Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அவள் என் பொன்னெழில்

அவள் என் பொன்னெழில் 18.1

அத்தியாயம் 18

அன்னை வீட்டிலிருந்து தனது வீட்டிற்கு வந்துவிட்டார் ரூபலஷ்மி. அதிகாலையிலேயே வந்துவிட்டார் வீட்டிற்கு. ஆனால் இன்னும் கணவனின் முகத்தை பார்க்கவில்லை.

வீட்டிற்குள் வந்ததும் குழந்தைகள் அறைக்கு சென்றவர் அங்கேயே குளித்து, தானே பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று வீட்டிற்கு வந்தவர் மீண்டும் குழந்தைகளின் அறையிலேயே அடைந்துகொண்டார்.



Advertisement

விருப்ப ஓய்வு கடிதத்தை திரும்பப்பெற வலியுறுத்தவே அலுவலக நேரத்திற்கு முன்பாக வீட்டிற்கு வந்திருந்தார் ரூபலஷ்மி. ஆனால் அதை சொல்வதற்கும் கூட கணவனின் முகம் காணப்பிடிக்கவில்லை ரூபலஷ்மிக்கு. கணவன் மீதுள்ள கோபத்தோடு, தன் மீதும் அவ்வளவு கோபம். பல சிந்தனைகளோடு அறையிலேயே இருந்தார்.

நேரம் பத்து மணியை நெருங்கிக்கொண்டிருக்க, “ரூபா, நான் கிளம்பறேன், வந்து கதவை லாக் பண்ணிக்கோ” என்றார் ராஜதுரை.

“சந்திரா” என உரக்க குரல் கொடுத்தார் ரூபலஷ்மி.

Advertisement

“வேலைக்காரியை அனுப்பி அரைமணி நேரமாகுது. நீயே வந்து லாக் பண்ணிக்கோ, என்னைப் பார்க்க பிடிக்கலனா இப்போ கிளம்பறேன், பைக் சத்தம் கேட்ட பின்னயாவது லாக் பண்ணிக்கோ” என்று டேபிள் மீதுள்ள மொபைலை எடுக்க, பட்டென கதவைத் திறந்தார் ரூபலஷ்மி.

Advertisement

வெளியேற நினைத்த ராஜதுரையின் கால்கள் அப்படியே நின்றது. வெளியே வந்தபோதும் ஏதும் பேசாமல் ரூபலஷ்மி நின்றிருக்க, “முதல்ல சாப்பிடு ரூபா” என்றார்.

அழுகையை அடக்க முயன்ற ரூபலஷ்மியின் மூக்கு விடைத்து உதடும் துடித்தது.

“ஈஸியா கிடைச்சதால ஈஸியா தூக்கி எறிய முடிவு பண்றிங்கள்ல?”

Advertisement

இதே கேள்வியை தான் கேட்டாள் தாங்குவாளா என்று நினைத்தபோதும், “அப்படியில்ல ரூபா” என்றார் தன்மையாகவே.

“நான் வேலையை சொன்னேன்” என்றார் இறுகிய முகத்தோடு.

’வேலை ஈஸியா கிடைச்சதா?’ என்று தொண்டை வரை வந்த கேள்வியை முழுங்கி, “எதுவுமே எனக்கு ஈஸியா கிடைக்கலை” என்றார்.

“அப்போ எதுக்கு வேலையை ரிசைன் பண்ண நினைச்சிங்க?” என்றார் காட்டமாக.

“சம்பாத்தியத்துக்கு அர்த்தம் இல்லாம போகும்போது எதுக்கு பணம்?”

“பணத்துக்காகவா வேலை பார்குறிங்க?”

ராஜதுரையின் பரம்பரை சொத்தே பல தலைமுறைகளை வசதியாக வாழவைக்கும். நேர்மையான அதிகாரி. எதற்கும் அஞ்சமாட்டார். அதனாலேயே பல இடங்களுக்கு பணிமாறுதலுக்கு உள்ளாகுபவர்.

