Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நமக்காக வாழ்வோம் வா

நமக்காக💞5

நிச்சயதார்த்தம் பெண்வீட்டு வைபவம்.எளிமையாக குறும்பூர் செல்லியம்மன் கோயிலில் வைத்து செய்வதாக ஏற்பாடு  செய்யப்பட்டது.

குறைந்த நாளில் விசேஷம் வைக்க திட்டமிட்டால் மண்டபம் எங்கே கிடைக்கும்?

எங்கெங்கோ மண்டபம் தேடி அலைந்து பார்த்துவிட்டு இறுதியாக கோயிலில் வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தனர்.

இருதரப்பிலும் மிக நெருங்கிய உறவுகளை மட்டுமே அழைத்திருந்தனர்.



Advertisement

மாப்பிள்ளை வீட்டார் பரியம் போட கொண்டுவந்த சீர்களை தாம்பாளதட்டில் எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தனர்.

அத்தை, பொண்ணுக்கு என்ன நகை வாங்கியிருக்காரு உங்க பிள்ளை? புடவை கூட சேர்த்து பரியத் தட்டில் வைக்க சொல்லுங்க என்றாள் தீபா. மற்ற இரு மருமகளும் ஆர்வமாய் பார்த்தனர்.

எங்கிட்ட எங்கே இருக்கு?மன்னரு தான் வச்சிருக்கான் என்றார் பாப்பாத்தி.

Advertisement

மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

Advertisement

எமகாதக பய அவன்… எரிச்சல் தெறித்தது சங்கீதா பேச்சில்.

அட விடுக்கா இன்னும் கொஞ்ச நேரத்தில் பரியம் போட போறோம் அப்போ தெரிஞ்சுடப் போகுது என்றாள் அஞ்சலி.

மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்று அமரவைத்து பழச்சாறு கொடுத்து உபசரித்துக் கொண்டிருந்தனர் பெண்வீட்டார்.

Advertisement

என்னடா மன்னாரு பொண்ணு இன்னும் காணோம் என்றான் சசி.

மொபைலில் மூழ்கி இருந்தவன் சிரிப்புடன் நண்பனின் தலையில் தட்டினான்.

நம்ம ஊரை விட சின்ன ஊரா இருக்கு… இருநூறு வீடு கூட இருக்காது போல என்றான் கதிர்வேலு.

ஏன்டா பெருசா இருந்தா ரெண்டு தெருவை வாங்குற ஐடியால இருந்தியா என்றான் மன்னர் மன்னன்

இவர்கள் பேசிக் கொண்டிருக்க கிருஷ்ணா தன்னுடைய பைக்கில் தங்கையை அழைத்து வந்திருந்தான்.

பொண்ணு வந்தாச்சு மச்சி என்றான் சசி.

ம்ம்ம்ம்ம் என்றவன் கோயில் வாசலை பார்த்தான்.

எளிமையாக இயல்பாக அழகாக இருந்தாள் சுப்ரஜா.

பியூட்டிஷியன் வைத்து மேக்கப் பண்ணலையா? நக்கலாய் கேட்டாள் அஞ்சலி.

பொண்ணோட அழகு ஒரிஜினல் தான்னு உங்க ஆளுங்களுக்கு தெரிய வேண்டாமா என்றாள் சுப்ரஜாவின் அண்ணி.

முறைப்பாய் பார்த்த அஞ்சலியை அவள் சட்டை செய்யவில்லை.

TCS ல வேலை பார்க்கிறாளாம் அது தான் இவ்வளவு திமிரு என்றாள் தீபா.

இருக்கட்டுமே… நான் கூட MBA படிச்சவ தான் கொணட்டிக் கொண்டாள் அஞ்சலி.

மூத்த மருமகள் மூவருமே மாஸ்டர் டிகிரி முடித்தவர்கள் தான். கணவன்மார்கள் கைநிறைய சம்பாதிப்பதால் அவர்கள் வேலைக்கு செல்லவில்லை.

