Skip to content
Post Views: 7,360
அத்தியாயம் 16
அழைப்பை ஏற்க வேண்டாம், மொபைலை சைலண்ட்டில் போடலாம் என்றுதான் மொபைலை எடுத்தான். அழைப்பு தந்தையிடமிருந்து என்பதால் அழைப்பை ஏற்றவன், “ஹெல்த் ஓகேதானப்பா?” என்றான்.
மகனின் பேச்சு எதோ அவசரத் த்வணியில் இருப்பதாக தோன்ற, “வேலையா இருக்கியாப்பா? இன்னைக்கு ஞாயித்துக்கிழமை, நீ ஃப்ரீயா இருப்பனு போன் செய்தேன்” என்றார் வில்வராஜ்.
Advertisement
“ஹெல்த் ஓகேவானு கேட்டேனேப்பா?”
“உடம்புக்கென்ன குறைச்சல்? உன் அம்மா பார்த்துக்கிறா, மனசுதான் சரியில்ல”
“என்னாலயாப்பா?”
Advertisement
“இல்லப்பா” என்றதுமே, மேற்கொண்டு பேசவிடாமல் “யாரால பிரச்சனையோ அவங்ககிட்ட பேசுங்கப்பா, என்கிட்ட பேசி என்னாகப்போகுது?” என்றான் அன்னை மீதுள்ள கோபத்தோடு.
Advertisement
இது போனில் பேசும் விசயமில்லை என்று “எனக்கு உன்னைப் பார்க்கனும்ப்பா, எப்போ வர?” என்றார் கெஞ்சலாக.
“வெண்பாவை பார்க்க வரன்னு சொல்லியிருந்தேன், அதுக்கு கூட டைம் இல்ல, ஒரு ப்ராஜக்ட் போய்ட்டிருக்கு, அது முடிய ஒரு மாசம் பக்கம் ஆகும், அதுக்கப்புறம்தான் வர முடியும்”
“நானும் அம்மாவும் சென்னை வரட்டுமா?” பெரும் தயக்கத்தோடு.
Advertisement
“இப்போதைக்கு நான் அம்மாவை பார்க்காம இருக்குறதுதான்ப்பா நல்லது” என்றான் இறுக்கமாக.
செல்லம்மாள் பொன்மணியின் குடும்பத்தை பேசியபோது வில்வராஜ் வெளியில் சென்றிருந்தார். வீட்டிற்கு வந்த பின்னே மனைவி செயல் தெரிய, “பொன்மணியை பேசினா எனக்கு வலிக்கும்னு சொன்னானே, அப்படியிருந்தும் அவங்களை பேசியிருக்க, மகன் உறவு வேணாமா?” என்று கத்தினார் மனைவியிடம்.
“நான் ஏதும் இல்லாததை பேசல, எப்படிபட்ட குடும்பத்துல வாழ நினைச்சிருக்கான், மனசே ஆறமாட்டேங்குதுங்க, என் ஆதங்கத்தை கூட கொட்டக்கூடாதா?” என்று செல்லம்மாள் கேட்க,
“கொட்டக்கூடாது, அவங்க குடும்ப விசயத்துல தலையிட நீ யாரு?” என்று கணவன் மனைவிக்கிடையே பெரும் வாக்குவாதம் ஆகியது.
மகன் முகத்தை பார்த்தாலாவது அவனுக்காக யோசிப்பாள் என்றுதான் மனைவியை அழைத்துக்கொண்டு சென்னை வர நினைத்தார் வில்வராஜ்.
“உன் அம்மா புரியாம பேசிட்டிருக்கா திருனேசு, உன்னோட இருந்தா உன் வேதனை புரியும்னு தோணுது, அதான் கேட்டேன்” என்றார் கோரிக்கையாக.
“உங்களுக்கு புரியுதாப்பா என் வேதனை?”
மகன் கேட்ட தோரணையிலேயே தன் மீதும் தவறிருப்பது போல தோன்ற, “நான் என்ன பண்ணினேன் திருனேசு?” என்றார் கவலையாக.
நாளை பேசுகிறேன் என் இணைப்பை துண்டிக்கத்தான் நினைத்தான். அப்படி செய்தால் மீண்டும் பேசும்வரை தவிப்போடு இருப்பார் என்பதற்காகவே தொடர்ந்து பேசலானான்.
