Skip to content
Post Views: 2,470
அத்தியாயம் 24
சாய் சாய்.. சாய் சாய்…
Advertisement
‘டிங்-டாங்… ஷ்ஷ்ஷ்…
அட்டென்ஷன் ப்ளீஸ்! ட்ரெயின் நம்பர் 12622, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ஃப்ரம் நியூ டெல்லி டூ சென்னை சென்ட்ரல், இஸ் அரைவிங் ஆன் பிளாட்ஃபார்ம் நம்பர் ஃபோர். பாஸஞ்சர்ஸ் ஆர் ரிக்வெஸ்டெட் டு மைண்ட் தேர் லக்கேஜ் அண்ட் ஸ்டாண்ட் பிஹைண்ட் த யெல்லோ லைன்
டிங்-டாங்… ஷ்ஷ்ஷ்…’
Advertisement
Advertisement
“சைட் தோ பாய், ஜரா ஜானே தோ!”
‘டிங்-டாங்… ஷ்ஷ்ஷ்…
Advertisement
யாத்ரியோ க்ருபயா த்யான் தேன் — நயி தில்லி சே சென்னை சென்ட்ரல் ஜானே வாலி 12622 தமில்நாடு எக்ஸ்பிரஸ் பிளாட்பார்ம் நம்பர் சார்பர் ஆ ரஹி ஹை. யாத்ரியோ சே அனுரோத் ஹை கி க்ருபயா அப்னே சாமான் கா த்யான் ரக்ஹேன்.
டிங்-டாங்… ஷ்ஷ்ஷ்…’
“அரே சம்பல்கே சலோ, லக்கேஜ் ஹை!”
“ஹட் ஜாவ் ஜரா, ராஸ்தா தோ!”
“ப்ளாட்ஃபார்ம்பே கரம் சாய், ஸிர்ஃப் தஸ் ரூபாயே!”
“ஏக் கப் சாய் லோ பைய்யா, பில்குல் கரம்!”
டிங்-டாங்… ஷ்ஷ்ஷ்…
ரயில் நிலையத்திற்கு உரிய பரபரப்பு அங்கே இருந்த அனைவரையும் தொற்றிக்கொண்டது.
“பார்த்து பத்திரமா வீட்டுக்கு போங்க ரெண்டு பேரும்” என்றாள் கருணா பாரி வில்வா இருவரையும் பார்த்து.
“ஹலோ மேடம், நீ தான் தனியா ஊருக்கு போற, நாங்க தான் இந்த டயலாக் சொல்லணும்” என்றான் பாரி.
“அதானே..” என்றான் வில்வா.
வெற்றிகரமாக கருணாம்பிகை ஐ.ஈ.எஸ் பரீட்சையை எழுதி முடித்துவிட்டாள். ஜூன் மாதம் தேர்வு முடிந்தாலும், ரிசல்ட் செப்டம்பர் மாதம் தான் வெளியாகும். அதனால் கருணா சென்னை செல்லலாம் என்று கிளம்பிவிட்டாள். டெல்லிக்கு ட்ரான்ஸ்பர் வாங்கும் பொழுதே இரண்டு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டிருந்தனர் வில்வாவும் பாரியும், அதனால் அவர்கள் இருவரும் அங்கேயே இருக்க வேண்டிய சூழ்நிலை.
“உங்க பிரெண்ட் அந்த ஆன்ட்டியும் அவங்க பொண்ணுங்களும் வர்றதா சொன்னீங்க? இன்னும் ஆளை காணும்”
“எல்லாரும் நம்மளை மாதிரி ட்ரையின் ட்ரைவர் பல்லு விளக்கிறதுக்கு முன்னமே வந்து நிப்பாங்களா? அவங்க எல்லாம் கரெக்டான நேரத்துக்கு வந்துடுவாங்க..” என்றான் வில்வா.
“டேய் அண்ணா, ட்ரெயின் அனௌன்ஸ்மென்ட் சொல்லியாச்சு. இன்னும் நாலு நிமிஷம் தான் இருக்கு” என்றாள் கருணா பல்லை கடித்துக்கொண்டே.
“வந்துடுவாங்க கருணாம்பிகை, நீ டென்ஷன் ஆகாதே” என்றான் பாரி.
சரியாக அப்பொழுது “ஊருக்கு போக எதுக்கு மீ இவ்வளவு லக்கேஜ்” என்று தன் தாயை கடிந்து கொண்டே, ஒரு பெரிய பேக்கை தூக்கிக்கொண்டு இவர்களிடத்திற்கு வந்தாள் வர்ஷித்தா.
