Skip to content
Post Views: 7,470
எட்டு மணிபோல் திருனேஷ்வரனுக்கு அழைப்பு வர, “சொல்லுங்கப்பா, ஹெல்த் ஓகேதானப்பா?” என்றான்.
“நான் நல்லா இருக்கேன் திருனேசு. அம்மா சென்னை வரனும்னு ஒரே பிடிவாதம். உன்கிட்ட சொன்னா நீ வரவேணாம்னு சொல்லுவ, நேத்து பேசும்போது அவகிட்ட பேசாம வச்சிட்டியா…? ரொம்ப வருத்தப்பட்டா. இப்படியே போனா என்கிட்டயிருந்து ரொம்ப தள்ளி போய்டுவான், எனக்கு பயமாயிருக்குனு ஓயாம புலம்பறா.
எனக்கும் வேற வழி தெரியல திருனேசு. விடியகாலை நாலு மணிக்கெல்லாம் கிளம்பிட்டோம். கோயம்பேடுல இருந்து எப்படி வரனும்னு சொல்லு, நாங்க ஆட்டோ பிடிச்சு வந்துடறோம்” என்றார் வில்வராஜ்.
சொல்லாமல் கிளம்பியதில் கோபம் வந்தபோதும் வந்துவிட்டோம் என்பவர்களிடம் என்ன சொல்வது என்று, “பஸ் பிடிச்சு வேளைச்சேரி வந்துடுவிங்களாப்பா? இல்ல நான் வரவா?” என்றான்.
Advertisement
“நாங்க வந்துடறோம்ப்பா”
“சரி வேளைச்சேரி வந்துட்டு கால் பண்ணுங்க” என்று இணைப்பை துண்டித்தவன், சரியாக அவர்கள் வரும் நேரம் கணக்கிட்டு, அரைமணி நேரம் வேலை செய்து முடித்து, மற்றவர்களுக்கு செய்ய வேண்டிய வேலையையும் பணித்து, ஒரு மணிநேரத்தில் வருவதாக ராஜ்குமாரிடம் சொல்லி கிளம்பினான்.
திருனேஷ்வரனுக்கு அழைப்பு வர, தான் இருக்கும் இடத்தை சொல்லி, “எங்க இருக்கிங்கப்பா?” என்றவன் கண்ணில் பெற்றோர் தென்பட, “நான் பார்த்துட்டேன்ப்பா, அங்கேயே இருங்க வந்துடறேன்” என்று அவர்களிடம் சென்றான்.
Advertisement
சொல்லாமல் வந்ததால் மகன் திட்டுவானோ என்று செல்லம்மாள் பார்க்க, “சாப்பிட்டிங்களாம்மா?” என்றான்.
Advertisement
“பழையது ஊத்தி எடுத்துட்டு வந்தேன், அதை குடிச்சோம்” என்றார்.
“சரி வாங்க” என்றவன் ஆட்டோ நிறுத்தத்திற்கு அழைத்துச் சென்று, தனது விலாசம் சொல்லி, “நீங்க போங்க, நான் பின்னாடியே வரேன்” என்று ஆட்டோவை பின் தொடர்ந்து வீடு வந்தான்.
ஆட்டோவிற்கு பணம் கொடுத்தனுப்பி, வீட்டை திறந்துவிட்டு, “உள்ள போங்கப்பா, நான் வந்துடறேன்” என்று பத்து நிமிடத்தில் உணவு வாங்கிக்கொண்டு வந்தான்.
Advertisement
பொன்மணி மகனோடு இருக்கிறாளா? இல்லையா? என்பது பெரும் சந்தேகமாக இருக்க, அதனை நிவர்த்தி செய்ய வேண்டி, “ஏன்ப்பா வீட்டுல சமைக்கிறதில்லையா?” என்றார்.
“சமையல் கத்துக்க நேரமில்லைம்மா, விருப்பமும் இல்ல”
“இல்லப்பா… பாத்திர பண்டம் இருந்தா நான் சமைச்சிருப்பேனே” என்றார் செல்லம்மாள்.
“வீட்டுல ஏதும் இல்லம்மா”
“வீடு இவ்வளோ வசதியா இருக்கு? எங்களை ஏன் வரவேண்டாம்னு சொன்ன?”
“வசதியா இருந்தா போதுமாம்மா? இந்த வீட்டுக்கு வாடகை இல்ல, பாவம் பார்த்து தங்க இடம் கொடுத்திருக்காங்க, அவங்களுக்கு சங்கடம் தரக்கூடாதில்ல?” என்றவன், “சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க, நான் ஈவ்னிங் வரேன்” என்று கிளம்பப்பார்க்க, “திருனேசு… உன்னோட இருக்கத்தான் வந்துருக்கேன், நீ கிளம்பற” என்றார் ஏமாற்றமாக.
