Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Karuvin Kural

Karuvin Kural 12

கருவின் குரல்
அத்தியாயம் 12

பள்ளியில் அன்று விளையாட்டிற்காக கிரவுண்டிற்கு அழைத்துச் சென்றனர்.
அனிஷ் தன் வகுப்பு குழந்தைகளுடன் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தாள்.
அவளுடன் படிக்கும் ரிஷி என்ற பையன் பாலை அவளிடம் தராமல் தூக்கிக்கொண்டு ஓடினான். இவளும், “ப்ளீஸ் ரிஷி, ஒரு டைம் எனக்கு கொடு. அப்பறோம் நீயே வெச்சுக்கோ…” என கேட்டாள். அவன் கொடுக்கவே இல்லை.

விளையாட்டு முடிந்து ஆசிரியர் கிளாஸுக்கு அழைத்து வந்து விட்டார்.அவளுக்கு ஏமாற்றமே.அவர்கள் பள்ளியில் குழந்தைகளுக்கு சிறுசேமிப்பை ஊக்கப்படுத்த ஒவ்வொரு வகுப்பிற்கும் முன்பாக போஸ்ட் பாக்ஸ் வடிவிலான உண்டியல் வைக்கப்பட்டு இருக்கும்.

ரிஷி அனிஷிடம், “எங்கிட்ட நீ தோத்துட்டே அனிஷ்! இனிமே நான் உன்னை ‘அன்லக்கி அனிஷ்’னு தா கூப்புடுவே!” எனச் சொல்ல, அவள் சாடரென்று அங்கிருந்த உண்டியலை எடுத்து அவன் தலையில் அடித்துவிட்டாள்.



Advertisement

அடுத்த செகண்ட் அவன் தலையில் இருந்து இரத்தம்!
வலி தாங்காமல் அலற ஆரம்பித்தான். ஆசிரியர் வந்து சமாதானப்படுத்துவதற்குள், ரத்தத்தை பார்த்து பயந்த ரிஷி மயக்கமடைந்து விட்டான்.

பெற்றோருக்கு தகவல் கூறி அவனை ஹாஸ்பிட்டலில் சேர்த்தனர். அவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

ஏற்கனவே மனது சரியில்லாத ஜானகி அப்போதுதான் கஷ்டப்பட்டு தனது மனதை ஒருமுகப்படுத்தி வேலையில் கவனம் செலுத்தினாள்.
அதற்குள் மகள் தன்னுடன் படிக்கும் சக மாணவனை அடித்துவிட்டாள் என்ற செய்தி வந்தது!

Advertisement

அடித்து பிடித்து மகள் வகுப்பறைக்கு சென்றாள். வாசலிலே ஒரே ரத்தம். அங்குள்ள சப் ஸ்டாப்கள் அதை துடைத்துக்கொண்டே, “இப்போதா அனிஷை ஆபிஸ் ரூம் கூட்டிட்டு போறாங்க!” என்றனர்.

Advertisement

ஏதோ பெரிய தவறு நடந்துள்ளதாக மனது சொல்ல, வேகமாக ஆபிஸ் நோக்கி நடந்தாள். அனிஷ், அவள் வகுப்பாசிரியை, அவர்களின் கோஆர்டினேடர், ப்ரின்சிபல் எல்லோரும் ஏதோ தீவிர விவாதத்தில் இருந்தனர்.

“எக்ஸ்க்யூஸ்மீ…” எனக் கேட்டு உள்ளே சென்றாள். தான் அணிந்திருந்த உடை முழுவதும் ரத்தக்கறையுடன் நின்ற மகளின் கோலம் அவளுக்கு மயக்கத்தை தந்தது. முயன்று தன்னை கட்டுப் படுத்திக்கொண்டாள்.

