Post Views: 4,466
அத்தை வீடு துடைக்கும் போது அவளை கவனமாக இருக்க சொல்லுங்க டைல்ஸ் வழுக்கிடப் போகுது. பாத்ரூம் போகும்போது கூட யாராவது இருங்க. வாக்கிங் போகாம உங்களை ஏமாற்றுவா கொஞ்சம் மிரட்டி உருட்டி நடக்க வைங்க!
டியூ டேட் இன்னும் இருபது நாள் தான் இருக்கு அவ கூடவே இருங்க ப்ளீஸ்… அம்மா சொன்னாங்க முதல் பிரசவம் முன்ன பின்ன இருக்கும்னு ஹாஸ்பிடல் போவதற்கு எல்லாம் இப்பவே பேக் பண்ணி ரெடியா வச்சுக்கோங்க! ஹாஸ்பிடல் ஃபைல் எடுத்து பக்கத்தில் வச்சுக்கோ சுப்பு.
திடீர்னு பெயின் வந்தால் பெரம்பலூர் வேண்டாம் திருச்சி கூட்டிட்டு போயிடுங்க நான் உடனே வந்து சேர்ந்திடுவேன். திருச்சி அப்பலோவில் பார்த்துக்கலாம்.
மாப்பிள்ளை பேசப்பேச மாமனாரும் மாமியாரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு சிரிப்பதா? பெருமைப்படுவதா? என்று தெரியாமல் விழி பிதுங்கி அமர்ந்திருந்தனர்.
Advertisement
சுகன்யாவை தனியே அழைத்து உங்க பிரசவ வலியை பற்றி அவளுக்கு எதுவும் சொல்லிடாதீங்க ப்ளீஸ்!அவ ஏற்கனவே பயந்துபோய் இருக்கா என்றான்.
கிராமத்துதனமாய், ஒல்லி பிச்சனாய்,அசடாய் தெரிகிறானே என்று பெண் பார்க்க வந்த அன்று சுகன்யா தனக்குள் நினைத்ததுண்டு.
ஒவ்வொன்றையும் இவன் எவ்வளவு யோசிக்கிறான்….! பிரமித்து போனாள். உண்மையிலேயே சுப்ரஜாவோடு தன்னை ஒப்பிட்டு பார்த்தது அவள் ஏக்கம் கொண்ட மனது.
Advertisement
இரவு முழுவதும் மனைவிக்கு அவ்வளவு அறிவுரைகளை அள்ளி தெளித்து இருந்தான் அவள் அயர்ந்து உறங்கியே போனாள். உடம்பில் சின்னதா ஒரு மாற்றம் இருந்தாலும் உடனே உங்க அம்மாக்கு சொல்லிடனும் அடுத்த நிமிஷம் எனக்கு போன் பண்ணிடனும். மாமாவோட ஃப்ரெண்ட் கார் சொல்லி இருக்கேன் அவங்க வீட்ல டிரைவர் எப்போதும் இருப்பாங்களாம். நீ பயப்படாம தைரியமா இருக்கணும்!
Advertisement
போலீசு ரொம்ப பண்ணாத உலகத்திலேயே உன் பொண்டாட்டி மட்டும்தான் பிள்ளை பெத்துக்க போற மாதிரி ஓவர் சீன் போடுற…. உண்மையிலேயே அலுத்துக்கொண்டாள்.
அவனவன் பொண்டாட்டி பிள்ளை பெத்துக்கிறது அவன் பாடு.ஆனா என் பொண்டாட்டி பிள்ளை பெத்துக்கிறது என் பொறுப்பு,என் பாடு எனக்கு தான் தெரியும்! குரல் கரகரத்துவிட்டது.
தோட்டத்து செடிகளுக்கு தண்ணீர் விட சொன்னாலே ஹோஸ் பைப்பை ரொம்ப நேரம் பிடிக்க முடியாமல் கை வலிக்கிறது என்பாள்…. சப்பாத்தி மாவு பிசையவே கை நோகும் என்று சினுங்குவாள். இவள் எப்படி பிள்ளை பேற்று வலியை தாங்குவாள் என்று கலக்கமாய் இருந்தது அவனுக்கு.
