எல்லாம் ஒழுங்கா ஃபாலோ பண்ணனும்” எப்பொழுதும் போல அவள் பேசிக் கொண்டே சென்றாள்.
“உனக்கு இருக்கிற அக்கறை இங்கே யாருக்கு பாப்பா இருக்கு?” என்றார் தாத்தா உர்ரென்று
Advertisement
அத்தையிடம் ‘என்ன ஆச்சு?’ என்பது போல் செய்கையால் கேட்டாள்.
தமயந்தி திருத்திருக்கவும் “உங்க அத்தைக்கு சத்தமா பேசினாலே புரியாது. நீ ஆக்சன்ல கேட்கிறாயா?” என்றார் தாத்தா நக்கலாக.
“ஃபுல் ஃபார்ம்ல இருக்கீங்க போலயே? சரி நீங்களே சொல்லுங்க என்ன விஷயம்?”
“எங்க மொத்த குடும்பத்துக்கும் பாரிவேந்தன் தான் ஒத்த ஆம்பள புள்ள, உனக்கு தெரியும் தானே?”
“அது தெரியும் தாத்தா, இப்போ அதுல என்ன பிரச்சனை?”
“இப்ப இவன் உன் கூட டெல்லி வரப்போறானாமே?”
கருணாவிற்கு விஷயம் புரிபட்டுவிட்டது.
“இப்ப டெல்லி பயணம் தான் உங்க பிரச்சனையா?
“நானும் எவ்வளவோ சொல்லி பார்த்துட்டேன் பாப்பா, நட்பு இருக்க வேண்டியதுதான், அதுக்குன்னு நம்ம லைஃப்ல எப்பவுமே அது ஒன்னு மட்டுமே பற்றுக்கோல் இல்ல தானே? இப்ப இவன் எதுக்கு டெல்லி வரணும்னு நினைக்கிறான்? நீயே சொல்லு?”
கருணாவிற்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது. கருணா முதுகலை எக்கனாமிக்ஸ் முடித்துவிட்டு இப்பொழுது ‘இந்தியன் எக்கனாமிக் சர்வீசஸ்’ எக்ஸாமுக்காக தயார் செய்து கொண்டிருக்கிறாள். அதற்கான சிறப்பு வகுப்புகள் டெல்லியில் இருப்பதால் அங்கே செல்ல இருக்கிறாள். கல்லூரியில் தங்க பதக்கம் பெற்று தேர்ச்சி பெற்றதினால், அவளது கல்லூரியே இந்த சிறப்பு வகுப்பிற்காக ஸ்பான்சர் செய்கிறது.
வழக்கம் போல இவளுக்கு துணையாக பாரியும் வில்வாவும் அங்கே செல்வதாக முடிவு செய்துள்ளனர். பேச்சு நிகழ்ச்சிகள் போல ஒரு நாள் இரண்டு நாள் கதை இல்லையே, கருணாவும் இவர்களை மறுத்து கொண்டு தான் இருக்கிறாள்.
ஒரே பேரன் அவ்வளவு தூரம் செல்வதை அறிந்த உடனே கிளம்பி வந்துவிட்டார் முருகானந்தம் தாத்தா.
வந்ததிலிருந்து தர்மராஜிடமும் தமயந்தியிடமும் பாரியிடமும் எவ்வளவோ எடுத்து கூறிவிட்டார்.
பாரியும் வில்வாவும் பிசியோதெரப்பியில் முதுகலை பட்டம் முடித்து சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர்.
கருணா வந்ததும் மீண்டும் தன் வாதத்தை தொடர்ந்தார் தாத்தா.
“தர்மா உனக்கு தான் நான் எதுவும் செய்யல.. வேந்தனுக்கு என்னோட பிசினஸ் ஒன்னு கொடுக்கலாமுன்னு முடிவு செஞ்சிருந்தேன். இப்ப போய் எதுக்கு டெல்லி போகணும்?” என்றார் மகனிடம் தனக்கு இதில் விருப்பமில்லை என்று புரிய வைக்க.
“அவன் எப்படிப்பா பிசினஸ் பார்ப்பான்? அவன் படிப்புக்கும் பிசினஸ்க்கும் சம்பந்தமே இல்லையே”
“அதானே…” என்றான் அதுவரை அமைதியாக இருந்த பாரி.
“சரி, என் பிசினஸ் வராதுன்னா அவனுக்கு ஒரு பிசியோதெரப்பி ஆஸ்பத்திரி கட்டி கொடுப்பேன்”
மூவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர். கருணாவும் யோசனையாக நின்றுகொண்டிருந்தாள்.
