Skip to content
Post Views: 3,967
எங்க பொண்ணுக்கு மாப்பிள்ளையை பிடிச்சிருக்கு. நீங்க ஏதாவது பேசணும்னா பேசிப்பாருங்க என்றான் கிருஷ்ணா.
குறுஞ்சிரிப்புடன் எழுந்து கொண்டான் மன்னர் மன்னன்.
மாப்பிள்ளை பேச வராரு.ஏடா கூடமா ஏதாவது பேசி வச்ச மவளே வாயை கிழிச்சுடுவேன் மகளை கிசுகிசுப்பாய் மிரட்டிவிட்டு போனார் நவமணி.
இந்த ரூம்… கை காட்டினாள் தேவிகா.
Advertisement
கொஞ்சம் பதட்டத்துடன் எச்சில் விழுங்கிக் கொண்டே உள்ளே நுழைந்தான்.
தோரணையாய் கால் மீது கால் போட்டு தலையணையை மடியில் வைத்து அதன் மீது மொபைலை வைத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவன் வந்தது அவளுக்கு தெரியவில்லையா என்ன…? வேண்டுமென்றே அவள் கண்டுகொள்ளவில்லை.
Advertisement
அவள் சேட்டையை புரிந்தவன்
Advertisement
ம்க்கும்… சத்தமாய் கணைத்தான்.
விழி உயர்த்தி பார்த்தவள் எழுந்து நின்றுவிட்டாள்.
அவன் எதுவும் பேசவில்லை. எதிரில் கையை கட்டிக் கொண்டு நின்றான். அவளும் எதுவும் பேசவில்லை.
Advertisement
இருவரும் ஒருவரை ஒருவர் ஓரவிழியால் அளவிட்டுக் கொண்டிருந்தனர்.
அவன் உயரத்தையும் உருவத்தையும் ஒவ்வொரு இன்ச்சாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவனும் அவள் தோள் வளைவில் வழிந்த குண்டுமல்லி, காதில் ஆடும் சிறிய ஜிமிக்கி, லேசாக கன்னத்தில் பூத்த வியர்வை, கருகருவென்று இருந்த அவள் புருவம், தாழ்வாயில் தெரிந்த லேசான தழும்பு என்று பார்த்துக் கொண்டு தான் இருந்தான்.
அவன் நேர்கொண்டு நிதானமாய் பார்க்க பார்க்க அவளுக்கு நடுக்கம் கண்டுவிட்டது.
பட்ரோஸ் வண்ண புடவையில் கிளிப் பச்சை வண்ண மெல்லிய பார்டர் அவளுக்கு அவ்வளவு பாந்தமாய் பொருந்தி இருந்தது.
ஆழ்ந்து ரசித்தான் பூ வண்ண புடவை உடுத்திய பூவையை.
என்ன தான் துடுக்காய் பேசுபவள் என்றாலும் இந்த நிமிடம் அவளால் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. அப்படி ஒரு உறிஞ்சும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.
ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவன் பேசுவதாக இல்லை. ஓ… இது தான் பெண் பார்ப்பதா? இப்படி நேருக்கு நேர் நின்று வளைத்து வளைத்து பார்க்கிறானே…
இன்னும் அவன் எதுவும் பேசவில்லை.
அவனாக எதுவும் கேட்காமல் தானும் எதுவும் பேசப்போவதில்லை என்று அவளும் இறுமாப்பாக கைகட்டிக்கொண்டு நின்றாள்.
சிரிப்பை அதக்கிக் கொண்டு அவ்வளவு தான் முடிந்தது என்பது போல் அவன் நடக்க தொடங்கி விட்டான்.
“ஹலோ”அவள் காண்டாகி விட்டாள்.
அவன் கண்டுகொள்ளாது மெல்ல அடி எடுத்து வைத்தான்.
ஹலோ போலீஸ்கார் என்றாள் மீண்டும் எரிச்சலுடன்.
“என்னையா? போனில் பேசறீங்கன்னு நினைத்தேன்.” சாதாரணமாக திரும்பி நின்று கேட்டான்.
ஓவர் பில்டப் போல… உதட்டை பிதுக்கினாள்.
என்ன பில்டப்? சற்று நெருங்கி வந்து நின்றான்.
அதிகப்படியாய் வியர்க்க தொடங்கி விட்டது அவளுக்கு. திடீரென்று நா வறண்டு விட்டது.
என்ன என்பதாய் புருவத்தை வில்லாய் வளைத்து கேட்டான்.