Advertisement
கிளம்பவே மனம் இல்லாமல் தான் மனைவியை விட்டு கிளம்பி சென்றான்.
“——————————–“
ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது ஃபோன் செய்து விடுவான்.
யோவ் போலீசு உனக்கே அசிங்கமா இல்லையா? பொண்டாட்டிக்கு ஃபோன் பேசவா உனக்கு சம்பளம் தராங்க? பங்கமாய் கலாய்த்தாள் சுபி. வெளி பேச்சுக்கு அவள் கேலி பேசினாலும் உள்ளுக்குள் உடைந்து கதறி விட்டாள் அவனது பேரன்பில்.
முதலில் நான் மனுஷன், இந்த சுப்பம்மா புருஷன், அப்புறம் தான் போலீஸ்காரன்.போடி வேலையை பார்த்துகிட்டு!
நாள் நெருங்க நெருங்க இவன் தான் பிரசவ பயத்தை அனுபவித்தான்.
ஏதேதோ சந்தேகம் கேட்டு பாப்பாத்தியை குடைந்து எடுத்துக் கொண்டே இருப்பான்.
டேய் தம்பி என் கோபத்தை கிளறாதே சொல்லிட்டேன்…. உன் பொண்டாட்டிக்கு பதில் உனக்கு பிள்ளை பெத்துக்க வாய்ப்பு கிடைச்சா கண்டிப்பா நீயே பெத்துக்குவடா தம்பி…. மனுஷி டென்ஷன் ஆகிவிட்டார்
சனிக்கிழமை ஆனால் இரவு எந்நேரமாய் இருந்தாலும் மாமியார் வீட்டில் சென்று விழுந்து விடுவான்.
பிரசவ காலத்தில் மனைவி எதிர்பார்ப்பது கணவனின் அனுசரணையை தானே…அதுவே அவளுக்கு அசுர பலம் கொடுக்கும் அல்லவா?
பச்சிளங்குழந்தையை பாதுகாப்பது போல் மனைவியை பொத்தி பொத்தி பார்த்துக் கொள்வான். அடிக்கடி இரவில் எழுந்து எழுந்து பார்ப்பான். அவளது அறையிலும் சரி பாத்ரூமிலும் சரி விளக்கு விடிய விடிய எரிந்து கொண்டே இருக்கும்.
சுபி நீ பெத்து மட்டும் கொடுத்துட்டா போதும் உன் புருஷன் வளர்த்தெடுத்து விடுவார் என்று சுகன்யா அவ்வளவு கேலி பேசுவாள்.
பாப்பாத்தி மருமகளோடு தினமும் போனில் பேசுவார். எப்படி இருக்க வேண்டும்,. பிரசவ வலி என்னென்ன அறிகுறிகளை கொடுக்கும் என்று தனக்குத் தெரிந்தவற்றை மருமகளுக்கு கூறுவார்.
ஓரகத்திகளும் மாற்றி மாற்றி சுபியோடு பேசிக்கொண்டு தான் இருந்தனர்.
பிரசவத்தை எண்ணி சுபிக்கு ரொம்பவெல்லாம் பயமில்லை. தன் அம்மா தன்னை இப்படித்தானே வலியோடு பெத்தெடுத்து இருப்பாள் என்ற எண்ணம். பெண்ணாய் பிறந்த எல்லோரும் இந்த வலியை அனுபவித்து தானே இருப்பார்கள் என்ற மனோதிடம் அவளுக்கு வலுவாகவே இருந்தது.
“—————————-“
சார் நானே ஒரு வாரம் எம் எல் கேட்கலாம்னு இருந்தேன். இப்போ என்னை அக்கியூஸ்டை ஹை கோர்ட்டில் ப்ரொடியூஸ் பண்ண கொண்டு போக சொல்றீங்களே தயங்கி நின்றான் மன்னர்.
என்னய்யா கதை? சப் இன்ஸ்பெக்டர் வேடிக்கையாக கேட்டார்.
இதுவரை மன்னர் எந்த வேலையையும் மறுத்தது கிடையாது. துடிப்புடனும் ஆர்வமுடனும் செய்பவன்.