“நான் மத்தவங்க தயவுல இருக்கேன்னு சொல்லியிருக்கேன், பைக் கூட என்னோடது இல்ல. உங்களை கூட வச்சிக்க முடியாத சூழ்நிலைல இருக்குறதாலதான் நீங்க கேட்டும் சென்னைக்கு அழைச்சிட்டு வரல, திரும்ப இப்போ அம்மாவை அழைச்சிட்டு வரேனு என் நிலைமை புரியாம கேட்குறிங்க” என்றான்.
“இவ்வளோ பிரச்சனையில ஏன்டா அம்மாகிட்ட காசு வாங்காம போன? கொடுத்தாதான…” என்றார் வேதனையாக.
மகனின் சில நொடி அமைதியிலேயே, “அப்போ காசு வாங்காததுக்கு வேற காரணம் இருக்கு, என்னனு சொல்லுப்பா, சொன்னாத்தான தெரியும்?” என்றார் மன்றாடலாக.
“ஒன்னுமில்லப்பா, இத்தனை வயசுக்கப்புறமும் உங்ககிட்ட வாங்கி செலவு பண்ண பிடிக்கல, அதான் வாங்கல”
“எங்க மகன்டா… பணம் வாங்கிக்க வயசு கணக்கு இருக்கா?”
“இருக்குப்பா. நீங்களும் என்னை அந்த டிஸ்டன்ஸ்லதான் வச்சிருக்கிங்க”
“என்னப்பா சொல்ற?”
“பணம் வாங்கிக்கிறது மட்டும்தான் உரிமையாப்பா?”
“எல்லாத்துக்கும்தான் திருனேசு, உனக்கு என்ன வேணும்? உரிமையா கேளுடா”
“எனக்கு கல்யாணம் ஆகி ஒன்றரை மாசம் ஆகுது, கல்யாணத்துக்கப்புறம் இரண்டு நாளுக்கு ஒருமுறையாவது போன் பண்ணிடுவிங்க. என்னைக்காவது என் கல்யாண வாழ்க்கையைப் பத்தி கேட்டுருக்கிங்களா?”
“திருனேசு…” என்றவருக்கு தனது தவறு புரிய, குரலும் உள்ளே சென்றிருந்தது.
“சின்ன வயசுல உங்க விருப்பத்தை திணிச்சிங்க, இப்போவும் அதேமாதிரி செய்ய நினைச்சா சரியாப்பா?”
“அப்படி நினைக்கல திருனேசு” என்றார் வேதனையாக.
“வேற எப்படிப்பா நினைக்கிறிங்க? என் விருப்பத்தை பத்தி யோசிக்கலனா கூட பரவால்ல, நானே என் விருப்பம் சொல்லியும் கூட அதை அசிங்கப்படுத்தியிருக்கிங்க… அம்மா பேசுற ஒவ்வொரு வார்த்தைக்கும் தாழ்ந்து போறது என் தலைதான்.
இன்னும் எவ்வளோ பள்ளத்துல கொண்டுபோய் விட முடியுமோ விடுங்க. மீள முடியாத ஆழத்துக்கு போன பின்ன நானே நினைச்சாலும் உங்களுக்கு கிடைக்க மாட்டேன்ப்பா, என்னை யார் மீட்டெடுக்கிறாங்களோ அவங்களுக்கு முழுசா சொந்தமாகிடுவேன்”
“திருனேசு… எங்களுக்கு உன்னை விட்டா யாருடா இருக்கா? ஏன்டா இப்படி பேசுற?” என்றார் பெரும் பதட்டத்தோடு.
“பின்ன எப்படிப்பா பேசுறது? பொன்மணியோட அக்கா விருப்ப கல்யாணம் செய்துக்கிட்டாங்க, என்னை போல… இதைப் பத்தி பேச அம்மாக்கு என்ன உரிமையிருக்கு?
நான் தாலி கட்டும்போது பொன்மணியோட அப்பாம்மா தடுக்கலனு அம்மா சொல்லியிருக்காங்க, அவங்க தடுத்திருந்தாலும் நான் பொன்மணியை கல்யாணம் செய்திருப்பேன். அப்போ நான்தான தப்பானவன்? என்னை விட்டுட்டு மத்த எல்லாரையும் எதுக்கு பேசுறாங்க?”