எச்சில் விழுங்கி நிதானித்துக் கொண்டவள் ஒண்ணுமில்ல…. இது குக்கிராமம், எங்க குடும்பம் ரொம்ப வசதியான குடும்பமெல்லாம் இல்லை. பெருசா சீர் எல்லாம் செய்ய மாட்டாங்க. நான் ஜஸ்ட்
B. COM தான். தட்டு தடுமாறி இப்போ தான் க்ளியர் பண்ணினேன்.
பிடிக்கலைனா வெளிப்படையா சொல்லிடலாம். நாங்க தவறா நினைக்க மாட்டோம். தெள்ளதெளிவாக அவன் முகம் பார்த்தே கூறினாள். பிடிக்க வில்லை என்று சொல்லிவிடேன் என்ற மன்றாடல் அப்பட்டமாய் தெரிந்தது அவள் பேச்சிலும் விழி வீச்சிலும்.
அவளை அதிராமல் பார்த்தவன் “உனக்கு பிடிச்சிருக்குனா பிடிச்சிருக்குன்னு சொல்லு. பிடிக்கலைனாலும் பிடிச்சிருக்குன்னு சொல்லு!” நானும் MA ஹிஸ்ட்ரி தான் முடிச்சிருக்கேன். ஆனா அரியர் இல்லாம பாஸ் பண்ணிட்டேன் லேசான ஒரு புன்னகையுடன் நடக்க தொடங்கிவிட்டான்.
“இந்த போலீசுக்கு திமிரை பார்த்தியா?” என்பதை போல் பார்த்து நின்றாள். அவளால் வேறென்ன செய்ய முடியும்?
நான்கு அடி எடுத்து வைத்தவன் மெல்ல திரும்பி அவளை பார்த்து மீசையை நீவிக் கொண்டு கண்ணடித்து சிரித்தான்.
“அடப்பாவி போலீசு “அவள் கடு கடுவென முறைக்க… எனக்கு பிடிச்சிருக்கு. ரொம்ப பிடிச்சிருக்கு…. கண்ணை மூடித்திறந்துவிட்டு போனான்.
அவளுக்கு கோபமான கோபம்… என்ன இவன் அரை லூசா? போலீஸ் என்ற திமிரா? கலங்கி நின்றுவிட்டாள்.
“———————“
எனக்கு பொண்ணு பிடித்திருக்கு என்றான் பெரியவர்களிடம்.
மற்றதை பேசிடலாமே என்றார் மாப்பிள்ளை உடன் வந்த பெரியவர்.
பெரியப்பா ஒன்னும் பேச வேண்டாம் என்றான் அவரிடம் கிசுகிசுப்பாக.
இல்லப்பா முறைன்னு ஒன்னு இருக்குள்ள… அந்த பெரியவர் வெள்ளை மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டார்.
பெரியப்பா ப்ளீஸ்… ஒரு முறையும் பேச வேண்டாம். பொண்ணு கேட்டு தான் வந்திருக்கோம் பிச்சை கேட்டு வரல… கடுமையாய் பேசினான்.
வீட்டில் பெற்றவர்களிடம் சொல்லி தான் அழைத்து வந்தான். ஆனால் இங்கே பெரியவர் ஆரம்பித்து விட்டார்.
கட் அன் ரைட்டா சபையில் வச்சு பேசிடறது தான் நல்லது என்றார் பெண் வீட்டு சொந்தக்காரர் ஒருவர்.
மூத்த பொண்ணுக்கு இருபத்தஞ்சு போட்டோம் சின்ன பொண்ணுக்கும் அவ்வளவு செய்துடுவோம் என்றார் பூவராகவன்.
மன்னர் மன்னனுக்கு சங்கடமாய் இருந்தது.ஆடுமாடு வாங்க சந்தைக்கா வந்திருக்கோம்?
வாழ்வில் துணையாய் சுக துக்கங்களில் இணைந்து பயணிக்க பெண் தானே கேட்டு வந்திருக்கிறோம்.
ஏனோ அவன் முகத்தில் விருப்பமின்மை பளிச்சிட்டது.
மன்னரு இது ஒரு சம்பிரதாய பேச்சு அவ்வளவு தான் என்றார் உறவுக்கார அத்தை ஒருவர்.
நல்ல விதமாய் பேச்சு வார்த்தை முடிந்து விட்டது.
மாப்பிள்ளை வீட்டு தரப்பில் எல்லாம் ஓகே. பெண் வீட்டார் போய் மாப்பிள்ளை வீடு பார்த்து அவர்களுக்கும் பரிபூரண சம்மதம் எனில் நிச்சயம் செய்து கொள்வது என்று பேசிமுடித்தனர்.