சார் என் வைஃப்க்கு டெலிவரி டேட் இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு.
ஓ அப்ப சரி நான் வேற ஏற்பாடு பண்றேன்… என்றவர் தவிப்புடன் பார்த்திருந்த அவன் முதுகில் தட்டி சென்றார்.அதிகாரியாக இருந்தாலும் அவரும் மனிதன் தானே…
எப்போ வறீங்க? ஏக்கமும் சோர்வுமாய் கேட்டது சுபியின் குரல்.
என்னடா சுப்பு டயர்டா இருக்கா? பதறித்தான் போனான்.
அப்படி எல்லாம் இல்ல நல்லா தான் இருக்கேன்.
நீங்க சாப்டீங்களா?
இப்போதான் சாப்பிட்டு வந்தேன்.
நீ சாப்டியா?
என்னவோ சாப்பிடவே பிடிக்கல அம்மா கம்பெல் பண்ணி ரெண்டு இட்லி சாப்பிட வச்சாங்க….
சரி உடனே போய் படுக்காமல் கொஞ்ச நேரம் வாக் பண்ணிட்டு ஹாட் வாட்டர் குடி. அப்புறமா படு!
நீங்க எப்போ வருவீங்க? மீண்டும் அதே குரல்….அவனை ஏதோ செய்தது.
எத்தனை வீரமங்கை ஜான்சி ராணியாக இருந்தாலும் பிரசவத்திற்கு அஞ்சாத பெண்கள் இந்த உலகத்தில் யாருமே இல்லை.
எந்நேரத்திலும் பிரசவ வலி வரலாம் என்ற நிலையில் இருப்பவள் கணவனை தேடுவது இயல்புதானே….
தனக்கு ஏதோ ஆகிவிடும் என்றும் கணவன் அருகில் இருந்தால் தனக்கு தீங்கு நேராமல் காப்பாற்றுவான் என்றும் அவன் ஒரு சூப்பர் ஹீரோ ரேஞ்சுக்கு அவன் அருகாமையை அவள் ஆழ்மனம் தேடி ஏங்கியது.
என்னம்மா…. பயமா இருக்கா?
உண்மையில் கேட்கும் அவனுக்குத்தான் பயமாக இருந்தது.
இல்ல உங்களை பார்க்கணும் போல இருக்கு,உங்க தோளில் சாயனும் போல இருக்கு.
முந்தாநாள் தான் வந்து போனான்…. அவள் தாய் வீட்டிற்கு வந்து இருபது நாள் ஆகிறது அதற்குள் ஐந்து முறை போய் பார்த்து வந்தான் மன்னர்.
அக்கம் பக்கத்தில் கூட கிண்டல் செய்தனர்…. சரியான மாப்பிள்ளை தான் பிடிச்சு இருக்கீங்க. நவமணிக்கு வெட்கமாய் போய்விட்டது.
மாப்பிள்ளைக்கு தம்பி இருந்தா சொல்லுங்க நம்ம பொண்ணை கொடுத்து விடுவோம் என்று ஒரு பங்காளி கிண்டல் செய்து விட்டுப் போனார்.
அவ்வளவு தாங்கினான் மனைவியை. தன்னைத் தவிர வேறு யாராலும் தன் மனைவியை கவனித்துக் கொள்ள முடியாது என்ற ஒரு எண்ணம் போலும்.
சரி நீ போய் படு…காலையில் வந்து சேர்ந்திடுவேன்!
சாரி உங்களை டிஸ்டர்ப் பண்றேன்னு நினைக்கிறேன். நீங்க பொறுமையாவே வாங்க ஒன்னும் அவசரம் இல்லை.
“————————–“
அதிகாலை மூன்று மணி…. மாப்பிள்ளை சுபிக்கு வலி எடுத்துருச்சு.ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிட்டு இருக்கோம் திருச்சி அப்பல்லோ தான் போறோம்.நீங்க வந்துடுங்க என்று பரபரப்பாய் பேசினார் பூவராகன்.
நான் பெரம்பலூர் தாண்டி வந்துட்டு இருக்கேன் மாமா.
எப்படி இது சாத்தியம் என்று பூவராகன் வியந்து போனார்.