தான் பணியிலிருக்கும் இடத்தில் எந்த தவறும் நடக்கக்கூடாது என்பதில் முனைப்பாய் இருப்பார். தவறு செய்தவன் ராஜதுரையிடமிருந்து தப்பிக்கவே முடியாது என்று மக்களிடையே நன்மதிப்பை பெற்றவர். இன்னும் சில மாதங்களில் அஸிஸ்ட்டண்ட் கமிஸ்னராக பதவி உயர்வு பெற இருப்பவர்.

“பணத்துக்காக வேலை பார்க்கலதான், ஆனா பொண்டாட்டியை தக்க வைக்க முடியாதவனுக்கு எது இருந்து என்ன பிரையோஜனம்?” என்றார் வேதனையாக.

“பொண்டாட்டியை தக்க வச்சிட்டா போதும். அவ உணர்வுகள் என்ன? ஆசை என்ன? எதிர்பார்ப்பு என்னங்குறதைப் பத்திலாம் கவலை வேண்டாம். இல்லையா?”

“உன் விசயத்துல தப்பு எல்லாமும் நான்தான். அதுக்கான தண்டனையாத்தான் நான் உயிரா நினைக்கிற வேலையை விட முடிவு செய்தேன்”

“வேலையை விட்டுட்டா எல்லாம் சரியாகிடுமா?” என இடைபுகுந்தார் ஆத்திரமாக.

“போனது போகட்டும், இனி சரி பண்றேன் ரூபா”

“என்ன சரி பண்ணுவிங்க? எதை சரி பண்ணுவிங்க?” என ஆத்திரமாக கத்தி, “என்னையே அசிங்கமா நினைக்க வச்சிட்டிங்கள்ல?” என்றார் அதீத வேதனையோடு.

“எதுக்கு அசிங்கமா நினைக்கிற? உன்னை புரிஞ்சிக்காம தப்பு செய்தவன் நான்” என்றார். ஆனால் தன்மையாக அல்ல, அதட்டலாக. என்னவோ ராஜதுரைக்கு வழக்கம்போலத்தான் பேச வந்தது.

ரூபலஷ்மியின் கண்கள் கலங்கவே, “ம்ப்ச்… அழாத” என்றார் அதட்டலாக.

“அழாம எப்படி இருக்கிறது? டிவோர்ஸ் கேட்குறது நீயா இருந்தாலும் உன்கிட்ட எந்த தப்பும் இருக்காதுனு எனக்கு நல்லா தெரியும், துரை முன்கோபக்காரன், உன்னை காயப்படுத்திருந்தா எனக்காக அவனை மன்னிச்சுடும்மா, குடும்ப கௌரவம் உன்கையிலதான் இருக்குனு மாமா கெஞ்சும்போது எனக்கு எப்படி இருந்தது தெரியுமா?” என்றார் கோபமாக.

மனதால் தடுமாறியதை நினைத்து வருந்துகிறாள் எனப்புரிந்த போதும், தேற்ற மனம் வரவில்லை. கோபத்தை கட்டுப்படுத்துவதே பெரும் பாடாக இருக்க, அமைதியாக பார்த்திருந்தார் மனைவியை.

“உங்களையே சுத்தி சுத்தி வந்துட்டிருக்கும்போதே வீட்டுக்கு வரமாட்டிங்க, இனி இன்னும் என்னை கேவலமா பார்ப்பிங்கள்ல?” எனப் புலம்பினார் வேதனையாக.

“எப்போவும் உன்னை கேவலமா நினைச்சதில்ல ரூபா, இனியும் நினைக்கமாட்டேன்”

“கண்டிப்பா நினைப்பிங்க, உங்களுக்கு தெரியாத என்னோட இன்னொரு பக்கம் தெரியவரும்போது நினைப்பிங்க. அதுமட்டுமில்ல, இவ கேட்ட டிவோர்ஸை கொடுத்துருக்கலாம்னு நினைப்பிங்க”

“உயிரே போனாலும் டிவோர்ஸ் மட்டும் கொடுக்கமாட்டேன்” என்றார் உறுதியாக.