“என்ன தமயந்திம்மா? நீயாச்சும் சொல்லலாம் இல்ல? உங்களுக்கு தான் நான் எதுவும் செய்யல, மத்த பசங்களுக்கு எல்லாம் நிறைவா செஞ்சிட்டேன். நான் நல்லா இருக்கும்பொழுதே வேந்தனுக்கு செய்ய நினைக்கிறேன். திடீர்னு வந்து டெல்லி போறான்னு சொல்றீங்க?”
“அது இல்லப்பா வில்வா டெல்லி போறான்னு இவனும் போறேன் நிக்கிறான், எங்களுக்கும் இது சரியா தப்பான்னு குழப்பமா தான் இருக்கு. எங்களுக்கு கூட முழு சம்மதம் இல்லதான், ஒரே பையன் எப்படி விட்டுட்டு இருக்கிறது” தமயந்தி அவர்களது எண்ணத்தை கூறினார்.
இவ்வளவு பேசியும் பாரி மசிவதாக இல்லை.
“நீ நாலும் தெரிஞ்சவ தானே பாப்பா? நீயே சொல்லு இப்ப எதுக்கு வேந்தன் டெல்லி வரணும்?”
“நீங்க சொல்றது ஒரு வகையில சரிதான் தாத்தா. அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு கேள்வி இருக்கு.”
“என்ன கேள்வி?”
“நீங்க மாமாவுக்கு செய்ய முடியலைன்னு ஏன் பாரிவேந்தனுக்கு செய்ய நினைக்கிறீங்க? மாமாக்கு என்ன வயசு ஆயிடுச்சு? இப்போ கூட அவருக்கு பிசினஸ் ஆரம்பிச்சு கொடுத்தீங்கன்னா நல்லா செய்வாரே? மாமாக்கு அதுல அதிக இன்டெர்ஸ்ட் கூட“
“அதானே…” என்றான் பாரி.
“என்னடா அதானே அதானே வந்ததுல இருந்து அதையே சொல்லிட்டு இருக்க?” என்றார் பெரியவர் கடுப்பாக
“அதெல்லாம் சகவாச தோஷம் தாத்தா, பாரிவேந்தன் சொன்னா எங்க அண்ணா அதானேன்னு ஒத்து ஊதுவான்… அவன் சொன்னா இவன் அதானேன்னு ஒத்து ஊதுவான்.. எங்களுக்கு பழகிருச்சு.. சரி விஷயத்துக்கு வாங்க..”
முருகானந்தம் யோசிக்கவும்,
“இங்க பாரு பாப்பா எனக்கு யாரும் பிசினஸ் எல்லாம் வைச்சு தர வேண்டிய அவசியம் இல்லை. பெத்த அப்பாவும் என்னை நினச்சு பார்க்கலை, நான் பெத்த பிள்ளையும் ஒரு முடிவு எடுக்கும் முன்னே என்னை மதிச்சு கேக்கலை. யார் யாருக்கு என்ன விருப்பமோ அதையே செய்யட்டும்” என்று விரக்தியாக கூறிவிட்டு வெளியே சென்று விட்டார் தர்மராஜ்.
கிணறு வெட்ட பூதம் கிளம்பின கதை ஆயிடுச்சே என்று நொந்து போனார் தாத்தா.
தாத்தா சங்கடமாக தமயந்தியை பார்த்தார்.
“மாமா கோவிலுக்கு தான் போயிருப்பாங்க தாத்தா. நீங்க மாமாக்கூட பேசுங்க தாத்தா. பாரி வேந்தன் தொழில் ஆரம்பிக்க இன்னும் வயசும் காலமும் நிறைய இருக்கு. உங்களுக்கு தெரியாதது இல்லையே தாத்தா. இந்த பயணம் கூட அவங்க வாழ்க்கைக்கு அனுபவமா அமையலாம் இல்லையா? ஒரு விஷயத்தை மறுக்கறதை விட அதன் சாதக பாதகங்களை ஆராய்ஞ்சு முடிவு எடுக்கிறது தானே சரி? இவங்க இரண்டு பேரும் என்ன நினைச்சு டெல்லி வரலாம்னு முடிவு செஞ்சாங்கன்னு எனக்கு தெரியலை. ஆனா தனிச்சு வாழ அவங்களுக்கு இது ஒரு பக்குவத்தை கொடுக்கும்னு எனக்கு தோணுது. யோசிச்சு முடிவு செய்ங்க. மாமா அவர் வேலை பார்க்கிற கம்பெனிக்காக கடுமையா உழைக்கிறாங்க. ஆனா அதுக்கான அங்கீகாரம் அங்கு கிடைக்கலை. கொஞ்ச நாளாவே மாமா ஒரு விரக்தி மனநிலையில் தான் இருக்காங்க. இப்ப உங்க சப்போர்ட்டும் வழிகாட்டுதலும் அவருக்கு தான் தேவை தாத்தா.. ” என்றாள் கருணா.