“ஹாய் ராஜிம்மா, என்ன இவ்வளவு லேட்டா வர்றீங்க? என்ன நீங்க ரெண்டு பேரும் மட்டும் வர்றீங்க? இன்னொரு பக்கிரி எங்கே?” என்றான் வில்வா ராஜியை பார்த்து.
வர்ஷித்தா அவனை முறைத்து கொண்டே, பேக்கை கீழே வைத்தாள்.
வில்வாவின் கேள்விகளை எல்லாம் காற்றில் விட்டுவிட்டு, “ஹாய் பாரு.. ஹாய் வில்லு” என்று உற்சாகமாக கூறினார் ராஜி.
“இது தான் என்னோட சிஸ்டர் கருணா”, என்று ராஜிக்கும் வர்ஷித்தாவிற்கும் கருணாவை அறிமுக படுத்தினான் வில்வா.
“வணக்கம் கருணா, உன்னை பத்தி ரெண்டு பேரும் நிறைய சொல்லி இருக்காங்க. இப்ப தான் நேர்ல பார்க்க முடிஞ்சுது. எக்ஸாம் எல்லாம் நல்லா பண்ணிருக்கியா?”
“நல்லா செஞ்சிருக்கேன் ஆன்ட்டி , மிச்சத்தை நம்ம ட்ரையின்ல பேசிப்போம், சீக்கிரம் ஏறுங்க” என்று அவரை துரிதப் படுத்தினாள்.
“இன்னும் இரண்டு நிமிஷம் இருக்கே? அதுக்குள்ள ஏன் இவ்வளவு டென்ஷன்? என்றாள் வர்ஷித்தா.
“எங்களை எல்லாம் ஒரு மணி நேரம் முன்னாடியே கிளப்பி கூட்டிட்டு வந்துட்டா.. லேட்டா வந்துட்டு கேள்வியை பாரேன்” என்றான் பாரி
“அதானே…” என்றான் வில்வா உடனே.
“காட்… இந்த அதானே கேட்டாலே எனக்கு கடுப்பா இருக்கு“ என்று பல்லை நறநறவென கடித்தாள் வர்ஷ்.
“ஹரே பாப்ரே, ஹர்ஷை வேற இன்னும் காணும். கேப் கட் பண்ணிட்டு வர எவ்வளவு நேரம்” என்று திரும்பி தன் சகோதரியை தேடினாள்.
ராஜி இதை பற்றி எல்லாம் கவலை படாமல் ட்ரெயின் உள்ளே சென்று வாகாக ஜன்னல் இருக்கையில் அமர்ந்துகொண்டார்.
“நீயும் வாம்மா அவங்க வந்துடுவாங்க” என்றார் கருணாவை பார்த்து.
“நீங்க கிளம்புங்க பாரு , வில்லு … நான் உங்க கருணாவை பத்திரமா கூட்டிட்டு போறேன்” என்று நண்பர்களுக்கு வேறு விடை கொடுத்தார்.
‘பாரு, வில்லு வா?’ கருணா ஆவென்று பார்த்தாள்.
“லாங் நேம் சீ.. அதான் ஷார்ட் பண்ணிட்டேன். பிரண்ட்ஸ் குள்ள ஷார்ட் நேம் தானே செட் ஆகும்” என்று விளக்கம் அளித்தார் ராஜி.
அந்நேரம், பக்கத்து பிளாட்பார்மில் இருந்து ட்ராக்கினுள் இறங்கி இந்த பிளாட்பார்ம் நோக்கி வந்தாள் ஹர்ஷ்..
“ஹே.. ஹே.. என்ன பண்ற?” என்று கத்தினாள் கருணா.
பாரி வில்வாவிற்குமே ஒரு நிமிடம் திக்கென்றானது.
ட்ராக் பள்ளமாக இருக்குமல்லவா. அதில் இருந்து குதித்து இந்த பக்கம் மேலே ஏற வேண்டும். இன்னும் ஒரே நிமிடம் தான் இருந்தது ட்ரெயின் புறப்பட.
“வர்ஷ் , ஜல்தி பக்கட்” என்று பெரிய பெட்டியை கீழே இருந்து கொடுத்தாள் ஹர்ஷிதா. மற்றவளும் ஓடி சென்று வாங்கி கொண்டாள். பின் ஒரே ஜம்பில் மேலே ஏறிவிட்டாள்.
