மாப்பிள்ளைக்கு நாங்க நகை, துணி எல்லாம் வாங்கணும் என்றார் பூவராகன்.
அம்மா நான் போய் பார்க்கிறேன். நீங்க இங்கே என்னென்ன வாங்கணும்னு பாருங்க என்றான்.
கோட் சூட்டா, சபாரியா என்றார் பூவராகன்.
இல்லை பேண்ட்,ஷர்ட் பார்ப்போம் என்றான்.
என்ன தம்பி நீங்க? இப்போல்லாம் கோட் சூட் தான் போடறாங்க என்றார்.
இல்ல மாமா எனக்கு பேண்ட் ஷர்ட் போதும் என்றவனை ஒரு தினுசாக பார்த்து வைத்தாள் சுப்ரஜா.
மிக குறைந்த விலையிலும் இல்லாமல் பெரிய பிராண்ட் என்றும் போகாமல் அழகிய இளம் நீள வண்ணத்தில் மெல்லிய கருப்பு கோடு போட்ட முழுக்கை சட்டை தெரிவு செய்து அதற்கு எற்றார் போல் கருநீலத்தில் பேண்ட் வாங்கிக் கொண்டான். மூவயிரத்து எழுநூறுக்குள் முடித்துக் கொண்டான்.
வேற ஏதாவது பாருங்களேன் என்றாள் தேவிகா.
அது தான் வாங்கிட்டேனே என்றான்.
என்ன ஜுவல் வாங்கப் போறீங்க என்றான் வருங்கால மாமனாரிடம்.
கழுத்துக்கு ரெண்டு பவுன் செயின் கைக்கு நாலு பவுன் பிரெஸ்லலெட் வாங்கணும் என்றார்.
கழுத்துக்கு நாலு பவுன் லாங் செயினா வாங்கிடுங்க. ரெண்டு பவுன்ல பிரெஸ்லெட் வாங்கிடுங்க என்று அங்கே பேசிவிட்டான்.
என்ன மனுஷன் இவன் என்று நொந்து விட்டாள் சுப்ரஜா.
உனக்கு என்ன நகை வாங்கணும் என்றான் சுபியிடம்.
அவள் பதில் சொல்லாது நிற்க… உங்க இஷ்டம் தம்பி என்றார் நவமணி.
வளையல், நெக்லஸ், செயின் என்ன வாங்கட்டும் என்றான் மறுபடி அவளை பார்த்து.
நீங்களா பார்த்து ஏதாவது வாங்கிடுங்க என்றார் பூவராகன்.
சரி நான் பார்த்துக்கிறேன் என்றவன் அவன் வீட்டு மனிதர்களோடு சென்று ஐக்கியம் ஆகிவிட்டான்.
“—————————“
துணிமணிகள் வாங்கி முடியவே இரண்டு மணிக்கு மேல் ஆகிவிட்டது.
ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டு அப்படியே நிச்சயத்துக்கு நகை வாங்கிடலாம் என்றாள் அஞ்சலி.
நிச்சயத்துக்கு நான் பார்த்துக்கிறேன். தாலி சரடு வாங்கும் போது ஏழு பவுனுக்கு வாங்கிடுங்க என்றான் தந்தையை பார்த்து மன்னர் மன்னன்.
அஞ்சலி கொழுந்தனை அழுத்தமாய் பார்த்தாள். அவன் கண்டு கொள்ளவில்லை.
மூத்த மருமகள் மூவருக்கும் நிச்சயம் செய்ய இரண்டு பவுன் செயின் போட்டனர். தாலி பிரித்து கோர்க்கும் போது ஐந்து பவுன் தாலி செயின் போட்டனர். அதை யோசித்து தான் மொத்தமாய் ஏழு பவுனுக்கு தாலி செயினா போடுங்க நிச்சயத்திற்கு நான் வாங்கி கொள்கிறேன் என்றான்.
நவமணி கணவரை நிமிர்ந்து பார்க்க அழுத்தமாய் கண்களை மூடி திறந்தார் பூவராகன்.
அவர்கள் குடும்பத்தின் பேச்சு வார்த்தை நமக்கு எதற்கு என்பதாய் இருந்தது அவர் கண்டிப்பு.