தமயந்திக்கு வியப்பாக இருந்தது. எப்படி துல்லியமாக கணவனின் மனநிலையை கூறிவிட்டாள் என்று.
“எப்படி டைவர்ட் பண்ணி விட்டா பார்த்தீங்களா உங்க பாப்பா?” என்றான் பாரிவேந்தன் தன் தாயின் காதில் கிசுகிசுப்பாக.
“பாப்பா வந்தா சமாளிப்பான்னு எனக்கு நேத்தே தெரியும் டா. அதனால் தான் அவளை வர சொல்லி மெசேஜ் அனுப்பினேன். ஆனா உங்க அப்பா பத்தி நான் எதுவுமே சொல்லலை. அவளே கண்டுபிடிச்சு பேசிட்டு இருக்கா. அவளை பார்த்து கொஞ்சமாச்சும் கத்துக்க “ என்று மகனிடம் பதில் கூறிவிட்டு தமயந்தி அடுப்படிக்குள் சென்று விட்டார்.
தாத்தா மகனுடன் பேச கோவிலை நோக்கி புறப்பட்டார்.
“இங்கு பாரு பாரிவேந்தன் உங்க தாத்தா சொல்றதலையும் ஒரு நியாயம் இருக்கு இல்ல? நீயும் அண்ணாவும் என்கூட வரேன்னு எனக்காக உங்க கேரியர்ல காம்ப்ரமைஸ் பண்ண கூடாது”
“இப்ப யாரு காம்ப்ரமைஸ் பண்றா? நாங்களும் எத்தனை நாளைக்கு தான் இந்த சென்னையே சுத்தி சுத்தி வர்றது? ஒரு எக்ஸ்பீரியன்ஸ்க்கு அங்க டெல்லியில் வந்து வேலை பார்க்கிறோமே? நாங்க மட்டும் போறோம்னா அனுப்ப மாட்டாங்க? இப்ப உனக்கு துணையாக போறோம்னு சொன்னா அனுப்புவாங்க தானே?”
“அடப்பாவிங்களா?”
“யாரை பார்த்து பாவிங்களா சொல்ற?” என்று கேட்டுக்கொண்டே வில்வாவும் வந்து விட்டான்.
“சரி அங்கு எந்த ஹாஸ்பிட்டல்ல சேரலாம்னு இருக்கீங்க?
“ஏன் எங்களுக்கு எல்லாம் டெல்லில வேலை கிடைக்காதோ?” என்றான் வில்வா எகத்தாளமாக.
“அதானே…”
“கருணா நண்பர்கள் இருவரையும் முறைக்கவும்,
“எங்க ஹாஸ்ப்பிட்டல் பிராஞ்சே அங்கே இருக்கு. அங்கேயே ட்ரான்ஸ்பர் கேட்டிருக்கோம்”
“கண்டிப்பா கிடைச்சுடும்.. எங்க திறமை அப்படி”
“அது சரி.. ஆனா ஒன்னையே நம்பிகிட்டு இருக்க முடியுமா? இரண்டு மூணு இடத்துல அப்ளை பண்ணுங்க. எங்க அப்ளை பண்ணுறீங்கன்னு ஈவினிங் சொல்லுங்க” என்று வழக்கம் போல அவர்களுக்கு அட்வைஸ் கொடுத்துவிட்டு தமயந்தியை பார்க்க அடுப்படிக்கு சென்றாள்.
தாத்தாவும் மகனுடம் பேசி ஒருவழியாக அவரை சமாதானம் செய்துவிட்டார்.
கருணா சொன்னதை போல பேரனுக்கு செய்வதை காட்டிலும் மகனுக்கு செய்வதே இப்பொழுது முக்கியம் என்பதை உணர்ந்துகொண்டார்.
வேண்டவே வேண்டாம் என்று மறுத்தவரை சமாளிச்சு புதிதாக ஒரு தொழில் சென்னையிலே அமைத்துதர ஏற்பாடு செய்ய தொடங்கினார்.