“நீங்க எல்லாம் படிச்சிருக்கீங்களா இல்லையா? மூளையை வித்துட்டு வந்தீங்களா? லேட்டா ஆகும்னா சீக்கிரமா கிளம்பி வரணும், அதை விட்டுட்டு இப்படியா பொறுப்பில்லாமல் செய்யறது?” என்று விலாசினாள் கருணா.
‘யாரு இந்த பொண்ணு?’ என்று தன் சகோதரியை பார்த்தாள் ஹர்ஷித்தா.
“டைம் ஆச்சு, முதல்ல உள்ளே ஏறுங்க” என்றான் பாரி.
“விடும்மா அதான் ஒன்னும் ஆகலை இல்லை” என்றார் ராஜி.
“என்ன ஒன்னும் ஆகலைன்னு இப்படி அசால்ட்டா சொல்றீங்க? அங்க பாருங்க, சின்ன குழந்தைகள் எல்லாம் இதை பார்க்கிறாங்க. எவ்வளவு மோசமான உதாரணத்தை காட்டி இருக்காங்கன்னு புரியுதா இல்லையா? நாளைக்கு இதுல ஏதாவது ஓர் குழந்தை இதே மாதிரி லேட்டா ஆகி, இந்த அக்கா மாதிரி நாமளும் வரலாம்ன்னு நினைச்சு வந்தா என்ன ஆகறது?” என்று பொங்கி விட்டாள் கருணா.
“கருணாம்பிகை ரொம்ப நேரமாச்சு, மிச்சத்தை ட்ரைன்ல பேசிக்கோ” என்று பாரி தான் அனைவரையும் ஏற்றி விட்டான்.
ட்ரெயின் புறப்பட்டதும், பாரியும் வில்வாவும் டாட்டா காட்டினார்கள், ராஜி மட்டுமே பதிலுக்கு டாட்டா காட்டினார், கருணா சகோதரிகளை முறைத்து கொண்டு அமர்ந்திருந்தாள்.
கருணா சொன்ன கோணத்தில் இதுவரை அவர்கள் யோசித்ததே கிடையாது.
கிக் பாக்ஸிங் என்றால் பட்டையை கிளப்பி விடுவார்கள் தான், ஆனால் கருணாவை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் அமைதியாகி அமர்ந்துகொண்டார்கள்.
ராஜியால் அதிக நேரம் பேசாமல் இருக்க முடியாது.
“இனிமே இப்படி பண்ண வேண்டாம்னு சொல்லி வைக்கிறேன் கருணா, நீ கூல் ஆகும்மா” என்றார் ராஜி மெதுவாக கருணாவிடம்.
உடனே ஹர்ஷித்தா வர்ஷித்தா இருவரும்,”இனிமே இப்படி நிஜமா செய்ய மாட்டோம். நீ சொன்னது புரிஞ்சது” என்றனர் சேர்ந்து.
அதற்கு பின் கருணாவும் இயல்பிற்கு திரும்பிவிட்டாள்.
ஹர்ஷிதா,வர்ஷித்தா இருவரும் பி.எட். படித்து முடித்திருந்தனர். அவர்கள் பணிக்காக தான் சென்னை சென்று கொண்டிருக்கிறார்கள்.
“நீங்க ரெண்டு பேரும் கிக் பாக்ஸிங் சாம்பியன்னு அண்ணா சொன்னானே? அப்புறம் எப்படி டீச்சிங் இன்ட்ரஸ்ட்?”
“எங்களுக்கு பெருசா இன்ட்ரஸ்ட் இல்ல.. பப்பா தான் சொன்னாங்க” என்றாள் வர்ஷ் விட்டேற்றியாக.
“உங்க அப்பா டீச்சரா?”
“இல்ல இல்ல..பப்பா ஆர்மில்ல இருக்காங்க… மேஜர்” என்றாள் ஹர்ஷ்.
“ஓ..சூப்பர்.. மேஜர் பொண்ணு இப்படி பொறுப்பில்லாம டிராக்ல ஏறி வரலாமா?”
‘தெய்வமே எங்களை விட்டுடு ‘ என்பதை போல கை எடுத்து கும்பிட்டுவிட்டாள் ஹர்ஷித்தா.
“அப்ப உங்களுக்கும் ஆர்மி இன்டெர்ஸ்ட் இருக்கா?”
