ம கச நி தா ம கச’..என சற்று தொலைவில் இருக்கும் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலயத்திலிருந்து ஒலித்த அதிமதுர குரலில் மீண்டும் லயித்தது அவனின் மனம்..தேனை மட்டுமே உண்டு வாழ்வாளோ என ஐயப்படுமளவிற்கு அதிகாலை மார்கழி பனியில் இனிமையான குரலில் ஈசனையே கட்டி போடும் மங்கையை திரும்பவும் காண துடித்த இதயத்தை மெதுவாய் நீவிக்கொண்டவன் தன் ஓட்டத்தை தொடர்ந்தான்.
அவன் யுவனேஷ்வரன்..செங்கல்பட்டு மாவட்டம் தாமஸ் மலை ஊராட்சியில் அமைந்துள்ள பொழிச்சலூர் கிராம ஊராட்சியின் மாவட்ட ஆட்சியர்..அங்குள்ள கிராமத்து மக்கள் அனைவரிடமும் நன்மதிப்பை பெற்று அவர்களின் குறைகளை விரைவில் தீர்த்து வைப்பவன்..கலெக்டர் எனும் மமதையின்றி சாதாரணமாய் பழகுபவன்..தந்தை மோகன்ராம் கிராம பஞ்சாயத்து தாசில்தாராய் இருந்து ஓய்வு பெற்றவர், தாய் மீரா இல்லத்தரசி மற்றும் அவ்வூரின் மகளிர் மன்றத்தின் தலைவர்..ஒரே தங்கை லஷ்ணா எம்.பி.ஏ கல்லூரி மாணவி.
ஆறடிக்கும் சற்று குறைவான உயரம், எதிரிலிருபவர்களை நொடியில் கணிக்கும் தீட்சண்யனமான பார்வை, சம்பா கோதுமை நிறத்தில் கனிவான முகம் அளவான சிரிப்புடன் வலம் வருபவனை மீண்டும் ஓர் முறை பார்க்க தூண்டும் அழகனிவன்.
அழகோடு அறிவு கடமையை உயிர்மூச்சாய் நினைத்து செயலாற்றுபவனின் மனதை கொள்ளையடித்திருந்தாள் அந்த தேன்சிட்டு.
வீட்டை நெருங்கியதும் தோட்டத்தில் நீர் பாய்ச்சிக்கொண்டிருந்த தந்தையிடம் சிறு தலையசைப்பை தந்தவன் உள்ளே தன் அறைக்கு விரைந்தான்..குளித்து தயாராகி இள ஊதா நிற ஷர்ட், அடர் நீல நிற பேன்ட் என பார்மல் உடையில் தயாராகி வந்தான்..கம்பு தோசையும் காரச்சட்னி தேங்காய்சட்னியுடன் சாமை கிச்சடியும் பரிமாறினார் மீரா.
லஷ்ணா வரவும் அவளுக்கு மீரா தோசை வைக்கஅவள்..
“மேரா ஹீரா . இது என்ன தோசை பச்சை கலர் ல இருக்கு..?
நீ எப்போ இந்த ஹிந்தி, பிரெஞ்ச் எல்லாம் விட்டு என்னை அம்மா னு கூப்பிடறயோ அது வரைக்கும் தோசை கலர் கலரா தா சுடுவேன்..
மா…” என சிணுங்கியவளை..
“கம்பு தோசை உடம்புக்கு நல்லது சாப்பிடு..” என யுவன் சொல்ல அண்ணனை முறைத்தவள் தந்தையிடம் ஓட..
“இவளை..” என பின்னே விரைந்தார் மீரா..தந்தையை தாஜா செய்து ஒரு முட்டை தோசை அரை கம்பு தோசை என தன் உணவை முடித்து கல்லூரி கிளம்பினாள் லஷ்ணா..பலவித பாஷைகளை படிப்பதில் மிகுந்த ஆர்வமுள்ள மாணவி.
யுவனும் தன் அலுவலகத்திற்கு கிளம்பியதும் மோகனுக்கும் தனக்கும் தோசைகளை வைத்து மீரா..
“ஏங்க நம்ம தரகர் கிட்டேர்ந்து ஏதாவது தகவல் வந்ததா..?
இல்ல மீரா…
அடுத்த பிப் 14 வந்தா அவனுக்கு 26 முடிஞ்சு 27 வயசாக போகுது..இப்பயிருந்தே தேடினா தானே ங்க அடுத்த வருஷத்திலயாவது கல்யாணம் நடக்கும்..