“இனி பேசமாட்டாப்பா, நான் பார்த்துக்கிறேன்” என்க, “நான் பேசுறேன்” என்று செல்லம்மாள் பேசுவது திருனேஷ்வரனுக்கு கேட்டிட, “நான் வைக்கிறேன்ப்பா” என்று இணைப்பை துண்டித்தான்.
இணைப்பை துண்டித்த பின்னும் பத்து நிமிடத்திற்கு மேல் திருனேஷ்வரன் மொபைலையே பார்த்திருக்க, “ஏங்க” என்றாள் சன்னக்குரலில்.
“சொல்லுங்க” என்றான் இவனும் மனைவியைப் போலவே.
“எதுக்கு இவ்வளோ டென்ஷன் ஆகுறிங்க?” என்றாள் மிரண்டவளாக.
“ம்ப்ச்… அதை விடு” என்றபடி மனைவியிடம் வர, “பார்க்குறதுக்கு கோபமில்லாம பேசுற மாதிரி இருக்கு, ஆனா முகமெல்லாம் அப்படி சிவக்குது.
இவ்வளோ ப்ரஸ்ஸர் ஆகாதிங்க, என்னைத்தான பேசுறாங்க? கொஞ்ச நாளைக்கு அப்புறம் உங்களுக்காகவாவது என்னை ஏத்துப்பாங்க, அதுவரைக்கும் அவங்க பேசுறது எனக்கு பிரச்சனை இல்லை” என்றாள்.
“நீங்க சொன்னா சரிங்க” என்றான் பணிந்தவன் போல.
“போங்க” என்றாள் ஆற்றாமையோடு.
“எங்ககங்க போறது?” என்று மெத்தையில் படுத்து பொன்மணி மடிமீது தலைசாய்த்தான்.
“எனக்கு உங்ககிட்ட ஒன்னு கேட்கனும்”
“பர்மிட் பண்ணலனா கேட்கமாட்டதான?”
“கேட்கமாட்டேன், ஆனா என்னால நிம்மதியா இருக்க முடியாது”
முறைத்தவன், “என்ன கேட்கனும்?” என்றான்.
“நீங்க தங்கியிருக்க இடத்துல என்ன பிரச்சனை? பிரச்சனை இருந்தும் அங்க ஏன் தங்கியிருக்கிங்க? இப்போதான் இந்த வீடு பார்த்துட்டிங்களே… திங்க்ஸ் எடுத்துட்டு வந்திடலாமில்ல?” என்றாள்.
‘எவ்வளோ பெரிய விசயத்தை பொசுக்குனு கேட்டுட்டாளே’ என நினைத்தவன், “தலைபோற பிரச்சனைலாம் இல்ல, நீ இங்க வரதுக்காகத்தான் வெய்ட் பண்ணிட்டிருந்தேன், பர்மனன்ட்டா இங்கையே தங்கிக்க உனக்கு சம்மதம்னா நானும் வந்துடுவேன்”
“பிரச்சனை என்னனு இன்னும் நீங்க சொல்லல”
‘விடமாட்டா போலயே’ என நினைத்தவன், “இன்னொரு நாளைக்கு சொல்றேனே” என்றான் கெஞ்சலாக.
“ஜெயில்ல இருந்ததுனால வந்த பிரச்சனையா? என்னாலதானா? அப்பாம்மாவை கூட உங்களோட தங்க வைக்க முடியாதபடி அப்படி என்னதான் பிரச்சனை? என்னையும் அங்க வரவேணாம்னுட்டிங்க, பிரச்சனை பெருசு போல, என்னனுதான் சொல்லுங்களேன்” என்றாள் மன்றாடலாக.
“இன்னும் வாழவே ஆரம்பிக்கல, இன்னைக்குத்தான் என்னோட இருக்க, தயவு செய்து புலம்பலை நிறுத்திறியா?” என்றதுதான் பொன்மணி கண்கள் கண்ணீரை வெளியனுப்பியது.
பொன்மணியின் அழுகையில் கோபம் வர, “நீ அழு… நான் ஒர்க் பார்க்கறேன்” என்று தனது பையை தேட, என்னவோ செய் என்பதாய் அமர்ந்திருந்தாள் அழுகையோடு.
அப்படியே விட்டுவிடவும் மனமில்லாமல் போக, “அச்சோ… இவ்வளோ இம்சை பிடிச்சவளா நீ?” என்று பயந்தவன் போல் சொன்னபடி பொன்மணியை அணைத்தான்.