“உங்க நினைப்பு என் மனசுல சுத்தமா இல்லைனு தெரிய வந்தா?” என சுள்ளென வீசினார் வார்த்தையை.

“நீ டிவோர்ஸ் கேட்ட பின்னாடியும் எனக்கு தெரியாம இருக்குமா?”

“அப்புறம் எதுக்கு என்கிட்ட பேசிட்டிருக்கிங்க?”

“என் மனசுல நீ மட்டும்தான இருக்க?” என்றவர் குரலில் பெருகிய வேதனை இருக்க, கணவனை காண விரும்பாமல் அறைக்குள் சென்றுவிட்டார் ரூபலஷ்மி.

“ரூபா வந்து சாப்பிடு” என்றவர் குரல் வேதனை மீண்டு அதட்டலாக மாறியிருந்தது.

கோபமாக வெளியே வந்து, “தயவு செய்து புதுசா செய்ய ட்ரை பண்ணாதிங்க, என்னால சகிக்க முடியல, பசிச்சா சாப்பிடுவேன்” என்றார்.

“புதுசுதான். ஆனா உணர்ந்து பண்றேன். இனியும் செய்வேன், பழகிக்கோ”

“மாமா போய்டுங்க, உங்களால தாங்க முடியாதபடி எதாவது சொல்லிடப்போறேன்” என்றார் எச்சரிக்கையாக.

“டிவோர்ஸ் கேட்டதை விடவா?”

“ப்ச்” என்று மீண்டும் உள்ளே செல்ல முயல, “ரூபா வந்து சாப்பிடு” என்று கட்டளையாக சொல்லி மனைவியை இழுத்து வந்து டேபிளில் அமர வைத்து பரிமாறி, தானும் உண்ண அமர்ந்தார்.

ரூபலஷ்மி எழ முற்பட, தனது காலால் நாற்காலியை முன்னே நகர்த்தி, ரூபலஷ்மியின் முட்டியை முட்ட செய்ய, சுதாரிக்க முடியாமல் நாற்காலியில் அமர்ந்தார் மீண்டும்.

ரூபலஷ்மி இயலாமையோடு பார்க்க, இந்த பார்வை பிடிக்கவேயில்லை ராஜதுரைக்கு. பணியில் மனைவியின் பார்வையும் கம்பீரமும் அறிந்தவர் அல்லவா?  “சைல்டிஷா பிஹேவ் பண்ணாத ரூபா, சாப்பிடு” என்றார் கட்டளையாக

“எனக்குள்ள இருக்க பிரச்சனைகளும் ஃபீலிங்ஸ்சும்தான் ரியாக்‌ஷனா வெளில வருது. என் உணர்வுகள் உங்களுக்கு சைல்டிஷா தெரியுதா?” என்று வெடித்தபோதும், உண்ணாமல் விட்டு தொலையமாட்டான் என்று மனதோடு கடிந்தபடி இட்லியை பெரிய பெரிய துண்டுகளாக உள்ளே தள்ளினார் ஆற்றாமையோடு.

இருவரும் உண்ட பின்னே, அறைக்கு சென்ற ரூபலஷ்மி சீருடையோடு வெளியே வர, “ஓ… டியூட்டிக்கு போறியா?” என்றபடி மனைவியை வழிமறைத்து நின்றவர், “டிவோர்ஸ் பண்ற எண்ணம் போய்டுச்சா இல்லையானு மட்டும் சொல்லிட்டு போ” என்றார்.

“என் தாய்மாமா குடும்ப கௌரவம் மொத்தத்தையும் என் தலை மேல தூக்கி வச்சிருக்கார். உங்களை விட்டு பிரிஞ்சா தற்கொலை பண்ணிக்குவேனு என் அம்மா சொல்றாங்க, எப்படி டிவோர்ஸ் பண்ணுவேன்?” என்றார்.

