போன வாரம் ஒருத்தன் வந்து மிளகாய் பஜ்ஜி சேமியா கேசரி சாப்பிட்டு என்னை பிடிக்கலைன்னு சொன்னானே அவனை கேட்டீங்களா ஏன் பிடிக்கலைன்னு? பதிலுக்கு பதில் நொடி நேரம் கூட தாமதிக்காமல் வந்து விழுந்தது.
Advertisement
சுப்பு முதலில் வாயை குறை… அதட்டினாள் தேவிகா.
அக்கா ப்ளீஸ் கோடி முறை சொல்லிட்டேன் சுப்புன்னு கூப்பிடாத சுப்ரஜான்னு கூப்பிடு!
ஏன் பேருக்கு என்ன? மன்னர் மன்னன் எவ்வளவு அழகா இருக்கு. புலகாங்கிதம் அடைந்தார்.
ரொம்ப தான்… கொணட்டினாள்.
சுபிம்மா…. மென்மையாய் அழைத்துக் கொண்டே கிருஷ்ணா வந்தான்.
ஆன்… அண்ணா…. கலக்கமாய் பார்த்தாள்.
அவங்க சைடு ஓகே சொல்லிட்டாங்க! நீ என்னம்மா சொல்ற?
அட எவன்டா இவன்… இவகிட்ட கருத்து கேட்டுகிட்டு. கொஞ்சம் குழஞ்சு பேசினா உன் தலையில் மிளகா அரைச்சுடுவா. மகனை அதட்டினார்.
மகளை பெற்ற மகாராசிக்கு தெரியாதா அவள் ஆள் எப்படி பேச்சு எப்படி என்று.
அக்கா உன்னை மாமா கூப்பிடறாங்க பாரு… நவமணியை ஒரு பெண் அழைக்க,பெரியவங்க நாங்களே பேசி முடிவு பண்ணுறோம் நீ பதவிசா இரு! ஏதாவது கலாட்டா பண்ணி வைச்ச தோசைக் கரண்டியை பழுக்க காய்ச்சி வாயில் வச்சிடுவேன்!மிரட்டிவிட்டு அவர் உள்ளே போய்விட்டார்.
என்ன தேவி சொல்றா? கிருஷ்ணா கவலை கொண்டான்.
அண்ணா அந்தாளு நிஜமாவே போலீஸ் தானா? அண்ணனிடம் கேட்டே விட்டாள்.
ஏய்… வாயாடி! என்ன பேச்சு இது ஆளு கீளுன்னு…கண்டனமாய் முறைத்தாள் தேவிகா.
அம்பது கிலோ இருப்பாருங்கிற? முக்கிய சந்தேகத்தை கேட்டாள்.
நீ அம்பத்து நாலா? தேவிகா அடக்கமாட்டாமல் சிரித்து விட்டாள்.
எனக்கு லக்கியா இருக்கும்னு நினைக்கிறேன்… தலையை கோதி சுகமாய் தென்றல் காற்றை உள்ளிழுத்தான்.
பாரேன் மச்சிக்கு பேச்செல்லாம் ஒரு தினுசா வருது! சிரித்தான் சசிதரன்.
சசி நிஜமாவே எனக்கு பிடிச்சிருக்குடா அவங்க சைடு ஓகே சொன்னா பேசி முடிக்கிற ஐடியா தான்.
பொண்ணு நல்ல அழகோ?
ம்கூம் நல்ல முக லட்சணமா இருக்காங்க?
அதை தானேடா நானும் கேட்டேன்?சசி சந்தேகம் கேட்டான்.
ம்க்கூம் நீ கேட்டது வேற! லட்சணமா இருந்தா தான் அழகா இருக்காங்கன்னு அர்த்தம்.கண்மூடி சிரித்தான்.
அடேய் என்னடா பொண்ணு பார்த்த உடனே கோனார் தமிழுரை நோட்ஸ் போடற…. சிரித்து விட்டான் சசி.
சும்மா…. வெட்கம் வந்து தடுமாறி நின்றுவிட்டான்.
கிங்கு… நீயாடா இது? சாய்க்க முடியாத மலைன்னு நினைச்சுகிட்டு இருக்கோம் நீ மொத்தமா சரிஞ்சு கிடக்குற.
போடா….! வேறு வார்த்தை அவனுக்கு வரவில்லை. மனம் முழுதும் ஒரு குறுகுறுப்பு. நண்பனின் கேலி பேச்சு அவனை அவ்வளவு சிலிர்க்க வைத்தது.
சரிடா நான் போய் ஆக வேண்டிய வேலையை பார்க்குறேன்.
என்னடா வேலை? புரியாமல் நின்றான் மன்னர் மன்னன்.
என்ன போலீசோ நீ! நான் துணை மாப்பிள்ளைடா எனக்கு சபாரி கோட் சூட்னு வாங்கி தைக்க கொடுக்கணுமில்ல அதை சொன்னேன்.