நம்ம மருமக இனி பிறக்க போறதில்ல..இப்பல்லாம் சார் கோயிலை சுத்தியே ஜாகிங் போறாரு..வெயிட் பண்ணு அவனே சொல்வான்..
யாரு சதாசிவ குருக்கள் பொண்ணையா சொல்றீங்க..?..” என கண்களில் ஆர்வம் மின்ன கேட்ட மனைவியை சற்று அடக்கிய மோகன்..
“கன்பார்மா தெரியல, யுவியை அப்பப்ப காலையில கோயில் பக்கம் பார்த்ததா கேசவன் நேத்து என்க்கிட்ட சொன்னான்..பொறுமையாயிரு
அவங்க ஐயர் அதும் அவர் ரொம்ப குலம் கோத்ரம் பார்ப்பாரே
அதெல்லாம் அப்போ..யுவி மாதிரி ஒரு மாப்பிள்ளை கலெக்டர் னு சொல்லிக்க கசக்குமா அவருக்கு..?..
அப்ப நான் யுவிக்கிட்ட பேசட்டுமா..?
அவனே சொல்லட்டும் மீரா..இது அவன் லைப்..” என கை கழுவ எழுந்து சென்றார் மோகன்.
ஆலயத்தில் பாடி முடித்து ஆனந்தவல்லி தாயார் சமேத அகஸ்தீஸ்வரரை கண் குளிர தரிசித்துவிட்டு வந்த தேன்சிட்டு தன் தோப்பனாரிடம்..
“அப்பா நான் ஆத்துக்கு கிளம்பறேன்..ஸ்கூலுக்கு நாழியாறது..
இரு மஞ்சுமா..இந்த தேங்காய் எடுத்துண்டு போ..நிறைய இருக்கு..” என சிறு பையை கொடுக்க வாங்கி கொண்டு கிளம்பினாள் ஸ்வர்ணமஞ்சரி.
பன்னீர் பூ நிறத்தவள் ஐந்தரை அடி அஜந்தா ஓவியமாய் இடை வரை நீண்டிருந்த குழல் கட்டோடு ஆட அஞ்சனம் தீட்டிய விழிகள், முகத்தில் ஒற்றை வைரக்கல் மூக்குத்தி மின்ன கருந்திராட்சை நிற மென்பட்டில் தெய்வீக களையோடு அம்பிகையென வலம் வருபவளின் தோற்றத்தில் வீழ்ந்தால் எழுவது கடினமே.
தன் குரலை ஒருவன் பூஜிக்கிறான் என அறியாமல் இசையை சுவாசமென காதலித்து அனுதினமும் பெருமானை கொண்டாடும் இவள் அதே ஊரில் உள்ள அரசினர் பள்ளியில் முறையாக கர்னாடக சங்கீதம் பயிற்றுவிக்கும் ஆசிரியையாக பணிபுரிகிறாள்.
தாயை சிறுவயதில் இழந்து தன் தந்தைக்கு தாயான மகள்..ஊருக்குள் சொந்த பந்தங்கள் நிறைய இருந்தும் இவர்களை தவிர்க்கவும் எங்கள் பிறவிப்பயன் இறைவன் பணியே என தனித்து வாழும் தந்தை மகள் இவர்கள்.
**************
மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள செ.பீட்டர்ஸ் தேவாலயம் வண்ண விளக்குகளால் மின்ன வாயிலில் சிறு பதாகையில்
‘மெல்வின் ரிச்சர்ட் வெட்ஸ் ஜெஸிந்தா’ என பொன்னிற எழுத்துக்களால் பொறிக்கபட்டிருந்தது..குறுகிய காலத்தில் தன் தொழிலில் அசுர வளர்ச்சி அடைந்த அழகிய அசுரனின் திருமணம் அல்லவா? தொழிலை கற்றுத்தந்த குருவை மிஞ்சி இந்தியாவின் டாப் 10 தொழிலதிபர்களில் 3 ம் இடத்திலிருப்பவனின் இன்றைய சாதனை பல சோதனைகளை தாண்டி அவனின் சுய உழைப்பில் அடைந்த வெற்றியே.