“ஆர்மி எங்க மீக்கு பிடிக்கலை. அதனால அதை பத்தி நாங்க யோசிக்கலை” என்றாள் வர்ஷ்.
“ஆமா கருணா.. குடும்பத்துல ஒருத்தரை.. அதாவது என் புருஷரை நாட்டுக்காக நேர்ந்து விட்டாச்சு. அதான் நான் வேண்டாம்னு சொல்லிட்டேன்” என்றார் ராஜி..
‘அட பாவமே’ என்று சகோதரிகளை பார்த்தாள் கருணா.
“சரி அப்படியே பார்த்தாலும் இங்கே இல்லாத வேலையா? எதுக்கு சென்னைக்கு போறீங்க?”
“நல்லா கேளுங்க கருணா… நாங்களும் அழுது பார்த்தாச்சு… கெஞ்சி பார்த்தாச்சு… சண்டை போட்டு பார்த்தாச்சு..ஆனாலும் சென்னை போய்தான் ஆகணும்னு சொல்லிட்டாங்க பப்பா.”
“ஏன்?” என்றாள் கருணா குழப்பமாக.
“நான் சொல்றேன், குழந்தைங்க பிறந்ததும், ரெண்டு பேரயும் தைரியமா வீரமா வளர்கிறது உன் பொறுப்புன்னு என் கையில பொறுப்பை ஒப்படைச்சாரு.”
“ஓகே”
“நானும் அதை சிரம் மேலே ஏற்றிக்கொண்டு, ரெண்டு பேரயும் வீரமா தைரியமா வளர்த்தேன்.. இவரு வருஷத்துல ஒரு தடவை தான் வீட்டுக்கு வருவாரு..”
“ஓகே “
“முதல்ல எல்லாம் ஒன்னும் சொல்லாம, கொஞ்சம் வளர்ந்தப்புறம், தைரியமான்னா, கராத்தே கிளாஸ் பாக்சிங் கிளாஸ் மட்டும் அனுப்பினா போதுமா? மனசுல தைரியம் வேணும், அறிவுல வீரம் வேணும்னு, சொல்ல வீரியம் வேணும்னு பல ஐட்டம் சொல்றாரு..”
“சரி.. அவர் சொல்றதும் சரி தானே?”
“உனக்கு புரிஞ்சிடுச்சா? எனக்கு இன்னி வரைக்கும் சுத்தமா புரியல..”
“ஹ்ம்ம்”
“மக்கு மக்குன்னு வேற என்னை திட்டிட்டுட்டாரு..”
“ஹ்ம்ம்”
“டென்த் படிக்கும் போது, என்ன படிக்க போறீங்கன்னு இவங்க இரண்டு பேர்கிட்டயும் கேட்டாரு”
“நியாயமான கேள்விதானே? “
“அப்ப நாங்க கிக் பாக்ஸிங்ல பெரிய ஆள் ஆகப்போறோம்ன்னு சொல்லிட்டாங்க.”
“அது உங்க பாஷன், அதிருக்கட்டும், ஆன அதுவே கேரியர் ஆக இருக்க முடியாது.. என்ன படிக்கணும்னு முடிவு பண்ணுங்க அப்படின்னு எடுத்து சொன்னாரு”
“ஹ்ம்ம்”
“அந்த சமயம் பார்த்து ஊர்ல இருந்து எங்க மாமியார் நாத்தனார் எல்லாம் வந்திருந்தாங்க.
அவங்க ரெண்டு பேருமே டீச்சர்ஸ்..
என்ன படிக்கலாம்னு நாங்க யோசிக்கும் போது அவங்க தான் பொண்ணுங்களுக்கு டீச்சிங் ரொம்ப பெஸ்ட் .. பாருங்க நாங்க எல்லாம் இன்னும் வேலைக்கு போயிட்டு தானே இருக்கோம்னு சொன்னாங்க..”
“அது எப்படி சரியா இருக்கும்.. எல்லா பொண்ணுங்களுக்கு ஒரே விஷயம் சரியா வருமா என்ன?
“நல்லா கேளுங்க … நாங்களும் கேட்டோம்.. டீச்சிங் எல்லாம் எங்களுக்கு செட் ஆகுமான்னு?”
“நான் டாக்டர் படிக்கிறீங்களான்னு கேட்டேன் கருணா.. அதுக்கு மருந்து வாசனை ரத்த வாசனை எல்லாம் எங்களுக்கு பிடிக்காது சொல்லிட்டாங்க..