மனைவியை உயிரற்ற பார்வை பார்த்த ராஜதுரை, பெரு மூச்சிழுத்து, “என் பொண்டாட்டி கவனம் என்னைக்கு என்னை விட்டு போனதோ அப்போவே நான் செத்துட்டேன், உயிரோட இருக்கவங்களுக்குத்தான் மானம், ரோசம், கௌரவம் எல்லாமும் தேவை.

என் அப்பாக்காகவோ, உன் அம்மாக்காகவோ என்னை சகிக்க வேண்டாம், அப்படி நிலையை உனக்கு கொடுக்கமாட்டேன், சட்டப்படி வாங்கினாதான் டிவோர்ஸா? இப்போவும் அப்படியே நினைச்சிக்கோ” என்றவர்,

“ஃபைனலி… எவ்வளோ கோபம் என்மேல இருந்தாலும் வந்துட்டல்ல? தேங்க்ஸ்…” என்றார்.

இப்படியெல்லாம் தணிந்து பேசுபவர் அல்லவே தனது கணவன். டிவோர்ஸ் கேட்டதையே தாங்கிக்கொள்ளமாட்டார் என்று நினைத்திருக்க, தற்போதும் உனக்காக வரவில்லை, என் மனதில் நீ இல்லை, வீட்டு பெரியவர்களுக்காக வந்திருக்கிறேன் என்று சொல்லியும் கோபமில்லாமல் இருக்கிறாரே என்று அதிர்ந்து பார்த்தார்.

கணவர் இப்படி வெட்டியாக வீட்டில் இருக்கும் ரகம் இல்லை என்பதும் கூட தற்போதுதான் உரைக்க, எதையோ தெரிந்திருக்கிறார் என்று யோசிக்க, திருனேஷ்வரன் இவரிடம் உதவி கேட்டதாய் சொன்னது நியாபகம் வந்ததும், கணவனுக்கு எல்லாம் தெரிந்துவிட்டது என்று உணர்ந்த கனம் தன்னையறியாமல் தவித்துவிட்டார் ரூபலஷ்மி.

கால்கள் தன்போல் ராஜதுரை சென்ற அறைக்கு செல்ல, “நான் இருக்கேனேனு டியூட்டிக்கு போக வேண்டாம், உனக்கு ரெஸ்ட் எடுக்கனும்னா எடு, நான் லன்ச்சுக்குத்தான் வெளில வருவேன்” என்று குழந்தைகளின் அலமாரியில் என்ன இருக்கிறதென்று ஆராய ஆரம்பித்தார்.

ரூபலஷ்மி நின்றேயிருக்க, “ரூபா போ” என்றார் கட்டளையாக.

“மாமா” என்ற குரல் பலமின்றி வெளிவர, “அவனை ஒன்னும் பண்ணமாட்டேன் போ” என்றார் இறுகிய முகத்தோடு.

இடிந்து போனார் ரூபலஷ்மி. சிறு தவறு செய்தவனென்றாலும் வாய் பேசும் முன்னே கைதான் பேசும் ராஜதுரைக்கு. அப்படியிருக்க திருனேஷ்வரனை எப்படி விட்டுவைத்தார்?

திருனேஷ்வரனை மனதிலிருந்து தள்ளி வைத்த அடுத்த நொடியிலிருந்து தன் தவறு கணவனுக்கு தெரியவரும்போது, தன்னை காட்டிலும் அவனின் கதி என்னாகுமோ என்ற பயம்தான் அதிகமிருந்தது.

அசிங்கம்தான் என்றாலும் தனது தவறை கணவனிடம் ஒப்புகொள்வதில் எந்த தயக்கமும் இல்லை ரூபலஷ்மிக்கு. திருனேஷ்வரனின் நலம் கருதியே மறைக்க நினைத்தார். இதோ தற்போது அனைத்தும் தெரிந்தும் இத்தனை பரிவு காட்டும் கணவன் ரூபலஷ்மிக்கு முற்றிலும் புதியவராக தெரிந்தார்.

ஆனால் இந்நிலையும் பிடிக்காமல் போகவே தனதறைக்குள் சென்றுவிட்டார்.