பிரின்சிபல், “வாங்க ஜானகி, உட்காருங்க. அனிஷ் விஷயம் உங்களுக்கு தெரியும்னு நினைக்கறேன். பையன் கிரிட்டிகல் ஸ்டேஜ்ல இருக்கா, கொஞ்சம் டேன்ஜர் ஜோன்ல தான் இருக்கோம். பையன் வீட்டுலயும் கோபத்துல இருக்காங்க. அனிஷ் மேலே கேஸ் கொடுக்கலானு சொல்றாங்க. நாங்க பேசிட்டு இருக்கோம். அதுமட்டுமல்ல, அனிஷ் ரொம்ப குறும்பு. அந்த பையனுக்கு நெகட்டிவா ஏதாச்சு ஆச்சுனா, அனிஷை சிறார் ஜெயிலுக்கு அனுப்புவாங்க. நீங்க உங்க வீட்டுல பேசுங்க. அவங்க சப்போர்டோட பர்ஸ்ட் அந்த பையனை ஹாஸ்பிடல் போய் பாருங்க. அவங்க பேரண்ட்ஸை கன்வீன்ஸ் பண்ண ட்ரை பண்ணுங்க. ஸ்கூல் சைடுலே இருந்து உங்களுக்கு எந்த ஹெல்ப்பும் பண்ண முடியாத நிலைமையில இருக்கோம். சோ நீங்க கொஞ்சம் ஸ்டெப் எடுத்துக்கோங்க. அனிஷை கூட்டிட்டு வீட்டுக்கு போய்கோங்க…” எனச் சொல்லிவிட்டார்.

Advertisement

ஜானகிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
யாரை துணைக்கு அழைப்பது?
இப்போது இருக்கும் நிலையில் அப்பாவால் மட்டுமே தனக்கு உதவ முடியும் என்று எண்ணி அவருக்கு அழைத்தாள்.
வீட்டிற்கு வருவதாக கூறிவிட்டு போனை கட் செய்துவிட்டார்.

தேவா அப்போதுதான் தோட்டத்திற்கு கிளம்பத் தயார் ஆகி வெளியே வந்தான்.சுதா வீட்டு வாசலை கிளீன் செய்து கொண்டிருந்தாள்.

“என்ன தேவா, இன்னைக்கு லேட்டா கிளம்பற மாதிரி இருக்கு?” என கேட்டாள்.
“தேங்காய் பறிக்க ஆளுங்க இப்போதா வந்துட்டு இருக்காங்க, அதான் லேட்,” என்றான்.

ஜானகி வண்டிச் சத்தம் கேட்டு திரும்பிப் பார்க்க, கண்ணிமைக்கும் நொடியில் அனிஷை வேகமாக இழுத்து சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.

உள்ளே சென்ற இரண்டாவது நிமிடம் அனிஷின் அலறல்!
“மம்மி! அடிக்காதே ப்ளீஸ் மம்மி! வலிக்குது!” எனக் கத்தும் சத்தம் காதை பிளந்தது.

பதறிக்கொண்டு சுதா உள்ளே சென்றாள்.
தேவா உள்ளே செல்வதா வேண்டாமா என திணறிக்கொண்டே வெளியே நின்றிருந்தான்.
சுதா அனிஷை அழைத்துக்கொண்டு வெளியே வந்து, அங்கிருந்த திண்டில் அமர வைத்தாள்.

அவள் அணிந்திருந்த யூனிஃபார்ம் முழுவதும் ரத்தக்கறை.
எப்போதும் இருக்கும் சுறுசுறுப்பு, துருதுரு பார்வை எதுவும் அவளிடம் இல்லை.

ஏற்கனவே ரத்தத்தை பார்த்து பயந்து போய் இருந்தாள்.
வகுப்பாசிரியர், கோஆர்டினேட்டர், பிரின்சிபல் என மாறிமாறி என்கொயரி பண்ணியதில் அவள் முகம் திகலடைந்திருந்தது.
பத்தாவதுக்கு, ஜானகி வேறு அடித்துவிட முகம் அரண்டு போய் இருந்தது.

சுதா தண்ணீர், பிஸ்கெட் எல்லாம் கொடுத்து அவளை இயல்பு நிலைக்கு திருப்பினாள்.
மெதுவாக, “என்ன ஆச்சு?” எனக் கேட்டாள்.
மலங்க மலங்க விழித்து, தன் கருவிழிகளை உருட்டி, கைகளை பிசைந்து கொண்டே,
“ரிஷி எனக்கு பால் தருலே… அதான் அவனே அடிச்சே, ரத்தம் வந்துருச்சு…” என்றாள் அழுது கொண்டே.

சுதா அணைத்து ஆசுவாசப் படுத்தினாள்.
தேவாவிற்கு ஏதோ பெரிய பிரச்சனை எனப் புரிந்தது. தற்போது ஜானகிக்கு ஆறுதல் தேவைப்படும், அதைக் கூட கொடுக்க முடியாத இடத்தில் இருப்பதாக வருந்தினான்.

மருதாசலம், ஈஸ்வரி, கோகுல், பிரியா, ஜெயந்தி, சண்முகம் என ஜானகியின் குடும்பம் முழுவதும் வந்துவிட்டனர்.
தேவா அவர்களை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.
அமைதியாக அந்த இடத்தை விட்டு விலகி, தன் வீட்டு போர்ட்டிக்கோவில் அமர்ந்து நடப்பதை கவனித்தான்.