அப்புறம் இன்ஜினியரிங் படிக்க சொன்னதுக்கு, சீ சீன்னு சொல்லிட்டாங்க..
அவங்க பப்பா ஆர்மி ஜாயின் பண்றீங்களானு கேட்டாரு..
அதுக்கு மட்டும் தான் நான் நோ சொல்லிட்டேன்”
‘சுத்தம்’ என்று கருணா தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டாள்.
“நீங்க உங்களுக்கு என்ன தேவைன்னு தெரிஞ்சு அதுல ஸ்ட்ராங்கா இருந்திருக்கணும் இல்ல?” என்றாள் கருணா.
“மீ பாவம் தானே, டெல்லில நாங்க இருந்தா பப்பா லீவ் அப்ப எங்க கூட ரெண்டு நாள் கூட இருக்கலாம்னு தான் நாங்க டெல்லிக்கே வந்தது. சென்னைல எல்லாம் இருந்தா லீவ்ல ரெண்டு நாள் ட்ராவல்லே போயிடும்ன்னு மீ சொல்லுவாங்க.. அவங்க எங்க பப்பாவை ரொம்பவே லவ் பண்றாங்க. நிறைய மிஸ் பன்றாங்க.
ஆர்மி லைப்பில தள்ளி இருக்கிறது தவிர்க்க முடியாது. தள்ளி இருக்கிறது கஷ்டம்ன்னு எங்க மீயை பார்த்து தான் தெரிஞ்சுக்கிட்டோம். அதனால ஆர்மின்னு நாங்களும் யோசிக்கலை. அதுவும் இல்லாமல் கிக் பாக்ஸிங் ப்ராக்டிஸ் பண்றதுக்கு டிகிரியும் பி.ஏட்டும் படிக்கும் போது நிறைய டைம் கிடைச்சது. டீச்சிங் ப்ரோபஷனலயும் டைம் கிடைக்கும்னு தான் நாங்க டீச்சிங்க்கு ஓகே சொன்னோம்”
“சரி அப்ப தெளிவா யோசிச்சு தானே முடிவு செஞ்சிருக்கீங்க.. அப்புறம் ஏன் பிடிக்காத மாதிரி சொல்றீங்க”
“அது இல்ல … என்ன இருந்தாலும் பெரிய இன்டரஸ்ட் அப்படி சொல்ல முடியாது”
“இது என்ன மதில் மேல் பூனை மாதிரி.. ஒரு விஷயத்தை செய்றதுக்கு முன்ன யோசிக்கலாம். ஆனால் செய்யும் போதோ, செஞ்ச அப்புறமாவோ சரியா தப்பான்னு யோசிச்சிட்டே இருக்க கூடாது.”
“அது அப்படி இல்லை.. எங்களுக்கு பிடிச்சிருக்குன்னும் சொல்ல முடியாது பிடிக்கலேனும் சொல்ல முடியாது”
“பழக பழக பிடிச்சிடும்ன்னு எங்க நாத்தனார் சொன்னாங்க” என்கிறார் ராஜி இடையில்.
“சரி ஆன்ட்டி , உங்க ஹஸ்பெண்ட் என்ன சொன்னதா சொன்னீங்க? தைரியமா சிந்திக்கணும்னு தானே. அதுக்கு முதல் ஸ்டெப் நாம எடுக்கிற முடிவுகளுக்கு நாம ரெஸ்பான்சிபிலிட்டி எடுத்துக்கிறது. எத்தனை பேரு என்ன சொல்லி இருந்தாலும், உங்க ரெண்டு பேருக்கும் இதுல நிறைய அட்வாண்டேஜ் இருக்குன்னு தானே இதை சூஸ் பண்ணிருக்கீங்க.. சரியா?”
“ஆமாம்..” என்றனர் அம்மா மகள்கள் மூவரும் கோரஸாக.
“அப்ப இதை உங்க முடிவா நீங்க முதல்ல அங்கீகரிக்கனும். சும்மா அப்பா சொன்னாங்க.. அத்தைங்க சொன்னாங்க. ஆட்டுக்குட்டி சொன்னுச்சுன்னு சொல்லக்கூடாது.