இரவு சுபி பேசியபோதே அவனுக்கு மனசு சரியில்லை தாயிடம் புலம்பியவன் தாயை அழைத்துக் கொண்டு அந்நேரமே கிளம்பி விட்டிருந்தான்.வரும் வழியில் தான் இப்போது மாமனார் போன் செய்து தகவல் சொல்லி இருக்கிறார்.
ம்மா ரொம்ப வலிக்குமா? உங்க மருமக தாங்கிடுவாளா? நார்மல் டெலிவரி ஆகிடும் தானே…?
டேய் தம்பி என்னை இறக்கி விடுடா நான் பஸ் பிடித்து போய்க்கிறேன் என்றார் பாப்பாத்தி.அவன் பயமும் பிதற்றலும் அவருக்கு சிரிப்பாக இருந்தது.
மனைவி வலியில் எப்படி துடிக்கிறாளோ தான் அருகில் இல்லையே….என்ற எண்ணத்தில் கார் தேசிய நெடுஞ்சாலையில் றெக்கை கட்டி ராக்கெட் வேகத்தில் சீறி பாய்ந்தது.
“————————-“
இவர்கள் சென்று சேரும்போதெல்லாம் லேபர் வார்டிற்குள் அழைத்து சென்றிருந்தனர் சுப்ரஜாவை.
ஐயோ அம்மா ஐயோ அம்மா…. வலிக்குது….. என்னால முடியல என்ற அலறல் அவனுக்கு அடி வயிற்றில் அமிலம் சுரக்க வைத்தது.
பதட்டத்துடன் பாப்பாத்தி உள்ளே ஓடினார். உள்ளே செல்ல கால்கள் நடுங்கி கதவை பிடித்தபடி நின்று கொண்டிருந்தான் மன்னர்.
ஒன்னும் பயமில்லை இன்னும் கொஞ்ச நேரத்தில் நார்மல் டெலிவரி ஆகிடும்னு டாக்டர் சொல்றாங்க மாப்பிள்ளை என்று ஆதரவாய் அவன் தோளில் கை போட்டார் பூவராகன்.
ஒன்னும் இல்லடா தங்கம் கொஞ்சம் பொறுத்துக்கோ இன்னும் கொஞ்ச நேரம் தான்…. இதோ இந்த பெரிய வலியில் குழந்தை வெளியில் வந்துடும் என்று மகளின் கரம் பிடித்து அவள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தார் நவமணி.
நீ ஏன் எனக்கு கல்யாணம் பண்ணி வச்ச?அதனால தானே எனக்கு இப்போ இவ்ளோ வலி. தேம்பி தேம்பி அழுதாள் வலி பொறுக்காமல்.
அந்த நிலையிலும் சிரிப்புடன் நின்ற பாப்பாதியை கண்டவள் பின்னால் திரும்பி பார்த்தாள் கணவன் இருக்கிறானா என்று.
உன் புருஷன் வெளியில் நிற்கிறான். இரு கூப்பிடறேன் என்றார்.
அவன் கால்கள் உள்ளே செல்ல ஒத்துழைக்கவில்லை.
எத்தனையோ தற்கொலை, கொலை கேஸ்களை பார்த்தவன் இன்று மனைவி பிரசவ வலியில் துடிப்பதை தாள இயலாமல் அவன் இதயம் தாளம் தப்பி துடித்தது. முகம் வெளிறி வியர்க்கத் தொடங்கி விட்டது.
பிரசவம் இயற்கை,அது சாதாரணம் என்று ஏனோ அவன் மனம் ஏற்கவில்லை…. துடிப்பது என் மனைவி,போராடி வெளியே வர துடிப்பது என் குழந்தை… சீரற்ற சுவாசமும் இதயத்தின் ஓரம் லேசாய் வலியுமாய் கலங்கி நின்றான்.
வா மன்னரு என்று கைப்பிடித்து அழைத்து வந்தார் பாப்பாத்தி.
அம்மா அம்மா என்று அவள் அலறியதில் அவன் இதயம் நடுங்கியது.