12 வயதில் ஆக்ரோஷமாக மும்பை தெருவில் ஒருவனை புரட்டி எடுத்துக்கொண்டிருந்த சமயம் ஜெபராஜ் கண்ணில் பட்டான் மெல்வின்..உணவை திருடிவிட்டான் என வீண் பழி சுமத்திய ஒட்டல் நிர்வாகியை சிறுவனிவன் தாக்க இடையில் புகுந்து அவனை தன் பக்கம் இழுத்தவர் அவன் யார் என்ன என்று விசாரிக்க இறுக்கமான மௌனத்துடன் நிற்கவும் சன்ன சிரிப்புடன் அவனை தன்னுடன் அழைத்து சென்றார்.
ரோட்டோர சாட் கடையில் பாவ் பாஜி வாங்கி தந்து அவனை சாப்பிட சொல்ல ஒரு நொடி தயங்கியவன் மறுப்பின்றி வாங்கி கொண்டான்..அவனையே பார்த்திருந்தவரிடம்..
“இன்னும் ஒரு ப்ளேட் வாங்கி தாங்க என் தம்பிக்கு..நான் இப்ப என்ன செய்யனும்..? ” என பட்டென்று கேட்கவும் வாய் விட்டு சிரித்தவர்..
“உன் வீடு எங்க இருக்கு..?
பாந்த்ரா ஹவுசிங் போர்ட்கிட்ட..
சரி வா போகலாம்..” என அவனையும் தன் காரில் ஏற்றிக்கொண்டு கிளம்ப வழியில் தன்னை பற்றி சுருக்கமாக சொல்லி முடித்தான் மெல்வின்..பிறகு ஜெபராஜ்
“இனி அந்த வேலை வேண்டாம்..என் கூட இரு..உன்னையும் உன் தம்பியையும் நான் பார்த்துக்குறேன்” என உறுதியளித்தார்.
ஜெபராஜிற்கு சொந்தமாக சிறு டிபார்ட்மென்டல் ஸ்டோர் இருந்தது..அங்கு எடுபிடியாக சேர்ந்த மெல்வின் தன் தம்பி மார்டினை ராஜின் உதவியுடன் பள்ளியில் சேர்த்து விட்டான்..அன்று ஆரம்பித்த ஓட்டம் படி படியாக முன்னேறி இன்று மும்பையில் அவனுக்கென பல கிளைகளுடன் செயல்பட்டு வரும் பல்பொருள் அங்காடிகள், வாரத்தில் 3 நாட்கள் மும்பை டு கோவா பயணிக்கும் ஒரு சொகுசு கப்பல் என்று தன்னை நிலைபடுத்திக்கொண்டான் மெல்வின்..வாழ்க்கையில் இழந்த இழப்புகளும் பட்ட வேதனைகளையும் மறக்க இன்று வரை நில்லாது ஓடிக்கொண்டிருக்கிறான்.
கையில் காசில்லாமல் நின்ற நொடியை மறக்காது அனுபவமற்ற துறைகளிலும் முதலீடு செய்து தக்க வல்லுநர்களை வைத்து சமாளிக்கும் திறன் கொண்டவனின் கை பட்ட இடமெல்லாம் பொன்னாய் மாற பரம்பரை பரம்பரையாக உட்கார்ந்து சாப்பிட்டாலும் தீராது எனும் அளவில் செல்வம் சேர்த்தாலும் தாகம் தீரவில்லை இந்த அசுரனுக்கு..இந்த அரக்கனுக்கு இன்னொரு முகமும் உண்டு..அதை அறிந்தவன் அவனின் ஆஸ்தான பி.ஏ ரிஷி மட்டுமே..செஞ்சோற்று கடனின் முழு உருவம்..மெல்வின் நினைப்பதை அடுத்த சில நிமிடங்களில் செயலாற்றுபவன்.
தன் குருவின் ஆசைப்படியே அவர் மகளை மணக்க தயாரானான் மெல்வின்..அடர் நீலநிற சூட்டில் ஆறடி உயரத்தில் கருநீல மாயக்கண்ணனாய் வேட்டையாடும் வேங்கை விழிகளுடன் கறுப்பு நிற ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரில் இறங்கியவனை பின்தொடர்ந்தான் ரிஷி..மெய்காவலர்கள் வாயிலில் நின்று வழிவிட சிறு இடைவெளியில் வந்த வெள்ளை நிற ஜாக்குவார் ஐ பேஸ்( I pace) காரில் தன் மகள் ஜெஸிந்தாவுடன் இறங்கினார் ஜெபராஜ்..மெல்வினை நெருங்கி அவனை அணைத்து விடுவிக்க அவர் முதுகில் ஆதுரமாய் தட்டியவன் மணமகளின் கரத்தை பற்றிக்கொண்டு தேவாலயத்தில் நுழைந்தான்.