முதல் மருமகள் சங்கீதா IT துறையில் பணிபுரிந்தவள் தான் கர்ப்பமான உடனே வேலையை விட்டுவிட்டாள்.

மூன்றாவது மருமகள் தீபா M. ஸ்கூல், BEd கணிதம் படித்தவள் திருமணத்திற்கு முன்பு தனியார் பள்ளியில் வேலை பார்த்தவள்.

மெஹந்தி போடலையா? சங்கீதா கேட்டாள்.

இல்லை என் தங்கச்சிக்கு மருதாணி தான் பிடிக்கும் என்றாள் தேவிகா.

மூத்த மருமகள் மூவரையும் விட சுப்ரஜா நல்ல அழகு. கண்ணுக்கு லட்சணமாக இருந்தாள். மேனா மினிக்கியாகவும் இல்லை பட்டிக்காடாகவும் இல்லை. காண்போர் ரசித்து பார்க்கும் வண்ணம் ஆர்ப்பரிப்பு இல்லாத அழகியாக இருந்தாள்.

ஆறடி கூந்தல் எல்லாம் இல்லை. இடுப்பை தொடும் அளவிற்கு நெளி நெளியான அடர்ந்த கூந்தல். அதை பின்னலிட்டு குண்டுமல்லியும் கனகாம்பரமும் சூடி இருந்தாள்.

நெக்லஸ்,ஆரம்,ஒரு டாலர் செயின் என்று அவளுடைய தங்க நகைகளை அணிந்திருந்தாள். லேசான உதட்டுச்சாயம் பூசியிருந்தாள். அது உதட்டின் வண்ணமே இருந்ததால் சாயம் பூசியதே தெரியவில்லை. கண்ணுக்கு மெல்லிதாக மைத்தீட்டி இருந்தாள். காஜல், ஐலைனர் என்றெல்லாம் எதுவும் போடவில்லை.

ஆளு குலுக்கியா தான் இருப்பா போல என்றாள் சங்கீதா.

அதெல்லாம் இவன் அடக்கி உட்கார வச்சுடுவான் என்றாள் அஞ்சலி.

பார்க்கதானே போறோம் அவன் வாழப்போற அழகை என்று சிலுப்பிக் கொண்டாள் தீபா.

அவன் எப்படி வாழப்போகிறான் என்று பார்ப்பத்தில் அவ்வளவு எதிர்பார்ப்பு அண்ணிகளுக்கு.

பொண்ணை மணையில் உட்கார வையுங்கோ என்றார் அய்யர்.

எதிரில் நாற்காலியில் அமர்ந்திருந்த மன்னரின் பார்வை கூர்மையாய் அவளில் படிந்தது.

பரிய தட்டு ரெடியோ?என்றார் ஐயர்.

ம்ம்ம்ம்ம் என்ற மன்னர் மன்னன் நீல நிற வெல்வெட் பெட்டியை எடுத்து பூ, பழம்,வெற்றிலை பாக்கு, பட்டுப்புடவை என தயாராய் இருந்த தாம்பாளத்தட்டில் வைத்தான்.

அந்த பெட்டியில் நிலைத்து நின்றது மூவரின் ஆறு கண்களும்.

சபையில் பார்வைக்கு பிரித்து வைக்கும் சாக்கில் சங்கீதா  வேகமாய் பெட்டியை பிரித்தாள்.

அஞ்சலி விழிகள் தெறிக்கும் படி பார்த்திருந்தாள். தீபாவோ ரியாலிட்டி ஷோவில் முடிவை அறிவிக்கும் நொடிக்காக காத்திருக்கும் போட்டியாளர் போல் தவித்துக் கொண்டிருந்தாள்.