கற்பித்தல் என்பது ஒரு தவம் மாதிரி.. நீங்க அதை முழு மனசா ஏத்துக்கிட்டு செஞ்சா மட்டுமே அது சாத்தியம். இல்ல எனக்கு பிடிக்கலைன்னு நினைச்சா முழுசா விலகிடணும்“
“நாங்க நல்லா கிளாஸ் எடுப்போம். அதுல்ல எல்லாம் சந்தேகம் இல்லை.. நாங்க ரெண்டு பேருமே கிளாஸ் டாப்பர்ஸ்”
“அப்ப இனி யார் கேட்டாலும் ப்ரௌடா சொல்லுங்க, நாங்க டீச்சர்ஸ்ன்னு… ஒவ்வொருத்தரும் முதல்ல அவங்க அவங்களையே நேசிக்கனும், அவங்க குடும்பத்தை, அவங்க வேலையை, அவங்க மொழியை, அவங்க சுற்றத்தை, அவங்க ஹாபியை இப்படி சுயநேசிப்பு ரொம்ப முக்கியம்“
“கருணா உங்க பார்வை வித்யாசமா இருக்கு.. நீங்க சொல்ற கோணத்துல நாங்க யோசிச்சது இல்ல.. “ என்று வர்ஷித்தா உணர்ந்து கூறினாள்.
“காட்சிகள் எப்பவும் ஒன்னு தான், அதை நாம பார்க்கிற கண்ணோட்டம் தான் வேறு படும்”
“வாவ்.. நீங்க பேசறதை கேக்க ரொம்ப நல்லா இருக்கு. எங்க பப்பாக்கு கூட இப்படி பேசுனா ரொம்ப பிடிக்கும்” என்றாள் ஹர்ஷிதா.
“இன்னும் ஒன்றரை நாள் சேர்ந்து தானே இருக்க போறோம்.. நிறைய பேசலாம் விடுங்க. சரி உங்க அப்பா பேர் என்ன?”
“மேஜர் விக்ராந்த்..”
“ஹேய்.. விக்ராந்த் சார் பொண்ணுங்களா நீங்க?” என்றாள் கருணா ஆச்சர்யமாக.
“எங்க பப்பாவை தெரியுமா?”
“ஒரு தடவை ஜெயில்ல ஸ்பீச் கொடுக்கும் போது சார் தான் சீப் கெஸ்ட்டா வந்திருந்தாங்க. என்ன கூட பாராட்டினாங்க”
“எங்க வீட்டுக்காரரே பாராட்டினாரா?” என்றார் ராஜி ஆசையாக.
“ஆமா ஆன்ட்டி … சார் நிஜமாலே ஹீரோ மாதிரி தான் இருந்தாங்க. இவ்வளவு பெரிய பொண்ணுங்க இருப்பாங்கன்னு நான் நினைச்சே பார்க்கல. இந்த பாரிவேந்தன், அண்ணா கூட என்கிட்டே சொல்லவே இல்லையே?”
“அவங்களுக்கு எப்படி தெரியும். அந்த ஜெயில் ப்ரோக்ராம் முடிஞ்சு ரெண்டு நாள்ல அவர் கிளம்பிட்டாரு. நாங்க அவரை பத்தி பேசலை” என்று கூறி, “இப்ப கொஞ்சம் ஸ்னாக்ஸ் சாப்பிடலாம்” என்று ராஜி ஒரு பையை திறந்து தேப்லா என்று அழைக்கப்படும் மெல்லிசான ரொட்டிகளை ஆளுக்கொன்று கொடுத்தார்.
“எல்லாம் ஓகே, ஆனா எதுக்கு சென்னைக்கு போறீங்க.. டெல்லிலேயே வேலை கிடைக்கலையா?”
“அதுவா.. என் கூட சேர்ந்து தான் பொறுப்பில்லாம இருக்காங்களாம். தனியா கொஞ்ச நாள் இருக்கட்டும்னு எங்க வீட்டுக்காரர் சொல்லிட்டாரு”
‘இதற்கு நான் என்ன சொல்ல முடியும்?’ என்று கருணா அமைதியாக இருந்துவிட்டாள்.
“அங்கே எங்க தங்க போறீங்க?”
“முதல்ல எங்க நாத்தனார் வீட்டுக்கு தான் போறோம். அவ வேலை பார்க்கிற ஸ்கூல்ல தான் இவங்களுக்கு வேலைக்கு சொல்லி வச்சிருக்கா. அப்புறம் தான் தங்கறதை எல்லாம் யோசிக்கணும். அப்புறம் நான் டெல்லிக்கு கிளம்பனும்”
“நீங்க மட்டும் ஏன் தனியா அங்கே இருக்கனும்?”