வாங்க சார் நீங்க தான் இவங்க ஹஸ்பண்டா? கொஞ்சம் தைரியம் சொல்லுங்க.இன்னும் கொஞ்சம் ட்ரை பண்ணாங்கன்னா பேபி வெளியில் வந்துவிடும். மகப்பேறு மருத்துவர் மன்னரிடம் பேசினார்.
வலியில் கதறிக் கொண்டிருப்பவளின் கரத்தை பிடிப்பதற்குள் கொலை செய்ய கத்தியை எடுத்தது போல் அவ்வளவு நடுங்கியது அவன் கரம்.
என்னங்க என்னால முடியல… எனக்கு மூச்சு முட்டுது நான் சாகப் போறேன் குலுங்கி குலுங்கி அழுதாள் அவன் கரத்தை அழுந்த பற்றி.
அவள் பிடித்த வலுவில் அவன் விரல்களே நொறுங்கிவிடும் அளவிற்கு வலித்தது எனில் அவள் எவ்வளவு வலியை தாங்க முயற்சிக்கிறாள் என்று புரிந்தது.
கணவன் ஏதாவது ஆறுதல் கூறுவான் என்று கண்ணீரும் விசும்பலுமாய் அவன் முகம் பார்க்க அவன் கண்களோ கலங்கி சிவந்திருந்தது.
தம்பி எல்லா பொண்ணுங்களும் இப்படித்தான் பிள்ளை பெத்துக்குவாங்க.நீ ரொம்ப கலங்கி தவிக்காம நாலு தைரியமான வார்த்தையா சொல்லு என்று பாப்பாத்தி தோளில் இடித்தார்.
டாக்டர் ப்ளீஸ் சிசேரியன் பண்ணிடுங்க என்றான் மனைவியின் கண்ணீரை துடைத்தபடி.
ஓ காட் என்ன பேசுறீங்க? படிச்சவங்க எல்லாம் இப்படி இருந்தா நான் என்ன சொல்ல….
இன்னும் கொஞ்ச நேரத்தில் நார்மல் டெலிவரி ஆயிடும் வெயிட் பண்ணுவோம். ஏன் அவசரப்படுறீங்க? தாய்மையின் பரிபூரணமே வலிக்க வலிக்க கதறி துடித்து சுகப்பிரசவத்தில் ஒரு குழந்தையை பெற்றெடுக்கும் போது தான் நிறைவடையும்.
என்னங்க என்னால முடியல மீண்டும் கணவனின் கரத்தை அழுத்தி பிடித்தாள். இம்முறை வெளிப்படையாய் அழுது விட்டான் மன்னர்.
எதற்கும் கலங்காது இமயம் போல் எழுந்து நிற்பவன் இன்று ஏன் இவ்வளவுஉணர்ச்சி மிகுதியில் கலங்கி நிற்கிறான் என்று அவனுக்கே புரியவில்லை….
டாக்டர் ப்ளீஸ் சி செக்சன் ஏற்பாடு பண்ணிடுங்க என்று மனைவியிடம் இருந்து கரத்தை பிரித்துக் கொண்டு வெளியில் சென்று விட்டான்.
அவன் கிடக்கான் விடுங்க டாக்டர்.அவனுக்கு பொண்டாட்டினா உசுரு. அவள் வலியில் கதறுவதை அவனால் சகித்துக் கொள்ள முடியல அதுதான் அப்படி சொல்லிட்டு போறான்.
இவ்வளவு பெரிய வலியிலும் அப்படி ஒரு சந்தோஷம் சுபிக்கு. தனக்காக தன் கணவன் துடிப்பதை விட ஒரு பெண்ணுக்கு வேற என்ன ஆனந்தம் இருந்துவிட முடியும்?
மருத்துவருக்கு ஒத்துழைத்து சுகப்பிரசவமாய் இந்த குழந்தையை ஈன்றெடுத்து விட வேண்டும் என்று வைராக்கியம் கொண்டவள் மருத்துவர்கள் சொல்வதை செய்தாள்….. அடுத்த அரை மணி நேர போராட்டத்தில்….. அம்மா என்ற பெரிய அலறலுடன் அடங்கியது சத்தம்.
ஆம் மன்னரின் வாரிசு பூமியை தொட்டுவிட்டது.