————————
“என்ன பாப்பா இன்னும் கிளம்பாம உட்கார்ந்த்துட்டு இருக்க? காலேஜ் பஸ் வந்துடும்..”
“போ அண்ணா.. எனக்கு காலேஜ் போகவே பிடிக்கலை.”
“கிளம்பர வரைக்கும் அப்படி தான் இருக்கும். சீக்கிரம் கிளம்பு.. எனக்கு ஆபிஸ்ல காலையில மீட்டிங் இருக்கு. பஸ் போச்சுன்னா என்னால ட்ராப் பண்ண முடியாது”
“போ அண்ணா.. “
இரண்டு நாட்களாக சோக கீதம் வாசித்து கொண்டிருக்கிறாள் அருந்ததி.
“டிபன் ரெடி” என்று அடுப்படியில் இருந்து வந்தார் வேதாச்சலம் தாத்தா. இப்பொழுது முழுதாக குணமாகி, பேரன் பேத்தி இருவருக்கும் தன் கையாலே சமைத்து போடுகிறார். இங்கே வந்து சில ஆண்டுகளிலே நல்ல முன்னேற்றம் அடைந்தது அவரது உடல்நிலை.
கடந்த ஆறு மாதங்களாக தனியே எந்த ஊன்றுகோலுமின்றி நடனமாடுகிறார்.
ஆரோக்கியமான அமைதியன சூழ்நிலை, நேர்மறை அதிர்வலைகள்,பேரன் பேத்திக்காக தன்னை சரி படுத்திக்கொள்ள வேண்டும் என்ற அவரது உத்வேகம்.. எல்லாமுமே இதற்கு காரணம்.
அவினாஷ் பொரியியல் முடித்துவிட்டு மிக பெரிய மல்டி நேஷனல் கம்பனியில் வேலை செய்து கொண்டிருக்கிறான்.
கை நிறைய சம்பளம், மனம் நிறைந்த வாழ்க்கை.
நடுவில், இவர்களது நல்ல நிலைமை அறிந்து இவர்களை தேடி வந்தனர் இவனது அப்பாவும் அம்மாவும். வீடு விற்ற பணத்தை கொண்டு மனைவியை துபாய்க்கு அழைத்து சென்று விட்டார். அங்கே தொடர் சிகிச்சை மூலமாக, சர்க்கர நாற்காலியில் தனது வாழ்நாளை கழிக்கிறார் இவர்களது அன்னை. நாங்களும் உங்களோடு வந்து விடுகிறோம் என்று கேட்ட பெற்றோர்களை, தயவு தாட்சண்யம் சிறிதும் பார்க்காமலே மறுத்து விட்டனர் தாத்தாவும் பேரன் பேத்தியும்.
எங்களை பற்றி கவலை படாமல் நட்டாற்றில் விட்டு சென்ற நீங்கள், எங்களுக்கு எப்பொழுதுமே வேண்டாம். தத்தி தடுமாறி நீந்தி இப்பொழுது கரை சேர்ந்தபுறம், உங்கள் நிழல் எங்களுக்கு வேண்டாம் என்று விட்டனர்.
சட்டபூர்வமாக தங்களுக்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வழக்கு பதிவு செய்து அதை அமுல் படுத்தியும் விட்டனர்.
அண்ணன் தங்கை தாத்தா என்று சிறிய கூட்டில் சந்தோசமாக வாழ்கின்றார்கள்.
பிசினஸ் செய்ய வேண்டும் என்ற தன் லட்சியத்திற்காக காசை சேமித்து வருகிறான் அவினாஷ். இவர்கள் வாழ்வில் வரமாய் கிடைத்தது அத்தை குடும்பம். அதனுடன் வாழ்வில் மகிழ்ச்சியை சேர்த்தது கருணாவின் குடும்பம்.
அருந்ததி பிசியோ தெரப்பி இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருக்கிறாள்.
அவளை பொறுத்த வரைக்கும் அவள் அண்ணாஸ் வழி தான் ஜாலியான வழி. கருணாவும் அவினாஷும் எப்பொழுதும் சீரியஸ் ஆகவே இருப்பவர்கள். அவளுக்கு ஜாலியாக இருக்க வேண்டும்.
இப்பொழுது அவர்கள் இருவரும் கருணாவுடம் டெல்லி போவதை நினைத்து நினைத்து தான் கவலை பட்டு கொண்டிருக்கிறாள்.