நண்பனின் அதிகப்படியான கேலியில் சிலிர்த்து விட்டான் மன்னர் மன்னன்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் முடியனூர் என்ற கிராமத்தை சார்ந்த பூமாலை, பாப்பாத்தி தம்பதிகளுக்கு நான்கு ஆண் வாரிசுகள். ஜெயராமன், சரவணன்,எழிலரசன், மன்னர் மன்னன்.
மூத்தவன் ஜெயராமன் மென்பொருள் துறையில் பணி புரிகிறான். அவன் மனைவி சங்கீதா,ஆண் ஒன்று பெண் ஒன்று என அழகான வாழ்க்கை. குடும்பத்துடன் பெங்களுரில் வசிக்கிறான்.
அடுத்த மகன் சரவணன். கல்பாக்கம் அணுமின்னிலையத்தில் உயர்ந்த பதவியில் இருக்கிறான். அவன் மனைவி அஞ்சலி, ஒரு ஆண் குழந்தை அவர்களுக்கு.
அடுத்து எழிலரசன் கோவையில் தோட்டக்கலை துறையில் பணிபுரிகிறான். அவன் மனைவி தீபா. அவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது இன்னும் வாரிசு வரவில்லை.
கடைசி மகன் தான் மன்னர் மன்னன் காவல்துறையில் கான்ஸ்டபிள்.
மன்னனர் மன்னனுக்கு பெண் பார்க்க பெரம்பலூர் மாவட்டம் குரும்பூர் என்ற ஊருக்கு வந்திருக்கின்றனர்.
இங்கே பூவராகன் நவமணி தம்பதிகளுக்கு மூன்று வாரிசுகள். மூத்தப் பெண் தேவிகா.M. SC,Mphil படித்தவள் அவளுக்கு அமைந்த கணவன் சௌந்தர் ராஜன் அரசு கலைகல்லூரியில் வேதியியல் துறை உதவிப் பேராசிரியர். தேவிகாவும் திருச்சி காவிரி கலைகல்லூரியில் விரிவுரையாளர். தனியார் கல்லூரி என்றாலும் நல்ல ஊதியம் பெறுகிறாள்.
அடுத்து கிருஷ்ணா. அவன் MCA பட்டதாரி.கேம்பஸ் இண்டர்வியுவில் பிளேஸ்மெண்ட் கிடைத்து சென்னைக்கு சென்றான். ஒன்றுவிட்ட அத்தை மகள் சுகன்யாவை அவனுக்கு மணமுடித்தனர். சுகன்யாவும் BE படித்தவள் TCS ல் வேலை பார்க்கிறாள்.
குக்கிராமம்,விவசாய குடும்பம் என்றாலும் பூவராகன் பிள்ளைகள் படிப்பில் அதிக கவனம் செலுத்தினார். அவர் எவ்வளவு கவனம் செலுத்தியும் சுப்பரஜாவிற்கு மட்டும் படிப்பு கொஞ்சம் சண்டிதனம் செய்தது.
பெரம்பலூரில் உள்ள புகழ் பெற்ற விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் தான் படிக்க வைத்தார். படிப்பில் அவள் சுமார் கூட இல்லை அதுக்கு கீழே….
சுப்ரஜா நெட்டையும் அல்லாத குட்டையும் அல்லாத திட்டமான உயரம். ஒல்லியும் அல்லாத பூசணிக்காயும் அல்லாத திட்டமான உடல்வாகு கொண்டவள். பளிச்சென்ற நிறம். அவள் அழகுக்கு முக்கிய காரணமே கண்கள் தான். அவ்வளவு அழகிய கண்கள். நெளி நெளியான அடர்ந்த கேசம் கூடுதல் அழகு.
புரோக்கர் மூலம் வந்த வரன் தான் சுப்ரஜா.
போட்டோ பார்த்த உடனே மன்னர் மன்னனுக்கு கொஞ்சம் தயக்கம் தான். பொண்ணு அழகா இருக்கா நம்மை ஓகே சொல்வாளா?
மன்னர் மன்னன் மாநிறம். கொஞ்சம் ஒல்லி போல தெரிவான்.
பிடித்தால் ஓகே சொல்லட்டும் இல்லை என்றால் வேறு இடம் பார்க்கலாம் என்று திடமாகதான் வந்தான் இங்கே அவள் பேசிய பேச்சில் அவளை அவ்வளவு பிடித்துவிட்டது.
இப்போது அவள் ஓகே சொல்ல வேண்டுமே என்ற தவிப்பு.
——–தொடரும்——–
வணக்கம் தோழமைகளே எல்லோரும் நலம் என்று நம்புகிறேன். நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி 💕💞
இது ஒரு ஃபீல் குட் கதை. எளிய கதை யதார்த்த நடை. ரொம்ப சின்ன கதை.படித்து பாருங்க ஏதாவது மிஸ் ஆனா உங்களின் மேலான கருத்தை எனக்கு மறக்காம சொல்லுங்க 💞💕 உங்களின் ஊக்கமே எனக்கு வெகுமதி.