“——————“
சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடுமா என்ன? சுப்ரஜா எவ்வளவு முரண்டியும் மன்னர் மன்னனுடனான அவள் திருமணம் உறுதி செய்யப்பட்டு விட்டது.
மாப்பிள்ளை வீடு சென்று பார்த்து வந்தனர். முடியனூர், கள்ளக்குறிச்சியில் இருந்து ஒன்பதாவது கிலோமீட்டரில் அமைந்துள்ள நல்ல நாகரிக வளர்ச்சியடைந்த பெரிய கிராமம். மாப்பிள்ளை வீடு விவசாய குடும்பம் தான். மாப்பிள்ளையின் உடன்பிறந்தவர்கள் அனைவரும் மெத்த படித்து பெரிய பணியில் இருக்கின்றனர். பூவராகனுக்கு பரம திருப்தி.
இந்த இடம் தோதா வருமா? தயக்கமாய் கணவரிடம் கேட்டார் நவமணி.
ஏன் வராது?பையன் நல்ல விதமா இருக்காரு. அதைவிட வேறென்ன முக்கியம்?
இல்ல போலீஸ் உத்தியோக்கத்துல இருக்கிறவங்க கொஞ்சம் அப்படி இப்படி…
எல்லா போலீசும் அப்படி இப்படி இருக்குறது இல்லை.
நம்ம சுபி பத்தி தெரிந்து அவளுக்கு ஏத்த இடமா தேடி பிடித்த மாப்பிள்ளை இது என்றார் பூவராகன்.
பெரிய குடும்பமா இருக்கே இவ தாக்கு பிடிப்பாளா? பெற்றவருக்கே உரிய கவலை அவருக்கு.
தேவையில்லாம புலம்பி சுபியை பயமுறுத்தி வைக்காத மணி. மாப்பிள்ளைக்கு மூனு அண்ணனுங்கதான் ஆனா ஆளுக்கு ஒரு திக்குல இருக்காங்க. நல்லது கெட்டதுக்கு வந்து போவாங்க அவ்வளவு தானே… அவர் சுலபமாய் சொன்னார்.
நான் புலம்புறேனா? ஏன் சொல்ல மாட்டிங்க? பொட்ட புள்ளைய எப்படி வளக்கணுமோ அப்படி வளர்த்திருக்கணும். என்ன பெத்த அம்மா வந்து பொறந்திருக்காங்கன்னு செல்லம் கொஞ்சி அவளை சோம்பேறியாக்கி இப்போ போற இடத்துல எப்படி தாக்குப்பிடிப்பாளோன்னு புலம்ப வேண்டியிருக்கு. நவமணி புலம்பி மாய்ந்தார்.
எம்பொண்ணுகிட்ட என்ன குறையை கண்ட இவ்வளவு புலம்புற? பூவராகன் சாதாரணமாய் கேட்டார்.
என்ன குறையா? மூத்தது
ரெண்டும் நல்லாபடிச்சு கைநிறைய சம்பாதிக்குதுங்க கண் நிறைஞ்ச வாழ்க்கை வாழுதுங்க. இந்த சின்ன கழுதை அலட்டிக்காம படிச்சு சுமாரா மார்க் வாங்கி சாதாரண டிகிரி வாங்கிட்டு நிக்குது.
மணி பல முறை சொல்லி இருக்கேன் “யாருக்கு என்ன வருமோ அதுதான் வரும்”. சுபிக்கு படிப்பு கொஞ்சம் கஷ்டம் அவ்வளவு தானே… செல்ல மகளை அவர் விட்டுக்கொடுக்கவில்லை.
கொஞ்சம் கஷ்டம் இல்லை ரொம்ப கஷ்டம்… ஆனா ஒன்னு அவ இப்படி அடாவடியா திரியறது சத்தியமா உங்களால தான்.கணவர் மீது மொத்த குற்றத்தையும் சுமத்தினார்.
நீ எல்லாம் ஒரு அம்மாவா? பொம்பள பிள்ளைங்க அம்மாவீட்டில் அப்படி தான்
அதிகாரமா செல்லம் கொஞ்சிட்டு இருப்பாங்க அதுக்காக போற இடத்துல பொறுப்பு வராதுனு அர்த்தம் ஆகிடுமா?
வரும் வரும்… உம்ம மவளுக்கு மூட்டை மூட்டையா வரும். என்ன ஒன்னு காபி கூட போட தெரியலை உங்க ஆத்தா என்னத்த சொல்லி கொடுத்து வளர்த்தான்னு மாமியாக்காரி பேசும்போது என்னை நடுவில் இழுக்காம இருக்கணும்.