“டைட் ஒர்க்ம்மா, நான் போயே ஆகனும். நைட் பேசலாம், டோர் லாக் பண்ணிட்டு தூங்குங்க” என்று கிளம்பிவிட்டான் அலுவலகத்திற்கு.
வீட்டை ஆராய்ந்தவருக்கு, பொன்மணி இங்கிருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் போகவே, மனம் அத்தனை நிம்மதி அடைந்தது.
மேலும் பத்து நிமிட ஆராய்ச்சிக்கு பின்னே, “குறைவில்லாம சாமான் இருக்கு. இத்தனை வசதியோட இவ்வளோ பெரிய வீட்டுல, அதுவும் சென்னையில… ஓசில யாருங்க தங்கவிட்டுருப்பாங்க?” என சந்தேகத்தோடு வினவினார் கணவனிடம்.
“இப்படி கேள்விலாம் கேட்பனுதான் வரவேணாம்னு சொல்லியிருப்பான் போல, ஜெயிலுக்கு போறதுக்கு முன்னாடி சென்னையில மூனு வருசம் பக்கம் வேலை பார்த்திருக்கான். தெரிஞ்சவங்க யாரும் இருக்கமாட்டாங்களா?” என முறைத்து, “பசிக்குது… சாப்பிட எடுத்து வை” என்றார் வில்வராஜ்.
கணவன் எடுத்துரைத்த போதும் செல்லம்மாள் மனது கேட்கவில்லை. இத்தனை வசதி இருந்த பின்னும் ஏன் நம்மளை சென்னை வர அனுமதிக்கவில்லை என்ற யோசனையோடு உணவுண்டார்.
பின்னே, “பாத்திரம் இருக்குங்க, கடை எதாவது இருக்கானு பார்த்து பால் வாங்கிட்டு வரேன், டீ வைக்கலாம், அப்படியே நைட்டுக்கு சமைக்க வாங்கிட்டு வரேன்” என்றார்.
“நீ தனியா போக வேண்டாம், நானும் வரேன்” என்று இருவரும் வெளியே வந்து கடையை தேடியபடி நடைபோட்டனர்.
*** *** ***
கணவனுக்கு தனது விசயம் தெரிந்துவிட்டதே என்று அது குறித்து விவாதிக்க திருனேஷ்வரனுக்கு அழைத்தார் ரூபலஷ்மி. திருனேஷ்வரன் அழைப்பை ஏற்கவில்லை என்றதும், முன்பு அவனை நோட்டமிட நியமித்த ஆளிற்கு அழைப்பு விடுத்து, “திருனேஷ்வரன் வீட்டுல இருக்கானா?” என்றார்.
“பனெண்டு மணிபோல வந்தார் மேடம், கூட இரண்டு பேர் வந்தாங்க, அவங்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்துட்டு சார் கிளம்பிட்டார்” என்றவன், தயக்கத்தோடு இழுத்தார்.
கூட இரண்டு பேரா? பொண்டாட்டியா இருப்பாளோ? அப்படியேன்னாலும் இன்னொருத்தர் யார்? அப்படியெல்லாம் யாரையும் அழைத்து வரமாட்டானே என்று யோசித்தவர், விபரம் சொல்பவனின் தயக்கத்தையும் உணர்ந்து, “யார் வந்தா? எத்தனை வயசிருக்கும்?” என்றார் விசாரணையாக.
“சாரோட பேரண்ட்ஸ்னு நினைக்கிறேன் மேடம், ஃபேஸ்கட் அப்படித்தான் இருக்கு” என்றவன், “அவங்களுக்கு எதோ டௌட் போல, கடைக்கார அண்ணாச்சிகிட்ட துருவி துருவி கேள்வி கேட்டுட்டு இருந்தாங்க” என்றான்.
“என்ன கேட்டாங்க?”
“அது தெரிலய மேடம், இனிதான் விசாரிக்கனும்” என்றார்.
“சரி என்னனு கேட்டுட்டு எனக்கு கால் பண்ணு” என்று இணைப்பை துண்டித்தார்.
முன்பு தன் வாழ்க்கை தனது உரிமை… என்ற நினைப்பெல்லாம் மாறி, நாம் வேறு அங்கு பல முறை சென்று வந்திருக்கிறோமே… அவனின் பெற்றோரிடம் தவறாக செய்தி சென்றால் என்னவாவது என்று கவலையானது ரூபலஷ்மிக்கு.
*** *** *** ***
மாலை ஐந்து மணிபோல் திருனேஷ்வரனின் அலுவலகத்திற்கு வந்த பொன்மணி, உள்ளே சென்றால் கோபமடைவான் என்று இவளின் இருப்பை செய்தியாக அனுப்பிவிட்டு வெளியிலேயே காத்திருந்தாள்.