மிஸ்டர் மன்னர் மன்னன் உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு என்று நர்ஸ் ஓடிவந்து சந்தோஷமாய் சொல்லிவிட்டு போனார்.
ஏன் என்று தெரியவில்லை கண்ணின் ஓரம் கசிந்தது உடல் சிலிர்த்து ரோம கால்கள் குத்திட்டு நின்றது. இதயம் மகிழ்ச்சியால் நிரம்பி வழிந்தது.
மன்னரே என் பேத்தி ரோசாப்பூ மாதிரி இருக்கு தெரியுமா?என்று வாயெல்லாம் பல்லாய் பெருமையாய் வந்து நின்றார் பாப்பாத்தி.
சுபி எப்படி இருக்கா? நடுங்கியது அவன் குரல்.
நல்லா இருக்கா சுகப்பிரசவம் தானே இன்னும் கொஞ்ச நேரத்தில் நீ போய் பார்க்கலாம்.
பாப்பாவை எப்ப கொடுப்பாங்க? ஆர்வமாய் கேட்டான்.
குழந்தையை குளிக்க வைத்து எடுத்துட்டு வருவாங்க என்றார் நவமணி.
அவனுக்கு பொறுக்கவில்லை. நொடிக்கு ஒருமுறை நிமிர்ந்து பார்த்தான். தன் தங்கமகள் எப்போது தன் கரங்களுக்கு வருவாள்? என் குழந்தை எப்படி இருப்பாள்? என்னை போலவே இருப்பாளா… அவன் மனதிற்குள் இனிய பிரளயம்.
அடுத்த அரை மணி நேரத்தில் பூந்துவாளையில் சுற்றி ரோஜா செண்டை கொண்டு வந்து நீட்டினார் செவிலி.
சீனி கட்டியாய்,தங்க விக்ரஹமாய் அப்படி ஒரு அழகு குழந்தை…. தலை நிறைய முடி, ரோஜா பூ நிறம். கரு விழிகளை உருட்டி உதட்டை பிதுக்கி அழும் அழகைக் காண கண் கோடி வேண்டும்.
இப்படி பிடிச்சு தூக்கணும் என்று மகனுக்கு குழந்தையை பிடிக்க சொல்லி கொடுத்தார் பாப்பாத்தி.
என் செல்லமே,என் செல்வமே,என் குல தெய்வமே, என்னைப் பெற்ற தாயே அவன் மனம் ஏதேதோ பிதற்றியது அவன் செல்வமகளை ஏந்தி.
சுபிக்கு ஆண் குழந்தை வேண்டும் என்பதே விருப்பம்… ஆனால் மன்னருக்கு பெண் குழந்தை வேண்டும் என்று ஆசை… அவனோடு பெண் குழந்தை பிறக்கவில்லை அல்லவா… அண்ணனுக்கு ஒரு மகள் இருக்கிறாள் என்றாலும் தனக்கென்று ஒரு மகள் வேண்டும் என்ற ஆசை.
இமை கொட்டாமல் தன் தெய்வமகளின் அழகை ரசித்துக் கொண்டிருந்தான்.
இங்க குடுங்க மாப்பிள்ளை என் பேத்தியை என்று உரிமையாய் வாங்கிக் கொண்டார் பூவராகன்.
அவர் பேத்தியை கொஞ்சுவது கண்டு அவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. ஒரு குழந்தை இவ்வளவு இன்பத்தை தருமா! அதிசயத்துப் போனான். அவனுக்கு இது புதிது!இந்த உணர்வுகள் புதிது! இப்படி எல்லாம் அவன் யோசித்ததே இல்லை. ஏதேதோ மாயத்தை நிகழ்த்தி காட்டியது ஒரு குழந்தையின் ஜனனம்.
நீங்க போய் பேஷண்டை பார்க்கலாம் என்றார் செவிலி.
மனைவி துடித்ததை விட இவன் வெளியில் துடித்து நின்றதை கண்டவர்கள் அவனே முதலில் போய் பார்க்கட்டும் என்று விலகிக் கொண்டனர்.
மலர்ந்த முகத்துடன் அறைக்குள் நுழைந்தான் கண் மூடி படுத்து இருந்தாள் சுப்ரஜா.