இரு மனம் இணையும் பொக்கிஷமான தருணமே திருமணம் என்றிருக்க கடமைக்காக இல்லறத்தில் அடி எடுத்து வைப்பவர்களை போல எனக்கென்ன என இருவரும் இருந்தனர்..வெள்ளை நிற நீள கவுனில் முகம் மறைக்கபட விரும்பாத அணிகலன்கள் பூண்டு வாழ்க்கையில் முதல் முறை தந்தைக்காக தலை குனிந்து நடந்து வருபவளை கண்டு மேரி மாதாவே பெரு நகை புரிந்தார்.
மணமக்களை ஆராய்ந்த ஜெபராஜ் இரு வாரங்களுக்கு முன் நடந்ததை நினைவு கூர்ந்தார்..தன் கண் முன்னே வளர்ந்தவன் அன்று போலவே இன்றும் விசுவாசமாய் பாசம் குறையாது கிட்டத்தட்ட மகனாகவே மாறிவிட்டவனுக்கு தன் அடங்காத மகளை மணமுடிப்பதே லட்சியமாய் கொண்டிருந்தார் ஜெபராஜ்..சராசரி பெண்களை போல இல்லாமல் ஒரே மகள் என செல்லம் கொடுத்து கெடுத்து விட்டது அவள் பாதை மாறியதற்கு காரணம் என அறியாமல் மெல்வினிடம் மகளை பற்றி சொல்லி அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக்கொடு என வேண்டினார்..
விடாது பயணிக்கும் அவனுக்குமே ஒரு ஓய்வு தேவைபட்டதால் தன் மானசீக குருவின் மகளின் குணமறிந்தும் அவளுக்கு பிடித்தாலொழிய அவளை மணமுடிக்க தயார் எனவும் எக்காரணத்தை கொண்டும் அவளை கட்டாயப்படுத்த வேண்டாம் என்றிருந்தான் மெல்வின்.
மகளை நம்பிக்கையான ஒருவனின் கைகளில் ஒப்படைத்தால் போதும் அவன் பார்த்துக்கொள்வான் என நினைத்து அவனிடம் ஜெஸிக்கு முழு சம்மதம் என பொய்யை சொல்லி தன் மகளிடம்..
“ஜெஸி பர்ஸ்ட் டைம் டாடிக்காக மெல்வினை மேரேஜ் பண்ணிக்க ஓகே சொல்லு மா..
சாரி டாட்…என்னால முடியாது..
வாழ்க்கை ஒரு தடவை தான்..அதை நல்லவிதமா அமைச்சுக்கறது நம்ம கையில இருக்கு..சுய ஒழுக்கம் தனி மனிதனுக்கு ரொம்ப முக்கியம் ஜெஸி..
உங்க பொண்ணு உங்களை மாதிரி தா இருப்பா..
ஜெஸி..” என ஜெபராஜ் ஆத்திரத்தில் கத்தவும் தன் காதை விரல் விட்டு நீவிக்கொண்டவள்..
“எதுக்கு இப்படி சீனை போடுறீங்க..?
நான் டெய்சி ஆன்டியை சின்ன வீடா வச்சிருக்கேன் னு தெரிஞ்சதிலிருந்து தானே இப்படி தறி கெட்டு போய்ட்ட..உன்னை அப்படியே விடமுடியாது..நீ ஒத்துக்கலை னா நீ ஆசையா சேவை செய்ற அந்த காப்பகத்தை..
அப்பா..” என அதிர்ச்சியில் மகள் விழி விரிக்க..ராஜ்..
“என்னை கொலைகாரனாக்கிடாதே..” என்று கூறிவிட்டு சென்றார்..மகளின் கோபம் அறிந்தாலும் போக போக மெல்வினை புரிந்து கொள்வாள் என கலங்கிய கண்களை துடைத்துக்கொண்டு தன்னிலை மீண்டார் ஜெபராஜ்..
சடங்குகள் முடிய பாதிரியார் மணமக்களை ஆசிர்வதித்து அவர்களிடம் மோதிரங்களை கொடுத்து சபையிடம்..
“எனக்கு அப்ஜெக்க்ஷன் இருக்கு பாதர்..” என்ற குரலில் அனைவரும் வாயிலை பார்க்க, தோளில் 3 வயது பெண்குழந்தையுடன் கண்களில் நீர் திரள பரிதாபமாய் ஜெஸிந்தாவையே பார்த்து நின்றான் அவன்..