ரூபலஷ்மியை காணும் வரைக்கும், மனைவி வந்தால் தேவையான நேரங்களில் நான் அருகில் இல்லாமல் போனதற்கு மன்னிப்பு கோர வேண்டும், இனி அவளுக்காக நேரம் ஒதுக்க வேண்டும், நடந்தவைகளை மறந்து விடு, இனி நிம்மதியாக வாழ்வோம் என்றெல்லாம் சொல்லி, தன்னை ஏற்றுக்கொள்ள வைக்கவேண்டும் என்றுதான் நினைத்திருந்தார் ராஜதுரை.

ஆனால் நேரில் பார்த்த பின்னே குணம் மொத்தமாக மாறிப்போனது. என்னதான் தன்மீது தவறிருந்தாலும் தன்னை விடுத்து எப்படி இன்னொருவனை நினைக்கலாம் என்று நினைக்க நினைக்க ஆறவேயில்லை மனம்.

எத்தனை தைரியம் இருந்தால் வீடு பார்த்து கொடுத்து குடியமர்த்தியிருப்பாள்? அன்று நாற்காலியோடு தன்னை கட்டி வைத்து திருனேஷ்வரன் பேசிய வார்த்தைகளை நினைத்தவருக்கு, அவன் நல்லவனாக இருப்பதால் தவறு நடக்கவில்லை. இல்லையேல்… என்று நினைத்தவரால் மனைவியிடம் இயல்பாக பேச முடியாமல் போனது.

அனைத்திற்கும் மேலாக அத்தை வீட்டில் அவளின் தவறை உணர்ந்திருக்கிறாள். அதன் பின்னும் கூட தனக்காக வீட்டிற்கு வரவில்லை என்று ரூபலஷ்மி சொன்னது பெரும் காயத்தை உண்டாக்கவே, எதைப்பற்றியும் விசாரிக்கும் தருணம் இதுவல்ல என்றும், இனி விசாரித்து என்ன லாபம் என்றும் தோன்றியது.

இத்தனைக்கும் இடையில் குடும்ப கௌரவம் கருதியாவது வந்துவிட்டாளே என்றும் நினைக்காமல் இருக்க முடியவில்லை. இத்தனை அன்பா மனைவி மீது வைத்திருக்கிறேன் என்றும் தோன்றியது… இத்தனை பெரிய விசயத்தை கண்டிக்காதவன் ஆண்மகனா என்றும் தோன்றியது.

ரூபலஷ்மி கத்தி அழுவது காதில் விழ, அவ்விடம் வந்தார். ஆனால் அறைக்குள் செல்லவில்லை.

“உங்கமேல எந்த தப்பும் இல்லையில்ல? நான்தான் தப்பு. எனக்கு உணர்ச்சி இருக்கக்கூடாது. ஆசை இருக்கக்கூடாது. கல்யாணம் செய்தா புருசன் எப்படியோ அப்படித்தான் பொண்டாட்டியும் இருக்கனும், ஆமாவா? ஆமாவா மாமா? என்னை கெட்ட பொம்பளை ஆக்கிட்டிங்க” என்று ஆத்திரத்தோடு பேசிக்கொண்டிருந்தார் தன்போல.

மனைவியை தேற்றவும் மனம் வரவில்லை. அவள் அழுவதும் பிடிக்காமல் போனது. “என் மேல தப்பிருந்தாலும் நீ போன பாதை தப்பு ரூபா… எத்தனை விளக்கம் கொடுத்தாலும் தப்பு தப்புதான்.

எல்லாம் தெரிஞ்சும் உன்னை அவாய்ட் பண்ண முடியாம தவிச்சிட்டிருக்கேன் பாரு… நான்தான் முட்டாள். பெரிய முட்டாள்” என்று அழுத்தமாக சொல்லி, “டிரஸ் சேன்ஜ் பண்ணிட்டு தூங்கு” என்று கட்டளையிட்டு வெளியேறினார் ராஜதுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!