“நிறைய பிரச்சனைல இருக்கிங்க, நிம்மதியில்லாம இருக்கிங்க, ஆனா நல்லா இருக்கமாதிரி காட்டிக்கிறிங்க” என்று கோபித்த போதும் திருனேஷ்வரனிடமிருந்து விலகவில்லை.
தந்தையோடு பேசிய பின்னே மனைவியோடு கூடும் ஆசை சுத்தமாய் வடிந்திருக்க, “என் அம்மாக்கு நம்ம கல்யாணத்தை ஏத்துக்க முடியல, அது சரியாகிட்டா எல்லாம் சரியாகிடும். மத்தபடி நீ நினைக்கிற அளவுக்கெல்லாம் பெருசா ஏதும் பிரச்சனை இல்ல”
“உங்க அம்மா பிரச்சனையை நானும் பெருசா எடுத்துக்கல, நீங்க தங்கியிருக்க இடத்துல எதோ பிரச்சனை இருக்கு, பெத்தவங்க, பொண்டாட்டினு யாரையும் அங்க அழைச்சிட்டு போக முடியாதுனா அது சாதாரண பிரச்சனையா எனக்கு தெரியல, தண்டனையை முழுசா அனுபவிச்சும் பிரச்சனை ஓயலபோல. உங்களுக்கு எதாவது ஆகிடுச்சுனா நான் என்ன பண்ணுவேன்?” என்றாள் வேதனையாக.
“எனக்கு ஒன்னும் ஆகாது பொன்மணி, வா எங்கையாவது வெளில போய்ட்டு வரலாம்” என்றான்.
இத்தனை கேட்டும் தன்னிடம் சொல்ல மறுக்கும் கணவன் மீது மிகுந்த வருத்தம்தான், மீண்டும் மீண்டும் கேட்டு வலிக்க வைக்க வேண்டாம், இன்னொருநாள் கேட்கலாம் என்று நினைத்துக்கொண்டாள்.
தற்போதைக்கு கணவனின் தேவையையாவது பூர்த்தி செய்யலாம் என்று “பைக் வாங்க போலாமா?” என்றாள்.
தந்தையிடம் பைக் தன்னுடையது இல்லை என்று சொன்னதை நினைத்து கேட்கிறாள் என, “சின்ன வார்த்தை விட்டாலும் பிடிச்சிப்பியா?” என்றான் முறைப்பாக.
“இல்ல… ரொம்ப நாளைக்கு வேறவங்களோட பைக் யூஸ் பண்ண முடியாதில்ல, நமக்கு தேவையானப்போ அவங்க கேட்டாங்கனா கஷ்டம்தானே? அதான்”
“நானா பைக்கை விடும்வரை கேட்கமாட்டாங்க” என்றவன், “அவ்வளோ பணம் வச்சிருக்கியா?” என்றான்.
“கொஞ்சம் பணம் கட்டிட்டு மீதியை இ.எம்.ஐ போட்டுக்கலாம்”
“எனக்கு எதாவது தேவைனா கேட்பேன், நீயா கண்டபடி நினைச்சுக்காத. புரியுதா?”
“புரியற பாஷைலதான சொல்றிங்க… புரியுது” என்றாள்.
“சரி வா, வெளில போலாம்”
“ஷாப்பிங் பண்றதுக்காகனா போலாம், இல்லைனா இங்கையே பேசிட்டிருக்கலாம்”
“ம்ப்ச் எனக்கு வெளில போகனும், வா” என்றான் கட்டளையாக.
“நீங்க போய்ட்டு வாங்க, நான் வெய்ட் பண்றேன்”
“தனியா போக எனக்கு தெரியாதா?” என முறைக்க, இவள் அவனின் முறைப்பை கண்டுகொள்ளாமல் தீவிர சிந்தனையில் இருந்தாள்.
“கிளம்பு, உன்னை உன் வீட்டுல விடறேன்” என்றான் கடுப்பாக.
“இதுதான் என் வீடு” என்றாள் இவளும் முறைப்போடு.
இவனின் சஞ்சலமெல்லாம் காணாமல் போய்விட, “வேணாம்டீ… அப்புறம் விட்ட வேலையை தொடர ஆரம்பிச்சிடுவேன்” என்றான் எச்சரிக்கையாக.
error: Content is protected !!