அவர்கள் உள்ளே சென்றதும், ஜானகியின் துயரம் மிகுந்த அழுகுரல் கேட்டது.சிறிது நேரத்தில் ஈஸ்வரி வெளியே வந்து, பயத்தில் அமர்ந்து இருந்த அனிஷை தாறுமாறாக அடித்தார்.

பிள்ளை வலியில் துடித்து அழுதாள்.
தேவாவிற்கு ஈஸ்வரி மீது அவ்வளவு கோபம்.
நரம்பெல்லாம் முறுக்கேறியது.
இருந்தும் என்ன பயன் “ஏன் என் மகளை அடிக்கிறீர்கள்?” என உரிமையாக கேட்க கூட அவனால் முடியவில்லை.

ஈஸ்வரி, தேவா பார்க்கிறதை உறுதி படுத்திக்கொண்டு, அவன் மேல் உள்ள கோபத்தை வெறி பிடித்தவள் போல் அவன் பிள்ளை மீது காட்டத் தொடங்கினாள்.

“என்னைக்கு நீ எம்புள்ளையை வந்து புடிச்சையோ அப்ப ஆரம்பிச்சது அவளுக்கு ஏழரை! உன்னை விட்டு தொலைய சொன்னா அவளும் வரமாட்டிங்கறா? உன்னை நாங்க சோறு போட்டு வளக்குறதே பெரிசு! இதுல நீ பண்ணுன தப்புக்கு எம்புள்ளை உனக்காக எல்லார்கிட்டயும் பேசனுமா?” என இன்னும் இரண்டு அடி வைத்தார்.

ஜானகி வந்து பிள்ளையை தூக்கிக்கொண்டு, “அம்மா, அடிக்காதே! ஏற்கனவே நானே ரொம்ப அவளை அடிச்சுட்டேன்…” என்றாள்.

கோகுல், “நீ புள்ளைய வளர்த்து இருக்கற லட்சணம் இதுதா? பேசாம அவளை விட்டுட்டு எங்களோட வா. அப்பா உனக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு தருவாரு,” என்றான்.

மருதாசலம், “இதற்குதானே காத்திருந்தேன்! என்பது போல உனக்கு ரெண்டு ஆப்ஷன் ஜானகி. அவளை இதோடு அனாதை ஆசிரமத்துல விட்டுட்டு நா அமைச்சு தர வாழ்க்கைய ஏத்துக்கரேனு சொல்லு. நாங்க கேஸ் கொடுத்தா கூட அவளை ஜாமினில் வெளியே கொண்டு வரோம். இல்ல, எனக்கு அவதான் வேணும்னு நீ சொன்னா, நீயே உன் பிரச்சனைய பார்த்துக்கோ,” என்றார்.

தேவா ஒரு நிமிடம் அவள் என்ன சொல்லப் போகிறாள் என பதறினான்.
மகள் நலனுக்காக அவளை ஆசிரமம் விட சம்மதித்துவிடுவாளோ என எண்ணினான்.
ஆனால் ஜானகி திடமாக, “நீங்கள் யாரும் வேண்டாம். நானும் என் மகளுமே பார்த்துக்கொள்கிறோம்!” எனச் சொல்லிவிட்டாள்.

அவள் கூறிய அடுத்த நொடி அவர்கள் அனைவரும் கிளம்பிவிட்டனர்.
ஜானகி அனிஷை பாத்ரூமுக்குள் அழைத்துச் சென்று சுத்தப்படுத்தினாள்.
இவளும் குளித்து வேறு உடை மாற்றி வந்தாள்.

சுதா, “என்ன செய்யப்போறே ஜானு?” என்றாள். “ஹாஸ்பிடல் போய் அவங்க பேரண்ட்ஸ் கிட்ட பேசரே,” என்றாள்.
“நானும் வரேன். நீ தனியா போக வேண்டாம்,” என்றாள் சுதா.

நன்றாக அடிவாங்கியதில் கைகளிலும் உடம்பிலும் சிறு சிறு காயமும், வலியும் இருந்தது.
சோர்ந்து போய் அமர்ந்திருந்தாள் அனிஷ். அம்மாவிடம் வலி என்று சொல்லவும் பயமாக இருந்தது.

அவளுக்கு பாலை காய்ச்சி கொடுத்தாள் ஜானகி. ஏதும் பேசாமல் குடித்துவிட்டாள்.