‘ஏற்கனவே ஒட்டி பிறந்தவங்க மாதிரி இவனுங்க ரெண்டு பேரையும் பிரிக்கவே முடியலை. இதுல இந்த அருந்ததி பொண்ணு வேற இவனுங்க கூட ஒட்டிக்கிச்சு’ என்று கருணாவின் பாட்டி தான் அங்கலாய்த்து கொண்டிருப்பார்.
“பாப்பா, இன்னிக்கு தாத்தா உனக்கு பிடிச்ச சக்கரை பொங்கல் செஞ்சிருக்கேன், சாப்பிட்டு பாரு” என்றார் வேதாச்சலம்.
“ஒரு பாக்ஸ்ல போட்டு கொடுங்க தாத்தா. நான் போய் அண்ணாஸ்களுக்கு கொடுத்துட்டு வரேன்”
“அது எல்லாம் கொடுக்கலாம்.. அஞ்சு நிமிஷத்துல இப்ப நீ கிளம்பி வரணும் என்றான்” அவி கரார் குரலில்.
“போ அண்ணா..” என்று கூறினாலும் ரூமிற்குள் சென்றாள் தயாராக.
அவள் வருவதற்குள், அவினாஷ் இரு வீட்டுக்கும் சென்று சர்க்கரை பொங்கலை கொடுத்து வந்திருந்தான்.
தலை முடியை தளர அழகாக பின்னலிட்டுருந்தாள் அருந்ததி. அப்படியே தமயந்தியின் அச்சு தான் அருந்ததி.
வாஞ்சையாக தங்கையை பார்த்துக்கொண்டே காலை உணவை அவளுக்கு ஊட்டிவிட்டான்.
“இங்க பாரு பாப்பா.. வாழ்க்கையில பிரிவு எல்லாம் வரும் போகும். நம்பளை விட இது யாருக்கு தெரியும் சொல்லு”
“அண்ணா, நானே அண்ணாஸ் டெல்லி போறாங்கன்னு வருத்தத்துல இருந்தா நீ பாட்டுக்கு தத்துவம் சொல்ற. தத்துவம் எல்லாம் சொல்லாம ஜாலியா இருக்கிறது அண்ணாஸ் தான். அதான் அவங்க போறது நினச்சா கஷ்டமா இருக்கு“
“வாழ்க்கையில எல்லாரும் அடுத்தடுத்து கட்டத்துக்கு போகணும் தானே பாப்பா? அதை புரிஞ்சுகிற வயசு உனக்கு வந்தாச்சு”
“விடு அவி.. அவளே போக போக புரிஞ்சுப்பா “ என்று பேத்திக்கு ஆதரவாய் பேசினார் தாத்தா.
“தாத்தா எல்லா வேலையும் இழுத்து போட்டுக்க கூடாது. வேலை செய்யுற அம்மா வந்ததும் அவங்களை எல்லா வேலையும் பார்க்க சொல்லுங்க. நான் கிளம்புறேன். வா பாப்பா உன்னை நான் பஸ் ஸ்டாப்ல விட்டுட்டு போறேன்” என்று தாத்தாவிடம் விடைபெற்று தங்கையுடன் கிளம்பினான்.
இவர்கள் சென்றதும், தாத்தா வீரராகு தாத்தாவுடன் வாக்கிங் புறப்பட்டார். முருகானந்தம் தாத்தாவும் இவர்களுடன் இணைந்து கொண்டார்.
“காலம் போன கடைசியில இந்த பெருசுங்களை பார்த்தியா சுமதி, எல்லாம் சேர்ந்து வாக்கிங்ன்ற பேர்ல அரட்டை கச்சேரிக்கு கிளம்பியாச்சு” என்று மருமகளிடம் ஜாடை பேசினார் பாட்டி.
“ஏம்ப்பா வீரராகு, நீ பெரிய ஆள் தான்யா, தங்கச்சிக்கூட அம்பது வருஷம் சேர்ந்து குப்பை கொட்டிட்டு இருக்கியே.. அதுக்கே உனக்கு தனியா பாராட்டு விழா நடத்தலாம்” என்றார் முருகானந்தம் பாட்டிக்கு கேட்குமாறு.
“பாராட்டு விழா நடத்திட்டாலும்…” என்று நொடித்துவிட்டு உள்ளே சென்றுவிட்டார் பாட்டி.
மூன்று தாத்தாக்களின் சிரிப்பு ஒலியும் அவரை பின் தொடர்ந்தது.
——————————-
error: Content is protected !!