காலையில் பொன்மணி அழைத்தபோதும் அழைப்பை ஏற்கவில்லை திருனேஷ்வரன். மாறாக ‘டோன்ட் வேஸ்ட் மை டைம்’ என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான்.
மனைவி தற்போது அனுப்பிய செய்தி பார்த்த பின்னும் கோபம்தான் வந்தது. கண்மூடி சற்று நேரம் இருக்கையிலேயே சாய்ந்தமர்ந்தவன், மேலும் இரண்டு மணி நேரம் வேலை செய்த பின்னேதான் வெளியே வந்தான்.
மனைவி அருகில் வேண்டும் என்று மனம் தவியாய் தவிக்கவே, நேற்றொருநாள் பிரிவையே திருனேஷ்வரனால் தாள முடியவில்லை. எப்படியும் தன்னோடு வசிக்க சம்மதிக்கமாட்டாள் என்ற எண்ணம் இருக்கவே, நேரில் பார்க்கவும் பிடிக்கவில்லை.
தவிப்பாக, அக்கறையாக, தனிமையில் மோகமாக, கிறக்கமாக, மயக்கமாக என பல பாவனைகளை காட்டும் அவளின் அகன்ற விழிகள் திருனேஷ்வரனை பித்தம் கொள்ளச் செய்திருந்தது.
நேரில் பார்த்தால், சத்தம் வெளியே வராமல் தனக்கு மட்டும் புரியும்படி பேசும் அவளின் சிப்பி உதடுகள் தன்னை நிலையிழக்கச் செய்யும், வாழ வரமாட்டாள். ஆனால் அக்கறை காட்ட வந்துட்டா என்ற கோபத்தோடு வெளியே வந்தவன் கண்முன்னே வந்து நின்றாள் களைத்த தோற்றத்தோடு.
“சாப்பிடலையா?” என்றவன் முகம் கோபத்தில் சிவந்தது.
“ட்ரை பண்ணினேன், உள்ள இறங்கல” என்றாள் முணுமுணுப்பாக.
கையை முறுக்கி பல்லை கட்டித்தவன், வேக நடையோடு பார்க்கிங் சென்று பைக்கை எடுத்து வந்து, “உக்காரு” என்றான்.
முன்பொரு நாள் இருவரும் சென்ற உணவகத்திற்கு சென்றவன், உணவுகளை ஆர்டர் கொடுக்க, “இல்ல… இப்போ சாப்பிட முடியாது, ஜுஸ்” குடிக்கிறேன்” என்றாள்.
பழரசத்தையும் ஆர்டர் செய்து, சீக்கிரம் உணவு வரவும் கோரிக்கை விடுத்து காத்திருந்தான்.
ஐந்து நிமிடம் கடந்த போதும் ஏதும் பேசவில்லை பொன்மணியிடம். பார்வையும் மொபைலில் இருந்தது. பழரசம் வரவும், “குடி” என்றான்.
“உங்களுக்கு” என்றவளை முறைக்கவே ஏதும் சொல்லாமல் குடித்தாள். முகம் அத்தனை பாவமாக இருக்கவே, இத்தனை அன்பை வைத்திருப்பவள் தன்னோடு வசிக்க மறுக்கிறாளே என்று முறைத்து பார்த்திருந்தான்.
உணவு வந்துவிட, “போதும்” என்று அவளிடமிருந்து பழரசத்தை வாங்கியவன், “சாப்பிடு” என்றான்.
“எனக்கு நிஜமா பசிக்கல” என்றவள் உதடுகள் அழுகையை அடக்கத் துடிக்க, “என்னை கடுப்பேத்தாதடீ” என்றான் கட்டளையாக.
சிரமப்பட்டேனும் கொஞ்சமாவது உண்ணலாம் என்று உணவில் கையை வைத்தவள், “நீங்களும் சாப்பிடுங்களேன்” என்றாள் கெஞ்சலாக.
மனைவி உண்ண வேண்டுமே என “ஜூஸ் குடிக்கிறேன், நீ சாப்பிடு” என்றவன் அவளிடமிருந்து பறித்த பழரசத்தை அருந்த தொடங்க, ஒரு வாய் சாப்பிட்டு அடுத்து சாப்பிடும் முன்னே குமட்டுவது போல இருக்க, அவளின் முகத்தை பார்த்திருந்தவன், “வாமிட் வருதா?” என்றான் பதட்டமாக.
ஆமாம் என்பதாய் தலையசைக்க, எதிர் புறம் அமர்ந்திருந்தவன் மின்னலென அவளருகே வந்து நெற்றி கன்னம் தொட்டு ஆராய, “இல்ல காய்ச்சல் இல்ல, இப்படி டைம்ல என்னால சாப்பிட முடியாது” என்றாள் சோர்வாக.