சுப்பு குட்டி மெல்ல அவள் கன்னம் தட்டினான். அவன் கரம் பற்றி இதழ் ஒற்றியவளுக்கு அப்படி ஒரு அழுகை.
என்னடா வலிக்குதா? பதறிவிட்டான்.
ம்கூம் என்று சோர்வுடன் தலையாட்டினாள்.
தன் கணவனுக்கு தன் மீது பிரியம் என்று அவளுக்கு தெரியும். இவ்வளவு பிரியம் இருக்கும் என்று இன்று தானே தெரியும்!
பாப்பா பார்த்தீங்களா?
ம்ம்ம்ம்ம்ம் அவ்வளவு அழகா இருக்கா என் குட்டி தேவதை
என்றான்.
நான் குட்டி மன்னரை எதிர்பார்த்தேன் என்று உதடு பிடிக்கினாள்.
லூசு எதுவா இருந்தா என்ன? செல்லமாய் அவள் கன்னம் கிள்ளினான்.
அடுத்தாவது ஜூனியர் கிங் வருமா பாப்போம் என்றாள். அசதியிலும் சிரித்தபடி.
கொழுப்புடி உனக்கு என்றான் வெடித்த சிரிப்புடன். அரை மணி நேரத்திற்கு முன் அவள் கதறிய கதறல் என்ன துடித்த துடிப்பு என்ன இனிமேல் குழந்தையே வேண்டாம் என்று தாயிடம் சண்டை போட்டது என்ன….
“—————————“
கிருஷ்ணனுக்கும் பொண்ணு, தேவிகாவுக்கும் பொண்ணு, இப்போ சுப்ரஜாவுக்கும் பொண்ணு.நவமணி லேசாய் வருத்தம் கொண்டார்.
இதோ பாருங்க சம்பந்தி உங்களுக்கு வேணும்னா பேரன் ஒசத்தியா இருக்கலாம் எனக்கு பேத்தி வேணும்னு நான் வேண்டாத நாள் இல்லை என்றார் பாப்பாத்தி.
பொண்டாட்டியையே உள்ளங்கையில் தாங்குவான் என் புள்ள….இப்போ என் பேத்தியை எப்படி வளர்ப்பான் பாருங்க என்றார் அவ்வளவு பெருமையோடு.
குழந்தையை சுற்றி சுற்றி வந்தான் மன்னர். யாரோ குழந்தைக்கு உரிமை கொண்டாடி வந்துவிடுவார்கள் என்பது போல் குழந்தையின் விரல் பற்றுவதும், தலை கோதுவதும். பாதம் பற்றி முத்தமிடுவதும் அவன் தந்தைமை ரசனை காண்போர் கண்களுக்கு கவித்துவமாய் இருந்தது.
“——————————–“
செய்தி கேட்டு எல்லோரும் மருத்துவமனைக்கு வந்து விட்டனர் குழந்தையை பார்க்க…
நான் சொன்னேனே சங்கிக்கா குழந்தை எவ்வளவு பெருசு மத்தளகட்டை மாதிரி இருக்கு பார்த்தியா?
திங்க வச்சே மூனே முக்கால் கிலோ வளர்த்துட்டான்,அஞ்சலி கிசுகிசுக்க ஆம் என்று தலை அசைத்தாள் சங்கீதா.
இவ்வளவு பெரிய குழந்தையை முக்கி திணறி சுக பிரசவத்தில் பெத்துட்டாளே….. ஆளு அழுத்தக்காரி. புருஷனை வித்துடுவா பொண்டாட்டி என்றாள் சங்கீதா.
வீடியோ காலில் குழந்தையை பார்த்து கொஞ்சி மகிழ்ந்தாள் தீபா.
உனக்கு பொண்ணு கொடுக்கலாம்னு பார்த்தால் நீயும் பொண்ணு பெத்துட்ட என்று சுகன்யா கேலி பேச… நீங்க அடுத்து பையன் பெத்துடுங்க என் பொண்ணை கொடுத்துடறேன் என்று பதிலுக்கு கேலி பேசினாள் சுபி.
————————-