“தர்ஷ் இருக்கானே, அவன் பைனல் இயர் இன்ஜினியரிங் படிச்சிட்டு இருக்கான்”
“சரி, அங்க சென்னைல என்ன ஹெல்ப் வேணும்னாலும் எனக்கு கால் பண்ணுங்க “
“கண்டிப்பா உனக்கு தான் கால் பண்ணுவேன்”
அடுத்த ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஏதாவது கொறிக்க எடுத்து கொடுத்து கொண்டே இருந்தார் ராஜி.
“என்ன ஆன்ட்டி அட்சய பாத்திரம் மாதிரி எடுக்க எடுக்க வந்துகிட்டே இருக்கு” என்றாள் கருணா.
மாலை தேநீர் வாங்கினார்கள். பிஸ்கட் பாக்கெட் ஆளுக்கொன்று எடுத்து கொடுத்தார் ராஜி.
பிஸ்கட் பாக்கெட்டில் இரண்டு பிஸ்கட் இருக்கும் பொழுதே ராஜி கவருடன் அதை தூக்கி வெளியே போட்டார்.
“ஏன் அதை போட்டுட்டீங்க?” என்றாள் அதை பார்த்த கருணா.
“எனக்கு கிரீம் பிஸ்கட் அவ்வளவா பிடிக்காதும்மா .. அதுல நிறைய எல்லாம் இல்லை..ஒன்னோ ரெண்டோ தான் இருந்தது.”
“என்ன இப்படி பொறுப்பில்லாமல் பேசுறீங்க? ஒரு பிஸ்கெட்டுனாலும் வேஸ்ட் பண்ணலாமா?”
“இல்ல வயிறு புல்லா இருந்துச்சு..”
“பின்ன சாப்பிட்டு கிட்டே இருக்கோம் புல்லா தானே இருக்கும், அப்புறம் எதுக்கு ஆளுக்கொரு பாக்கெட் ஓபன் பண்ணறீங்க?”
வர்ஷித்தா ஹர்ஷித்தா இருவரும் ஸ்வாரசியமாக வேடிக்கை பார்த்தனர்.
‘குட்டி பிசாசுங்க.. எப்படி வேடிக்கை பார்க்குதுங்க? வந்து காப்பாத்தலாம் இல்ல?’ என்று மனதிற்குள் புலம்பினார்.
“இனிமே பண்ணல விடும்மா..ரெண்டு பிஸ்கெட்டுக்கு போய் விட்டா ஜெயில்ல புடிச்சு போட்டுடுவ போல?”
“கட்டாயம் இந்த மாதிரி சாப்பாட்டை வீண் செய்றவங்களை ஜெயில்ல தான் போடணும்.”
“ஆங்..”
“எத்தனை குழந்தைகள் சாப்பிட ஒரு துண்டு ரொட்டி கூட இல்லாம இருக்காங்க தெரியுமா? எத்தனை குழந்தைகள் மால் நியூட்ரிஷனால இறந்துபோறாங்க தெரியுமா?” என்று அடுத்த பத்து நிமிடத்திற்கு வாங்கு வாங்கு என்று வாங்கிவிட்டாள்.
ராஜி நொந்தே போய் விட்டார். கருணாவின் தாக்குதலை அவரால் சமாளிக்கவே முடியவில்லை.
கருணா, பாத்ரூம் சென்ற போது பாரி வில்வாவிற்கு அழைத்துவிட்டார் ராஜி.
“சொல்லுங்க ராஜிம்மா.. எங்க இருக்கீங்க. தர்ஷ் பத்தி கவலையே படாதீங்க.. நாங்க பார்த்துக்கிறோம்..” என்றான் எடுத்தவுடனே வில்வா உற்சாகமாக.
“வில்லு, தர்ஷ் பத்தி கவலை படற நிலைமையிலயா நான் இருக்கேன்?”
“ஏன் ராஜிம்மா என்னாச்சு?” என்றான் பாரி.
“பாரு, நல்லா கோர்த்துவிட்டுட்டீங்க என்னை . நான் பாட்டுக்கு பிள்ளைகளோடு சென்னை போயிருப்பேன்.. எங்க கருணா கூட தனியா தான் போறா.. அவகூட நீங்க போனீங்கனா அவளுக்கு துணையா இருக்கும்னு நீங்க சொன்னதை நம்பி..”
“நம்பி..”