கடைசியா பிறந்த உங்க தம்பி எவ்வளவு விபரம் பார்த்தீங்களா? சோத்தோடு சேர்த்து அவனையும் மென்று கொண்டிருந்தாள் அஞ்சலி.
இப்போ நான் உனக்கு என்ன பண்ணல? மாசம் ரெண்டு சீட்டு GRT ல் கட்டுற? நாலு மாசத்துக்கு முன்னாடி தானே எட்டு பவுனுக்கு வளையல் வாங்கி கொடுத்தேன்.
இல்லைன்னு யாரு சொன்னா? கல்யாணத்துக்கு முன்னாடியே எப்படி யோசிக்கிறாரு பாருங்க அதை சொன்னேன். என்றாள் நொடிப்புடன்.
கல்பாக்கம் அணுமின்னிலையத்தில் நல்ல பணியில் இருக்கிறான் சரவணன். ஒன்றரை லட்சம் கிட்டத்தட்ட சம்பளம். அவன் மனைவிக்கு மனம் அடித்துக் கொள்வது தான் ஆச்சரியம்.
வீட்டுக்கு எப்போது போய் மற்ற இரு ஓர்படிகளுக்கு இதை எல்லாம் சொல்வோம் என்று காத்துக் கொண்டிருந்தாள் அஞ்சலி.
மேடம் ஜூஸ் என்று சுபிக்கு முன் கொண்டு வந்து வைத்தார் பேரர்.
ஜூஸா? அவள் சுற்றிலும் பார்க்க நான்கு டேபிள் தள்ளி தன் பெற்றோருடன் அமர்ந்திருந்தவன் குடி என்பதாய் கண்ணால் பேசினான்.
சாப்பிட்டதே செரிக்கலை… இது வேறயா… புலம்பிக் கொண்டே குடித்தாள்.
எல்லாரும் கிளம்பி பேசிக் கொண்டிருக்க அவள் கையில் ஒரு எலுமிச்சை பழத்தை திணித்து விட்டு அவன் பில் பே பண்ண போய்விட்டான்.
எவ்வளவு திமிரு பாரு! இவனை கட்டிக்க போறேன் இல்ல எனக்கு இது தேவைதான் .இவன் படுத்துற பாட்டுல மண்டை சூடாகி இதை தேய்ச்சு தான் குளிக்கணும் என்று சிடுசிடுத்தவள் அந்த
எலுமிச்சையை கைப்பைக்குள் போட்டுக் கொண்டாள்.
விடைபெற்றுக் கொண்டு இருவீட்டாரும் கிளம்பி விட்டனர்.
தன்னை பார்க்கிறானா என்று ஓர விழியால் பார்த்தாள். அவன் கண்டுகொள்ளாது வேனில் ஏறிவிட்டான்.
அவளுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை. முதல் ஆளாக வேனில் ஏறிக் கொண்டாள்.பாரமான இதயத்துடன் ஜன்னல் கம்பியில் தலைசாய்த்து கண்மூடினாள்.
மாப்பிள்ளை கொஞ்சம் கரார் போல என்றார் நவமணி.
தங்கமான பிள்ளை என்று உணர்ந்து கூறினார் பூவராகன். மூத்த மகள் தேவிகா நிச்சயத்தின் போது பதினைந்தாயிரத்துக்கு கோட் சூட் வாங்கியதே திருப்தியாக இல்லை அவளின் மாமியாருக்கு.
பெண் வீட்டாரின் பணம் தானே என்று எண்ணாமல் இயல்பாய் எளிமையாய் இருக்கும் மாப்பிள்ளையை எந்த மாமனாருக்கு தான் பிடிக்காது?
என் மனசுக்கு படறது சொல்றேன். நீ வேணா பாரு நம்ம பொண்ணுக்கு இதை விட பொருத்தமா ஒருத்தர் கிடைக்க மாட்டாருன்னு நம்ம பூரிக்குற மாதிரி நடந்துக்குவாரு என்றார்.
என்னவோ சொல்றீங்க… உங்க அனுபவத்துல சொல்றது நல்ல வார்த்தையா இருந்தா போதும் என்றார் நவமணி.
அண்ணன் சொல்றது சரிதான் அலட்டல் இல்லாத பையனா இருக்காரு அண்ணி என்றார் உடன் வந்த உறவுக்கார பெண்மணி.