“எப்படி டைம்?” என்றவன், “பீரியட்ஸா?” என்றான்.
ஆமாம் என்பதாய் தலையசைத்ததும், “முட்டாள்… இவ்வளோ முடியாம எதுக்கு வந்த?” என கடுகடுத்து, தன்னோடு சாய்த்தபடி அழைத்துச் சென்று முகம் கழுவ வைத்து அழைத்து வந்தவன், “ஜூஸ் மட்டுமாவது குடிக்கிறியா?” என்றான்.
“பத்து நிமிஷம் கழிச்சு குடிக்கிறேன், நீங்க சாப்பிடுங்க” என்றாள்.
“லன்ச்சே அஞ்சு மணிக்குத்தான் சாப்பிட்டேன், பசியில்ல, நீ ஜூஸ் குடிச்சதும் கிளம்பலாம், வீட்டுக்கு போனாலாவது ரெஸ்ட் எடுப்பல்ல?” என்றான் அக்கறையாக.
பழரச பாட்டிலை பிடித்தபடி, “எனக்கும் உங்களை பிரிஞ்சிருக்குறது ரொம்ப கஷ்டமா இருக்கு. நேத்து நைட்டெல்லாம் தூக்கமே வரல” என்றவளுக்கு கண்ணீர் வெளிக் கிளம்ப, “மூச்… அதைப்பத்தி ஏதும் பேசக்கூடாது. டையர்டா இருக்க. ஜூஸ் குடி, கிளம்பலாம்” என்றான் மிரட்டலாகவே.
“பேசலைனா இன்னைக்கு நைட்டும் தூக்கம் வராது” என்றவள், “கோபப்படாதிங்க, பெரியவங்க உணர்வுக்கும் மதிப்பு கொடுக்கனும்னுதான் அப்படி சொன்னேன். இன்னும் நாலஞ்சு நாள் போகட்டும். அங்கையே வந்துடறேன்.” என்றாள்.
தன்னோடு வந்துவிடுவேன் என்றதும் மனம் சற்றே இதமாகிட, “இன்னைக்கே வந்தா என்ன?” என்றான்.
“இ… இன்னைக்கு” என்று பொன்மணி திணற, “ம்ப்ச்… என்கூட இருந்தா போதும், நைட்டெல்லாம் உன்கூட பேசிட்டு தூங்குவேன்ல? இப்படி பசியோட உன்னை இருக்க விடமாட்டேன், நல்லா பார்த்துப்பேன், நீ ரெஸ்ட் எடுக்கலாமில்ல?” என்றான் அக்கறையாக.
கணவன் கோபம் குறைந்துவிட்டதே என பொன்மணியின் முகம் மலர்ந்துவிட, “போகப்போக இதெல்லாம் பழகிடுமோ என்னவோ… நாம இப்போதான?” என்றவள் பேச்சு நின்று முகமும் சிவந்துவிட, இவன் ரசனையாய் பார்த்திருக்க, தலை குனிந்தவள்,
“எனக்கு உங்களை புரியும்தானே? உங்க பக்கத்துலயே இருந்துட்டு ஏதும்” கொடுக்காமல் என்ற வார்த்தையை முழுங்கியவள், “என்னால தூங்க முடியாது. நாலு நாள் கழிச்சு வரேன். மொத்தமா வந்துடறேன்” என்றாள்.
‘சாகடிக்கிறாளே…’ என மனதிற்குள் ரசனையாய் சொன்னவன், “பேச்சு மாறமாட்டல்ல?” என்றான்.
இல்லை என்பதாய் தலையசைக்க, “ஜூஸை குடி, இந்த இடத்தை விட்டு முதல்ல கிளம்பலாம். இல்ல, இங்கையே உதட்டை டேமேஜ் பண்ணிடுவேன்” என்று கிளம்புவதில் அவசரம் காட்டினான்.
பழரசம் அருந்திய பின்னே, பொன்மணி தங்கியிருக்கும் வீட்டிற்கு சென்றவன், அவளின் தனியறைக்குள் செல்ல, பின்னோடு வந்தாள் பொன்மணி.
“ரொம்ப சோதிக்கிறடீ, இப்போ ஸிக்கா இருக்கங்கிறது விசயமேயில்ல. நான் தூங்கி எழும் நேரம் நீ கண்ணு முன்னாடி இருக்கனும். தினமும். முடிஞ்சவரை சீக்கிரம் வரப்பாரு” என்று மென்மையாய் முத்தமிட்டு, “டேக் கேர்” என்று கிளம்பினான் இதமான மனநிலையோடு.
error: Content is protected !!