“டேய்.. நான் என்ன கதையா சொல்றேன்.. நீங்க ஹர்ஷ் வர்ஷ் ரெண்டு பேரையும் தானே பக்கிரின்னு சொல்லுவீங்க.. இப்ப நான் தான்டா பக்கிரி மாதிரி ஆயிட்டேன்”
“அட போங்க ராஜிம்மா.. பயில்வான் பக்கிரிசாமி மாதிரியா நீங்க இருக்கீங்க.. உங்களால ஒரு குத்தாவது கொடுக்க முடியுமா இல்ல வாங்க தான் முடியுமா சொல்லுங்க?”
“வில்லு நீ மட்டும் இப்ப என் கையில கிடைச்சேன்னு வை…நீங்க சொல்றது தமிழ் பக்கிரி.. நான் ஹிந்தி பக்கிரியை சொல்றேன்”
“ஹிந்தில பக்கிரின்னா என்ன?”
“ஆடு… நல்லா பிரியாணிக்கு வெட்டுற ஆடு மாதிரி கருணா என்னை உரிச்சு தொங்க போடறா டா?”
“என்ன ராஜிம்மா சொல்றீங்க? என்னாச்சு?”
“ஒரு ரெண்டு பிஸ்கட்.. தெரியாம கவரோட தூக்கி போட்டுட்டேன்”
“அய்யய்யோ.. “
“கருணா முன்னாடியா?”
“ போச்சு..போச்சு”
“இப்ப எதுக்கு மாறி மாறி ரியாக்க்ஷன் தர்றீங்க? இது எல்லாம் எனக்கு முன்னமே சொல்ல மாட்டீங்களா? இப்ப பாத்ரூம் போயிருக்கா.. திரும்ப வந்தா கன்டிநியூ பண்ணுவாளான்னு தெரியல.. அதான் என்ன பண்ணலாம்னு கேக்க போன் போட்டேன்.”
“போர்வை கொண்டு போய் இருக்கீங்களா?”
“ஆன் இருக்கு..”
“அதை எடுத்து இழுத்து போர்த்திக்கிட்டு தூங்கிடுங்க”
“தூக்கம் வரலையே..”
“வராட்டி தூங்குற மாதிரி ஆக்ட்டிங் பண்ணுங்க.. இது எல்லாமா சொல்லுவாங்க?”
“சரி சரி..இனி நான் பார்த்துக்கிறேன்“ என்று போனை வைத்துவிட்டு , அவர்கள் கூறியதை போல போர்வையை எடுத்து இழுத்து போர்த்திக்கொண்டு படுத்து விட்டார்.
கருணாம்பிகை வந்து அவரை பார்த்துவிட்டு, திரும்பி ஹர்ஷித்தாவிடம், பாரிவேந்தன் எங்க அண்ணா ரெண்டு பேருகிட்டயும் பேசுனாங்களா?”என்று கேட்டாள்.
அவள் நாலா பக்கமும் தலையை உருட்டினாள்.
“எந்திரிங்க ஆன்ட்டி, மணி ஏழு தான் ஆகுது. அதுக்குள்ள தூக்கம் வராது? நான் படிக்க போறேன், நீங்க பாட்டுக்கு உங்க வேலையே பாருங்க” என்று கூறி விட்டு மேலே அவள் பர்த்திற்கு சென்றுவிட்டாள்.
“ஹரே பாப்ரே.. என்ன பொண்ணு இவங்க.. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்றாள் வர்ஷித்தா.
“எனக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு..” என்றாள் ஹர்ஷும்.
சகோதரிகள் இருவரும் பேசிக்கொண்டிருக்கையில், ராஜி மெதுவாக போனில் வில்வா பாரிக்கு மெசேஜ் போட்டுவிட்டார்.
“மீ, எப்படி மீ இவ்வளவு கொஞ்ச நாள்லே அவங்க ரெண்டு பேருக்கூட இப்படி பிரண்ட்ஆயிட்டிங்கன்னு புரியவே மாட்டேங்குது.”
“தெரியல.. ஆனா ரெண்டு பேரும் ரொம்ப நல்ல பசங்க.. பார்க்க தான் பெரிய ஆண்பிள்ளைகள், அனால் நிஜமா குழந்தை பசங்க மாதிரி தான்”
“சரி தான்”
சகோதரிகள் இருவரும் ஆளுக்கொரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு அமர்ந்து விட்டனர். ராஜி பக்கத்துக்கு கம்பார்ட்மெண்டில் இருந்த பாட்டியிடம் சென்று கதை பேச தொடங்கி விட்டார்.
———————–
error: Content is protected !!