அனிஷுக்கு தேவையான ஸ்நாக்ஸ் பேக் செய்து கொண்டு, வீட்டை பூட்டி கிளம்பத் தயாராக வெளியே வர, சுதாவும் வந்து விட்டாள்.
தேவா சுதாவிடம், “அக்கா, நானும் உங்க கூட வரேன். தனியா போக வேண்டாம்,” என்றான். ஜானகி, “அக்கா, நாமளே பார்த்துக்கலாம். அவருக்கு எதுக்கு சிரமம்?” என அவனை நிமிர்ந்து பார்க்காமல் கூறினாள்.

சுதா, “ஜானகி, பாலாவும் ஊர்ல இல்லை. எதற்கும் தேவாவை அழைத்து செல்லலாம். அவர்கள் கேஸ் ஏதாவது கொடுத்தா, நம்ம பக்கம் பேசுவதற்காவது ஒரு ஆண் துணை வேண்டும்,” என அவனுடன் செல்ல ஜானகியை சமாதானப்படுத்தினாள்.

மூவரும் பொள்ளாச்சியில் பிரபலமான தனியார் மருத்துவமனைக்குள் சென்றனர். ரிஷியின் அப்பா, அம்மாவிற்கு அனிஷ் மீது அவ்வளவு கோபம்.

ஜானகியிடம், “எங்கள் மகனும் குறும்புதான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் ஏதாவது பிராப்ளம் என்றால் க்ளாஸ் மேமிடம் தானே சொல்ல வேண்டும்? இதை கூட தங்கள் மகளுக்கு நீங்கள் சொல்லித்தந்து வளர்க்க வில்லையா? என் மகனை பாருங்கள்! காலையில் சாப்பிட்ட இரண்டு இட்லி அதன் பிறகு ஸ்நாக்ஸ் கூட சாப்பிடவில்லை! இந்த நிமிடம் வரை கண்ணைக் கூட திறக்கவில்லை! என்ன ஆச்சு என்று கூட தெரியாமல் ஐசியு முன்பு பைத்தியம் போல் நிற்கிறோம்!” என்றார்.

தேவா அவர்களிடம், “நான் நடந்த சம்பவங்களுக்கு மன்னிப்பு கேட்கிறேன். தங்கள் மகனின் முழு மெடிக்கல் எக்ஸ்பென்ஸ்ஸும் நானே ஏற்றுக் கொள்கிறேன்,” என்றான்.

ரிஷியின் அப்பா, “என்ன பணத்திமிரை காட்டுகிறீர்களா? உங்களால் பணத்தை மட்டுமே தர முடியும். பழைய எங்கள் மகனை திருப்பித் தர முடியாது!” என்றான்.

ரிஷியின் அம்மா, “என் மகன் நிலையை பார்த்தும் உங்கள் பிள்ளையை நீங்கள் காக்க நினைக்கிறீர்கள்! இப்படியே விட்டால் வேறு பிள்ளைகளையும் இப்படி செய்ய மாட்டாள் என்று என்ன நிச்சயம்? உங்கள் மகள் திருந்த வேண்டும். அவள் தவறை உணர வேண்டும். நாங்கள் கேஸ் கொடுக்கிறோம். சிறார் ஜெயிலில் நல்ல ஒழுக்கத்தை உங்கள் மகளுக்கு அவர்கள் சொல்லித் தருவார்கள்!” என்றாள்.

சுதா, “உங்கள் மகனின் நிலை வருத்தத்திற்குரியது. அனிஷின் அப்பா அவர்களுடன் இல்லை. அம்மா மட்டுமே. கொஞ்சம் கருணை காட்டுங்கள்…” என்றாள்.

“இப்படியெல்லாம் பண்ணுனா எப்படி கூட இருப்பாங்க? அதான் பாதிலியே அவங்க இவங்க ரெண்டு பேரையும் விட்டுட்டு ஓடி போய்டாங்க!” எனக் கூறினாள்.

அதுவரை பொறுமையாக இருந்த தேவா, “சரி, நீங்க கேஸ் கொடுங்க. நாங்க அங்க பார்த்துக்கறோம்,” என்றான்.

ஜானகி அவனையே கூறிய பார்வையால் பார்த்தாள். இருவரது விழிகளும் சந்தித்துக் கொண்டது. அதில் இழப்பு, வலி, அவர்களின் காதல் எல்லாம் சேர்ந்து இருவரின் விழிகளிலும் நீரை வரவழைத்தது.

—கருவின் குரல் ஒலிக்கும்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!