பூவராகனுக்கு சிரிப்பு பொங்கிவிட்டது.
ஆம் சுப்ரஜா படிப்பில் தான் சுமார் என்றால் மற்ற வேலைகளில் கூட அவள் அலட்டிக்கொள்ளாத ராஜகுமாரி தான்.
சமையலில் அரைகுறை தான், ஆனால் வாயாடுவது, நக்கல் நையாண்டி எல்லாம் டன் கணக்கில் உண்டு.
அசராமல் டி வி பார்ப்பதில் அவள் கில்லாடி. சீரியல் பைத்தியமா என்றால் கண்டிப்பாக இல்லை கிரிக்கெட் பைத்தியம்.டாஸ் போடுவதில் தொடங்கி மேன் ஆப் த மேட்ச் அனவுன்ஸ் பண்ற வரை டிவி பார்க்கும் கிரிக்கெட் வெறி பிடித்த பைத்தியம்,
IPL சீசன் தொடங்கி விட்டால் போதும் சோறு தண்ணி கூட வேண்டாம் அவளுக்கு. தல வெறியள் அவள்.
அவ்வப்போது தெருவில் பசங்களோடு இறங்கி மலிங்கா பௌலிங் என்று மாங்காய் போடுவது உண்டு. ராகுல் டிராவிட்டுக்கு டஃப் கொடுக்கும் விதமாய் மட்டை போடுவதும் உண்டு.
தெருவில் விளையாடாதே என்று நவமணி கண்டித்தால் பெண்ணுரிமை பேசி அவர் வாயை அடக்கி வைத்து விடுவாள்.
கடைக்குட்டி செல்லம் என்ற வார்த்தைக்கு சரியான பொருத்தம் சுப்ரஜா என்கிற சுபி.
இப்படி பொறுப்பற்று விளையாட்டுதனமாய் வளர்ந்து நிற்கும் மகள் மீது பெற்றவருக்கு இருக்கும் நியாயமான பயம் தான் நவமணிக்கு.
நல்ல உத்தியோகத்தில் இருக்கும் மாப்பிள்ளை தேடும்போது பெண் என்ன படித்திருக்கிறாள்? வேலைக்கு போகிறாளா? என்று கேள்வி கணைகள் சுழன்று வந்தது.
ஒன்றரை ஆண்டுகளாய் மாப்பிள்ளை தேடுகின்றனர். இருபத்து இரண்டு முடிய இன்னும் மூன்று மாதமே இருக்கிறது. கடைசியாக வந்த வரன் தான் மன்னர் மன்னன். முதலில் பூவராகனுக்கு போலீஸ் மாப்பிள்ளை பிடிக்கவில்லை தான். மாப்பிள்ளையை பற்றி விசாரிக்கவும் அவருக்குள் மாற்றம் உண்டானது.
இந்த மாப்பிள்ளை தன் பெண்ணை கடைசிவரை விட்டுக்கொடுக்காமல் இழுத்து பிடித்து வாழ்ந்து விடுவான் என்ற நம்பிக்கை அவருக்கு.
ஜாதகம் பொருந்தி, வசதி வாய்ப்பு பிடித்து மாப்பிள்ளை பிடித்து எல்லாம் கைகூடி வரவே முடிவு செய்து ஒப்புக்கொடுத்துவிட்டார்.
“—————–“
கிருஷ்ணா கூட அவசரப்பட வேண்டாம் வேறு இடம் பார்க்கலாம் என்று சொன்னான்.
மாப்பிள்ளைக்கு இருபத்தொன்பது வயது நம்ம சுபிக்கு இருப்பதிரண்டே முடியல என்றும் சொல்லி பார்த்தான்.
வயசை காரணம் காட்டாதே என்று மகனை கண்டித்தார் பூவராகன்.
அப்பா சுபிக்கு போலீஸ்…. சங்கடமாய் இழுத்தாள் தேவிகா.
தேவி போலீஸ்னாலே மோசம்னு முடிவு பண்ணிடுவீங்களா? படிச்ச பிள்ளை நீ இப்படி பேசலாமா?
இல்லப்பா…. சுபி…
சுபி சின்ன பொண்ணு! அவளுக்கு என்ன தெரியும்?
தீர்க்கமா விசாரிக்காம கண்ணை மூடிக்கிட்டு அப்பா ஒப்புக் கொடுத்துடுவேனா? அதட்டலாய் கேட்டார்.
ஏனோ அவர் உள்ளுணர்வு சொன்னது இவனே என் இளைய குமாரிக்கு ஏற்ற ராஜகுமாரன் என்று.
———-தொடரும்———
error: Content is protected !!