சுபி இது உனக்கு மாப்பிள்ளை கொடுக்க சொன்னார் என்று பையை அவளிடம் சேர்ப்பித்து விட்டு கீழே இறங்கிக் கொண்டாள் தேவிகா.
அவளுக்கு இங்கே திருச்சியில் தில்லை நகரில் தான் வீடு.
என்னவாக இருக்கும் என்று ஆர்வமாக பையை பிரித்தாள். அவள் ஆசையாய் பார்த்திருந்த பீச் வண்ண மென்பட்டு.
அய்யய….இதெல்லாம் என்ன கலரு? இதை போய் பார்க்கிறீங்க என்று அஞ்சலி கேலி செய்ததினால் வைத்து விட்டாள்.
பதினொராயிரம் ரூபாய் கொண்ட அந்த புடவையை அவன் வாங்கி தேவிகாவிடம் கொடுத்தனுப்பி இருக்கிறான்.
சுப்ரஜாவிற்கு எப்படி உணரவேண்டும் என்று கூட தோன்றவில்லை. பையை மடியில் வைத்துக்கொண்டு மீண்டும் கண்மூடிக் கொண்டாள்.
வேன் கிளம்பி திருச்சியை கடந்து நாலு கிலோமீட்டர் கூட வரவில்லை. டோல் கேட் வருவதற்குள் குடலை புரட்டியது.
அசௌகரியமாய் கண்ணாடி ஜன்னலை திறக்கும் மகளை கண்டு கொண்ட நவமணி வாந்தி வருதா சுபி என்றார்.
ம்ம்ம்ம்ம் என்றாள் சுரந்த உமிழ் நீரை வெளியில் துப்பியபடி.
ஒரு எலுமிச்சம்பழம் இருந்தா மோந்துக்க சுபி என்றார் உறவுக்கார அத்தை.
சட்டென்று நினைவு வந்தவள் கைப்பையில் இருக்கும் எலுமிச்சையை எடுத்து முகர்ந்து கொண்டாள்.
சற்று நேரம் மௌனித்து கண்மூடி இருந்தவளுக்கு லேசாய் சிரிப்பு எட்டி பார்த்தது.
“——————–“
வீடு வந்த உடனே அஞ்சலி மூத்த ஓர்ப்படி சங்கீதாவிற்கும் இளைய ஓர்படி தீபாவிற்கும் கான்பிரன்ஸ் காலில் அழைத்து விட்டாள்.
அக்கா உன் புருஷன் எம்புருஷன் எல்லாம் தெண்டம். சின்னவனை அடிச்சிக்கவே முடியாது வினையம் புடிச்சவன் என்றாள்.
என்னாச்சு?என்று ஆர்வமாகி விட்டனர் மற்றைய இருவரும். சுள்ளான் மாதிரி இருந்துகிட்டு எப்படி யோசிக்கிறான். பொம்பள தோத்தா போ என்றாள்.
என்னாச்சு இப்படி புலம்புற? ஆவல் அதிகமாகிவிட்டது சங்கீதாவிற்கு
பொண்டாட்டிக்கு ஏழு பவுனில் தாலி சரடு போட்டுவிடுங்க நான் நிச்சயத்திற்கு நகை வாங்கிக்கிறேன்னு சொல்லிட்டான்.
பொண்ணு வீட்டுகாரிங்க எவ்வளவு விபரங்கிற. நாப்பதாயிரம் அம்பதாயிரத்துக்கு புடவை பார்க்குறாளுங்க.
அப்புறம்… தீபாவிற்கு அடக்க முடியாத ஆர்வம்.
விடுவேனா நானு… எங்களுக்கெல்லாம் இருபத்தஞ்சாயிரத்துக்குள்ள தானே வாங்குனீங்கன்னு கேட்டு விட்டேன்.
என்ன கோபம் வருது தெரியுமா இந்த மன்னாருக்கு… எல்லாருக்கும் வாங்கின
மாதிரியே வாங்குங்க போதுங்கிறான்.
அந்த பொண்ணை கூட்டிட்டு போய் சாப்பிட வாங்கி கொடுக்குறான். ஜூஸ் வாங்கி கொடுக்குறான்.
அட ஏங்கா நீ வேற… அவன் ஒரு சிடுமூஞ்சி. பத்து லட்சம் கொடுத்தாலும் பத்து வார்த்தை பேச மாட்டான் என்றாள் தீபா.