அழகிய முல்லை மொக்கு ஆரம் கேரளா டிசைனில் இருந்தது. பெண்டண்ட் என்று எதுவும் இல்லாது சிம்பிளாக ஆனால் அழகாக இருந்தது.

நாலு பவுன் இருக்கும் போல என்றாள் அஞ்சலி.

நீ வேற நல்லா கணமா இருக்கு. அஞ்சுபவுன் கிட்ட வரும் என்றாள் சங்கீதா.

உன் புருஷன் என் புருஷன் எல்லாம் மண்ணாந்தையா இருக்குதுங்க.

கட்டிக்க போறவளுக்கு தேடி தேடி புடவை வாங்குறதென்ன, பார்த்து பார்த்து நகை வாங்குறதென்ன. குரும்பூர்காரி கொடுத்து வைத்தவ தான் என்றாள் அஞ்சலி.

இத்தனைக்கும் சங்கீதா நூறுபவுன் கிட்டத்தட்ட நகை வைத்திருக்கிறாள். அஞ்சலி  நகை சீட் போட்டு வருஷத்துக்கு பத்து பவுனாவது வாங்கி சேர்ப்பவள்.

பெண்களின் மனம் விந்தையானது தானே…

மாப்பிள்ளையை பெற்றவர்கள் பரிய தட்டை கொடுக்க பெண்ணை பெற்றவர்கள் பெண்ணின் தாய் மாமன் மற்றும் பெண்ணோடு சேர்ந்து பெற்றுக் கொண்டனர். காமிரா ஒளிவெள்ளம் சிந்தி மங்களமான நிகழ்வை அழகாய் பதிவு செய்து கொண்டது.

தட்டை பெற்றுக் கொண்ட சுப்ரஜா புடவை மாற்ற கீழே தோழிகளோடு இறங்கி செல்ல… ஓரமாய் நின்றவன் “பொட்டு கொஞ்சம் பெருசா வை!” என்றான் கிசுகிசுப்பாய் அவளுக்கு மட்டும் கேட்கும்படி.

மெரூன் வண்ண பொட்டு தான் வைத்திருந்தாள் கொஞ்சம் குட்டியாய் வைத்திருந்தாள். தூரமாய் நின்று பார்ப்பவர்களுக்கு நெற்றியில் பொட்டு இருப்பதே தெரியாது. அதனால் தான் கொஞ்சம் பெரிதாக வைக்க சொன்னான். போட்டோவில் பளிச்சென்று தெரிய வேண்டுமே..

பெண்ணை பெற்றவர்கள் மாப்பிள்ளைக்கு உடை,நகை வைத்து கொடுத்தனர்.

பெண், மாப்பிள்ளை உடை உடுத்தி வர அய்யர் லக்கின பத்திரிகை வாசித்து இருதரப்பிடமும் கையொப்பம் வாங்கினார்.

பெண்ணுக்கு நாத்தனார் இல்லை என்பதால் மாமியார் பரிய நகை போட்டு நலங்கு வைத்தார்.மாப்பிள்ளைக்கு சுப்ரஜாவின் அண்ணன் கிருஷ்ணா செயின்,பிரேஸ்லெட் அணிவித்து சந்தனம் பூசி மலர் தூவி ஆசீர்வதித்தான்.

அடுத்து இருதரப்பு மூத்த பெண்மணிகள் வந்து மணமக்களுக்கு நலங்கு வைத்து ஆசீர்வதித்தனர்.

சுப்ரஜாவிற்கு அவஸ்தையாய் இருந்தது அவன் அருகில் நெருக்கமாய் அமர்ந்திருப்பது. அவ்வப்போது அவன் தோள்பட்டை அவள் தோளோடு லேசாக உரசிக் கொண்டிருந்தது.  மன்னர் மன்னன் இயல்பாய் இருந்து கொண்டான். அவளுக்கு தான் மூச்சு முட்டுவது போல் இருந்தது. திடீரென்று படபடப்பு கூடியது. சொல்லத்தெரியாத ஒரு உணர்வு அவளை ஆட்கொண்டது.

ஆம்பளைகளுக்கு வெட்கம் வராதா என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

பட்டுப்புடவை அவ்வளவு பாந்தமாய் பொருந்தி இருந்தது. அவள் நிறத்திற்கு மெரூன் வண்ண ஷேட் பளிச்சென்று தூக்கலாய் காட்டியது.

மன்னரு அந்த புள்ளைக்கு படபடன்னு வருது போல… ஜூஸ் ஏதாவது கொடுக்க சொல்லு!  பக்கத்தில் தோழனாய் நின்ற சசி கிசுகிசுத்தான்.

உதை வாங்காம மூடிகிட்டு நில்லு!  பல்லை கடித்துக்கொண்டு அதட்டினான்.

நீ போலீஸ்காரன் நெஞ்சை நிமிர்த்திட்டு நிற்ப தங்கச்சிக்கு பயமா இருக்கும் தானே…? மீண்டும் சீண்டினான்.

ஏன் நான் பூச்சாண்டியா? உன் தங்கச்சி பயந்து நடுங்குறாளா?

இல்லையா பின்ன? உனக்கு முன்னாடி பிறந்த மூனு அண்ணங்காரனுங்களே உன்னை கண்டா பம்மிட்டு திரியுவாங்க.

டேய் அவ படபட பட்டாசு. சும்மா ஒரு பதட்டத்தில் விதிர்விதித்து நிற்கிறா அவ்வளவு தான்.

அப்படிங்கிற?

ஆமா எல்லா பொண்ணுங்களுக்கும் அப்படி தான் இருக்கும்னு நினைக்கிறேன்.

எம்பொண்டாட்டிக்கு அப்படி இல்லையே….

பிரசவத்துக்கு அம்மா வீட்டுக்கு போயிருக்க உன் பொண்டாட்டியையே கேட்போமா என்றான்.

அடே மன்னாரு… ஏன்டா? முடிச்சு விட்டுடுவ போல…. சிணுங்கினான் சசி.

பக்கி மூடிகிட்டு நில்லு! டேய் கதிரு இவனை கூட்டிட்டு போய் சோத்தை போட்டு வாயை அடைடா என்றான்.

என்னடி சுபி மாப்பிள்ளை யூனிபார்முக்கு கஞ்சி போடும்போதெல்லாம் நாலு லோட்டா குடிப்பாரோ? இவ்வளவு விறைப்பா இருக்காரு… மீனாட்சி சிரித்துக் கொண்டாள்.

இவ வேற ஒருத்தி.. முகம் சுண்டிவிட்டது சுபிக்கு.

பக்கத்தில் ஒருத்தி இருக்கிறாளே சும்மாவாச்சும் திரும்பி பார்க்கணும்னு யோசிக்குதா இந்த மரமண்டைக்கு… கடுகடுத்துக் கொண்டிருந்தாள்.

மாப்பிள்ளை லட்சணமா நல்லா தான் இருக்காரு. போலீஸ்காரர் இல்ல அதுதான் உடம்பை கட்டுக்கோப்பா வச்சிருக்காரு என்றாள் சங்கரி.

உண்மையில் முகம் வடிவாகவே இருந்தது மன்னர் மன்னனுக்கு. ஆறடிக்கு உயரம்,ஜெல் வைத்த கேசம், படிக்கட்டு தேகம், ரோமனிய சிற்பம், ஹேசல் விழிகள் என்றெல்லாம் கதைகளில் வரும் ஹீரோபோல் இல்லை. அதற்காக அவன் ஹீரோ இல்லை என்றும் இல்லை.

அல்டாப்பு, அடாவாடி ஆண்கள் தான் கெத்து என்று நினைக்கும் பெண்களின் ரசனை வட்டத்திற்குள் அவன் வரமாட்டான். அவன் யதார்த்தவாதி. மேல்பூச்சு பூசாமல் சுற்றி வளைக்காமல் யதார்த்தம் பேசும் இயல்பானவன்.

ஆரம் ரொம்ப அழகா இருக்கு சுபி என்றாள் தேவிகா.

எம்புள்ள செலக்ஷன் நல்லா இல்லாம போயிடுமா?என்றார் பெருமை பொங்க பாப்பாத்தி.

என்ன சுபி மாப்பிள்ளை ரொம்ப வெக்கப்படறாரு போல?

இப்போல்லாம் நிச்சயம் பண்ணிட்டு மாப்பிள்ளை ரிங் போட்டு கிஸ் பண்றாங்க… மண்டியிட்டு ரோஸ் கொடுக்குறாங்க. டைட்டா ஹக் பண்ணிக்கிறாங்க. உன் போலீஸ் மாம்ஸ் இப்படி ஜடமா இருக்காரு…. இன்னும் கொஞ்சம் ஏற்றி விட்டாள் கல்லூரி தோழி ஜானகி.

கொஞ்சம் திரும்பி பார்த்தா தான் என்னவாம்.  உலகமகா திமிரு பிடிச்சவன் போலிருக்கு… உள்ளுக்குள் முனுமுனுத்துக் கொண்டிருந்தாள் சுபி.

தன் தோழிகளை அறிமுகம் செய்து வைக்கலாம் என்று எண்ணியிருந்தாள். அவன் கண்டுகொண்டால் தானே?

“———————“

நிச்சயம் முடிந்து விருந்து ஆரம்பமானது.

பெண்ணும் மாப்பிள்ளையும் ஒன்றாக உணவு அருந்த சென்றனர்.

எட்டு வகை பொரியல் கூட்டு, நாலு வகை இனிப்பு என்றெல்லாம் பண்டங்களின் எண்ணிக்கை பந்தாவாக இல்லை.

சாதம், சாம்பார், வத்தக்குழம்பு, ரசம், மோர், உருளை பொரியல், கோஸ் கேரட் கலந்து செய்த பொரியல், மெது வடை, பருப்பு பாயசம், அப்பளம் அவ்வளவு தான் மெனு.

இது கூட மன்னர் யோசனை தான். உணவு பண்டங்கள் வீணாகாத அளவிற்கு மெனு சொல்லியிருந்தான்.

முப்பது நாற்பது பதார்த்தங்களை இலையில் வைத்து பெயருக்கு பெருமை பீத்திக் கொள்ளலாம். அதில் எவ்வளவு உணவு வீணாகும் தெரியுமா?

அளவாக எளிமையாக ருசியான உணவை திருப்தியாக உண்டார்கள் விருந்தினர்கள்.

கிங்கு தங்கச்சிக்கு ஊட்டிவிடு என்றான் கதிர்.

உன் தங்கச்சி பயந்து போய் இருக்கான்னு சொன்ன?

அதுக்காக இந்த மொமண்டை மிஸ் பண்ண முடியுமா?

சுப்ரஜா படபடப்புடன் பார்க்க…. ஊட்டவா என்று கண்களால் கேட்டான்.

அவள் எச்சில் கூட்டி விழுங்கினாள்.

ஓர விழியால் கூர்மையாய் பார்த்தான். அவள் தலை குனிந்து கொண்டாள்.

இலையில் இருந்த மினி ஜாங்கிரியை சட்டென்று அவள் வாயருகே கொண்டு சென்றான்.

வேறு வழியில்லை கூச்சத்துடன் குருவி போல் சிரிதாய் வாய் திறந்து வாங்கிக் கொண்டாள்.

சுபி நீ ஊட்டு ஜானகி கலாட்டா செய்ய ஒரே சிரிப்பலை.

அவளுக்கு கரங்கள் நடுங்கியது. பார்வையை இடுக்கி அவளையே பார்த்து கொண்டிருந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!